காரைக்காலில் வாழ்ந்த தனதத்தன் என்னும் வணிகரின் மனைவி புனிதவதி. ஒருநாள் கடையில் இருந்து, இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு அனுப்பினார். அதில் ஒரு பழத்தை சிவனடியாருக்கு பிச்சையிட்டாள் புனிதவதி. வீட்டுக்கு வந்த தனதத்தன் பழத்தைக் கேட்க, ஒரு பழத்தைக் கொடுத்தாள். ஆகா... சுவையாக இருக்குதே! இன்னொன்றையும் கொடு எனக் கேட்க, புனிதவதி திடுக்கிட்டாள். பூஜையறைக்கு சென்று சிவபெருமானை வேண்டினாள். அவளது கையில் மாம்பழம் ஒன்று விழுந்தது. அதை கணவரிடம் கொடுக்க, முதல் மாம்பழத்தை விட இது இன்னும் சுவையாக இருப்பதை உணர்ந்தார். அது பற்றி விசாரிக்க, புனிதவதி நடந்ததை விவரித்தாள். ""புனிதவதி! என் கண் முன்னர் ஒரு பழத்தை வரவழைத்துக் காட்டு என்றார் கணவர். புனிதவதியும் வழிபட சிவனருளால் பழம் வந்தது. தெய்வப் பெண்ணான இந்த புனிதவதியே பின்னாளில் காரைக்காலம்மையார் என பெயர் பெற்றாள்.