பதிவு செய்த நாள்
28
மே
2012
11:05
1. ககுத்துமியின் கதை
பராசர முனிவரை நோக்கி மைத்ரேயர், சுவாமி! சத்கருமம் செய்யப் புகுந்தவருக்குச் செய்யத்தக்க நித்திய நைமித்திக ரூபமான கர்மங்களின் சொரூபத்தையும் வருணாசிரம முறைகளையும் தாங்கள் எனக்குக் கூறினீர்கள். இனிமேல் அரசர்களின் வமிசங்களைத் தங்களிடமிருந்து நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் கிருபை செய்து அவற்றை எனக்கு விளங்கச் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். அவரது ஆசாரியரான பராசர முனிவர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வைவஸ்வத மனுவின் வமிசமானது; மகா யாக கர்த்தாக்களையும் மகாவீரர்களையும் மகாசூரரையும் கொண்ட பேரரசர்கள் வாழ்ந்த பெரியதொரு வமிசமாகும். இந்த வமிசத்தின் வரலாற்றை சகல பாபங்களும் நசிக்கும் பொருட்டு நான் உமக்குச் சொல்லுகிறேன்! ஜகங்களுக்கெல்லாம் ஆதிகாரணமானவரும் ரிக், யஜுர், ஸாமாதி மயருமான ஸ்ரீமந்நாராயண பகவானுடைய மூர்த்தி ஸ்வரூபமாய், இரணியகர்ப்பர் என்ற பெயரையுடையவராய் இந்தப் பிரமாண்டத்தின் அதிபதியான பிருமாவானவர், பூர்வத்தில் உண்டானார் அல்லவா? அந்தப் பிருமாவின் வலதுகட்டை விரலிலிருந்து தக்ஷப் பிரஜாபதி தோன்றினார். தக்ஷருடைய புத்திரி அதிதி. அந்த அதிதியின் மகன் விவசுவான் என்ற சூரியனாகும். அவனது மகன் மனு, மனுவுக்கு இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், பிருக்ஷத்திரன் என்று ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே, அந்த மனுபுத்திரனுக்காக மித்ரா வருணனைக் குறித்து ஒரு யாகம் செய்ய அதில் ஹோதாவின் அபசாரத்தால் இளை என்ற கன்னியொருத்தி பிறந்தாள். அவள் மித்திராவருணர்களுடைய அனுக்கிரகத்தால் மீண்டும் பெண்ணாகி, சந்திரனுடைய மகனான புதனுடைய ஆஸ்ரமத்தின் அருகே திரிந்து கொண்டிருந்தாள்.
புதன்-அவள் மீது காமங்கொண்டு அவளோடு கூடிமகிழ்ந்து புரூரவன் என்ற பிள்ளையைப் பெற்றான். அந்தப் புரூரவன் பிறந்த பிறகு, பெண்ணாக மாறி சுத்தியும்னன் மறுபடியும் ஆணாக மாற வேண்டும் என்று மகா தேஜோமயமான முனிவர்கள் விரும்பினார்கள். அதற்காக யாக மயனாகவும், ரிக், யஜுர், ஸாம, அதர்வண மயனாகவும், மனோ மயனாகவும் ஞான விஞ்ஞானமயனாகவும், அன்னமயனாகவும், அமிருத மயனாகவும் சர்வமயனாகவும், இவை ஒன்றுமாகாதவனாயும், ஆறு குணசம்பன்னனாயும் இருக்கும். யக்ஞ புருஷனைக் குறித்து அம்முனிவர்கள் யாகஞ்செய்து, அந்த யாகத்தில் தோன்றிய ஸ்ரீயப்பதியினுடைய அனுக்கிரகத்தினால் இளையானவள் மீண்டும் ஆண் பிள்ளையாகி சுத்தியும்னன் என்ற பெயரைப் பெற்றான். அவனுக்கு உத்கலன், கயன், விதானன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுத்தியும்னனோ, முன்பு பெண்ணாக இருந்ததனாலே ஆட்சியுரிமை பெறவில்லை. ஆயினும் வசிஷ்ட மாமுனிவரின் சொற்படி, அவனது தந்தை பிரதிஷ்டானம் என்ற நகரத்தைப் புரூரவனுக்குக் கொடுத்தான். பிருக்ஷத்திரன் என்பவன் ஒருநாள் வசிஷ்டருடைய பசுக்கூட்டத்தைக் காவல் புரிந்து கொண்டிருக்கும்போது, இரவில் அந்தப் பசுக்கூட்டத்தில் புகுந்த ஒரு புலியைக் கொல்லப்போய் குறி தவறி ஒரு பசுவைக் கொன்றுவிட்டான். அதனால் குருவின் சாபம் பெற்றுச் சூத்திரனானான், கரூசனிடத்திலிருந்து கரூர தேசத்தைக் காத்து வந்த மகா பராக்கிரமசாலிகளான க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள். திருஷ்டன் என்பவனுக்கு நரபாகன் என்பவன் பிறந்தான். அவனுக்குப் பலந்தனன் பிறந்தான். அந்தப் பலந்தனன் மகனான வச்சப்பிரீதி என்பவன், மிகவும் புகழ் பெற்றிருந்தான். அவனது மகன் பிராம்சு அந்தப் பிராம்சுவுக்கு பிரசாபதி என்பவன் பிறந்தான். அவனுக்குக் கனி மித்திரன் அவனுக்கு சக்ஷúஷன், சக்ஷúஷனுக்கு மிகவும் பராக்கிரசாலியான விமிசன். அவனுக்கு விம்சகன், அவனுக்குக் கனிநேத்திரன் அவனுக்கு அதிவிபூதி, அவனுக்கு மாவீரனான கரந்தமன், அவனுக்கு அவிக்ஷித்து, அந்த அவிக்ஷித்துக்கு நற்குணமுடைய மருத்தன் என்ற ரீதியில் புதல்வர்கள் பிறந்தார்கள். மருத்தனைப் பற்றி இரண்டு பாடல்கள் இப்போதும் வழங்குகின்றன. இந்தவுலகத்தில் மருத்தனுடைய யாகத்தைப் போல் யாருடைய வேள்வி தான் இருந்தது? அந்த யாகத்திற்கு வேண்டிய கருவிகள் யாவும் செம்பொன்னாற் செய்யப்பட்டு விளங்கின. அந்த வேள்வியிலே, சோமபானத்தால் இந்திரனும் தக்ஷிணையால் அந்தணரும், உடல் தெரியாதிருக்கும்படி மகிழ்ந்தார்கள். மேலும் அதில் வாயுக்களே உணவுகளைப் பரிமாறிய வேலையாட்கள் ஆனார்கள். தேவர்கள் சபையோராயினர்.
அத்தகைய மருத்தன் மாமன்னனாக இருந்து நரிஷ்யந்தனன் என்னும் மகனைப் பெற்றான். அந்த நரிஷ்யந்தனன் மகன் தமன். தமனின் மகன் ராஜவர்த்தனன். அவனுக்கு சுவிருத்தி, சுவிருத்திக்குக் கேவலன்; கேவலனுக்கு சுதிருதி, அவனுக்கு நரன், நரனுக்குச் சந்திரன், அவனுக்குக் கேவலன், அவனுக்குப் பந்துமான், அவனுக்கு வேகவான், அந்த வேகவானின் மகன் புதன்; அவனுடைய மகன் திருணபிந்து! திருணபிந்துவுக்கு இளிபிளை என்ற பெண் பிறந்தாள். அந்தத் திருணபிந்து மன்னனை அலம்புசை என்ற அப்சர மங்கை விரும்பிப் புணர்ந்து விசாலன் என்ற மகனை ஈன்றெடுத்தாள். அவன்தான் வைசாலி என்ற நகரத்தை உண்டாக்கினான். அவனுக்கு ஹேமசந்திரன் என்ற மகன் பிறந்தனன். அவன் மகன் சந்திரன்; அவனுடைய மகன் தூமிராஷன்; அவனுக்குச் சருஞ்யன்; அவன் மகன் சகதேவன், அவனுக்கு கிருசாசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சோமதத்தன் என்ற புதல்வன் பிறந்து, பத்து அஸ்வமேதயாகம் செய்தான். அவனது மகன் ஜனமேஜயன். ஜனமேஜயனின் மகன் சுமதி அவர்களனைவரும் வைசாலியை ஆண்டுவந்த அரசர்களாவார்கள், இவர்களைப் பற்றி ஒரு சுலோகம் வழங்கி வருகிறது. வைசாலி நகரை ஆண்ட அரசர்கள் யாவரும் மூலபுருஷனான திருணபிந்து மாமன்னனுடைய அனுக்கிரகத்தால் தீர்க்காயுளையுடையவர்களாயும், மகாத்மாக்களாகவும், வீரர்களாயும், தர்மசீலராயும் இருந்தார்கள் என்பதுதான் அந்தச் சுலோகமாகும். இனி சர்யாதி என்பவனுக்குச் சுகன்னியை என்ற மகள் ஒருத்தி பிறந்தாள். அவளைச் சியவனர் என்ற மிகவும் புகழ்பெற்ற முனிவர் ஒருவர் திருமணம் புரிந்து கொண்டார். அந்தச் சர்யாதிக்கு ஆனர்த்தனன் என்ற ஒரு மகன் உண்டு. மேலைக் கடற்கரையில் அவன் ஆண்ட தேசத்துக்கு ஆனர்த்தம் என்ற பெயர் வழங்கலாயிற்று. அவனுக்கு ரேவதன் என்ற மகன் பிறந்து அவன் குசஸ்தலி என்ற நகரத்திலிருந்து கொண்டு ஆனர்த்த நாட்டை ஆண்டுவந்தான். அந்த ரேவதனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மூத்தவன் தான் ககுத்துமி என்பவனாகும், அவனுக்கு ரைவதன் என்ற பெயரும் வழங்கி வரலாயிற்று. அவனுக்கு ரேவதி என்ற மகள் ஒருந்தி பிறந்தாள். அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இவளை யாருக்குக் கொடுக்கலாம் என்று கேட்கும் பொருட்டு பிரம்மலோகத்துக்குக் ககுத்துமி சென்றான். ஹாஹா ஹுஹு என்ற கந்தர்வர்கள் இருவர் அதிதானம் என்று வழங்கப்பட்ட இனிய சங்கீதத்தைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அது சித்திரை, தக்ஷிணை வார்த்திகை என்ற மூன்று வழிகளின் பரிவிர்த்தங்களினால் சுற்றிக்கொண்டு வருவதை அநேக யுககாலம் வரையில் அவ்வரசன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வளவு அதிக காலம் சென்றதைக் கூட ஒரு முகூர்த்த காலமாகவே நினைத்தான். அந்தச் சங்கீதம் முடிந்த பிறகு, சதுர்முகனை வணங்கிய ரைவத மன்னன் இந்தக் கன்னிகைக்கு தகுதியான கணவன் யார்? என்று பிரும்மாவைக் கேட்டான். அதற்கு அவர் மன்னனே! நீ நினைத்துக் கொண்டிருக்கும் வரன்களைச் சொல்வாயாக என்றார். அவரைக் ககுத்துமி மன்னன் வணங்கித் தான் நினைத்திருந்த சிலரது பெயர்களைச் சொல்லி, தேவா! இவர்களில் யாருக்கு நான் என் புதல்வியைக் கொடுக்கலாம்? அவனைத் தேர்ந்து சொல்லுங்கள் என்று கேட்டான்.
அரசனே! நீ யாரை எண்ணிக் கொண்டிருந்தாயோ அவர்களுடைய பிள்ளைகளும் அந்தப் பிள்ளைகளுடைய சந்ததியினரும் இப்போது பூவுலகில் இல்லை. நீ இங்கு நடந்த சங்கீத நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்திற்குள் எத்தனையோ யுகங்கள் கழிந்து விட்டன. இப்போது பூவுலகத்தில் வைவஸ்வத மனுவந்தரத்திலே இருபத்தெட்டாவது சதுர்யுகம் முடியப் போகிறது. கலியுகம் நெருங்குகிறது. இப்போது பூர்வகாலத்தைச் சேர்ந்த நீ ஒருவனே இருப்பதால், இக்காலத்தவரான யாருக்காவது இந்தப் பெண்ணை, நீ ஒருவனாகவேக் கொடுக்க வேண்டும். இப்போது உன்னுடைய புத்திரர், மித்திரர், மனைவியர், மந்திரிகள், உறவினர், ஏவலாட்கள், சேனைகள் முதலியன யாவுமே ஒழிந்து போய்விட்டன! என்றார் பிருமா. அதைக்கேட்ட ரைவத மன்னன் மிகவும் நடுங்கி, சுவாமி! இப்படியானால் என் மகளின் கதிதான் என்ன? இனி இந்தக் கன்னியை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கேட்டான். ரைவத மன்னனே; அஜனாயும் சர்வமயனாயும் இருக்கிற எவனுக்கு ஆதி மத்தியம், அந்தம் என்ற இந்த மூன்றையும் யானும் மற்றவரும் அறியோமோ பரமேசுவரனான எவனுடைய ஸ்வரூபத்தையும் மேலான பிரபாவத்தையும், பலத்தையும் அறியோமோ, கலா முகூர்த்தாதி மயமான காலமானது பரமபதம் என்று சொல்லப்பட்ட எவனுடைய திரிபாத விபூதியை மாற்றமாட்டாதோ, உற்பத்தி நாசங்கள் இல்லாதவனாயும் சர்வ சரீரகனாயும், கர்வமயமான பெயர்களும் ரூபங்களும் இல்லாதவனாயும் என்றும் ஒருபடியே இருப்பவனாயுமுள்ள எவனுடைய அருளால் நான் படைப்பவனாகினேனோ எவனுடைய குரோத அம்சத்தால் ருத்திரமூர்த்தி சங்காரகர்த்தன் ஆனானோ, எந்தப் பரமபுருஷன் எங்கள் இருவருக்குமிடையில் காத்தலுக்கு உரிய கர்த்தாவாக அவதரித்து எழுந்தருளியிருக்கிறானோ எவன் தனது அம்சத்தினால் என்னுள் ஆவிப்பவித்து படைக்கிறானோ தானே புருஷ ஸ்வரூபியாக இருந்து காக்கிறானோ ருத்திரனிடத்தில் அம்ச ஆவிர்ப்பாவத்தால் சர்வ சங்காரஞ் செய்கிறானோ; எவன் இந்திரன் முதலியோரின் வடிவிலே உலகத்தைக் காக்கிறானோ எவன் சூரிய சந்திர ரூபியாகி இருளைப் போக்குகிறானோ, பூமி ரூபியாகி எல்லாவற்றையும் எவன் சுமக்கிறானோ, வாயுரூபியாக யாவற்றையும் எவன் அசைக்கிறானோ, அக்னிரூபியாகி பாகத்திற்கு எவன் உபயோகமாகிறானோ ஆகாயரூபியாக இருந்து சகலத்துக்கும் எவன் இடங்கொடுக்கிறானோ, தண்ணீரும் சோறுமாகி உலகத்தின் திருப்திக்கு எவன் காரணமாகிறானோ, எவன் யாவற்றையும் தன்னையும் தனக்குத்தானே பரிபாலனம் செய்கிறானோ, எவன் இதரங்களையும் தன்னையும் தானே அழித்துக் கொள்கிறானோ இந்தச் சிருஷ்டி ஸ்திதி, சங்கார கர்த்தாக்களாகிய மூவருக்கும் சிருஷ்டிக்கப்படுவனவும், காக்கப்படுவனவும், சங்கரிக்கப்படுவனவுமாக மூன்றுக்கும் வேறாய் விகாராதிகள் இல்லாமல் எவன் விளங்குகிறானோ, எவனிடம் உலகம் யாவுமே இருக்கின்றனவோ எவன் சகலலோக சொரூபியாக இருக்கிறானோ எவன் எல்லாவற்றுக்கும் முதலாவதாக இருக்கிறானோ எவன் இவ்வுலகத்தில் எங்கும் இருக்கிறானோ அந்தச் சர்வேஸ்வரனான விஷ்ணுபகவான் இப்போது பூவுலகத்தில் தன் அமிசத்தால் ஒரு திருவவதாரஞ் செய்திருக்கிறான்.
முன்பு உம்முடைய தலைநகரான குசஸ்தலியானது இப்போது யாதவ மன்னர்களால் ஆளப்பட்டு வருகிறது. துவாரகை என்ற பெயரையுடைய அந்த நகரம் தேவேந்திரனின் தலைநகரைப் போல் இருக்கிறது. அதில் எம்பெருமானார் ஆதிசேஷனது அம்சத்தினால் அவதரித்து பலராமன் என்ற திருப்பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். அரசனே! அவனுக்கு உன் மகளைப் பத்னியாகச் சமர்ப்பிப்பாயாக. உன் மகள், பெண்களில் இரத்தினத்தைப் போன்றவள் ஆகையால் இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று பிருமதேவர் கூறினார். பிறகு ககுத்துமி மன்னன் பூவுலகம் வந்தான். அங்கேயிருந்தவர்கள் மிகக்குட்டையான வடிவமும், அற்ப தேஜஸும், அற்பமான ஞானசக்திகளும் கொண்டவர்களாக இருப்பதைக் கண்டு வியந்த வண்ணம் துவாரகைக்குச் சென்றான். அங்கு பலராமனுக்கு தன் செல்வியை மணஞ்செய்து கொடுத்தான். தாலத்துவசரான அந்தப் பலராமன் தன்னைவிடத் தான் மணந்தவள் அதிக உயரமாக இருந்ததால் தமது ஆயுதமான கலப்பையால் வணக்கியருளினான். அந்தப் பொற்கொடியும் அவரது உணர்ச்சிக்கு ஏற்றப் பிரமாணம் உடையவளாய், வேறு கன்னிகையைப் போலாகி விட்டாள். பிறகு ககுத்துமி மன்னன் தவஞ்செய்ய, இமயமலைச் சாரலுக்குச் சென்று விட்டான்.
