ஸ்ரீரங்கத்தில் பெண்வேடமிட்டு பெருமாள் நம்மாழ்வாரை ஆட்கொள்ளும் திருக்கைத்தல சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2025 10:01
திருச்சி; ஸ்ரீரங்கத்தில் பராங்குச நாயகியாக பெண்வேடமிட்டு வரும் நம்மாழ்வாரை ஆட்கொள்ளும் திருக்கைத்தலசேவை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 30ம் தேதி முதல் வைகுண்ட எகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இராப்பத்து திருவிழாவின் முதல்நாளில் சொர்க்கவாசல் திறப்பு கடந்த 10ம்தேதி நடைபெற்றது. நம்மாழ்வாருக்கு காட்சியளிக்கும் பொருட்டு நம்பெருமாள் நின்றகோலத்தில் காட்சியளித்ததை உணர்த்தும் வகையில், வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் மட்டுமே நடைபெறும் திருக்கைத்தல சேவை இராப்பத்து திருவிழாவின் 7ம் திருநாளான நேற்று நடைபெற்றது. நம்பெருமாள்(உற்சவர்) முத்துப் பாண்டியன் கொண்டையணிந்து, நீலநாயகம், அடுக்கு பதக்கம், காசு மாலையணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி மாலை 6.00மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். இதையடுத்து நம்பெருமாள் திருக்கைத்தல சேவை மாலை 6.15மணிக்கு தொடங்கியது. நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் எழுந்தருளிய, திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாளை கோவில் பட்டர்கள் தங்களது இரு கைகளிலும் ஏந்தியபடி நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கு சேவை சாதிக்க செய்தனர். சுமார் 15நிமிடங்கள் நம்பெருமாளை கைகளில் ஏந்தியபடியே பக்தர்களுக்கு திருக்கைத்தல சேவை நடத்தப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த சேவை நடைபெறுகிறது என்பதால் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி முழக்கமிட்டவாறு நம்பெருமாளை தரிசித்தனர்.