திருப்புவனம்; காணும் பொங்கல் ஒட்டி நேற்று தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மடப்புரம் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வருவதுண்டு, ஆக்ரோஷமான தெய்வமான பத்ரகாளியம்மனை சாந்தப்படுத்த எலுமிச்சை மாலை அணிவிக்கப்படுவதால் பக்தர்களுக்கும் எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புற விவசாயிகள் காணும் பொங்கலன்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம், நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய டிராக்டர், சரக்கு வேன்,கார், ஆட்டோ உள்ளிட்டவற்றில் வந்து குவிந்தனர். நேர்த்திகடன் விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். காணும் பொங்கலை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்கள் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். விநாயகரை தரிசனம் செய்த பின் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.