2. சசாத, ககுஸ்தா, மாந்தாதா வரலாறுகள்
ககுத்துமி மன்னன், பிருமலோகத்திலிருந்து பூவுலகத்திற்கு வராமல் இருந்தபோது, புண்ணியஜனர் என்ற அரக்கர்கள் குசஸ்தலிப் பட்டணத்தை அழித்தார்கள். அதிலிருந்த அவனது தம்பியரெல்லாம் அவ்வரக்கர்களுக்குப் பயந்து நான்கு திசைகளிலும் ஓடியதால் அந்தக்குலத்து அரசர்கள் எங்கும் இருந்தார்கள். விருஷ்டன் என்பவன் மூலமாக, வார்ஷ்டகம் என்ற ராஜகுலம் உண்டாயிற்று. நரபாகன் என்பவனின் மகனும் நரபாகன் என்ற பெயரையே பெற்றிருந்தான். அவனுக்கு அம்பரீஷனும், அம்பரீஷனுக்கு விரூபனும், விரூபனுக்கு பிரஷதசுவன் என்பவனும் பிறந்தார்கள். பிரஷதசுவனுக்கு ரதீதரன் தோன்றினான். இவனைப் பற்றிய சுலோகம் ஒன்று வழங்குகிறது. அதாவது ரதீதர கோத்திரத்தில் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களாக இருந்தாலும் அங்கிரசு என்ற பிராமண முனிவரின் சம்பந்தத்தினாலும் தவவலிமையினாலும் பிராமண ரூபமாகி, க்ஷத்திரிய சம்பந்தமுள்ள பிராமணராக விளங்கி வந்தார்கள். வைவச்சுத மனுவானவர் தும்மும் போது, அவரது மூக்கிலிருந்து இஷ்வாகு என்ற புதல்வன் பிறந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள் உண்டு. அவர்களில் விகுக்ஷி நிமி தண்டன் என்போர் முக்கியமானவர்கள். சகுனி முதலிய ஐம்பது பிள்ளைகள் உத்தராபதம் என்ற வடநாட்டின் வேந்தரானார்கள். நாற்பத்தெட்டுப் பேர் தக்ஷிணபதம் என்ற தென்னாட்டை ஆண்டு வந்தார்கள். அந்த இஷ்வாகு மாமன்னன் அஷ்டகையில் புதியதான மாமிசத்தைக் கொண்டுவரும்படித் தனது மகனான விகுக்ஷி என்பவனுக்குக் கட்டளையிட்டான். விகுக்ஷியும் தன் தந்தையின் ஆணையை ஏற்று, காட்டுக்குச் சென்று பல மிருகங்களைக் கொன்று மிகவும் களைப்படைந்து தாங்கமுடியாத பசியினால் அவற்றில் ஒரு முயலைக் கொன்று தின்று விட்டு மீதமான மிருகங்களின் இறைச்சியைக் கொண்டு வந்து தன் தகப்பனிடம் ஒப்படைத்தான். அரசன் அவற்றைப் புரோக்ஷிக்கும் பொருட்டு தனது குலகுருவான வசிஷ்டரை வேண்டினான், அவர் அவற்றைப் பார்த்து, அரசனே! இந்த அசுத்தமான மாமிசம் எதற்கு? துராத்மாவான உனது மகன் இவற்றில் ஒரு முயலின் இறைச்சியை உண்டதால் மற்றுள்ள யாவுமே அசுத்தமாகி விட்டன என்று சொன்னார். அதனால் அந்த விகுக்ஷிக்கு சசாதன் (சசாதன்-முயலைத் தின்றவன்) என்ற பெயர் உண்டாயிற்று. அதற்குப் பிறகு இஷ்வாகு இறந்த பிறகு அவனது மகனான சசாதன் அரசனாகி, நீதி தவறாமல் ஆண்டு வந்தான்.
அவனுக்குப் புரஞ்சயன் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்குப் பின்வரும் காரணத்தால் ககுஸ்தன் என்ற பெயர் உண்டாயிற்று. அதாவது திரேதா யுகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெரும்போர் ஒன்று நடந்தது. அதில் தேவர்கள் தோல்வியடைந்து ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்தார்கள். பகவான் நாராயணன் அவர்கள் முன்பு தோன்றி, தேவர்களே உங்கள் கருத்தை நான் அறிந்தேன். நீங்கள் அஞ்சவேண்டாம், நான் பூமியில் சசாதனுடைய மகனாகப் புரஞ்சயன் என்ற க்ஷத்திரியனின் சரீரத்திலே எனது அம்சத்தால் பிரவேசித்து அந்த அரக்கர்ரகளைச் சங்காரம் செய்வேன். ஆகையால் நீங்கள் அந்தப் புரஞ்சயனை, உங்களுக்குச் சகாயமாய்ப் போருக்கு வரும்படி வேண்டுங்கள் என்று அருளிச் செய்தார். தேவர்கள் ஸ்ரீயப்பதியின் திருவடிகளை வணங்கி விடைபெற்றுப் புரஞ்சயனிடம் சென்றனர். தேவர்கள், புரஞ்சயனைக் கண்டு அரசனே! எங்களது பகைவர்களை வெல்வதற்கு, நீயே எங்களுக்குத் துணைபுரியவேண்டும். இதை மறுக்காமல் ஏற்று நிறைவேற்ற வேண்டும்! என்றார்கள். தேவர்களே! நான் உங்களுக்குத் துணைசெய்ய வேண்டுமானால், நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்ததினால் மூவுலகங்களையும் ஆளும்படியான தேவேந்திரனே எனக்கு வாகனமாக வரவேண்டும்! அவனது தோளின்மீது ஏறிக்கொண்டு தான், நான் அந்த அசுரர்களோடு போர் செய்யமுடியும்! என்றான் புரஞ்சயன் அதைத் தேவர்கள் ஏற்றனர். இந்திரன் காளையுருவம் பெற்றான். புரஞ்சயன் அந்த ரிஷபத்தின் முசுப்பின் மீது ஏறிக்கொண்டு ஸ்ரீஅச்சுதனின் தேஜஸினால் பூரித்தவனாகி அசுரர்கள் அனைவரையுமே அழித்து, தேவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தான். விருஷபத்தின் (ககுத்) முகப்பின் (ஸ்த) மீது ஏறியதால் அவனுக்கு ககுஸ்தன் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்த ககுஸ்த மன்னனுக்கு அனேனசு பிறந்தான். அவனுக்குப் பிருது என்பவன் பிறந்தான். பிருதுவுக்கு விஷ்டராசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு யுவனாசுவன் என்பவன் பிறந்தான். அவன் சந்திர அம்சையில் பிறந்ததால் அவனுக்குச் சந்திரன் என்றும் ஒரு பெயருண்டு. அவனுக்கு சாபஸ்தி என்ற குமாரன் பிறந்தான். அவன் சாபஸ்தி என்ற நகரத்தைத் தோற்றுவித்தான். அவனுக்குப் பிருகதசுவன் பிறந்தான். அவனுக்கு குவலயாசுவன் பிறந்தான். அவன் உதங்கமா முனிவருக்குப் பகைவனாக இருந்த துந்து என்ற அசுரனைத் தனது இருபத்தோராயிரம் பிள்ளைகளோடு கூடிச் சென்று கொன்றதால் துந்துமாரன் என்ற பெயரைப் பெற்றான். அவனது பிள்ளைகளில் திருடாசுவன், சந்திராசுவன், கபிலாசுவன் என்ற மூவரைத் தவிர மற்றைய யாவரும் அந்த அசுரனின் தீமூச்சுக் காற்றால் வெந்து மடிந்தார்கள். அவர்களில் திருடாசுவனுக்கு அரியசுவன் பிறந்தான். அவனுக்கு நிகும்பனும், நிகும்பனுக்கு அமிதாசுவனும், அவனுக்கு கிருசாசுவனும், அவனுக்குப் பிரசேனசித்தும், அவனுக்கு யுவனாசுவனும் பிறந்தார்கள்.
யுவனாசுவன் நெடுநாள் புத்திரப் பேறில்லாமையினால் வெறுப்படைந்து, முனிவர்கள் வாழும் ஆசிரமங்களருகே திரிந்து கொண்டிருந்தான். முனிவர்கள் அவன் மீது கருணை கொண்டு, அவனுக்குப் புத்திரன் உண்டாவதற்காக, ஒரு யாகத்தை நடத்தினார்கள். அந்த யாகமானது நள்ளிரவில் முடிந்தது. உடனே தவசிகள் அனைவரும் மந்திர ஜபத்தால் தூய்மையாக்கப்பட்டிருந்த ஒரு தண்ணீர்க் கலசத்தை யாக வேதிகையின் நடுவே வைத்து விட்டு, உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த அரசனுக்குத் தாகம் அதிகமாக இருந்தது. அவன், முனிவர்களை எழுப்புவதற்குப் பயந்து அளவற்ற மந்திரங்களால் ஜபிக்கப்பட்டிருந்த அந்தக் கலசத்து நீரைக் குடித்து விட்டான். பொழுது விடிந்தவுடன் முனிவர்கள் எழுந்து, இந்தக் கலசத்து நீரை யார் குடித்தது? இதை யுவனாசுவரனுடைய மனைவியானவள் குடித்திருந்தால் அவள் மகாப் பலப் பராக்கிரமமுள்ள புத்திரனைப் பெற்றிருப்பாளே? அத்தகைய மந்திர நீரை யார் நாசஞ்செய்தது? என்று கேட்டார்கள். அரசன் நடந்தவற்றை அவர்களிடம் கூறி மன்னிப்பு வேண்டினான். இப்படியிருக்க, அந்த அரசனுடைய வயிற்றிலே, நாளாக நாளாக கர்ப்பம் வளர்ந்து வந்தது. மாதங்கள் நிறைந்தவுடன் அந்தக் கர்ப்பம் அவனுடைய வயிற்றைத் தன் கட்டை விரலினாலே கிழித்துக் கொண்டு வெளியே வந்தது. அரசன் மரணமடைந்தான். இவ்விதமாக குழந்தைப் பிறந்தவுடன் முனிவர்கள் ஒன்றுகூடி, பிறந்த இந்தக் குழந்தை, யாருடைய முலைப்பாலைப் பருகும்? என்று கேட்டார்கள். அப்போது அங்கே வந்த தேவேந்திரன் என்னைத் தாயாக வைத்து முலையுண்ணும் என்று சொல்லித் தனது பவித்திர விரலை, அந்தக் குழந்தையின் வாயில் கொடுக்க, அந்தப் பிள்ளை அந்த விரலிலிருந்து ஒழுகிய அமிர்தத்தைக் குடித்து ஒரே நாளில் வளர்ந்தது. இந்திரனுக்கு மாந்தாதா என்ற பெயரும் உண்டு. ஆகையால் அந்த அரசகுமாரனுக்கு மாந்தாதா என்ற பெயர் உண்டாயிற்று. அவன் மாமன்னனாகி பூமண்டலத்தை ஆண்டு வந்தான். இவனைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. அதாவது எவ்வளவிலே சூரியன் உதயமாகிறானோ, எவ்வளவிலே அஸ்தமனமாகிறானோ, அந்த எல்லைகளுக்கு உட்பட்ட பூமண்டலம் முழுமையும் மாந்தாதாவின் ராஜ்யமாக இருந்தது! என்பது தான் அந்தப் பாடலாகும்.
அந்த மாந்தாதா, சசபிந்து என்பவனின் மகளாகிய இந்துமதி என்பவளை மணந்து, புருகுச்சன், அம்பரீஷன், நாபாகன் என்ற பிள்ளைகளையும் ஐம்பது பெண்களையும் பெற்றான். அந்தக் காலத்தில் ரிக் வேதமறிந்த சவுபரி என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கிப் பன்னிரண்டு ஆண்டுக்காலம் தவஞ்செய்து கொண்டிருந்தார். அந்தத் தண்ணீரில் சம்மதன் என்ற மிகப்பெரிய மீன் ஒன்று, பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், உறவினர்களாகிய தன் கிளைகள் அநேகம் முன்னும் பின்னும் பக்கங்களிலும் வாலிலும் தலையிலும் ஏறி விளையாடச் சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதனால் சவுபரி முனிவரது மனஒருமைப்பாடு நீங்கியது. அவர் அந்த மச்சம் தன் கிளைகளோடு கூடி அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு, ஓ! இந்த மீனோ விரும்பத்தகாத ஈனப் பிறப்பிற் பிறந்தது. ஆயினும் அது மிகவும் பாக்கியமுள்ளது. ஏனென்றால் புத்திர பவுத்ராதிகள் விளையாடிக் கொண்டிருக்க, அவற்றோடு இணைபிரியாமல் சஞ்சரித்து மகிழ்கின்றது. இதைப் பார்க்க நமக்கே எவ்வளவு ஆசையுண்டாகிறது? ஆகையால் நாமும் இப்படியாவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அந்தத் தடாகத்திலிருந்து வெளியே வந்து, சந்தானத்துக்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு மாந்தாதா மன்னனிடம் வந்தார். இவர் வந்த செய்தியை அறிந்த மன்னன் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்தான். அவனை சவுபரி முனிவர் நோக்கி, அரசனே! நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ எனக்குக் கன்னிகாதானம் கொடுக்க வேண்டும். என்னுடைய வேண்டுதலை மறுக்காதே! ககுஸ்த வமிசத்தாரிடம் வந்த யாசகர் தாம் விரும்பியதைப் பெறாமலிருந்ததில்லை அல்லவா? இவ்வுலகில் எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குங் கன்னிகைகள் இருக்கிறார்கள். ஆயினும், யாசகரின் இஷ்டத்தை நிறைவேற்றும் விரதமுடையது உனது குலம். உனக்கு ஐம்பது பெண்கள் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருத்தியை எனக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டும். என் பிரார்த்தனை நிறைவேறாமற் போயின் நான் வருந்துவேன். நான் வருந்தாமல் இருக்க, என் துன்பத்தை நீதான் நீக்கவேண்டும் என்றார். இவ்விதமாகச் சவுபரி முனிவர் சொன்னவுடன், மாந்தாதா மன்னன் அவரை உற்றுப் பார்த்தான். மூப்பினால் தளர்ந்து, தலை நரைத்திருந்தார் சவுபரி முனிவர்! ஆனாலும் அவருடைய வலிமையைப் பற்றிய பயத்தினால் அவரது விண்ணப்பத்தை மறுக்கமாட்டாமல் மாந்தாதா மன்னன் தலைகுனிந்து நெடுநேரம் யோசித்தான். அப்போது சவுபரி முனிவர், அரசனே! எதைப் பற்றிச் சிந்தனை செய்கிறாய்? நான் ஒன்றும் தகாததைச் சொல்லவில்லையே? அவசியம் யாருக்காவது கொடுத்தே தீரவேண்டிய கன்னியை எனக்குக் கொடுக்கும்படித்தானே நான் கேட்டேன்? இதனால் நீ புண்ணியம் பெறுவாய்! என்றார்.
அவரை அரசன் நோக்கி தவமுனிவரே! எனது குலமுறைப்படி, கன்னிகை யார் மீது இஷ்டப்படுகிறாளோ, அந்த வரனுக்கே அவளைக் கொடுப்பது வழக்கம். இது இப்படியிருக்கத் தேவரீரது வேண்டுதலோ எமது எண்ணங்களுக்கு மேற்பட்டது. அதனால் தான் செய்வதறியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதைக்கேட்ட முனிவர் இந்த அரசன் நமது வேண்டுகோளை மறுக்க இதை ஓர் உபாயமாகச் சொல்லிவிட்டான் என்றே யோசித்தார். ஏனென்றால் இந்த முனிவன் முழுக்கிழவன். ஆகையால் எத்தகைய பெண்ணும் இவரை விரும்பமாட்டாள். அப்படியிருக்க நல்ல பருவமுடைய நம் கன்னியர் இவரை விரும்புவார்களோ? ஆகையால் தானே ஆசையற்றுப் போகட்டுமே என்று அரசன் நினைத்தே அப்படிக் கூறிவிட்டான். இனி அதற்கேற்ப நடக்கவேண்டும் என்று சவுபரிக் கிழவர் தமது மனதில் எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்து, அரசனே! உங்கள் குலவிரதத்தை நான் அழிக்கவிரும்பவில்லை; என்னை உமது கன்னிகைகள் இருக்கும் அந்தப்புரத்திற்குப் போகும்படி, அந்தப்புரக் காவலாளிக்குக் கட்டளையிடுவாயாக. கன்னிகையே என்னைக் கதாலிப்பவளாயின் நான் கல்யாணஞ் செய்து கொள்கிறேன். இல்லாவிட்டால் முதிர்ந்த வயதில் இந்த முயற்சி எனக்கு ஏனென்று விட்டு விடுகிறேன்! என்றார். பிறகு அவர் கூறியபடியே செய்யும் வண்ணம் அந்தப்புரக் காவலாளிக்கு அரசன் கட்டளையிட்டான். அக்காவலாளியோடு சவுபரி முனிவர் கன்னிப் பெண்களின் அந்தப்புரத்தினுள்ளே போகும்போது சித்த கந்தர்வர்களைவிட மேம்பட்ட அழகான ரூபத்தை எடுத்துக் கொண்டார். சேவகன், முனிவரை அந்தப்புரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு அங்கிருந்த கன்னியரைப் பார்த்து உங்கள் தந்தையான அரசரிடம் இந்த முனிவர் கன்னிகை வேண்டி வந்தார். கன்னிகைகளில் யார் பிரியப்பட்டு இவரை வரித்துக் கொள்கிறார்களோ, அவர்களையே அவர்களிஷ்டப்படி இந்த முனிவருக்குக் கொடுப்பேன் என்று மகாராஜா கட்டளையிட்டிருக்கிறார் என்றான். அதைக் கேட்டதும் அரசகுமாரிகள் அந்த முனிவரை வந்துப் பார்த்தார்கள். முனிவரின் புதுவடிவத்தையும் இளமை துள்ளும் மோகன ரூப அழகுகளையும் கண்டு அக்கன்னிகைகள் அனைவரும் காமாவேசமுடையவர்களாகி நல்ல மதத்த ஆண் யானையை பெண் யானைகள் சூழ்வதைப் போலச் சூழ்ந்து கொண்டு, நான் நான் என்று பரபரப்புடன் போட்டியிட்டு அவரை வரித்தார்கள். இதனால் அப்பெண்களிடையே கலகம் ஏற்பட்டது; அவர்கள் அனைவருமே அவரை விரும்பினார்கள். எனவே அங்கு நடந்தவற்றைக் காவலாளி அரசரிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் மாந்தாதா மன்னன் மிகவும் வியப்படைந்து, என்ன இது? இனி என்ன செய்வேன்? என்ன சொல்லி விட்டேன்? என்று மனம் கலங்கி, தனக்கு விருப்பம் இல்லாதிருந்தும், வாக்குக் கொடுத்து விட்டதற்காகப் பயந்து, தன் கன்னிப்பெண்களையெல்லாம் சவுபரி முனிவருக்கே திருமணஞ் செய்து கொடுத்தான்.
