ராமபிரானை பற்றி சதாசிவ பிரம்மேந்திராள் சமஸ்கிருது பாடல் ஒன்று எழுதியுள்ளார். அந்த பாடலின் விளக்கத்தை ராமநவமி அன்று படித்தால், ஸ்ரீராமபிரான் நம் இல்லத்திற்கே எழுந்தருளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பிரார்த்தனையை மனஉருக்கத்துடன் செய்யுங்கள்.
ஏ நாக்கே! ராம என்னும் அமுதத்தை பருகுவாய். ராமன் என்னும் சுவையை பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழரசத்தால் அது நிரம்பியது. பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். நியமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களின் சாரமாக இருப்பது ராமநாமமே. ராமனின் நாமமே இந்த உலகை பாதுகாக்கிறது. வெளிவேஷக்காரர்களையும் நல்லவர்களாக மாற்றுகிறது. சுகர், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தை பருகினார்கள். தூயவர்களாகி பரமஹம்சர்களின் ஆஸ்ரமங்களிலேயே அவர்கள் பாடினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நாங்களும் பருகுகிறோம்.