ஜனவரி 10,2026
சபரிமலை; எருமேலியில் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர் குழுவின் பேட்டை துள்ளல் நாளை நடைபெறுகிறது. அதற்கு முன்னோடியாக இன்று சந்தனக்கூட பவனி நடைபெறும்.
சபரிமலையில் மகரஜோதி விழா நெருங்கி வரும் நிலையில் அதன் முன்னோடியாக நடைபெறும் முக்கிய சடங்குகளில் ஒன்று எருமேலி பேட்டை துள்ளல். கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல சீசன் தொடங்கிய நாள் முதல் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெற்றாலும் மகரஜோதிக்கு முன்னோடியாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த பேட்டை துள்ளலுடன் எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவுறும் என்பது ஐதீகம்.
நாளை பகல் 12:00 மணியளவில் ஆகாயத்தில் வட்டமடித்து பறக்கும் கருடனை கண்டதும் அம்பலப்புழா பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட யானையுடன் பேட்டை துள்ளி பேட்டை சாஸ்தா கோவில் இருந்தே வெளியே வருவர். அம்லப்புழா ஸ்ரீ கிருஷ்ணசாமி கோயிலில் மதியம் உச்ச பூஜை முடிந்து நடை அடைத்த பின்னர் கருட வடிவில் கிருஷ்ண பகவான் எருமேலி வருவதாக ஐதீகங்கள் கூறுகிறது. வாவர் பள்ளியை பலம் வந்த பின்னர் எருமேலி பெரிய சாஸ்தா கோவிலில் தங்கள் பேட்டையை நிறைவு செய்வார்கள். அதுபோல மாலை 3:00 மணிக்கு ஆகாயத்தில் ஒளிவிட்டு பிரகாசிக்கும் நட்சத்திரத்தை கண்டதும் ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளலை தொடங்கி எருமேலி பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்வார்கள். இதற்கு முன்னோடியாக இன்று எருமேலியில் சந்தனக்குட பவனி நடைபெறுகிறது.
கட்டுப்பாடு நீக்கம் : அதிக பக்தர் கூட்டம் மற்றும் அதிக விற்பனை காரணமாக கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ஒரு பக்தருக்கு 10 டின் அரவணை என்ற கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் மீண்டும் மீண்டும் கியூவில் நின்று தங்களுக்கு தேவையான அரவணையை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் எப்போதும் அரவணை கவுண்டர்களில் நீண்ட கியூ காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் இந்த கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதாக தேவசம்போர்டு அறிவித்தது. தற்போது 16 லட்சம் டின் அரவணை கையிருப்பு உள்ளதாகவும் தேவசம்போர்டு கூறியுள்ளது . இதனால் பக்தர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப அரவணை வாங்கி செல்கின்றனர்.