பிறகு, சவுபரி முனிவர் அரசகுமாரிகளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தை அடைந்தார். அதன்பிறகு சிற்பியான விசுவகர்மாவை அழைத்து தமது மனைவியருக்குத் தனித்தனியாக மாளிகைகளையும் அன்னங்கள் நீந்தும் தடாகங்களையும் மலர் வனங்களையும் அமைத்துக் கொடுக்கச் செய்தார். அவ்வாறே விசுவகர்மாவும் அமைத்துக் கொடுத்தான். பின்பு, சவுபரி மாமுனிவரது ஆக்ஞையினால் அந்த மாளிகைகளில் நந்தனம் என்ற மகாநதியானது நித்தியமாக இருந்து வந்தது. அந்த மாளிகைகளில் ராஜகுமாரிகள் வசித்து போகங்களிலும் போஜன வகையிலும் திருப்தியடைந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தையான மாந்தாதா மன்னன் ஒரு சமயம் தன் பெண்கள் மீதுள்ள அன்பினால், அவர்களைப் பார்ப்பதற்காக முனிவரது ஆசிரமத்தை அடைந்தான். ஆசிரமம் இருந்த இடத்தில் ஸ்படிக மயமாய் விளங்கிய மாடமாளிகைகளைக் கண்டு அதிசயித்து ஒரு மாளிகையினுள்ளே நுழைந்தான். அங்கிருந்த தனது மகளைக் கண்டு, கண்களில் கண்ணீர் ததும்ப மகளே! நீ சுகமாக இருக்கிறாயா? அல்லது அசுகமாக இருக்கிறாயா? முனிவர் உன்னிடத்தில் அன்பாக இருக்கிறாரா? நீ நம்முடைய அந்தம்புரவாசத்தை நினைக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் தந்தையே! நான் சுகமாகவே இருக்கிறேன். எனக்கென்று ரமணீயமான உப்பரிகையும், அழகான தோட்டமும், நீர்ப்பறவைகளோடு தாமரை முதலியவை விளங்கும் தாடகங்களும், மனதிற்கினிமையான போஜனங்களும், திவ்வியமான ஆடையாபரணங்களும் மிகவும் பரிமளமுள்ள மலர்களும் மிகவும் மென்மையான சயனா சனங்களும் இன்னும் இல்லறத்துக்குரிய யாவுமே நன்றாக இருக்கின்றன ஒரு குறையும் எங்களுக்கில்லை. இருப்பினும் பிறந்த இடம் எப்படி மறக்கும்? ஆனால் துக்கத்துக்குக் காரணம் ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்றால், என் கணவராகிய அந்த முனிவர் எப்போதும் என்னிடமே காதல்கொண்டு, என்னை விட்டுப்பிரியாமல் இருக்கிறார். எனது சகோதரிகளே நினைப்பதில்லை இது தான் என்மனதை வருத்துகின்றது என்றாள்.
பிறகு மாந்தாதா மன்னன் மற்றொரு மகளின் மாளிகைக்குச் சென்று, அவளிடமும் முன்போலவே, அவளது சுகத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவளும் தனக்கு கிருஹ பூஷண, சயன, போஜனாதி சவுக்கியங்களில் ஒன்றும் குறைவில்லை என்றும், ஆயினும் தன் கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் எந்நேரமும் தன்னுடனேயே மகிழ்ந்திருப்பதினால் தனது சகோதரிகளுக்கு நேர்ந்துள்ள துக்கமே தனக்குத் துக்க காரணமாக இருக்கிறதென்றும் சொன்னான். பிறகு மன்னன் இதுபோலவே ஒவ்வொரு புதல்வியின் மாளிகைக்கும் சென்று விசாரித்தான். எல்லோரும் ஒன்றுபோலவே பதில் சொல்லி, அவனை நன்கு உபசரித்தார்கள். இதனால் மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஏகாந்தத்தில் உட்கார்ந்திருந்த சவுபரி முனிவரைக் காணச் சென்று, அவரால் மரியாதை செய்யப்பெற்று, வெகு விநயத்துடன் அவரை நோக்கி, ஓ மகானுபவரே! தங்களின் உயர்வான சித்தியின் பிரபாவத்தைக் கண்டேன். நான் இதுபோன்ற சம்பத்து விலாசம் இருப்பதைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இது எவ்வளவோ அவ்வளவும் உமது தவத்தின் பயன் ஆகும்! என்று சொல்லி, அவரை மிகவும் புகழ்ந்தான். பிறகு அவருடன் சிலகாலமிருந்து, இஷ்டமான போகங்களை அனுபவித்து, அதன் பிறகு தனது தலைநகரை அடைந்தான். சிலகாலத்துக்குப் பிறகு, சவுபரி முனிவரின் பத்தினிகளான குமாரிகளுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகள் மீது சவுபரி முனிவருக்கு நாளுக்கு நாள் ஆசையும், அன்பும் அதிகமாயிற்று. அதனால் அவர் மமதையடைந்து, இந்தக் குழந்தைகள் மழலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு சிற்றடிகளால் நடக்குமோ? இவர்கள் யவனமுடையவர்களாவார்களோ? இவர்கள் திருமணம் புரியத்தக்க பெண்களோடு கூடியிருக்கக் காண்பேனோ? இவர்களுக்குக் குழந்தைகள் உண்டாகுமோ? அக்குழந்தைகள் வளர்ந்து மனைவியரோடு சேர்ந்து சந்தானமுடையவர்களாக இருப்பதை நான் கண்டு களிப்பேனோ என்று இந்தவிதமாகக் காலம் செல்லச் செல்ல அவரது மனோரதங்கள் வளர்ந்து கொண்டே இருந்ததால், அவர் வேறு சிந்தனையில்லாமல் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது சவுபரி முனிவர் தமக்குத் தாமே யோசிக்கலானார். ஓஹோ! எனக்கு நேர்ந்த மோகத்தை என்னவென்று சொல்வேன்? பதினாலாயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த மனோரதங்கள் ஒழியாது போலத் தோன்றுகிறதே! ஏனென்றால் முன்பு இருந்த மனோரதங்கள் நிறைவேற நிறைவேற புதியதான வெவ்வேற மனோரதங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவே. நாம் கோரியபடி குழந்தைகள் பிறந்து தவழ்ந்து சித்தடிவைத்து நடந்து வளர்ந்து பருவம் அடைந்து மணஞ்செய்து மக்களையும் பெறக் கண்டோம். இப்பொழுதோ, நமது மனமோ, பேரன்மாருக்கும் சந்ததியுண்டாவதைக் காண விரும்புகிறது. அதைக் கண்டாலும் வேறொன்று மேலும் உண்டாகும். அது நிறைய, வேறொன்று உண்டாகும். மேன்மேலும் ஆசையுண்டாவதைத் தடுப்பதுதான் எப்படி? மரணம் அடைவதனால் மாத்திரம் இந்த மனோரதங்களுக்கு முடிவுண்டாகுமேயன்றி வேறொன்றினாலும் முடிவுண்டாகாது.
இது இப்போது தான் எனக்கு நன்றாகத் தெரிகிறது. இவ்வாறு கோரிக்கைகளிலே அழுந்தியிருப்பவனுக்கு ஒருபோதும் மனமான பரம்பொருளைப் பற்றமாட்டாது. தண்ணீரில் வாசஞ்செய்யும்போது மித்திரனான மச்சத்தின் சேர்க்கையினால் அல்லவோ எனது சமாதி நிஷ்டைக்குலையலாயிற்று? சகவாச தோஷத்தால் அல்லவா, நான் அரசகுமாரிகளை மனைவியர்களாக அடைய நேர்ந்தது. இந்தப் பெண்டிரைக் கொண்டதால் அன்றோ மேன்மேலும் ஆசைப்பெருக்கம் உண்டாயிற்று. ஒரு பெண்டிரைக் கொள்வதும் ஒரு புத்திரனைப் பெறுவதுமே வெகு துக்கத்துக்குக் காரணமாக இருக்கும்போது ஐம்பது பெண்டிரையும் நூறு பிள்ளைகளையும் பெற்று நான் துக்கத்தைப் பெருக்கிக் கொண்டேனே? நான் தண்ணீரிலிருந்து செய்த தவப்பேற்றுக்கு இந்தச் செல்வப்பேறு இடையூறாயிற்றே? மச்சத்தின் கூட்டுறவால் ஏற்பட்ட மக்கட்பேற்றின் விருப்பத்தால் மனங்கவரப்பட்டுப் போனேனே? சங்கமற்றிருப்பதே முனிவர்களுக்கு மோக்ஷத்தின் காரணமாகும் சங்கத்தினால் குற்றங்கள் அல்லவா உண்டாகும்? யோக நிஷ்டை கை கூடியவனும் சங்கத்தால் வீழ்வானாகில் அற்ப சித்தியுள்ள என்போன்றோருக்கு கேட்கவும் வேண்டுமோ? இனிமேலாவது தக்க முயற்சிசெய்து, ஆன்மாவைக் காக்கவேண்டும். ஆகையால் எல்லாவற்றையும் அளிக்கவல்லவனும் இத்தகையது என்று சிந்திக்க ஒண்ணாத திவ்யச் சொரூபமுள்ளவனும், அணுவுக்கு அணுவாயும், மகத்துக்கு மகமாயும் இருப்பவனும், முன்பு ஒரு யுகத்திலே வெண்மையாயும் இந்த யுகத்திலே கருமையாயுமிரா நின்ற திவ்விய மங்கள விக்கிரஹமுள்ளவனும், பிரகிருதிக்கு உட்படாத தூய்மையுருவும், பிரகிருதிக்கு உட்பட்ட சுத்தமல்லாத சொரூபமுடையவனும், லோகேசுவரனுமான ஸ்ரீவிஷ்ணுபகவானை ஆராதிக்கக் கடவேன். சகல தேஜோரூபியாகவும், சர்வ ஸ்வரூபியாகவும், வெளிப்பட்டதும் வெளிப்படாததுமான திருமேனியை உடையவனாகவும், காரிய காரண ரூபியாகவும், தேச காலாதி பரிச்சேதமில்லாதவனாகவும் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவினிடத்திலே மீண்டும் பிறவியில்லாமல் இருத்தற்கு என் சித்தம் சஞ்சலமின்றி ஸ்திரமாக இருக்கக் கடவது. சர்வ பூதாத்துமகனாகவும் நிர்மலனாகவும் சர்வேசுவரனாகவும் ஆதி மத்யாந்தர ரகிதனாகவும் இருக்கும். அந்த அநந்தனைக் காட்டிலும் வேறாகத் தோன்றும்படியான பொருள் ஒன்றும் இல்லையோ அந்தத் தேசிகனுக்கு எல்லாம் தேசிகனாக எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவை சரணமாகப் பற்றுகிறேன்! என்று இவ்விதம் தனக்குத்தானே சிந்தித்த சவுபரி முனிவர், புத்திரர்களையும் வீடு, தோட்டம் முதலிய யாவற்றையும் பற்றற விட்டு, தமது மனைவியருடன் வனத்துக்குச் சென்று, வானப் பிரஸ்தர் செய்யவேண்டிய நித்தியக்கர்ம அனுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சகல பாவங்களையும் போக்கிக் கொண்டு, அதனால் பக்குவமான சித்த நிலையை அடைந்து, அக்கினிகளே ஆத்மாவிலே ஏற்றிவிட்டுச் சந்நியாச ஆசிரமத்தில் பிரவேசித்தார். அவ்விதமாகி, சகல கிரியாக லாபத்தையும் எம்பெருமானுக்கே ஆராதனமாகச் சமர்ப்பித்து நாசம் இல்லாததும், விகார சூன்யமானதும் மரணாதிகளுக்கு இடமாகாததும் அளவற்றதும், பரம பாகவதர்கள் அடையும்படியானதுமான விஷ்ணுலோகம் என்று சொல்லப்படும் பரமபதத்தை அடைந்தார். மைத்ரேயரே! மாந்தாதா மன்னனைப் பற்றிய வரலாற்றிலேயே, இந்த சவுபரி முனிவரின் சரிதத்தையும் நான் உமக்கு சொன்னேன். இதை எவன் ஸ்மரிக்கிறானோ, படிக்கிறானோ, படிக்க வைக்கிறானோ, கேட்கிறானோ, கேட்பிக்கிறானோ, தரிக்கிறானோ, எழுதுகிறானோ, எழுதுவிக்கிறானோ, அதன்படி நடக்கிறானோ, நடத்துவிக்கிறானோ, உபதேசிக்கிறானோ, அவர்களுக்கெல்லாம் எட்டுப் பிறவிகள் வரையிலும் தீயச் சிந்தையும், தீய ஒழுக்கமும் தீயவழியில் மனம் வாக்கு செல்லுதலும், பரித்தியாகம் செய்ய வேண்டியவைகளிலே அபிமானமும் உண்டாவதில்லை!
3. புருகுச்ச, சகர மாமன்னர்களின் வரலாறுகள்
மைத்ரேயரே! இனிமேல் மாந்தாதாவின் பரம்பரையைச் சொல்கிறேன். மாந்தாதாவின் மகனான அம்பரீஷனுக்கு யுவனாசுவன் என்ற புத்திரன் உண்டானான். அவனுக்கு அரிதன் பிறந்தான். அந்தக்காலத்தில் பாதாள உலகத்தில் மவுனேயர் என்ற ஆறுகோடிக் கந்தருவர்கள் இருந்தார்கள். அவர்கள் நாக குலத்தாரின் முக்கியமான இரத்தினங்களையும், ஆட்சியையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாகர்கள், திருப்பாற்கடலில் சென்று சகல தேவ தேவனான ஸ்ரீவிஷ்ணு பெருமானைத் தோத்திரஞ் செய்தார்கள். எம்பெருமான் யோக நித்திரை நீங்கி, தாமரை மலர் மலர்ந்தாற்போலத் திருக்கண் மலர்ந்தருளினார். அப்போது நாகர்கள், சுவாமீ! அடியேங்களுக்குக் கந்தருவருடைய பயம் மிகுந்துள்ளது. இது எப்படித் தீரும்? என்று கேட்டார்கள். அதற்கு முதலும் முடிவும் இல்லாத எம்பெருமான் நாகர்களே! மாந்தாதாவின் மகன் புருகுச்சன் என்பவனிடத்திலே நான் ஆவேசித்து, உங்கள் பகைவர்களை அடக்குகிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்பிறகு நாகர்கள் அவரை வணங்கி விடைபெற்று, பாதாளம் சென்று தங்கள் சகோதரியான நர்மதையை அந்தப் புருகுச்ச மன்னனின் பத்தினியாகும்படி அனுப்பிவைத்தார்கள். அவள் புருகுச்சனோடு சேர்ந்து, அந்த மன்னனைப் பாதாளலோகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். பிறகு புருகுச்ச மாமன்னன், எம்பெருமானது தேஜோ விசேஷத்தால் ஆவேசமுற்று, கந்தர்வர்கள் அனைவரையும் நாசஞ்செய்து, தன் பட்டணத்தை அடைந்தான். அப்போது நாகமன்னர்கள் ஒன்றுகூடி, நர்மதையை அழைத்து, நர்மதாய்! யார் உன்னை நினைத்தாலும் உன் பெயரைக் கீர்த்தனஞ் செய்தாலும், அவனுக்கு சர்ப்ப பயம் இல்லாமற் போகக் கடவது என்று நர்மதைக்கு வரங்கொடுத்தார்கள். இதற்கு ஒரு பாடலும் உண்டு. அதாவது காலையில் நர்மதைக்கு நமஸ்காரம், இரவிலும் நர்மதைக்கு நமஸ்காரம். ஓ! நர்மதாய் உனக்கு நமஸ்காரம் நீ என்னை நச்சுப்பாம்புகள் கடிக்காமல் ரட்சிக்க வேண்டும்! என்று எவனொருவன் சொல்லிக் கொண்டு, இரவு பகல்களில் இருள் மூடிய இடங்களுக்குச் சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிப்பதில்லை. இவ்விதமாகத் தியானித்துக் கொண்டு, விஷத்தையே அருந்தினாலும் அதனால் ஒரு தீங்கும் உண்டாவதில்லை. இவ்விதமாக நர்மதைக்கு நாகேந்திரர்கள் வரங்கொடுத்து விட்டு, புருகுச்ச மன்னனுக்கும் அவனது சந்ததி அற்றுப் போகாதவாறும் பெருகும்படியும் வரங்கொடுத்தார்கள்.
புருகுச்ச மன்னன் நர்மதையோடு கூடிமகிழ்ந்து திரசதஸ்யு என்பவனைப் பெற்றான். அவனுக்கு அநரண்யன் பிறந்தான். அவனை இராணவன் திக்விஜயம் செய்துவரும்போது; சண்டை செய்து கொன்றான். அந்த அநரண்யனுக்கு பிரஷதசுவன் பிறந்தான். அவன் மகன் ஹரியசுவன், அவன் மகன் ஹஸ்தன். அவனுக்கு வசுமனது, அவனுக்குத் திரிதன்வா, அவனுக்குத் திரையாருணி. அவனுக்குச் சத்தியவிரதன் பிறந்தான். அவன் தான் திரிசங்கு என்ற பெயரைப் பெற்றவன். அந்த திரிசங்கு ஒரு சமயம் தன் தந்தையின் சாபத்தால் சண்டாளனாக மாறினான். அப்போது பன்னிரண்டு ஆண்டுக்காலம் மழையில்லாமல் ஏற்பட்ட ஒரு பெரும் பஞ்சத்தில் விசுவாமித்திரரின் மனைவியும் மக்களும் பிழைக்கும் பொருட்டு அவன் தினந்தோறும் மிருக இறைச்சிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். சண்டாளனிடம் வாங்கும் குற்றம் அவர்களுக்கு ஏற்படாதவாறு அந்த இறைச்சிகளைக் கங்கைக் கரையிலிருந்த ஓர் ஆலமரத்தின் கிளையிலே கட்டிக் கொண்டுவந்தான். இதனால் விசுவாமித்திரர் அவன் செயலையறிந்து மகிழ்ந்து, திரிசங்குவை அவனது உடலுடன் சொர்க்கலோகம் ஏற்றினார். அந்தத் திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திர மன்னனாகும். அவன் மகன் லோஹிதாசன் அவன் மகன் ஹிரிதன், ஹரிதனுக்கு சஞ்சு என்ற குமாரி பிறந்தாள். சஞ்சுவுக்கு விஜயன், வசுதேவன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் விஜயனுக்கு குருகன் பிறந்தான். அவனுக்கு விருகனும், விருகனுக்குப் பாகுவும் பிறந்தார்கள். அந்தப் பாகுமன்னன் ஹேஹயர்களால் வெல்லப்பட்டு, கர்ப்பிணியான தன் மனைவியுடன் காட்டுக்குச் சென்றான். அங்கு அவளுடைய சக்களத்தியானவள் அவளுடைய கர்ப்பம் அழிந்து போகும்படி அவளுக்கு விஷத்தைக் கொடுத்தாள். அதனால் அந்த கருவானது ஏழாண்டுக் காலம் அவளது வயிற்றிலேயே இருந்தது. இந்நிலையில் பாகு அரசனுக்கு வயது சென்றதால் அவன் அவுர்வ மாமுனிவருடைய ஆசிரமத்தின் அருகே மரணமடைந்தான். அப்போது கர்ப்பவதியான அவனது மனைவி, சிதையடுக்கித் தன் கணவனை அதன் மீது வைத்து, தானும் அவனுடனே அனுமரணஞ்செய்து கொள்ள முயன்றாள். இதையறிந்த அவுர்வ மாமுனிவர் தமது ஆசிரமத்திலிருந்து அங்கு வந்து, அவளை நோக்கி, பெண்ணே! இது வீணான எண்ணம் மகா பலப்பராக்கிரமசாலியாக அநேக யாகங்களைச் செய்யக்கூடியவனாய், கீர்த்திக்குரிய மகன் ஒருவன் உன் வயிற்றில் இருக்கிறான். ஆகையால் நீ இவ்விதமாக மரணமடைய வேண்டாம்! என்றார். உடனே, அவளும் அந்த முயற்சியைக் கைவிட்டாள். முனிவர், அவளைத் தம்முடைய ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி வந்தார். சில நாட்களில் அவள் வயிற்றிலிருந்து நஞ்சுடன் கூடிய மகா தேஜஸ் வாய்ந்த ஒரு புதல்வன் பிறந்தான். அந்தப் பிள்ளைக்கு அவன் விஷத்துடன் பிறந்ததால், சகரன் என்ற பெயரைச் சூட்டினார் அவுர்வ முனிவர். சகரன் வளர்ந்த பிறகு அவனுக்கு உபநயனஞ் செய்வித்து சகல வேத சாஸ்திரங்களையும் அவனுக்குக் கற்பித்தார். மேலும் பிருகு முனிவரால் உபதேசிக்கப்பெற்ற ஆக்கினோயாஸ்திரத்தையும் அவனுக்கு உபதேசித்தார்.
