Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிவமகா புராணம் ஞான சம்ஹிதை (பகுதி-2) சிவமகா புராணம் ஞான சம்ஹிதை (பகுதி-2)
முதல் பக்கம் » சிவமகா புராணம்
சிவமகா புராணம் ஞான சம்ஹிதை (பகுதி-1)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2012
14:35

காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  உலகங்கள் அனைத்திற்கும் பரமபிதாவான சிவபெருமானையும் அவ்வுலகங்கள் அனைத்திற்கும் அருள் அன்னையான உமா மகேஸ்வரியையும் அவர்களின் பிள்ளையான கணேசப் பெருமானையும் நமஸ்காரஞ்செய்து. இந்தச் சிவதத்துவ புராணத்தை வர்ணிக்கிறேன்.

1. புராண வரலாறு

முன் ஒரு காலத்தில், நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிப்பவர்களான தவ முனிவர்கள் அனைவரும் அதிவிநயபக்தியோடு, வியாஸ மகரிஷியின் சிஷ்யரும் நற்குணங்களையுடைய வருமான சூதமா முனிவரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்கள்.

மகாபாக்கியசாலியான சூத முனிவரே! நீங்கள் நீண்ட நெடுங்காலம் சிரஞ்சீவியாகச் சுகத்தோடு வாழ்வீர்களாக! தாங்கள் தங்களிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறோம். நீங்கள் வியாஸ பகவானது திருவருளால் கிருத கிருத்தியர் என்ற தன்மையை அடைந்தவர். கடந்த காலத்தில் நடந்தவைகளையும் நிகழ்காலத்தில் நடப்பவைகளையும் இனிவரும் காலத்தில் நடக்கப் போகும் விருத்தாந்தங்களையும் அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்த திரிகால ஞானியாதலால் தங்களுக்குத் தெரியாத விஷயம் துளியுமிராது! குருவான வியாஸ பகவானின் கருணையால் அனைத்தும் சுலபமாகச் செய்யப்பட்டன. நீங்கள் தயவு செய்து சர்வோத்கர்ஷமான சிவபெருமானின் தத்துவத்தையும். அவருக்குரிய சிறந்த பூஜை முறையையும் பரமசிவனாரின் பற்பலவிதமான சரித்திரங்களையும் எங்களுக்குக் கூறியருள வேண்டும். நிர்க்குணனான மகேஸ்வரன் எப்படிச் சகுணனாகிறார்? நாங்கள் சிவதத்துவத்தை நன்றாக விசாரித்து அறிந்தவர்களால் மகாதேவரும் உலகத்திற்கு சுகம் நல்குபவருமான சங்கரன் என்னும் திருப்பெயரையுடைய பகவான் இந்த உலகப் படைப்புக்கு முன்பும் படைப்பின் மத்திய காலத்திலும் முடிவான பிரளய காலத்திலும் எவ்விதமாக இருக்கிறாய்? அவர் எப்படித் தோற்றமளிக்கிறார்? எப்படிப் பிரசன்னமாகி இவ்வுலகங்களை முன்னிட்டு அவர் எத்தகைய பயன்களைக் கொடுக்கிறார்? எந்த உபாயத்தினால் சர்வேஸ்வரன் விரைவாகப் பிரசன்னமாவார்? இவற்றையும் இன்னும் நாங்கள் கேட்காத விஷயங்களையும் உத்தம் விரத சீலரான தாங்கள் சொல்ல வேண்டும்? என்று சவுனகர் முதலான முனிவர்கள் விருப்போடு கேட்கவே சூதமாமுனிவர் மிகவும் உற்சாகத்தோடு கூறலானார்.

2. ஜோதிலிங்கம் தோன்றிய கதை

முனிவர்களில் சிறந்தவர்களே! நீங்கள் இப்பொழுது என்னிடம் கேட்ட விஷயங்களைப் போலவே முன்பொரு சமயம் நாரத முனிவர் பிரம்ம ஞானத்தை அறிவதற்காக அவரது பிதாவான நான் முகப்பிரும்மாவைக் கேட்டார். அதன் விவரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். அந்தணோத்தமர்களே திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர் எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து வரும்போது பரமாத்மாவான சிவபெருமானின் தத்துவத்தை அறிவதற்காக அவரது திருப்பெயரைச் சிந்தித்துக் கொண்டே தம் தந்தையான பிரும்ம தேவரிடம் சென்றார் பிரம்மாவை அவர் வணங்கி விட்டுப் பின் வருமாறு கேட்டார். பிதாவே! பிரமஞானிகளில் சிறந்தவரே இவ்வுலகங்களையும் உயிரினங்களையும் படைத்து பிதா மகனாக விளங்கும் சிருஷ்டி கர்த்தாவே தங்கள் தயவினால் உத்தமமான விஷ்ணுவின் மகத்துவம் முழுவதையும் பக்தி மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் செயற்கரிய தவமார்க்கத்தையும் தானமார்க்கத்தையும் அறிந்தேன். ஆனால் சிவபெருமானது தத்துவத்தையும், விதிப்படிக் கிரமமாகச் செய்யவேண்டிய அவருடைய பூஜையையும் அவரது சரிதங்களையும் நான் அறிந்து கொள்ளவில்லை. நிர்க்குணமான சிவதத்துவத்தைப்பற்றி, சர்வஞானியான தங்களைத் தவிர வேறு யாரை நான் கேட்கப்போகிறேன்? ஆகையால் சிவபெருமானது மகிமையையும் உலகுய்ய அவரால் அருளப்பட்ட விரதங்களையும் அவற்றால் அவர் மகிழ்ந்து உலகங்களுக்கு எந்தெந்தப் பயன்களைக் கொடுக்கிறாரோ அவற்றையும். சிவலிங்க உற்பத்தியையும் அவர் பார்வதியை மணந்த திருக்கல்யாண மகோத்சவத்தையும் நான் கேட்காத பிறவற்றையும் சொல்ல வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றி முன்பு நான் பலரிடம் பலவிதமாகக் கேட்டிருந்துங் கூட எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. என்றார், நாரதர். தம் கேத சம்பூதரான நாரதர் அவ்வாறு கேட்டதும் பிதா மகனான நான்முகப் பிருமதேவர் சொல்லத் தொடங்கினார்.

நாரதா! எதைக் கேட்பதனால் எல்லா உலகங்கட்கும் எல்லாவிதப் பாவங்களும் ஒழிந்து போகுமோ அத்தகைய சிவபெருமானது மிகச்சிறந்த தத்துவத்தையும் அவருடைய அற்புதமான திருவுருவத்தையும் என்னாலும் மகாவிஷ்ணுவினாலுங்கூட சரியாக அறிய முடியவில்லை. ஆயினும் எனக்குத் தெரிந்தவரையில் சொல்லுகிறேன் கேள் நாரதா! அஸதாத்மகாமகவும்ஸதாத் மகமாயும் இருக்கிற இந்த உலகம் எப்பொழுது கண்ணுக்குப் புலப்படாததாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுது வியாபதி ரூபமான (ஒப்பு நிறைவுருவான) பிரமமாக ஆகவிடுகிறது. அப்பொழுது அந்தப் பிரம்மஸ்தூலமும் (பருமையும்) அல்ல சூக்ஷ்மமும்(நுண்மையும்) அல்ல; உற்பத்தியுடையதும் அல்ல; நாசம் அடைவதும் அல்ல; அது உயர்ந்த சக்தியத்தையும் மிகச் சிறந்த அறிவையும் உடையதாகிறது. அத்தகைய பிரமத்தை யோகியர்கள் எப்பொழுதுமே ஞானக் கண்ணால் பார்க்கிறார்கள். யாவுமாகியும் சிறந்ததாகவும் விளங்கிய அந்தப்பிரமம் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் வழங்கியது சிலகாலம். கழித்த பிறகு, அந்தப் பிரம்மத்திற்கு இச்சை உண்டாயிற்று. அதைப் பிரகிருதி என்றும் மூலகாரணம் என்றும் சொல்வார்கள்.

அந்தப் பிரகிருதி என்பவள் எட்டுக் கைகளையும் விசித்திரமான ஆடையையும் ஆயிரம் பூரணச் சந்திரர்களுக்குச் சமமான முகத்தையும் உடையவள். அநேகவிதமான ஆபரணங்களை அணிந்தவள், அனைத்திற்கும் காரணமானவள், அழகு முதலியவற்றால் அத்விதீயையாகவும் புருஷக் கலப்பால் ஸ்தலதீயையாயும் இருக்கிற அந்த மாயாதேவியானவள், எந்தப் பிரமத்தினடமிருந்து எந்தக் காலத்தில் தோன்றினாளோ, அந்தப் பிரமத்தினிடமிருந்தே அதே காலத்தில் புருஷனும் உண்டானான். அவ்விருவரும் ஒன்று சேர்ந்து யோசனை செய்வதில் ஆவல் கொண்டவர்களாய். நாம் இருவரும் யாது செய்ய வேண்டும்? என்று ஒருவரோடொருவர் யோசித்தார்கள், இவ்வாறு அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது மங்களகரமான ஒரு வானொலி வாக்கு, உங்களுக்குத் தோன்றிய சந்தேகத்தைப் போக்க, நாங்கள் இருவரும் தவஞ் செய்ய வேண்டும் என்று கூறியது. அந்த வாக்கைக் கேட்க பிரகிருதி, புருஷன் ஆகிய இருவரும் மிகக் கடினமான தவம் புரிந்தார்கள். நாரதா! கவனமாகக் கேள்! யோக மார்க்கத்தை முக்கியமாகக் கருதிய அந்தப் பிரகிருதியும், புருஷனும் எவ்வளவு காலம் கழித்து தவ நிலையிலிருந்து கண் விழித்து, ஆஹா நம்மால் எவ்வளவு காலம் தவம் செய்யப்பட்டது? என்று வியந்தார்கள், அப்போது அவ்விருவருடைய தேகங்களிலிருந்து பலவிதமான நீர்ப் பெருக்குகள் உண்டாகி, சகல உலகங்களிலும் வியாபித்தது எல்லையற்றதாகவும் தொட்டவுடனே பாபத்தை போக்குவதுமான அந்தத் தண்ணீரானது பிரமரூபமாக ஆயிற்று.

அப்போது புருஷன் மிகவும் களைப்படைந்து பிரகிருதியுடன் சேர்ந்து, அந்த ஜலத்தில் பற்பலகாலம் பிரியத்தோடு துயில்கொண்டான். அந்த மஹாத்மாவான புருஷனுக்கு, அந்த ஜலசயன காரணத்தால், நாராயணன் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தக் காலத்தில் அவர் களிருவரையும் தவிர வேறொன்றும் உண்டாகவில்லை. பிறகு பரமாத்மா சம்பந்தமான தத்துவங்கள் உண்டாயின பிரகிருதியினிடத்தில் மஹத்தும் அந்த மஹத்தினிடத்தில் ஸத்வம், இராஜஸம் தாமஸம் என்ற முக்குணங்களும் அம்முக்குணத்திலிருந்து ஸப்தம்; ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம்(ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) என்ற பஞ்ச தன் மாத்திரைகளிலிருந்து, ஆகாயம் வாயு, தேயு, அப்பு பிருத்வி என்ற பஞ்ச பூதங்களும் (வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம், என்ற ஐம்பெரும் பருப்பொருட்களும்) அப்பஞ்ச பூதங்களிடமிருந்து, வாக்கு, பாதம், பாணி பாயுரு உபஸ்தம் என்ற கண்மேந்திரியங்களும் (வாய், கால், கை, மலவாய், கண், மூக்கு, செவி என்ற ஞான இந்திரியங்களும்) (ஐம்பொறிகளும்) மனம், புத்தி, சித்தம் என்ற அந்தக் கரணங்களும், (உட்கருவிகளும்) தோன்றின. இத்தத்துவங்களுக்கு இவ்வாறு எண்ணிக்கைப்பட்டது. பிரகருதி புருஷனைத் தவிர அத்தத்துவங்கள் ஜலமாயமாகும். இருபத்து நான்கு தத்துவங்களுடன் சேர்ந்துள்ள அத்தத்துவங்கள் பிரகிருதி புருஷர்களால் ஒன்றாகச் சேர்க்கப்படுகிறது.

அத்தகைய தத்துவத்தைத் தன் சுவாதீனப் படுத்திக் கொண்டு பிரமஸ்வரூபமான ஜலத்தில் நித்திரை செய்யும் தேவனான நாராயணனது நாபியிலிருந்து எண்ணிறந்த இதழ்களுடன் கூடியதாகவும் தாதுக்களால் பரவியதாகவும், பலயோசனை அகல உயரமும், பல கோடி சூரிய காந்தியும் கொண்டதாகவும் பேரழகுள்ள அதி உன்னதத் தாமரை மலர் ஒன்று தோன்றியது அந்தத்தாமரை மலரிலிருந்து ஹிரண்யகர்ப்பனான நான் புத்திரனாக உதித்தேன். நாராயணனுடைய மோகமாயையால் நான் யார்? எங்கிருந்து தோன்றினேன்? நான் யாது செய்ய வேண்டும்? நான் யாருக்கு புத்திரன்? என்னை உண்டு பண்ணியவர்கள் யார்? இவ்வாறான யோசனைகளிலும் சந்தேகங்களிலும் ஆழ்ந்திருந்த எனக்கு ஒன்றும் நிச்சயமாகத் தோன்றவில்லை மறுபடியும் நான் வந்த காரணத்தால் மோகமடைந்தேன், பிறகு இந்தத் தாமரையின் அடிப்பகுதி எங்கு இருக்கிறதோ அங்கு நம்மை சிருஷ்டி செய்தவனும் இருப்பான் அதற்குச் சந்தேகமே இல்லை என்று மனோதிடம் செய்து கொண்டு தாமரை மலரிலிருந்து கீழே இறங்கி அநேக ஆண்டுகள் ஒவ்வொரு நாளத்திலுஞ் சுற்றியும் மோகிதனான நான் உத்தமமான அந்தத் தாமரையின் அடிப்பகுதியைக் காணவில்லை. பிறகு சந்தேகத்தோடு அதன் மலரையடைய விரும்பினேன். அதன் காம்பு விழியாகவே மேல் நோக்கி ஏறினேன். அப்போதும் மலரின் மொக்கை நான் அடையவில்லை. இவ்விதமாக அக்காம்பின் வழியிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன் ஆண்டுகள் பலவாயின க்ஷணநேரம் நான் களைப்படைந்து மூர்ச்சையானேன், அப்போது ஒரு வாக்கு தவஞ் செய்! என்று மங்களகரமாக ஒலித்தது அந்த வானொலியைக் கேட்ட நான், பன்னிரண்டு ஆண்டுகள் தவஞ் செய்தேன். அப்போது, சங்கு, சக்கரம், கதை, ஏந்திய திருக்கரங்களோடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி எனக்கு அருள் புரிவதற்காக காட்சியளித்தார். பிரகிருதியோடு உண்டு செய்யப்பட்ட விஷ்ணுவின் அழகிய ரூபத்தைப் பார்த்த நான் ஆனந்தமடைந்தேன். தங்கமயமான காந்தியோடு வெளிக்கு ஸத்வகுணப்பிரதனாகத் தோன்றியபோதிலும் துஷ்டர்களை நாசஞ் செய்யும் பொருட்டு உள்ளத்தில் தபோகுணப்பிரதனாகவும் நாராயணனாகவும் யார் ஒருவர் என் கண்களுக்குப் புலப்பட்டாரோ, அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவின் மாயை வயப்பட்ட நான், அவரை நீ யார்? என்று சொல் என்று கேட்டேன்.

அவ்வாறு கேட்டதும் விஷ்ணு என்னைப் பார்த்து, நல்ல விரதமுடையவனே! அடா குழந்தாய்! ஸத்வ குணத்தால் வியாபதனாக உன்னை நிர்மாணஞ் செய்தவனும் விஷ்ணுவும் நான்தான் என்பதை அறிந்துகொள்! இவ்விஷயம் உண்மை! என்று புன்னகை செய்தார் அவரது வார்த்தையைக் கேட்டதும் அவரது மாயை வசப்பட்டு, எப்படி குருவானவன் தன் சீடனை எளிதாகப் பேசுவானோ. அவ்வாறு படைப்புத் தொழில் புரியும் என்னைப் பார்த்து அடா, குழந்தாய் என்று சொல்கிறாய். உன்னை மட்டும் இவ்வுலகங்களை உற்பத்தி செய்கிறவன் என்றும் மாயையை வியாபிக்கச் செய்யும் விஷ்ணு வென்றும் உலகங்கள் யாவற்றையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் என்றும் இரட்சிப்பவன் என்றும் நீயும் என் மோகத்தால் இப்படிப் பேசுகிறாய் அதற்காரணம் வேண்டாமா அதைச் சொல் என்று கேட்டேன், அதற்கு அந்த விஷ்ணு நானே உலக காரணன் என்னுடைய சரீரத்திலிருந்து தான் நீயே உண்டானாய் இவ்வுலகங்களை உண்டு செய்வதற்குண்டான என்னை நீ மறந்து விட்டாய். இந்த விஷயத்தில் தவறு உன்னுடையதல்ல. இது எனது மாயையின் செயல் பிரம்மாவோ: உண்மையாகச் சொல்லுகிறேன். முன்பு என்னால் உற்பத்தி செய்யப்பட்ட இருபத்து நான்கு தத்துவங்களும் என்னிடத்திலேயே இருக்கின்றன என்று கூறினார் ஸ்ரீமந்நாராயணனுடைய அந்த வார்த்தையைக் கேட்டு கோபங் கொண்ட நான் நீ யார்? இவ்வளவு பேசும் உன்னையும் உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்! என்றுகூறி அவருடன் தீவிரமாக வாக்கு யுத்தஞ் செய்தேன், இவ்விதம் நாங்கள் இருவரும் வாதப் போர் புரிந்து வன்முறைச் செயலில் ஈடுபட்டபோது எங்கள் இருவருடைய விவாதத்தைத் தீர்ப்பதற்காகவும் எங்களுக்கு ஞானம் தோன்றச் செய்யவும் எங்களிருவருக்கும் நடுவே அதியற்புதமானதொரு ஜோதிலிங்கம் உண்டாயிற்று.

நாரதா! பல்லாயிரங்கோடி ஜ்வாலைகளால் பூரணமாகவும் காலாக்கினிக்கு இணையாகவும் நாசவிருத்திகள் இல்லாததாகவும் ஒப்பற்றதாகவும் வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாததாகவும் பிரகாசம் இல்லாததாகவும் உலகங்களை உண்டு பண்ணத்தக்கதாகவும் விளங்கிய அந்த சோதிலிங்கத்தின் சுடர்களால் மயக்க நிலையடைந்த விஷ்ணு என்னைப் பார்த்து  பிரம்மாவே! நீ ஏன் யுத்தஞ் செய்கிறாய்? நான் ஏன் உன்னுடன் யுத்தம் செய்ய வேண்டும்? நம் இருவருக்கும் மத்தியில் தோன்றிய இந்த லிங்கம் எப்படித் தோன்றியது? யாரால் தோன்றியது? ஆகவே இந்த இடத்தில் மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார். நம் இருவரின் போராட்டத்தையும் நிறுத்திக் கொள்வோம். அக்கினி மயமாக இங்கே தோன்றியுள்ள இந்த ஜோதிலிங்கம் எங்கிருந்து உண்டாயிற்று? அதை முதலில் கண்டறிவோம். நான்கு திசைகளிலும், விண்ணிலும், மண்ணிலும் இதற்குரிய ஆதாரம் எங்கிருக்கிறது என்று தேடிக் காண்போம் அதற்காக நீ அன்னப் பறவையின் உருவத்தை எடுத்துக் கொண்டு காற்றின் வேகத்தை விட விரைந்து சென்று அதி வேகமாக ஆகாயத்தில் புகுந்து ஆராய வேண்டும், நானும் வராக வடிவம் (பன்றியுருவம்) எடுத்த இந்த லிங்கத்தின் அஸ்திவாரத்தையே கெல்லிட்பார்த்து விடுகிறேன்! என்று சொல்லிவிட்டு பன்றி வடிவமெடுத்து பூமியைத் தோண்டித் துளைத்துக் கொண்டு சென்றார் நாரதா! நான் அன்னப் பறவையின் வடிவமெடுத்து வானவெளியில் பறந்து சென்றேன், அழகான சிறகுடன் கூடிய நான் அன்று முதல் ஹம்ஸம் என்றும் ஹம்ஸராஜன் என்றும் வழங்கப்படலானேன். ஹம்ஸ ஹம்ஸ என்று எவனொருவன் ஜெபம் செய்கிறானோ நான் அவனாகி விடுவேன். அன்னவிடிவம் ஏற்ற நான் ஆகாயத்தில் காற்றையும் மனத்தையும் விட வெகு வேகமாக பறந்து சென்றேன். ஸ்ரீ மந் நாராயணனோ. பத்து யோசனை நீளமும் பத்து யோசனை அகலமும்மேருமலை போன்ற உடலும் நாகங்களும் கூர்மையான கோரைப் பற்களும் ஊழிக் காலச் சூரியனுக்குச் சமமான காந்தியும் நீண்ட மூக்கும், பெருங்குரலும், சிறு கால்களும் மனோவேகமும் கொண்ட ஸ்வேத வராக (வெண்பன்றி) வடிவம் பெற்று பூமியைத் தோண்டிக் கொண்டே பாதாளலோகத்திற்குச் சென்றார். அவ்வாறு சென்ற திருமால் ஆயிரம் ஆண்டுகள் வரை அந்த ஜோதிலிங்கத்தின் அடியைக் கண்டறிய முடியாமல் பாதாளலோகத்தில் தேடிக் கொண்டிருந்தார் அன்று முதல் எல்லா உலகங்களிலும் ஸ்வேதவராக கற்பம் தோன்றியது.

3. ஹரி அயனுக்கு வரமளித்தல்

முனிவர்களே! பிரும்மாவும் விஷ்ணுவும் முறையே ஹம்ஸ வடிவையும் வராக வடிவையும் எடுத்துக் கொண்டு ஆகாயத்திலும் பூமியிலும் சஞ்சாரம் செய்யச் சென்ற பிறகு நடந்தவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள்! என்று சூத முனிவர் சொல்லத் தொடங்கினார். பிறகு பிரும்மதேவர் நாரதரைப் பார்த்துச் சொல்கிறார். வராக அவதாரமெடுத்த மகாவிஷ்ணு வெகுகாலம் சுற்றியும் அந்த லிங்கத்தின் அடிவாரத்தின் தடத்தைக்கூட காண முடியவில்லை அந்த ஜோதிலிங்கத்தின் முடியைக் காண்பதற்காக ஆகாயத்திற்கு அன்னமாகப் பறந்து சென்ற நான் விடாமுயற்சியோடு முயன்றேன் அதன் விளைவாக நான் இளைத்துக் களைத்து அந்த லிங்கம் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தேன். அது போலவே ஸ்ரீ மந்நாராயணரும் மிகவும் இளைத்தும் களைத்தும் என்னைப் போலவே புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து சேர்ந்தார். அன்னமாகவும் வராகமாகவும் இருந்த நாங்கள் இருவரும் அந்த லிங்கஸ்வரூபியான சிவபகவானை நமஸ்கரித்தோம். அந்த நிலையில் நாங்கள் இருவருமே அவ்வாறு ஏன் செய்தோம் என்று சிந்தித்தோம் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட நாங்கள் இருவருமே ஒன்றாகச் சேர்ந்து ஒன்றை வணங்கும் நிலை ஏன் ஏற்பட்டது என்று எண்ணினோம். மாயையில் வல்ல மகா விஷ்ணுவும் வித்தையில் வல்ல நானும் அந்த லிங்கத்தை வணங்க வேண்டுமானால் அத்தகைய மாயை அந்த லிங்கத்திற்குரிய பகவானின் மாயை என்பதை அறிந்தோம். இத்தன்மையானது தான் என்று எண்ணக் கூடாததாகவும் பெயரும் செயலும் இல்லாததாகவும் லிங்கம் இல்லாததாகவும் பக்தர்களுக்கு அருள் செய்யும்படி லிங்கத்தின் தன்மையை அடைந்ததாகவும், பரமயோகிகளுக்கும் புலப்படாததாகவும் விளங்கிய அந்த ஜோதிலிங்க உருவத்தை மன உறுதியுடன் வணங்கிய நாங்கள் இருவரும் ஆண்டவனே! அனைத்திற்கும் மூலக்காரணனே! உம் சுயவடிவை நாங்களறியோம்! நீர் யாரோ? அறியவொண்ணாத உம்மை நாங்கள் நமஸ்கரிக்கிறோம்! என்று தோத்திரம் செய்து கொண்டே ஆயிரம் வருடங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்! எங்கள் இருவருக்கும் மகாபிரகாசமாகவும் ஆனந்தமாகவும் மூன்று மாத்திரை லட்சணத்துடன்கூடிய (ப்லுத மாத்திரை) ஓம் என்ற நாதவடிவம் உண்டாயிற்று.

ஓ! நாரதரே! மகா சப்தத்துடன் சேர்ந்த இது என்ன? என்று நாராயணர் யோசித்துவிட்டு எதனிடத்திலிருந்து இந்தச் சப்த முண்டாயிற்றோ அந்தப் பொருளுக்கு நமஸ்காரம் என்று கும்பிட்டு அந்த லிங்கத்தினது தென்பாகத்தில் அழிவில்லாததும் முதலாவதுமான அகாரத்தையும் அதன் வடபாகத்தில் உகாரத்தையும் இவ்விரண்டிற்கும் நடுவில் மகாரத்தையும் உயரத்தில் ஓம் என்னும் சப்த விசேஷத்தையும் பார்த்தார். அவற்றுள் தெற்கிலிருந்த முதலெழுத்தாகிய அகாரம் சூரிய மண்டலம் போலவும், வடக்கிலிருந்த இரண்டாவது எழுத்தாகிய உகாரம் அக்கினியின் காந்தியைப் போலவும் நடுவிலிருந்த மூன்றாவது எழுத்தாகிய மகாரம் சந்திரமண்டலம் போலவும் விளங்க அதன் பேரில் ஸ்படிக கல் போன்ற காந்தியையுடைய தான பரம்பொருளைத் தரிசித்தார்.

லிங்கஸ்ய தக்ஷிணே பாஹே ததாபஸ்யத் ஸனாதனம்
ஆத்யம்வர்ண மஹாரம்து உகாரம் ச்சோத்ரே தத
மகாரம்மத்யத ஸ்சைவ நாதாந்தம் தஸ்பசோமிதி

ஜாக்கிரம் (நனவு). ஸவப்னம்(கனவு), சுக்ஷúக்தி(உறக்கம்) துரியம்(பேருறக்கம்) என்னும் நான்கு அவஸ்தைகளுக்குப் மேம்பட்ட துரிய அதீதமாயும் (உயிர்ப்படக்கமாயும்) நிர்க்குணமாயும், மாயாசம்பந்த விகாரமில்லா ததாயும். ஸஜாதீயம் விஜாதீயம் என்னும் சொந்தமற்றதாயும் இரண்டாவது இல்லாததாயும், உள்வெளி அற்றதாயும் இரண்டாவது இல்லாததாயும், உள்வெளி அற்றதாயும், அதிமத்திய அந்தரகிதமாயும், ஆனந்தத்திற்கு காரணமான பரமானந்தமாயும், சதயமாயும், அழிவில்லாததாயும் முக்கியமாயுமிருக்கிற ஏகாக்ஷரம் என்று சொல்லப்படுகிற பரம் பிரம்மத்தைப் பார்த்தார் அகரமென்னும் பெயரையுடைய பகவான் சிருஷ்டி (படைத்தலை) பண்ணுகிறவர். உகாரமென்னும் பெயரையுடைய பர்க்கர் ஸ்திதி(காத்தல்) தொழில் செய்பவர். மகாரமென்னும் பெயரையுடையவர் (அனுக்கிரகிப்பவர்) நானும் அந்த விஷ்ணுவும் ஆச்சரியம் மிகுந்த மனதோடு அச்சமயத்தில் மிகவும் ஆச்சரியகரமானது அழகுள்ளதும், ஐந்து திருமுகங்களுடையதும், பத்து திருக்கரங்களுடையதும், பச்சைக் கற்பூரம் போன்ற நிறமுடையதும் பல விதமான காந்தியையும் பலவித ஆபரணங்களையும் கம்பீரத்தையும் பராக்கிரமத்தையும் மகா புருஷ லக்ஷணத்தையும் சிறந்த உருவத்தையும் உடையதும் எல்லாவற்றையும் உண்டு செய்யத் தக்கதுமாகிய சிவதத்துவத்தையே பார்த்தோம், உடனே, அவர் தான் எல்லா தேவர்களுக்கும் ஈசனென்று தெரிந்து கொண்டு விதிப்படி வேதாந்தமான ஸத்யோ ஜாதாதி மந்திரங்களினால் விஷ்ணுவானவர் அவரைத் துதித்தார். நானும் அவ்வாறே தோத்திரஞ் செய்தேன் எங்கள் இருவருடைய தோத்திரங்களால் சந்தோஷப்பட்ட மாயா சம்பந்தமற்றவரான மகேஸ்வரன் திவ்விய ஸப்தமயமான ரூபம் கொண்டு அந்த ஜோதிலிங்கத்தில் பெருஞ்சிரிப்புடன் விளங்கினார்.

அகார தஸ்ய மூர்த்தாச லலாடம் தீர்க்க உச்சதே
மகாரம் தக்ஷிணம் நேத்ர மீகாரம் வாமலோசனம்
உகாரம் தக்ஷிணம் க்ரோத்ர மூகாரம் வாமமுச்யதே
ருகாரம் தக்ஷிணம் தஸ்யம் கபோலம் பரமேஷ்டிந
வாமம், கபோலம், ர்ருகாரம் ய ஏந சாயுடே உபே
ஏகாரமோஷ்ட மூர்த்வம் து ஐகார மதரம் விபோ
ஓகாரம் சத தௌகாரம் தநத பங்க்தி சயம் க்ரமாது
அம் அஸ்ச தாலு நீ தஸ்ய தேவ தேவஸ்ய தீமத
காதி பஞ்சாக்ஷராண் ய ஸ்ய பஞ்ச ஹஸ்தாஸ்ச தக்ஷிணே
சாதி பஞ்சாக்ஷராண்யேவம் பஞ்ச ஹஸ்தாஸ்து வாமத
தாதி பஞ்சாக்ஷரம்பாத தாதி பஞ்சாக்ஷரம் தத
பகாரமுதரம் தஸ்ய பகாரம் பார்ஸ்வ முச்யதே
பகாரம் வாம பார்பசுவம் துபகாரம் ஸ்கந்த உச்யதே
மகாரம் ஹ்ருதயம் சம்போ மகாதேவஸ்ய யோகிந
யகாராதி சஹராந்தம் விபோர்வை சப்த தாதவ
ஹகாரம் நாபிரூபம் ஹி ஷகாரம் நாத உச்யதே
ஏவம் சப்த மயம் ரூப மகுணஸ்ய குணாத்மன

இத்தகைய குணசொரூபியாயும், நிர்குணனாயும் சப்தமயமாயும் உள்ள பகவானை என்னோடு திருமாலும் பார்த்து பிரபுவே! எங்கள் சஞ்சலத்தை அகற்ற கிருபை செய்யும்! என்று வேண்டிக் கொண்டோம். எங்கள் பிரார்த்தனைக்கு கருணை புரிந்து உங்கள் மேல் கருணை கொண்டிருக்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார், அதைக்கேட்டு அளவிலா ஆனந்தங்கொண்ட நாங்கள் இருவரும் மகாதேவனே! எங்களுக்கு இஷ்டமான வரங்களைக் கொடுத்தருள்வீர்! என்று வேண்டிக் கொண்டோம், உடனே சிவபெருமான் பிரும்மாவான எனக்குச் சிருஷ்டி செய்யும் வரத்தையும் விஷ்ணுவுக்கு சிருஷ்டி செய்யப்பட்டதைக் காப்பாற்றும் வரத்தையும், உருத்திரனுக்கு சங்கரிக்கும் வரத்தையும் அளித்து, இதுதான் தேவ சம்பந்தம் கொண்ட பிரகிருதி என்று கூறியருளினார். மேலும் இந்தப் பிரகிருதியில் பிரமாணி என்னும் பெயருள்ள சக்தி பிரம்மனையும் லக்ஷ்மி என்னும் பெயருள்ள சக்தி விஷ்ணுவையும், காளி என்னும் பெயரில் ஒரு சக்தி உருத்திரனையும் அடையும். இப்படி பிரும்ம விஷ்ணு: உருத்திரர் ஆகிய மூன்று சுபகரமான சக்திகள் உண்டாக அம் மூன்றுதேவரும் மூன்று சக்திகளுடன் சேர்ந்து படைத்தல்-காத்தல்-அழித்தல் என்னும் சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வார்கள் என்று கூறினார். மேலும் விஷ்ணு மூர்த்தி சிவபெருமானை நோக்கி, சுவாமி! தேவரீர் சொன்ன கட்டளையை நாங்கள் தட்டமுடியுமோ உமது சித்தத்தின்படியே உமது ஆணையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆயினும் உம்மிடம் நான் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டிய தொன்றும் இருக்கிறது! என்று வேண்டினார். அதற்கு பகவான் ஓ விஷ்ணுவே! உமது விசுவாசத்தைப் பாராட்டி மிகவும் இஷ்டத்தை உண்டு பண்ணுகிற ரக்ஷிப்புத் தொழிலை செய்யும் பதவியை உமக்களிக்கிறேன் என்று கூற, உடனே விஷ்ணு வானவர், ஓ; சங்கரா, சர்வ ரக்ஷகா தேவதேவா எனக்குப் பதவி முதலியன வேண்டாம்; தத்துவோபதேசம் செய்தருள வேண்டுகிறேன் என்று கேட்டார். அதாவது தியானித்தல், சேவித்தல் பூஜித்தல் ஆகியவற்றிற்குரிய ஓர் உபதேசத்தைக் கேட்டார். எல்லா வல்லமையும் போதித்தருள சந்தேகம் அறுபடும் சக்தியுள்ள உபதேசத்தைப் போதித்தருள வேண்டுமென்று திருமால் கேட்கவே சிவபெருமானோ பரத்தத்துவமாயும், பிரணவஸ்வரூபமாயுமிருக்கிற மங்களமாயுமிருக்கிற நாதரூபத்தை (ஒலி வடிவை) உபதேசித்தார்.

சிவபிரான் அருளால் நாதரூபத்தை பெற்று விஷ்ணு மூர்த்தி பரதத்துவத்தை நன்றாக அறிந்து நாதரூபத்தையும் தரிசித்து மந்திரத்தின் சுபவழிகளடங்கிய உண்மையையும் அனுஷ்டிக்கும் உபாயங்களையும் அறிந்து கொண்டு, நாதரூபமான பரம் பொருளை மேலே பார்த்தார். ஓம் தத்வமசி என்று சொல்லப்பட்டது ஓங்காரத்தைக் காரணமாகவும் ஐந்து கலைகளோடு கூடியதுமான மந்திரமாகும் இம்மந்திரம் சிவ சம்பந்ததான மஹாவாக்கியம், அது சுத்த ஸ்படிக நிறமானதும், மிக மேம்பட்டதும், சகல அபீஷ்டங்களையும் அளிக்க வல்லதாயும், ஞானஸ்வரூபமாயும் மந்திரரூபமாயும் உள்ளது. இன்னும் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்டதும் காயத்திரி ரூபமுடையதும் தருமார்த் காம மோக்ஷங்கள்(அறம், பொருள், இன்பம், வீடு) என்றும் நான்கு வித புருஷார்த்தங்களைக் கொடுப்பதாயும்; மிருத்தியுஞ்சயம், பஞ்சாக்ஷரம் சிந்தாமணி, தக்ஷிணாமூர்த்தி மந்திரம் என்றும் சொல்லப்பட்ட இந்த ஐந்து மந்திரங்களையும் அடையப் பெற்ற ஸ்ரீவிஷ்ணு பகவான் அந்த மந்திரங்களை ஜபித்தார்.

4. சிவலிங்கத்தின் மகிமை

பிரமதேவர் சொல்லுகிறார்-இப்படி தோத்திர ஜெபம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் முன்னால் சிவபெருமான் காட்சியளித்து அவருக்கு சுவாசமார்க்கமாக அமையும்படி அநேக மந்திரங்களும் அனுஷ்டானங்களும் அடங்கிய வேதத்தைக் கொடுத்தார். சகல வித்யைகளுக்கும் நிலைக்களமாகவும் தலைமையாகவுமுள்ள சிவபிரான், சொன்ன அந்த வேதத்தை மகாவிஷ்ணு பெற்றுக் கொண்டு அந்த வேதத்தையே எனக்கும் சுவாஸமார்க்கமாகக் கொடுத்தார். உன்னதரான சிவபெருமானிடமிருந்து சிவதத்துவ ஞானத்தையும் பெற்றுக் கொண்டு ஸ்ரீமந் நாராயணன். அந்த சிவதத்துவஞானத்தை எனக்கும் கொடுத்தார். இப்படிச் சிவபெருமான் அருளிய வேதத்தைச் சாங்கோ பாங்கமான அறிந்து கொண்டு சிவபெருமானை நோக்கி ஸமஸ்த வித்தைகளுக்கும் ஆதிமூலரானவரே! ஜோதி மயமான சுடரொளியே! தேவரீர் எப்படிச் சந்தோஷம் அடைபவர்? எப்படி உம்மை நான் தியானிக்க வேண்டும்? அடியேன் செய்ய வேண்டிய தியானம் எது? சங்கரராகிய தங்களை மனிதன் எப்படி அடைவான்? பாபங்களை யெல்லாம் பரிகரிக்கக்கூடிய இந்தச் சிவ தத்துவ ஞானத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் உடனே கருணை கடாட்ச மூர்த்தியான சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி நம்மீது தணியாத விசுவாசங்கொண்ட விஷ்ணுவே! இப்போது உன் முன்னால் நாம் எப்படிப் பிரத்தியக்ஷமாக காட்சியளிக்கிறோமோ, அப்படியே பிரத்தியக்ஷமாக இருப்பதாகக் கருதி கொண்டு சகல பலன்களையும் சகலமான மனோ பீஷ்டங்களையும் தந்தருள்வோம்.

