பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் எழுந்தருளிய தேகளீச பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2025 03:01
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராபத்து உற்சவத்தில் பெருமாள் பனிப் போர்வை போர்த்தி ஆஸ்தானம் எழுந்தருளினார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை தொடர்ந்து இராப்பத்து உற்சவம் கடந்த 10ம் தேதி துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கோவிலை வலம் வந்து, உடையவர் சன்னதியில் மண்டகபடி நடந்தது. தொடர்ந்து பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவிக்க பரமபதம் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு திருவாய்மொழி, சேவை சாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் நடந்தது. தேகளீச பெருமாள் மெல்லிய இழை கொண்ட போர்வையால் திருமுகம் தெரிய போர்த்தப்பட்டு ஆஸ்தானம் எழுந்தருளினார். சிறப்பான இக்காட்சியைக் காணும் பக்தர்களுக்கு சகல பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் மேற்பார்வையில் செய்திருந்தனர்.