இவ்விதமாக ஓதியுணர்ந்த சகரன் என்ற அரசிளங்குமரன் ஒருநாள் தன் தாயை நோக்கி, அம்மா, என் தந்தை எங்கே? நாம் மன்னர் குலத்தில் பிறந்தும் இந்த காட்டுக்கு ஏன் வந்தோம்? என்று கேட்டான். அவள் நடந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொன்னாள். அதைக்கேட்ட ராஜகுமாரன் சகரன் கோபங்கொண்டு, அன்று முதல் ஹேஹய வம்சத்தையே துவம்சம் செய்வதாகச் சபதம் செய்தான். பிறகு, அவன் தன் சபதப்படியேப் பகைவர்களை அழித்தான். அதோடு, பகைவருடன் சேர்ந்திருந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்பிலவர் முதலியவர்களையும் நாசஞ்செய்ய முனைந்தான். எனவே அவர்கள் அனைவரும் அவனை எதிர்க்க முடியாமல் வசிஷ்ட முனிவரைச் சரணடைந்தார்கள். அவர்களைப் பிழைத்திருக்கும் பிணங்களாக வசிஷ்ட முனிவர் நினைத்துக்கொண்டு சகரனிடம் சென்று, மன்னா! இவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள். இவர்களே மறுபடியும் இறக்கச் செய்வதில் யாது பயன்? நானே, உன் சபதத்துக்கு விரோதம் ஏற்படாமல் இருக்க, அவர்களை வைதிக சம்பந்த சூனியராகச் செய்து விட்டேன். ஆகவே நீ அவர்களை விட்டு விடுவாயாக என்றார். சகர மன்னனும் அப்படியே ஒப்புக்கொண்டு, குருவாக்கிய பரிபாலனம் செய்தான். ஆயினும் அவர்களில் யவனரை மொட்டைத் தலையராகவும், சகரைப் பாதித்திலை மழித்தவராகவும், பாரதரை தலைமயிர் தொங்க விட்டவராகவும், பப்பிலவரைத் தாடிவளர்ப்பவராகவும் செய்து, அவர்களது வேஷங்களை மாற்றி, அவர்களை வேதாத்தியயனாதி சூனியர்களாக ஆக்கிவிட்டான். அவர்கள் அனைவரும் இவ்விதமாகத் தருமம் இழந்தனர். ஆகையால் மிலோச்சராகக் கருதப்பட்டனர். அதன் பிறகு சகர மகாராஜன் தன் நகரத்துக்குச் சென்று; தன் ஆணைக்குப் பங்கம் ஏற்படாதவாறு சகலதுவீப சமுத்திரங்களோடு கூடிய இந்தப் பூமியை நீதியாய்ப் பரிபாலித்து வந்தான்.
4. சகர புத்திரரின் வரலாறும், சக்கரவர்த்தித் திருமகனார் வைபவமும்
சகர மன்னனுக்கு காசியபரின் மகளாகிய சுமதி என்பவளும் விதர்ப்ப ராஜனின் மகளாகிய கேசினி என்பவளும் மனைவியராக விளங்கினார்கள். அவ்விரு மங்கையரும் மக்கட்பேற்றையடைய அவுரவ முனிவரை ஆராதித்தார்கள். அதனால் அம்முனிவர் மகிழ்ந்து அவர்களை நோக்கி, ராஜபத்தினிகளே! உங்களில் ஒருத்தி வமிசம் விளங்குவதற்கான ஒரு பிள்ளையையும் மற்றொருத்தி அப்படியில்லாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் பெறலாம். யாருக்கு எது விருப்பமோ, அதைப் பெறலாம்! என்று ஒரு வரங்கொடுத்தார். பத்தினி கேசினி என்பவள், தன் வமிச விருத்திக்குரிய ஒருவனையே விரும்பினாள். அவளுடைய சக்களத்திச் சுமதியோ அறுபதியிரம் பிள்ளைகளைப் பெற விரும்பினாள். அப்படியே ஆகட்டும் என்று முனிவர் வாழ்த்தவே, அவ்விருவரும் சில நாட்களில் அவ்வாறே பிள்ளைகளைப் பெற்றார்கள். அவர்களில் கேசினியின் குமாரனான அசமஞ்சசனுக்கு அம்சுமான் என்பவன் பிறந்தான். அந்த (அசமஞ்சசம்-தீயவை) அசமஞ்சசன் சிறுவனாக இருக்கும்போது மிகவும் தீமையான செயல்களையே செய்து வந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர் உண்டாயிற்று. சகரமன்னனோ தன் மகன் சிறுவனாக இருப்பதால் இப்படிப்பட்டத் தீங்கைச் செய்கிறான். பருவம் வந்தால் புத்திசாலியாகவும் நல்ல நடத்தையுடையவனாகவும் ஆவான் என்று நினைத்திருந்தான். ஆனால் அசமஞ்சசனோ வாலிபனாகியும் தீமையே செய்து வந்ததனால் அவனைச் சகர மன்னன், காட்டுக்குத் துரத்திவிட்டான். பிறகு அறுபதினாயிரம் பிள்ளைகளும் அசமஞ்சசனைப் போலவே, துஷ்டத்தனங்களைச் செய்யலானார்கள். அவர்களால் உலகத்தில் யாகாதி சத்காரியங்களும் சத்திய சவுசாதி ஆசாரங்களும் ஒழிந்து போவதைக் கண்ட தேவர்கள், ஸ்ரீபுரு÷ஷாத்தமரின் அம்சமாக விளங்கியக் கபில முனிவரை அணுகி வணங்கி, கபில பகவானே! சகர மன்னனின் பிள்ளைகளெல்லாம் கொடியவர்களாகி உலகத்தை அழித்து வருகிறார்கள். இதுவரையில் அவர்களால் அழிந்தவை இனியெப்படியாகுமோ தெரியவில்லை. துன்பமடைந்த இந்த ஜகத்தைக் காப்பாற்றவல்லவோ, தாங்கள் அவதரித்திருக்கிறீர்கள்! என்றார்கள். அதற்கு அவர், தேவர்களே, சில நாட்களுக்குள்ளேயே அவர்கள் அனைவரும் மாண்டு போவார்கள் என்றார். தேவர்கள் ஆறுதலடைந்தார்கள்.
இது இவ்விதமிருக்க, சகரமன்னன் அசுவமேத யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினான். அதன் காரணமாகத் தன் பிள்ளைகளின் காவலில் யாகக் குதிரையைச் சுற்றுப்பயணத்திற்காக ஓட்டி விட்டான். அந்தக் குதிரையை யாரோ ஒருவன் கொண்டு போய்ப் பாதாளத்தில் விட்டுவிட்டான். பிறகு சகரனின் குமாரர்கள் அந்தக் குதிரையின் குளம்படியை அடையாளமாகக் கொண்டு ஒவ்வொரு காதமாகப் பூமியை வெட்டித் தோண்டிக் கொண்டு சென்றார்கள். பாதாள லோகத்தின் உள்ளே போய் அங்கே திரிந்து கொண்டிருந்த யாகக் குதிரையையும் அதற்குக் கொஞ்சம் தொலைவிலே, தேஜஸோடு ஜ்வலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கபில பகவானையும் கண்டார்கள். உடனே அந்தத் தீயவர்கள், இதோ! இவன் தான் நமது குதிரையைத் திருடிக் கொண்டு, யாகத்தைத் தடுத்து நமக்கு அபகாரஞ் செய்தவன். ஆகவே, இவனைக் கொல்லுங்கள்! என்று கூவிக்கொண்டே ஆயுதங்களுடன் முனிவர் மீது பாய்ந்தார்கள். இப்படியவர்கள் ஓடிவரும் போது முனிவர் சற்று உக்கிரமாக அவர்களைப் பார்த்தார். அந்தப் பார்வையில் அவர்கள் பற்றி எரிந்து சாம்பலாய்க் குவிந்தார்கள். இதுபோலத் தனது யாகக் குதிரை போனதையும், புத்திரர்கள் அழிந்தொழிந்ததையும் அறிந்து சகரமன்னன், தன் பேரனாகிய அம்சுமானை அழைத்து, அந்தக் குதிரையைக் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். அவனும் சகர குமாரர்கள் தோண்டிய வழியிலேச் சென்று கபில முனிவரைக் கண்டான். அவரை வணங்கித் தொழுதான். அப்போது அவர் அவனை நோக்கி பிள்ளாய்! நீ குதிரையைக் கொண்டு போய் உனது பாட்டனாரிடம் கொடுத்து யாகத்தை நிறைவேற்று வாயாக. உனது பேரன் சொர்க்கத்திலுள்ள கங்கா நதியைப் பூலோகத்துக்குக் கொண்டு வருவான் என்ற வரத்தையும் உனக்கு நான் தந்தேன். போ என்று அருளினார். சுவாமி! பிராமண சாபத்தால் அழிந்த அடியேனது பாட்டன்மார்கள் சுவர்க்க லோகத்தையடையும்படியான ஒரு வரத்தை நீங்கள் அளிக்க வேண்டும் என்று அம்சுமான் பிரார்த்தித்தான். அதற்குக் கபிலமுனிவர் பிள்ளாய்! நான் தான் உன் பேரன் கங்கையைக் கொண்டு வருவான் என்று முன்னமே சொன்னேனே! அந்த மகாநதியின் புனித நீரால், இறந்தவர்களின் எலும்பும் சாம்பலும் ஸ்பரிசக்கப்பட்டவுடனேயே அவர்கள் தேவலோகம் செல்வார்கள். பக்தி சிரத்தையோடு நீராடுவோரைப் பாவந்தீர்த்துக் கடைத்தேற்றும் சக்தியையுடையது கங்கையாகும். ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிக் கட்டைவிரலிற் தோன்றிய மகாநதியின் மகிமை இது மட்டுமல்ல. தன்னிடத்திற் கருத்தேயில்லாமல் இறந்தவனுடைய சரீரத்தைச் சார்ந்த எலும்பு, தோல், நரம்பு, ரோமம், சாம்பல் முதலியவற்றுள் ஏதாகிலும் அந்தப் புனிதநீரால் ஸ்பரிசிக்கப்பட்டால் கூட அந்தவுடலுக்கு உரியவன் உடனே சொர்க்கம் செல்வான் என்று சொன்னார். அதன் பிறகு அம்சுமான் அவரை வணங்கி, யாகக்குதிரையை அவிழ்த்துக் கொண்டு சென்று தன் பாட்டனாரிடம் ஒப்படைத்தான். சகர மன்னனும் அசுவமேத யாகத்தை நிறைவேற்றித் தன் பிள்ளைகள் தோண்டியப் பள்ளத்தில் பாய்ந்த சமுத்திரத்தைத் தனது புத்திரனாகப் பாவித்து லோகாந்தரஞ் சென்றான்.
அவன் மகன் அம்சுமானுக்குத் திலீபன் என்ற அரசன் பிறந்தான். அவனுடைய மகன் பகீரதன். அவன் சொர்க்கத்திலிருந்து கங்கையாகப் பூமிக்கு வரவழைத்து, பாகீரதி என்ற பெயரடையச் செய்தான். அந்தப் பகீரதனுக்கு சுஹோத்திரன் பிறந்தான். அவனுக்கு நாபாகனும், அவனுக்குச் சிந்துத்துவீபனும், அவனுக்கு அயுதாயும் பிறந்தார்கள். அயுதாயுவுக்கு ருதுபர்ணன் பிறந்தான். அவன் அக்ஷஹிருதயம் என்ற சூதாட்ட நூலைக் கற்றுத் தேர்ந்து, நளனுக்குத் துணைவனானான். ருதுபர்ணனின் மகன் சர்வகாமன் அவன் மகன் சுதாசனுக்குச் சவுதாசன் என்றும் மித்திரசஹன் என்றும் பெயர் கொண்ட குமாரன் உண்டானான். அவன் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று திரிந்து கொண்டிருக்கும் போது இரண்டு புலிகளைக் கண்டான். அவ்விரண்டிலேயே அந்தக் காட்டிலுள்ள மற்ற மிருகங்கள் அழிக்கப்படுகின்றன என்று நினைத்து, அவற்றில் ஒன்றை அம்பினால் எய்துக் கொன்றான். அந்த அம்பு பாய்ந்து இறக்கும்போது அந்தப் புலியானது ஒரு மகா பயங்கர முகத்தோடு கூடி ராட்சஸ ரூபமாய் விழுந்தது. இரண்டாவது புலியோ, ராட்சஸனாக வெளிப்பட்டு அவனை நோக்கி, உன்மீது நான் என் பகையை தீர்த்துக் கொள்வேன்! என்று சபதமிட்டு மறைந்தது. பிறகு சிறிது காலத்திற்கெல்லாம் சவுதாசன் யாகஞ்செய்யத் துவங்கினான். அவனதுக் குலகுருவான வசிஷ்ட முனிவர் அந்த யாகத்துக்கு வேண்டிய காரியங்களைத் தயார் செய்து விட்டு சற்று, வெளியே போயிருந்தார். அந்த சமயத்தில் ராட்சஸன் வசிஷ்ட முனிவரைப் போன்ற வேடத்துடன் அங்கு வந்து, எனக்கு யாகத்தின் முடிவில் மனித இறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே அதைக் கொண்டு வந்து பாகஞ்செய்து வைப்பாயாக. நான் சீக்கிரம் வந்து விடுவேன்! என்று சொல்லி விட்டுப் போனான். பிறகு அவனே சமையற்காரனைப் போல வேடம் தரித்து வந்து, குரு பத்தியினால் சவுதாத மன்னன் கட்டளையிட்டதை ஏற்று மனுஷ்ய மாமிசத்தைச் சமைத்து, மன்னன் முன்பு கொண்டு வந்து வைத்தான். சவுதாச மன்னனும் அந்த மனித இறைச்சியை ஒரு பொன் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, வசிஷ்டரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவர் வந்தவுடன் அதை அவருக்குக் கொடுத்தான். அதைக் கண்டவுடனேயே வசிஷ்டர் இதென்ன! இந்த அரசனுக்கு ஏன் இந்தத் துன்மார்க்கப் புத்தி உண்டாயிற்று? திடீரென்று மாமிசத்தை நமக்கு கொண்டு வந்து கொடுக்கிறானே! இது என்ன இறைச்சி? என்று யோசித்தார். யோக திருஷ்டியினால் அதை நரமாமிசம் என்று அறிந்து மிகவும் கோபங்கொண்டு சவுதாச மன்னனை நோக்கி, தவமுனிவர்கள் புசிக்கக் கூடாதது எது என்பதை நீ அறிந்திருந்துங்கூட இதை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டாய். ஆகையால் நீயே இதில் மிகுந்த விருப்பம் கொண்டவனாகக் கடவை! என்று சாபங்கொடுத்தார். அதைக்கேட்டதும் சவுதாசன் கலங்கி, சுவாமி! தாங்கள் விரும்பியவண்ணம் தானே அடியேன் இப்படிச் செய்தேன்? என்றான். வசிஷ்டர் நிகழ்ந்தவற்றை அறிந்து, அவனிடம் இரக்கங்கொண்டு, அரசனே! நீ ஒரு ராக்ஷசனால் வஞ்சிக்கப்பட்டாய் உன்மேல் எந்தக் குற்றமுமில்லை; ஆயினும் நான் இட்ட சாபம் வீணாகாது. ஆனால் நான் இட்ட சாபம் உனக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலும் தான் பலிக்கும்! என்றார்.
உடனே சவுதாசன் கோபங்கொண்டு, குற்றம் எதுவும் செய்யாத எனக்கு நீங்கள் சாபமிட்டது அநியாயம்! ஆகையால் நானும் உங்களைச் சபிப்பேன் என்று சொல்லிக் கையிலே நீரை எடுத்து வீசமுயன்றான். அப்போது அவனது மனைவியாகிய மத்யந்தி என்பவள், தன் நாயகனின் கையைப் பிடித்துக்கொண்டு, மகாராஜா! நமது குலத்துக்குத் தெய்வமாயும் குருவாயும் இருக்கும் வசிஷ்ட முனிவரை நீங்கள் இப்படிச் செய்வது சரியல்ல! என்று சமாதானப்படுத்தித் தடுத்தாள்.
