ஜனவரி 09,2026
சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சன்னிதானம் அலங்காரத்தில் பாரம்பரிய பூக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சபரிமலையில் மகரஜோதி விழா வரும் 14- ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. மகரஜோதி நாளில் சன்னிதானம் எஸ். பி. யாக சுஜித் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ. க்கள், கமாண்டோ படையினர், மத்திய அதிவிரைவு படையினர், மத்திய பேரழிவு நிவாரண படையினர் உட்பட 2500 பேர் மகரஜோதி நாளில் சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதிக்கு முந்தைய நாள் 13- ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும், 14 -ம் தேதி 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 முதல் 14-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் கிடையாது. விருச்சுவல் கியூவில் முன்பதிவு செய்யாத எவரையும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் சன்னிதானம் வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்து உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். மகரஜோதி தெரியும் இடங்களை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மகரஜோதி நாளில் சன்னிதானத்தில் ஸ்ரீ கோயிலை சுற்றி பூ அலங்காரம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெங்களூரில் இருந்து மணம் இல்லாத வண்ண பூக்கள் வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும். அல்வகை பூக்களை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கமான ரோஜா, மல்லிகை, துளசி உள்ளிட் பாரம்பரிய பூக்களும், குருத்தோலைகளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.