எவர் மனத்தில் எப்பொழுது துக்கம் உண்டாகிறதோ அப்போது அவர் இந்த லிங்கமூர்த்தியைப் பூஜித்தால் அந்த துக்கம் ஒழிந்து போகும் பிரம்மன் சதா சிருஷ்டித் தொழிலைச் செய்யவும், நீ ஜீவன்களை ரக்ஷித்துக் காக்கவும், சதா எம்மிடத்தில் மிகுந்த பக்தியும் கொண்டு பூஜை செய்வதால் எல்லா விருப்பங்களையும் கொடுப்பதோ, ஸகல பாபங்களும் நிவர்த்தியாகுமோ அப்படிப்பட்ட பூஜா விதியைப் போதிக்கிறேன்! என்று கூறினார். அவரிடம் விஷ்ணு பகவான் மேலும் வேண்டலானார். சேதனா சேதனமாயும், லோக ரூபமாயும், தேவ தேவர்களுக்குப் பிரபுவாயும் ருக்வேத சாமவேத யசுர்வேத சொரூபமாயும் சிருஷ்டி ஸ்திதி சங்கார கர்த்தாவாயும், ஸர்வாமீஷ்டங்களையுங் கொடுக்க வல்லவராகவும் இருக்கும் பிரபுவே! உம்மை நமஸ்கரிக்கிறேன். ஏகாக்ஷர ரூபமாகி(ஓரெழுத்து வடிவாகி)யும் நாதராகியும் அகாரரூபமாகியும் ஞான ரூபமாகியும், அறிவுருவாகியும் உகார ரூபமாகியும், ஆதி தேவனாகியும், வித்யாஸ்வரூபம் உடையவராகியும் இருக்கும் உமக்கு நமஸ்காரம் மூன்றாவதான மகாரூபமாகியும் சிவமூர்த்தியாகவும் சிரேஷ்டரூபத்தையுடையவராகியும், நீர் உருவாகியும் நீர் வாழ் பிராணிகளைக் காப்பவராகியும், ஜலத்தில் நித்திரை செய்பவராகியும், இருக்கிற உமக்கு நமஸ்காரம்! சித்ரூபமாயும்(அறிவுருவமாகியும்) பிராணி ரூபமாகியும், ஸ்மிருதி ரூபமாகியும், உள்ள உமக்கு நமஸ்காரம்! ஞான ரூபமாகியும், ஞானத்தினால் அடையத் தக்கவராகியும் உயர்ந்த

ரூபமான உமக்கு நமஸ்காரம்! பொன்மயமான கைகளையுடைய வரும், பொன்மயமான இந்திரியத்தை உடையவருமான உமக்கு வந்தனம் விரிசடை தரித்தவரும், யானைத்தோல் போர்த்தியவருமான உமக்கு வந்தனம் மங்கள ஸ்வரூபியாகவும், மங்களத்தையுண்டு பண்ணுபவராயும், பரமாகாய சரீரியாயும் மகாபத்மம் முதலான நிதிகளுக்கெல்லாம் பதியாயும், லிங்காரமாகியும் லிங்க ஸ்வரூபத்தை யுடையவராயுமிருக்கும் உமக்கு வந்தனம். தேஜோரூபியாயும் தேஜஸுக்களுக்கு பதியாகவும்; ஸகல ஸ்வரூபியாயுமிருக்கும் உமக்கு வந்தனம்! அனந்தரும் அனைத்திற்கும் உன்னதரும் நீரை உள்ளே உடையவரும் தவத்தில் ஆசக்தரும், பிரும்ம விஷ்ணுவான எங்களுக்குச் சாமவேத கீதத்தினாலே பாடம் தரத் தக்கவராயும், பரப்பிரம்ம ஸ்வரூபியாகவும், பரமாத்மாவ யும், ரிஷிஸ்வரூபியாயும் சகலத்திலும் வியாபித்தவராயும் பிரபுவாயுமிருக்கிற உமக்கு வந்தனம் அனைத்துமுணர்ந்த ஐயனே; வந்தனம்; வந்தனம்! இவ்வாறு விஷ்ணுபகவான் என்னுடன் சேர்ந்து சிவபெருமானை துதித்துக் கொண்டு நின்றார்(மகாபுண்ணிய உருவாகவும் உன்னதமாகவும் விளங்கும். இந்தத் துதியை எவன் படிக்கிறானோ, கேட்கிறானோ பிராமண சிரேஷ்டர்களைக் கேட்கச் செய்கிறானோ அவன் மகா பாபியாயிருந்தாலும் பிரம பதவியை அடைவான். நாராயணனாகிய விஷ்ணு பகவானால் செய்யப்பட்ட இச்சவ ஸ்தோத்திரத்தைச் சொல்லித் துதிப்பவனுக்கு வளர்பிறை சந்திரன் போல் மங்களம் வளரும்) திருமால் இந்த சிவ ஸ்தோத்திரத்தைச் செய்த பிறகு சிவபெருமான் எங்களைப் பார்த்துச் சொன்னார். உன்னத தேவர்களே! நீங்கள் எமக்குச் செய்த இந்த தோத்திரத்தால், யாம் மனம் மகிழ்ந்தோம், பயத்தைவிட்டு; சிவமூர்த்தியாகிய என்னைப் பிரார்த்தியுங்கள் உங்களை நாம் விரும்பியபடியே மாபெரும் ஆற்றல் வாயந்தவர்களாக உண்டாகியிருக்கிறோம் அதாவது நாமே உங்கள் மூலவராக மாறியுள்ளோம் எமது விருப்பத்தைப் போலவே எமது உருவம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உலகங்களுக்குப் பதிலாக ஸ்வரூபியான பிரம்மன் எமது வலது பக்கத்திலும் விஷ்ணு எமது இடது பக்கத்திலும் விசுவாத்மனான உருத்திரன் என் இதயத்திலும், இப்படி மூன்று அவதாரமாக இருக்கிறீர்கள், உங்கள் மீது எமக்கு அதிக அன்பு இருப்பதால் நீங்கள் எதைச் சிந்தித்தாலும் அதைக் கொடுப்போம் என்று கூறி கருணை நிறைந்த கடாட்சகரான சிவபெருமான் எங்களிருவரையும் அவருடைய திருக்கரத்தில் தொட்டு ஸ்பரிசித்தார் இதனால் எங்கள் உள்ளங்களில் பொங்கிய ஆனந்தத்தை எவ்வாறு விவரிப்பதென்றே  இப்போதுங்கூடத் தெரியவில்லை மகா விஷ்ணுவோ சிவபெருமானுடன் ஐக்கியமாகும் ஆகையால் உந்தப்பட்டு ஆண்டவரே! எங்களுடைய பக்தி உம்மிடம் நிலைத்திருக்க அருள் புரிவதோடு , எங்களுக்குள் எழுந்த வாதத்தை அறிவீரானபடியால் அதையும் நிறைவு படுத்த வேண்டும் என்று கைகுவித்து நின்றார். சிவபெருமான் அவருடைய வேண்டுதலுக்கிறங்கி நெடுமாலே நீரும் பிரம்மனும் எம்மிடம் எப்பொழுதும் நீங்காத பக்தித் தியானத்தில் மூழ்கியிருப்பீர்களாக நீங்கள் பார்த்த சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்ய வேண்டும். நீங்கள் விதிமுறைப்படி செய்யும் பூஜையால் எம்மை நமஸ்கரித்து வரும்போது சுகத்தையடைவீர்கள் என்று திருவாய் மலர்ந்து பூஜை முறைகளை உபதேசம் செய்து எங்கள் இருவருக்கும் விருப்பமான பல வரங்களையும் தந்தருளினார். பிறகு அவர் என்னைப் பார்த்து பிரமனே! நீ நம்முடைய ஆக்ஞையால் சிருஷ்டிகாரனாக இருந்து படைப்புத் தொழிலை செய்து வா என்று நாராயணனைப் பார்த்து, ஓ விஷ்ணுவே! நீ அசையும் பொருள் அசையாப் பொருட்களையும் அண்டத்திலுள்ள சகலஜீ வராசிகளையும் காத்துரட்சிப்பாயாக நிஷ்களமாகிய நாம் சிருஷ்டி, ஸ்திதி சங்காரமென்னும் முத்தொழிலையும் நடத்த வேண்டி பிரம்மன், விஷ்ணு. ருத்திரனென்னும் மூன்றாகப் பிரித்தோம் ஆதலின் அந்த உருத்திர மூர்த்தி எம்முடைய அம்சத்தைக் காட்டிலும் குறைவுப்பட்டதொன்றும் இல்லையாதலால் நீங்கள் செய்யும் தோத்திர பூஜா கிரியைகள் யாவும் எனக்கும் உருத்திரனுக்கும் ஒன்றேயாகும். ஏனெனில் உருத்திர ரூபமும் சிவரூபமும் ஒன்றேயாகும். ஏனெனில் தங்கத்திற்கு வேறொரு தங்கம் என்கிற பெயர் எப்படிப் பொருந்தாதோ ஒரு மண் கட்டியைப் பாத்திரமாகச் செய்தால் மண்கட்டி வேறு பாத்திரம் வேறு என்கிற பொருட்பேதம் எப்படி வரவே மாட்டாதோ, அது போல் உணர்ந்து கொண்டு நீங்கள் உருத்திரனையும் எம்மையும் வேறு படுத்தி எண்ணக்கூடாது. மேலும் நமது ஸ்வரூபம் எல்லோராலும் பார்க்கத்தக்கது விஷ்ணுவே, பிரம்மனே நீயும் உருத்திரனும் என்னுடைய வடிவமேதான் சத்தியமாயும் ஞான ஸ்வரூபியாயும் நாசமற்றதாயும் அநாதியாயுமிருக்கிற எம்முடைய சிவரூபமே இதற்கெல்லாம் மூலமானதும் முதலானதுமாகும். நீங்கள் சிவ ரூபத்திலிருந்து உற்பத்தியானவர்கள் உருத்திரனாக உருத்திர மூர்த்தி உண்டாவதற்கு நமது ஆக்ஞையே காரணம். நாமே உருத்திரனாக அவதரிக்கப் போகிறோம் பிரம்மனே! விஷ்ணுவே இச்சிவ ரூபத்திலிருந்து சிவாம்சமாக இலக்குமியும் சரஸ்வதியும் அவதரிப்பார்கள். இச் சிவரூபமே காரிய நிமித்தமாகச் சிறந்த வேறு ரூபத்தையடைந்து காளியென்னும் பெயரால் அவதரிக்கப் போகிறாள். ஆகையால் விஷ்ணுவே நீ லக்ஷ்மியைத் துணைவியாகக் கொண்டு காத்தல் தொழிலை செய்து வா! பிரம்மாவே! நீ சரஸ்வதியைத் துணைவியாக கொண்டு எப்பொழுதும் சிருஷ்டித் தொழிலை செய்து வா! உருத்திரன் மகாகாளியை இணைத்துக் கொண்டும் சங்கார(அழித்தல்) தொழிலைச் செய்வான் மிகுந்த அறிவுடன் கூடியிருக்கிற நீங்கள் உலகங்களுக்கு இஷ்டங்களை உண்டு பண்ணுகிறவர்களாய் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர். சூத்திரர் என்னும் நான்கு வருணங்களாகவும், பிரமசரியம் கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், ஸந்நியாசமென்னும் நான்கு ஆசிரமங்களாகவும் கூடியிருக்கவும் இன்னும் பல காரியங்களுடன் கூடியிருக்கவுஞ் செய்து சுகத்தை அடையுங்கள். நீங்கள் இருவரும் வெள்ளி, இரத்தினம் தங்கம் மண் இவைகளில் ஏதாவதொன்றில் விளங்கும் லிங்கரூபத்தை உலகங்களுக்குச் சுகத்தை உண்டு செய்யவும் உம்மைப்போல உலகத்தோர் பூஜிக்கவும் எக்காலத்திலும் இடைவிடாத அன்புடன் பூஜை செய்யுங்கள். இச்சிவ பூஜைக்கு எவன் அந்நியாமாயிருக்கிறானோ அவனை நாம் அடைய மாட்டோம் என்று கூறி மறைந்தோர். அது முதற் கொண்டு நாராயணனும் பிரமதேவனும் சிவபூஜை செய்து கொண்டு சிவபக்தியுடையவராக இருந்தார்கள் லிங்கமே சரஸ்வதி, லிங்கமே மகாலக்ஷ்மி, லிங்கமே மகாகாளி, லிங்கமே பிரம்மாதி தேவர்கள் லிங்கமே சிவபெருமான் எவன் ஒருவன் சிவலிங்கத்தின் பிரபாவத்தை சிவ சன்னிதியில் வாசிக்கிறானோ அவனடையும் பலன்களை அளவெடுத்துச் சொல்ல முடியாது இவ்வாறு சூதமாமுனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.

5. சிருஷ்டி தொடங்குதல்

சூதமாமுனிவரே! சிவலிங்க மூர்த்தத்தின் வரலாற்றை நீங்கள் சொல்லக் கேட்டு மகிழ்ந்தோம் இனிமேல் சிவ பெருமான் ஜோதிவடிவமாக இருந்து அர்தர்த்தானமான பிறகு என்னவாயிற்று என்பதையும் சிவபெருமானது பெருமையையும் அவர் உலக சிருஷ்டி செய்த வகையையும் எங்களுக்கு விளக்கமாகக் கூறவேண்டும் என்று சவுனகாதி முனிவர்கள் கேட்டார்கள். உடனே சூதமாமுனிவர், தவஞானிகளே! மஹாப் பிரபுவான சிவ பெருமான் அந்தர்த்தானமான பிறகு, அன்னவடிவில் இருந்த பிரமனும் வராக வடிவில் இருந்த விஷ்ணுவும் செய்த செயல்களைச் சொல்லுகிறேன் என்றார். அப்போது நைமிசாரண்ய வாசிகள் அவரை நோக்கி, சூத புராணிகரே! எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அதைத் தாங்கள் தான் தயவு செய்து நீக்க வேண்டும். அதாவது பிரம்மாவும், விஷ்ணுவும் முறையே அன்னவடிவத்தையும் வராக வடிவத்தையும் ஏன் எடுத்துக் கொண்டார்கள்? என்று கேட்டார்கள். அதற்குச் சூதமாமுனிவர் சொல்லலானார். அன்னப் பறவையோ ஆகாயத்தில் நெடுந்தூரம் பறந்து செல்லும் ஆற்றலுடையது மேலும் பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அது தண்ணீரைப் பிரித்து பாலை மட்டும் பருகும் அறிவாற்றல் வாய்ந்தது ஆகையால் பிரும தேவர் ஞானம் அஞ்ஞானம் என்ற இரண்டையும் தனித்தனியாக உணர்ந்து கொள்வதற்காக அன்னப் பறவையின் வடிவை எடுத்துக் கொண்டார் ஆயினும் அவர் ஞானத்தால் விவேகத்தையடையாமல் இளைப்படைந்து திரும்பினார் வராக வடிவமோ வராககல்பம் என்ற கல்பகால நிர்ணயத்திற்காக உதித்தது மகாவிஷ்ணு எந்த தினத்தில் வராகவுருவத்தை ஏற்றாரோ, அந்தத்தினம் முதல் அந்தக் கல்பம் வராக கல்பம் என்று வழங்கலாயிற்று. அன்ன உருவத்தையும் வராகவுருவத்தையும் அடைந்த பிரம்ம விஷ்ணுவின் விஷயத்தில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் சிவ சித்தப்படியே அவர்கள் இருவரும் அவ்வடிவங்களை ஏற்றார்கள். நாசரஹிதமாகவும் நிஷ்களமாகவும் குணவிகிதமாயுமிருக்கும் சிவபெருமான் எதைச் செய்கிறாரோ, அதன்படியே அனைவரும் விளங்குவார்கள்.

முனிவர்களே! இனிமேலே நடந்தவற்றைக் கேளுங்கள் சிவபெருமான், விஷ்ணுவுக்கு அநேக வரங்களைக் கொடுத்து விட்டு பரந்தாமா! யார் உன்னை எந்த இடத்தில் பார்க்கிறார்களோ அந்த இடத்திலுள்ள அனைவருமே மோகத்திற்கு வயப்படுவார்களாக! அப்படி மோகிக்கப்படுவதாலேயே உன்னை மதிக்கவும் துதிக்கவும் செய்வார்கள். பிரமன் படைக்கும் உலகத்தில் எப்போது துக்கங்கள் உண்டாகிறதோ, அப்போது நீ அந்த துக்கத்தை நீக்கி உலகங்களைக் காப்பாய்! நாமோ ருத்திர மூர்த்தியாகி உலகங்கள் அனைத்தையும் அழிக்கும் சங்காரத் தொழிலைச் செய்வோம். இதில் சந்தேகம் வேண்டாம். விஷ்ணுவே! நீயே எம்மை தியானிக்கத் தக்கவன். நான் பற்பல வடிவங்களோடு விளங்குவதால் உனக்கும் எனக்கும் சிறிதளவும் பேதமுள்ளதாக நினைக்கக்கூடாது என்று கூறிவிட்டு பிரும தேவரையும் மகா விஷ்ணுவையும் தம் திருக்கரங்களில் பற்றிக் கொண்டு உங்கள் இருவரையும் எமக்குச் சமமாகவே உலகத்தார் தியானிப்பார்களாக நீங்கள் இருவரும் சகல மக்களுக்கும் பிராணரூபமாக இருப்பீர்களாக! பிரமனே, நாலாயிரம் சதுர் யுகங்களை ஒரு தினமாகக் கொண்ட நூறு ஆண்டுகளாகிய உன் ஆயுள்வரை, ஸத்வம், முதலிய முக்குணங்களுடன் கூடிய பிராணிகளைப் படைக்கும் தொழிலைச் செய்து வா! என்றார். அப்போது விஷ்ணுமூர்த்தி, மிக்க மகிழ்ச்சியுடன் சிவபெருமானை வணங்கி, கருணைக்கடலாகவும் உலகனைத்திற்கும் நாதனாகவும் இருக்கும் சிவபெருமானே, உம் கட்டளையை ஏற்றுச் செய்ய சித்தமாக இருக்கிறேன். ஆயினும் எனக்கு ஒரு விண்ணப்பம் உண்டு அதையுந் திருச்செவி சாற்றியருள வேண்டும் ஐயனே! எப்போதும் என்னால் தியானிக்கத் தக்கவராக இருக்கிறீர். உம்மைத் துதிப்பதிலிருந்து என் மனமானது க்ஷணகாலங்களும் பிரியாமல் இருக்கவேண்டும் என்னிடம் பக்தியுள்ளவனாக இருந்தும் எவன் ஒருவன் உம்மை நிந்திக்கிறானோ அவனுக்கு நீங்காத நரகஸ்தானத்தையே வாசஸ்தலமாகக் கொடுப்பேன். இது நிச்சயம், எவன் உம் பக்தனோ, அவன் என்னையும் பக்தி செய்கிறேன் என்று நான் மகிழ்ச்சியடைவேன் உம்மால் என் மகிமை வளர்ந்தோங்கியுள்ளது! என்று கூறினார். சிவபெருமானும் பெருமகிழ்ச்சியுடன் அங்கிருந்து மறைந்தார்.

பிறகு உலகங்களுக்கெல்லாம் பிதாமகனான பிரும தேவர் தாம் பெற்ற கட்டளைப்படிச் சிவத் தியானபரராய் விஷ்ணுவையும் பணிந்து அவரால் ஞானம் பெற்று படைப்புத் தொழிலைச் செய்ய இச்சைக் கொண்டார். உடனே மகாவிஷ்ணுவும் அங்கிருந்து மறைந்து போய் விட்டார். பூர்வத்தில் எந்த ஜலம் சிருஷ்டிக்கப் பட்டதோ அந்த ஜலத்தில் பிருமதேவர் அஞ்சலி ரூபமாகத் தமது வீர்யத்தை வெளியிட்டார். உடனே அந்த ஜலத்தில் இருபத்து நான்கு தத்துவங்களோடு கூடிய அண்டம் உண்டாயிற்று முனிவர்களே! அநேக வகையான ஆதாரங்களால் பிரகாசமாக இருந்த அந்த அண்டம் ஜடரூபமாக இருந்தது அதைக் கண்டதும் பிருமன் சந்தேகங் கொண்டு, விஷ்ணுவைத் தியானித்த வண்ணம் பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்தார் அதைக் கண்டு மகிழ்ந்த மகா விஷ்ணு அவர் முன்னால் தோன்றி நான் முகப் பிரமனே! நீ விரும்பும் வரத்தைக்கேள் கொடுக்கிறேன். என்னால் கொடுக்கக் கூடியவற்றைத் தடுப்பதற்கு எதுவுமில்லை தடையுமில்லை! என்றார். அதற்கு பிரமன் அவரை நோக்கி ஸ்ரீஹரியே சிவபெருமான் உமக்கு என்னைக் கொடுத்து விட்டபடியால்; நீர் பிரத்தியட்சமானது யுக்தந்தான் எந்தப்படைப்பை செய் என்று சிவபெருமான் எனக்குக் கட்டளையிட்டாரோ அந்தப் படைப்பை என்னால் செய்ய முடியாமல் அந்தப் படைப்பும் ஜடமாய்ப் போய்விட்டது. ஆகையால் நீர் பிராணவாயு ரூபமாய் அதற்குப் பிராணனை உண்டு பண்ணவேண்டும் என்று கூறினார்; அதைக் கேட்டதும் விஷ்ணுமூர்த்தி சிவாக்ஞையின் படியே செய்ய விருப்பங் கொண்டவராய். ஆயிரந் தலையும் ஆயிரங்காலும் கொண்ட அநந்தரூபம் வகித்து அந்த அண்டத்தை வியாபித்தார். இவ்வாறு சூதமாமுனிவர் நைமிசாரண்ய வாசிகளுக்குக் கூறினார்.

6. பிரும சிருஷ்டி

தவமுனிவர்களே! சகல பாபங்களையும் நீக்கவல்ல சரித்திரத்தைச் சொல்லுகிறேன். கேளுங்கள் என்று சூதமாமுனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார். பிருமதேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாவிஷ்ணு அந்த அண்டத்தில் பிரவேசித்ததும், இருபத்து நான்கு தத்துவங்களையுடைய அந்த அண்டம் பாதாளலோகம் முதல் சத்தியலோகம் வரையிலும் பிராணனுடையதாயிற்று. அந்த அண்டத்தினுள் மகாவிஷ்ணு பிரகாசமாக இருந்தார். தவத்தையே தனமாகக் கொண்ட பிருமதேவரோ சிலகாலம் தவலோகத்திலும் மற்றக் காலங்களில் இதர உலகங்களிலும் இருந்தார். பிறகு பிருமா தமது மனத்தால் சில பிள்ளைகளை முதலில் உற்பத்தி செய்தார் அப்பிள்ளைகளோ ஊர்த்துவ ரேதஸாக (சுக்கிலத்தை இறக்காதவர்களாக) இருந்தார்கள். நான்முக பிரமன் மீண்டும் சிலரைப் படைத்தார் அவர்கள் மிகவும் விரக்தர்களாக இருந்தார்கள் அதைக் கண்டதும் பிரம்மா கோபமும் வருத்தமும் கொண்டு அழுதார் அப்பொழுது அஞ்சாதே! என்று சிவாம்சமான உருத்திரர் தோன்றினார். அவர் பிருமாவை நோக்கி அயனே உனக்கு துக்கம் உண்டானால் அதை நான் நாசஞ் செய்வேன். இதில் சந்தேகம் வேண்டாம் என்றார். எனவே பிரமன் உருத்திர மூர்த்தியே! நீர் சொல்வது விந்தையாக இருக்கிறது. ஆயினும் எமது சிருஷ்டித் தொழிலில் இடையூறு வராதபடி செய்ய வேண்டும்! என்றார் அதற்கு உருத்திரர் அப்படியே சிருஷ்டி இடையூறின்றி முடியக் கடவது என்று சொல்லிவிட்டு எந்தக் காலத்திலும் நிலைத்து திருக்கையிலாயத்தில் சிவசன்னதியை அடைந்தார்.

பிறகு பிரம்மன் ஸப்தரிஷிகளை சிருஷ்டித்தார். நாரதரை தமது மடியினின்று உற்பவிக்கச் செய்தார் தமது நிழலிலிருந்து கர்த்தமரிஷியையும் தமது பெரு விரலிலிருந்து தக்ஷப்பிரஜா பதியையும் உற்பத்தி செய்தார். இவ்வாறு மானஸ புத்திரர் பதின்மர்கள் உண்டானார்கள். பிருகு முனிவரிடத்தில் மரீசியும், அவரிடத்தில் காசிபரும் தோன்றினார்கள். காசிபமுனிவரின் சந்ததியினால் தான் இந்த உலகம் விருத்தியடைந்தது தக்ஷப்பிரஜாபதிக்கு அறுபது பெண்கள் பிறந்தார்கள். அவர்களில் பதின்மூன்று பெண்களைக் காசிப முனிவருக்கு தக்ஷன் திருமணம் செய்து கொடுத்தான் அப்பெண்கள் மூலமாகவே, தேவதைகம் அசுரர்கள் தநுஜான் முதலிய அநேகர் உண்டானார்கள் அவர்கள் உலகங்களிளெல்லாம் பரவினார்கள் தட்சப் பிரஜாபதியின் பெண்களிடம் விருக்ஷங்களும் பறவைகளும், சர்ப்பங்களும் மலைகளும் அநேகவிதமான கொடி வகைகளும் தோன்றின. அப்படைப்புகள் பாதாளலோகம் முதல் சத்திய லோகம் வரையிலும் வியாபித்தன. அவை வியாபிக்காத இடமே இல்லை. தட்சப்பிரஜாபதிக்கு சதி என்ற புதல்வி ஒருத்தி இருந்தாள். அவளை தட்சன் சிவபெருமானுக்குப் பத்தினியாகக் கொடுத்தான். அந்த சதி தேவிக்கும் பவானி என்னும் ஒரு பெயருண்டு உருத்திரமூர்த்தி காளியை மணந்தார். விஷ்ணு இலக்ஷ்மியை மணந்தார் பிருமா சரஸ்வதியை விவாகஞ் செய்துகொண்டார் இவ்விதமாக பிருமா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூம்முர்த்திகளும் தங்கள் சக்திகளுடன் சேர்ந்து முறையே ஆக்கல், காத்தல், அழித்தல், என்னும் முத்தொழில்களை செய்து வரலாயினர்.

முனிவர்களே! எந்த சதி என்பவள் சிவபெருமானை கணவனாக அடைந்தாளோ அவளே மஹாகாளி எனப்படுவாள். அந்த மகாகாளியே பின்புஒருகாலத்தில் பர்வதராஜனின் புத்திரியாகி பார்வதி என்ற பெயருடன் சிவபெருமானைப் பதியாக யடைந்தாள் அந்த பார்வதிதேவியே, காளிகா, சண்டிகா, யத்ரா, சாமுண்டா, விஜயா, ஜயா என்ற பல பெயர்களைப் பெற்றுத் திகழலானாள் மும்மூர்த்திகளும் குணபேதத்தாலேயே முத்தொழில்களைச் செய்கிறார்கள் என்று சூதமாமுனிவர் கூறியதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, ஓ முனிபுங்கவரே மகாகுருவியாஸ பகவான் மூலமாக நீங்கள் யாவற்றையும் அறிந்தவர். நாங்கள் தங்களிடமிருந்து சிவ சரியைதான இன்சுவை அமுதை இன்னும் அருந்த விரும்புகிறோம் மகாகாளி முதலில் தட்சப்பிரஜாபதிக்குப் புதல்வியாகவும் பிறகு பர்வதராஜனின் புத்திரியாகவும் பிறந்த அந்தத் திவ்விய சரிதத்தையும் அந்தப் புண்ணியவதி சிவபெருமானைப் பதியாக அடைந்த கதையையும் மற்ற விஷயங்களையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூத புராணிகர் கூறலானார்!

7. சிவபூஜை விதிமுறைகள்

கேளுங்கள் அறிஞர்களே! இதுவரை சிருஷ்டி நிரூபணத்தைச் சொன்னேன் இனி எந்தச் சரித்திரத்தைக் கேட்டால் பிறவிக்கட்டு ஒழியுமோ அந்த மங்களகரமான சரிதத்தைச் சொல்லுகிறேன். ஒரு சமயம் தட்சப்பிரஜாபதிக்கும் சிவபெருமானுக்கும் துவேஷமுண்டாயிற்று. அதனால் தட்சப்பிரஜாபதி ஆத்திரமும் அகம்பாவமும் கொண்டு சிவபெருமானைத் தவிர மற்ற தேவர்களையும் மகரிஷிகளையும் வரவழைத்து ஒரு யாகம் செய்தான் தட்ச குமாரியும் சிவபெருமானின் பத்தினியுமான தாட்சாயணி அதையறிந்ததும் தன் தந்தை தன்னை யாகத்திற்கு அழைக்காமலிருந்தும் கூட, அவன் செய்யும் யாகத்தைப் பார்க்க விரும்பி, சிவபெருமானிடம் விடைபெற்று, தட்சனது மாளிகை அடைந்தாள். தட்சனோ அவளைத் தன் புதல்வியெனவும் கருதாமல் சிவநிந்தையோடு அவளை அவமதித்து ஏசினான். அதனால் தாட்சாயணி துக்கப்பட்டு அவமானம் தாங்காமல் தன் தேகத்தை நீத்தாள். இந்தச் செய்தியை சிவபெருமான் அறிந்ததும் அளவிலாத கோபங்கொண்டு வீரபத்திரையனுப்பி, அந்த தட்சனின் யாகத்திற்கு இடையூறு விளைவித்து அழிக்கும்படிச் செய்து தேவர் முதலானவர்களைத் தண்டித்தார் அதனால் தேவர் முதலானவர் மனம் வருந்தி குறைகூற சிவபெருமான் மீண்டும் அவர்களை உயிர் பெறச் செய்து திருவருள் புரிந்தார் இஷ்டபோகங்களைக் கொடுத்து அனைவருக்கும் நன்மைகள் இயற்றுபவளான தாட்சாயணியின் தேகத்தில் உண்டான ஜ்வாலையானது ஹிமோற்கிரீயில் விழுந்தது அந்த ஜ்வாலாமுகியே சகல இஷ்டங்களையும் கொடுக்கவல்லது. பிறகு அந்த ஜ்வாலாமுகி இமய மன்னனான பர்வதராஜனுக்கும் அவனுடைய மனைவியான மேனை என்பவளுக்கும் புத்திரியாக அவதரித்தாள். அந்த ஜ்வாலமுகியே பர்வதத்தில் அவதரித்த காரணத்தால் பார்வதி என்னும் பெயரைப் பெற்றாள் அவள் சிவபெருமானை விரும்பிவழிபட்டுநன்றாகப்பூஜை செய்து, அவரையே தன் நாயகனாக அடைந்து தன்னை அண்டிய அனைவருக்கும் விருப்பங்கள் அனைத்தையும் வழங்குகிறான் நீங்கள் எதைக் கேட்டீர்களோ, அதைச் சொல்லிவிட்டேன். இந்தச் சரிதத்தைக் கேட்பவர்களுடைய சகல பாபங்களும் நீங்கள்! என்றார்.

அப்போது நைமி சாரண்யவாசிகளான முனிவர்கள் அவரை நோக்கி சூதமா முனிவரே! சிவ சரிதத்தைக் கேட்க நாங்கள் மிகவும் ஆவலுள்ளவராக இருக்கிறோம் சிவபெருமானை எப்படிப் பூஜிக்க வேண்டும்? முதற்காலத்தில் அம்முறைப்படி பூஜித்தவர்கள் யார்? அப்பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் யாருக்குப் பிரசன்னராகி என்னென்ன பலன்களைக் கொடுத்தார்? பார்வதி தேவியார் செய்த தவம் அவரது திருமணம் திரிபுராசுரவதம் ஜ்யோதிர் லிங்கங்களின் உற்பத்தி ஜ்யோதிர் லிங்கங்கள் எத்தனைவிதம், அவற்றைத் தரிசிப்பதால் ஏற்படும் பலன்கள், நான்குவர்ணத்தார்கள் எப்படிச் சிவபூஜை செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் எவ்வாறு உங்கள் குருவான வியாச மகரிஷியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டீர்களோ அவ்வாறே விளக்கமாக எங்களுக்கும் சொல்ல வேண்டும் என்றார்கள். சூதமாமுனிவர் முறையாக பதில் சொல்லத் துவங்கினார்? ஞானசீலர்களே! நீங்கள் கேட்ட விஷயங்களை முன்பு ஒரு முறை ஸநத்குமாரரிடம் வியாசமுனிவர் கேட்டிருக்கிறார். உபமன்யு முனிவரும் கேட்டிருக்கிறார். பிறகு வியாச முனிவர் ஸநத்குமாரரிடம் சிவபூஜா விதிமுறைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு உலக நன்மைக்காக எனக்குச் சொன்னார், முனிவர்களே! எந்த விஷயமானது ஸ்ரீகிருஷ்ணனால் மகாத்மாவான உபமன்யு முனிவரிடம் கேட்கப்பட்டதோ, அதைச் சொல்கிறேன். அதைச் சுருக்கமாக என்புத்திக்கு எட்டியவரையிலும் சொல்கிறேன். இதை விரிவாகச் சொல்ல வேண்டுமானால் பல ஆண்டுகள் ஆகும் ஆகவே சுருங்கச் சொல்லுகிறேன் கேளுங்கள். 

சுகம் பெற விரும்புகிறேன் அவனது சர்வ இஷ்டங்களும் கைகூடி வருவதற்காக அநாதியான சிவரூபத்தை மிகவும் பக்தியோடு பூஜிக்கவேண்டும் ஒருவன் சிவபெருமானை எத்தனைக் காலம் பூஜை செய்யவில்லையோ, அவனுக்கு அத்தனைக் காலமும் தரித்திரம், ரோகம், துக்கம், சத்ருபயம், முதலிய நான்கு வகையான பாபங்கள் சூழ்ந்து கொண்டு மிகவும் தொல்லைப்படுத்தும் சிவபகவானை பூஜித்தவுடனேயே எல்லாவிதமான துன்பங்களும், மறைந்து போகும் சுகத்திற்காகவும் சந்ததிக்காகவும் கிடைத்த தற்கரிய மனிதப் பிறவியை அடைந்தவன் மகாதேவனைப் பூஜிக்க வேண்டும், பூதேவர்கள் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர் ஆகிய நான்கு வருணத்தார்களும் சாஸ்திரபடி முறையாகப் ப்ராஹ்மம் முகூர்த்தத்தில்! எழுந்து மேகவர்ணரே நான்கு திருக்கைகளையுடையவரே பக்தர்களின் பயத்தைப் போக்குபவரே, உன் உழகான உருவம் என் மனதில் எப்பொழுதும் வாபம் புரியவேண்டும் என்று விஷ்ணுவையாவது குருவையாவது ஸ்தோத்திரம் செய்து பிறகு தீர்த்தங்களை ஸ்மரணை செய்து எழுந்து தென்திசையில் ஓர் ஏகாந்தமான இடத்தில் மலஜலம் கழித்து விட்டு சுத்தமான மண்ணைப் பிராமணன் ஐந்து தடவையும், க்ஷத்திரியன் நான்கு தடவையும் வைசியன் மூன்று தடவையும், சூத்திரன் இரண்டு தடவையும் கிரமமாக எடுத்து கைகால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். இந்த மிருத்க்ரஹண சவுசாதி விஷயங்களில் நான்காவது வர்ணத்தாரைப் போலப் பெண்களும் செய்ய வேண்டும் பிறகு வேதியின் பன்னிரண்டு அங்குல அளவும் க்ஷத்திரியின் பதினொரு அங்குல அளவும் வைசியின் பத்து அங்குல அளவும் சூத்திரன் ஒன்பது அங்குல அளவும் கொண்ட பற்குச்சிகளால் ஸ்மிருதிகளில் சொல்லியபடி கைக்கொண்டு காலதோஷத்தை விசாரித்து பல் துலக்கி தீர்த்தங்களில் எந்தெந்தக் குலத்தினருக்கு எப்படியெப்படி ஸ்நானம் செய்ய வகுத்திருக்கிறதோ, அவ்வாறே தேசகாலங்களுக்கு மாறுபாடில்லாமல்  மந்திரங்களுடன் நீராடி சூரிய உதயத்திற்கு மூன்று நாழிகைக்கு முன்பே செய்ய வேண்டும்.

ஸ்நானம் செய்த இடத்தில் முதலில் ஆசமணியம் செய்து விட்டு தூய ஆடை உடுத்தி ஜன நட மாட்டமில்லாமல் இடத்தில் சந்தியாவந்தனம் முதலானவற்றை அந்தந்த ஜாதியாருக்கு விதித்துள்ளபடி செய்து, பிறகு பூஜையைத் துவக்க வேண்டும். பூஜைக்கிரம்ம-மனதை ஒருமுக, நிலைப்படுத்திக் கொண்டு பூஜா கிருஹத்தில் பிரவேசித்து, பூஜைக்குரிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு முறையாக சிவபெருமானை பூஜைசெய்ய வேண்டும் முதலில் விநாயகரையும் பிறகு துவார பாலகர்களையும் பிறகு திக்பாலகர்களையும் பூஜித்துவிட்டுப் பிறகு பூஜா திரவியங்களின் அருகே, அஷ்டதளபீடமாவது செய்து கொண்டு அதில் உட்கார்ந்து சிவபகவானைப் பார்த்த வண்ணம் அடிக்கடி கைகளைச் சுத்தஞ் செய்து கொண்டு மூன்று முறை ஆசமனம் செய்து மும்முறை பிரணாயாமம் செய்ய வேண்டும். ஐந்து முகங்களும் பத்துப் பூஜங்களும் கொண்டவராயும், நிர்மலமான ஸ்படிகக் கல்லுக்கு ஒப்பான ஒளியையுடையவராயும் ஸர்வாபரண பூஷிதராயும், புலித்தோலைப் போர்த்தியவராகவும் இருக்கும். சங்கரரைத் தியானித்து அப்பெருமானின் ஸாரூப்யத்தை(இறைவனுருவை)அடைந்து மனிதன் தன் பாவத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். பரமேஸ்வரனைப் பூஜிக்கும் போது மந்திரத்தால் தேகசுத்தி செய்து கொண்டு கிரமமாக மூல மந்திரத்தை நியாஸம் செய்ய வேண்டும் எல்லாவிடத்திலும் ப்ரணவ மந்திரத்தால் ஆறு அங்க நியாசங்களையும் செய்ய வேண்டும். பிறகு சங்கல்பஞ் செய்து கொண்டு பூஜைக்கு ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் ஆசமனத்திற்காக ஏற்பாடுசெய்தபாத்திரத்தையும் நவ கும்பங்களையும் சாஸ்திரப்படி ஸ்தாபிக்க வேண்டும். அவற்றை தர்ப்பைகளால் முடியவைகளாய் ஸ்தாபித்து தீர்த்தத்தால் புரோக்ஷணம் செய்து அப்பாத்திரங்கள் அனைத்திலும் குளிர்நீரை சேர்க்க வேண்டும், புத்திமானானவன் சாஸ்திரத்தால் பார்த்து ப்ரணவ மந்திரத்தால் இனி குறிப்பிடும் பொருட்களை அந்தந்தப்பாத்திரங்களில் முறையே சேர்க்க வேண்டும். பாத்ய பாத்திரத்தில் விளாமிச்சை வேரும் சந்தனமும், ஆசமனிய பாத்திரத்தில் ஜாதி சுகந்தை, வெட்டிவேர் கர்ப்பூரம் ஆகியவற்றைப் பொடி செய்து சேர்க்க வேண்டும். மற்ற பாத்திரங்களில் சந்தனத்தையும் ஏலத்தையும் சேர்க்க வேண்டும். சிவபெருமான் பக்கத்தில் நந்தீசுவரரை பூஜை செய்ய வேண்டும். வாசனை பொருட்களாலும் நறுமண மலர்களாலும் தூப தீபங்களாலும் இன்னும் பல விதங்களாலும் சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். அப்போது உபாசகன் மிகவும் மகிழ்ச்சியோடு லிங்கத்திற்குச் சுத்தி செய்து ப்ரணவம் முதல் நாமோந்தமாகிய சிவமந்திரங்களை ஜபித்து பத்மாசனம் செய்து கொள்ள வேண்டும் அதன் கிழக்குப்பக்கம் அணிமா மயம் தெற்கு லகிமா மயம், மேற்கு மகிமாமயம், வடக்கு பிராப்தி ஸ்வரூபம், அக்கினி பக்கதனம்-பராகாமிமயம், நிருதிபக்கம்-ஈசத்வமயம், வாயுதிக்குதளம் வசித்வஸ்வரூப, ஈசானியபக்கம் ஸர்வக்ஞத்தமயம் கர்ணிகையில் சந்திரனும், சந்திரனுக்கு கிழக்குப் பக்கத்தில் அக்கினித் தேவனும் திக்குகளின் இறுதியில் தர்மாதிகளையும் ஸ்தாபிக்க வேண்டும், நான்கு திக்குகளிலும் பிரகிருதி மஹத் அகங்காரம் தத்விகாரம் என்னும் நான்கினையும் கர்ணீகா ரூபமான சந்திரனின் அருகே ஸத்வம், ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.