பிறகு சவுதாசன் தன் கையிலே எடுத்த சாபஜலத்தை தரையிலே விட்டால் மழை பெய்யாமல் போய்விடும் என்றும் நினைத்து, அந்த நீரைத் தன் கால்களின் மீது விட்டுக் கொண்டான். அவனது கோபாக்கினியால் காய்ந்த அந்தத் தண்ணீர், அவன் பாதங்களில் பட்டதனால் அவையிரண்டும் ஒளியிழந்து கருமை கலந்து வெண்மையாயின. ஆதலால் அவனுக்கு கல்மாஷபாதன் என்ற பெயர் வழங்கலாயிற்று. வசிஷ்டர் இட்ட சாபத்தின்படி அந்த மன்னன் ஆறாவது ஜாமந்தோறும் ராக்ஷச சுபாவமுடையவனாய் நாட்டிலே புகுந்து மனிதர்களை அடித்துக் கொன்று நர மாமிசம் புசித்து வந்தான். இது இப்படியிருக்க, ஒருநாள் வசந்த காலத்தில் பிராமணனான ஒரு முனிவர் தன் மனைவியுடன் கூடி மகிழ்ந்து காம லீலையில் மூழ்கியிருப்பதை அரக்க வடிவில் இருந்த சவுதாச மன்னன் கண்டான். அவனது பயங்கர உருவத்தைக் கண்டு ரிஷித் தம்பதிகள் பயந்து ஓடினார்கள். அவர்களில் முனிவனை அவன் பிடித்துக் கொண்டு ஓடினான். அப்போது ரிஷிபத்தினியான பிராமணப் பெண், அந்த ராக்ஷசனை நோக்கி, ஐயனே! நீ ராக்ஷசனல்லவே! மித்திரன் என்கிற அரசன் அல்லவா நீ! நீயோ எல்லாவற்றையும் அறிந்தவன் மேலும் பெண்ணுக்குரிய இன்பத்தைச் சிறப்பாக அறிந்தவன் நீயாயிற்றே? அப்படியிருக்க; நான் கருதிய இன்பப் பயனை அடையாமலிருக்கும்போது, நீ என் கணவனை நாசஞ்செய்வது நியாயமல்லவே! அவரை விட்டு விடு! என்று கெஞ்சிக் கேட்டுப் புலம்பினாள். அவள் புலம்பிக் கொண்டிருக்கும்பொழுதே, அரக்க வடிவிலுள்ள சவுதாசன் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல், நரமாமிசம் புசிக்கும் வெறியோடு புலியானது பசுவைப் பிடித்துச் சென்று புசிப்பதைப் போல அவளது கணவனைத் தின்று விட்டான். அதனால், பிராமண மனைவி மிகவும் கோபங்கொண்டு அவனை நோக்கி, அடப்பாவி! என்னை இவ்விதமாக வீணாக்கி; என் கணவனைக் கொன்று புசித்தாய். ஆகையால் நீ காமபோகத்துக்காக முயற்சிக்கும்போது மரணமடைவாயாக! என்று சாபமிட்டுப் பிறகு தீக்குளித்து மடிந்து போனாள். அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுக்காலம் சென்று சவுதாச மன்னனின் சாபம் தீர்ந்தது. ஒரு சமயம் அவன் சம்போகத்தில் இச்சைக் கொண்டு தன் மனைவியை நெருங்கினான். அப்போது அவனது பத்தினியாகிய மதயந்தி என்பவள் பார்ப்பனி இட்ட சாபத்தை நினைவூட்டினாள். அதனால் அரசன் ஸ்திரீ போகத்தை விட்டுவிட்டான். இப்படியானதினால் அவனுக்குச் சந்ததியில்லாமற் போயிற்று. அதனால் அவன் தன் குருவாகிய வசிஷ்ட மகரிஷியை வேண்ட, அம்மகரிஷியும் அவனது பத்தினியாகிய மதயந்தியிடம் புத்திரன் உண்டாகச் செய்தார்.
அதனால் ஏற்பட்ட கருவானது ஏழாண்டுக் காலம் வரை மதயந்தியின் வயிற்றிலிருந்து வெளிப்படாமலே இருந்தது. அதனால் மதயந்தி ஆத்திரப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வயிற்றிலே இடித்துக் கொண்டாள். அதன் விளைவாகப் புத்திரனும் பிறந்தான். அவனுக்கு அச்மகன் என்று பெயரிட்டார்கள். அந்த அச்மகனுக்கு மூலகன் என்ற பிள்ளை பிறந்தான். அந்தச் சமயம் பரசராமர், பூவுலகத்திலுள்ள க்ஷத்திரிய வமிசத்தையெல்லாம் அழிப்பதாகச் சபதம் செய்திருந்தார். அதனால் பரசுராமனது பார்வையிற்படாதவாறு மூலகனைப் பெண்கள் நிர்வாணமாகச் சூழ்ந்து கொண்டு அவனைக் காப்பாற்றினார்கள். அதனால் அவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்த மூலகனுக்குத் தசரதன் என்பவன் பிறந்தான். அவன் மகன் இளிபிளி. அவன் மகன் விசுவஸஹன். அவன் மகன் கட்வாங்கன். முன்பொரு காலத்தில் தேவாசுர யுத்தம் நடந்தபோது கட்வாங்கனை தேவர்கள் அணுகி அவனுடைய உதவியை வேண்டினார்கள். அதற்கிணங்கிக் கட்வாங்கன் போர் புரிந்து அசுரர்களை வென்றான். அதனால் தேவர்கள் அவனைத் தமது உலகத்துக்கு அழைத்து சென்று அரசே! உமக்கு இஷ்டமான வரத்தைக் கேட்பீராக என்றார்கள். அதற்கு அவன் நீங்கள் எனக்கு வரமளிக்க வேண்டுமென்று விரும்புவது உண்மையெனில் என் ஆயுள் எவ்வளவு என்று முதலில் சொல்லுங்கள் என்றான். அவர்கள் உமக்கு இன்னும் ஒரு முகூர்த்த காலந்தான் ஆயுசு இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே அவன் அவர்களிடம் விடைபெற்று மிகவும் வேகமான விமானத்தில் ஏறிக்கொண்டு வெகு விரைவாகப் பூவுலகையடைந்து பிராமணரை விட ஆன்மாவின் மீது எனக்கு பிரியமில்லாமல் இருந்ததும் தேவ மனுஷ்ய பசு, பக்ஷி, விருட்ச முதலிய யாவற்றிலும் எம்பெருமானுடைய சான்னித்தியமே நித்தியமாகவுள்ளது என்று நான் நினைத்திருந்தும் உண்மையானால் முனிவர்களால் தியானஞ் செய்யப்பட்ட அந்தப் பகவானை நான் யாதொரு தடையுமின்றி அடைவேனாக! என்று வாசுதேவன் என்ற திருபெயருடைய பரமாத்மாவிடத்தில் வேதாந்த வாக்கியத்தின்படி ஆன்ம சமர்ப்பணம் செய்து அங்கேயே வயப்படுவதாகிய மோட்ச ஆனந்தத்தை அடைந்தான். இந்த அரசனைப் பற்றி சப்த ரிஷிகள் பாடியப் பாடல் ஒன்றுண்டு. அதாவது கட்வாங்கன் என்ற ராஜரிஷிக்கு ஈடாக இந்தப் பூமியில் யாருமே உண்டாகமாட்டான். ஏனென்றால் ஒரு முகூர்த்த காலம் ஆயுள் இருக்கும் போது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது தனது ஞானசத்தியங்களால் சகல கதிகளையும் சகல லோகங்களையும் தாண்டி அவற்றையெல்லாம் ஸ்ரீவாசுதேவனிடம் லயித்துள்ள தனக்குள்ளேயே கண்டான் அன்றே என்பதுதான் அந்தப் பாடலாகும். அந்தக் கட்வாங்க மன்னனுக்கு தீர்க்கபாகு என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ரகுமன்னன் பிறந்தான். அவனுக்கு அஜமகாராஜன் பிறந்தான், அவன் மகன் தசரத மன்னன்.
எல்லா வகையான சுகுண பூர்ணனான பத்மநாபன், லோகரக்ஷணத்துக்காகத் தனது அமிசத்தைக் கொண்டு, ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத சத்ருக்கினர் என்ற நான்கு ரூபமாக, அந்தத் தசரத மகாராஜனிடம் அவதரித்தான். அந்தச் சக்கரவர்த்தித் திருமகன் ராமன், விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காப்பதற்காக எழுந்தருளுமளவில், வழியில் தாடகை என்ற கொடிய அரக்கியையும், அந்த யாகத்துக்குத் தீங்கு இழைக்க வந்த தாடகையின் மகனான சுபாகு முதலிய அநேக அரக்கர்களையுஞ் சங்கரித்து, தாடகையின் மற்றொரு குமாரனான மாரீசனை வாயு அஸ்திரத்தால் சமுத்திரத்தில் தள்ளிவிட்டார். தமது திருவடி மகிமையினால் அகலிகையின் சாபத்தைப் போக்கி அவளைத் தூயவள் ஆக்கினார். பிறகு, ஜனக மாமன்னரின் நகரத்துக்குச் சென்று, அங்கு பூசித்து வைக்கப்பட்டிருந்த சிவதனுசை முறித்தார். ஜனக மகாராஜனின் திருமாளிகையில் அயோநிஜையாய் அவதரித்து, வீரியசுல்க்கையாய் விளங்கிய சீதை என்ற ஸ்ரீமகாலக்ஷ்மியின் அம்சமானப் பெண்மணியை திருக்கலியாணஞ் செய்தருளினார். பிறகு, ஸ்ரீராமன் கல்யாணக் கோலத்தோடும் சீதையோடும் தம்முடைய அயோத்திமா நகரத்துக்குத் திரும்பி வரும்போது வழியில் பரசுராமரைச் சந்தித்தார். சகல க்ஷத்திரிய குலங்களையும் வேரோடு அழித்து வந்த பரசுராமரோ பொறாமையால் ஸ்ரீராமனை எதிர்த்து வந்தார்.
பலபராக்கிரமங்களால் உண்டான அவருடைய செருக்கை ஸ்ரீராமர் அழித்தார். பிறகு யுவராஜ்யப் பட்டாபிஷேகத்தை விரும்பாமல், மாற்றாந் தாயின் பேச்சுக் கிணங்கத் தந்தையின் வாக்கியத்தை சிரமேற் கொண்டு, சீதாபிராட்டியோடும் இளைய பெருமாளான லக்ஷ்மணரோடும், தண்டகாரண்யத்தில் பிரவேசித்து விராதனைக் கொன்றார். காமவெறியால் தீங்கிழைக்கத் துணிந்த சூர்ப்பனகையை இலக்குமணர் விகாரப்படுத்தியதால் மிகவும் கோபங்கொண்டு பதினாலாயிரம் வீரரோடு போருக்கு வந்த கரதூஷணர்களையும் கபந்தனையும் அழித்து அருளினார். அதற்குப் பிறகு சுக்ரீவனைத் தோழனாக்கிக் கொண்டு அவனுக்குப் பகைவனான வாலியைக் கொன்றார். சுக்ரீவன் அனுப்பிய வானர வீரர்களில் அனுமனால் இலங்கையில் இராவணன் அபகரித்துச் சென்ற சீதாபிராட்டி காவலில் இருப்பதை அறிந்து வானர சேனைகளுடன் புறப்பட்டு, சமுத்திரத்தை அணையாற் கட்டி இராவணன், கும்பகர்ணன் முதலிய அரக்கர்களை அழித்தார். உலகத்தாரின் ஒப்புரவுக்காகச் சீதையை அக்கினிப் பிரவேசம் செய்வித்தார். அக்கினியால் துதிக்கப்பட்ட சீதாதேவியை மீண்டும் ஏற்று, மறுபடியும் அயோத்திக்கு எழுந்தருளிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்தை நூறு ஆண்டுக்காலஞ் சொன்னாலும் முடியாது. ஆயினும் அதனை நான் சுருக்கமாகச் சொல்கிறேன். திவ்விய அலங்காரச் சோபிதமான மகாமண்டபத்தில் நவரத்தினச் சகிதமான சிங்காதனத்தின் மேல் சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமர் சீதாபிராட்டியாருடன் வீற்றிருந்தார். இளைய பெருமாளான லக்ஷ்மணரும், பரதாழ்வானும், சத்துருக்கினாழ்வானும் சத்திர சாமரங்களை வீசிய வண்ணம் பக்கங்களில் முகமலர்ந்து நின்றார்கள். விபீஷணாழ்வானும் சுக்ரீவ மகாராஜனும் அங்கதன், ஜாம்பவான் முதலானவர்களும் ஆலவட்டம் முதலியவற்றை ஏந்தி மிக்க மகிழ்ச்சியுடன் புடைசூழ்ந்திருந்தார்கள். சிறிய திருவடி எனப்படும் அனுமான் திருவடிவாரத்து, ரத்தின பீடத்திலிருந்து ஆனந்த பரவசத்துடன் சேவித்தான். பிரம்மா, இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற அட்டதிக் பாலகரும் மற்றுமுள்ள சகல தேவதைகளும் வசிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர், பரத்வாஜர், அகஸ்தியர் முனிவர்களும், ரிக், யஜுர், சாமம் முதலிய வேதவாக்கியங்களைக் கொண்டு துதித்தார்கள். வீணை, வேணு, மிருதங்கம், படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலிய இசைக்கருவிகள் முழங்க, நிருத்த கீத முதலான மங்கள நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்க கப்பமேந்திக் காத்திருக்கும் மன்னர்களின் நடுவே ஆசாரியர் அமைச்சர்கள் முதலியவர்கள் முறையே விதிப்படித் திவ்ய தீர்த்தங்களினால், சகல லோக ரக்ஷணம் செய்து அருள வேண்டும் ஸ்வாமி என்று பிரார்த்தனை செய்து பட்டாபிஷேக மகோற்சவத்தை நடத்தினார்கள். அதன்பிறகு பதினோராயிரம் ஆண்டுக்காலம் யாவரும் குறைவற்றுக் களித்தும் வரும்படி ஸ்ரீராம பத்திர பகவான் சகல பூமண்டலத்தையும் ஆண்டு வந்தார்.
இளவரசாய் இருந்த பரதாழ்வான் மிகவும் கொடியவர்களாக இருந்த மூன்று கோடி கந்தர்வர்களைச் சங்கரித்து, அவர்களது வசமாயிருந்த ராஜ்யங்களைத் தமதுக் கைவசஞ் செய்து கொண்டார். சத்துருக்கினாழ்வானும் யமுனை ஆற்றின் கரையில் ஒரு பெரிய வனத்தில் இருந்துகொண்டு, மிகக்கொடுமை செய்து வந்த மது புத்திரனான லவணாசுரனைச் சங்கரித்து அந்தக் காட்டை அழித்து மதுரை என்ற ஒரு திவ்ய நகரத்தை நிர்மாணித்தருளினார். இளையப்பெருமாளான லக்ஷ்மணரோ ஸ்வாமியை விட்டு இணை பிரியாமல் கைங்கர்ய நிரதராய் எழுந்தருளியிருந்தார். இவ்விதமாக ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கினர் என்ற இந்த நால்வரும் லோகத்திற்கு இதத்தையும் தருமத்தையும் நிலைநாட்டி தமதுலகத்துக்கு எழுந்தருளினார்கள். அந்த நால்வரிடத்திலும் மிகவும் பக்தியுடையவராக இருந்த கோசல நாட்டாரும் அவர்களுடைய சாலோக்கியத்தை அடைந்தார்கள். ஸ்ரீராமபிரானுக்கு குசன் லவன் என்ற இரண்டு குமாரரும், லக்ஷ்மணருக்கு அங்கதன், சந்திரகேது என்ற இரு புதல்வர்களும், பரதருக்கு தக்ஷகன், புஷ்கலன் என்ற இரு குமாரர்களும், சத்துருக்கினருக்கு சுபாகு, சூரசேனன் என்றிரு மக்களும் உண்டானார்கள். அவர்களில் ஸ்ரீராமகுமாரனான குசனுக்கு அதிதி என்ற குமாரன் பிறந்தான். அதிதிக்கு நிஷதன், நிஷதனுக்கு அனலன், அனலனுக்கு நபசு, நபசுக்கு புண்டரீகன்; புண்டரீகனுக்கு ஷேமதனுவா, அவனுக்கு தேவானீகன், அவனுக்கு அகீனகு, அவனுக்கு குரு எனப்பிறந்தார்கள். குருவின் மகன் பாரியாத்திரன், அவன் மகன் பலன், அவன் மகன் சலன், அவன் மகன் உற்தன், அவன் மகன் வச்சிரநாபன், அவன் மகன் சங்கணன், அவன் மகன் வியுக்ஷிதாசுவன், அவன் மகன் விசுவயஹன், அந்த விசுவயஹனின் மகனாகிய ஹிரண்யநாபன் மகாயோகியரில் உயர்ந்தவனாய், ஜயிமுனியின் சீடராகிய யாக்ஞவல்கிய மகாமுனிவரிடமிருந்து யோக வித்தையைக் கற்றான். அவனுக்கு தனயன், புஷ்யன் அவனுக்கு துருவசந்தியும், துருவசந்திக்கு சுதரிசனனும், அவனுக்கு அக்னிவர்ணனும், அக்கினிவர்ணனுக்கு சீக்கிரகனும், அவனுக்கு மருவென்பவனும் பிறந்தார்கள். மரு என்பவன் தன் யோகசக்தியால் இமயமலையின் பக்கத்திலுள்ள கலாபக் கிராமத்தில், இப்போதும் யாருக்கும் தெரியாமல் வாசஞ்செய்து கொண்டு இருக்கிறான். அவன் தான் இனிவரும் கிருத யுகத்தில் சூரிய வமிசத்து அரசர்களில் முதல்வனாவான். அவனுக்கு பிரசுசுருகன் என்ற மகன் ஒருவனுண்டு. அவனுக்கு சுசந்தி என்பவன் மகன். அவனுக்கு அமர்ஷன் அவனுக்கு ஸஹஸ்வான்; அவனுக்கு விசுவபவன் அவனுக்கு பிரகத்பலன் அவன் பாரதப்போரில் அர்ச்சுனனது மகனான அபிமன்யுவினால் கொல்லப்பட்டான். இவ்விதமாக இஷ்வாகுவின் குலத்தில் பிறந்த அரசர்களில் முக்கியமான சிலரைப் பற்றிச் சொன்னேன். இவர்களது வரலாறுகளைக் கேட்பதால், பாவங்கள் தீரும். எவன் இந்த வரலாறுகளை சிரத்தையோடு படிக்கிறானோ அவன் இம்மையில் தனக்கு வேண்டியவைகளைப் பெற்று இறுதியில் சுவர்க்கத்தையும் அடைவான்!
