பதிவு செய்த நாள்
06
ஏப்
2012
11:04
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் பண்டிகையில், கோவில் நிலத்தை மீட்க 80 அடி ரோட்டில் மாரியம்மனுக்கு பொங்கல் வைப்போம் என கூறிய நிலையில், வேறு இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஈரோடு பெரியமாரியம் கோவில் பண்டிகை கடந்த சில நாட்களாக நடக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கவும், 80 அடி சாலையை திறக்க பல ஆண்டாக போராடி வருகின்றனர். கடந்த இரண்டு மாதத்துக்கு முன், நில மீட்பு குழுவினர், மாநகராட்சியை முற்றுகையிட்டபோது, வருகின்ற பண்டிகையின் போது, கோவில் நிலத்தில் பொங்கல் வைத்தே தீருவோம் என அறிவித்திருந்தனர். கோவில் பண்டிகை துவங்கியது முதல், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்படாமல் இருக்க, போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று நில மீட்பு இயக்கம் மற்றும் பக்தர்கள் மூலம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈஸ்வரன் கோவிலில் துவங்கி, திருவேங்கடசாமி ரோடு, பி.எஸ்.பார்க் வழியாக ஊர்வலமாக வந்து, கோவிலின் அருகில் பொங்கல் வைப்பதாக அறிவித்தனர். காலை 6 மணி முதல், ஈரோடு டி.எஸ்.பி., தனபால் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். 80 அடி ரோட்டின் முன் கதவு, சி.எஸ்.ஐ., கல்லூரி, சி.எஸ்.ஐ., சர்ச் ஆகியவற்றின் நுழைவாயிலிலும் பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், நேற்று ஈரோடு வந்ததால், பொங்கல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என போலீஸார் எதிர்பார்த்தனர். அதற்குள் அவர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், போலீஸார் திருப்தி அடைந்தனர். ஊர்வலம் துவங்கியதும் அனைவரையும் போலீஸார் கைது செய்ய திட்டமிட்டனர். கைது செய்தால் பிரச்னை விபரீதமாகும் என அஞ்சிய போலீஸார், ஊர்வலம் துவங்கும் நிலையில், திருவேங்கடசாமி வீதியில் பொங்கல் வைக்க அனுமதி வங்கினர். வழக்கமாக பொங்கல் வைக்கும் முன், பக்தர்கள் கைது செய்யப்பட்டதால், இந்தாண்டு வேறு இடத்தில் அனுமதி கிடைத்ததால், அதற்கு சம்மதம் தெரிவித்து, அங்கேயே பொங்கல் வைத்தனர்.