திருப்பூர், பழநி மலைக்கு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு தாராபுரத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் நுாதன சேவை வழங்கி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் தேரோட்டத்தின் போது, பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். பழநி செல்லும் பக்தர்களுக்கு தாராபுரத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி அன்வர் அலி, 63, என்பவர் புதிய முறையில் சேவை செய்கிறார்.தாராபுரம் பகுதியைக் கடந்து செல்லும் பாத யாத்திரை பக்தர் சின்னக்கடை வீதி வழியாகச் செல்வர். அங்கு நீண்ட காலமாக அன்வர் அலி கடை நடத்தி வருகிறார்.
இவர் தன் கடை முன்புறம் மொபைல் போன்கள் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் விதமாக 65 பிளக் பாய்ன்ட்கள் கொண்ட ஒரு போர்டு அமைத்துள்ளார்.மேலும் அந்த இடத்தில், ‘ஒரு தாய் மக்கள் நாம் என்போம்’ என்ற தலைப்பில் பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளார். காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இந்த சேவையை அவர் வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் இந்த சேவையை வழங்கி வருவதால் வழக்கமாக வரும் பலரும் அவருக்கு நெருக்கமாகி விட்டது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த நுாதன சேவையை தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்திக் கொள்வதோடு அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துச் செல்கின்றனர்.