பதிவு செய்த நாள்
06
ஏப்
2012
11:04
திருத்தணி : முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவான நேற்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலை, 11 மணிக்கு மலைக் கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், பன்னீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் அணிவித்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனர். நேற்று முன்தினம், இரவு சென்னை நாட்டுகோட்டை செட்டியார்கள், 5,000 க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக மலைக் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டனர். மேலும், தங்கத்தேரும் இழுத்தனர். விழாவை முன்னிட்டு உபகோவிலான சுந்தர விநாயகர் கோவிலில், காலை 9 மணிக்கு, சிவகாமி, சுந்தரேசனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு சிவகாமி சுந்தரேஷ்வரர், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் தனபால் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.