முனிவர்களே! அதன் பிறகு ஸத்யோஜாதம், பிரபத்யாமி என்று பரமேஸ்வரனை ஆவாஹனம் செய்து வாமதேவமந்திரத்தால் இரத்தின சிங்காதனத்தில் எழுந்தருளச் செய்து ருத்தர காயத்திரியால் ஸாந்நித்யம் செய்து அஹோர மந்திரத்தால் நிரோதம் செய்து ஈ ஸாநஸ்ஸர்வ வித்யாநாம முதலான மந்திரங்களால் சிவ மூர்த்தத்தைப் பூஜிக்க வேண்டும்.

சத்யோ ஜாத மந்திரம்

சத்யோ ஜாதம் பிரபத்யாமி
சத்யோஜாதவை நமோநம
பவே பவேனாதி பவே பவஸ்வமாம்
பவோத் பவாய நம

வாம வேதமந்திரம்

வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நமோ
ஸ்ரேஷ்டாய நமோ
ருத்ராய நமோ
காலாய நமோ: கலபி கரணாய நமோ
பலபி காரணாய நமோ
பலாய நமோ
பலப் பிரமதமனாய நமோ
மனோ மனானீய நம

ருத்ர காயத்திரி

தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

அஹோர மந்திரம்

அஹோர அகோ ரேப் யாத கோரேப்யோ
கோர கோர தரே ப்ய
ஸர்வேப்ய ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே-அஸ்து
ருத்ர ரூபேப்ய

நிரோதம்

ஈஸான சர்வ வித்யானா மீஸ்வர சர்வபூதானாம்
ப்ரம்மாதி பிர் பிர்மனாதி பதிர் பிரம்மா
சிவோமே அஸ்து சதா சிவோம்

சிவபெருமானுக்குப் பாத்தியம் (திருவடி கழுவு நீர்) அர்க்கியம் (மந்திர நீர் இறைத்தல்) ஆசமந்யம் (உட்கொள் நீர்) கொடுத்து வாசனைத் திரவியம் சந்தனம் முதலியவற்றோடு கூடிய தீர்த்தத்தால் மகா நியாச பூர்வக ஏகாதச ருத்ர மஹாபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்ச கவ்யத்திற்கு சொல்லியுள்ள முறைப்படி மந்திரித்து பிரணவ மந்திரத்தால் கவ்யஸ்நானம் செய்விக்கவேண்டும், தீர்த்தம், பால், தயிர், தேன், கரும்புரஸம் நெய் இவற்றாலேயும் அபிஷேகம் செய்ய வேண்டும். கஸ்தூரி கந்தம். குங்குமப்பூ பச்சைக்கற்பூரம் முதலிய புண்ணியப் பொருட்களாலும் மந்திரத்தோடு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு தூய்மையான மந்திரங்களால் அபிமந்திரித்து, ஜலகும்பங்களில் வெள்ளிய பரிசுத்தமான துணிகளில் வடிகட்டிய நன்னீரை அபிஷேகிக்க வேண்டும் இந்தப் பூஜையை சிவபெருமானுக்குத் தூரத்திலிருந்து கையினால் எட்டிப் பூஜிக்காமல் மிகவும் அருகிலிருந்து செய்ய வேண்டும் தர்ப்பை, நாயுருவி, ஜாதி, சண்பகம், பாடலம், வெள்ளலரி, மல்லிகை, கமலம், உற்பலம் முதலான பற்பல அபூர்வமலர்களை ஜலத்தோடு சேர்த்தும்; விதவிதமான பாத்திரங்களாலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பயன்கள் அனைத்தையும் வழங்கக் கூடிய இந்தச் சிவபூஜையை மந்திரப் பூர்வமாகச் செய்தல் வேண்டும். எம்மந்திரங்களால் ஒரு தடவையாவது சிவலிங்கத்தை அர்ச்சிக்க வேண்டுமோ அம்மந்திரங்களை சர்வ பல சித்தியை முன்னிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

8. சிவ பூஜா மந்திரங்கள்

பவமாநாதி மந்திரங்களாலும் வாங்மீயக மந்திரத்தாலும் சூத்திர மந்திரத்தாலும் சுபமான ஸ்ரீசூக்தத்தாலும் ரஜரீ சூக்தத்தாலும் நிலருத்ரத்தாலும் மங்களகரமான சமகத்தாலும் பிரணவத்தாலும் அதர்வண வேத சிரஸ் என்னும் மந்திரத்தாலும் தச்சாந்தி மந்திரத்தாலும் பாருண்டத்தாலும் ஆரூணத்தாலும் உயர்வான ஸாமத்தாலும் தேவவ்ருதம் என்னும் ஸாமத்தாலும் ராந்தர மந்திரத்தாலும், புஷ்ப மந்திரத்தாலும் புருஷசூக்தத்தாலும் மிருத்யுஞ்ஐய மந்திரத்தாலும் சிவபஞ்சாக்ஷரத்தாலும் ஆயிரம்-அல்லது நூற்றியெட்டு ரந்த்ரங்களையுடைய பூர்ணகும்பங்களால் வேத மார்க்கங்களினாலாவது, சிவநாமங்களாலாவது  அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு சந்தனம், புஷ்பம் முதலியவற்றைச் சாற்றி; ப்ரணல மந்திரத்தால் முகவாஸனைகள் கொடுக்க வேண்டும். பிறகு ஸ்படிக மாயமாயும் நிஷ்களமாயும் அக்ஷரமயமாயும் அனைத்துலகங்களுக்கும் காரணபூதமாயும் சகலலோக ஸ்வரூபமாயும் உத்தமமாயும் இந்திரன், பிரமன், விஷ்ணு, ருத்திரன் முதலான தேவர்களுக்கும் புலப்படாததாயும் வேதமறிந்தவர்களாலே வேதாந்தத்தில் கோசரிக்கவில்லை என்று சொல்லப்படுவதாயும், சிருஷ்டி ஸ்திதிநாசம் என்னும் மூன்றும் அற்றதாயும் சகலவிதமான நோய்களுக்கெல்லாம் மருந்தாயும் சிவதத்துவம் என்று பிரசித்திமாயும் சிவலிங்கத்தில் வைக்கப்பட்டும் இருக்கிற சிவபகவானை, லிங்கத்தின் சிரஸில் ப்ரணவத்தால் தூப தீபம் தாம்பூலம் முதலானவற்றை நீராஞ்சனம் சுற்றுவது போலச் சுற்றி நமஸ்காரம் செய்து துதித்து பலவித மந்திரத்தால் பூஜை செய்ய வேண்டும். ஸ்தோத்திரம் ஜபம் நமஸ்காரம் பிரதக்ஷிணம் ஆகியவற்றையும் விதிப்படிச் செய்ய வேண்டும் அர்க்கியம் கொடுத்து திருவடிகளில் மலர்களைச் சமர்ப்பித்துத் தேவர்களுக்கு அதிபரான சிவபிரானை மனத்தால் வணங்கி, பூஜை புரிய வேண்டும். கையில் மலர்களை எடுத்துக் கொண்டு எழுந்து இருகரங்களையும் கூப்பிநின்று நான் குறிப்பிடும் மந்திரத்தால் ஈஸானனான சிவபெருமானைப் பிரார்த்திக்க வேண்டும்.

அஞ்ஞானாத்ய திவாக்ஞானாது ஜபபூஜாதிகம்யா
கிருதம் ததஸ்து ஸபலம் க்ருபயா தவ சங்கர

சுவாமி! சங்கரா! என் அறியாமையாலோ அல்லது அறிவாலோ ஜபம் பூஜை முதலியவற்றைச் செய்திருந்தாலும் அவை உம் திருவருளால் சித்திக்க வேண்டும் என்று சொல்லி அம்மலர்களைச் சிவபெருமானது திருமுடியில் சேர்க்க வேண்டும். பிறகு மங்களாஸ்பதமான அநேக ஆசீர்வாதங்கள் செய்து பரமசிவன் மீது மார்ஜனம் (நீரால் புரோக்ஷணம்) செய்து தன் அபராதங்களைப் பொறுத்தருள வேண்டும் என்று துதித்துக் கும்பிட வேண்டும் பிறகு எல்லாவிதமான பாபத்தோடு கூடியவனாக நினைத்து மீண்டும் துதிக்க வேண்டும்.

சிவே பக்தி சிவே பக்தி சிவே பக்திர் பவே பவே
அந்யத சரணம் நாஸ்தி த்வமேத சரணம் மம

பிறவிகள் தோறும் எனக்குச் சிவபெருமானிடம் பக்தி இருந்து வரவேண்டும் சிவபக்தி இருக்க வேண்டும். சிவபெருமானிடம் பக்தி இருக்க வேண்டும். எனக்கு வேறு ரக்ஷணம் இல்லை நீயே ரக்ஷணம் என்று இவ்வாறு சர்வ ஸக்தியையும் கொடுக்கும் மகேஸ்வரனைப் பிரார்த்தனை செய்து பக்தியுடன் வாத்ய நாதங்களாலும் வழிபட வேண்டும். பிறகு பரிவாரணங்களோடு சேர்ந்து சங்கர பகவானை வணங்கித் தொழுதுவிட்டு மகிழ்ச்சியுடையவனாய் சுகமாகத் தன் வேலைகளைத் துவக்கலாம். இவ்வாறு தினந்தோறும் எவன் சிவபக்தியுடையவனாகச் சிவபூஜை செய்கிறானோ அவனுக்கு அடிக்கடி எல்லாவித நற்பயன்களும் உண்டாகும். மனதில் நினைத்தது ஆறு மாதங்களில் நிறைவேறும் நோய், கவலை, ரோகம், பயம், சூன்யம். கோணல் வியாபாரம், விஷம்  இவை போன்ற எத்தகைய துன்பம் வந்தாலும் நன்மை விளைவிப்பவரும் கருணாமூர்த்தியுமான சிவபெருமான், அத்துன்பங்களை அகற்றி விடுவார். மேலும் சிவபெருமானை வழிபாடு செய்வதால் மனிதனுக்கு சுபங்கள் விளையும் அவனது குணங்கள் சுக்கில பக்ஷத்துச் சந்திரனைப் போல் விருத்தியடையும் வியாச பகவானிடம் இவ்வாறு நான் கேட்ட அரிய பெரிய விஷயங்களை உங்களுக்காகச் சொன்னேன். இனி எல்லா பாவங்களையும் நீக்கக் கூடிய எந்த சரிதத்தை நீங்கள் கேட்கிறீர்களோ அந்த சரிதத்தை சாஸ்திர பூர்வமாகச் சொல்லுகிறேன் என்று சூதமாமுனிவர் கூறினார்.

9. தாராசுரன் பெற்ற வரமும் தேவர்கள் துயரமும்

நைமிசாரண்ய வாசிகள், சூதமாமுனிவரை நோக்கி; மாபெரும் பாக்கியசாலியான வியாசரது மாணவரே! சிவனாரின் திரிபுர வெற்றியைப் பற்றிக் கூற வேண்டும். அந்தத் திரிபுரத்தின் வடிவம் என்ன? அந்தத் திரிபுரத்திலிருந்த படைபலம் எவ்வளவு? சிவபெருமானது சேனை எவ்வளவு? இவற்றை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும். என்றார்கள். சூதமுனிவர் சொல்லலானார்நற்பேறுள்ள சிவநேசச் செல்வர்களே! எந்தக் கதையைக் கேட்டால், உலக மக்களின் துயரம் நீங்குமோ, அத்தகைய புண்ணிய சரிதத்தையே நீங்கள் கேட்டீர்கள். மாயாஜாலம் செய்பவரையும் மயங்க வைக்கும் மாபெரும் மாயனான தாரன் என்ற அசுரனுக்கு தாரகன் என்ற ஒரு புதல்வன் இருந்தான். அவன் தன் ஆசிரியனின் உத்திரவைப் பெற்று மது என்ற மிகவும் அழகான வனத்துக்குச் சென்று தேவர்கள் அனைவரையும் வெற்றி பெறுவதற்கு அருந்தவஞ் செய்ய எண்ணினான் இருகைகளையும் ஒரு காலையும் தூக்கிக் கொண்டும் சூரியனைப் பார்த்துக் கொண்டும் நூறு ஆண்டுகள் கடுந்தவஞ் செய்தான் பிறகு மேலும் நூறு ஆண்டுகள் பெருவிரலை ஊன்றிக் கொண்டும், நூறு ஆண்டுகள் வரை வெறும் நீரை மட்டும் உட்கொண்டும், நூறு ஆண்டுகள் வெறும் காற்றை மட்டும் உட்கொண்டும், நூறு ஆண்டுகள் ஜலத்தில் இருந்து கொண்டும், நூறு ஆண்டுகள் வெய்யிலிலும், நூறு ஆண்டுகள் பஞ்சாக்கினியின் மத்தியிலும் நூறு ஆண்டுகள் மரங்களின் கிளைகளைப் பிடித்துக் கொண்டும், நூறு ஆண்டுகள் அதோமுகமாகவும் இருந்து கேட்பவர்கள் மனமும் அஞ்சத்தக்க வகையில் அகோர தபஸ் செய்து வந்தான் அதனால் அவனது சிரத்திலிருந்து மகத்தான தேஜஸ் கிளம்பியது அந்த தவாக்கினி தேவர்களின் உலகங்களை சுட்டெரிக்கலாயிற்று. தேவேந்திரன் கூட எங்கே இந்த அசுரன் தன் பதவியைக் கைப்பற்றி விடுவானோ என்று பயப்பட்டான். வெப்பத்தால் மிகவும் துயரத்தையடைந்த தேவர்களோ; இதென்ன விந்தை! சிவபெருமான் அகாலத்தில் பிரம்மாண்ட சம்ஹாரஞ் செய்யப் போகிறாரோ? என்று சந்தேகப்பட்டார்கள் பிறகு, யாரோ ஓர் அசுரன் பிரமதேவனைக் குறித்து அத்தகைய பயங்கரமான தவத்தைச் செய்கிறான் என்று தெரிந்தது.

உடனே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அரசனுக்குப் பிரமதேவர். கொடுக்கக்கூடாத அரும்பெரும் வரங்களைக் கொடுக்கா விட்டாலும் கூட அவனால் எல்லாவுலகங்களுக்கும் அனர்த்தம் விளையும், அப்படியே பிருமா வரங் கொடுத்தாலும் அவன் அசுரனாகையால் அவனால் உலகங்களுக்கு நாசமும் ஏற்படும் ஆகையால் நான்முகப் பிருமாவிடமே இதைப் பற்றி கேட்போம் என்று ஆலோசித்துக் கொண்டு விரைந்து சென்று அவரைக் கும்பிட்டுவிட்டு தாரகாசுரன் செய்யும் அகோர தவத்தைப்பற்றி அறிவித்தார்கள் அவர்கள் மூலம் விஷயமனைத்தையும் பிருமதேவர் தெரிந்து கொண்டு. அந்த தாரகாசுரன் கடுந்தவஞ் செய்யும் இடத்திற்கு அன்ன வாகனத்தில் சென்று, அவனுக்கு காட்சியளித்து, உன் கடினமான தவத்தைக் கண்டு நாம் மகிழ்ந்தோம். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் தருகிறோம்! என்றார்.

உடனே, தாரகாசுரன் சிருஷ்டி கர்த்தாவை வணங்கித் துதித்து சதுர்முகரே! தேவர்களுக்கு இறைவரான பிரமதேவரே நீர் எனக்கு வரங்கொடுக்கத் தகுந்தவர் என்றால் இரண்டு வரங்கள் வேண்டும் அவையாவன உம்மால் படைக்கப்பட்ட இந்த அகிலத்தில் உடல் வலிமையால் எனக்கு இணையான புருஷன் வேறு எவனும் இல்லை என்று சொல்லும்படியான மாபெரும் வலிமை எனக்கு வாய்க்க வேண்டும் சிவபெருமானின் வீரியத்தினால் உண்டாகும் புத்திரன் எப்போது சேனாதிபதியாக வந்து என் மீது அம்பு எய்வாரோ அப்பொழுதுதான் எனக்கு மரணம் என்பதே உண்டாக வேண்டும் என்று வரம் கேட்டான் பிருமா உடனே அவன் விரும்பிய வரங்களைக் கொடுத்துவிட்டு தமது சத்ய லோகத்திற்குத் திரும்பிச் சென்று தாரகாசுரனின் தபோ பலத்தால் உண்டான தாபத்தைத் தணிவித்துக் கொண்டார் பிறகு, தாரகாசுரன் தவச்செயல்  நீங்கிப் பெரும் வரங்கள் பெற்ற பெரு மகிழ்ச்சியுடன் சோணித புரியை அடைந்தான். அப்பொழுது எங்குமுள்ள அசுரர்கள் அனைவரும் ஒன்று கூடி தாரகாசுரனே! மூவுலகிலுமுள்ள அசுரர்களான எங்களுக்கெல்லாம் நீயே தலைமையரசனாக இருக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதன் பின்னர் அசுரர்களால் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு மணிமகுடம் சூடி தாரகாசுரன் மன்னனானான், பூமியில் ஒருவரும் செய்யாத ஆக்ஞைகளையெல்லாம் நடத்தச்செய்தான் பிராமணர்கள், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், விஜாதியானவர்கள் தானவர்கள். யக்ஷர்கள் கிம்புருஷர் ஆகியபலரும் அந்த அசுரனால் மிகவும் துன்புறத்தப்பட்டார்கள் அவர்களிடமுள்ள பொருள்களை யெல்லாம் தாரகாசுரன் பறித்துக் கொண்டான் இந்திரன் முதலான தேவர்களெல்லாம் அரும்பெரும் செல்வங்களை அவனுக்குக் கப்பமாகச் செலுத்தினார்கள் தேவேந்திரன் உச்சைஸ்ரவம் என்ற பட்ட குதிரையும் யமதர்மனின் ரத்தினமயமான தண்டமும் குபேரனின்கதையும் நவநிதிகளும், வருணதேவனின் உத்தமமான குதிரைகளும் மகரிஷிகளின் காமதேனு என்ற தெய்வீகப்பசுவும் அவ்வசுரனிடம் போய்ச் சேர்ந்தன; எந்தெந்த இடத்தில் உன்னதமான பொருட்களை அவன் பார்த்தாலும் அப்போதே அவற்றை அவன் கவர்ந்து சென்று விடுவான். சமுத்திரராஜன் அவனுக்கு தன் இரத்தினங்களைக் கொடுத்தான் சூரியன் அந்த அசுரனுக்கு எத்தனைக்காலம் சுகமாக இருக்குமோ, அத்தனைக் காலம் ஒளி வீசிக் காய்ந்தான் சந்திரன் எப்பொழுதும் அவன் அருகிலேயே இருந்து குளுமையூட்டினான் சுகந்தகாற்றை மெல்லென வீசிக்கொண்டிருந்தான். தேவர்களுக்கு செலுத்தும் ஹவ்யமும் பிதுர்களுக்குச் செய்யும் கவ்யமும் பலிஷ்டனான அவ்வசுரனையே சார்ந்தன மூவுலகங்களில் இருந்த அனைவருமே பயந்து நடுங்கி அந்தத் தாரகாசுரனது கட்டளையையே முக்கியமாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இவ்விதமாக தேவர்கள் யக்ஷர்கள் முதலியவர்கள் எல்லாம் அவ்வசுரனின் உத்தரவின் படி நடக்கும்போது நோய் நொடிகளுக்கும் சாக்காட்டிற்கும் ஆளாகும் சாதாரண மனிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் வானுலகம், பூவுலகம், பாதாளம் என்னும் மூன்று உலகங்களிலும் எங்கெங்கு சிறப்பான நதிகள், நந்தவனங்கள் முதலியவை இருந்தனவோ, அவையெல்லாம் தாரகாசுரனின் தலைநகரிலே ஸ்தாபிக்கப்பட்டன இதுபோலப் பல்லாண்டு காலம் அந்த அசுரன் கொடுங்கோல் செலுத்தி வந்தான் அப்போது தேவர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பத்மாஸனரான பிருமதேவனிடம் சென்று அவரிடம் சரணடைந்தார்கள்.

10 சிவபெருமான் யோகமும் மன்மதன் மூட்டிய மோகமும்

தேவர்கள் அனைவரும் பிரமனைக் கும்பிட்டுத் தலைகுணிந்து நின்றார்கள். அப்போது நான்முகப் பிரமன் அத்தேவர்களைப் பார்த்து, அமரர்களே! நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்? உங்களுக்கு என்ன துன்பம் நேரிட்டது? என்று கேட்டார். தேவர்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி தாரகாசுரனால் நாங்கள் அனுபவிக்கும் துன்பம் தங்களுக்குத் தெரியாததா? அந்தத் துன்பத்தைத் தயவு செய்து தீர்க்க வேண்டும். என்றார்கள். பிருமதேவன் அவர்களை நோக்கி வானவர்களே நச்சுமரமாக இருந்தாலும் அதை வளர்த்துக் காப்பாற்றியவனே வெட்டுவது உசிதமல்ல என்பதைப் போலவே, என்னால் வரம் பெற்று விருத்தியடையப் பெற்றவன் என்னாலேயே வதம் செய்யப்படுவது சரியல்ல, ஆகையால் உங்களுக்கு நான் ஓர் உபாயம் சொல்லுகிறேன். சிவபெருமானின் வீரியத்திற்கு உற்பத்தியாகும் குமாரன் தான் அவ்வசுரனைக் கொல்ல முடியும்! அப்படி சிவவீர்யத்தில் புத்திர உற்பத்தியாவது துர்லபமாம். இது விஷயமாக ஒரு யோசனை சொல்லுகிறேன். அதன்படி நீங்கள் செய்ய வேண்டும்.

இமயமலையின் அழகான கொடுமுடியின் மீது சிவபெருமான் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். நாரத முனிவராலும் பர்வத ராஜனாலும் மகாதேவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று பார்வதிதேவி நியமிக்கப்பட்டிருப்பதால் அப்பார்வதிதேவி தன் தோழியர் இருவருடன் சிவபெருமான் யோகஞ் செய்யுமிடத்தில் பணிவிடை புரிந்து வருகிறாள். அவளோடு சிவபெருமான் எப்போது இணங்கி கூடுகிறாரோ அப்போது வீர்யம் உண்டாகும். பிறகு உங்கள் காரியமும் கைகூடும். இதில் சந்தேகமில்லை பரமேஸ்வரனின் வீரியத்தைக் கவர்வதற்கு பார்வதியே தகுதியானவள் அவளையன்றி வேறு அன்னியப் பெண்களால் அது இயலாது எனவே அதற்கேற்ற உபாயங்களை நீங்கள் கையாள முயலுங்கள் அப்போது தான் உங்களுக்குக் காரியசித்தி உண்டாகும்! என்றார். பிரம்மாவின் யோசனையைக் கேட்டதும் தேவர்கள் ஒருவரோடொருவர் ஆலோசித்துக் கொண்டு தேவேந்திரனிடம் சென்று நடந்தவற்றை அறிவித்தார்கள். அமராபதியே! என்ன செய்தால் சிவபெருமானுக்குப் பார்வதியிடம் இச்சை ஏற்படுமோ அதைச் செய்து பிரமனது யோசனையை நிறைவேற்றுவது உமது பொறுப்பு என்று சொல்லி விட்டு தேவர்கள் தம் இருக்கைகளை அடைந்தார்கள். தேவர்கள் சென்றதும் தேவேந்திரன் மன்மதனை நினைத்தான்.

உடனே மன்மதன், தன் தேவியான இரதியோடு இந்திரன் முன்னால் வந்து நின்று வணங்கி, தேவராஜரே, நீங்கள் ஏன் என்னை நினைத்தீர்கள்? அதைச் சொல்லுங்கள், அந்த வேலையைச் செய்வதற்கே நான் வந்திருக்கிறேன்! என்று சொல்லி விட்டு மவுனமாக இருந்தான். இந்திரன் மன்மதனை நோக்கி மீனக்கொடியுடையவனே! இப்போது எந்தக்காரியம் வந்துள்ளதோ அது உன்னால் செய்யக் கூடியதாகும் எவ்வெவை என் காரியங்களோ அவையெல்லாம் உன் காரியங்களே தவிரவேறல்ல, எனக்கு நண்பர்கள் பலருண்டு ஆயினும் காமதேவனான உனக்கு இணையான நண்பன் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை போர்க்களத்தில் எனக்கு பயன்படுவதற்காக, பிரமதேவனால் என் வஜ்ராயுதம் சிருஷ்டி செய்யப்பட்டது மாறனான உன்னை மற்றொரு அஸ்திரமாக பிருமனே நியமித்தார், இந்த இரண்டு அஸ்திரங்களில் வஜ்ராயுதம் ஹிம்சிக்கும் இயல்புடையது ஆனால் காமதேவனான நீயோ இன்பம் விளைவிக்கும் இயல்யையுடையவன், மன்மதனை! இவ்விரண்டு அஸ்திரங்களில் நீயே சிறந்தவன், நீயே ஆற்றல் மிகுந்தவன் ஏனென்றால் என் வஜ்ராயுதம் பயனின்றிப் போனாலும் போகும், ஆனால் பஞ்சபாண மன்மதனான நீயோ ஒரு சமயத்திலும் பயனளிக்காமலிருக்க மாட்டாய்! இப்போது நேர்ந்துள்ள நோக்கத்தைச் சாதிக்க நீயே தகுந்தவன் உன்னைத் தவிர மற்றவர்களால் அதைச் செய்யவேமுடியாது உலகத்தில் வள்ளலுக்கு வறுமை வந்துள்ள போதும் சூராதி சூரனுக்குப்போர்க்களத்திலும், நற்பனுக்கு அபாய நெருக்கடியிலும், புருஷனுக்கு அசக்தி காலத்திலும் பெண்களுக்கும் நற்குலத்தில் பிறந்தவர்களுக்கும் ஆபத்துக் காலத்திலும் தொல்லைகள் மூளும்போது மனிதர்களால் பரீட்சை உண்டாகிறது. ஓ! நட்பிற்சிறந்த ரதிகாந்தனே! இப்போது உன் சம்பந்தமான பரீட்சை ஏற்பட்டுள்ளது இந்தக் காரியம் எனக்கு மட்டும் சுகமளிப்பதல்ல தேவர்கள் அனைவருக்குமே சுகத்தைக் கொடுக்கத்தக்கது; இந்த விஷயமாக நானே யாசிப்பதால் இந்தச் சுபமான காரியத்தை நீயே செய்ய வேண்டும்.

இவ்வாறு தேவேந்திரன் சொன்னதைக் கேட்ட மன்மதன் புன்னகையோடு இந்திரனை நோக்கி தேவாதிபரே! நம் இருவருக்கும் பேதமில்லை ஆகையால் நீர் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? உலகத்தில் உபகாரம் செய்பவன் தான் செய்யும் செயலால்தான் தன்னைத் தெரியப்படுத்திக் கொள்கிறானே தவிர வெறும் வாய்ப்பேச்சால் தெரியப்படுத்துவதில்லை. எவன் ஒரு வேலையைத் தானே செய்து முடிக்கத் திறமையுள்ளவன் என்று விளக்கமாகச் வாய்விட்டுச் சொல்கிறானோ அவன் எந்த வேலை செய்யப் போகிறான்? அப்படி வாய்விட்டு சொல்வது உசிதமல்ல என்றாலும் நான் சொல்வதைக் கேளும், உம்முடைய பதவியைப் பறித்துக் கொள்வதற்காக எவன் உக்கிரமாகதவஞ்செய்கிறானோ அவனை ஒரே க்ஷணத்தில் பெண்ணின் கடைக்கண் பார்வையாலும் என் காம பார்வையாலும் வீழ்த்தி விடுகிறேன் அவன் தேவனாயினும் ராட்சசனாயினும் மகாமுனிவனாயினும் அவனை க்ஷணநேரத்தில் காம இச்சைக்கு ஆளாக்கி வீழ்த்தி விடுகிறேன். இப்போதே உமது வஜ்ராயுதத்தையும் இதர போர்க்கருவிகளையும் தூர எறிந்துவிடு. உமக்கு மிகவும் நண்பனும் மன்மதனுமான நான் வந்திருக்கும் போது அக்கருவிகள் என்ன வெற்றியைத் தரப்போகின்றன? யோகமூர்த்தியான சிவபெருமானைக் கூட என் காமபாணங்களுக்கு இலக்காக்கி விடுவேன் என்றால் மற்றவர் விஷயத்தில் என் வெற்றியைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? என்று பெருமையோடு சொன்னான். உடனே இந்திரன் உற்சாகமடைந்து மன்மதா நான் எந்தக்காரியத்திற்காக உன்னை நினைத்தேனோ அந்தக் காரியத்தையே நீயும் சொல்லி விட்டாய். உன்னை எதற்காக நினைதேன் என்பதைசொல்லுகிறேன், கேள்.

தாரகன் என்ற கொடிய அசுரன் பிரமதேவரிடம் வரம் பெற்று தர்மங்களை அழித்து உலகங்களுக்கு ஒரு பெரும் துன்பமாக பீடித்துக் கொண்டிருக்கிறான். சகல தேவர்களும் நிர்மலர்களான மகரிஷிகளும் அந்த அசுரனால் துக்கப்பட்டு தத்தளிக்கிறார்கள். அவ்வசுரனை எதிர்க்கும் விஷயத்திலோ தேவர்களின் ஆயுதங்கள் பயனற்று போயின இத்தகைய கொடிய அசுரனுக்கு அஸ்திரங்களால் மரணம் கிடையாது, அந்தத் துன்மார்க்கன் தாரகாசுரனுக்குச் சிவபெருமானின் வீர்யத்தால் உற்பத்தியாகும் குமாரனால் தான் மரணம் உண்டாகுமாம்! ஆகவே காமசம் பந்தப்பட்ட இந்தக்காரியத்தை உன்னால் தான் நிறைவேற்ற முடியும். இந்தக்காரியத்தை நீ உடனடியாகச் செய்ய வேண்டும் சிவபெருமான் இப்போது கண்மூடி நிஷ்டையில் அமர்ந்து மாபெரும் யோகஞ்செய்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பணி விடை செய்வதற்காகப் பார்வதிதேவி தன் தோழிருடன் அவர் அருகில் அவளது தந்தையான ஹிமாசல மன்னனின் உத்திரவு பெற்றுக் கொண்டு இருப்பதாக நாமும் கேள்விப்படுகிறோம். ஆகையால் மகாயோகியான சிவபெருமானுக்கு யோகம் கலைந்து எப்படி அந்தப் பார்வதியின் மேல் ஆசையும் காமமும் உண்டாக முடியுமோ, அப்படிச் செய்ய வேண்டியது உன் கடமையாகும். இந்த உபகாரத்தைச் செய்தால் நீயும் கிருதார்த்தனைவாய், இதனால் உலகங்களுக்கு மூண்டுள்ள துன்பங்களும் நீங்கிப் போய் விடும். அதில் சந்தேகமேயில்லை! என்றான்.

உடனே கரும்புவில் காமதேவன் புன்முறுவலோடு தேவேந்திரனை நோக்கி சிவபெருமான் இப்போது யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தாலும் சரி அவரைப் பார்வதியிடம் மிகவும் மையல்கொள்ளச் செய்து விடுவேன், இதில் சந்தேகம் வேண்டாம், என்றான். பிறகு அவன் தேவேந்திரனின் வார்த்தையைத் தன் தலை மீதுதாங்கித் தன் காதல் நாயகியான ரதி தேவியோடும் அன்பனான வசந்தனோடும் சேர்ந்து கொண்டு எந்த இடத்தில் பரம சிவன் கண்மூடி பரமயோகம் செய்து கொண்டிருந்தாரோ அந்த இடத்திற்குப் போய் சேர்ந்தான். உடனே வசந்தன் தன் தர்மச் செயல்களைத் துவங்கினான் வஸந்த ருதுவிற்கு உரிய தர்மங்கள் அந்த வனத்தைச் சேர்ந்தன அந்த வனத்தில் இருந்த பலாமரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கி கமகமவென வாசனை வீசின. தென்னை மரங்களிலும் மாமரங்களிலும் அசோக மரங்களிலும் அரும்புகள் அலர்ந்தன. மகிழம்பூ மரங்களில் வண்டுகள் இன்னிசை மீட்டி மொய்த்தன. பூங்குயில்கள் கூவி மோகமூட்டின குளுமையான சந்திர கிரணங்கள் காமாவஸ்தையடைந்துள்ள ஆடவர்களை கூடிக் களிப்பதற்கான காலங்களில் தம் நாயகரிடம் வேட்கையோடு செல்ல வைத்தன. தென்றல் இன்னிசை பாடி இனிமையாக வீசியது. அவ்வனத்திலிருந்த முனிவர்களுக்கும் அடக்கவொண்ணாத காமப்பெருக்கை தென்றல் காற்று எங்கும் பொங்கி எழச்செய்தது மரங்களும் கற்களும் கூட மன்மதன் சக்தியைப் பெற்றனவென்றால் தேவர்கள் மனிதர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

யாவருடைய துன்பத்தையும் போக்குபவரான சிவபெருமான் அப்போது அங்கு அகாலத்தில் வஸந்தருது தோன்றியதை கண்டு வியந்துவிட்டு மீண்டும் கடூரமான யோகத்தில் ஆழ்ந்தார். இவ்வாறு வஸந்தருது வியாபித்திருக்கும்போது மன்மதன் தன் தேவி ரதியோடு கூடியவனாய் சிவபெருமானுக்கு இடது புறத்தில் தன் கரும்புவில்லை ஏந்தியவனாக நின்றான். அந்நிலையில் அந்த இரதி மன்மதரைக்கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள் அந்தச் சமயத்தில் பார்வதி தேவியானவள் பலவதிமான நறுமண மலர்களைச் சேகரித்துக் கொண்டு தன் தோழிகளுடன் சிவபெருமான் இருக்குமிடத்திற்கு சிவபூஜை செய்வதற்காக வந்தாள். இந்த உலகத்தில் அதி உன்னதமான சவுந்தர்யங்கள் எத்தனை உண்டோ, அத்தனை அழகுக் கவர்ச்சிகளும் பார்வதி தேவியிடம் பொலிவுடன் நிலைத்திருந்தன. அதோடு வஸந்த ருதுவில் பூத்த புத்திளம் மலர்களும் மன மகிழ்ச்சியோடு அத்தேவியால் அணியப் படுமானால் அவளது பேரழகை பற்பல ஆண்டுகள் வருணித்தாலும் முற்றிலும் வருணித்துவிட முடியுமா? யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அருகே பருவ சுந்தரியாக பார்வதிதேவி எப்போது நெருங்கினாளோ அப்போதே அவள்மீது சிவபெருமான் காதலும் மோகமும் கொள்ளும்படி காமதேவனான மன்மதன் தன் கரும்புவில்லை விளைக்க முயன்றான். உடனே அந்த வில் அவன் கையிலிருந்து நழுவி சிவபெருமானின் அருகில் போய் விழுந்தது. அதனால் சிவனாரின் யோகமும் கலைந்தது.

அப்போது கருநெய்தல் மலர்களைப் போல் கவர்ச்சியான கண்கள் வாய்ந்த பார்வதி தேவி மிகவும் பிரியத்தோடு சிவபெருமானை வணங்கிப் பூஜைகள் செய்து கொண்டிருந்தாள். அதி அழகான உடற்பொலிவுடன் குலுங்கும் பார்வதி தேவியைச் சிவபெருமான் உற்றுப் பார்த்துக் கவர்ச்சியுற்று அவளது வனப்பையெல்லாம் வருணீக்கத் தொடங்கி விட்டார். இது முகமோ அல்லது முழு நிலவோ? இவை கண்களா கருநீல மலர்களோ? இக்கண் புருவங்கள் இரண்டும் காமதேவனின் கரும்பு விற்களோ? இது அதரமோ கொவ்வைக்கனியோ? இது நாசியோ கிளியின் மூக்கோ? இது குரலோ குயிலின் ஆலாபனையோ? இது மத்யமோ? இந்த சுந்தரியின் நடையையும் உருவத்தையும் மலர்களையும் ஆடைகளையும் சவுந்தரியத்தையும் என்னவென்று வர்ணிப்பது? என்று பார்வதியை வருணித்துக் கொண்டே சிவபெருமான் தமது யோகத்தை விட்டு விட்டார் அவர் பார்வதிதேவியின் முன்றானையை எவ்வளவு நேரம் கையால் தொட்டு ஸ்பரிசித்தாரோ அத்தனை நேரமும் தேவி தூரத்திலேயே நின்று கொண்டிருந்தாள் மங்கையருக்குரிய நாணத்தோடு தன் அங்கங்களில் ஒளிவீச அவள் அடிக்கடி கடைவிழிகளால் சிவபெருமானைப் பார்த்து கொண்டும் நின்றாள். அவ்விதம் பார்வதிதேவி செய்யும் சிருங்காரங்களையெல்லாம் பார்த்த சிவனார் அதிக மையல் கொண்டு ஆஹா! இவளைக் கட்டியணைக்கும் ஆலிங்கனத்தை நான் அடைவேனானால் இதைவிட நான் அடையும் சுகம் வேறுண்டோ என்று க்ஷணநேரம் யோசித்து, நான் ஏன் மோகமுற்றேன்? சர்வேஸ்வரனான நானே ஆனந்தத்தோடு இவளது அங்க ஸ்பரிசத்தை இச்சிப்பேனானால் வேறு எந்த க்ஷúத்திரன்தான் எந்தெந்த அற்பச் செயல்களையும் இச்சிக்கமாட்டான்! என்று மனந்திரும்பி சர்வாத்மாவான சிவபெருமான் திடமான பர்யங்க பந்தமாயற்யோக பட்டத்தைத் தரித்தார்.

11. இரதி தேவியின் புலம்பலும் பார்வதி தேவியின் காதலும்

தவஞானிகளே! அதன் பிறகு நிகழ்ந்தவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள் யோக நிலையிலிருந்து வழுவியதை உணர்ந்த சிவபெருமான். இதற்குக் காரணம் ஏதாவது இருக்கவேண்டுமே யென்று நினைத்து நான்கு திசைகளையும் பார்த்தார் அப்போது தன் இடது பக்கத்தில் இருந்து கொண்டு மன்மதன் கரும்பு வில்லை வளைத்து காமக்கணைகள் தொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டார் பார்த்ததுமே அவர் கடுங்கோபம் கொண்டு இதென்ன விந்தை? எவராலும் ஆக்கிரமிக்க முடியாத என்னைக்கூட துஷ்டனான மன்மதன் விட்டுவிட வில்லையே என்று சிவபெருமான் தமது திருவுளத்தில் எண்ணும் போதே அவரது நெற்றிக் கண்ணிலிருந்து உயரக் கிளம்பும் ஜ்வாலைகளோடு நெருப்பு வெளிப்பட்டது. அந்த அக்கினியால் அப்பொழுதே மன்மதன் எரிந்து சாம்பலானான் மகா வலிமை சாலியும் காமவல்லபனுமான மன்மதன் மாண்டதை அறிந்ததும் தேவர்கள் மிகவும் துக்கப்பட்டார்கள் சிவபெருமான் அந்த க்ஷணத்திலேயே அந்த இடத்தைவிட்டு வேற்றிடஞ் சென்றார் பார்வதியும் திடமான உள்ளத்தோடு தன் ஆபரணம் முதலானவற்றை எடுத்துக் கொண்டு தன் தோழியருடன் தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்று விட்டாள்.

