Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாரத புராணம் பகுதி-2 நாரத புராணம் பகுதி-2
முதல் பக்கம் » நாரத புராணம்
நாரத புராணம் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
01:05

1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான நாரத புராணம் 25,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒரு சமயம் நாரதர் சனத்குமாரருக்குக் கூறிய நாரத புராணத்தைச் சூதர் மற்ற முனிவர்களுக்குக் கூறலானார். சனத்குமாரர் நாரதரிடம் அவர் திரிலோக சஞ்சாரி என்றும் விஷ்ணு பக்தரென்றும் கூறி விஷ்ணுவின் மகிமைகளைக் கூறுமாறும், தியானம் வெற்றி பெற ஆற்ற வேண்டிய வழிமுறைகளையும் கேட்டனர். அப்போது பகவானைத் தியானித்து நாரதர் கூறலுற்றார். பரப்பிரம்மமாகிய பகவான் அயன், அரி, அரன் என்ற மூன்று வடிவில் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய காரியங்களைச் செய்கிறார். பிரம்மன் என்பது பேரண்டமே என்பர். இறைவனின் பெண் வடிவம் சக்தி. அது வித்யா சக்தி, அவித்யா சக்தி இருவகை. இந்த சக்தியே அரியின் லக்ஷ்மியும், பிரம்மனின் சரஸ்வதியும், ஈசனின் பார்வதியும் ஆவர். உலகம் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது. இந்தப் பேரண்டம் ஈரேழு பதினான்கு உலகங்களைக் கொண்டது. இந்தப் பூமி ஏழு த்வீபங்களாக உள்ளது. அவை ஜம்புத்வீபம், ப்ளக்ஷத்வீபம், சல்மல த்வீபம், குசத்வீபம், கிரௌஞ்ச த்வீபம், சாகத்வீபம் மற்றும் புஷ்கரத்வீபம் இதில் நாமிருப்பது ஜம்புத்வீபம்.

இந்த பூமியில் ஏழு சமுத்திரங்கள் உள்ளன. அவை - இலவணம், இக்ஷு, சுள், சர்பத், ததி, நெய், ஜல சமுத்திரங்கள் ஆகும். மேற்கூறிய ஜம்புத்வீபத்தில் பரத கண்டம் உள்ளது. இதுவே நாம் கூறும் பரதகண்டம் என்பர். இதைச் சுற்றிலும் இலவண சமுத்திரம் (அ) உப்பு நீர்க்கடல் உள்ளது. வடக்கில் இமயமலைத் தொடர் உள்ளது. இங்கு கர்மங்கள் செய்யப்படுவதால் இது கர்மகண்டம் எனப்படும். ஒருவர் செய்யும் கர்மா (அ) காரியம் பலன்களை அளிப்பதால் இது போகபூமி என்றும் அழைக்கப்படும். பலனை எதிர்பாராமல் செய்யப்படும் காரியம் (அ) கர்மத்தை நிஷ்காமகாரியம் என்பர். இதைத்தான் மனிதன் செய்கிறான். இறைவன் முடிக்கிறான் என்பர். இது ஒரு சாத்துவிக புராணம்.

2. நாரதர் புராணம்

நாரதர் ஒரு கல்பத்தில் முற்பிறப்பில் பணிப்பெண் மகனாகப் பிறந்திருந்தார். அவர் தாயுடன் வசித்து வந்த கிராமத்திற்குச் சந்நியாசிகள் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்க வந்தனர்.

சாதுர்மாஸ்ய விரதம்

மழைக்கால நான்கு மாதங்களில் துறவிகள் அலைந்து திரிவதைவிட்டு ஒரே இடத்தில் தங்குவர். ஏனெனில் அக்காலத்தில் அமைதியாகத் தங்கத் தேவையான உணவைப் பெற முடியாது. மற்றும் தாவரங்கள், உயிரினங்கள் பெருமளவில் இருக்கும். ஆதலால் அவற்றிற்கு துன்பம் நேரக்கூடாது என்பதற்காகத் துறவிகள் தமது பரிவ்ராஜக சஞ்சார வாழ்க்கையை விட்டு மழை முடியும் வரை தங்குவர். இதுவே சாதுர்மாஸ்ய விரதமாகும். அவ்வமயம் பெருமளவில் ஆன்மீக நடவடிக்கைகளை மேற்கொள்வர். அப்படி இருந்த துறவிகளுக்குச் சேவை செய்து வந்த நாரதர் அவர்களின் ஆசியையும், ஆன்மீகக் கல்வியையும் கற்று அப்படியே சகல சாஸ்திரங்களையும், ஞானத்தையும் அடைந்தார்.

