கோவை,: கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடிக்கும்நிகழ்ச்சி, இன்று விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி, கோட்டைமேடு ஏரியாவே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
இக்கோவிலில், 1993ல் சித்திரை தேரோட்டம் நடந்தது. அதன் பிறகு, தேரோட்டம் நடைபெறவில்லை. பக்தர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், சித்திரைத்தேரோட்டம் நடத்த கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, இன்று தேரோட்டம் நடக்கிறது.
கடந்த 4-ம் தேதி, சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சூரிய பிரபை, சந்திரபிரபை, யானை வாகனம், கைலாசவாகனம், மூஷிக, ரிஷப வெள்ளிமயில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது. காலை 10.40 மணிக்கு தேர்வடம் பிடிக்கும் வைபவம் நடக்கிறது.
இதில் பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதினம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர், தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர்.