அப்போது மன்மதனின் நாயகியான இரதிதேவி கைலாச நாதரின் கடும் கோபத்தால் தன் காதற்கணவன் எரிந்து சாம்பலானதைக் கண்டதும் துக்கம் மேலிட்டு மூச்சுமுட்டி மூர்ச்சையானாள். பிறகு சுயநினைவு திரும்பியதும் ஆற்றமுடியாத துக்கத்தோடு கூச்சலிட்டு அழுதாள். இரதிதேவி அழும்போது அந்த வனமே துக்கத்தில் ஆழ்ந்தது. ஆடும் மயில்கள் ஆட்டத்தை மறந்து அயர்ந்து நின்றன. மரங்களின் கிளைகளும் இலைகளும் அசைவற்று ஒடுங்கியிருந்தன. மிருகங்கள் தங்கள் மேய்ச்சலை ஒழித்தன வண்டுகள் தங்கள் ரீங்காரத்தை நீங்கின. தவமுனிவர்கள் எப்படி மவுனமாக இருப்பார்களோ, அவர்களைப் போலவே, பறவைகளுங்கூட மவுனமாக இருந்தன. காற்றுகளுங்கூட பத்துத் திசைகளிலும் வீசவில்லை, இவ்வாறு சூழ்நிலைகள் முழுவதுமே சோகத்தில் ஸ்தம்பித்துப் போயிருக்கும்போது அசைவற்ற அந்த நிசப்தத்தில் இரதிதேவி பெரியதாகப் புலம்பலானாள். ஐயோ! என்ன செய்வேன்? இனி எங்கு போவேன்? என் கணவரைத் தேவர்கள் வீணிலே அழைத்து என்ன காரியஞ் செய்து விட்டார்கள்? ஓ நாயகனே! என்று கதறி அழுது கைகளையும் கால்களையும் அடித்துக் கொண்டு கூந்தலையும் அறுத்தாள் பிறகு அவள் துயரத்தினூடே, உலகத்தில் சுகத்தைக் கொடுப்பவன் ஒருவனுமில்லை. துக்கத்தைக் கொடுப்பவனும் ஒருவனும் இல்லை, ஆனால் எல்லா உயிர்களும் தான் செய்த வினையே அனுபவிக்கிறது. ஆகையால் தேவர்களைக் குறித்துச் சோகிப்பதில் பயனில்லை! என்றாள்.

இரதி தேவியின் அழுகைக் குரலைக் கேட்டதும் தேவர்கள் நெஞ்சுருகி சிவபெருமானிடம் சென்று அவரைத் துதித்து. உலகங்களுக்குச் சுகத்தை விளைவிக்கும் சர்வேஸ்வரரான சங்கரரே! எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள வேண்டும். இப்போது மன்மதன் செய்த காரியம் அவனுக்காகச் செய்யப்பட்ட குறும்பல்ல, துஷ்டனான தாரகாசுரனால் பீடிக்கப்பட்ட தேவர்களின் வேண்டுகோளாலே செய்யப்பட்டது இதில் ஐயமில்லை எம் பெருமானே! பிறை சூடிய பெம்மானே, கருணைகூர்ந்து அருள் புரிய வேண்டும். ஆண்டவனான நீரே கோபித்தால் அகில அண்டங்களும் இப்பொழுதே அழிந்துவிடும். காதற்கணவனை இழந்து கதறும் ரதிதேவியின் துக்கத்தைக் கண்டவர்களெல்லாம் மரணமூர்ச்சைக்கு ஆளானவர்கள் போலச் சோகமுற்று இருக்கிறார்கள். ஆகையால் ஐயனே இரதிதேவியின் சோகத்தைப் போக்கவேண்டும்! என்று சொல்லி சிவபெருமானைப் பிரார்த்தனை செய்தார்கள்.

சிவபெருமான், மனமிளகிக் கூறலானார்.

தேவர்களே! இரதிதேவி துக்கிப்பது உண்மை, ஆயினும் எது உண்டோ அது வேறாகமாட்டாது. ருக்மணிபதியான ஸ்ரீகிருஷ்ணன் துவாரகாபுரியில் வாசம் செய்து குமாரர்களை உண்டுபண்ணப் போகிறான். அதுவரையில் சாம்பலான இந்த மன்மதன் சரீரம் இல்லாதவனாகவே இருக்க வேண்டும் அதன் பிறகு கிருஷ்ணன் ருக்மணியிடம் மன்மதனை உருவாக்குவான்; அந்த மன்மதனுக்கு பிரத்யும்னன் என்ற பெயர் வழங்கும் அதில் சந்தேகப்பட வேண்டாம். இந்த மன்மதன் ருக்மணியிடம் மீண்டும் பிறந்தவுடனேயே இவனை சம்பரன் என்ற அசுரன் ஒருவன் கவர்ந்து தூக்கிக் கொண்டு பெருங்கடலைக் கடந்து தன் தலை நகருக்கு செல்வான். அவ்வளவு காலம்வரை இரதிதேவி அவ்வசுரனது பட்டினத்தில் இருக்கட்டும்! அதே நகரத்தில் அவள் மன்மதனையடைவாள்! அதன் பிறகு சம்பராசுரனை மன்மதன் யுத்தத்திலே கொன்று அவனது பொன் பொருட்களையெல்லாம் தன் நகரத்திலே கொண்டு போய்ச் சேர்த்துத் தானும் தன் நாயகியுடன் துவாரகையை மீண்டும் அடைவான். இது சத்தியம்! என்று அருள் புரிந்துவிட்டு தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே. தம் திருவுருவை மறைத்தார். தேவர்களும், இரதிதேவியிடம் சென்று சிவபெருமான் சொன்னவார்த்தைகளை அவளிடம் எடுத்துக் கூறிவிட்டுத் தங்கள் சிவபெருமான் கட்டளையிட்டவாறு அந்த சம்பராசுரனின் நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.

மாமுனிவர்களே, அவள் அசுரப் பட்டணத்தை அடைந்ததும் சிவபெருமானால் குறிப்பிடப்பட்ட காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தேவர்களும். ஆ ஆ! இனி என்ன நேருமோ? சிவகுமாரன் எப்போது உற்பத்தியாகி எப்போது தாரகாசுரவதம் நடைபெறுமோ? என்று மிகவும் கவலையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பார்வதி தேவியும் தன் தந்தையான பர்வதராஜனின் அரண்மனையை அடைந்து மாதாவான மேனையுடன் சேர்ந்து, தன்சவுந்தரிய ரூபத்தை நிந்தித்து கொண்டிருந்தாள் தூங்கும் போதும் தண்ணீர் அருந்தும் போதும். உணவருந்தும் போதும், நடக்கும் போது தோழியர்களின் நடுவில் இருக்கும் போதும் சிவபெருமானையே நினைத்து ஏக்கத்தோடு வருந்திக் கொண்டிருந்தாள். இவ்வாறு துக்கத்துடன் சுகமின்றி சிவ தியானத்துடன் சிவ சிவ என்று சிவ நாமங்களை ஸ்மரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் நாரதமுனிவர் புன்சிரிப்போடு வீணாகானம் இசைத்தபடி பார்வதி இருக்குமிடத்தில் வந்து சேர்ந்தார். தேவி பார்வதியும் அவரை வரவேற்று உபசரித்தாள். அப்போது சிவபெருமானை அடையும் வழி பற்றி நாரத முனிவரிடம் பார்வதி கேட்டாள். அதற்கு நாரதர் புன்முறுவல் பூத்து ஓ தேவி! சிவபெருமானைத் தவத்தாலேயே அடைய வேண்டும் அவ்விதம் தவத்தாலும் அவரை அடைய முடியவில்லையென்றால் பிரமன் முதலிய தேவர்களாலும் அவரை அடைய முடியாது! என்றார்.

12. பார்வதியின் தவம்

நாரதர் கூறியதைக் கேட்டதும் பார்வதி தேவி தவஞ் செய்தே சிவபெருமானை அடைய வேண்டும் என்று தீர்மானித்து தவஞ் செய்ய மனங்கொண்டாள். ஆனால் இந்த விஷயத்தைத் தன் தாய் தந்தையரிடம் தானே நேரில் சென்று விஷயத்தை வெளியிட்டு அனுமதி பெற வெட்கப்பட்டாள் அதனால் தன் தோழிகள் மூலம் சொல்லியனுப்பினாள். தோழிகள் பர்வதராஜனிடம் போய் மலையரசே! உங்கள் அருமைச் செல்வி பார்வதியின் வார்த்தையைச் சொல்லுகிறோம் நீங்கள் அதைக் கேட்டு சம்மதிக்க வேண்டும். அதாவது பார்வதி தேவி தன் தேகத்திற்கும் சவுந்தரியத்திற்கும், உமது குலத்திற்கும் அனுகூலம் செய்ய விரும்பி சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து அவரையே தன் காதற்கணவனாக வரித்து திருமணம் புரிந்து கொள்ள விரும்புகிறாள். அதற்குத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்கள். பர்வதராஜன் பார்வதியின் தோழிகள் இருவரும் கூறியதைக் கேட்டு பெண்களே! நீங்கள் சொல்லிய விஷயத்திற்கு நான் சம்மதிக்கிறேன் ஆனால் அவளது தாயான மேனையும், இதற்குச் சம்மதிக்கிறேன் ஆனால் அவளது தாயான மேனையும், இதற்குச் சம்மதிக்க வேண்டுமே அப்படி மேனையுஞ் சம்மதித்து பார்வதி தவம் செய்வாளானால் அதைவிட உத்தமமானது வேறொன்றுமிராது, அதனால் என்னுடைய குலம் சாபல்யம் அடையும் என்பதிலும் ஐயம் இல்லை! என்று சொல்லி அவர்கள் இருவரையும் தன் மனைவியான மேனையிடம் அனுப்பி வைத்தான்.

தோழிகள் இருவரும் மேனியின் அந்தப் புரத்திற்குச் சென்று அவளைப் பார்த்து தாயே உன் மகள் பார்வதி சிவபெருமானைக் குறித்துத் தவஞ் செய்ய விருப்பங்கொண்டு தன் தந்தையின் அனுமதியைப் பெற்று உன்னுடைய அனுமதியையும் பெறும்படி அனுப்பியிருக்கிறாள். உன் உத்திரவு கிடைத்தால் இப்போதே தவஞ் செய்யச் சென்று விடுவான். பதிவிரதையான பார்வதி தன் உருவத்திற்கு பயன் செய்ய ஆவலுற்று விட்டாள். ஆகையால் அனுமதியளிக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். அதைக் கேட்டதும் தாய் மேனை தாங்காத துக்கமடைந்து உடனே தன் மகள் பார்வதியை அழைத்து வரச் செய்து பார்வதி! நீ ஏன் துரயப்பட வேண்டும்? முற்பிறவியில் செய்த நற்பயனாய் நீ இங்கு வந்து பிறந்தாய். இங்கு உனக்கு என்ன குறைவு நீ தவஞ் செய்வதற்கு ஏன் போக வேண்டும்? அப்படி எங்கேதான் போகப்போகிறாய்? இங்கு தேவர்கள் இல்லையா? தீர்த்தங்கள் இல்லையா? உன் தந்தையின் மாளிகையிலேயே நீ தவஞ்செய்யலாமே? அப்படி செய்தால் நல்ல திவ்விய சக்தி உண்டாகுமே நீ முன்பு ஒரு முறை சிவபெருமானுக்குப் பணி விடைகள் செய்த போது என்ன காரியத்தைச் சாதித்து முடித்தாய்? இனி எந்தக்காரியத்தைச் சாதிக்கப் போகிறாய்! உன் மேனியோ கோமளமானது உன் உடலோ மென்மையானது ஆனால் தவமோ மிகவும் கடுமையானது, ஆகையால் அது உனக்குத் தகுந்ததல்ல ஆயினும் அந்தத் தவத்தை இங்கிருந்து செய்தால் என்ன? என்று சொல்லி மேனை தடுத்தாள்.

என்ன சொல்லியும் பார்வதி தன் தாய் மேனையின் பேச்சைக் கேட்காமல், சிவபெருமானைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் பார்வதியின் ஏக்கத்தையும் துக்கத்தையும் மேனை புரிந்து கொண்டதும் அவள் நிலையைக்கண்டு சகிக்காதவளாய் தவஞ் செய்ய செல்ல அனுமதியளித்தாள். உடனே பார்வதி மிகவும் அகமகிழ்ந்து தாய், தந்தை இருவரையும் வணங்கி விடை பெற்று தன் இருதோழியரும் தன்னைப் பின் தொடர்ந்து வரத் தவஞ்செயலை மேற்கொண்டாள் தன் உன்னதமான ஆடை ஆபரணங்களையும் விலக்கிவிட்டு மரவுரியும் மவுஞ்சியுமே தரித்துக்கொண்டு இமயமலையில் புனிதமான நதிகள் பெருகும் ஒரு சிகரத்தை அடைந்தாள். அங்கு பார்வதி தேவி தவக் கோலத்தில் அமர்ந்தாள். அது முதல், பார்வதி தவம் செய்த காரணத்தால் அந்தச் சிகரம் கவுரிசிகரம் என்ற பெயருடன் வழங்கலாயிற்று அங்கு மரங்களும் செடிகளும் கொடிகளும் மலர்களோடும் கணிகளோடும் செழித்துக் கொழித்தன. பார்வதிதேவி பூமியைச் சுத்தம் செய்து, மாமுனிவர்களாலும் செய்யமுடியாத கடுமையான தவத்தைச் செய்யத் துவங்கி உடற்பெற்று என்பதே சிறிதுமில்லாமல் சூரியனிடத்தில் பார்வையைப் பதித்து; மேலான தவம் செய்தாள்.

க்ரீஷ்ம ருதுக் காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும் வர்ஷருதுக்காலத்தில் பூமியிலும் குளிர் காலத்தில் தண்ணீரின் மத்தியிலும் இருந்து கடுந்தவம் செய்து கொண்டே மரங்களை நட்டாள், அதோடு அந்தக் கவுரி சிகரத்தில் நாள்தோறும் மரங்களுக்குத் தண்ணீர் வார்த்துக் காப்பாற்றியும் அதிதி பூஜையும் செய்து வந்தாள் பனிக்காலத்தில் குளிராட்டும் வாடைக் காற்றுக்கும் மழைக்காலத்தில் மழைக்கும் எக்காலத்திலும் பசிக்கும் பயத்துக்கும் அஞ்சாமல் மாமுனிவர்களும் செய்ய முடியாத மாபெரும் தவத்தை மகாக்கடுமையாக செய்து வந்தாள் அவளது தவத்தைக் கண்ட அருந்தவமுனிவர்களும் வியந்து பிரமித்தார்கள். பார்வதிதேவி தவஞ்செய்து வந்த ஆசிரமத்திற்கு அருகே இருந்த சிங்கம், புலி, மான், பசு முதலிய மிருகங்கள் இயற்கைப் பகையின்றி ஒன்றோடொன்று அன்பு கொண்டு வாழ்ந்தன. வித விதமான புற்பூண்டுகள் அவளது ஆசிரமத்தைச் சுற்றிலும் செழித்து வளர்ந்தன நறுமணமலர்கள் பூத்துக் குலுங்கின. இவ்விதம் பார்வதிதவஞ்செய்த அந்த கவுரி சிகரம்; கைலாசத்திற்கு சமமாக விளங்கியது.

இவ்வாறு பார்வதிதேவி அருந்தவஞ் செய்யும்போது தேவர்களும் மகரிஷிகளும் பார்வதிதேவியின் தவத்தைப் பார்த்து. அத்தவத்தின் தேஜசால் வியாபரிக்கப் பெற்றவர்களாய் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானை வணங்கி வழிபட்டு கைலாசநாதனே நீரே! ஸ்வயம்பு நீரே சங்கரர்! நீர் மேலான கருணையுள்ளவர் உலகங்களைத்தகனஞ் செய்யும் கூடியதாகவும் மிகவும் பயங்கரமான தாயும் தேவர், முனிவர், தானவர் முதலானவர்களாலுங் கூடச் செய்ய முடியாத பெருந்தவத்தை பார்வதி தேவி இயற்றி வருகிறாள் கருணாநிதியே! தயவு செய்து பார்வதியின் தவத்திற்கு இறங்கி எங்களது காரியத்தையும் நிறைவேற்றியருள வேண்டும் என்று இறைஞ்சினார்கள். அவ்விதம் கூறியதேவர்களையும் நாரதரையும் சிவபெருமான் கடைக் கண்ணால் பார்த்துவிட்டுப் புன்னகைசெய்து தேவர்களே உங்களைப் போன்றவர்களாலும் காண முடியாத நான், மலையரசன்மகளான பார்வதி செய்யும் தவத்திற்கு மனமகிழ்ந்து அவளுக்குத் தரிசனம் கொடுத்து அவளையே திருமணஞ் செய்து கொள்ளப்போவது நிச்சயமாகும் இந்த விஷயத்தில் உங்களுக்கு யோசனை வேண்டாம். உங்கள் காரியம் கைகூடும் ஆகவே உங்கள் இருப்பிடங்களுக்கத் திரும்பிப் போகலாம்! என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினார்.

அதன்பிறகு சிவபெருமான், ஜடைமுடி தரித்த ஒரு கிழப்பிராமணராக வேடம் பூண்டு, பார்வதிதேவி தவஞ் செய்து கொண்டிருந்த ஆசிரமத்தையடைந்தார். அவ்வாறு வந்த வேதியரைக் கண்டதும், பார்வதிதேவி பெருமகிழ்ச்சியோடு அவரை வரவேற்று, அர்க்கியபாத்திய ஆசமனாதிகளால் உபசரித்து வழிபட்டாள். அவ்வனத்திலுள்ள சுனையான பழங்களை உணவாக உவந்தளித்தாள். விருத்தராக வந்த வேதியர் தமது வயதுக்கு ஏற்பச்சிறிது நேரம் நித்திரைசெய்தார் அவர் உறக்கம் நீங்கி எழுந்ததும், பார்வதிதேவி அவரை மேலும் உபசரித்து, அவரை நோக்கி, நீங்கள் எங்கு வந்தீர்கள்! என்று கேட்டாள். வேதியர் வடிவில் வந்திருந்த சிவபெருமான் தன் விருத்தாந்தங்களை ஒருவாறு சொல்லி தன் மெய்வடிவைக் காட்டாமல் தான் கொண்ட வேடத்திற்கு ஏற்ற கபட வார்த்தைகளைப் பேசலானார்.

ஏ தேவி! இந்தத் தீர்த்தம், பலம், உன் தவம் ஆகியயாவும் எப்பொழுதும் பரிபூரணமாக இருக்கவேண்டும். நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ பதில் சொல்லவேண்டும் பால்யையான நீ என்ன காரணத்திற்காகத் தவஞ்செய்கிறாய்! எல்லா பூஜைகளையும் பூரணமாகச் செய்வதைப் பார்த்தே நம்மிருவருக்கும் சிநேகம் உண்டாயிற்று. உன் அந்தரங்க விஷயம் எதுவாயினும் என்னிடம் பேதம் பாராட்டாமல் சொல்ல வேண்டுகிறேன் உன்னிடத்திலே தவத்தாலாகும் எல்லா விதமான பயன்களும் நிறைந்திருக்கின்றனவே இந்தத் தவத்தை கணவனையடைய வேண்டும் என்று விரும்பிச் செய்வதாக இருந்தால் இத்தவத்தை இத்தோடு நிறுத்திக்கொள். இரத்தினமானது தன்னைக் கொள்வோனை தேடி செல்வதில்லை ஆயினும் இரத்தினத்தைக் கொள்வோன். தானே வந்து அதனைக் கிரகித்துக்கொள்வான்! உன்னுடைய சவுந்தரியமெல்லாம் தவஞ்செய்வதனால் வீணாகின்றன உன் அழகான ஆடையாபரண அலங்காரங்களையெல்லாம் உதறிவிட்டு தோல் மரவுரி போன்றவைகளை ஏன் அணிந்திருக்கிறாய்? அதற்குக் காரணம் சொன்னால் அதை கேட்டு நான் மகிழ்வேன்! என்றார். வேதிய வேடதாரி கேட்ட கேள்விகளுக்குப் பார்வதிதேவி தானே விடை சொல்ல வெட்கப்பட்டு விலகிச் சென்று தன் தோழிகளில் ஒருத்தியை அனுப்பி, அவள் மூலம் எல்லா விஷயங்களையும் அவருக்குத் தெரிவிக்கச் செய்தாள்.

13. வேதிய வேடதாரி தொடுத்த வாக்குவாதமும், கொடுத்தவரமும்

பார்வதி அனுப்பிய பிராண சகி புன்னகையோடு கிழட்டு வேதியரிடம் சென்று ஐயரே! பார்வதிதேவி ஏன் தவஞ்செய்கிறாள் என்பது தானே தங்களுக்குத் தெரியவேண்டும்? சகல ஐசுவர்யங்களும் கூடியிருந்துங்கூட இந்திரன் முதலான தேவர்களையெல்லாம் புறக்கணித்து விட்டு பிநாகம் என்ற வில்லேந்திய சிவபெருமானையே தன் பிரிய காதற் கணவராக அடைய வேண்டும் என்று தான் பார்வதி இப்படி அரும் தவம் செய்கிறாள் இவள் வைத்த மரக்கன்றுகள் கூட பெரிய விருட்சங்களாகிப் பூத்துப்பயன் தரத் துவங்கி விட்டன. இவளோ நாரதர் கூறியபடியே இன்னும் தவஞ்செய்கிறாள் என்றாள். அவளை அவ்வாறு பேசவைத்து விட்டு பார்வதி தனித்து நின்றாள். வேதியர் வியந்தவர்போல் பார்வதியை நோக்கி, ஏ பார்வதி உன் தோழி சொல்பவை உண்மைதானா? அல்லது பெண்களுக்கே உரிய வெறும் பரிகாசமா? நிச்சயத்தை நீயே ஏன் என்னிடம் சொல்லக்கூடாது? என்று கேட்டார். அதற்குப் பார்வதிதேவி பெரியவரே! என் தோழி சொல்வது யாவும் உண்மைதான் மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத அச்சிவபெருமானை என்னால் எப்படி அறியத்தாகும்? அப்படித் துர்லபமாக இருந்துங்கூட, என் விருப்பத்தாலேயே நான் அவரைக் குறித்துத் தவஞ் செய்கிறேன்! என்றாள். பார்வதி நான் இப்போது என் விருப்பப்படிச்செல்கிறேன் நீ எதை இச்சித்தாயோ அதை அறிய எனக்கும் பெரு விருப்பம் இருந்தது அதை உன் தோழியரிடமிருந்தும் உன்னிடமிருந்தும் தெரிந்து கொண்டேன். இனி நான் போயாகவேண்டும் இல்லையென்றால் நமது சினேகம் குன்றிவிடும் என்று மறைவர் மந்தகாசத்தோடு சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். உடனே பார்வதி வேதியரைப் பார்த்து,  சுவாமி! நீங்கள் ஏன் புறப்படுகிறீர்? என்று கேட்டாள்.

பார்வதி நான் உனக்கு மிகவும் அன்பனாகையால் சொல்லுகிறேன் நீயோ சந்தனத்தை விட்டுச் சேற்றைப் பூசிக் கொள்ளவும் யானை வாகனத்தை விட்டு எருதின் மேல் ஏறிச் சவாரி செய்யவும், கங்கை நீரை விட்டு, கிணற்று நீரை அள்ளிக்குடிக்கவும், சூரிய ஒளியைவிட்டு விட்டு மின்மினியின் மினுக்கு ஒளியைக் கண்டு ரசிக்கவும், வீட்டு வாசத்தை விட்டுவிட்டு காட்டு வாசஞ் செய்யவும் விரும்பியவளாய் தவஞ்செய்கிறாய் உன்னுடைய இந்த முயற்சி உசிதமாகத் தோன்றவில்லை, தேவர்கள் நிறைந்த சபையைவிட்டு அசுரரும் பைசாசரும் நிறைந்த சபையை நீ இச்சிக்கிறாய்? அலங்காரமான இந்திரன் முதலான தேவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு ஆண்டியான சிவனை நீ விரும்புகிறாய்? இது உசிதமல்ல மிகவும் அலட்டுத்தனமாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னுஞ் சொல்லுகிறேன் கேள். பார்வதி கமலப் பூக்களைப் போன்ற கருவிழிகள் வாய்ந்த கட்டழகியான நீ எங்கே? முக்கண்ணனான அந்தச் சுடலையாடிச் சிவன் எங்கே? வெண்ணிலா முகம் படைத்த நீ எங்கே? ஐந்தலையனான அந்த ஆண்டிப்பித்தன் எங்கே? வருணிக்கவே முடியாத கூந்தல் அலங்காரியான நீ எங்கே? விரிசடையனான அந்த ஜடாதரன் எங்கே? சந்தனம் முதலான வாசனைகள் பூசப்பரிமளிக்கும் உடல் வளம் வாய்ந்த நீ எங்கே? சுடுகாட்டுச் சாம்பலைப் பூசித்திரியும் உடலுள்ள அந்த சிவன் எங்கே? சுகமான வெண்பட்டாடை எங்கே? சுகமற்ற அவனது யானைத் தோல் போர்வை எங்கே? உனது திவ்யமான தோள் வளைகள் எங்கே? அவனது பாம்பு அணிகள் எங்கே? உன் சேவகர்களான தேவர்கள் எங்கே? அவனது பூத கணங்கள் எங்கே? உன் மிருதங்கம் முதலான வாத்தியங்கள் எங்கே? அந்தச் சிவனின் டம்ருகம் எங்கே? உனது பேரிகை எங்கே? அவனது சிருங்கி எங்கே? உனது டங்கம் எங்கே? சிவனது கல்லவாத்தியமெங்கே? ஆகையால் உனக்கும் அந்த சிவனுக்கும் பொருத்தமோ உருவ ஒற்றுமையோ சிறிதும் கிடையாது. அந்தச் சிவனோ விருபாக்ஷ (கோணல் கண்ணன்) அவனது குலங்குடி முதலியனவும் நன்றாக அறியப்படவில்லை. அந்தச் சிவன் என்ன செல்வந்தனா? அப்படியிருந்தால் அவன் ஏன் திகம்பரனாக (நிர்வாணனாகத்)திரிய வேண்டும்.

உலகத்தில் ஆடவர்களுக்குள்ள விசேஷ குணங்களில் ஒன்றாவது சிவனுக்குண்டா? அவன் ஏறித் திரியும் வாகனமோ மாடு! உடுத்தும் ஆடையோ யானைத்தோல் அவனது படைவரிசைகளோ பூத பைசாசங்கள்! அவனது நீல கண்டத்திலோ நீல நிறத்து கடுவிஷம், வீடுகளில் வசிக்கலாயக்கற்றவனாய் வனத்தை அடைந்து காடுமேடுகளில் சுற்றுபவன்! அவன் ஜாதியோ இன்னதென்று இன்னும் தெரியவில்லை! அவனது வித்யையும் ஞானமும் இவ்வளவுதான் என்றும் இன்னும் கணக்கிடப்படவில்லை, அவனே ஏகாங்கி! அதிலும் பற்றற்ற விரக்தன்! அந்தச் சிவன் சர்வ சம்மதமான புருஷனாக இருந்தால் மன்மதனைத் தகனஞ் செய்வானா ஆகையால் அந்தச் சிவனிடம் உன் மனதைச் செலுத்துவது உசிதமல்ல! உனக்கும் அந்தச் சிவனுக்கும் பலவகையிலும் ஏற்றத்தாழ்வுகள் எத்தனையோ இருக்கின்றன. ஆகையால் இது எனக்கு யுத்தமாகத் தோன்றவில்லை. ஆயினும் வினையை வெல்ல முடியுமா? நீ உன் விருப்பப்படியே செய்! தலை விரித்தாடும் அந்த தான்  தோன்றிக் கூத்தனை அறிவேன். அவன் வசிப்பதோ ருத்திர பூமி. அவனே உலகத்திலுள்ள அசத்தான பொருள்களை அடைகிறான். ஆகையால் அப்படிப்பட்டவனிடமிருந்து உன் மனதைத் திருப்புவது உனக்குத்தான் நல்லது. இது உனக்கு இஷ்டமில்லையென்றால் நீ என் முன் நிற்காதே போ! என்று வேதியர் வடிவத்தில் வந்திருந்த சிவனாரே கூறினார்.

அவற்றையெல்லாம் பொறுமையின்றிக் கேட்ட பார்வதிதேவி மிகவும் கோபங் கொண்டாள். அவள் முதுபெரும் வேதியரை நோக்கிக் குமுறிக்குமுறி கூறலானாள். சிவதூஷணை செய்வதில் வாய்த் தேர்ச்சிபெற்ற கிழவரே! இவ்வளவு நேரம் உம்மைத் தன்யர் என்று எண்ணியிருந்தேன். இப்போதல்லவோ நீ அபக்தமானவர் என்பதைப் புரிந்து கொண்டேன் தேவாதி தேவனான சிவபெருமானை அறிவேன் என்று நீர் கூறிய வார்த்தை பொய்யே அன்றி வேறல்ல, நீர் நிச்சயமாக அவரைப்பற்றி அறிந்திருந்தால் அவருக்கு விரோதமாக ஏளனம் சொல்லமாட்டீர்! நீர் ஒரு வஞ்சகர். அதிலும் நீர் வயதான வாயாடிக்காரர், உலகைக் காக்கும் அச் சிவபெருமானின் வாசாமகோசரமான ஸ்வரூபத்தை நான் சொல்கிறேன் கேட்டுத் தெரிந்து கொள்ளும்!...

அந்தப் பரமசிவனார், யோசித்துப் பார்த்தால் நிர்க்குணம் காரணத்தால் ஸகுணராகவும் நிர்க்குணராகவும் விளங்குகிறாரே தவிர அவருக்குப் பிறவி ஏது? ஜாதி ஏது? சகல வித்தைகளுக்கும் அவர் பிறப்பிடமானவர் அவரே முன்பு ஒரு காலத்தில் வேதங்களை ஸ்வாசமார்க்கமான மகாவிஷ்ணுவுக்கு வழங்கியவர் பரமத்மாவும் பரிபூரணருமான அந்தச் சிவனாருக்கு வித்தைகளால் ஆகவேண்டியது என்ன? ஆதிபூதரான அந்த ஆனந்தக்கூத்தருக்கு வயது ஏது? பிரகிருதியே அந்தப் பெருமானை நித்தயமாக அடைகிறானோ? அவனுக்குப் ப்ரஹால உத்ஸாஹ மந்திரஜ எல்லோருக்கும் சுகம் பொங்கி வருமே தவிர, அவருக்கென்று ஏன் சுகம்? துன்மதியாளரே! வேதநுட்பம் தெரியாத கிழட்டு வேதியரே! எந்தச் சிவபெருமானின் கருணைக் கண்ணோக்கினால் தேவர்கள் ஜீவந்தர்களாக இருக்கிறார்களோ, எந்தச் சிவபெருமானின் திருத்தொண்டிற்காகத் தேவர்களும் காத்திருப்பார்களோ அந்தச் சிவபெருமானே ஸ்வயம்பு அத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் என்னை விரும்பி இச்சிப்பாரானால் கல்யாணரூபரும் தேவதேவருமான அந்தப் பெருமானின் சேவையால் எனக்கு என்ன குறைதான் உண்டாகும்? எல்லாப் பிறவிகளிலும் தரித்திரனாக இருப்போன் ஆண்டியென நீர் இகழ்ந்த அந்த ஆனந்தமூர்த்தியை சேவித்தால் அஷ்ட லக்ஷ்மிகளையும் அடைவான் எந்தச் சிவபெருமானிடம் அஷ்டமாசித்திகளும் நர்த்தனஞ் செய்கின்றனவோ, அந்தப் பரமேஸ்வரனுக்கு ஐசுவரியம் எப்படி எட்டாததாகும்? சாதாரணமானவர்களுக்கு அவர் காட்சிக்கு எளியவராக தமது லீலா மாத்திரையால் காணப்பட்டாலும் அவரை ஸ்மரித்தாலேயே சர்வமங்களமும் கிடைத்துவிடுமே! சிவம் என்ற மங்களகரமான பெயர் எவன் முகத்தில் நிலைத்திருக்கிறதோ அவனைக் கண்ணால் காண்பதாலேயே அன்னியர்களும் பரிசுத்தராகி விடுவார்கள் நீர் சொல்வதுபோல் பஸ்மமானது பரிசுத்தம் இல்லாத வெறும் சாம்பல் என்றால் அம்பலவாணரான அந்த அண்ணல் மாபெரும் நடனமாடிய பிறகு தேவர்கள் ஏன் நமது சிரசின் மீது அந்தச் சாம்பலைப்பூசிக் கொள்கிறார்கள்? பொன்னார் மேனியில் தூய வெண்ணீறு அணியும் எந்தச் சிவபெருமான் அகில உலகங்களுக்கும் ஆதியாக இருக்கின்றாரோ அவர் சர்வேஸ்வரனாக இருந்து, அனைத்தையும் ஆக்கலும் காத்தலும் துடைத்தலுமான முத்தொழில் புரிந்து அலகிலாவிளையாட்டுடைய தலைவராக விளங்குகிறாரோ அந்த ஆதிநாயகரை உம்மைப் போன்ற குறைமதியாளர்களால் எப்படி அறிய முடியும்?

கேளும் வயதான வேதியரே! இன்னும் கேளும் பரமாத்மாவாகவும் பரப்பிரம்மமாகவும் விளங்கும் சிவபெருமானது அறியக்கூடாத உருவத்தை உம்மைப்போன்ற அஞ்ஞானிகள் எப்படி அறியக்கூடும்? துராசாரமுடையவர்களும் மகாப் பாபிகளும் தேவமார்க்கத்திற்குப் புறம்பானவர்களும் நிர்குணரான சிவபெருமானை எப்படி உணர்ந்தறிவார்கள்? தத்துவஞான விசாரணையில்லாமல் எவன் ஒருவன் சிவபெருமானை நிந்திக்கிறானோ, அவன் பல பிறவிகளில் சேகரித்த புண்ணியங்களும் வீண் சாம்பலாகி விடும். நீரோ அளவற்ற தேஜஸ் வாய்ந்த சிவபெருமானை இழித்தும் பழித்தும் பலப்பல பேசிவிட்டீர் உமது அற்பஞானத்தை அறியாமல் வயதான பெரியவர் என்று மதித்து வழிபட்டு உபசரித்த காரணத்தால் நானும் பாபத்தையடைந்தேன் எவன் ஒருவன் சிவநிந்தனை புரியும் துவேஷியாக இருக்கிறானோ அவனைக் கண்ணால் பார்த்தாலும் ஸசேவ ஸ்நானம் செய்ய வேண்டும். துஷ்டவேதியரே உம் ஊனக் கண்களுக்கு சிவபெருமான் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரே என் மணக்கண்ணிற்குப் பிரியரும் என் விருப்பத்திற்கு உரியவருமாவார்! திரும்பத் திரும்பக் கேட்டாலும் அதையேதான் நான் சொல்லுவேன். இவ்வாறு பார்வதி வெகுண்டுரைத்து விட்டு தன் தோழியைப் பார்த்து, சகியே துஷ்ட புத்தியும் கெட்டமனமும் படைத்த இந்தக் குறும்புக் கிழவரை நீயே இங்கிருந்து போகச் சொல்லடி, ஏனென்றால் சிவநிந்தை காது கொடுத்துக் கேட்பவர்களும் பாபத்தை அடைவார்கள். இவர் இங்கிருந்தால் மேலும் சிவநிந்தையே செய்வாராகையால் தாமே இந்த இடத்தைவிட்டு வேறு இடம் செல்வோம் என்று சொல்லிவிட்டு தன் தோழியருடன் காலெடுத்துப் பெயர்த்து வைப்பதற்கு முன், விருத்தவேதியரின் வேடத்திலுள்ள சிவபெருமான் தம் மாறு வேடத்தை நீக்கிவிட்டு தம் சுயவடிவமெடுத்து சிவபெருமானாகக் காட்சியளித்தார். அவ்வாறு அவரைக் கண்டதும் பார்வதிதேவி நாணத்தோடு தலைகுனிந்து நின்றாள், அவளை சிவபெருமான் உற்று நோக்கிப் புன்னகை பூத்து பார்வதி நீ என்னை விட்டு எங்கே போகமுடியும்? நீ என்னால் விட்டுவிடத் தக்கவள் அல்லவே உன் தவத்துக்காக மகிழ்ந்த நான் உன் முன் பிரசன்னமானேன். உன் மனதைச் சோதிப்பதற்காகவே விளையாட்டாக இப்படியெல்லாம் வாய் கொடுத்து வார்த்தையாடினேன். உன் திடப்பக்தியைக் கண்டு உவந்தேன். உனக்கு கொடுக்கத் தகாத வரமே இல்லை உன் தவத்தால் நீ என்னை அடைந்தாய் உன் அழகைக் கண்டால் ஒரு க்ஷணம் ஒரு யுகமாகத் தோன்றுகிறது நீ நாணத்தை விடு நமது வீட்டுக்குப் போகலாம் வா என்று சிவபெருமான் கூப்பிட்டார் பார்வதி நீண்ட காலம் தவஞ்செய்த பயனையடைந்து தவத்தால் உண்டாகிய சிரமமும் நீங்கினாள்.

14. பார்வதிக்கு மணம்பேசிய கதை

நைமிசாரண்ய தவஞானிகளே! நான் சொல்வதைப் பக்தியுடன் கேளுங்கள். பார்வதி தேவி சிவபெருமான் கூறிய வார்த்தைகளைகேட்டதும் தான் முன்பு இனம் புரியாமல் அவரைக் கடிந்து கொண்டதற்காக வெட்கப்பட்டாள். பிறகு தம் வீட்டுக்குப்போவோம் வா! என்று கூப்பிட்ட சிவபெருமானை நோக்கி தேவாதி தேவரே! என் விஷயத்தில் கருணைகாட்டி அனுமதியளித்து இப்போது என்னை என் தந்தை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் பிறகு சித்த புருஷர்களால் சுபமான உத்தமமானவிதிக்கிரமமான திருமணத்தை என் பிதாவின் வீட்டில் செய்து கொண்டு என் தந்தையின் கிருகத்தையும் அவரது இல்வாழ்வினையும் சிறப்பித்தருள வேண்டும் என்று பார்வதி தன் தோழி மூலமாக அறிவித்தாள். அவ்வசனத்தைக்கேட்டதும் சிவ பெருமான் அகங்குளிரக் கண்குளிர அவளைப் பார்த்து பார்வதி உனக்கு எதுவிருப்பமோ, அது அப்படியே ஆகுக என்று தருவாய் மலர்ந்து கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார். பார்வதி தன் தோழிகளை அழைத்துக் கொண்டு இமாசலத்தில்தன் தந்தையான பர்வதராஜனின் மாளிகையை அடைந்தாள். அவளது வருகையை அறிந்ததும் அவள் தாயாரான மேனை ராணிபற்பல தாதியரும் தோழியரும் உறவினரும் புடைசூழத்தன் புதல்வியை எதிர்கொண்டு வரவேற்று நீ நற்கருமம் செய்தாய்! உன்னால் நாங்கள் யாவரும் தூய்மையடைந்தோம் என்று சொல்லி சந்தன மலர்களால் பார்வதியை அருச்சித்து கையுறைகள் கொடுத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள் அப்போது பர்வதராஜனான ஹிமவானின் அரண்மனை மாளிகை முழுவதும் ஆனந்தமயமாக விளங்கியது பர்வதராஜன் நாரதரைத் துதித்து துர்ப்புத்திரனைப் பெறுவதைவிட நற்புதல்வியைப் பெறுவதே சிறந்தது என்று கருதித் தன் இல்வாழ்வைச் சுப வாழ்வாக எண்ணிமகிழ்ந்தான்.