ஒருநாள் நாரதரின் தாயார் பாம்பு கடித்து இறக்க, அவர் உலக வாழ்க்கையை வெறுத்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து பகவானைத் தியானித்துத் தவம் செய்து வந்தார். அவ்வமயம் தியானத்தில் நாராயணன் தோன்றி மறைய அது அவருக்கு விளக்க முடியாத பேரின்பத்தை அளித்தது. மேலும் ஓர் அசரீரி ஒலித்தது. சத்சங்கத்தினால் உனக்கு என் தரிசனம் கிடைத்தது. என் மீதுள்ள உன் பக்தியை அடுத்த பிறவியில் வளர்த்து ஞானம் அளிக்க நீ பூரண நிலையடைவாய் என்றது. இந்த உடல் அழிய வாழ்வின் இறுதியில் நாரதர் பிரும்மாவின் மூச்சில் கலந்த இதயத்தில் நுழைந்தார். மறுகல்பத்தில் பிரும்மாவின் மூச்சுக்காற்றுடன் படைப்பின்போது மரீசி போன்ற ஒன்பது முனிவர்களுடன் மானசப் புத்திரனாகத் தோன்றினார் நாரதர். இவ்வாறு தோன்றியது முதல் நாரதர் நாராயணச் சிந்தையிலேயே இருந்து வந்தார். அப்போது தட்சன் பிரஜாபதியாக இருந்து உலகை விரிவாக்க மும்முறை ஆயிரம், ஆயிரமாகப் பேர்களைத் தோற்றுவித்து அவர்களைச் சம்சாரத்தில் ஈடுபட்டு மக்களைப் பெருக்கச் சொன்னார். மும்முறையும் அவர்களை நாரதர் ஆன்மீக வழியில் திருப்பிவிட்டார்.

3. தக்கன் அளித்த சாபம்

இத்தகைய நாரதர் செய்கையை அறிந்த தட்சப்பிரஜாபதி இனி நாரதர் ஒரே இடத்தில் ஒரு முகூர்த்த காலத்துக்குமேல் தங்கமுடியாமல் போகும் என்றும், அப்படித் தங்கினால் தலை வெடித்து விடும் என்றும் சாபம் அளித்தார். அதனால்தான் நாரதர் திரிலோக சஞ்சாரியானார். நாரதர் என்ற சொல்லுக்கு அழியாமையை அழிப்பவர் என்று பொருள். தேவர்கள், அசுரர்கள் என்ற இரு கூட்டத்தினரின் மரியாதையைப் பெற்றவர் நாரதர் ஒருவரே. இவர் ஸ்ரீமந் நாராயணனை கைங்கரியம் செய்து கொண்டு, வீணை ஏந்தி சிரஞ்சீவியாக இயங்கி வருகிறார். அவர் பக்தர்களுக்கு நாராயண பக்தியை உபதேசிக்கிறார். பாண்டவர்கள் தான் பாரதப் போரில் வெற்றி பெறுவர் என்று திருதராட்டிரனிடம் கூறினார். அதற்குக் காரணம் நரநாராயணர்களே அர்ச்சுனன், கிருஷ்ணனாக அவதரித்துள்ளனர் என்றார்.

நாரதர் தத்துவம் யாது?

பிரம்மா படைக்கும் அகங்காரம்; அவர் மகனாகிய நாரதர் அனைத்தையும் உணரும் மனம். மனம் நிலையின்றி முக்காலங்களிலும் விழிப்பு, கனவு, தூக்கம் என எங்கும் திரிகிறது. கலகங்கள் சிக்க வைப்பதுவும் அதுவே. நன்மையில் முடிப்பதுவும் அதுவே. எல்லாச் சிக்கல்களுக்கும் நாரதர் என்ற மனமே காரணம். பற்றுக்கும், பற்றற்ற நிலைக்கும் காரணம் மனமே. நாராயணரின் மூன்றாவது அவதாரமே நாரதர் என்பர்.

(தக்கன் மக்களை மாற்றிய விவரம் வேறு சில புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது)

4. நாரதர் பெற்ற பிரம்ம சாபம்

பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார். ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமியற்ற பரமன் தோன்றி வரம் என்ன வேண்டும் என்று கேட்க, அவர்கள் மெய்ப் பொருளை உபதேசித்து ஞானம் பெற அருள் புரியுமாறு வேண்டினர். அதனை ஏற்ற சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் தக்ஷிணாமூர்த்தியாய் அமர்ந்து குருவாகி உபதேசிக்க அவர்கள் தவத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பிரம்மன் நாரதர், தட்சன், வசிஷ்டர், பிருகு, இருது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகிய புதல்வர்களைத் தோற்றுவித்தார். நாரதர் தவிர மற்றவர்கள் தந்தைக்குத் துணையாக படைப்புத் தொழிலில் ஈடுபட்டனர். இதனால் பிரம்மன் நாரதரை அழைத்து மற்றவர்களைப் போல் நடந்து கொள்ளுமாறு கூற, நாரதர் தன் மனம் மோக்ஷம் பெற விரும்புகிறது என்றும், அதற்காக பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கும் முறையை உபதேசிக்க வேண்டும் என வேண்டவும் கோபம் கொண்ட பிரம்மன் நாரதரைக் கீழ்க்கண்டவாறு சபித்தார்.