5. நிமி வம்ச வரலாறு
இஷ்வாகுவின் மகனான நிமி என்பவன் ஆயிரம் ஆண்டுகள் நடத்த வேண்டிய ஒரு யாகத்தை ஆரம்பித்து, அதற்கு வசிஷ்ட முனிவரை ஹோதாவாக நியமித்தான். அப்போது வசிஷ்டர் அவனை நோக்கி, அரசனே! தேவேந்திரன் ஐநூறு ஆண்டுகள் வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய யாகத்துக்கு என்னை முன்னமே வரித்திருப்பதால், அதுவரையில் நீ பொறுத்திருக்க வேண்டும். அதுமுடித்ததும் உடனே நான் வந்து உன் யாகத்தையும் நிறைவேற்றுகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டதும் நிமி மன்னன் மவுனமாக இருந்து விட்டான். வசிஷ்டர் தம் இஷ்டப்படி அரசன் ஒப்புக்கொண்டான் என்று நினைத்து, இந்திரனுடைய யாகத்தைச் செய்விக்கச் சென்றார். ஆனால் நிமி மன்னனோ அந்தக் காலத்திலேயே கவுதமர் முதலிய முனிவர்களைக் கொண்டு தனது யாகத்தை நடத்தினான். வசிஷ்டர் இந்திரனுடைய யாகத்தை நடத்தி முடித்துவிட்டு நிமியினுடைய யாகத்தைச் செய்விக்க வேண்டுமே என்று வெகு துரிதமாக வந்தார். வந்தவர் அந்த யாகத்தை கவுதமரைக் கொண்டு நிமி மன்னன் முன்னரே நடத்தி விட்டான் என்று தெரிந்து கொண்டு, அவ்வரசன் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே அவனுக்கு ஒரு சாபமிட்டார். அதாவது நீ என்னை அவமதித்து இந்த யாக காரியத்தைக் கவுதமருக்குக் கொடுத்ததால் உனக்கு உடம்பே இல்லாமல் போகக் கடவது! என்று சபித்தார். அதன் பிறகு விழித்துக் கொண்ட நிமி மன்னன் தனக்கு வசிஷ்டர் சாபமிட்டதை அறிந்து, தானும் குருவுக்கு ஒரு சாபமிட்டான். இந்தத் துஷ்ட குருவானவர், என்னோடு பேசி நடந்தவற்றின் நியாயத்தையறியாமல் தூங்கிக் கொண்டிருந்த என்னை சபித்ததால் அவருக்கும் உடம்பில்லாமல் போகக் கடவது! என்று பதில் சாபமிட்டு விட்டான். பிறகு நிமி மன்னன் தனது உடலை விட்டு விட்டான். வசிஷ்ட மகரிஷியும் தம் உடலை விட்டு விட்டு ஊர்வசியைக் கண்டதனால் சிதறி விழுந்திருந்த மித்திரா வருணருடைய வீரியத்திற் பிரவேசித்து, வேறு தேகத்தை எடுத்துக் கொண்டார். நிமி மன்னனின் தேகமோ, திவ்விய பரிமளத் தைலத்தில் சீர்படுத்தப்பட்டு சுருங்குதல் முதலிய குற்றங்களில்லாமல் அப்போது தான் இறந்தவனுடைய தேகத்தைப் போலிருந்தது, இது இப்படியிருக்க அந்த யாகத்தின் முடிவில், பாகம் பெறுவதற்காக வந்த தேவர்களை நோக்கி, யாகத்தை நடத்திய ருத்துவிக்குகள், நீங்கள் எஜமானனுக்கு ஒரு வரங்கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு தேகமற்ற நிமி சொல்லலானான். ஓ தேவர்களே! நீங்கள் சகல சம்சார துக்கங்களையும் போக்கக் கூடியவர்கள். ஆன்மாவும் உடலும் தனித்தும் பிரிந்திருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு வேறு துக்கம் உண்டோ? ஆகையால் எனக்குத் தேகம் வேண்டும். ஆயினும் இந்தச் சரீரத்தில் வசிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை எல்லோருடைய கண்களிலும் நான் வசிக்க விரும்புகிறேன். அத்தகைய வரத்தை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். தேவர்கள் அவன் விரும்பியபடி அவனைச் சகல ஜனங்களுடைய கண்களிலும் இருக்கச் செய்தார்கள். அதுமுதல் சகல பூதங்களும் கண்களை இமைக்கலாயினர்.
அந்த நிமியரசனுக்கப் புத்திரனில்லாமற் போனதால் முனிவர்கள் அனைவருங்கூடி, ராஜ்யத்துக்கு அரசன் இல்லாமல் போனால் ஏற்படக்கூடியத் துன்பத்துக்குப் பயந்து, அவனுடைய உடல் அரணியில் இட்டு கடைந்தார்கள். அதிலிருந்து ஒரு குமாரன் பிறந்தான். அவன் அவ்விதமாகப் பிறந்ததனால் அவனுக்கு ஜனகன் என்ற பெயர் உண்டாயிற்று. மேலும் அவனுடைய தந்தை விதேகனாகையால் வைதேகன் என்றும், கடையப்பட்டதனாலே மிதி என்றும் பெயர்கள் உண்டாயின. அவன் பெயராலேயே அவனுடைய நகரத்துக்கு மிதிலை என்றும் அவன் பிதாவின் பெயரால் அவனது ராஜ்யத்துக்கு விதேக தேசம் என்ற பெயரும் உண்டாயிற்று. அந்த ஜனகனுடைய மகன், உதாவசு அவன் மகன் நந்திவர்த்தனன் அவன் மகன் கேது, அவனுக்கு தேவராதன், அவனுக்குப் பிருகதுத்தன்; அவனுக்கு மகாவீரியன், அவனுக்கு சுதிருதி, அவனுக்கு திருஷ்டகேது, அவனுக்கு அரியசுவன், அவனுக்கு மரு, அவனுக்கு பிரதிகன், அவனுக்கு கிருதரதன், அவனுக்கு தேவமீடன் என்றவாறு புதல்வர்கள் பிறந்தார்கள். தேவமீடனின் புதல்வன் விபுதன் அவன் மகன் மகாதிருதி. அவன் மகன் கிருதராதன், அவனுக்கு மகாரோமா, மகாரோமாவுக்கு சுவர்ண ரோமா, அவன் மகன் இருசுவ ரோமா அவனது மகன்தான் சீரத்வஜன் என்ற ஜனக மகாராஜனாகும். அவர் வேள்விச் சாலைக்காகப் பூமியை உழும் போது, கலப்பையின் வழியிலே சீதாபிராட்டி அவதரித்தாள். சீரத்வஜ மகாராஜனின் தம்பியான குசத்துவஜன் என்பவன், சாங்காசியம் என்ற பட்டணத்தை ஆண்டுவந்தான். அந்த சீரத்வஜ ஜனகருடைய மகன் பானுமான், அவனுக்கு சுத்தியும்னன்; அவனுக்கு சுசி, அவனுக்கு ஊர்ஜன் என்ற மகன் பிறந்தான். அவன் மகன் சதத்துவசன், அவனுக்கு கிருதி, அவன் மகன்ரஞ்சனன், அவன் மகன் புருஜித்து, அவன் மகன் அரிஷ்டநேமி, அவன் மகன் சுருதாயு, அவன் மகன் சுபார்சுவன், அவன் பிள்ளை சிருஞ்சயன், அவனுக்கு ÷க்ஷமாவீ, ÷க்ஷமாவீக்கு அனேனசு, அவனுக்கு பவுமரதன், அவனுக்கு சத்தியரதன், அவனுக்கு உபகு, உபகுவுக்கு உபகுப்தன் அவன் மகன் சுவரகதன், அவனுக்கு சுவாங்கன், சுவாங்கனுக்கு சுபானன், அவனுக்குச் சுவர்ச்சசு, அவனுக்கு சுபாஷன், அவன் மகன் சுசுருதன். அவன் மகன் ஜயன், ஜயனின் மகன் விஜயன். விஜயனின் மகன் இருதன், இருதனின் மகன் சுநயன், சுநயனுக்கு வீதஹவ்யன், அவன் மகன் திருதி, திருதியின் மகன் பகுளாசுவன், அவன் மகன் கிருதி, இந்தக் கிருதியினிடம் முடிந்தது ஜனக வம்சம். இவர்கள் தாம் மிதிலை நகரத்தை ஆண்டு வந்த அரசர்களாவார்கள். இவர்களில் பலர் ஆத்ம வித்தையில் நிஷ்டை பயின்ற மகானுபாவர்கள்.
6. சந்திரன்-தாரை, புரூரவன்-ஊர்வசி கதைகள்
புராணம் கூறிவரும் பராசரரை நோக்கி, சுவாமி! சூரிய வமிசத்தில் பிறந்த அரசர்களைப் பற்றி எனக்குச் சொன்னீர்கள். இனி சந்திர வம்சத்திற் பிறந்த அரசர்களைப் பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். நிலையான கீர்த்தியைப் பெற்ற அந்தச் சந்திர குலத்து அரசர்களின் சந்ததியானது இன்றும் புகழுடன் இருக்கிறதல்லவா? ஆகையால், தயைகூர்ந்து சந்திர வமிசத்தில் உதித்த அரசர்களைப் பற்றியும் கூறியருள வேண்டும்! என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வமிசமும் அதிபல பராக்கிரமங்களும் தேஜஸும் நன்குணர்ந்த செயல்களுமுள்ள நகுஷன், யயாதி கார்த்தவீர்யார்ச்சுனன் முதலிய பேரரசர்களால் சிறப்புடையதாகும். இதை ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். சகல லோக கர்த்தராகிய ஸ்ரீமந் நாராயணனுடைய நாபி கமலத்தில் உதித்த பிருமாவின் குமாரர்-அத்திரி என்ற முனிவர். அவருடைய மகன் சந்திரன். அவனைச் சதுர்முகப் பிரமன் சகல அவுஷாதிகளுக்கும், பிராமணர்களுக்கும், நட்சத்திரங்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தார். அதன் மேன்மையாக சந்திரன் ஒரு ராஜசூய யாகம் செய்தான். பிறகு அதன் மகிமையினாலும் மேன்மையான அதிகாரத்தைப் பெற்றிருந்ததாலும் மதமும் கர்வமும் கொண்டு, சகல தேவர்களுக்கும் குருவாகிய பிரகஸ்பதியின் மனைவியான தாரை என்பவளை அபகரித்துக் கொண்டான். இந்தச் செய்தியை பிருமா, பிருகஸ்பதிக்கு அறிவித்தார். அதனால் சந்திரனுக்கு பிரகஸ்பதி எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் தேவரிஷிகள் எல்லோரும் வேண்டிக் கொண்டதையும் சந்திரன் கேட்காமல், தன் குருபத்தினியானத் தாரையை விடவில்லை. அதனால் போருக்கு இடமுண்டாயிற்று, அப்போது பிரகஸ்பதியிடம் பகைத்துக் கொண்டிருந்த அசுர குருவான சுக்கிரன் சந்திரனுக்குப் பக்கமாகச் சேர்ந்து கொண்டான். அதனால் அந்த அசுரகுரு சுக்கிரனின் சீடர்களான ஜம்பன் கும்மன் முதலான தானவர்களும் சந்திரன் பக்கம் சேர்ந்துக் கொண்டுப் போர் புரியத் தயாரானார்கள். ஸ்ரீருத்திர பகவான் அங்கிரசரிடம் கல்வி கற்றதால், குரு புத்திரராகிய பிரகஸ்பதிக்குத் துணைவரானார். அசுரர்களெல்லாம் சந்திரனின் சார்பில் சேர்ந்ததால் தேவேந்திரன் சகல தேவ சைன்னியர்களுடன் போர் புரிய முற்பட்டான். இவ்வாறு தேவர்களுக்கும் அசுரருக்கும் ஏற்பட்டப் போரானது தாரையின் காரணமாக நிகழ்ந்ததால் அந்தப் போருக்கு தாரகாமயம் என்று பெயர் ஏற்பட்டது. அந்தப் பெரும் போரில் இருதரப்பாரும் விதவிதமாய் ஆயுதங்களை உபயோகித்துத் தாக்கினார்கள்; இதனால் உலகம் யாவும் கலக்கமுற்றது, யாவரும் பிருமாவைச் சரணமடைந்தார்கள். அப்போது, பிருமாவானவர், சுக்கிரனையும் சிவனையும் அசுரனையும் தேவரையும் தடுத்து, சந்திரனுக்குப் புத்தி சொல்லி, தாரையைப் பிரகஸ்பதியிடம் திருப்பியனுப்பச் செய்தார். அத்துடன் சண்டையும் நின்றது.
பிறகு தம் மனைவி தாரை கருவுற்றிருந்ததை அறிந்த தேவகுருவான பிரகஸ்பதி அவளை நோக்கி, அடிபெண்ணே! எனது ÷க்ஷத்திரத்தில் நீ மற்றவனுடைய கருவை ஏற்றிருக்கக் கூடாது. இதுவரையில் நீ செய்த சாகசம் போதும். இனி அந்தக் கருவை விட்டுவிடு! என்றார். அதைக் கேட்ட தாரை மிகவும் பதிவிரதையாகையால், கணவனின் சொற்படி கருவை ஒருநாணற்செத்தையின் மீது விட்டுவிட்டாள். அந்தக் கருவினால் பிறந்த குழந்தை, பிறந்தவுடனேயே சகல தேவரையும் தோற்கடிக்கும்படியான திவ்யதேஜசோடு விளங்கியதைக் கண்டதும் பிரகஸ்பதி அந்தக் குழந்தை தனது பிந்துவுக்குப் பிறந்திருக்கலாம் என்று அந்தக் குழந்தையின் மீது விருப்பங் கொண்டிருந்தான். இருவருமே இவ்விதமாக அந்தக் குழந்தையின் மீது விருப்பம் கொண்டிருந்ததால் தேவர்கள் சந்தேகங்கொண்டு தாரையை நோக்கி பெண் அரசியே! இவன் சந்திரனுக்குப் பிறந்தவனா? உன் கணவரான தேவகுருவுக்கப் பிறந்தவனா? அதை எங்களுக்கு சொல்வாயாக! என்று பலமுறைகள் விடாமல் கேட்டார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்று கேட்டும் தாரை வெட்கத்தால் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். அப்போது அவளுடைய குமாரன் கோபங்கொண்டு, அவளைச் சபிக்க முயன்று, அவளைப் பார்த்து, ஓ துஷ்டையான தாயே! நீ ஏன் என் தந்தை யாரொன்பதைத் தெரிவிக்காமல் இருக்கிறாய்? இன்னும் நீ இதைத் தெரிவிக்கத் தயங்கினால் பொய் வெட்கமுள்ள உனக்குத் தகுந்த சிøக்ஷ செய்வேன்! என்று கடுகடுத்துச் சொன்னான். அப்பொழுது பிருமதேவர், அந்தக் குமாரனைத் தடுத்து, உண்மையைச் சொல்லும்படி தாரையிடம் கேட்டார். தாரை மிகவும் வெட்கத்தினால் தலைகுனிந்து கொண்டு, இவன் சந்திரனுடைய மகன்தான்! என்று சொல்லிவிட்டாள். பிறகு சந்திரன் மிகவும் மகிழ்ந்து, தன் புத்திரனைக் கட்டியணைத்து முத்தமிட்டு, குழந்தாய்! நீ மிகவும் அறிவுடையவனாகையால் உனக்கு புதன் என்று பெயர் சூட்டுகிறேன்! என்று அவனுக்குப் பெயரிட்டான்.
அந்தப் புதன் என்பவன் இளை என்பவளிடம் காமுற்று புரூரவனைப் பெற்றான். புரூரவன் தான தருமங்களைச் செய்வதில் வள்ளலாக விளங்கினான். அவன் யாகங்கள் பலவற்றைச் செய்தவன். மிகவும் ஆணழகன். ஒரு காலத்தில் ஒரு சமயம் தேவலோகத்து அப்சரஸான ஊர்வசியின் மீது சித்திரா வருணர்கள் காதல் கொண்டார்கள். அதற்கு ஊர்வசி இணங்காததினால் அவர்கள் கோபங்கொண்டு, நீ மனிதனின் மனைவியாகக் கடவாய்! என்று சபித்தார்கள். அதனால் ஊர்வசி சில காலம் பூவுலகத்தில் இருக்கும்படி வந்தாள். வந்தவிடத்தில் மகாரூபனாகவும் மிகவும் நல்ல மனதுள்ளவனாகவும் சத்திய சந்தனுமாக விளங்கும் புரூரவச் சக்கரவர்த்தியைக் கண்டாள். அவனைக் கண்டதும் பெண்மைக்கே உரிய பெருமையையும் சொர்க்க சவுக்கியத்தில் உண்டாகியிருந்த விருப்பத்தையும் ஊர்வசி விட்டு விட்டு, அளவற்ற காதலோடு அவனருகே சென்றாள். உலகத்திலுள்ள எல்லாப் பெண்களையும் விட மேலான காந்தி, சுகுமாரத்துவம், லாவண்யம், விலாசம் முதலியவற்றில் சிறந்து விளங்கும். அந்த தேவமங்கையைக் கண்டதும் புரூரவ மன்னனும் தனது மனதைப் பறிகொடுத்தான். இவ்வாறு அவர்கள் இருவரும் ஒரே மனதுடையவராய் வேறு நோக்கமின்றி எல்லா பயன்களையும் விட்டிருந்தார்கள். அப்போது புரூரவன் அவளை நோக்கி, பெண்ணே! நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என் மீது மனம் வைக்க வேண்டும்! என்றான். அதற்கு ஊர்வசி மன்னவரே நான் சொல்வதை ஏற்று நீங்கள் நடப்பதானால் உமது இஷ்டத்துக்கு இணங்குகிறேன்! என்றான். உடனே புரூரவன் உன் சங்கேதத்தைச் சொல்லடி, கண்ணே என்றான். அதனால் தேவகன்னிகை ஊர்வசி அவனைப் புன்முறுவலுடன் நோக்கி, அரசனே நான் இரண்டு ஆடுகளைக் குழந்தைகளைப் போல வளர்த்து வருகிறேன். அவை எப்போதும் என் படுக்கையின் அருகிலேயே இருக்க வேண்டும். அங்கிருந்து அவற்றை யாருமே அபகரிக்கக் கூடாது. இது ஒரு நிபந்தனை. நீங்கள் திகம்பரராக நிர்வாணத்தோடு இருக்கும்போது நான் உம்மைப் பார்க்கக் கூடாது. இது இரண்டாவது நிபந்தனை. எனக்கு நெய்யைத் தவிர, வேறு ஆகாரம் ஒன்றுங்கூடாது. இது மூன்றாவது நிபந்தனை! இந்த மூன்றில் எது தவறினாலும் நான் உம்முடன் இருக்கமாட்டேன் என்றாள். அவளது நிபந்தனைக்கு புரூரவன் ஒப்புக்கொண்டு அப்படியே ஆகட்டும், கண்ணே! என்று சொன்னான். அவளும் அவனிஷ்டத்துக்கு இணங்கி, அவனுடன் இருந்து வந்தாள்.