சிவபெருமானோ பார்வதி தேவிக்கு வரங் கொடுத்து விட்டு அந்தர்த்தானமான பிறகு காசிமாநகர் என்னும் புண்ணிய ÷க்ஷத்திரத்தை அடைந்தார். அங்கு அவர் ஸப்தரிஷிகளை நினைத்தார் அதையுணர்ந்ததும் ஏழு ரிஷிகளும் பரமேஸ்வரனைத் தியானித்துக் கொண்டு முத்தாபரணங்கள் பூண்டு தங்களது தவத்தின் பிரத்தியட்ச சித்தி போன்ற அருந்ததி முதலான அவரவர் பத்தினிகளோடு புறப்பட்டு வந்து சிவபெருமான் இருக்குமிடத்தையடைந்து துதித்து நின்றார்கள். சூரியகாந்தியைப் போல விளங்கும் சப்த ரிஷிகளைச் சிவனார் பார்த்து தவமுனிவர்களும் தேஜோவந்தர்களுமான மாமுனிவர்களே மனைவிமாரோடு சம்சார சம்பந்தர்களாக இருப்பதைக் கண்டு நமக்கும் நமது திருமண விஷயத்தில் நாணம் வேண்டுவதில்லை என்று கருதினார். அவரை ஸப்த(ஏழு) ரிஷிகளும் நோக்கி அண்ணலே ஆனந்த வள்ளலே, அம்பலவாணரே அளவற்ற தேஜசையுடைய வராகவும் பகவானாகவும் விளங்கும் எம்பெருமானே நமஸ்காரம் கபர்த்தியான (ஜடாதரரான) தேவரீருக்கு நமஸ்காரம் ஐந்து திருமுகங்களையுடைய உமக்கு நமஸ்காரம் ஹிரண்ய பாஹுவாகவும் (பொன்னார் தோளராகவும்) நீலகண்டராகவும் விளங்கும் விரிசடை சிவபெருமானே நமஸ்காரம் ஸர்வ வியாபகராகவும் வியாப்பியரான உமக்கு நமஸ்காரம் சிவனாராகவும் சிவரூபராகவும் பிரணவ ரூபராகவுமுள்ள உமக்கு நமஸ்காரம் என்று பலவாறாகவும் தோத்தரித்து எம்பெருமானே எல்லோருக்கும் மேலான ஏகாம்பரனே யாவருக்கும் அருள் பாலிப்பவரே நாங்கள் உம்மை எவ்விதம் துதிப்போம். நாங்கள் முன்பு இயற்றிய தவம் வேத அத்தியயனம் யாகங்கள் புண்ணிய காலங்களில் செய்த தான தருமங்கள் தீர்த்த ஸ்நானங்கள் முதலியயாவும் உம் திவ்வியமான தரிசனத்தால் கைகூடின உம்மை நினைத்தவன் கிருதகிருத்தியனாவான். அப்படியிருக்கும் போது தேவரீரே எம்மை நினைத்ததால் எங்களுக்குண்டான பெரும் பேற்றை என்னவென்று சொல்வோம்? மிகவும் குள்ளனுக்கு உயர் மரத்துப்பழம் எட்டியது போலவும் பிறவிக்குருடனுக்கு கண்கள் கிடைத்தது போலவும் ஊமைக்கு வாய் பேச்சு உண்டானது போலவும் பரம தரித்திரனுக்கு பெரும் புதையல் கிட்டியது போலவும் முடவன் மலையைத் தாண்டுவது போலவும் மலடிக்கு மைந்தன் பிறந்தது போலவும் உம் அரும்பெரும் தரிசனமானது அடியேங்கட்குக் கிடைத்தது. அதனால் முனிவர்களில் உயர்ந்தவர்கள் எனப் பெயர் பெற்றோம். எங்களால் இயன்றதாகவும் நன்மை பயப்பதாகவும் உள்ள ஏவல் பணிகளைச் செய்யக் கட்டளையிட வேண்டுகிறோம். என்று இறைஞ்சினார்கள்.

அனைவராலும் வழிபடத் தக்க அறிவியல் முனிவர்களே உங்களை நான் நினைத்து உங்களை இங்கே வருவித்தகாரணம் என்னவென்று சொல்கிறேன். பிருமதேவனைக் குறித்துத் தவஞ்செய்த துராத்மாவான தாரகாசுரன் வலிமையான வரங்களை பெற்று தேவர்களுக்குத் துன்பஞ் செய்கிறான். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், சூரியன்; சந்திரன் யாகஞ் செய்வோன் எனப்பிரிந்த என் அஷ்ட மூர்த்தங்கள் எட்டு வடிவப் பொருட்கள் உலகத்திற்கு உற்றுதவி செய்வதற்கேயன்றி தன்னலப்பயனுக்காக அல்ல ஆகையால் யான் சிலையுடன் கூடி நிற்க திருமணஞ் செய்து கொள்ள விரும்புகிறேன் சிவையான பார்வதியோ, அரும் பெரும் முனிவர்களாலும் ஆற்ற முடியாத அருந்தவம் செய்து முடித்தாள். அவளுக்கு இஷ்டமான வரத்தின் பயன் அவளுக்குக் கைகூட வேண்டும். ஆகையால் பார்வதியின் பிதாவான பர்வதராஜனின் மாளிகைக்கு நீங்கள் சென்று அந்த ராஜனையும் அவன் மனைவியான மேனையையும் சந்தித்து, நற்செயல் நிறைவேறும் வண்ணம் மணம் பேசி, பார்வதியை எனக்கு மணமுடிக்கும்படி விரும்புகிறேன் பார்வதியோ ஸர்வகுண பரிபூரணையான கன்னிகையாகையால் அவளை எனக்கு மணமுடித்துக் கொடுக்கும்படி பர்வதராஜனை கேட்டு நிச்சயித்துக் கொண்டு தேவர்களுக்கு நன்மையுண்டாகும்படி விதிமுறைப்படி, நீங்களே மணவினையை நடத்துவிக்க வேண்டும் மற்றபடி செய்ய வேண்டியவற்றையெல்லாம் தெரிந்துள்ள உங்களுக்கு விசேஷமாக நான் சொல்லவேண்டியது எதுவுமில்லை என்றார்.

அதைகேட்ட சப்தரிஷிகள் ஆனந்தப் பரவசமடைந்தார்கள், அரி அயனாலும் வணங்கத் தக்கவரும் புருஷார்த்தங்கள் அனைத்தையும் தரவல்லவருமான சிவபெருமான் உலக நன்மையின் பொருட்டு நம்மை இந்தக் காரியத்துக்கு ஏவினார். இவரோ சர்வலோக கர்த்தாவாகவும் பார்வதியோ சர்வலோக மாதாவாகவுமிருப்பதால் இந்த ஏவல் பணி வெகு உசிதமேயாகும் இந்தக் காரியம் வளர்பிறைச் சந்திரனைப்போல் விருத்தியடைய வேண்டும் என்று சப்தரிஷிகளும் சொல்லிக் கொண்டு பிறை சூடிய பெருமானை வணங்கி விடைபெற்று வானவழியாக இமயமலையிலுள்ள பர்வத ராஜனது தலைநகரை அடைந்தார்கள். அந்தத் திவ்விய நகரத்தைக் கண்டதும் சப்தமகரிஷிகளும் உவகை பெருகித் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளலானார்கள்.
இந்த நகரம் குபேரனது அழகாபுரியைவிட தேவேந்திரனின் அமராவதி பட்டணத்தையும் விட ஆதிசேஷனது யோகவதியை விடச் சிறப்பாகத்தோன்றுகிறதே! ஸ்படிகக்கற்களினாலும் பலவகை ரத்தினங்களாலும் கட்டப்பட்ட அழகு கொழிக்கும் மாளிகைகள் மிகவும் மனோரம்மியமாக ஒளி வீசி ஜொலிக்கின்றன சூரிய காந்த மணிகளும் சந்திர காந்த மணிகளும் சுவர்த்தனங்களிலெல்லாம் மின்னுகின்றன. இத்தகைய இமயமலையின் அழகுக்கு ஈடாகுமா? என்று சப்தரிஷிகள் வியந்தும் உவந்தும் சொல்லிக் கொண்டேமுக மலர்ச்சியோடு மலையரசனின் மாளிகையை அடைந்தார்கள்.

சூரியனுக்குச் சமமான தேஜஸ் வாய்ந்த சப்தரிஷிகளைக் கண்டதும் பர்வதராஜன் தன் மனைவியான மேனையை நோக்கி, ஏழு சூரியர்கள் நமது இல்லதுக்கு வருகிறார்களோ? நான் கிரஹஸ்தனாகையால் இவர்களை நம் கன்னிகை பார்வதியே பூஜிக்க வேண்டியவள். இப்போது தான் நாம் தன்யர்களானோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆகாயத்திலிருந்து சப்தரிஷிகள் கீழே இறங்கினார்கள். அவர்களை பர்வதராஜன் எதிர்கொண்டு வரவேற்று வழிபட்டுத் திருவடிகளில் விழுந்து வணங்கினான். சப்தரிஷிகள் தங்கள் கைகளால் ஹிமாவானைப் பற்றித்தூக்கி சுபமுண்டாகுக, சுபம் உண்டாகுக, சுபம் உண்டாகுக என்று ஆசீர்வதித்தார்கள், பர்வதராஜன் அவர்களை வணங்கி, ஞானரிஷிகளே! இன்றுதான் என் குடில் புனிதம் பெற்றது என்று பரவசத்தோடு சொல்லி அவர்களுக்கு ஆசனம் கொடுத்து உட்காரச் செய்து அவர்களுடைய ஆக்ஞையைப் பெற்றுத் தானும் உட்கார்ந்து; மஹாத்மாக்களேநீங்கள் எழுவரும் எந்தக் காரணத்திற்காக என் மாளிகையை வந்தடைந்தீர்களோ? நான் தன்யனானேன். கிருத கிருத்தியனானேன் உலகத்தில் பலராலும் புகழத்தக்கவனானேன். எதற்காக வந்தீர்கள்? தாசனான எனக்குத் தெரிவிக்க வேண்டும் அடியேனுக்கு ஏதாவது கட்டளையிடுவதானால் விரைவில் சொல்லியருளுங்கள்! என்றான் பவ்யமாக, சப்த ரிஷிகள், சந்தோஷித்தார்கள். அவர்கள் பர்வதராஜனை நோக்கி ஹிமவானே! நீயே பாக்கியசாலி நீயே தன்யன்! பரோபகார சிந்தையால் சிவபெருமான் சகல ஜீவன்களுக்கும் சுகம் நல்க விருப்பங்கொண்டு எங்கள் மூலம் உன் புதல்வியான பார்வதியை தன் நாயகியாக்கிக் கொள்ள நாடுகிறார் அது உனக்குச் சம்மதமாகி, பார்வதியை அவருக்கு கன்னிகாதானஞ் செய்து மணம் முடித்து வைப்பாயானால் சகல உலகங்களுக்கும் சுகம் செய்யும் சங்கர பகவானுக்குப் பூஜ்யராவீர்; இதில் ஐயமில்லை, உன் பெண் பார்வதியும் அவரது திருவருளால் உலக அன்னையாவாள். உன் ஜன்மமும் பயன் பெற்ற தாகும் என்று கூறினார்.

அதைக் கேட்டதும் பர்வதராஜன் சப்தரிஷிகளே இந்த விஷயத்தில் என் பத்தினியான மேனையின் கருத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். பார்வதியே என் தேகம் அவளே என் சம்பத்து அவளே என் கீர்த்தி என்று சொல்லிவிட்டு, மேனையோடு ஆலோசித்து அவளையும் இணங்க வைத்து, பார்வதியை உலக அன்னையாகப் பாவித்து ரிஷிகளின் மடியில் அமர்த்தி, முனிவர்களே, இந்தப் பார்வதி என்னால் உங்களுக்கு பிøக்ஷயாகக் கொடுக்கத் தக்கவள். என்னால் கொடுக்கத்தக்க பிøக்ஷ இதுதான் என்றான். அதற்கு சப்த ரிஷிகள், இமவானே, நாங்கள் பிக்ஷகர்கள், நீரோ பிøக்ஷ கொடுப்பவர் பார்வதியே பிக்ஷõ கதம்பமானாள். இதைவிடச் சிறந்தது யாது? என்று சொல்லிப் பார்வதியை நோக்கி, தேவி! நீ சிவபெருமானுக்குச் சுகம் கொடுப்பவளாக என்று வாழ்த்திக் கையைப் பிடித்துக் கொண்டு உனக்குச் சுபம் உண்டாகப் போகிறது. வளர்பிறை நிலவைப்போல்  உன் கணங்கள் உன் வீட்டில் சேர்ந்து நாளா வண்ணம் விருத்தியடையப் போகிறார்கள், என்று சொல்லி விட்டு இமவானிடம் பழங்களோடும் மலர்களையும் தாம்பூலங்களையும் ஒருவருக்கொருவர் திருமண நிச்சயதார்த்தம் சொல்லி மாற்றிக் கொண்டார்கள் அப்போது மேனை கண்ணீர் வடித்தாள். அதைக் கண்ட அருந்ததி சிவபெருமானின் அநந்தகல்யாண குணங்களை அவள் ஆவலுறும் படி எடுத்துச் சொல்லி கண்ணீரைத் துடைத்தாள். பிறகு ரிஷிகள் நான்காம் நாளன்று உயர்ந்த லக்கனத்தை திருமணத்துக்கு நிச்சயித்து பர்வதராஜனிடம் விடைபெற்று மகிழ்ச்சியுடனும் தம்மனைவியருடனும் காசித் தலத்தை அடைந்து, சிவபெருமானைத் தரிசித்து மனைவியின் முடிவு கூறி தம் இருப்பிடஞ் சென்று மீண்டும் வருவதற்கு உத்தரவு கேட்டார்கள். சிவபெருமான், சப்தரிஷிகளே நீங்கள் என்னால் விவாகத்தில் அத்வர்யுக்களாகச் செய்யப்பட்டீர்கள் ஆகையால் நீங்கள் உங்கள் சீடர்களோடு வரவேண்டும் என்று கட்டளையிட்டார் மகரிஷிகள் அவ்வாறே ஆகுக என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்கள்.

பிறகு சிவபெருமான் தம் கணங்களுடன் திருமண உற்சவத்தைக் கருதிக் கைலாயத்தையடைந்து நாரத முனிவரை நினைத்தார். நாரதரும் உடனே தோன்றி கல்யாண சுந்தரரே! அடியேனை நினைக்கக் காரணம் என்ன? என்று புன்சிரிப்போடு கேட்டார். சிவபெருமான் நிகழ்ந்த செய்திகளைச் சொல்லிக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார். அப்போது சிவபெருமான் பார்வதி கூறியவார்த்தைகளைச் சொல்லி. பார்வதி என்னைத் தன் வசப்படுத்தத்தக்க அரும்பெரும் தவத்தைச் செய்தாள் என்று சொன்னார் அதற்கு நாரதர் சங்கரரே? தாங்கள் பக்தர்களுக்கு தன் வசமாவதையே விரதமாகக் கொண்டவராயிற்றே பார்வதியின் மனோ பீஷ்டத்தை நிறைவேற்றினீர் யான் செய்யத்தக்க செயல் என்ன உண்டு? உத்தரவிட்டால் தடையின்றிச் செய்கிறேன். என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் நாரதா! நீ கூறியபடியே பார்வதியே அடைவேன், இவ்விஷயத்தில் உனக்குச் சந்தேகமே வேண்டாம், இனி நாம் சொல்லும் காரியத்தை நீயே செய்ய வேண்டும். நாரதா, பிரமன், விஷ்ணு முதலிய தேவர்கள் சப்தரிஷிகள், சப்தமாதர்கள், யக்ஷர்கள். கந்தவர்கள், நாகர்கள் முதலான அனைவரையும் என் திருமணத்திற்கு அழைத்து வருவதுடன் இந்த விவாகத்திற்கு வராதவர்கள்எனக்குப் பிரியர்கள் அல்லர் எனக்கூற வேண்டும் என்றார் அவரை நாரதர் வணங்கி விடைபெற்றுச் சென்று, சகலமான தேவர்களையும் கண்டு சிவபெருமானின் கட்டளையை அறிவித்து அதிவிரைவில் சிவ சன்னிதானத்தை அடைந்தார்.

15. ஊர்வலத்தில் மேனை தேடிய மாப்பிள்ளை

தேவர்கள் அனைவரும் சிவபெருமானைத் தரிசித்து வணங்க வேண்டும் என்று ஆசையோடு திருமணத்துக்கு வேண்டிய உபகரணங்களோடும் கந்தர்வர்கள் அப்ஸரஸ்திரீகள், வாத்தியங்கள் முதலியவற்றோடும் திருக்கயிலைக்கு வந்து சேர்ந்தார்கள். பரிபூரணரான பரமசிவனாருக்கு அலங்காரஞ் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை, ஆயினும் எல்லோரும் பகவத்சேவை செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்களாய் தம்மால் இயன்றவாறு மண நாயகனாக சிவபெருமானை அலங்கரித்தார்கள். சிவனாரின் மகுடத்தில் அமர்ந்தான். திருநெற்றிக் கண் திலகமாயிற்று, காதணிகளான சர்ப்பங்கள் பொற்குண்டலங்களாயின. விபூதியே சந்தனமாயிற்று. யானைத்தோலே பட்டுப் பீதாம்பரமாயிற்று பாம்பு மாலைகள் நவரத்தின நகைகளாயின சிவபெருமானது மகிமையினாலே அவர் தேகத்திலிருந்து இயற்கைகளே கண்டவர்களுக்கு அலங்காரங்களாகத் தோன்றின மாப்பிள்ளை கோலம் பூண்ட சிவபெருமான் யாராலுமே வர்ணிக்க முடியாத சர்வாபரணலங்கார உருவத்தோடு விளங்கினார். அப்போது பிரமத கணங்கள் சகல வாத்தியங்களையும் முழங்கினர் தேவர்கள் மகேஸ்வரனுக்கு பணியாற்ற வரலானார்கள் அவர்களில் பிருமதேவர். அன்னவாகனத்தில் அமர்ந்து சகல முனிவர்களும் புடைசூழ்ந்து வர பூதபதியான பரமேஸ்வரனைச் சேவிக்க வந்து கும்பிட்டு நின்றார் மகாவிஷ்ணு கருடவாகனத்தில் அமர்ந்து சர்வலங்கார பூஷிதராக சகல சேவர்களுடனும் பரிவாரங்களுடனும் வந்து சேவித்து, அருகில் இருந்தார், இந்திரன் முதலிய திக்குபாலகர்கள் யானை, குதிரை, சிவிகை, விமானம் முதலிய தத்தமது வாகனங்களில் ஏறிப் பரிவாரங்களுடனும் ஆயுதங்களுடனும் வந்து பணிந்து ஒரு புறமாக இருந்தார்கள். அஷ்டவசுக்கள் துவாதச ஆதித்தர்கள், முனிவர்கள். கங்கை முதலிய நதிகள், சப்த சமுத்திரங்கள், கந்தவர்கள், தேவதாசிகள், நாகர்கள் முதலிய யாவரும் சர்வாலங்காரங்களோடு தத்தமது பரிவாரங்களோடும் பேருவகையோடும் சிவபெருமானைக் கண்டு தொண்டு புரிய வந்து சேர்ந்தார்கள்.

அந்தச் சமயம் சிவபெருமான், திருக்கைலாய மலையிலிருந்து புறப்பட்டுத் தேவர்களை நோக்கி, நீங்கள் அனைவரும் எனக்கு முன் செல்லுங்கள்! என்று பணித்தார். உடனே தேவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் சகல வாத்தியங்களையும் முழக்கிக் கொண்டு புறப்பட்டனர். சப்தரிஷிகள் ஆசிர்வதிக்க பாநுகம் பன் தன் ஆயிரம் வாய்களால் சங்கத்வனி செய்ய, பாணாசுரன் தன் ஆயிரங் கைகளால் குடழவு அடிக்க நந்திதேவர் பொற்பரம் யேந்தி தேவர்முனிவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன் செல்ல இந்திரன் காளாஞ்சி ஏந்த, ஈசானன் அடப்பை தாங்க, வாயு ஆலவட்டம் வீச, அக்கினி தூபம் ஏந்த, வருணன் பூரண கும்பம் தாங்க, நிருதி கண்ணாடி ஏந்த, குபேரன் நவநிதிகள் சிந்த: யமன் கஞ்சுகத் தொழில்புரிய நாகராஜன் மாணிக்க தீபங்கள் ஏந்த, வேதங்கள் திருவடியைச் சுமக்க கங்கை யமுனை முதலிய நதிமங்கையர் குளிர்ந்த கவரிவீச குண்டோதரன் குடைபிடிக்க, பிரம்ம விஷ்ணுக்கள் இருபுறமும் கை குவித்து வர, சர்வ அலங்கார ஆடம்பர பூர்வமாகச் சிவபெருமான் ரிஷிப வாகனத்தில் அமர்ந்த வண்ணம் இமயமலையை நோக்கி மணம் புரிய வரலானார். இந்நிலையில் பார்வதியின் தந்தை ஹிமவான் தனது உற்றார் உறவினர்களை யெல்லாம் வரவழைத்து, திருமண மண்டபத்தை வினோதமாக அலங்கரிக்கும்படி கட்டளையிட்டான். நானாவிதவிசித்திர தோரணங்களும் கொடிகளுமாக தன் தலை நகரை அழகுறச் செய்தான்.

பர்வதராஜன் தன் குமாரியைக் கன்னிகா தானஞ் செய்ய மங்கள ஸ்நானம் செய்வித்து கல்யாண திருக்கோலத்திற்கேற்ப அலங்கரித்து நாந்தி, தேவதா, ஆஹ்வாநம அங்குரார்ப்பணம் முதலிய தேவ பூஜைகளைச் செய்வித்து விவாக மஹோற்சவத்திற்கான உபகரணங்களை சித்தப்படுத்திவிட்டு மணமகனாரான சிவபெருமானைச் சகல தேவர்களோடும் அழைத்து வரும்படி தன் ஆத்ம நண்பனான கந்தமாதன பர்வதத்தையும் மற்றொரு சேவகனையும் பதிவெண்வகை மேள வாத்தியங்களோடு எதிர் அனுப்பி, சிவபெருமானின் வருகையை எதிர்பார்த்திருந்தான். மணக்கோலத்து மகேஸ்வரர் தம் சைனனியங்ளோடும் சகல தேவர்களோடும் வைபவமாக பர்வதராஜன் தூதுவரால் அறிந்தான். உடனே தன் பரிவாரங்களுடன் எதிர் சென்று சகல தேவர்களோடும் வரும் சாம்பவ மூர்த்தியை கண்டு ஆச்சிரியமடைந்தான். தேவர்கள் அனைவரும் பர்வத ராஜனின் சேனையைக்கண்டு வியந்தார்கள், இரண்டுமாபெரும் கடல்கள் ஒன்றாகச் சேர்ந்து போல இருசாராரின் சேனைகளும் ஒன்று கூடின. இவ்வாறு அனைவரும் பட்டணத்தை நோக்கி வந்தார்கள். ஹிமவான் தேவர்களுக்குத் தக்கபடி விடுதிகள் நியமித்தனுப்பிவிட்டுத் திருமணமேடைக்குச் சென்று அலங்காரங்களைச் சரிவரப்பார்த்து ஸ்நானம் பானாதி நித்தியக் கடன்களை முடித்துக்கொண்டு மணமகனாரின் வருகையை எதிர்பார்த்திருந்தான்.

பர்வதராஜனின் பத்தினியான ராணிமேனையோ நாரதருடன் தன் உப்பரிகையின் மேல் நின்று பக்தர்களுக்குச் சுகத்தைக் கொடுக்கும் பரமேஸ்வரனைக் காண வேண்டும்! அவர் எவ்வளவு அழகரோ? அவருக்காக என் அருமைச் செல்வி பார்வதி அரும்பெரும் தவஞ்செய்தாளே; என்று சொன்னாள். அதையுணர்ந்த சிவபெருமான் அந்த மேனை பிரமிக்கும்படியாகத் தம் சேனா பலத்தை காட்டி நின்றார். தேவர்களின் மாபெரும் சேனையைக் கண்ட மேனை மகிழ்ந்தாள் இவ்வளவு சேனைகளுக்கும் சிவபெருமானே நாயகராக இருப்பாராகில் அவர் புகழுடையவராகவும் பேராற்றல் உடையவராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். முனிவர்களே! அப்போது ஒரு வேடிக்கை நிகழ்ந்தது அதையுஞ் சொல்கிறேன். கேளுங்கள்.

மணமகனாரான சிவபெருமானின் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த தேவர்கள் கந்தர்வர்கள் முதலானோர் நானாவித அலங்காரங்களோடும் பலவித விருதுக் கொடிகளோடும் அதி அழகான தேவமங்கையர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார்கள் அவர்களில் விசுவாசு என்ற கந்தர்வராஜனைக் கண்ட மேனை அவனே சிவன் என்று நினைத்து மகிழ்ந்து என் மருமகன் பெண்கள் சேனையுடன் வருகிறானே! என்று நாரதிரிடம் சொன்னான் நாரதரோ புன்சிரிப்போடு இல்லையே! அது மாப்பிள்ளையல்ல சிவசந்நிதியில் அவன் சங்கீதம் பாடுவோனாயிற்றே என்றார் அதைக்கேட்டதும் மேனை இன்னும் அதிக உற்சாகப்பட்ட அந்த ஆணழகனே மாப்பிள்ளைக்கு ஊழியன் தான் என்றால் மாப்பிள்ளை சிவபெருமான் எப்படியிருப்பானோ என்று நினைத்தாள் அப்போது கீழே ஊர்வலத்தில் மணிக்ரீவன் முதலான யக்ஷர்களும் அவர்களுடைய சேனைகளும் வருவது தெரிந்தது. அவர்களது தலைவனான குபேரனைக் கண்டதும் மேனை மகிழ்ச்சி பொங்க ஆகா! என் மகளுக்கேற்ற மணளானான சிவன் அவன் தான் என்று மயங்கினாள். அதற்குள் வருணன் தன் சேனா சமுத்திரத்துடன் வரவே ஒரு வேளை அவன்தான் சிவன் ஆவனோ? என்றும் இந்திரன் தேவமங்கையருடன் வர, நான் பார்த்த எல்லோரையும் விட இவனே சிறந்தவன் இவனே சிவனாகவேண்டும் என்று நாரதரிடம் குதூகலத்தோடு சொன்னாள். ஆனால் அவர்களில் ஒருவருமே சிவபெருமான் அல்ல வென்று நாரதர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சூரியன் தன் அகண்ட தேஜசுடன் கூடிச் சகல தேவர்களும் புடை சூழ வருவதைக் கண்டு இவன்தானோ சிவன்! என்று மேனை கேட்டாள் அவனுமல்ல என்றார் நாரதர். அப்போது சந்திரன் சகலகிரகங்களோடும் குளிர்ந்த காந்தியோடும் வருவதை மேனை பார்த்துவிட்டு ஆஹா! இவன் தான் சிவன்! இவனே என் மருமகனானால் என் குலம் முழுவதும் குளிர்ந்து பவித்திரமாகுமே!

இத்தகைய தேஜசுடையவன் என் மருமகனாயின் என் புதல்வி பார்வதியின் பாக்கியத்தை எத்தனையாண்டுகள் சொன்னாலும் கூற முடியுமா? என்றாள். அதற்கு நாரதர்., இவனும் சிவன் அல்ல. இவன் சந்திரன் என்றார். அப்போது பிருமதேவர் சகல பிரம்ம ரிஷிகளோடும் தேஜோராசியாக வருவதை மேனை உற்றுப் பார்த்துவிட்டு ஆகா அவனாவது சிவனாவானோ ஆகானோ? என்றும் குழம்பினாள். மகாவிஷ்ணு மேகவர்ணராய் சதுர்புஜ பீதாம் பரதாரயாயும் ஸ்ரீவத்ச சங்கு சக்கர கிரீடம் முதலிய ஆபரண அலங்காரராகவும் கோடி மன்மதர்களின் பேரழகோடும், தாமரை போன்ற கவர்ச்சிகரமான கண்களோடும் பக்தர்கள் புடைசூழ கருட வாகனத்தில் வருவதைக் கண்டு இவனே சிவன் நான் தன்யளானேன் என்று மேனை குதூகலம் பொங்க ஆனால் நாரதரோ இவரும் சிவபெருமான் அல்ல, இவரைக் காட்டிலும் சிறந்தவர் சிவபெருமான் அச்சிவ பெருமானின் அழகை என்னால் வருணிக்கவே முடியாது என்றார். ஒரு குறும்புச் சிரிப்போடு அப்போது பிருகு முதலிய முனிவர்களும் கங்கை முதலிய நதிகளும் சீடர்களும் இஷ்டகாமியங்களைக் கொடுக்கும் கற்பக விருட்சம் காமதேனு முதலியனவும் புடைசூழ அவர்கள் மத்தியில் பிருகஸ்பதி முனிவர் வருவதைக் கண்ட மேனை இவனே சங்கரன் என்றாள். அதற்கு நாரதர் இவரைக் காட்டிலும் சிறந்தவரும் நிர்குணருமான சிவபெருமான் வருவார் என்றார் அதற்கு மேனை? மூவுலத்திலுள்ளவர்களையும் கண்டேன். அவர்களில் ஒருவருமே சிவனல்லவென்றால் அந்த மாப்பிள்ளை எப்படியிருப்பாரோ? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே  கீழே ஊர்வலத்தில் சிவபெருமான் வந்தார். அவரை மேனைக்கு நாரதர் சுட்டிக்காட்டி மேனையே இவரே சிவபெருமான் என்றார் மேனையும் மிகவும் ஆவலோடு சிவபெருமானைப் பார்த்தாள். அப்போது அவரோடு வாழு ரூபமான சேனைகள் மர்ப சப்தத்துடன் வந்தார்கள் நாரதர் மேனையை நோக்கி  இவர்கள் அவரது சேனைகள் இன்னும் அவரது சேனைகள் வரக்கூடும் என்றார்.

அதே சமயத்தில் பூதப்ரேத பைசாசங்கள் திரும்பிய முகமுடையவர்கள் வேடிக்கையான விகட உருவமுடையவர்கள் பயங்கர கரிய நிறத்தார், நொண்டிகள் ரோமமுடையோர் தண்டதர, பாசபாணிகள் விருத்த வாகனம் டமருக கல்ல வாத்தியக்காரர், கொம்புதாரை ஊதுவோர் முதலியவர்கள் கணக்கில்லாது வருஞ்சேனையைக் கண்டு மேனை பயந்தாள். அத்தகையவர்களுக்கு இடையே நிர்குணராயும் ஐந்து திருமுகமும் பத்து கரங்களும் மூன்று கண்களும், விபூதிப் பூச்சும் சடைமுடியும் சந்திரசேகரமும் கபால மாலிகாபரணமும் பெரும் புலித்தோல் ஆடையும் பிநாகம் என்னும் வில்லும் கங்காளமும் சங்கபூஷணமும் உடையவராய்ச் சிவபெருமான் எருது வாகனத்தின் மேல் யானைத்தோல் விரித்து அதன் மீது அமர்ந்து நித்திரை செய்து உடலசைவான் போல இருந்தார். நாரதர் உடனே குறுஞ்சிரிப்போடு தன் அருகே இருந்த மேனையைக் கூப்பிட்டு மேனா! அதோ அவரே சிவபெருமான் என்று சுட்டிக் காட்டினார். உடனே மேனை திடுக்கிட்டு சூறாவளிக் காற்றில் அடிபட்ட கொடிபோலத் துக்கம் அடைந்து ஆ பார்வதி என்ன காரியம் செய்து விட்டாய் ஏ துன்மார்க்கி என்று சொல்லி கீழே விழுத்து மூர்ச்சையடைந்தாள். பிறகு சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்திருந்தாள்.

16. மேனையின் மனக்குமுறல்

முனிவர்களே! மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடன் ராணி மேனை ஆத்திரத்தோடு நாரதரையும் தன் மகள் பார்வதியையும் இகழ்ந்து பேசத் தொடங்கினாள். அவள் நாரதரைப் பார்த்து நாரதரே! நீர் தானே எங்கள் மன்னவரிடம் சென்று உன் மகளைச் சிவபெருமான் வரிக்கப் போகிறார் என்று சொல்லி சிவபெருமான் யோகத்திலிருக்கும் போது, பணிவிடை செய்யச் செய்து எங்களை மோசஞ் செய்தீர். நாங்களும் உம் வார்த்தையை நம்பி மோசம் போனோம் அருந்தவ முனிவர்களாலும் செய்ய முடியாத கடுந்தவத்தைப் பார்வதியும் செய்து முடித்தாள். அத்தகைய தவத்துக்கு இத்தகைய பயனாயா அவையச் செய்தீர் நான் என்ன செய்வேன்? எங்கு போவேன் கையில் விளக்கை ஏந்திக் கிணற்றில் விழுந்தவளானேன்! உமக்கு என்ன இதனால் கெட்டது? எங்களுக்குத் தானே எல்லாமே வீணாயிற்று? பார்வதியை திருமணம் பேச வந்த அந்த சப்தரிஷிகள் இப்போது எங்கே போனார்கள்? அவர்களைக் கண்டால் தாடி மீசைகளைப் பிய்த்து விடுவேன் அவர்களுடன் வந்த அந்த அருந்ததியும் மிகக் கொடியவள். அவள் சொன்ன வார்த்தையாலும் என் புத்திரியின் சொந்த விருப்பத்தாலும் அல்லவா இப்படியாயிற்று? என் மகள் பார்வதிக்கு இந்தக்கல்யணத்தை முடிவு செய்தது பொன்னைவிட்டு கருகமணியைக் கைக்கொண்டது போலாயிற்றே? அன்னப் பறவைக்கு பதிலாக காக்கையைப் பொற்கூட்டில் குடியேற்றியது போலாயிற்றே? கங்கை நதியின் நன்னீரைக் குடிப்பதை விட்டுக் கிணற்று நீரைக் குடித்தது போலாயிற்றே? சூரிய ஒளியை விட்டுவிட்டு மின்மினிப் பூச்சியின் ஒளியைக் கண்டு மகிழ்ந்தது போலாயிற்றே? சிங்கத்தை விட்டு சிறு நரியைபணிந்தது போலாயிற்றே? அரிசியை விட்டு உமியைத் தின்றது போலாயிற்றே யாக விபூதியை விட்டு மயான சாம்பலை அணிந்தது போலாயிற்றே! சகல தேவர்களையும் விட்டுவிட்டு இந்த விகாரரூபியான சிவனையடைவதற்குத் தானா என் குமாரி மிகக் கடுமையான தவம் செய்தாள்? நாரதரே நீரும் உமது புத்தியும் உமது கலகமும் கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பார்வதியால் எங்கள் குலம், ஒழுக்கம் திறமையாவுமே வியர்த்தமாகப் போயிற்றே இவற்றை யெல்லாம் கண்ணால் காண்பதைவிட நாங்கள் இறந்தொழிவதே மேல் இனி என் கணவரின்  முகத்தில் எப்படி நான் விழிப்பேன்? என் வீட்டிற்கு அந்த சப்தரிஷிகள் ஏன் வர வேண்டும்? எல்லோருமாகச் சேர்ந்து என் குலத்தைக் கெடுத்துவிட்டார்களே! நான் மலடியாக இருந்திருந்தாலும் நன்றாக இருந்திருக்குமே?அல்லது இறந்து ஒழிந்தாலும் நன்றாக இருந்திருக்குமே? என்று பலவாறும் கவலையோடு ஓலமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பிரும்மதேவர் அங்கு வந்து சேர்ந்தார்.

அவர் வந்த சமயத்தில் நாரதமுனிவர் மேனையே நோக்கி மேனா நீ சிவபெருமானின் இயற்கையான வடிவத்தை அறியவில்லை? என்றார். அதற்கு நாரதரை சீறிப்பார்த்து ஐயா, துஷ்டரே நீர் கொஞ்சம் தொலைவிலேயே இரும். நீர் எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று குமுறினாள். அப்போது அங்கு வந்த பிரும்ம தேவர் மேனையை நோக்கி மேனா! நான் சொல்லும் வார்த்தையைக் கேள். சங்கரபகவானே உலகங்களைச் சிருஷ்டிப்பவரும் ரக்ஷிப்பவரும் சங்கரிப்பவருமாக இருக்கிறார். நீ அவரது திவ்விய சவுந்தர்யத்தை அறியாமல் வீணாகத் துக்கப்படுகிறாய்? என்றார். அதற்கு மேனை, சுவாமி! நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து என்ன காரணத்துக்காக எங்கள் குலத்தை வீணாக்க முயற்சிக்கிறீர்கள்? என் அருமை குமாரி பார்வதியின் அழகையெல்லாம் அவலமாக்கி அவளை இவ்வகையான விகார ஆண்டிக்கு திருமணஞ் செய்து கொடுப்பதைவிட என் குமாரியை கொன்றுவிடுவது நல்லது. நீங்கள் அவளைச் சிவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கும்படிச் சொல்லக் கூடாது என்றாள். அதற்குள் இந்திரன் முதலான திக்குப் பாலகர்கள் மேனையிடம் வந்து, தாயே சர்வ உத்தமரும் சகல துக்கத்தைப் போக்கடிப்பவருமன சிவபெருமான் உன் மகள் பார்வதிக்குத் தரிசனம் கொடுத்தருளினார். அத்தகைய தரிசனம் வேறு ஒருவருக்கும் கிடைக்கத்தக்கது அல்ல என்றார்கள். அதைக் கேட்கச் சகிக்காத மேனை இந்த வார்த்தையை நீங்களும் என்னிடம் சொல்லாதீர்கள். இப்படிச் சொல்வதைவிட என்னைக் கொன்றுவிடுங்கள் மகா அவலட்சணமான அந்தச் சிவனுக்குப் பேரழகியான என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன்.

