பதிவு செய்த நாள்
30
செப்
2019
02:09
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நேற்று 29ல் துவங்கியது.
இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி விழா, முப்பெரும் தேவியரை போற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்கின்றனர். ஆண்டுதோறும், புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி விழா துவங்கும்.வீடுகளில், கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழாவை கொண்டாட துவங்கியுள்ளனர். கோவில்களில், சிறப்பு பூஜைகள் துவங்கப்பட்டுள்ளன.
சூலக்கல் மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது.
பச்சை பட்டு உடுத்தி, மீனாட்சி அம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார்.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி முதல் நாளான நேற்று 29ல், ருத்ரஜெபம், அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கன்னிகா பரமேஸ்வரி அம்மன், புவனேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும், லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி தேவி என முப்பெரும் தேவியரும், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து, ஒன்பது நாட்களும் சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், ஐயப்பன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழா, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியுள்ளது.