தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
இக்கோயில் சித்திரை திருவிழாவிற்கான திருக்கம்பம் நடல் ஏப்., 16ல் நடந்தது.
ஏராளமான பக்தர்கள்கைகளில் கங்கணம் கட்டி விரதம் இருந்தனர். மே 6ல் அம்மன் மலர் விமானத்தில் ஊருக்குள் இருந்து திருக்கோயிலுக்கு பவனி வந்தார்.
அன்று முதல் திருவிழா துவங்கியது. திருவிழாவை தொடர்ந்து 24 மணி நேரமும் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன்களை இரவு, பகலாக நிறைவேற்றி வருகின்றனர். நேற்று இரவு 12:00 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் கோயில் வீதிகளில் பவனி வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உற்ஸவர் தேரின் முன் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் திருத்தேர் சக்தி பூட்டுதல் நடத்தப்பட்டு,அம்மன் உற்ஸவர் தேரில் ஏற்றப்பட்டது.
பின் தேவராட்டத்துடன் முகமைதாரர்கள் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து முகமைதாரர்களுக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி., சிவபிரசாத், கோயில் செயல் அலுவலர் நாராயணி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்,தாசில்தார் சதீஸ்குமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கினர்.
இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
பின் திருத்தேர், அம்மன் சன்னதி முன் நிலை நிறுத்தி முதல் நாள் தேரோட்டம் நிறைவு பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று, அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.