அப்போது சப்தரிஷிகள் மேனையிடம் வந்து மேனையே! நாங்கள் கூறியது பொய்யல்ல வீணானதுமல்ல சிவதரிசனம் விசேஷ பயன்களைக் கொடுக்கக் கூடியது, சிவனார் உங்களிடம் கன்னிகாதானம் பெறுவதற்கு உத்தம பாத்திரராகவே உங்கள் மனைக்கு எழுந்தருளியிருக்கிறார். அவர் உங்கள் மனைக்கு வந்ததைவிட உங்களுக்குச் சுபத்தை உண்டு பண்ணக்கூடியது வேறு ஒன்றுமில்லை என்று எடுத்துரைத்தார்கள். அவர்களது வாக்கியத்தையும் மேனை புறக்கணித்து நான் ஆயுதங் கொண்டாவது என் பெண்ணைக் கொன்று எறிவேனேயொழிய அந்தச் சாம்பல்பூச்சு சங்கரனுக்கு என் மகளை ஒருபோதும் கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பர்த்தாவான பர்வதராஜன் அங்கு வந்தான். மேனை துக்கத்தோடும் கோபத்தோடும் பேசுவதை அவன் கேட்டதும், பிரியமேனையே! நமது அரண்மனைக்கு யார் யார் வந்திருக்கிறார்கள்? நீ இந்தச் சமயத்தில் துக்கப்படுவானேன்? நீ ஏன் சப்தரிஷிகளை நிந்திக்க வேண்டும்? சர்வலோகங்களையும் காப்பவர் சிவபெருமான். நிக்கிரகானுக்கிரகம் செய்பவரும் அவரே தான் பூஜிக்கத்தக்கப் புனிதரும் அவர்தான். இதையெல்லாம் நான் அறிந்து கொண்டேன் ஆகையால் நீ துயரப்படாதே விவாக காரியம் இனிது நடக்க வேண்டும்! என்றான். ராணிமேனை, மேன்மேலும் ஆத்திரப்பட்டு உணர்ச்சியால் துடித்து பர்வதராஜனை நோக்கி, நாதா நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அவ்வாறே செய்ய வேண்டும். அதாவது என்மகள் பார்வதியின் கழுத்தில் ஒரு பெரிய பாறையைக் கட்டி, அவளைச் சமுத்திரத்தில் விட்டுவிட வேண்டும் என்று சொன்னாள்.

அப்போது அவள் குமாரி பார்வதியே அங்கே வந்து அம்மா! உனக்கு இந்த விபரீதபுத்தி, இந்தப் புத்தி உனக்கு எப்படி வந்தது? தர்மத்தையே முக்கியமாகக் கொண்ட நீ எவ்வாறு தர்மத்தைக் கைவிட்டாய்; சாம்பமூர்த்தி சர்வோத்தமர் பிரம்மா விஷ்ணு ருத்ராதியருக்குக் காரணமானவர். எல்லோருக்கும் நலமும் சுகமும் நல்குபவர் நிக்கிரக அனுக்கிரக சமர்த்தர் சகலமும் தன்னிடத்தில் கொண்டவர் சர்வலோகங்களையும் படைத்துக் காப்பவர்? பிறப்பு இறப்பு பந்தக்கட்டு இல்லாதவர் அதனாலேயே தேவர்கள் எல்லோரும் சேவகர்கள் போல இங்கு அவருடன் வந்திருக்கிறார்கள் அவர்களையெல்லாம் நீ பார்க்கவில்லையா? நீ எனக்கு நன்மை செய்பவளானால் சிவபெருமானைவிடச் சிறந்தவராக யார் இருக்கிறார் என்று எனக்கு சொல்ல வேண்டும் செய்த திருமணமுயற்சியைப் பயனுறச் செய். உலகங்களுக்கெல்லாம் சர்வ சுகங்களையும் பொழிகிற சங்கரபகவானுக்கு என்னை நீ கன்னிகாதானமாகக் கொடுத்து நமது குலத்தையும் வீட்டையும் புனிதமடையச் செய். கவலைப்படாதே, நீ என்னைச் சிவபெருமானுக்கு கொடுக்காவிட்டால் நான் இனிவேறு ஒருவனையும் திருமணஞ் செய்து கொள்ளமாட்டேன். சிங்கத்திற்கு உரியபொருளை சிறு நரி அடையமுடியாது. நானோ, என் மனம், வாக்கு காயங்களால் சுயமாகச் சிவபெருமானையே எனது நாயகனாக வரித்தேன். வரித்து விட்டேன் இனி உனக்கு இஷ்டம் எதுவோ அதைச் செய்து கொள்ளலாம் என்று கூறினாள். பார்வதியின் வார்த்தைகளைக் கேட்டதும் மேனை மிகவும் கோபத்துடன் அடி பெண்ணே உன்னைப் பெற்றவளான என் வார்த்தையை எதிர்த்துப் பேசும் அளவுக்கு நீ வல்லவளாகி விட்டாயோ? இரு உனக்கு விஷமூட்டுகிறேன். அல்லது உன்னைத் தூக்கிக் கிணற்றில் போடுகிறேன். அல்லது உன்னைக்கத்தியால் வெட்டி விடுகிறேன். இல்லையென்றால் நானாவது என் உயிரை மாய்த்துக்கொண்டு விடுகிறேன். என்று பிரலாபித்துப் பல விதமாகத் தனக்குத் தானே யோசித்து தனக்குத் தானே பேசிக் கொள்ளலானாள்.

ஆ! என் மகளுக்கு மணமகனாக வந்த அந்த சிவனைப்பற்றி விசாரித்தால் அவனுக்குத் தாய், தந்தை, உறவினர், உடன் பிறந்தோர் தாயாதியர் நல்ல நடத்தை சாதுரியம் நல்லவீடு, நல்லஆடை, நல்ல அலங்காரம் யோக்கியமான நண்பர்கள் நல்ல வாகனம் வாலிப வயது செல்வம் வித்தை முதலியவற்றில் ஏதாவது இருக்கிறதா? அவனிடம் எதைக் கண்டு என் மகள் மையல்கொண்டாள்? என் மகளை அருகதையற்ற அந்த சிவனுக்கு எப்படிக் கொடுப்பது? என்ன செய்வேன்? என்று புலன்பினாள். அப்போது மகாவிஷ்ணு அலங்காரப் புன்முறுவலோடு அங்கு வந்து அவளை பார்த்து, மேனா பிதுரர்களுக்கு மாயை புத்திரி நீ, பிரம வம்சத்தில் பிறந்தவள் நீ, நீயே மஹாபாக்கியவதி நீயே புண்ணியவதி, ஹிமவானின் மனைவியான உன் பாக்கியத்தை நான் என்னவென்று சொல்வேன்? தர்மத்திற்கே ஆதாரபூதமான நீ தர்மத்தை ஏன் கைவிட வேண்டும் நானும் பிரமனும் மற்ற தேவர்களும் முனிவர்களும் பயனற்ற காரியத்தையா உன்னிடம் சொல்வோம்? நாங்கள் சொல்வது சுபமல்லாது இருக்குமா? அதை சுபமல்லவென்று நீயும் நினைக்கலாமா உன் மகளுக்கு மணாளனாக வந்திருக்கும் சிவபெருமானை நீ உண்மையில் அறிய மாட்டாய். அவர் நிர்க்குணரும் சகுணருமாக இருக்கிறார் அவரால் தான் சகலஜகத்துக்கும் மூலகாரணமான பிரகிருதி நிர்மாணிக்கப்பட்டது பிரகிருதியோடு விராட்புருஷன் படைக்கப்பட்டான். பிறகு பிரமா நான், ருத்திரன் ஆகிய மூவரும் முக்குண வசந்தராகப் படைக்கப்பட்டோம் பிறகுதான் வேதங்கள், தேவர்கள், காணப்படும் தாவர ஜங்கமங்களாகிய சகலஜகத்தும் படைக்கப்பட்டன. ஆகையால் அந்த முழுமுதற்கடவுளாகிய முக்கண் பெருமான் குணரூபங்களை யாரே அறியமுடியும்; நானும் பிரமனும் ஆயிரம் ஆண்டுகள் சொல்வதாயினும்; அந்தச் சிவனாரின் பெருமையைச் சொல்லி முடியாது. சத்திய சொரூபனும் ஞானரூபியும் வியாப்பயனும் வியாபாகனும் மூப்பு மரணமற்றவனும் பிரபுவும் உபாசிப்பவர்களுக்கு அருகிலேயே இருப்பவனும் பிரமன், ருத்ரன், தேவர், சூரியன், சந்திரன் கிரகங்கள் மலைகள், நதிகள் குபேரன் நான் ஆகிய யாவும் யாவரும் அந்தச்சிவபிரானின் சிருஷ்டியே! ஒரு சிறு விதையிலிருந்து ஒரு பெரியமரம் தோன்றி கிளைகள் கொம்புகள் இலைகள் முதலியன உண்டாவது போல ஆதிப்பரம் பொருளான அந்தச் சிவபெருமானிடமிருந்தே சகல பிரபஞ்சங்களும் தோன்றின. ஜகத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் சிவ பெருமானே இருப்பவர். சிவமே ஜகத், ஜகமே சிவம் நானும் சிவம் நீயும் சிவம் சிவத்தைவிட இரண்டாவது பொருள் கிடையாது, அவ்வாறு இரண்டாவது பொருள் ஒன்று இருக்கும் என்று நினைப்பது அஞ்ஞானமே ஆகும் காரியமான ஜகத்தில் காரணமான சிவபெருமானே வியாபித்திருக்கிறார் ஆகையால் காரியம் ஜகம் என்றும் காரணம் சிவம் என்றும் அறிந்துகொள்ள அறியாமையால் காரணகாரியங்களெல்லாம் பேதமாகக்காணப்படுமே தவிர ஞானியருக்குப் பேதமில்லை. சகல ஜகத்தும் சிவமயமே ஆகும் என்று உய்த்துரைத்தார்.

17. பார்வதி கல்யாணம்

ஸ்ரீ மகா விஷ்ணு மலையரசி மேனையைப் பார்த்து மேலும் தொடர்ந்து நல்லுரை கூறலானார். விளக்குகின்ற அனைத்தும் சிவபெருமானே என்று வேத சிவாகமங்கள் கூறுகின்றன. குற்றியை மனிதனாகவும் கயிற்றைப் பாம்பாகவும் சிப்பியை வெள்ளியாகவும் சந்தேகித்துப் பிறகு தான் மனிதனாகக் கருதியது மனிதனல்ல குற்றியென்றும் பாம்பாகப் பயந்தது பாம்பல்ல கயிறு என்றும் வெள்ளியாக மயங்கியது வெள்ளியல்ல வெறும் சிப்பி என்றும் தெரியும். உண்மையைக் கண்டறிந்த பிறகு சந்தேகம் தெளியும் அதுபோல மனத்திடமுற்று இவ்வுலகம் முழுமையும் சிவனுக்கு இரண்டாவதான தோற்றம் என்று கொண்டறிந்து அஞ்ஞானம் நீங்கி ஞானம் பெற்று பிறகே இவ்வுலகம் கூட சிவனுக்கு இரண்டாவது தோற்றமல்ல இவையாவும் முக்காலும் சிவனே சிவமயமானதே என்கிற உண்மை தெளிவாகும். மேனா மேலும் உதாரணமாக உனக்கு மேலும் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். வேஷம் தரித்துக் கொள்ளுகிற வேடதாரி பலப்பல வேஷங்களில் காட்சியளித்தாலும் அவன் வேஷங்களில் தான் மாறுகிறதேயன்றி ஆண் ஒருவனாகவே இருக்கிறான். அதாவது அவன் அவனாகவே இருக்கிறான். வேஷம் தரித்தவனைப் பார்த்து உண்மையை உணராதவன் அவனை நம்புகிறான் உணர்ந்தவனோ அவனைக் கண்டு நகைக்கிறான் இதைப் போலத்தான் உண்மை தெரியாத அஞ்ஞானி இவ்வுலகம் சிவனுக்கு இரண்டாவது தோற்றம் என்று கருதுகிறான். ஞானியே காணுகின்ற அனைத்தும் காணாதவையான அனைத்தும் யாவும் சிவனே என்ற மெய்யறிவைக் கண்டறிகிறேன். மேலும் ஒரு திருஷ்டாந்தத்தைச் சொல்லுகிறேன் கேள். மனிதன் ஆடை ஆபரணங்களை உடுத்திக் கொள்கிறான். அதை வகை வகையாக உடுக்கிறான் அப்போது அவனும் வகை வகையான தோற்றங்களைப் பெறுகிறான் அவை வகை வகையான அம்சங்களைப் பெறுகின்றன. ஆனால் அவற்றை அணிந்தவன் அப்படியே தான் இருக்கிறான். அது போலத்தான் சிவஸ்வரூபமானது மற்றொரு அம்சத்தில் கலந்த பொழுது நானாத்மகமாகத் தோன்றுமேயன்றி விசாரிக்கும் போது அனைத்தும் சிவனேயாகும் தான் எனது என்னும் தத்போதம் இருக்கும் வரை ஒருவனிடத்தில் மந்தனம் இருக்கும் அகங்காரம் அவனை விட்டு விலகிய பிறகுதான் அவனும் சிவனாக இருப்பதை உணர்கிறான்.

ஸ்படிகமணியானது செம்பருத்திப் புஷ்ப சையோகத்தால் (கலப்பால்) வேறு நிறமாகக் காணப்படுகிறது அல்லவா. இப்படியே பிரகிருதி சம்பந்தத்தால் சிவபெருமானிடம் அநேகத்துவம் தோன்றுகிறது. பிரகிருதியைவிட சிறந்த பரிபூரணப் பிரமமாகிய சிவ தத்துவார்த்தத்தை நாங்களே இன்னும் அறியோம். ஆகையால் நீ துக்கத்தை விட்டுச் சிவபெருமானுக்குச் சேவை செய்! என்று சிவபெருமானிடத்தில் பக்தியுண்டாகும்படி திருமால் போதித்தார். அந்தச் சமயத்தில் நாரத முனிவர் குறு நகையோடு சிவபெருமானிடம் சென்று மணமகனாரே! நாங்கள் ஒவ்வொருவரும் உம் விஷயமாக உம் மாமியார் மேனையிடம் பலவிதமாகவும் இகழ்ந்து ஏளனம் செய்யப்பட்டோம். என்று சொல்வதற்கு முன் சிவபெருமான் பக்தவாத்ஸல்லியத்தால் கண்டோர் மோகிக்கத்தக்க திவ்விய திருவடிவத்தோடு தோற்றமளித்தார் நாரதர் மீண்டும் மேனையை நோக்கி அம்மா உலகமெல்லாம் மோகிக்கத் தக்க பேரழகுடைய உன் மருமகனை இப்போது பார் என்றார் அப்போது சிவபெருமான் கோடி சூரியர்களுக்குச் சமானமான காந்தியும் குளிர்ந்த பார்வையும் கொவ்வை வாயில் குமிழ் சிரிப்பும் அழகான அணிமணிகளும் அதி உன்னதமான கிரீடங்களும் விலையுயர்ந்த வஸ்திரங்களும் தரித்து விளங்குவதை மேனை உற்றுக் கவனித்தாள். சகல தேவசேவையோடு சூரியன் குடை பிடிக்கவும் சந்திரன் விசிறவும் அணிமாதி அஷ்டமாசித்திகளும் நடிக்கவும் கங்காதி கன்னியர்கள் சாமரையிரட்டவும், பிரமன், விஷ்ணு, ருத்திரர் முதலான தேவர்கள் ஜய ஜயவென ஜயகோஷங்கள் முழங்கவும் மாபெரும் முனிவர்களெல்லாம் பலவாறாக துதித்துக் கொண்டு கொடிகள் பிடித்துலாவவும், விச்சுவாவசு முதலிய கந்தர்வர்கள் அரம்பை மேனகை தேவ தாசிகளுடன் பலவிதமான வேஷங்களும் பூண்டு சங்கீதகானஞ் செய்யவும் சிவகணங்கள் யாவரும் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் வேத-அங்க ஸ்ருதி-ஸ்மிருதிகள் வடிவம் பெற்று முன்னால் நடக்கவும் சமுத்திரங்களும் நதிகளும் அநேகமாக அலங்கரிக்கப்பட்டு முன்னே உலாவவும் மகாப்பிரகாசத்துடன் சிவபெருமான் விளங்கிய திருக்கோலத்தை வர்ணிக்க யாருக்கும் ஆற்றல் இராது அப்படிப்பட்ட திவ்விய மங்களவடிவாக விளங்குஞ் சிவபெருமானைப் பார்த்து ராணி மேனை சித்திரப் பதுமைப் போல அசைவற்று ஒன்றும் தோன்றாதிருந்து சிறிது நேரத்தில் மனந்தெளிந்து தேவர்கள் யாவருங் கூறியபடியே இவர் அவ்வகையான சரீரத்தையேயடைந்திருக்கின்றார்.

இவரை மணாளனாக வரித்த என் மகள் பார்வதி மகா புண்ணியவதி அதனால் தான் இத்தகைய ஜகன் மோகன உருவம் படைத்த சிவனாரைக் கணவனாக அடைந்தாள் என்று கருதி அவரது அவயவங்கள் ஒவ்வொன்றையும் சிறிது உற்றுப்பார்த்து மிகவும் சந்தோஷ மடைந்து மனதில் நாணமுற்று இன்னுங் காணக் கூடாதவளாயிருந்தாள். தேவ கணங்களோடு சிவபெருமான் சர்வாலங்கார பூஷணராய்ப் பர்வதராஜன் மாளிகைக்கு வந்தார் அப்போது பிருமாவும் மகாவிஷ்ணுவும் இரு பக்கத்திலும் சூழ இடையே வரும் சிவபெருமானைக் கண்ட மேனை அவரைப் பூஜித்தாள். மணநாயகன் வருகையைக் காட்டும் பொருட்டு எழுந்த பதினெட்டு வகையான மேளவாத்தியங்களின் ஒலியைக் கேட்டு அந்த நகரத்திலிருந்த மங்கையர் அனைவரும் மணநாயகனைக் காணும் ஆர்வப் பெருக்காலும் ஆசையாலும் அவரவர் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டு அப்படியே ஓடி வந்தார்கள் அதாவது நீராடிய பிறகு உடம்பில் வாசனைத் தேய்த்துக்கொண்டிருந்த கோமாளாங்கியும் கணவன் பூஜை செய்யும்போது அவனுக்கு விசிறிக் கொண்டிருந்த பத்தினியும், குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கையில் அந்தக் குழந்தையையும்  விட்டு விட்டு ஓடி வந்த தாயும், மெல்லிய இடையில் பொன் ஒட்டியாணம் அணிய முயன்று அதை அப்படியே கையிலேந்திக் கொண்டு வந்த காரிகையும் கண்களில் மைதீட்டிக் கொண்டிருந்த கன்னிகை ஒரு கண்ணில் மைத்தீட்டியும் மறு கண்ணில் தீட்டாமலும் கையில் சலாகையோடும் கண்ணாடி பார்த்திருந்த கையில் ஏந்தியக் கண்ணாடியோடும், கணவனுக்கும் அன்னமிடப் போனவன் அன்னப் பாத்திரத்தோடும் நீராடிய போது தன் கால்களுக்கு மஞ்சள் பூசிக் கொண்டிருந்தவள், ஒரு காலுக்கு பூசியும் ஒரு காலுக்கு பூசாமலுமாக ஓடி வந்தார்கள். இவ்வாறு அவரவரும் அவரவர் வேலைகளை அரைகுறையாக விட்டு விட்டு சர்வமங்கள வடிவமாக விளங்கும் சிவபெருமானைக் கல்யாணக் கோலத்தில் காண்பதற்காக ஓடி வந்து சர்வாங்க சுந்தர புருஷராய்த் தோன்றிய எம் பெருமானை அகல விரித்த கண்களால் அதிகமாகப் பார்த்துப் பார்த்துப் பெருவியப்பால் திறந்தவாய் திறந்தபடியும் திறந்த கண்கள் சிமிட்டாதபடியும் சித்திரப் புதுமைகளைப்போல் அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள். அவரவர் மனதும் சிவனாரோடு ஐக்கியப்பட்டன. சிவனாரின் வசீகர அழகில் யாவரும் மயங்கி நின்றார்கள் இந்த மயக்கம் நீங்க சிறிது நேரம் ஆயிற்று.

மயக்கத்திலிருந்து தெளிவுற்று எழுந்த அந்நகர மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆஹா! நம் அரசிளங்குமரி பார்வதி செய்த அருந்தவத்தால் அல்லவா இவ்வித அற்புதத் திருவுருவத்தைப் பெற்ற சாட்சாத் சிவபெருமானையே நாயகனாகப் பெறும் பாக்கியமடைந்தாள். மங்களமூர்த்தி எனும் திருநாமம் அவருக்கு அல்லவோ மிகவும் பொருத்தமானது. இத்திருப்பெயருக்குரிய மங்களமூர்த்தியைக் கண்ணாரக் கண்டவர்களுக்கு பற்பலப் புண்ணிய பயன்களெல்லாம் உண்டாகுமே! கடுந்தவம் புரிந்து இவ்வரியத் திருவுருவைக் கணவனாகப் பெற்றதாலல்லவா பார்வதியே தன்யையாயும் கிருக கிருத்யையாயும் இருக்கிறாள். பார்வதியின் தவம் பெரும் பயன் அளித்தது இச்சதிபதியை ஒன்று சேர்க்க பிரமன் செய்த முயற்சி சிறப்பானதல்லவோ? பொன்னும் இரத்தினமும் ஒன்று கூடியனாற்போல், லக்ஷ்மியும் விஷ்ணுமூர்த்தியும் மணஞ்செய்து கொண்டதுபோல, சாம்பவமூர்த்தியான சிவபெருமானைக் கணவனாகப் பெற்ற பார்வதி நல்ல சுகத்தை அனுபவிப்பாள் என்று சொல்லி கந்த புஷ்ப அக்ஷதைகளைச் சிவபெருமான் பேரில் சமர்ப்பித்தார்கள். இவர்களின் உரையாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியுற்று சிவபிரான் பர்வதராஜன் முன்னின்றழைத்துப் போக இதர பரிவாரங்களோடும் விவாகவிகையைச் சேர்ந்தார். பிருமதேவரே புரோகிதராக முன் வந்து சப்த முனிவர்கள் முதலானவருடன் சதுஷ்கோணமான திருக்கல்யாண மண்டபத்திலிருந்து அத்யா திப்ரயோகம் முதலான விவாகச் சடங்குகளை நடத்தினர். பர்வதராஜனும் ராணிமேனையும் நீராடி ஆடை ஆபரண அலங்காரங்களோடு வந்தார்கள். பர்வதராஜன் தன்னுடைய கோத்திர முறையை சாஸ்திர விதிப்படிக் கூறி சிவபெருமானுக்கு ஆவாஹநம் பாத்தியம் அர்க்கியம் பட்டாடை திலகம் மலர் மாலை பொன்னாரம் முதலானவற்றை வழங்கி வழிபட்டு வேதிகையில் மேனையுடன் அமர்ந்து அக்கினிப்பிரதிஷ்டா பனஞ்செய்தான், மங்கலப்பாடல்களைச் சுமங்கலிகள் பாட லக்ஷ்மியும் சரஸ்வதியும் பார்வதியின் தோழியராகி, பார்வதியை அந்தப் புரத்திலிருந்து கைலாகு கொடுத்து அழைத்து வந்து சிவபெருமான் அருகில் மணப்பெண்ணாக உட்கார வைத்தார்கள். பிருமதேவன் மந்திரோச்சாடனஞ் செய்ய, மேனை கரகநீர் வார்க்க ஹிமவான் சிவபெருமானுடையக் கமலப் பாதங்களை விளக்கி, அவ்வுதகத்தைத் தானும் தன் மனைவியுங் கிருதார்த்தர்களாகத் தங்கள் சிரமேற் புரோக்ஷித்துக் கொண்டும், சிறிது உட்கொண்டும் பின்பு சாக்ஷதோ தகதாரா பூர்வகமாய்ப் பார்வதியின் கையைப்பற்றிச் சிவபெருமான் திருக்கரத்தில் வைத்து என் குமாரத்தியான இப்பார்வதியைத் தேவரீருக்குச் சமர்ப்பித்தேன், என்று கன்னிகாதானம் செய்து கொடுத்தான்.

சிவபெருமான் பூரிப்படைந்து தம் திருக்கரத்தால் பார்வதியின் கழுத்தில் மாங்கல்யதாரணஞ் செய்தார். கல்யாண மண்டபத்தில் சூழ்ந்திருந்த முனிவர்கள் தேவர்கள் அனைவரும் ஆசிர்வதித்தார்கள். சுமங்கலிகள் அக்ஷதைகள் சமர்ப்பித்து வணங்கினார்கள் தேவர்கள் நறுமண கற்பக மலர்களைத் தூவ, தேவதுந்துபிகள் முழங்க, உலகங்ளெல்லாம் உற்சாகப் பரவசமடைந்தன. தம்பதிகளான பார்வதி-பரமசிவன் இருவரும் அக்கினிப் பிரதக்ஷிணம் செய்தார்கள். உமாதேவியின் திருவடியைச் சிவபெருமான் கரத்தால் தொட்டு எடுத்து வைக்க, பார்வதி அம்மிமிதித்தனள் அவர்களை நமஸ்கரித்துக் கொண்டே அவர்கள் எதிரே கற்புக்கரசி அருந்ததி வந்தாள். துருவனும் சப்த முனிவர்களும் எதிர்வந்தனர். அவர்கள் சிவபெருமானையும் பார்வதியையும் மீண்டும் சிங்காதனத்தில் வீற்று இருக்கச் செய்தார்கள். வேதாகமத் துதிகளைப்படி வேதோத்தமாக ஆசீர்வதித்தனர். பார்வதியையும் சிவபெருமானையும் நோக்கித் தாங்களே உலகத்திற்கு மாதாபிதாக்களாகப் பெற்ற நாங்களும் பெரும் புண்ணியத்தையடைந்தோம்! என்று புகழ்ந்தார்கள். கந்தர்வர் அப்ஸரசுகள் நிருத்தம் கானம் வாத்தியம் முழங்கி தானும் தனது வமிசமும் தனது இல்லறவாழ்வும் சிறப்பும் பயனும் அடைந்தது என்று பர்வதராஜன் கூறிப் பெரும் களிப்படைந்தான். அதன் பிறகு சிவபெருமானும் பார்வதியும், தாங்கள் வதூரவர் கோலம் கொண்டதையும் தம்மைப் பார்த்துப் பிறர் புகழவும் குலதேவதா பிரார்த்தனஞ் செய்து கங்கண விசர்ஜனம் முடித்து அங்கு வந்திருந்த சப்தமுனிவர்-சத்புருஷர் சகலகலா வித்யாதரர் தேவர் ஆகியோரை நோக்கி சிவபெருமான் கைகுவித்து வணங்கி அருள்பாலித்தார். ஹிமவானும் யாவரையும் பூஜித்தான் இப்பூஜாதானங்களைக் கண்டு பிரம விஷ்ணு முதலிய தேவர்கள் இது காறும் கண்டும் கேட்டும் இல்லாமையால், எதுவும் கூறமுடியாமல் அதோ முகமானார்கள். இப்படி அங்கு வந்திருந்த அனைவரும் மரியாதை பெற்று மனம் பூரித்திருந்தார்கள்.

சிவபெருமானாலும் ஹிமவானாலும் பூஜிக்கப்பட்ட தேவர்களும் முனிவர்களும் தாங்கள் நன்றாக கவுரவிக்கப்பட்டதை எண்ணி வெகுவாக உள்ளம் பூரித்திருக்கும்போது உங்கள் ஒத்துழைப்பாலும் வருகையாலும் என் பிறப்பு பிழைப்பு கிரகஸ்தாச்சிரமமும் யாவும் பயனடைந்தன என்று பர்வதராஜன் சொன்னான்.  அவனது மனைவியான மேனையோ, எனது குலம் பவித்தரமாயிற்று என் புத்திரியான பார்வதியால் நான் எல்லா புகழ்களையும் அடைந்தேன். இவளே எங்கள் புத்திரியாக எல்லா அவதரிக்காவிடில் சிவபெருமான் திருமால், பிரமதேவர், தேவர்கள், முனிவர்கள், யக்ஷர், கருடர் முதலிய யாவரும் இங்கு வரக் கூடுமோ? இவர்களைத்தான் நாங்கள் காணவும் கூடுமோ? நீங்கள் மகா புண்ணியர்களாகையால் நான் உங்களை முன்பு நிந்தித்துப் பேசிய நிந்தனைகளையெல்லாம் மன்னித்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதைக் கேட்டதும் தேவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்து, மேனா! நீ கிருதகிருத்தியை ஜகத்ரக்ஷகராகிய சிவபெருமானுக்குப் பார்வதியைக் கன்னிகாதானஞ் செய்த பயன் எவ்வளவு என்று நாங்கள் அளவிட்டுக் கூறுவோம்? பர்வதராஜனைப் பதியாய்ப்பெற்ற நீ பார்வதியை உன் குமாரத்தியாய் பெற்ற நீ அடைந்த புகழ், விவரிக்க முடியாததாகும் நீ எங்களை முதலில் நிந்தித்ததையெல்லாம் சுகமயமாக எண்ணுகின்றோம். உன் சுகம் பெருகட்டும்! உன் ஐஸ்வரியம் பெருகட்டும்! நாங்கள் வருகிறோம்! என்று பர்வதராஜனையும் மேனையையும் ஆசீர்வதித்து. அவர்களது நமஸ்காரத்தையும் பெற்று, புறப்பட்டார்கள்.

புதுமண தம்பதிகளாக சிவபெருமானும் பார்வதிதேவியும் தேவர்களும் புறப்பட்டு கைலையங்கிரியை நோக்கிச் சென்றார்கள். பர்வதராஜனும் மேனையும் கந்தமாதன பர்வதம் வரையில் சென்று வழிவிட்டுத் திரும்பினார்கள். அன்று முதல் பர்வதங்கள் கிருதார்த்தமாயின அரி, அயன், இந்திராதி தேவர்கள் மாமுனிவர்கள் முதலான அனைவரும் எல்லாவித வாத்தியங்களோடும் நிருத்தம் நாட்டியம் முதலிய திருவிழாக் கோலத்தோடும் திருக்கைலாச பர்வதத்தையடைந்து சிவபெருமானின் மாளிகையில் பார்வதியை கிருகப்பிரவேசஞ் செய்வித்து, சிவபெருமானே! பார்வதி தேவியுடன் சுகித்திருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்து அவரது திருவருளைப் பெற்று சிவகடாக்ஷமுற்று அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டு, அந்த விவாகமகோற்சவமகிமை பெருமைகளைப் பற்றிக் குதூகலம் பொங்கப் பொங்கப் பேசிக்கொண்டே தங்கள் தங்கள் நகரத்தையடைந்தார்கள். தேவர்களுக்குண்டான ஆனந்தத்தையும் சிவபெருமான் அநுக்ரஹித்தையும் விவரிக்க வேண்டுமானால் நூறு ஆண்டுகளானாலும் விவரிக்க முடியாது ஆகையால் சிவஞானிகளே, நீங்கள் கேட்டதைத் தட்ட முடியாமல் என் நினைவிற்பட்டதைக் கூறினேன்! நைமிசாரண்ய வாசிகளே! அந்தத் திவ்விய மங்கள மூர்த்தியான சிவபெருமானின் திருமணக்கோல மஹோத்ஸவ சரிதத்தையோ அல்லது அதில் காணும் ஒரு ஸ்லோகத்தையோ அல்லது அந்த ஸ்லோகத்தின் பொருளையோ கேட்டவர்கள் சகல சம்பத்தும் பெற்று அறியாமை நீங்கி, மெய்ஞானமும் சகல சம்பத்தும் சகல ஐஸ்வரியங்களும் கன்னியாலாபமும் பூர்ணமாகப் பெற்று விளங்குவார்கள்-இவ்வாறு சூதமா முனிவர் சொன்னார்.

18. தாரகாசுரன் வதையும் திரிபுரத் தோற்றமும்

பார்வதி கல்யாண வைபவத்தைக் கேட்டுப் பரவசப்பட்டிருந்த நைமிசாரண்யவாசிகள் சூதபுராணிகரை நோக்கி, மகா ஞானியே! மாபெரும் புண்ணிய சீலரே! சிவபெருமான் பார்வதி தேவியாரை மணஞ்செய்த பிறகு புத்திரனைப் பெற்று, தாரகாசுரனை எப்படி வதைத்தார் என்பதையும் கேட்க வேண்டும். என்று நாங்கள் மிகவும் ஆவல் கொண்டிருப்பதால் அதையும் விபரமாகக் கூறியருள வேண்டும் என்று கேட்டார்கள் சூதமாமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

நைமிசாரணிய வாசிகளே உமையளான பார்வதிதேவி யாரைச் சிவபெருமான் திருமணஞ் செய்துகொண்ட பிறகு பார்வதிதேவியோடு அந்தப்புரமடைந்து வெகுகாலம் வரைக்கூடி மகிழ்ந்து லீலாவினோதங்கள் புரிந்து கொண்டேயிருந்தார்கள். தாரகாசுரனால் மிகவும் தொல்லைகளுக்குப் பாத்திரமாகித் தாரகாசுரவதத்திற்கு எப்போது சிவகுமாரன் உற்பத்தியாவானோ என்று ஏங்கி கிடந்த தேவர்களோ தங்கள் வேதனைகளுக்கு விமோசனம் தேடவேண்டி துடிதுடித்தார்கள். ஆனால் அந்தப் புரத்திலுள்ள தேவியோடு கூடி மகிழ்ந்து கொண்டேயிருக்கும் சிவபெருமானைக் கண்டு விண்ணப்பஞ்செய்ய சந்தர்ப்பம் வாய்க்காததைக் கருதிப் பெருத் துயரத்திலாழ்ந்தார்கள். அநேக வருஷங்கள் கழித்து தங்களைத் தாங்களே நிந்தனை செய்து கொண்டு தாரகாசுரனின் கொடுமைக்கு எப்படியும் ஒரு முடிவு கண்டாக வேண்டுமென்று தீவிர எண்ணங் கொண்டு, அக்கினி பகவானை அணுகி அக்கினி தேவனே! சிவபெருமான் பார்வதி தேவியாரை அணுகி தாரகனை சம்ஹாரம் செய்ய இன்னும் புத்திரோற்பத்தி செய்யவில்லையே நீர் எங்களிலும் சிறந்தவராதலால் எங்கள் கவலையைச் சிவபெருமானிடம் சொல்லி தாரகனை வதைக்க வழி செய்யும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். தேவர்கள் வேண்டுகோளைத் தாமதப்படுத்த மனமில்லாத அக்கினித்தேவன் உடனே ஒரு புறா வடிவமெடுத்து சிவபெருமான் லீலா விநோதத்தில் மூழ்கியிருந்த அந்தப்புரத்தினுள் புகுந்து சென்றான்! அப்போது சர்வாந்தியாமியான சங்கரர் அந்த புறா வடிவத்தை கண்டு, யாரடா அவன் கபோதவடிவோடு வந்திருப்பவன்? என் வீரியத்தை இவனே தாங்கட்டும் என்று கூறி வீரியத்தை விட புறாவடிவிலிருந்த அக்கினி தேவன் அவ் வீரியத்தை வாயில் கவ்விக்கொண்டு பறந்து சென்றான். ஆனால் சிவனாரின் வீரிய வெப்பத்தைத் தொடர்ந்து தாங்கிப் பறக்க வலுவில்லாமல் போகவே கங்கா நதியில் விட்டு விட்டான். கங்காநதியும் அதைத் தாங்க முடியாமல் அதைத் தருப்பைப் புல்லில் விட்டது. அந்தருப்பைப் புல்லில் விடப்பட்ட வீரியத்திலிருந்து அதிசுந்தரத் தோற்றமாய் கண்டதும் சகல சுகங்களையும் கொடுக்கத் தக்க வன்மையும் உடையவராய்க் குமார ரூபத்தில் திருமுருகன் தோன்றினார். அப்போது நீராட வந்த ஆறு இராஜ கன்னியர்கள் அக்குழந்தையைக் கண்டு என் குழந்தை இது! என் குழந்தை இது என்று ஒவ்வொருவரும் கூறி, அக்குழந்தைக்குப் பால் கொடுத்தார்கள். அப்போது குமாரக்கடவுளான முருகப்பெருமான் ஆறுமுகத்தோடு ஆறு இராஜ கன்னியரிடமும் பால்பருகினார். இதனால் தான், முருகக் கடவுளுக்கு ஷாண்மாதுரன்(அறுவர் புதல்வன்) என்றும் ஆறுமுகன் என்றும் பெயர் வந்தது.

மதியோயம் மதீயஸ்ச வதந்த்யஸ்ச பரஸ்பரம்
ஸம்பாத்ய ஷண்முகா நீஹ பீதஸ்தந்யம் ஸ்வயம்தநா
ஷண்மாதுரஸ் ததாநாம ப்ரஸித்தந்து மஹாத்மந.

பார்வதி மைந்தன் அக்கினி புத்திரன், ஸ்கந்தன் கங்கா புத்திரன், சரவணபவன் ஷாண்மாதுரன் என்ற பலப்பலத் திருநாமங்களைக் காரணங்களோடு பெற்ற சுப்ரமணியரிடம் ஆறுகார்த்திகைப் பெண்களும் அதிக பாசம் கொண்டவர்களாய். அவரைப் புத்திரராகப் பாவித்து அருமையாக வளர்த்து வந்தார்கள். முருகன் தோன்றியதையும் அவர் கன்னியர் அறுவரால் போஷிக்கப்பட்டு வருவதையும் நாரத முனிவர் தேவர்களுக்கு அறிவித்தார். இந்தச் சங்கதியைக் கேட்டதால் சந்தோஷங்கொண்ட தேவர்கள் யாவரும் சிவபெருமானிடம் கட்டளையைப் பெற்று சுப்பிரமணியரையே தங்கள் சேனாதிபதியாகக் கொண்டு தாரகாசுரன் மீது படையெடுத்துச் சென்று போர் முரசு கொட்டி அவ்வசுரனின் தலைநகரான சோணிதபுரத்தையடைந்து பத்து தினங்களாகப் பயங்கர யுத்தஞ்செய்து குமாரக்கடவுளான ஸ்ரீசுப்ரமணியரால் தாரகாசுரனைக் கொன்று வெற்றி பெற்றார்கள். அப்போரிலிருந்த அசுர சேனையில் ஓடிப்போனவர் தவிர மற்றவர்கள் மடிந்தார்கள். சோணிதபுரத்து யுத்தம் தீயோரை வதைத்து-நல்லோரை வாழச்செய்து உலகத்திற் கெல்லாம் நலம் ஊட்டியது தேவர்களும் முனிவர்களும் தாரகாசுரனை வதைத்து ஜெயங்கொண்ட சுப்பிரமணியரோடு சிவ சன்னதியையடைந்து சிவபெருமானை வணங்கி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேவ தேவா! மகாதேவர் விஸ்வேஸ்வரா! பராத்பரா! பரா! வரதா, பவா புவனா அநந்த பாலா பூதநாதா சம்ஹர்த்தா கங்காதரா திரியம்பகா திரிசூலதாரி கபர்த்தி, பரமாத்மா தண்டதரா, வேதமந்திர பிரதாநா சிருஷ்டி ஸ்திதி சங்கார நாதா! அரூபா, ஸ்வரூபா நீலகண்டா விபூதிதாரி சகல பூதா பர்வதங்களில் மேருவே நக்ஷத்திரங்களில் சந்திரனே மகரிஷிகளில் வசிஷ்டரே! சகலவேதங்களிலும் ஓங்கார ரூபரே! ஸ்வாமி! சம்சார பந்த துக்கத்திலிருக்கும் எங்களைக் கரையேற்றிக் காப்பவர் நீரே மஹாப்பிரபு! தங்களுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டிய சேவை எதுவும் உண்டோ உம் கட்டளை எதுவோ? என்று வேண்டி நின்றார்கள். அவர்களின் துதி மந்திரங்களைக் கேட்டு மகேஸ்வரர் மகிழ்ந்து. அமரர்களே! அருமுனிவர்களே! உங்களுக்கு எந்தத் தருணத்தில் துன்பம் வந்தாலும் அத்தருணமே அதைத் துடைத்து உங்களைக் காப்போம் நீங்கள் எப்பொழுதும் எம்மை நினைத்து வணங்கி வாருங்கள் என்று கருணைக் கனிவோடு கண்ணோக்கு செலுத்தினார். அனைவரும் அப்படியே செய்கிறோம் என்று கூறி, அவரைப் பணிந்து விடை பெற்றுச் சென்று அவரவர் இருப்பிடஞ் சேர்ந்து எவ்விதமனக் குறையுமின்றி எப்போதும் சிவபூஜை செய்து கொண்டு வாழ்ந்திருந்தார்கள் இவ்வாறு சூதமா முனிவர் சொன்னார்.

