மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் 31ம் ஆண்டு நிறைவு விழா, ராமானுஜர் 1008ம் ஆண்டு மற்றும் ஸ்ரீராம நவமி வைபவம் நடந்தது.
இதில் நேற்று அதிகாலை சுப்ரபாதம், திருமஞ்சனம் கால சந்தி பூஜை, மூலவருக்கு தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் பிரதான கலச தீர்த்தம் அபிஷேகம் நடந்தது. பின் சீனிவாச பெருமாள் வெண்பட்டு குடை சூழ மேல, தாளம் முழங்க கல்யாண மேடையை அடைந்தார். அங்கு மஞ்சள் இடித்தல், பெருமாள் தாயாருக்கு கங்கணம் கட்டுதல் நடந்தன.
திருமாங்கல்யம் பூஜை நிறைவு பெற்று வேத கோஷங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. மேல்கோட்டை ஸ்ரீமத் உ.வே.திருவாய்மொழி ஆச்சான் சுவாமிகள், காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீ வேதவியாசர் சுதர்ஷன பட்டர் சுவாமிகள், திருமலை நல்லான் சக்கரவர்த்தி வெங்கடாச்சாரி மற்றும் வேதவியாச வெங்கடேச பட்டர் சுவாமிகள் ஆகியோர் வைபவத்தை நடத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.----