பிறகு புரூரவ மாமன்னன் அவளோடு, அளகாபுரியிலும் சயித்திரரத முதலிய திவ்விய வனங்களிலும் மானசத் தடாகங்களிலும் வேடிக்கையாக விளையாடிக் கொண்டு, காதல் கேளிக்கைகளில் களித்துத் திரிந்து நாளுக்கு நாள் மகிழ்ச்சி மீதூர வாழ்ந்து வந்தான். இப்படியே அறுபத்தோரு ஆண்டுகள் கழிந்தன. ஊர்வசியும் அவனைப் போலவே, சுவர்க்கலோகத்து இன்பத்தையும் பெரிதாக எண்ணாமல் யோகானந்தத்தையே பெரிதாக எண்ணி மகிழ்ந்திருந்தாள். இந்நிலையில் தேவலோகத்தில் ஊர்வசி இல்லாததால், மற்ற தேவதாசிகளுக்கும் சித்தர், வித்தியாதரர்களுக்கும் தேவலோகம் ரமணீயமாக இருக்கவில்லை. ஆகையால், கந்தருவர்களின் அரசனாகிய விசுவாவசு என்பவன் ஊர்வசியை மறுபடியும் தேவருலகுக்குக் கொண்டு செல்வதற்கு உபாயம் என்னவென்று யோசித்தான். புரூரவனோடு கூடி மகிழ்ந்து தேவலோகத்தை ஊர்வசி மறந்திருக்கிறாள் என்றாலும் புரூரவனுக்கு அவள் விதித்திருக்கும் நிபந்தனைகளை விசுவாவசு அறிந்து கொண்டு ஓரிரவில் கந்தர்வர்களோடு வந்து கூடி படுக்கையின் அருகேயிருந்த ஆடுகளில் ஒன்றை அபகரித்துக் கொண்டு சென்றான். அவன் ஆகாயமார்க்கமாக அதைக்கொண்டு போகும் போது அந்த ஆடு அபயக்குரல் எடுத்துக் கத்தியது. அதைக்கேட்ட ஊர்வசி, ஐயோ! என் குழந்தையை யாரோ அபகரித்துச் செல்கிறாரே! அநாதையான நான் இந்தத் தருணத்தில் யாரிடம் இதைப் புகல்வேன்? என்று கூறினாள். அந்த கூக்குரலைக் கேட்டதும் புரூரவ மன்னன் துள்ளியெழுந்தான் என்றாலும் தான் நிர்வாணமாக இருப்பதால், மற்றொரு நிபந்தனைப்படி தன்னை ஊர்வசி பாராமலிருக்க வேண்டுமே என்று நினைத்து, அங்கிருந்து அவன் அகலவில்லை, பிறகு கந்தருவா மற்றொரு ஆட்டையும் கவர்ந்து கொண்டு சென்றார்கள். அந்த ஆடும் கத்தியது. அதை ஊர்வசி கேட்டு ஐயையோ! எனது மற்றொரு குழந்தையும் கொண்டு போகிறார்களே! எனக்கு கணவனும் இல்லை! வீரமில்லாத அற்பமான ஒருவனைச் சேர்ந்து நான் இப்படியாகி விட்டேனே! என்று கதறியழுதாள். அதைக் கேட்டு சகியாத புரூரவன் ஆத்திரத்துடன் குமுறியெழுந்து அளவில்லாத கோபங்கொண்டு இருட்டுள்ள இரவாக இருப்பதால் நிர்வாணமான தன்னை ஊர்வசி பார்க்கமாட்டாள் என்று நினைத்துக்கொண்டு அப்படியே எழுந்து கையிலே வாளையுருவிக் கொண்டு, அடா யாரடா திருடன்? என்று ஆரவாரத்தோடு பாய்ந்து சென்றான். அந்த சமயத்தில் கந்தருவர் மிகவும் பிரகாசமான மின்னல் ஒன்றை உண்டாக்கினார்கள். அந்த மின்னல் வெளிச்சத்தில் ஆடையற்றிருந்த அரசனை ஊர்வசி கண்டாள். உடனே அவர் தனது நிபந்தனைக்கு பங்கம் வந்தது என்று சொல்லி அவனைவிட்டு சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தாள். கந்தருவரும் ஆடுகளை அங்கேயே விட்டு விட்டுத் தாங்களும் தேவலோகத்துக்குச் சென்றார்கள். புரூரவ மன்னன் வழியில் ஆடுகளைக் கண்டதும் மகிழ்ந்து படுக்கையில் வந்து படுத்தான். அங்கே ஊர்வசியைக் காணாமல் விசனமுற்றான். அதன் பிறகு அவன் திகம்பரனாகவே (நிர்வாணமாகவே) எங்கெங்கோ ஊர்வசியைத் தேடிப் பார்த்தும் அவள் அகப்படாததால் பைத்தியம் பிடித்து, அந்தக் கோலத்துடனேயே கண்ட இடங்களில் திரிந்து கொண்டிருந்தான். இது இப்படியிருக்க ஒரு தினம் குரு÷க்ஷத்திரத்திலுள்ள ஒரு தாமரைத் தடாகத்திலே வேறு நான்கு தேவமங்கையருடன் ஊர்வசியும் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட புரூரவன், பைத்தியத்தைப் போலவே அவள் அருகே சென்று அடி என் காதலி! சிறிது நேரம் நில், சிறிது நேரம் என்னோடு பேசு, இருவரும் சிறிதுநேரமாகிலும் கூடியிருப்போம்! என்று பலப்பல காதல் வார்த்தைகளைச் சொல்லி அவளிடம் கெஞ்சினான். அதற்கு ஊர்வசி, பூலோக வேந்தே! உமது விவேகமற்ற செய்கை போதும், நான் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன், இந்த வருஷத்தின் முடிவில் இங்கு வாரும்! உமக்கு ஒரு நல்ல மகன் பிறந்திருப்பான். பிறகு நான் உம்மோடு ஒரு நாள் கூடியிருப்பேன் இப்போது போய்விடும்! என்று சொன்னாள். புரூரவனும் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் நகருக்குப் போய்ச் சேர்ந்தான்.
அப்போது ஊர்வசி தன் தோழியரை நோக்கி தோழிகளே அவர்தான் புரூரவச் சக்கரவர்த்தி! அவருடன் கூடித்தான் நான் இத்தனை நாட்கள் விருப்பமும் மகிழ்ச்சியுமாகக் களித்திருந்தேன் என்று சொன்னாள். அதைக் கேட்ட தெய்வப் பெண்களும் அவன் மிகவும் அழகன், அரசர்க்கும் அரசன். ஆகையால் நாங்களுங்கூட அவனுடன் கூட சுகித்திருக்க விரும்புகிறோம், என்று சொன்னார்கள். பிறகு ஊர்வசியின் சொற்படி அந்த ஆண்டின் முடிவில் அவள் குறிப்பிட்ட அதே இடத்துக்கு புரூரவச் சக்கரவர்த்தி சென்றான். அங்கே ஊர்வசி, ஆயுசு என்ற ஒரு மகனைப் பெற்று, அரசனின் கைகளில் ஒப்படைத்து, ஓரிரவு அவனுடன் கூடியிருந்து ஐந்து பிள்ளைகளைப் பெறும்படியான கர்ப்பத்தையடைந்தாள். அன்றியும் அவள் அரசனை நோக்கி, அரசே! நம்மிடம் கொண்ட அன்பினால் கந்தர்வர்கள் உமக்கு வரங்கொடுக்க வந்திருக்கிறார்கள். ஆகையால் உமக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக் கொள்ளும் என்றாள். ஆனால் புரூரவனோ பெருமூச்சு விட்டு, நான் பகைவர்கள் அனைவரையும் வென்று, இந்தரிய சக்தி தப்பாதவனாய் பந்துக்களிலும், சேனைகளிலும், பொக்கிஷத்திலும் குறைவற்றவனாகவும் இருப்பதால் எனக்கு வேண்டுவது வேறொன்றும் இல்லை. ஆனால் எனக்கு வேண்டுவது ஊர்வசியின் அருகே எப்பொழுதும் இணைபிரியாமல் இருப்பதேயாகும். ஆகையால் என் காலத்தை ஊர்வசியுடனே கழிக்க விரும்புகிறேன், என்றான். உடனே, கந்தர்வர்கள் அவனிடம் ஒரு அக்கினிஸ்தாலி ஒன்றைக் கொடுத்து, அரசனே! நீர் வேதத்தை அனுசரித்து இந்த அக்கினியை மூன்றாக்கி ஊர்வசியின் அருகிலேயே இருக்கும் பயனைக் கருதியாகஞ் செய்து உன் இஷ்டத்தைப் பெறுவீராக! என்றார்கள். அதன் பிரகாரம் புரூரவன் அந்த அக்கினி ஸ்தாலியை கையில் எடுத்துக் கொண்டு வரும் போது நடுக்காட்டில் இது என்ன மடமை! ஊர்வசியை நம்முடன் அழைத்துக் கொண்டு வராமல் அக்கினி ஸ்தாலியையன்றோ கொண்டு செல்கிறாய். இதனால் என்ன பயன்? என்று நினைத்து பித்தனைப் போல அந்த ஸ்தாலியை அங்கேயே வைத்து விட்டு பட்டணம் போய்ச் சேர்ந்தான். அங்கே, நள்ளிரவில் விழித்துக் கொண்டு, ஓகோ! ஊர்வசி சாலோக்கியத்தைப் பெறுவதற்காக கந்தர்வர் நமக்குக் கொடுத்த அக்கினி ஸ்தாலியை காட்டிலே போட்டுவிட்டு வந்தோமே! அதை இப்போதே போய்க் கொண்டு வரவேண்டும் என்று எண்ணி ஓடிச்சென்று, ஸ்தாலியை வைத்த இடத்தில் தேடினான், அதைக் காணாமல் அங்கே வன்னிமரத்தை நடுவிற்கொண்ட அரசமரம் ஒன்று இருப்பதைக் கண்டு, நம்முடைய அக்கினி ஸ்தாலிதான் இந்த மரமாகி இருக்கவேண்டும். ஆகையால் அக்கினி ரூபமான இதனையே கொண்டுசென்று அரணியாகக் கடைந்து அக்கினியை உண்டாக்கி அதனை உபாசிப்போம்! என்று கருதி, அதை அப்படியே நகரத்துக்கு எடுத்துச்சென்று காயத்திரி மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே அரணியைக் கடைந்தான். அந்த அரணியும் காயத்திரி மந்திர எழுத்துக்களின் கணக்குப்படி இருபத்து நான்கு அங்குல அளவுள்ளதாக ஆயிற்று. பிறகு அரணியைக் கடைந்து அக்கினியை உண்டாக்கி, அதை மூன்றாக்கி வேதவிதிப்படி ஊர்வசி சாலோக்கியத்தைக் கருதிப் பல யாகங்களைச் செய்தான். அதனால் கந்தர்வ லோகத்திற்கு புரூரவன் சென்று ஊர்வசியோடு இணைபிரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆதியில் இருந்த அக்கினி ஒன்றே அந்த ஒன்றே இந்த மனுவந்தரத்தில் மூன்றாக்கப்பட்டது.
7. கவுசிக வம்ச வரலாறு
மைத்ரேயரே, மேலும் கேளும். அந்தப் புரூரவ மாமன்னனுக்கு ஆயுசு, அமாவசு, விசுவாவசு, சுருதாயு, சதாயு, அயுதாயு என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அமாவசு என்பவனுக்கு பீமன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்குக் காஞ்சனன் பிறந்தான். காஞ்சனனுக்கு கதோத்திரன் அவனுக்கு ஜன்னு, அந்த ஜன்னு என்பவன் யாகஞ்செய்து கொண்டிருக்கும் போது கங்கை நதியானது அந்த யாகசாலைக்கு வந்து யாவற்றையும் முழுகடித்தது. அதைக்கண்டதும் ஜன்னு கோபத்தால் கண் சிவந்தான். ஸ்ரீயக்ஞ புருஷனைத் தியான பலத்தால் இதயத்தில் நிறுத்தி அந்த தேஜஸால் கங்கையைப் பானஞ்செய்துவிட்டான். பிறகு தேவ ரிஷிகள், அவனை வேண்டியபின் கங்கையை விடுவித்து, அந்த கங்கையை அவனுடைய மகளாக வைத்தார்கள். அதனால் கங்கைக்கு சான்னவி என்ற பெயர் உண்டாயிற்று. அந்த ஜன்னுவுக்கு சுமந்து என்பவன் பிறந்தான். அவனுக்கு அசகன், அவனுக்கு பலாகாசுவன், அவனுக்கு குசன், அவனுக்கு குசாம்பன், குசநாபன். அதூர்த்தரஜசுவசு என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் குசாம்பன் என்பவன் எனக்கு இந்திர சமானனான புத்திரன் உண்டாக வேண்டும் என்று தவஞ்செய்தான். அப்போது தேவேந்திரன், நமக்குச் சமானமாய் மற்றொருவன் உண்டாக வேண்டாம் என்று தானே அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அவன் பெயர் காதி, கவுசிகன் என்றும் அவன் வழங்கப்படுவான். அந்தக் காதிக்கு சத்தியவதி என்ற பெண் ஒருத்தி பிறந்தாள். அவளைப் பிருகு முனிவரின் மகனாகிய ரிசீக மாமுனிவர் தமக்குக் கொடுக்கும்படியாகக் கேட்டார். அதற்கு காதியானவன் இந்த முனிவரோ பிராமணர் மேலும் கிழவர், கோபக்காரர்! என்று நினைத்து அவளை அவனுக்குக் கொடுக்க மனமில்லாமல் அவரை நோக்கி ஒரு காது மட்டும் கறுப்பாகவும், மற்றைய அவயவங்கள் எல்லாம் சந்திரனைப் போலப் பிரகாசிக்கும் படியாகவும் காற்றைவிட வேகமாகச் செல்லக்கூடிய ஓராயிரம் குதிரைகளை கன்யாசுல்கமாகக் கொடுத்தால், என் புதல்வியை நான் உமக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன் என்றான். அதற்கு ரிசீக முனிவர் இணங்கி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு வருணனிடம் சென்று அஸ்வ தீர்த்தத்தில் பிறந்த ஆயிரம் குதிரைகளைக் கொண்டுவந்து அவனிடம் ஒப்படைத்து, அந்தக் கன்னியைக் கல்யாணம் செய்து கொண்டார். பிறகு ரிசீகமுனிவர் அவளுக்கும் புத்திரோற்பத்தி செய்வதற்கு ஒரு சருவைச் செய்து வைத்தார். சரு என்பது ஒருவகைச் சோறு ஆகும். அதைக் கண்ட அவருடைய மனைவியாகிய சத்தியவதி அவரைவேண்டித் தனது தாய்க்கு ஒரு புத்திரன் உண்டாவதற்காக ஒரு சருவைச் செய்விக்கும்படி செய்தாள். இவ்விதமாக ரிசீகமுனிவர் தமது பத்தினிக்குப் பிரம தேஜசுடன் கூடிய புத்திரன் உண்டாவதற்கான சருக்களைக் கொடுத்து, நீ இந்த சருவையும் உன் தாய் அந்த சருவையும் புசிப்பீர்களாக! என்று சொல்லி விட்டு வனத்துக்குச் சென்றார்.
பிறகு தாயும், மகளும் சருவைப் புசிக்கும்போது, சத்தியவதியின் தாய், மகளே! உலகத்தில் எவனுமே தன் புத்திரனுக்கே மேன்மையான குணங்கள் இருக்கவேண்டும் என்று விரும்புவான். அஃதன்றி தன் பத்தினியின் தம்பிக்கு அக்குணங்கள் இருக்கவேண்டும் என்று விரும்பமாட்டான். ஆகையால் உனக்கு உன் புருஷன் கொடுத்த சருவானது சிறப்பானதாக இருக்கவேண்டும். க்ஷத்திரிய ஜாதியான எனது மகன் பூவுலக ஆளவேண்டியவன். ஆகையால், இப்படிப்பட்டவனுக்கு மேலான குணங்கள் அமைந்தால் சிறப்பான பயன்கள் ஏற்படும். பிராமணனுக்குப் பல பராக்கிரம சம்பத்துகள் இருப்பதால் யாது பயன்? ஆகையால் உன்னுடைய சருவை எனக்குக் கொடுத்துவிட்டு, என் சருவை நீ வாங்கி சாப்பிடு! என்று சொன்னாள்; அதற்கு மகள் சத்தியவதியும் ஒப்புக்கொண்டாள். தன் சருவைத் தான் வாங்கிப் புசித்தாள். பிறகு ரிசீக முனிவர், காட்டிலிருந்து திரும்பி வந்து கருவுற்றிருக்கும் தமது பத்தினியின் தேகத்தை கண்டு அவளை நோக்கி, அடிபாதகீ! செய்யக்கூடாத காரியத்தை நீஏன் செய்தாய்? ஏனென்றால், உன் தேகமானது மிகவும் ரவுத்ர ரூபமாகக் காணப்படுகிறது. அதற்குக் காரணம் உன் தாய்க்குக் கொடுத்த சருவை நீ புசித்திருக்கிறாய் என்று தெரிகிறது. இது தகுதியற்றது. நான் அந்தச் சருவில் சகல ஐஸ்வரிய வீரிய பலங்களையும் ஏற்றியிருக்கிறேன். உன் சருவிலே ஞானம், சாந்தி, பொறுமை முதலிய பிராமண குணங்களை ஏற்றியிருக்கிறேன். இதை நீ மாற்றி விட்டாயாகையால் உனக்கு உக்கிரமான அம்புகளை எய்யக்கூடிய க்ஷத்திரிய ஆசாரமாய் நடக்கக்கூடிய புதல்வன் தான் பிறப்பான். உன் தாய்க்கோ பொறுமை முதலிய குணங்களையுடைய பிராமணச் சாரமுள்ள குமாரன் பிறப்பான் என்று கூறினார். தன் கணவன் இவ்வாறு கூறியதும் சத்தியவதி அவரது திருவடிகளில் வீழ்ந்து, பிராணநாதா! அடியாள் தெரியாத்தனத்தால் அப்படிச் செய்துவிட்டேன். அடியாள் மீது அருள்காட்ட வேண்டும். அத்தகைய புத்திரன் எனக்கு வேண்டாம் சருவின் பலம் தப்பாதாகையால் என் பேரன் அப்படியாகட்டும் என்று வேண்டினாள். அதனால் அவள் மீது ரிசீக முனிவர் கருணை கொண்டு நல்லது அப்படியே ஆகட்டும்? என்று அனுக்கிரகஞ் செய்தார். பிறகு, சத்தியவதி ஜமதக்னி என்ற மகனைப் பெற்றாள். அவளுடைய தாய் விசுவாமித்திரதைப் பெற்றாள். அந்த சத்தியவதி, சிலகாலம் சென்ற பிறகு கவுஷதி என்ற நதியானாள். அவளது பிள்ளையான ஜமதக்னி முனிவர், இஷ்வாகு வம்சத்து அரசனான ரேணு என்பவனின் புதல்வியான ரேணுகையைத் திருமணஞ்செய்து கொண்டார். அவளது வயிற்றில் ஸ்ரீமந்நாராயணனின் அம்சத்தால், சகல க்ஷத்திரிய வம்ச நாச காரணரான பரசுராமர் பிறந்தார். விசுவாமித்திரருக்கோ பிருகு வமிசத்தைச் சேர்ந்த சுனச்சேபனே, தேவதைகளால் மகனாகக் கொடுக்கப்பட்டான். தேவர்களால் கொடுக்கப்பட்டதால் அவன் தேவராதன் என்ற பெயரைப் பெற்றான். பிறகு விசுவாமித்திரருக்கு மதுச்சந்தன், தனஞ்சயன், கிருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிரன் என்ற வேறு பிள்ளைகளும் பிறந்தார்கள். அவர்களால் கவுசிக கோத்திரங்கள் உண்டாயின. அந்தக் கோத்திரத்தார் எல்லாம் வெவ்வேறு பிரவரம்(பிரவரம்-கோத்திரத் தலைவர் முறைமை) உள்ள குலங்களில் விவாகஞ் செய்து கொள்ள வேண்டியவராய் உள்ளனர்.