நைமிசாரண்ய வாசிகளாகிய முனிவர்கள் சூதரே! பூஜ்யரே தாரகாசுர வதை நடந்த பிறகு, நிகழ்ந்த சம்பவங்களையும் எங்களுக்கு விவரித்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதமாமுனிவரும் உற்சாகத்தோடு சொல்லத் தொடங்கினார். தாரன் பெற்ற குமாரனாகிய தாரகாசுரனை முருகக் கடவுள் போர் முனையில் கொன்றொழித்த பிறகு, தாரகன் புதல்வர்களாகிய வித்யுன் மாலி, தாரகாக்ஷன் கமலாக்ஷன், ஆகிய மூவரும் கடுந்தவம் புரியத் தொடங்கினார்கள். ஒற்றைக் காலில் நின்று ஒரு நூறு வருஷங்களும் பூமியிலிருந்து ஒரு நூறு காற்றையே உணவாக உட்கொண்டு பற்பலவருஷங்களும் அதிக தாபமுண்டாகப் பல வருடங்களும் தலை கீழாக நின்று ஆயிர வருடங்களும், கைகளை மேலுயர்த்தி நூறு வருடங்களும், துயரமயமான தவத்தை அநேக வருஷங்களுமாக இப்படிப் பல வகையான தவங்களை பிரமதேவனே குறித்துச் செய்தார்கள். தவஞ் செய்வோர் தாரனின் புதல்வர்களானாலும், அவர்கள் அசுரவழி வந்தக் கொடியவர்களானாலும் அவர்கள் செய்கிற தவம் பெரும் மகிமை வாய்ந்ததால் அத்தவாக்கினியின் ஜ்வாலையால் உலகம் அழியக் கூடுமாதலால் அவர்களுக்கு பிரமதேவன் காட்சியளித்து நீங்கள் இம்மாதவம் புரிவது எதற்கோ? உங்களுக்கு வேண்டிய வரம் என்னவோ? என்று கேட்டார். அதற்கு அவ்வசுரர்கள் சிருஷ்டிகாத்தாவே! நாங்கள் சர்வபிராணிகளிலும் ஒருவராலும் இறவாவரம் அளிக்க வேண்டும்! என்று கேட்டார்கள். அதற்கு பிரமதேவர் அவர்களுக்கு விடையளிக்க தவத்தர்களே! நீங்கள் கேட்கும் இந்த வரத்தை நாம் அளிப்பதற்கில்லை. ஏனென்றால் நீங்கள் எப்பொழுதும் இறவாமல் நித்தியமாயிருக்க யோகமில்லை. ஆதலால் உங்களுக்கு யோக பிராப்தம் கொண்ட வேறு வரங்களைக் கேட்டால், அவற்றைத் தந்தருள நாம் சித்தமாயிருக்கிறோம் என்று கூறினார். உடனே அவ்வசுரர் மூவரும் சதுர்முகரே! நாங்கள் எண்ணியவிடத்திற்குப் போகவும் சஞ்சாரம் செய்யவும் பொன் வெள்ளி-இரும்புகளாலாகிய மூன்று பறக்கும் பட்டணங்கள் வேண்டும், அவை ஆயிர வருடத்திற்குகொரு முறை ஒன்று சேர வேண்டும். அம் மூன்று பட்டணங்களும் ஒன்று கூடியிருக்கும் அந்தச் சமயத்தில் ஒரே பாணத்தால் அவற்றின் முப்புரங்களையும் அழிக்கவல்ல எவனாவது இருந்தால் அவனால் மட்டுமே நாங்கள் மாண்டு மடிவோம் என்று வரந்தரவேண்டும் என்று கேட்டார்கள். அதற்குப் பிரமதேவன் நீங்கள் கோரிய வரத்தை தந்தருளினோம் என்று கூறிவிட்டுத் திரிபுரக் கோட்டைகளை நிருமாணித்துக் கொடுக்க மயன் என்னும் தச்சனைக்கண்டு பொன், வெள்ளி, இரும்பகளாலாகிய மூன்று பட்டணங்களை நிருமித்து தாரகாசுர புதல்வர்களுக்குத் தந்தருளும்படி கட்டளையிட்டு மறைந்தார். அப்படியே அந்த மயனும் முப்புர பட்டணங்களை நிர்மாணித்து பொன் பட்டணத்தைத் தாரகாக்ஷனனுக்கு வெள்ளிப் பட்டணத்தைக் கமலாக்ஷனனுக்கும், இரும்பு நகரத்தை வித்யுன் மாலிக்கும் கொடுத்தான். அவைகளில் பொன் பட்டணமானக் காஞ்சனபுரியைச் சுவர்க்கத்திலும் இரசிதபுரியை மத்தியத்திலும் ஆயசபுரியைப் பூமியிலும் சஞ்சரிக்கத் தக்கதான யந்திர சூத்திரம் செய்து வைத்து பட்டணம் ஒன்று ஓர் யோசனை விஸ்தீரணமுடையதாகச் செய்து கொடுத்த அந்த மயனுக்கு மூன்று அசுரரும் பற்பல விதமான பொருட்களை பரிசளித்து வெகு மரியாதை செய்து வழி யனுப்பினார்கள். பிறகு அவரவரும் பறக்கும் திரிபுரங்களில் தம்தம் பட்டணங்களைச் சேர்ந்தார்கள். யானை, தேர், குதிரை, முதலிய சேனைகள், கற்பகவிருக்ஷம், நந்தவனம், மேடை சந்திர சாலை சித்திரத்தொழில்கள், சூரிய மண்டலம் போன்ற விமானங்கள் பதுமராக மணிகளாலாகிய விமானங்கள் கைலாச சிகரம் போன்ற விமானங்கள். அநேக சாரணர் சித்தர் முதலியோர் வசிக்கும் இடங்கள் சிவாலயங்கள், தடாகங்கள் கிணறுகள், பல்லக்குகள் கச்சேரி சாவடிகள் வேதாந்தியன் சாலைகள் முதலியனவற்றை உருவாக்கி பதிவிரதைகளான மனைவிகளோடு அசுர குடும்பங்கள் குடியிருந்து சிரவுத முதலிய நித்ய கருமங்கள் விடாமல் தொடர்ந்து நடத்தி வரும் பட்டணத்தில் குடியேறி, எப்போதும் கண்டிராத சிறப்புடன் விளங்குவதைக் கருதி மனமகிழ்வுற்றிருந்தார்கள் அங்கிருந்த அசுரக் கூட்டத்தில் பலவகைப்பட்டவர்கள் இருந்தார்கள். கோபிகள் சிலர் சாந்தவான்கள் சிலர் குட்டையர் நெட்டையர் சமரதர் அதிரதர் அர்த்தரதர் மாதாரதர், சிவபூஐõவான்கள் பிரம நிஷ்டாபரர்கள் பலவரங்கள் பெற்றவர் சூரியன் வாயு இந்திரன் முதலிய தேவர்களுக்குச் சமானவளமையாற்றல் கொண்டவர்களாகச் சிலரும் விளங்கினார்கள். அந்தத் திரிபுரங்கள் அசுரர்களேயானாலும் வேத சாஸ்திரங்களும் அவர்களது மூன்று புரங்களிலும் பூரணமாக விளங்கின. அப் பட்டணங்களின் பிரகாசத்தின்முன் தேவர்கள் கூட எதிர் தோன்றி நிற்கமாட்டார்தவர்களாக இருந்தார்கள். இதனால் தேவர்களும் முனிவர்களும் வெட்கி மனம் கூசினார்கள். திரிபுரமான அப்பட்டணங்கள் அவ்வசுரர்கள் கேட்டவரத்தின்படி அவர்கள் எண்ணியோதெல்லாம் இடம் விட்டுப் பெயர்ந்து போய் இடம் சேரும் சக்தி பெற்றவைகளாதலால், அப்படி அவை இடப்பெயர்ச்சி கொள்ளும்போது பலகோடி ஜீவராசிகளும் மாண்டு மடிந்தன. அதைக்கண்டு அப்பட்டணங்களின் சிறப்பினை வியந்து ஆச்சரியமும் அவைகளைத் தங்களால் ஒன்றும் செய்ய முடியாததால் ஆத்திரத் துயரமும் கொண்ட தேவர்களும் மகரிஷிகளும் மனம் சகியாமல் சிருஷ்டி கர்த்தாவான பிரம தேவர் அணுகிச் சென்று தங்கள் மனக்கவலையை முறையிட்டுக் கொண்டார்கள்.

19. திரிபுர சம்ஹார ஆலோசனை

தேவர்கள் முறையிட்டதை கேட்ட பிரமதேவர் தேவர்களே! என்னால் வரமளிக்கப்பட்ட அவ்வசுரர்களை நானே வதைத்து அழிப்பது முறைமையல்ல. அவர்களை நீங்களே வென்று அழிப்பது தான் சிறந்தது. அதற்கு வேண்டிய உபாயங்களையோ யுத்தியையோ வேண்டுமானால் நானே சொல்லித் தருகிறேன். அது வேறொன்றும் விசித்திரமானதில்லை சாட்சாத் சிவபெருமானிடம் நீங்கள் அனைவருமே சென்று முறையிட்டுக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை அக்கருணாநிதியிடம் அபயம் கேட்டால் அவர் இல்லை என்று புறக்கணிக்கப் போவதுமில்லை. உங்கள் குறை தீர்க்க அவர்தான் முயற்சியெடுப்பார் ஆகவே அவரிடமே செல்லுங்கள் என்று கூறி அகன்றார்.

அதுவே சரியெனக் கருதிய தேவர்களும் நந்திக்கொடியுடைய சிவபெருமானிடம் விரைந்து சென்று விண்ணப்பித்தார்கள், சிவபெருமான் அவர்களை நோக்கி தேவர்களே! திரிபுரங்களை ஆட்சி செலுத்துகிற அவ்வசுரர்கள் புண்ணிய சீலர்களாதலால் அவர்களையாம் சங்காரம் செய்தல் கூடாது. அவர்கள் புண்ணியர்களாய் விளங்கும் வரையிலும் விபத்துக்கள் அவர்களை தீண்ட முடியாது. ஆகையால் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகா மாயாவியான மகாவிஷ்ணுவிடம் சென்று என்கட்டளையைக் கூறி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேவர்களும் அவரிடம் விடைபெற்றுத் திருமாலிடஞ் சென்று முறையிட்டார்கள். தேவர்களின் துயர்கேட்டுத் திருமாலோ வானவர்களே நீங்கள் துயரப்படுவதும் உண்மை தான். ஆனால் நீங்கள் கேட்கும் திரிரபுர சம்ஹாரம் சாத்தியப்படக் கூடுமோ? அத்திரிபுராதிகள் அசுரர்களாயினும் பாபிகள் அல்லவே! தருமம் மிகுந்த புண்ணியசீலர்களாயிற்றே, அவர்களைச் சங்கரிக்க நியாயம் ஏது? தருமம் இருக்குமிடத்தில் அதர்மம் புகமுடியுமா? சூரிய சன்னதியில் இருள் உண்டாகக் கூடுமோ? என்றெல்லாம் சொன்னார். அதைக் கேட்ட தேவர்கள் மிகவும் துயருற்று தலைவணங்கி பரமாத்மாவே! எங்களுக்கு வேறுவழியில்லை நாங்கள் என்ன செய்வோம்? அவ்வசுரர்கள் இருப்பதால் எங்கள் தருமங்கள் விருத்தியடையவில்லை ஒன்று அவர்கள் வாழ வேண்டுமென்று எங்களை அகாலப் பிரளயஞ் செய்து விடுங்கள். அல்லது அவர்களையாவது நாங்கள் வென்றிட வழி செய்யுங்கள் என்று மிகப் பக்திச் சிரத்தையோடு வேண்டினார்கள். திருமாலோ தீவிரமாக யோசித்துவிட்டு தேவர்களே! யச்சுதாரித்தால் சிவபெருமானைப் பூஜித்தால், உங்கள் இஷ்டசித்திகள் கைகூடுமாதலின் நீங்களும் யாகங்கள் செய்தால் திரிபுரங்கள் நாசமாகும்! என்று சொன்னார் தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து மனத்திடமும் தெம்பும் பெற்றார்கள் அப்போது திருமால் மேலும் சொல்லலானார்.

திரிபுர அசுரர்கள் மூவரும் மந்திரமஹிமையாலேயே இறக்கவேண்டும். ஆதலால் அதற்குச் சிவனாரின் தயவுவேண்டும் அது இல்லாமல் அவ்வசுரர்களை வதம் செய்ய நானோ, பிரமனோ தைத்தியர்களோ சக்தியற்றவர்களாகி விடுவோம். சிவபெருமானே அவரவர் இஷ்ட சித்திகளை நிறைவேற்றுபவர் தேவர்கள் கூட அவரைப் பூஜித்ததால் தான் வல்லமைகளைப் பெற்றனர், அவ்வளவு ஏன்? பிரமனும் சரி, நானும் சரி, சிவபெருமானைப் பூஜித்ததால் தான் படைக்கும் ஆற்றலைப் பிரமனும் காக்கும் ஆற்றலை நானும் பெற்றோம். ஆகையால் நீங்கள் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறி அவர்களுக்குச் சிவ மூலமந்திரத்தையும் உபதேசித்துக் கந்த புஷ்ப தூபதீப நைவேத்தியங்களால் இலக்ஷ லிங்கார்ச்சனை செய்வித்தார். அப் பூஜையின் முடிவில், கோரப்பல்-சூலம்-வேல்-கதை-பாணம் எறிகல் ஆகிய ஆயுதங்களையேந்திக் காலாக்நி ருத்ரன் போலவும் பிரளயகால சூரியன் போலவும் காந்தி மிக்க பற்பல பூதங்கள். தோன்றித்தேவர்களை வணங்கி எதிர் நின்றன விஷ்ணுமூர்த்தி அப்பூதங்களை நோக்கி நீங்கள் முப்புரங்களையும் கொளுத்தி இடித்துப் பொடிசூரணமாக்கிச் செல்லுங்கள் என்று பணித்தார். ஆனாலும் அவர் மனம் சலனமுற்றது அவர் சிவபெருமானைத் தனியே துதித்து நமஸ்கரித்து நான் இவர்களிடம் இப்படி ஏன் கட்டளையிட்டேன்; அசுரத் திரிபுராதிகளிடம் புண்ணியமும் தருமமும் பூரணமாய் விளங்கும்போது, அவர்களைச் சங்கரிக்கக் கூடுமோ? இப்பொழுதோ அவ்வசுரர்கள் ஒருவராலுஞ் சாகாவரம் பெற்றிருக்கிறார்களே! பாபிகளாயினும் சிவார்ச்சனை செய்தால் தாமரை இலையில் தண்ணீர் சேராதது போல அவர்களை விட்டுப் பாவங்கள் விலகுமாதலால் என்ன செய்வது? என்று யோசிக்கலானார் திரிபுராதிகள் சிவபூஜையை மறக்க நமது மாயா சக்தியால் ஏதாவது செய்ய வேண்டும் வேத தருமங்களும் சிவபூஜையும் தூய நடத்தையும் உள்ளவரையிலும். அவ்வசுரர்கள் அழிய மாட்டார்கள். அதற்குள்ள உபாயத்தைச் சிந்திக்க வேண்டும் என்று மாயோன் நினைத்துதேவர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு. ஏகாந்தமாகி இரகசிய சிந்தனையில் மூழ்கினார்.

20. மாயரூபி செய்த புறச்சமய உபதேசம்

விஷ்ணு மூர்த்தி தன்னிடமிருந்தே மாயாஸ்வரூபமான ஒரு புருஷனைத் தர்மவிக்நத்தை முன்னிட்டு உண்டாக்கினார். அப்புருஷன் மொட்டைத்தலையும் மலினவுடையும் மரத்தால் செய்த குண்டிகையும் மயில்தோகையால் செய்யப்பட்ட குஞ்சமும் ஒரு கையில் ஆடையும் தர்மாயென்னுஞ் சொல்லுமுடையவனாய், விஷ்ணுவைக் கைகுவித்துப் பணிந்து கட்டளைக்காகக் காத்து நின்றான். அவனைப்பார்த்து திருமால் நீ என்னுடலினின்றுதோன்றியதால் என் கட்டளைப்படி நடக்ககடவாய் மாயாமயமான சிரவுதாசார ஸ்மார்த்தாசார விருத்தமானதும் வருணாஸ்ரமமில்லாததும், இவ்வுலகத்திலேயே சுவர்க்க நரகங்கள் உள்ளன வென்பதும் வேதம் பொய் என்றும் சாஸ்திரங்கள் கர்மவாத மென்பதுமாய் உள்ள அக்கிரந்தங்களை நீ என்னிடமே கற்றுத் தேர்ந்து விரிவு படுத்த வேண்டிய ஆற்றலையும் என்னிடமே பெற்றுபல விதமாயைகளையும் என்னிடமிருந்தே சுவாதீனமாக அடைவாய் தோன்றுதல் மறைதல் வசியம்-அவசியம் சிநேகம்-விரோதம் முதலிய விசித்திர வித்தைகள் யாவும் உனக்குக் கைகூடும் என்று கூறி அவற்றை அவனுக்குக் கற்பித்து நீ திரிபுரம் சென்று அவ்வசுரர்களை உன் மாயா வித்தையால் மயக்கி அவர்களுக்கு இந்த சாஸ்திரத்தைக் கற்பித்து, அவர்களிடமிருந்து சிரவுதஸ்மார்த்த ஆசாரங்களை உன் வலிமையால் விக்கிதிரிபுரம் நாசமாகும்படி செய்ய வேண்டும் என்று பணித்து அம்மாயா புருஷனை அனுப்பி வைக்கலானார் அவ்விசுரர்கள் உன்னிடம் வசப்பட்டு நீ சொல்லும் சாஸ்திரத்தை மோகித்தபிறகு உவர் நிலத்தையடைந்து கலியுகம் வரும்வரையில் இருந்து, கலியுகம் வந்த பிறகு உன் சிஷ்யர்களுக்கும் பிறசிஷ்யர்களுக்கும் இக்கிரந்த சாஸ்திரங்களைப் போதித்து இவைகளை விருத்தி செய்யக்கடவாய் இதை நீ செய்வதால் நீயும் என் பதவியை அடைவாய் என்று ஆசிர்வதிக்கவே மாயாரூபியானவன் நான்கு சிஷ்யர்களைப் படைத்து அவர்களுக்கு இவ்விதத்தையை படிப்பித்து பண்டிதர்களாக்கி, விஷ்ணு சமூகத்திடம் வந்து நால்வரூமாக வணங்கினார்கள். மகிழ்வுற்ற மகாவிஷ்ணு நீங்கள் நால்வரும் உங்கள் குருவைப் போலவே வித்தை பயின்று விளங்குவீர்களாக! என்று ஆசிர்வதிக்க அந்நால்வரும் நமக்கு கிடப்பதெல்லாம் தர்மமே என்று சொல்லிக் கொண்டு சந்தைகளை கட்டிய பிராணி நிவாரண குச்சிகளைக் கையிலேந்தி விஷ்ணுவைப் பணிய அவர்களின் கையில் ஒப்புவித்து இவர்களை உன் போலவே நினைத்து காப்பாற்று என்று கூறி உங்களுக்கு பூஜ்யன் ருஷி பதி ஆசார்யன், உபாத்தியாயன் என்னும் இப்பெயர்கள் விளங்கிப் பரவுவதுடன் (ஆரிஹந்) சத்துருவைச் செபிப்பவன் என்னும் என் பெயரும் கூட உனக்கு உண்டாகுக! என்று ஆசிர்வதித்தார்.

நீங்கள் இப்பெயர்களை உச்சரித்து கொண்டிருங்கள் என்று அவர் கூறியதும் மாயாரூபி நமஸ்கரித்து விடை பெற்று நால்வரையுமுடன் கொண்டு திரிபுரத்திற்கருகில் ஒரு வனத்திலிருந்து மாயையுடையவர்களையும் மயக்கும் மாயை செய்யத் தக்கதான வினோத வித்தைகள் செய்து கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டவர்கள் அம்மதத்தில் போதனை பெற்று அம்மகத்தில் பற்றுக் கொண்டிருந்தார்கள் மாயைக் கண்டோர் மதிமயங்கினார்கள் இப்படி மாயை செய்து வந்த மாயாரூபியின் வித்தைகள் விஸ்தாரமாகிக் கொண்டிருக்கும்போது நாரத மகரிஷி விஷ்ணு மூர்த்தியையடைய விஷ்ணு அவரையும் இந்த ஐவரோடு சேர்ந்துக் கொள்ளும்படிச் சொன்னார் அதனால் மாயாரூபியும் அவர் சிஷ்யர்கள் நால்வரும் அவருடன் நாரதம் ஆக அறுவராக அவர் அசுரர்களின் பட்டணத்தில் பிரவேசித்தார்கள் நாரதர் முதலில் வித்யுன்மாலியைக் கண்டு இவர் மகா புத்திமான் தருமத்தைக் கருமமாகக் கருதுகிறவர். இவரிடம் அநேக தர்மங்கள் உள்ளன. இவருக்குச் சமமானவர் யாருமில்லை நானும் இவர் சிஷ்யனாகி உபதேசம் பெற்றேன். நீயும் இவரிடம் மந்திரோபதேசம் பெற்றுக்கொள்! என்று கூறினார். வித்யுன்மாலி நாரதரை நோக்கி மகா புண்ணியரான தாங்களே உபதேசம் பெற்றுள்ளபோது நானும் பெறுவதுதான் தருமம்! என்று கூறி மாயாரூபியை வணங்கி மகானுபாவரே! நீர் எனக்கு திøக்ஷ செய்யவேண்டும்! என்று வேண்டி நின்றார் மாயாரூபியோ வித்யுன்மாலியை நோக்கி அரசனே! நான் சொல்வதைத் தடையின்றி செய்யவேண்டும்! என்று சொல்வதற்கு முன்னரே அவ்வித்யுன்மாலி தங்கள் கட்டளைப்படியே நான் நடப்பேன்! என்றான் உடனே மாயாரூபி தன் வாயை மறைத்துக் கட்டிக் கொண்டிருந்த வெள்ளைத் துணியை நீக்கி, என் உபதேச மந்திரத்தையடைக! என்று சிவ தருமங்கள் நசிக்கத் தக்கதான சிலவகை மந்திரங்களை உபதேசித்து தீøக்ஷ செய்வித்து உன் பட்டணத்தார் அனைவரும் தீக்ஷõதாரராக மேற்கொண்ட அவ்வரசனும் தன் பிரஜைகளைத் தான் தீøக்ஷ பெற்றது போல் அவர்களும் பெறவேண்டும் என்று கட்டளையிட்டான். இதனால் மாயாரூபியின் சிஷ்யப் பிரஷ்யர்கள் நகர முழுதும் தீøக்ஷ செய்வித்து சமணமதத்தை பரப்பினார்கள்.

21. திரிபுராதியர் வஞ்சிக்கப்பட்ட கதை

மாயாரூபியானவன் திரிபுரம் முழுதும் சிவமதத்திற்குப் புறம்பான தன் கொள்கைகளைப் பரவிச் செய்து பதிவிரதத் தன்மை முதலிய மாதர் அறநெறிகள் சிரார்த்த கருமங்கள் சிவபூஜை யாகங்கள், தானங்கள், தீர்த்த தரிசனங்கள், வைதீக கர்மங்கள் ஆகியவற்றால் யாதொரு பயனுமில்லை என்று உபதேசித்தான் இதனால் அந்நகரவாசிகள் அவ்வாறே அவற்றை விட்டு ஒழித்தனர் விஷ்ணுவின் கட்டளையை ஏற்று அந்த மாயாரூபி அந்த நகரத்தையடைந்தவுடன் அந்த மாயையோடு மூதேவியும் அப்பட்டணத்தில் குடியேறி விட்டாள் திரிபுரசூரர்கள் தவஞ்செய்து அடைந்த ஐஸ்வரியலக்ஷ்மி பிரமதேவரின் கட்டளைப்படி இனி அங்கிருக்க ஒண்ணாது விலகினாள்.

மாயாஜாலனாகிய ஜைனனும் நாரதரும் அந்நகத்தாரையெல்லாம் மாயையால் மயக்கினார்கள் அசுரகுல மக்கள் நற்செயல்கள் விட்டு விட்டார்கள். அதைக் கண்டதும் திருமால் இனிக் காரிய சித்தியாகி விடும் என்று உள்ளூர மகிழ்ந்து சிவபெருமானிடம் சென்று மஹாதேவா! பரமாத்ம ஸ்வரூபா! நாராயணாயா! சம்சாரதுக்க நாசத்தைப் பிரமஞான உபதேசித்தால் போக்குபவரே! பிரமானந்த ஸ்வரூபரே உமக்கு நமஸ்காரம்! என்று வழிபட்டு தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை ஜலத்திலிருந்து மூன்றரைகோடி உரு ஜபித்துக் கொண்டிருந்தார் அப்போது தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமானைத் தியானித்து, சர்வ ஸ்வரூபா! மங்களதரா! பாபரஹிதா! நித்யா! நீலகண்டா! நாமரூபக்கிரியா ரஹிதா! ஜலஸ்வரூபா! நமஸ்காரம் நமஸ்காரம் துக்கம் அடையும் போது முறையிடக் கட்டளையிட்ட தேவரீரே எங்களுக்கு உற்றதுணை, உம்மை பூஜித்தாலொழிய எங்கள் துக்கங்கள் ஒழியா பிரகிருதி புருஷர்களுக்கு ஆதியானவரே ஜகத்குருவே ஜகத்துக்களை ரட்சிப்பவரே வேதங்கள் உம்மையே பரம த்மனாகக் கூறுகின்றன. அணுவுக்கு அணுவும் மகத்துக்கு மகத் மாய் உள்ளவர் நீரே! விசுவரூபியானவரே ஆயினும் ஒன்றிலும் அகப்படாதவரே! கோடிசூர்ய பிரகாசரே! சுவயம்புவே நீரே. இந்தத் திரிபுர அசுரர்களை சங்கரித்து, எங்களை ரட்சிக்க வேண்டும் என்று துதித்தார்கள்.

அப்போது சிவபெருமான், விஷ்ணுமூர்த்தி செய்த ஜெபத்திற்கும் தேவர்கள் செய்த தோத்திரத்திற்கும் மகிழ்ந்து அப்போதே பிரசன்னமாய் திருமாலை ஆலிங்கனஞ் செய்து கொண்டு, அவர்களைப் பார்த்து தேவர்களே விஷ்ணுவினால் செய்யப்பட்ட மாய உபாயமும் நாரதர் உடன்பாடும் எனக்குத் தெரியும் தர்மசூனியர்களாக மாறியிருக்கும் அத்திரிரபுர அசுரர்களின் திரிபுரங்களையும் இனி சம்ஹாரம் செய்வேன் என்று கூறி அந்தர்தானமானார் அவர் கூறியதைக் கேட்டதும் நாராயணன், நான்முகன், இந்திரன் முதலிய வானவர்கள் யாவரும் தங்கள் கைகளைத் தலைமேல் குவித்துக் கும்பிட்டு மகிழ்ந்தார்கள் இந்தச் சரித்தைக் கேட்டனர். சொன்னோர் எழுதியோர் முதலியவர்கள் சகலமான இஷ்ட காரியங்களையும் அடைவார்கள்.

22. போருக்குப் புதுமையான ரதம்

தேவர்கள், தத்தமது புத்திரர்களுடன் சிவபெருமானின் திருச்சன்னதிக்குச் சென்று, இனி நாம் என்ன செய்யலாம்? எங்கு போகலாம்? இன்னும் என்ன நடக்கப் போகிறதோ? என்று சிலரும் நாம் பாவிகள் என்று வேறு சிலரும் தைத்தியர்களே பாக்கியசாலிகள் என்று சிலரும் சொல்லி தம்மைத்தாமே பழித்துரைத்துக் கொண்டு மீண்டும் சிவசன்னதிக்குள் புகுந்தார்கள். அதுவரை அத்தேவர்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டிருந்த குபோதரன் அவர்கள் இரைச்சலைச் சகிக்காமல் தன் கையில் இருந்த தண்டாயுதத்தால் தேவர்கள் அடித்தான். அதனால் அமரர் யாவரும் அச்சங் கொண்டு ஓடினார்கள் பிறகு இமையவர் யாவரும் முனிவர்கள் முதலிய புண்ணியருக்கும் இத்தகைய விபத்து விளைந்தது தெய்வபலமா என்று அருகிலிருந்த விஷ்ணுவைக் கேட்டார்கள். அதற்குப் பரந்தாமர் அத்தேவர்கள் நோக்கி உங்களுக்கு ஏன் இத்தகைய துக்கம் வந்தது? இத்துன்பத்தை அறவே ஒழியுங்கள் பயன்கள் யாவையும் ஒருங்கே தரத்தக்க சிவ பூஜையை நீங்கள் செய்வீர்களேயானால் உங்களுக்குக் கிடைக்காதது ஏதாவது உண்டோ? சகல கணங்களுக்கும்  தலைவராகிய சங்கரர் தயையுடையவராவதற்கான வகையைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

தேவர்களே, நீங்கள் முதலில் பிரணவத்தை உச்சரித்து நம: என்பதைப் பிறகு கூறி சிவாய என்பதை இறுதியில் சுபம் சுபம் குரு குரு என்றும் மேல் சிவாய என்றும் நம என்றும் மீண்டும் ப்ரணவம் சேர்த்து சிவகடாக்ஷம் கிடைக்கும் வரையிலும் ஜெபிக்க வேண்டும் இந்த மந்திரத்தைக் கோடி முறை ஜெப்பித்தால் சிவபெருமான் கிருபையோடு இஷ்டப்பட்டக் காரியங்களை அனுகூலமாக்குவார் என்று உபதேசித்தார் பிறகு தேவர்கள் யாவரும் அந்தரங்கமான ஓர் இடம் சென்று அடைந்து சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டே மந்திரஜபம் செய்தார்கள். இதுபோலக் கோடிமுறைகள் அந்த மந்திரத்தை ஜெபித்த பிறகு சிவபெருமான் கிருபையுடன் தோன்றி. உங்கள் மனோபீஷ்டத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது தேவர்கள் வரங்கள் அனைத்தையும் கொடுப்பவரான சிவபெருமான் பின்வருமாறு துதிக்கலானார்கள் சகல உலகங்களுக்குச் சுகங்களை அளிக்கும் சுவாமி! பரமாத்மரூபி உலக ரக்ஷணயத்துக்காகச் சூலத்தை தரித்தவரே! உயர்வும் இழிவும் இல்லாதவரே பிரமத கணங்களுக்கு இறைவரே, கபர்த்தி முக்கிருதிக்குக் காரணரே, சர்வ வியாபியே நமஸ்காரம் என்று துதித்து தேவர்கள் அவர் முன்பு கைகட்டி வாய்பொத்தி நின்று எங்கள் விஷயத்தில் கிருபையுடையவராக இருந்தால் திரிபுரங்களை அழிக்கவேண்டும் என்று வேண்டினார்கள் அதனால் சிவபெருமான் விசுவகர்மனை அழைத்து, இரதம், தனுசு, பாணங்கள் ஆகியவற்றை உறுதியுள்ளனவாகச் சித்தஞ்செய் அப்படிச் செய்தால் திரிபுரங்கள் சீக்கிரமே அழிந்து விட்டதாகவே கருதலாம் என்று உத்தரவிட்டார் உடனே, விசுவகர்மன் பிரபஞ்சத்தைக் காக்கும் பொருட்டு சர்வதேவ தேஜோமய திவ்விய மங்கள ஸ்வரூபமான இரதம் ஒன்றைச் செய்து முடித்தான்.

23. திரிபுர தகனம்

சூதமாமுனிவர் மேலும் தொடர்ந்து சொல்லலானார். முனிவர்களே பதினான்கு உலகமயமான திவ்யரதத்தை மிக முயன்று தேவதேவனான மஹாதேவனுக்கு விசுவகர்மன் செய்து முடித்தான், சர்வ பூதமயமாயும் பொன்னால் செய்யப் பட்டதும் வலதுபுரம் சூரியனையும் இடதுபுறம் சந்திரனையும் சக்கரங்களாகக் கொண்டதும் நட்சத்திரங்கள் எல்லாம் வாமபாரிச சக்கரத்திற்கு அலங்காரஞ் செய்யப்பட்டதாயும் ருதுக்கள் ஆறும் கால நிரூபணத்துக்காக இரு சக்கரங்களில் இருக்கத் தக்கதாகவும் ஆகாயமே கொடுமுடியாகவும் மந்திரகிரியே ரதநீடம் ஆகவும் அஸ்தகிரியும் இருசுகள் ஆகவும் வர்ஷங்கள் வேகமாகவும், உத்தராயண தக்ஷணாயனங்கள் ரதஞ் செல்லும் வழியாகவும் சப்தசமுத்திரங்கள் அலங்காரமாகவும் கங்கை முதலிய நதி நங்கையர் சகல ஆபரண பூஷணதாரிகளாய் சாமரை வீசவும், பிரமன் ரதசாரதியாக கடிவாளங்களை ஏந்தவும் பிரணவத்தை குதிரைகளைச் செலுத்தும் கோலாகவும் விந்தமலையைக் குடையாகவும், மந்திர மலையைக் குடைக்கொம்பாகவும் மேருமலையை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் சரஸ்வதி அதிற்கட்டிய மணியாகவும், விஷ்ணு பாணமாகவும் அக்கினி சல்லியமாகவும் வேதங்கள் நான்கும் நான்கு குதிரைகளாகவும் துருவன் முதலிய நட்சத்திரங்கள் அலங்காரமாகவும் பிரமாண்டத்திலுள்ளயாவும் சம்பந்தமுங் கொண்ட திவ்விய ரதத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தான்.

சிவபெருமான் ஸர்வதேவஸ்வரூபராய் அந்த யுத்த ஸந்நத்தமான இரத்தில் ஆரோகணித்தார். அச்சமயத்தில் முனிவர்கள் ஜயஜய வென்று முழங்கினார்கள் தேவமங்கையர்கள் பல்லாண்டு பாடினார்கள். அந்த ரதம் செல்லும் போது உலகத்தைத் தாங்கும் கூர்ம ரூபியான நாராயணன் இடபரூபத்தை வகித்துவந்து அந்த ரதத்தை தானுஞ் சுமந்தார். அந்த ரதம் மனோவேகத்துடன் நடந்து யுத்தகோலமாகத் திரிபுரமாகிய ராக்ஷஸ வாசஸ்தானத்திற்குச் சென்றது.

அதாதஸ்யர தஸ்யாஸ்ய பகவாந்தரணீதர
வ்ருஷேந்த்ரரூபி சோததாய ஸ்தாபயாமாஸவைரதம்

அச்சமயத்தில் தேவர்களும் மாமுனிவர்களும் சகல உலகங்கட்குஞ் சுகத்தைச் செய்யும் சதாசிவமூர்த்தியைத் தரிசித்துக் களித்து ஜயவென்று புகழ்ந்தார்கள். அந்த ஸ்தோத்திரத்தையும், அவ்வலங்காரத்தையும் நூறு வருஷம் வரை வர்ணித்துச் சொன்னாலும் முடியாது. பார்வதி தேவியும் சிவபெருமானுடன் அவ்விரதத்திலிருந்து திரிபுரசம்ஹாரஞ்செய்து தேவர் முனிவர்கட்குச் சுகம் உண்டாக்குவதற்காகத் தானும் உடன் சென்றாள். விஷ்ணு, இந்திரன், முதலிய இமையவர்கள் தங்கள் தங்கள் வாகனங்களான இரத கஜதுரக விமானாதிகளில் ஏறி ஆயுதபாணிகளாய்ச் சிவபெருமானுக்கு முன்னே திரிபுரத்தை நோக்கி நடந்தார்கள் ஜடைகளையுடைய முனிவர்கள் தண்ட கமண்டலங்களுடன் குதித்து ஆர்ப்பரித்தார்கள். சித்தர் சாரணர் முதலானவர் புஷ்பமாரி பொழிந்தார்கள் சிவபெருமான் யுத்த கோலமாக திரிபுரத்தை நோக்கிச் செல்லும்போது ப்ரக்கிரந்தன் குந்ததந்தன், கம்பன், ப்ரகம்பன், இந்திரன், இந்திர, பகவான், யந்தன், ஹிமகரன், ஸதாட்சன், ஸ்தாயன், கங்கடன், கடபூதனன், த்விசிரன், த்ரிசிரன், ஏகானனன், அஜவக்கிரன்; க்ஷய வக்திரன், கஜவக்திரன் ஊர்த்வவத்திரன் முதலான எண்ணிறந்த லக்ஷக்கணக்குள்ள சிவகணத் தலைவர்கள் ஒரு வார்த்தை சொல்லலானார்கள் ஐயனே தாங்கள் மனதால் நினைத்தவுடனே சகல சராசரங்களையும் சம்ஹரிக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்கும் போது இந்த ஆடம்பரங்கள் எதற்கு? சகலமான போர்படை பரிவாரங்களுடன் கூடி இப்படி இரதத்தில் ஏறி ஆயுதபாணியாய்த் தேவசேனா சமூகத்துடன் வருவானேன் நம்பிக்கை வரவும் தங்கள் கீர்த்தி உலகத்தில் வியாபிக்கவும் பவர் சிவபெருமானேயன்றிப் பிறிதொருவர் இல்லையாதலால் அவர் திரிபுரசம்ஹார நிமித்தமாக வில்லை வளைத்தார். அப்பொழுது திரிபுரங்கள் ஒன்று சேர்ந்தன. அது கண்ட தேவர்கள் பெருஞ் சந்தோஷமடைந்தார்கள்.

