பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே வெள்ளக்கிணறு பூ மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அடி அளந்து கொடுத்தல் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இக்கோவிலில் கடந்த, 22ம் தேதி பூச்சாட்டு விழாவும், தொடர்ந்து கம்பம் நடுதல், அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம், பூ மாரியம்மன் பூச்சொரிதல் விழா, வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவின் சிறப்பு வள்ளி கும்மி நிகழ்ச்சி, சிகரம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
அம்மன் திருக்கல்யாணம், தொடர்ந்து அடி அளந்து கொடுத்தல் வேண்டுதல் நடந்தது.
இது குறித்து பூ மாரியம்மன் பக்தர்கள் கூறுகையில், பக்தர்களின் வேண்டுகோளை பூ மாரியம்மன் நிறைவேற்றிய பிறகு, பக்தர்கள் தலையில் தண்ணீர் ஊற்றியபடி கையில் வேப்பிலையுடன் ரோட்டில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, எழுந்து, கோவில் வரை, தொடர்ந்து வருவதே அடி அளந்து கொடுத்தல் எனப்படும் என்றனர்.
இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, மாவிளக்கு எடுத்தல், ஜமாப் நிகழ்ச்சி, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா, அபிஷேக ஆராதனை, அன்னதானம் நடந்தது.