பதிவு செய்த நாள்
17
ஜன
2025
11:01
மஹாகும்ப நகர்: உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளாவில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் விதமாக ஒரு தட்டு - ஒரு பை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக துணி பைகளும், எவர்சில்வர் தட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், 144 ஆண்டுகளுக்கு பின் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி கோலாகலமாக துவங்கியது. அடுத்த மாதம் மஹா சிவராத்திரி நாளான பிப்., 26 வரை கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. இதில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால், பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகர சங்கராந்தியை ஒட்டி கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறை கும்பமேளாவில் பின்பற்றப்பட வேண்டும்; ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் என, வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில், மஹா கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில், ஒரு தட்டு - ஒரு பை திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நேற்று அறிமுகப்படுத்தியது.
இது குறித்து அந்த அமைப்பின் மாவட்ட செய்தி தொடர்பாளர் முரார் திருப்பதி கூறியதாவது: உத்தர பிரதேச முதல்வரின் உத்தரவை ஏற்று, மஹா கும்பமேளாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எவர்சில்வர் தட்டு, டம்ளர்கள், துணிப்பை உள்ளிட்டவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இணைச் செயலர் கிருஷ்ண கோபால் நேற்று துவக்கி வைத்தார். ஆறு மையங்கள் வாயிலாக, ஒரு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் அடங்கிய 70,000 துணிப்பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக நாடு முழுதும் இருந்து 20 லட்சம் எவர்சில்வர் தட்டுகளும், டம்ளர்களும் கொள்முதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்துவதற்கு மாற்றாக, இந்த பைகளும், தட்டுகளும் இங்குள்ள உணவு வினியோக மையங்களுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.