8. காசி அரசர்கள் வரலாறு
மைத்ரேயரே, மேலும் கேட்பீராக! புரூரவசின் மூத்தகுமாரனான ஆயுசு என்பவன் ராகுவின் மகளைத் திருமணஞ்செய்து நகுக்ஷன் க்ஷத்திர விருத்தன், ரம்பன், ரஜீ, அனேனசு என்ற ஐந்து பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் க்ஷத்திர விருத்தனுக்கு சுஹோத்திரன் பிறந்தான். அவனுக்கு காசியன், காசன், கிருச்சமதன் என்ற மூவர் பிறந்தனர். கிருச்சமதனுக்கு சவுனகன் பிறந்தான். அவன் நான்கு வர்ணங்களை உண்டாக்கினான், காசியன் என்போனுக்குக் காசி மன்னனான காசேயன் உண்டானான். அவன் மகன் ராஷ்டிரன், அவன் மகன் தீர்க்கத பசு, அவனுக்கு தன்வந்திரி பிறந்தான். முன்பு திருப்பாற்கடலில் உதித்தபோது எல்லாப் பிறவிகளிலும் எல்லா ஞானங்களையும் அறிந்த ஸ்ரீமந்நாராயணன் அந்த தன்வந்திரிக்கு நீ காசி ராஜவமிசத்திற் பிறந்து எண்வகையான வைத்திய நூல்களையும் செய்யக் கடவாயாக! வேள்விகளில் அவிர்ப்பாகமும் புசிக்கக் கடவாய்! என்று வரமளித்தார். அந்த தன்வந்திரியின் மகன் கேதுமான். அவன் மகன் பீமரதன், அவன் மகன் பிரதர்த்தனன். அவன் பத்திரசிரேணிய வமிசத்தை நாசஞ் செய்தமையால் சகல சத்துருக்களையும் நாசஞ்செய்தானென்று கொண்டு சத்துருஜித்து என்ற பெயரை அடைந்தான். அவன் தந்தையான திவோதாசன் அதிக அன்பினால், அவனை வத்சரன்று அழைத்து வந்ததால், வத்சன் என்ற பெயரும் அவனுக்குண்டு. அவன் மிகவும் சத்தியவானாகையால் சத்தியத்துவசன் என்ற பெயரையும் பெற்றான். அன்றியும் அவன் குவலயம் என்னும் புகழ்பெற்ற குதிரையொன்றை வைத்திருந்தால் குவலயாசுவன் என்ற பெயரையும் பெற்றான். அவன் மகன் அளர்க்கன், அவனைப் பற்றியொரு சுலோகம் இந்தக் காலத்தும் வழங்குகிறது. அதாவது, அளர்க்கனை விட மற்ற எவன் தான் அறுபத்தாறாயிரம் ஆண்டுக்காலம் இந்த பூமியை ஆண்டான்? என்பதுதான் அந்த சுலோகம் அவ்வாறு புகழப்படும் அளர்க்கன் என்பவனுக்கு சன்னதி என்ற மகன் பிறந்தான். அவன் மகன் சுநீதன், அவன் மகன் சுகேது, அவன் மகன் தரும கேது, அவன் மகன் சத்தியகேது, அவன் புத்திரன் விபு, அவன் புதல்வன் ஸ்வவிபு, அவன் தயைன் சுகுமாரன், அவன் குமாரன் திருஷ்டகேது, அவன் மகன் வீதியோத்திரன், அவனுக்குப் பார்க்கன், அவனுக்கு பார்க்கபூமி இவனிடத்திலிருந்து நான்கு வர்ணங்கள் உண்டாயின. இவர்கள் தான் காசியரசர்களாவார்கள்.
9. ரஜி வரலாறு
ரஜி என்பவனுடைய வம்சா வழியைக் கூறுகிறேன் கேளும். ரஜிக்கு ஒப்பற்ற பல பராக்கிரமம் பொருந்திய ஐந்நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இப்படியிருக்க ஒரு சமயம் தேவாசுரப்போர் ஒன்று நடந்த போது தேவரும், அசுரரும் பிரம்மனிடம் சென்று, இந்த யுத்தத்தில் யாருக்கு வெற்றியுண்டாகும்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ரஜி மன்னன் யார் சார்பில் சேர்ந்து போர் செய்வானோ அவர்கள் பக்கமே ஐயம் உண்டாகும் என்றார். அதைக் கேட்டதும் அசுரர்கள் ரஜியிடம் முன்னதாகச் சென்று, தமக்கு யுத்த சகாயம் செய்ய வேண்டும் என்று அவனை வேண்டினார்கள். அதற்கு ரஜி மன்னன், அசுரர்களே! நான் தேவர்களை வென்ற பிறகு உங்களுக்கு நான் தேவேந்திரனாக இருக்கச் சம்மதித்தால் உங்கள் சார்பில் போர் செய்கிறேன் என்றான். அதற்கு அசுரர்கள், அரசே! நாங்கள் காரியத்திற்காக ஒன்றை முன்னதாகச் சொல்லிப் பிறகு மற்றொன்றைச் செய்யமாட்டோம். எங்களுக்கு பிரகலாதரே இந்திரராக இருக்கவேணடும். அதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டோம் என்றார்கள். பிறகு அவர்கள் போய் விட்டார்கள். அதன் பிறகு ரஜி மன்னனிடம் தேவர்களும் வந்து தமக்குத் துணை செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களிடமும் ரஜி மன்னன் தன் விருப்பத்தைச் சொன்னான். தேவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதனால் அந்த மன்னன் தேவர்கள் சார்பில் போர் செய்து அசுர சேனைகளை அழித்தான். அப்போது தேவேந்திரன் ரஜி மன்னனின் கால்களில் விழுந்து, அரசனே! ஆபத்தில் காத்ததாலும் அன்னமிட்டதாலும் நீ எங்களுக்குத் தந்தையானாய் இதனால் சகல உலகங்களிலும் உயர்ந்தவன் ஆகிவிட்டாய். நானோ உன் மகன் திரிலோகாதிபதியாக இருப்பது தந்தைக்குப் பெருமையல்லவா? என்றான். அதைக்கேட்டதும் ரஜி மன்னன் சிரித்து, இந்திரா! அப்படியே ஆகட்டும் என்றான். பிறகு ரஜி மன்னன் தன் நகரம் போய்ச் சேர்ந்தான்.
சில காலத்துக்குப் பிறகு, ரஜி மன்னன் மாண்டு போனான். அவனது பிள்ளைகளை நாரதர் தூண்டிவிட, அவர்கள் இந்திரனிடம் சென்று, நீ எங்கள் பிதாவின் புத்திரனாகையால் எங்களுக்கு உன் ராஜ்ஜியத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். இந்திரன் மறுத்தான். அவர்கள் இந்திரனை வென்று, அவனதிகாரத்தை தாங்கள் செலுத்தி வந்தார்கள். பலகாலம் சென்ற பிறகு, தேவேந்திரன் தனது குலகுருவிடம் சென்று, ஸ்வாமி! அடியேன் ஆட்சியை இழந்து இப்படி அலையலாமோ? ஆகையால் அடியேன் திருப்தியடையும்படிச் செய்யவேண்டும் என்று வேண்டினான். அதற்கு அவர் நீ முன்பே என்னிடம் வந்திருந்தால் இந்த ஆபத்து உனக்கு வந்திருக்காது. இனி உனக்காக நான் செய்யக்கூடியது எதுவுமில்லை. இன்னுஞ் சிறிது காலத்தில் உன் ஐசுவரியம் உனக்கு வரும்படிச் செய்கிறேன் என்று சொல்லி இந்திரனுக்கு தேஜஸ் வளரவும், பகைவர்களுக்கு புத்திமயங்கவும் ஒரு அபிசார ஹோமம் செய்தார். அதனால் ரஜியின் பிள்ளைகள் புத்தி மயங்கி, பிராமணத் துவேஷியராகவும், வர்ணாசிரம தர்மங்களை இழந்தவர்களாகவும் வேதத்திற்குப் புறம்பானார்கள். இதனால் இந்திரன் அவர்களை ஜெயித்து புரோகிதரின் வேள்வி வலிமையால் மகா தேஜசுள்ளவனாய், சொர்க்கத்தை மீண்டும் ஆண்டுவந்தான். இந்தவிதமாக இந்திரன் தனது சொர்க்கப் பதவியை மீண்டும் பெற்ற இந்தச் சரிதத்தைக் கேட்பவனுக்கு ஸ்தானப் பிரம்சமும் துராத்மாவாக இருத்தலும் ஏற்படுவதில்லை. ஆயுசுவின் மகனுக்கு சந்ததியில்லை. இனி க்ஷத்திரவிருத்தனுடைய சந்ததியைக் கூறுகிறேன், கேளுங்கள். க்ஷத்திரவிருத்தனின் மகன் பிரதிக்ஷத்திரன். அவன் மகன் சஞ்சயன், அவன் மகன் ஜயன், அவன் மகன் விஜயன், அவன் பிள்ளை கிருதன். அவன் மகன் ஹரியதனன், அவன் மகன் சகதேவன். அவனுக்கு அதீனன், அவன் பிள்ளை ஜயத்சேனன். அவன் மகன் சங்கிருதி, அவன் புத்திரன் க்ஷத்திர தருகன் இவர்கள் தான் க்ஷத்திரவிருத்தனுடைய வழிவந்தவர்கள்.
10. யயாதி மாமன்னன் கதை
மைத்ரேய நகுஷ வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். நகுஷ மன்னனுக்கு யதி; யயாதி, சம்யாதி, ஆயாதி, வியாதி, கிருதி என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களனைவரும் சிறந்தவீரர்கள். அவர்களில் யதி என்பவன் இராஜ்யத்தை விரும்பவில்லை. ஆகையால் யாயாதி என்பவன் அரசனானான். அவன் சுக்கிரன் மகளாகிய தேவயானியையும், விருஷபருவாவின் மகளாகிய சருமிஷ்டையையும் மணந்துகொண்டான். அவனது வம்சத்தைப் பற்றிய சுலோகம் ஒன்று உண்டு. தேவயானி என்பவள் யது, துர்வசு என்ற பிள்ளைகளையும் சருமிஷ்டை என்பவள் துருகிய, அனுபூரு என்ற பிள்ளைகளையும் பெற்றார்கள், என்று அந்த சுலோகம் கூறுகிறது. யயாதி மன்னன் தன் இரு பத்தினிகளில் சர்மிஷ்டை என்பவளிடம் அதிகப் பாசம் கொண்டிருந்ததால், தேவயானி பொறாமை கொண்டு தன் தந்தையான சுக்கிராச்சாரியாரிடம் தெரிவித்தாள். அதனால் சுக்கிராச்சாரி கோபங்கொண்டு, யயாதி மன்னனுக்கு கிழடு தட்டும் வண்ணம் அவன் ஜரையை அடைய வேண்டுமென ஒரு சாபமிட்டார். அதன் விளைவாக யயாதி மன்னன் தனக்கு அகாலத்தில் மூப்பு வரும்படிச் செய்ததால் மனவருத்தமுற்று, சுக்கிராச்சாரியாரின் பாதங்களில் வீழ்ந்து வேண்டிக்கொண்டான். அதனால் அவர் மனமிரங்கி மூப்பை ஒருவருக்குக் கொடுத்து அவருடைய வனத்தை ஏற்கலாம் என்றும் அனுக்கிரகஞ் செய்தார். பிறகு, யயாதி மன்னன் தனது முதல் மகனை நோக்கி, மகனே! உன் மாதாமஹருடைய சாபத்தால் எனக்கு நேர்ந்த இந்த மூப்பை அவரனுக்கிரகத்திற்கு ஏற்ப நான் உனக்குக் கொடுத்து உனது வாலிபப் பருவத்தை நான் ஏற்று இன்னும் ஓராயிரம் ஆண்டுக்காலம் உலக இன்பங்களை அனுபவிக்க விரும்புகிறேன். ஆகையால் இதற்கு நீ இணங்க வேண்டும் என்றான். அதற்கு மூத்த மகன் யது சம்மதிக்கவில்லை. அதனால் அவனது தந்தையும், உனது சந்ததி ராஜ்யத்தை இழக்கக் கடவது என்று சபித்தார். பிறகு துர்வசு, துருக்யு, அனு என்ற பிள்ளைகளையும் யயாதி மன்னன் வரவழைத்து தனது மூப்பை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய யவுவனத்தைத் தனக்கு வழங்கும்படி வேண்டினான். அவர்களும் அதை ஏற்கவில்லை. எனவே அவர்களையும் யயாதி மன்னன் சபித்தான். பிறகு சர்மிஷ்டையிடம் பிறந்த தனது கடைசிப் பிள்ளையான பூருவிடமும் அவன் அதுபோலவே வேண்டினான். பூரு தன் தந்தையை வணங்கி பிதாவே! தங்கள் விருப்பம்போல நான் இதற்கு இணங்குகிறேன் என்று சொல்லி தனது தந்தையின் மூப்புத்தன்மையைத் தான் ஏற்றுக்கொண்டு தன் யவுவனத்தை தந்தைக்கு கொடுத்தான். அதைப் பெற்ற யயாதி மன்னன் தர்ம விரோதமின்றி தக்க காலங்களில் தனக்கு இஷ்டமான சகல போகங்களையும் அனுபவித்து செங்கோலைச் செவ்வனே செலுத்தி வந்தான். அவன் விசுவாசி என்ற தேவமங்கையோடும் தேவயானியோடும் அனுபவித்து காமங்களின் முடிவை காண்பேன் என்று தினந்தோறும் அதே மனத்தினனாக இருந்தான். நாளுக்கு நாள் பெண் இன்பம் இனிமையானதாகவே அவனுக்கு தோன்றியது. எனவே அவன் இப்பாடல்களைப் பாடினான்.
காமமானது காம போகங்களால் ஒருபோதும் அடங்குவதில்லை. அவிகளைச் சொரியச் சொரிய அக்கினி வளர்வது போல் வளரத்தான் வளர்க்கிறது. இந்த பூவுலகிலுள்ள சகல தானியங்களும் பொன் முதலிய சிறந்த பொருள்களும் குதிரை, பசு முதலிய மிருகங்களும் அழகிய பெண்டிரும் ஒருவனுடைய ஆசைக்குப் போதாமலேயே இருக்கின்றன. ஆகையால் அந்த ஆசையை நிறைவேற்ற முயல்வது முடியாத காரியமாகும். ஆகையால் அதை ஒழித்தலே வேண்டும். சகல பூதங்களிடத்தும் விருப்பும் வெறுப்பும் வைக்காமல் சமமான எண்ணமுடையவனுக்கு எத்திசையிலும் சுகமே தோன்றும், புத்தியீனருகு விடக்கூடாததாயும், உடையவன் தளர்வுற்றலும் தளராததாயும் இருக்கக்கூடிய ஆசையை விட்டுவிட்டால், சுகத்தை அடையலாம். மனிதன் மூப்பினால் மெலிந்துபோக அவனுடைய ரோமங்களும், பற்களும் உதிர்ந்துபோகின்றன. உயிராசை பொருளாசை என்ற இரண்டும் ஒருபோதும் மெலிவதில்லை, இளைப்பதும் இல்லை. இதற்கு ஓர் உதாரணம் ஓராயிரம் ஆண்டுக்காலம் போகானுபவம் செய்துவந்த எனபகு ஆசையானது கொஞ்சமும் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆகையால் நான் இனி இந்த ஆசை என்னும் பைசாசத்தை விட்டு ஒழித்து மனதைப் பரம்பிரம்மனிடத்தில் செலுத்திக் தொந்தமும், மமதையும் நீங்கியவனாய்; மிருகங்களோடு மிருகம் போலத் திரிந்து கொண்டிருக்கக் கடவேன்! என்று இவ்விதம் சிந்தித்து யயாதி மாமன்னன் தன்னுடைய மகன் பூருவவின் யவுவனத்தை அவனுக்கே திருப்பி கொடுத்தவிட்டு தன்னுடைய மூப்பைத் தானே திருப்பிப் பெற்றுக்கொண்டு; தென்கிழக்கில் துர்வசுவையும் மேற்கில் துருகியுவையும் தெற்கில் துர்வசுவையும், மேற்கில் துருகியுவையும், தெற்கில் யதுவையும் சிற்றரசராக்கிச் சகல பூமண்டலத்துக்கும் பூருவை அதிபதியாகச் செய்து பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டு தவஞ்செய்ய வனஞ்சென்றான்.