தேவர்கள் முனிவர்கள் சித்தர் முதலிய பதினென் கணங்களும் அஷ்ட மூர்த்தமாக விளங்குஞ் சிவபெருமானைத் துதித்தார்கள். அப்பொழுது பிரம தேவர் முக்கண் பெருமானே! முப்புரங்களும் ஒன்று சேர்ந்துள்ள இந்தச் சமயமே நல்ல சமயம்! சிறிது தாமதமானால் அவைபிரிந்து போகக்கூடும் ஆகையால் சீக்கிரமே பாணத்தை எய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார் சிவபெருமானும் உடனே மேருமலையை வில்லாக வளைத்து வாசுகியான நாணையேறிட்டு விஷ்ணுவான முனையையுடைய பாசுபதாஸ்திரத்தை ஏற்றி, பிரமன் வார்த்தை பயனற்றதென்றும் நினைத்து, திரிபுரத்தை சினந்து பார்க்கத் திக்கென்று தீப்பற்றிப் புரங்கள் மூன்றும் எரிந்தன. பிரமன் நடு நடுங்கிச் சிவபெருமானைப் பார்த்துப் பணிந்து கைகட்டி வாய் பொத்தி எதிர் நின்று தேவதேவா! நீங்கள் பார்த்தவுடனேயே திரிபுரங்கள் சுடுசாம்பலாக போவதாயிற்றே? இந்த திரிபுரதகனத்திற்கு இரதம் முதலிய ஆடம்பரங்களெல்லாம் என்னையொத்தவர்கள் இதில் பணிவிடைகள் புரிந்து புகழ் பெறுவதற்காகவே செய்தீர் இனி இப்பாணத்தை விட்டுவிட வேண்டும் என்று பிரார்த்தித்தார் அதற்கிணங்கச் சிவபெருமான் அந்த அஸ்திரத்தைவிட அது திரிபுரத்தையடைந்து நாசம் செய்து சிவனாரிடம் திரும்பி வந்தது பல பல கோடி தைத்ய சேனைகளுடன் கூடிய திரிபுரங்கள் ஒரே அஸ்திரத்தால் எரிந்தது அது கற்பாந்த காலத்தில் திரிலோகங்களும் ஒரே பிரளய கால ருத்ரனால் அழிக்கப்பட்ட போலிருந்தது அந்தத் திரிபுரத்தில் சிவபூஜை செய்து வந்த பெருந்தவமுனிவர்கள் யாவரும் சிவகணப் பதவி அடைந்தார்கள் அப்பொழுது மகாவிஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் தேவதேவனான சிவபெருமானையும் அவர் வாம பாகத்தில் வீற்றிருக்கும் சகலலோக மாதாவான உமாதேவியையும் பார்த்துப் பயந்தால் ஒன்றும் பேசாது கும்பிட்டு நின்றார்கள். பிரமதேவன் விஷ்ணு இந்திரன் முதலிய இமையவர்கள் ஒன்று சேர்ந்து திரிபுரதகனஞ் செய்த சிவபெருமானை நோக்கி மெய்யன்போடு கைகுவித்து அண்ணலே தேவ தேவனாகவும் பரமேஸ்வரனாகவும் ஜகத் பிரபுவாகவும் உலகத்திற்குச் சுகத்தைச் செய்பவராகவும் விளங்குபவரே! எங்களிடம் கோபந்தணிந்து திருவருள் புரியவேண்டும் பிரணவஸ்வரூபியாயும், குணாஹிதனாகியும், சகுணனாகியும், சதாசிவனாகியும், சாந்தனாகியும் மகேசனாகியும், பிநாகியாகியும், சர்வஜ்ஞனாகியும் சகலத்தையும், ரக்ஷிப்பவனாகியும், ஸத்யோஜாதஸ்வரூபியாகியும் விளங்கும் உமக்கு நமஸ்காரம் என்று தோத்திரம் செய்து அவரவரும் தனித்தனியாக சாஷ்டாங்கமாகப் பணித்து, பகைவரை வென்றமைப் பற்றிப் பெருங்களிப்புடன் சிவத்தியனபரராய் இருந்தார்கள். அப்பொழுது பிரமதேவர் திரிபுர தகனரே எனக்கு உம்மிடம் பிரியாத திடபக்தியும் இதுபோலவே என்றும் சாரதித் தொழிலும் நிலைபெற அருள் பாலிக்க வேண்டும் என்றார். விஷ்ணு, சாஷ்டாங்க மாய்ப் பணிந்து கைகட்டி நின்று சற்குண நிர்குணஸ்வரூபியாகவும் ப்ரகிருதி புருஷ ரூபனாகவும் விசுவாத் மகனாகவும் விளங்கும் உமக்கு நமஸ்காரம் உம்மிடம் எனக்கு என்றும் நீங்காத பக்தியிருந்து வரவேண்டும் என்றார் பிறகுசகல நமஸ்கரித்து புராரியை நோக்கி நுதல் விழிப் பெருமானே எங்களிடம் தயையுடையவராயிருந்து எங்கள் பக்தியை வளர்க்க வேண்டும் என்றார்கள். சிவபெருமான் பெருமகிழ்ச்சியடைந்து தேவர்களே உங்கள் தோத்திரத்திற்கு நாம் மனங்களித்தோம் உங்களுக்கு வேண்டிய வரங்களை கேளுங்கள்! என்றார்.

மகாதேவா! எங்களுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் காட்சியளித்து எங்கள் கஷ்டங்களைப் போக்கியருள வேண்டும் என்றார்கள். சிவபெருமான் அவ்வாறே ஆகுக வென்றும் உங்களுக்கு முக்தியருள் புரிவோம் என்றும் திருவாய் மலர்ந்தருளிச் சில வரங்களைக் கொடுத்தார், அப்பொழுது நிரீசுவர வாதிகளான சில முண்டித சிரசுடையவர்கள் வந்து தேவர்களைப் பணிந்து எங்கள் கதி என்ன? என்று கேட்டார்கள் அதற்கு திருமால் பிரமன் முதலிய தேவர்கள் நீங்கள் கலியுகம் வரும் வரையில் நிர்ஜ்ஜல பூமியில் வசிக்க வேண்டும் என்று கூறவே அவர்கள் பணிந்து அவ்வாறே சென்றிருந்தார்கள் பிறகு தேவர்கள் தத்தமது இருப்பிடஞ் சேர்ந்தனர். இந்த உபாக்யானததைத் கேட்கிறவன் ஸர்வபீஷ்டமுமடைவான் என்பது திண்ணம்.

24. விசுவகர்மா தந்த சிவலிங்கங்கள்

பிருமதேவர் அவருடைய சத்தியலோகம் சென்றார் முனிவர்களை அழைத்தார். அவர்களைப் பார்த்து நகைத்த வண்ணம் முனிவர்களே! உங்களுக்கு இஷ்டகாரிய சித்தியும் இன்னும் அநேக நன்மைகளும் உண்டாக வேண்டுமென்றால் என்னுடன் சேர்த்து திருப்பாற்கடலுக்கு வாருங்கள். நான் தத்வரகசியத்தை நன்றாக விசாரித்திருக்கிறேன் என்று சொன்னார். அதைக் கேட்ட தேவர்களும் முனிவர்களும் பிருமதேவருடன் சென்று விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் க்ஷராபதியையடைந்து திருமாலை வணங்கி பரந்தாமா ஜகந்நாதா, பக்தப்பிரியா, லக்ஷ்மிநாயகா, அபயங்கொடுத்து அநுக்ரஹிப்போன், மேகவர்ணா, சதுரபுஜங்களையுடையாய்  பீதாம்பரதாரா, சங்கு, சக்கர, கதை, பத்மங்களையளித்தோய், புரு÷ஷாத்தமா, புண்டரீகாஷா கவுஸ்துவாபணா இடர்பட்டவர்களுக்கு இரக்ஷண்யம் அளிப்பவன் நீ தான் ஆதலால் எங்கள் விஷயத்திலும் அபயமளித்திட வேண்டும். சந்தோஷத்துடன் பிரசன்னமாக வேண்டும். ஜய ஜய வென்று துதித்தார்கள் அதனால் மனங்குளிர்ந்த கார்மேக வண்ணர் அவருடைய நிஜ வடிவம் எடுத்து அவர்கள் முன்னால் தோற்றமளித்தார்! அதைக் கண்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர், அவர்களை திருமால் நோக்கி தேவர்களே, நீங்கள் என்னை நாடி வந்த நோக்கம் என்ன? என்று கேட்டார் அதற்கு பிரமதேவர் வைகுந்தவாசா உம் குளுமையான கிருபையால் சகல துன்பங்களும் ஒழிந்தன. ஆனாலும் அனைவருக்கும் இதமுண்டாகும்படி ஒன்று உம்மிடம் கேட்க விரும்புகிறோம். நாள்தோறும் எவரைச் சேவித்தால் எல்லாத் துயரங்களும் நீங்கி நித்தமான சுகங் கிடைக்கும் நானும் இவ்வமையவர்களும் எவரை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் பெறுவோம் என்று கேட்டார். அவரை விஷ்ணு பரமாத்மா புன்முறுவலோடு நோக்கி பிரமனே! உனக்கு இதனை நான் ஆதியிலேயே அறிவித்திகுக்கிறேன், நீ அதைக் கேட்டு அறிந்திருக்கிறாய் ஆயினும் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்துகிறேன் பிரமனே! பூஜிக்கத்தக்கப் பொருள் உனக்குடைதாயிருந்தும் என்னைக் கேட்கிறாய் சகலலோகத்திலும் சங்கரர்தானே பூஜிக்க வேண்டிய பதி? அவரன்றி பிறனொருவன் உண்டோ? இவ்வுண்மையை உனக்கும் எனக்கும் முன்பொரு சமயம் சிவபெருமானே சொல்லியிருக்கிறாரே. அதற்குத் திருஷ்டாந்தமாகத் தாரகாசுரத் திரிபுராதிகளை சிவபக்தியிலிருந்து மறக்கச் செய்து என்னால் சிருஷ்டிக்கப்பட்ட மாயாரூபிகளின் மயக்கத்தில் சுட்டுண்டு அவ்வசுரர்கள் மாண்டு போனதையும் நீ அறிவாயல்லவா? ஆகையால் தேவர்களான நீங்கள் விரும்பும் நித்தியமான சுகத்தை அடைய அதி பத்தி சிரவணத்தோடு, சிவலிங்கமான ரூபியான சிவபெருமானைப் பூஜைசெய்து வாருங்கள், நானும் சாட்சாத் சிவபெருமானைப் பூஜித்து வருவதால்தான், இப்படி உங்கள் தோத்திரங்களுக்கெல்லாம் உரியவனாக இருக்கிறேனேயன்றி மற்றபடியல்ல உலகில் எந்தப் பொருளையும் சிவலிங்க ரூபமாகச் செய்தால் அதில் சிவபெருமான் தோற்றமளிக்கிறார் .

ஆகையால், இஷ்ட சித்தியடைய விரும்பும் யாவரும் சிவலிங்கார்ச்சனை செய்ய வேண்டும் தேவர்களும் வைத்தியர்களும் தானவரும் நாமும் எல்லோரும் சிவலிங்கபூஜை செய்ய வேண்டியவர்களே பிரமனே நீர் இதை அறிந்திருந்து மறந்ததும் ஏனோ? நீ இனிமேலாவது எவ்வகையிலாவது சிவலிங்க பூஜைசெய்து வரவேண்டும். எந்தக் காலத்திலும் சிவத்தியானத்திலேயே மூழ்கியிருக்க வேண்டும் எப்பொழுது சிவத்தியானத்தை மறக்கிறோமோ அப்பொழுதே நமக்கு இடையூறு நெருங்கும் அதுவே அதர்மமாகும். அதுவே விக்னகாலம். அதுவே மூடத்தனம் சிவபக்தி எவருக்குண்டோ , சிவஸ்மரணை எவர் செய்வாரோ அவர்கள் துயரங்களின்றி வாழ்வார்கள் மனோகரமான வீடுகள், பலவிதமான ஆபரணங்கள், சுந்தர அழகான பெண்கள், போது மென்ற அளவு தனம் புத்திர பாக்கிய சந்ததி தேகாரோக்கியம், பலவித சீனி சீனாம்பரங்கள் இரதகஜ துரகம் முதலான வாகனங்கள். பெரும்புகழ் ஸ்வர்க்கபோகம், தீர்க்காயுள், நல்ல சிநேகிதர்கள், முக்திபலம் முதலானவற்றை விரும்புகிறவர்கள் எப்போதும் சிவபகவானை சிவலிங்க மூர்த்தத்தில் பூஜிக்க வேண்டும். பக்தியுடன் லிங்கபூஜை செய்கிறவன் புண்ணிய கருமங்களைச் செய்ய நேரிடுமேயன்றி பாவத்தால் பீடிக்கப்படமாட்டான் என்று மகாவிஷ்ணு விவரித்தார். இம்மகா ஆலோசனையைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களும் முனிவர்களும் திருமாலை வணங்கி நாங்கள் பூஜைசெய்ய லிங்கம் கிடைக்காததால் இஷ்டகாமியங்களெல்லாம் . எங்களுக்குக் கைகூடச் சிவலிங்கங்களை பிரஸாதிக்க வேண்டும். என்று பிரார்த்தித்தார்கள். விஷ்ணுவும் பிரமதேவரும் யோசித்து விசுவகர்மனை அழைத்து இத்தேவர்கட்கெல்லாம் அவரவர் கவுரவத்திற் கேற்றாற்போல் யோக்கியமான லிங்கங்களை செய்து கொடு என்று சொன்னார்கள். விசுவகர்மனும் அப்படியே அவர்களுக்கு லிங்கங்களைக் கொடுத்தான். இந்திரனுக்குப் பதுமராக லிங்கத்தையும் குபேரனுக்கு சுவர்ண(பொன்) லிங்கத்தையும் இமயனுக்கு கோமேதக லிங்கத்தையும் வருணனுக்கு நீலலிங்கத்தையும், விஷ்ணுவுக்கு இந்திரலிங்கத்தையும், பிரமனுக்கு சுவர்ண லிங்கத்தையும் விச்சுவ தேவர்களுக்கு பார்த்திவ லிங்கத்தையும் அஸ்வினி தேவர்களுக்கு ஸ்திரீகளுக்கும் ஸ்படிக லிங்கத்தையும் இலக்குமிதேவிக்கு தாமிர லிங்கத்தையும் துவாசாதித்தர்களுக்கும் சோமனுக்கும் முத்துலிங்கத்தையும் வழங்கினார் வஜ்ரலிங்கத்தை அக்கினியும், சந்தன லிங்கத்தை மயனும் பவளலிங்கத்தை அநந்தன் முதலிய ஸர்ப்பராஜர்களும், கோமயலிங்கத்தை தைத்தியரும் இராக்ஷஸரும் இரும்பு லிங்கத்தைப் பைசாசங்களும், நவநீத லிங்கத்தைச் சசி முதலிய ஸ்திரீகளால் பூஜிக்கப்பட்ட பார்வதிதேவியும், தாருலிங்கத்தை நிருதியும், பஸ்மலிங்கத்தை யோகியும், மாவுலிங்கத்தைச் சூரியன் மனைவியான சாயா தேவியும் இரத்தின லிங்கத்தை சரசுவதி தேவியும், தயிரால் செய்த லிங்கத்தை யக்ஷர்களும் பெறும்படி விசுவகர்மன் கொடுத்தான்.

அவற்றை வாங்கிய தேவர்கள், முனிவர்கள், பிரமாவிஷ்ணு யக்ஷர் முதலானவர்கள் தமது காரியசித்தியின் பொருட்டு அந்த சிவலிங்கங்களை விதிப்படி அருச்சித்தார்கள், விஷ்ணுபகவான் பிருமன் முதலிய தேவர்களுக்குப் பூஜாவிதியைச் சொல்லியருளினார். அவர்கள் ஆனந்தமுற்றுத் தங்கள் வாசஸ்தானத்தையடைந்தார்கள். விஷ்ணுமூர்த்தியும், அந்தர்த்தானமாயினார். பிருமா சத்யலோகமடைந்து, முன்பு தன்னுடன் க்ஷீராப்திக்கு வராத தேவர்கட்கும் சிவபூஜாவிதியை முறைப்படி உபதேசித்தார்.

25. பாஹ்ய ஆந்தரலிங்கங்கள்

நைமிசாரண்ணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி ஞான வள்ளலே! பிரமதேவர், சத்தியலோகஞ் சென்ற பிறகு நடந்தலிருத்தாந்தங்களையும், பிரமதேவர் சிவபூஜா விதியை அவர்களுக்கு உபதேசித்ததையும், எங்களுக்குச் சொல்லியருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள சூதமுனிவர், உலகத்திலிருப்பவர் அனைவரும் சுகமடைய வேண்டிய விஷயமாக என்னைக் கேட்டீர்கள் இவ்விஷயத்தை முன்பு ஒரு காலத்தில் வியாச முனிவர் சநத்குமார முனிவரைக் கேட்க அதற்கு சநத்குமாரர் சொல்லியபடியே வியாசர் எனக்குச் சொல்லியதை உங்களுக்கு சொல்லுகிறேன் என்று கூறலானார். பிருமதேவர் சத்தியலோகமடைந்த பிறகு தேவர், முனிவர் முதலானோரை நோக்கி சிவபூஜா விதியைச் சொல்லுகிறேன் கேட்க வேண்டும். சகல ஜன்மங்களிலும் துர்லபமான மாநுட ஜன்மத்தில் நற்குலத்தில் அங்கக்கேடின்றி உதிப்பது அருமை. அத்தகைய அரிய பிறவியையடைந்த பிறகு தன் குலத்திற்கேற்ற காரியங்களைச் செய்ய வேண்டுமே தவிர, அளவு கடந்திருந்தால் அக்கருமத்திற்குத் தக்க பலன் கிட்டாது, தன் ஞானத்திற்கு எட்டாத காரியங்களில் யாருமே தலையிடக் கூடாது.

கர்மயாகங்கள் பல்லாயிரஞ் செய்வதைக் காட்டிலும் தீர்த்த யாத்திரை முதலான தபோயாகஞ் சிறந்தது. தபோயாகங்கள் பல்லாயிரத்திலும் ஜெபயாகஞ் சிறந்தது. அந்த ஜப யாகங்கள் பல்லாயிரத்தையும் விட மான்சீக தியானயாகம் சிறந்தது. தியான யாகத்திலுஞ் சிறந்தது பிறிதொன்றுமில்லை. அதுவே ஞானமார்க்கத்திற்குக் காரணம் சர்வ வியாபகமாவுள்ள பரம்பிரம வஸ்துவை யோக புருஷன் தன் தியானத்தினால் தன் இதயத்தில் தரிசிக்கிறான். தியான யாகத்தில் இருப்பவனுக்குப் பரமசிவன் எப்பொழுதும் அருகிலேயே இருப்பார். அவன் பிரம ஸ்வரூபமாயிருப்பதால் சத்கருமங்களை விடுத்தாலும் பிராய சித்தம் வேண்டுவதில்லை, சுகம், துக்கம், அதர்மம், ஜபம், ஓமம், தியானம், யோகம் முதலியவெல்லாம் அவனுக்கு அவசியமில்லை பரமானந்தத்தை உண்டு செய்வதும் பரிசுத்தமானதும், நாசமில்லாததும் நிஷ்களமானதும், ஸர்வ பரிபூரணமாயுள்ளதுமான சிவலிங்கத்தை இதயத்திலிருப்பதாக அவன் எண்ணுகிறான். இந்த லிங்கம் பாஹ்யலிங்கம் ஆந்தலிங்கம் என இரு வகைப்படும். அவற்றுள் பாஹ்யம் என்பது ஸ்தூலமாக (பருமையாக) கண்ணுக்குப் புலப்படுவது ஆந்தரம்-இருதயத்தில் சூட்சமாக (நுட்பமாக) உள்ளது. காம்யாகத்திலிருக்கும் எல்லோரும் பாஹ்பலிங்கார்ச்சனை செய்ய வேண்டும். ஏனெனில் அஞ்ஞானிகளுக்கெல்லாம் பக்தியுண்டாவதற்காக ஸ்தூலத்தில் சூட்சமத்தை பாவனை செய்து பூஜிக்க வேண்டும். ஞானிகளுக்குத் தோஷரஹிதமான சூட்சமலிங்கம் பிரத்யட்சமாகவிருக்கும் அஞ்ஞானிகள் அனைவரும் மண் மரம் இவற்றால் செய்யப்பட்ட லிங்கங்களை பூஜிக்க வேண்டும். தத்வார்த்தங்களை உணர்ந்தவர்கள் இம் மிருத்லிங்கம் (புற்றுமண்லிங்கம்) முதலியவற்றால் பயமின்றிச் சகலமுஞ்சிவ மயம் என்று பாவித்து அகண்ட பரிபூரணமாக விளங்குகிறவன் சிவபெருமானென்று தெரிந்திருப்பார்கள். ஞானிக்கு விக்கிரக ஆராதனை (உருவ வழிபாடு) வேண்டியதில்லை. இத்தகைய ஞானம் இல்லாதவனுக்குப் பிரதிமாகல்பனஞ் செய்து கொள்ள வேண்டுவது அவசியம் உயர்விடத்தில் செல்ல வேண்டியவனுக்கு சொபானம் (மடி) இன்றியமையாதது போல நிர்குணமான சிவலிங்கப் பிராப்தியையடைய வேண்டிய அஞ்ஞானிக்கே பிரதிமா பூஜை விக்கிரக வழிபாடு சொல்லப்பட்டிருக்கிறது சகுண பூஜையால் நிர்குணமான சிவப்பிராப்தி யுண்டாகும்.

இவ்வாறே சகல தேவதாப் பிரதிமைகளும் அவரவர் கோரிக்கையின்படி இஷ்டசித்திகளைக் கொடுக்கின்றன பூஜை செய்பவன் பூஜை செய்கிறேன் என்பதேயில்லாமல் பக்திபரவசமாகி அவனுக்கு ஞானோதியம் உண்டாகும்வரை பூஜிக்க வேண்டும். ஞானமில்லாமல் செய்யும் பூஜையால் பூஜை செய்யும் சந்தனம்-புஷ்பம்-தீர்த்தம் நிவேதனம் ஆகிய அனைத்தும் பயனற்றதாகும் சிரத்தையேதுமில்லாமல் பிரயாமையின்றி பூஜை செய்கிறவனின் பூஜை வியர்த்தமாவதுமின்றி அவனும் அதோலோகப் பிராப்தியடைவான். இதனால் உங்களுக்கு மேலும் பாஹ்யலிங்க பூஜையைச் சொல்லுகிறேன் என்று பிரமதேவர் சொல்லலானார், தேவர்களே ஸ்வஜாதி யுசிதமான கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு எந்தெந்த விக்கிரகத்தில் தனக்குப் பக்தியுண்டாகுமோ அந்தந்தப் பிரதிமையை பூஜை செய்ய வேண்டும். பூஜை தானம் முதலான நற்கருமங்கள் செய்யாவிட்டால் பாதகம் ஒழியாது. பாதகம் ஒழியாவிட்டால் சித்தியுண்டாகாது. மாசுபடிந்த ஆடைகளை படிகாரத்தில் ஊறவைத்த பிறகு தோய்த்துச் சாயம் போட்டால் அந்தச் சாயம் அதில் லேசாக பிடிப்பது போல பாதங்களை ஸ்தூல பூஜையாகிய பிரதிமா பூஜைபோல் போக்கின பிறகு! சூட்சம பூஜையால் ஞானமடைந்து விஞ்ஞானிகளாவர் அந்த விஞ்ஞானத்திற்கு ஞானமும் ஞானத்திற்கு த்ருடபக்தியும், பக்திக்குப் பிரதிமா பூஜையும், பிரதிமா பூஜைக்கு சத்குருவும் சத்குருவையடைவதற்கு சத்சாங்கத்யமும் (நல்லுறவு) காரணமாகும் சத்சாங்கயத்தால் சத்குருவையடைந்து சத்குருவால் மந்தராதிக்க பூஜையும் அந்த பூஜையால் பக்தியும், பக்தியால் ஞானமும் ஞானத்தால் விஞ்ஞானமும் உண்டாவது சத்தியம், விஞ்ஞானிக்கு நான் அவன் என்றும், குமாரன் பிறன் என்றும் சிநேகிதன் பகைவன் என்றும்; மானம் அவமானம் என்றும் லாப நஷ்டம், ஜெயம் அபஜெயம் என்றும் பேதமின்றிச் சம்புத்தி உண்டாகும்.

இத்தகையச் சொந்த புத்தியற்றவன் சிவரூபியாவான், இப்படிப்பட்ட விஞ்ஞானியாக எல்லோரும் ஆவதில்லை, கோடியில் ஒருவனே ஆகிறான் அப்படி உள்ளவனை ஒருவன் கண்டதுமே அவனுடைய சகல பாபங்களும் ஒழிந்துவிடும். பிரதிமாரூபனேதேவர்கள் கூட ஒருவனைப் புனிதப்படுத்த அநேக காலமாகும். விஞ்ஞானியோ அவனைக்கண்ட பொழுதே புனிதமாக்குவான். இல்லறவாழ்க்கையில் இருக்கும் வரையில் பிரதிமா பூஜை செய்ய வேண்டும். சிவரூபமாவது தேவிரூபமாவது, விஷ்ணுரூபமாவது சூரியரூபமாவது கணபதிரூபமாவது அல்லது இந்த ஐந்து ரூபத்தையாவது சகலக் காரணகனான சிவலிங்கப் பெருமானையாவது பூஜிக்க வேண்டும். மரத்தின் வேரில்தான் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்பொழுது தான் அது கிளைகளுக்கும் இலைகளுக்கும் பாயும் அதற்கு மாறாகக் கிளையின் மேல் நீர் வார்த்தால் அது மரத்திற்குப் பயனளிக்காது அது போலவே மரத்தின் வேர் போலுள்ள மூல காரணனான சிவபெருமானைப் பூஜித்தால் அது சகல தேவர்களையும் சார்ந்து திருப்தியைத் தரும் சிவபூஜை செய்யாமல் மற்ற தேவர்களைப் பூஜிப்பது மரக்கிளையின் மேல் சொரிய்யப்படும் நீருக்கு ஒப்பாகும் த்ரியம்பகனாகிய சிவபெருமானைப் பூஜித்தால் கோரிக்கைகள் அனைத்தும் சித்தியாகும் என்று பிரமதேவர் கூறினார்.

26. நித்திய கருமங்கள் கூறல்

சூதர் சொல்லலானார். ப்ராம்ஹ முகூர்த்தத்தில் எழுந்து விஷ்ணுவையும் குருவையும் அன்புடன் துதித்து தேக சுத்தி செய்து கால்கைகள் கழுவி சூரிய உதயத்திற்கு முன் தந்ததாவனஞ் செய்து முகத்தை இரு கைகளாலும் நீர் கொண்டு பதினாறு முறைகள் கழுவி நதி முதலியவற்றில் தேசகால விரோதமின்றி ஸ்நானஞ் செய்ய வேண்டியது(ஆதிவாரம்-சிரார்த்ததினம்-சூரிய சங்கராந்தி கிரகணம். மகாதானஞ் செய்யும் சமயம் புண்ணிய காலம், உபவாசதினம் அசவுச தினங்கள் இந்தச் சமயங்களில் உஷ்ணஜல ஸ்நானம் செய்யக் கூடாது) எண்ணை தேய்த்து நீராட வேண்டியவர்கள் முறையே ஆதிவாரம்(ஞாயிற்றுக் கிழமை) ரோகத்தையும் சோமவாரம்(திங்கள்) தேஜசையும், அங்காரகவாரம்(செவ்வாய்) மரணத்தையும் புதவாரம் லக்ஷ்மிகடாட்சத்தையும் குருவாரம்(விழாயன்) தரித்திரத் தன்மையையும் சுக்ரவாரம்(வெள்ளிக்கிழமை) அசுகத்தையும் சனிவாரம் சுகத்தையும், உண்டாக்குமாதலால் நிசித்த வாரங்களில் (விலக்கு கிழமைகளில்) எண்ணை ஸ்நானம் செய்யக் கூடாது. அப்படி நிசித்த (விலக்கு) வாரங்களில் ஸ்நானம் செய்ய நேரிட்டால், ஆதிவாரத்தில் பூவும், மங்கள வாரத்தில் மண்ணும் குரு வாரத்தில் அருகம் புல்லும் சுக்ரவாரத்தில் ஜலத்துளியும் எண்ணையில் சேர்த்து அப்பியங்கனம் செய்து கொள்ள வேண்டும். நித்யாப்யங்கணஞ் செய்யும் நியதியையுடைவன் பரிமளவஸ்துக்கள் சேர்ந்த எண்ணையிட்டுக் கொள்ளலாம், ஸ்ரார்த்தம்-கிரஹணம் உபவாசம் பிரதமை ஆகிய தினங்களில் கடுகெண்ணெயை உபயோகிக்கலாம். தேசகாரிங்களையறிந்து சாஸ்திரப்படி ஸ்நானம் செய்கையில் வடக்கு திசையாயாவது கிழக்குத் திசையையாவது நோக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். முதல் நாளில் உடுத்திய உடையையும் இராத்திரி உடுத்தியதையும் பிறர் உடுத்திய ஆடைகளையும் கட்டிக்கொண்டு நீராடக் கூடாது. நல்ல உடைகளை உடுத்தி கைக்கால் கழுவி ஆசமனஞ் செய்து(நீராடும் தண்ணிரைக்கங்காதி தீர்த்தங்களாகப் பாவனை செய்து துதித்து) சங்கல்பங்கூறி உடலை நனைத்து மிருத்திகா ஸ்நானம் செய்து உடலைத் துடைத்து மடிவஸ்திரங்கட்டிக் கொண்டு ஆசமனஞ் செய்து கோமயம் முதலியவற்றால் சுத்தி செய்த நல்லவிடத்தில் நல்ல மரத்தால் செய்த ஆசனத்தில் கம்பளம் முதலிய சித்ராசனமிட்டு, அதன் மேல் பட்டாடை பரப்பி அதில் உட்கார வேண்டும் அப்படிப்பட்ட ஆசனஞ் கிடைக்காவிட்டால் மான்தோலின் மேலிருந்து த்ரிபுண்டரம் ஊர்த்துவ புண்டரம் அர்த்த சந்திரம் வமிசபத்திரம்-பாரிஜாத புஷ்பம் ஆகிய இவ்வைந்தில் தமக்குரிய ஒரு வகையாகத் தரித்துக் கொள்ளவும் திரிபுண்டர ஊர்த்துவ புண்டரங்கள் சிவ பக்தர்களுக்குரியவை பிரம்மக்ஷத்திரிய வைசியர்கள் நான்கு வகையான திலகங்களை அணியலாம். அர்த்த சந்திரம் ஊர்த்துவ புண்டரமாகிய இரண்டும் சூத்திரர்க்கு உரியவை வத்சபத்ரம் போன்ற திலகம் விஷ்ணு பக்தர்கள் தரிக்க வேண்டும்.

இவ்வாறு தரித்தால் ஜபம், தபம், தானம் எல்லாம் சபலமாகும், பஸ்மம் (திருநீறு) முதலானது இல்லாவிட்டால் ஜலத்தாலாவது திலகந்தரிக்க வேண்டும். பிறகு தங்கள் குலத்திற்கேற்ற அநுஷ்டானங்களைச் செய்து கொண்டு சிவார்ச்சனை செய்ய வேண்டும். எப்படியென்றால் மந்திர பூர்வமாக மூன்று தரம் அல்லது ஒரு தரம் ஆசமனஞ் செய்து கொண்டு வந்து கங்கையைத் துதித்து (ஆத்மதத்வாய சுவாஹா சிவதத்துவாய சுவாஹா வித்தியாத தத்துவாய சுவாஹா) என்று ஆசமனஞ் செய்து சங்கல்பித்து பூஜாபாத்ர ஜலத்தைக் கொண்டு சிவ பூஜைக்கு வேண்டிய உபகாரணங்களைத் தன் சக்திக்கேற்பச் சேகரித்து மனதைத் த்ருடப்படுத்தி லிங்கஸ்ய ஆக்நேய பாகஸ்த ப்ரகாதி முகமர் ச்சயேத் என்று சாஸ்திரப்படி அக்கினி திசையிலிருக்கச் சிவலிங்கத்தை வைத்து மந்திர குருவைத் தியானித்து அவரைப் பூஜித்து மனதில் குருகடாக்ஷத்தைக் கருதி, மீண்டும் தன் மனவிருப்பத்தைச் சேர்த்துச் சங்கல்பங் கூறி, பரிவார தேவர்களுடன் சிவனைப் பூஜிக்க வேண்டும் சங்கம் சக்ரம் தேனு முதலிய முத்திரைகளில் ஒன்றைக்காட்டி முதலில் சித்தி, புத்தி, சமேதராகியும் லக்ஷன், லாபன், என்னும் புதல்வர்களைவுடைய வர கவும் விளங்கும் விநாயகக் கடவுளை சித்தூர வர்ணமான மலர்களால் பூஜித்து நமஸ்கரித்து க்ஷமார்பணம் செய்து நந்திகேசுவரரை சிவகடாக்ஷங் கைகூடும்படி பூஜித்து கைகூப்பி வணங்கி துவார பாலகராகிய மகாதரரை பூஜித்து பார்வதி தேவியை சந்தன, குங்குமம், தூப தீப நைவேத்தியங்களால் அர்ச்சித்துப் பணிந்து சிவசன்னதி கல்பித்துக் கொண்டு தன் வீட்டில் பாத்திரம் பொன், வெள்ளி, இரத்தினம், முதலியவற்றால் செய்யப்பட்ட சரலிங்கமூர்த்தியையாவது ஸ்தாபித லிங்கமூர்த்தியையாவது அன்புடன் பூஜிக்கலாம் இதற்குப் பிராணப் பிரதிஷ்டையும் பூசித்தி பூதசுத்திகளுஞ் செய்து கொண்டு திக்பாலகர்களைப் பூஜிக்க வேண்டும் மூல மந்திரத்தாலேயே சிவபூஜை செய்ய வேண்டும் வீட்டில் சிவபூஜை செய்கையில் துவாரபாலக பூஜாநியமம் வேண்டியதில்லை ஆனால் பரிவாரங்களோடு கூடிய சிவபெருமானே என்று பாவனாமாத்திரமாகப் பூஜை செய்ய வேண்டியது பத்மாசனமாவது பத்ராசனமாவது உத்தானாசமாவது. பர்யநிகாசனமாவது செய்து உட்கார்ந்து ஆதிசைவர்களைக் கொண்டாவது தானேயாவது பூஜை செய்யவும் அர்க்யம் பாத்யம் கொடுத்து தண்ணீரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் நிர்ச்சலமான மனதுடன் இனிச் சொல்லப்படும் மந்திரத்தால் ஆவாஹனஞ் செய்ய வேண்டும்.

கைலாச ஸிகரஸ்தஞ்ச பார்வதீபதி முத்தமம்
யதோக் த்ரூபிணம் தேவம் நிர்குணம் குணரூபிணம்

பஞ்சவக்த்ரம் தஸ்புஜ த்ரிநேத்ரம் வ்ருஷபத்வஜம் 
கர்பூர கௌரகம் திவ்யம் சந்த்ர மௌளிம்கபர் திநம

வ்யாக்ரசர் மோத்தரீயஞ்ச கஜசர்மாம் பர்ம்ஸுபம்
வாசுக்யாதி பரீதாங்கம் பிநாகாதி விபூஷிதம்

கபாலட மருயுக்தஞ்ச கண்டே கரள ஸோபிதம்
ஸித்தயோஷ் டௌச யஸ்யாக்ரே ந்ருத்யந் தீஹ நிரந்தரம்

ஜயஜயேதி ஸப்தைஸ்ச ஸேவிதம் நிஜபக்தகை;
தேஜஸா துஸ்ஸஹேநைவஸம்பத்தம் தேவ ஸேவிதம்

ஸரண்யம் ஸர்வஸத் வாநாம் ப்ரஸந்நமுக பங்கஜம்
வேதஸாஸ்த்ரைர் யதாகீதம் ஸிவமாவாஹயாம் யஹ;

(இதன் தமிழ் பொருள்) கைலாச சிகரத்தில் இருப்பவரும், பார்வதி நாயகரும், உத்தமரும், நிஜஸ்வரூபியும், நிர்குணரும். சுகுணரும், ஐந்து முகங்களும் பத்து கரங்களும், திரிநேத்திரங்களும் ரிஷபக்கொடியும், கற்பூரம் போன்ற வெள்ளிய திருமேனியும் பிரகாசமும், சந்திர சேகரமும் சடையும் புலித்தோல் ஆடையும் யானைத் தோலுடையும் சுந்தர வடிவமும் வாசுகியாதி சர்ப்பங்கள், பிநாகயல்லாதிவியவற்றால் அலங்காரமும் கபால டமருகமும் நீலகண்டமும், அணிமாதியஷ்ட சித்திகளின் நிருத்தமுடைய சன்னதியும் நிஜபக்தர்கள் ஜயஜயதொனியோடு சேவித்தலும் தேஜோரூபியும்! தேவர்களால் சேவையும் சர்வரக்ஷணமும், பிரசன்ன முகபதுமமும் வேதசாஸ்திரங்களாற் புகழப்படுவதுமுடைய சிவபெருமானை ஆவாஹநஞ் செய்கிறேன்! என்பதாகும்.

27. சிவபூஜா விதிமுறைகள்

சூதமுனிவர் சொல்லலானார். பூஜா பாத்திரத்திலிருக்கும் ஜலத்தால் இலிங்கமூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம். மகாபிஷேகம் செய்யும் பொழுது சேகரித்து அருகே வைத்துள்ள வேறு நன்னீராலும் அபிஷேகிக்கலாம் முன் அத்தியாயத்தில் சொல்லிய மந்திரம் சொல்லமுடியாவிட்டால் (யதோக்த்ரூபிணம் ஸம்பும் சிவமாவாஹயாம்யஹம்) மேற்கூறிய முறைப்படியே சிவபெருமானை ஆவாஹனம் செய்கிறேனென்று இலங்கிமூர்த்தத்தில் சிவபெருமான் இருப்பதாகப் பாவித்து விதிப்படி உபசாரங்கள் செய்ய வேண்டும். முன் சொல்லிய தோத்திரத்தைக் கூறி ஆசனங் கொடுக்க வேண்டும். சிவாய நம சொல்லி ÷ஷாட ச உபசாரங்களைச் செய்ய வேண்டும். அப்படியே கூறி சர்வவியாபியான பெருமானுக்குப் பாத்யம் ஆசமனங் கொடுத்து வேதமந்திரங்களால் பஞ்சாமிர்தமும் தான் விரும்பிய பழங்களும் அத்தர் பனிநீர் சந்தன முதலிய பரிமள திரவியங்களும் சுத்த ஜலமும் அபிஷேகித்து, தான் கையெட்டுந் தூரத்திலிருந்து சந்தனாபிஷேகஞ் செய்து ஆயிரத்தெட்டு அல்லது நூற்றெட்டுத் தாரைகளையுடைய ஜல பூரணகும்பத்தை மேலே கட்டி வேத மந்திரங்களாலாவது ஆறு மந்திரங்களோடு கூடிய ருத்திரஸுக்த மந்திரத்தாலாவது ஏகாதச ருத்திர மந்திரத்தாலாவது தன்னால் கூடியவரையில் அபிஷேகித்து வஸ்திரத்தால் ஒத்தி, ஆசமநியம் (உட்கொள்ளல் நீர்) கொடுத்து ஆடை தரிக்கச் செய்து! யஜ்ஞோபவீதமும் (பூணூல்) சமர்ப்பித்து. சந்தனம் வெள்ளை யக்ஷதை இவற்றையிட்டு (திலாஸ்சைவ யவாவா