ஜனவரி 09,2026
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வருகை தாறுமாறானதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். 10 முதல் 12 மணி நேரம் வரை கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
மண்டல காலத்தை விட மகர விளக்கு சீசனில் பெருவழி பாதை வழியாக பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் முன்பதிவு செய்து இருந்தாலும் பெருவழிப்பாதையில் வரும் போது அதில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. முழுக்க முழுக்க உள் வனப்பகுதியில் இந்த பாதை அமைந்துள்ளதால் ஓய்வெடுத்து வரும்போது அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 200 பக்தர்கள் பெருவழி பாதை வழியாக பம்பை வந்தனர். இதனுடன் நிலக்கல் பம்பை வழியாக பதிவு செய்த பக்தர்களும் வந்த போது கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டது. பம்பையிலும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பையில் இருந்து மலையேறிய பின்னரும் 10 முதல் 12 மணி நேரம் வரை கியூவில் நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது. முன்பதிவு படி குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் வராத பட்சத்தில் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். மண்டல காலத்தை ஒப்பிடும்போது மகர விளக்கு சீசனில் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது சற்று சிரமமான விஷயம் என்று போலீசார் கூறுகின்றனர். பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வராமல் நேரம் கடந்து வருவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். நேற்று மாலைக்கு பின்னர் பம்பையில் கூட்டம் சற்று குறைந்தது. எனினும் பக்தர்களின் நீண்ட கியூ சன்னிதானத்தில் காணப்பட்டது.