நீ மேற்கொள்ள எண்ணும் பிரம்மச்சரிய விரதம் அழிந்து குடும்பஸ்தனாக பிறந்து பல சிக்கல்களுக்கு ஆளாகி தவிக்கக் கடவாய் என்றார். நாரதர் வருத்தமுற்று தான் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூற, பிரம்மன் தன் எண்ணத்துக்கு மாறாக இருப்பதே தவறு என்றார். நீ கந்தர்வ குலத்தில் பிறந்து பல பெண்களை மணந்து அவதிப்படுவாய் என்றார். அடுத்து நாரதர், அதற்குப் பிறகாவது சாபவிமோசனம் கிடைக்குமா? என்று கேட்க, மேலும் கந்தர்வனாக இருக்கும் போது ஒரு முனிவர் சாபம் பெற்று தாழ் குலத்தில் மானிடனாகப் பிறப்பாய் அதன் பிறகே சாபவிமோசனம் என்றும் கூறினார். இவ்வாறு தந்தையாகிய பிரம்மனிடம் நாரதர் சாபம் பெற்றார்.

கந்தர்வன் நாரதர்

கந்தர்வர்களில் உபன் என்னும் இசை மேதையின் மகனாகப் பிறந்தார் நாரதர். அவர் பெயர் உபவருக்கன் ஆகும். உபவருக்கன், மகதி என்னும் யாழ் கொண்டு பாடும் பேராற்றல் பெற்று இசைமேதையாக இருந்தார். அவரது இசைத்திறனை அறிந்த பல முனிவர்கள் அவரைத் தமது யாகசாலைகளுக்கு அழைத்தனர். ஒரு சமயம் பிரமசிரேஷ்டர் என்ற முனிவரிடமிருந்து அழைப்பு வர, நாரதர் அங்கு சென்று யாழை மீட்டி சாமவேத கானத்தை இசைத்தார். அங்கு ஓர் அழகிய பெண் அவர் இசையில் மயங்க, நாரதரும் அவளைக் கண்டு மயங்க, இசையில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் முனிவர் கோபம் கொண்டு ஈனகுலத்தில் மானிடனாகப் பிறக்குமாறு சாபமிட்டனர்.

(இந்தப் பிறப்பில் நாரதன் சித்திராதன் என்ற கந்தர்வனின் ஐம்பது பெண்களை மணந்தான் என்றும், ஒரு சமயம் ரம்பையைக் கண்டு அவளை மானசீகமாகக் கட்டித் தழுவியதாக எண்ண கீழ்ச்சாதியில் பிறக்கும் சாபம் பெற்றான் என்றும் ஒரு வரலாறு உண்டு).

மானிடன் நாரதர்

முனிவரின் சாபம் பெற்ற நாரதன் யோகத்தில் அமர்ந்து உயிரை விட்டான். கன்யாகுப்ஜம் என்ற நாட்டில் தருமியன் என்பவன் தன் மனைவி கலாவதியுடன் வாழ்ந்து வர அவர்களுக்கு உபவருக்கன் மகனாகப் பிறந்தான். அவன் பிறந்ததும் நாட்டில் பெருமழை பெய்து செழித்தது. இவ்வாறு நீரை அளித்ததால் அவனுக்கு நாரதர் என்று பெயர் சூட்டினர். ஒரு சமயம் சில முனிவர்கள் அவர்கள் வீட்டுக்கு வர, அவர்களை அன்போடு வரவேற்று உணவளித்து உபசரித்தனர் நாரதனின் பெற்றோர். முனிவர்கள் நாரதருக்கு ராதாகிருஷ்ண மந்திரத்தை உபதேசித்தனர்.

பெற்றோர்கள் மறைவுக்குப்பின் நாரதர் காட்டில் ஓர் அரச மரத்தினடியில் அமர்ந்து ராதாகிருஷ்ண ஜபம் செய்ய பகவான் தரிசனம் தந்தார். கண்களைத் திறப்பதற்குள் நாரதா ! இப்பிறவியில் நீ இந்தக் காட்சியைக் காணமுடியாது. அடுத்த பிறவியில் உன் எண்ணம் ஈடேறும் என்று கூறி மறைந்துவிட்டார்.

நாரதர் சுய உருபெறல்

நாரதர் மனம் தெளிந்து யோகத்தில் அமர்ந்து உயிர்விட்டார். தற்போது சாபம் நீங்கி சுய உருவை அடைந்த நாரதர் சத்தியலோகம் சென்று தன் தந்தையை வணங்கிப் பின்னர் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வலம் வந்து வணங்கி மோட்சம் பெறுவதற்கான வழியை வேண்டி நின்றார். பரமன் பிரம்மச்சரிய விரதத்தின் கஷ்ட நஷ்டங்களை எடுத்துக் கூறினார், மனதையும் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். இன்சொல் பேசி அறவழியில் ஒழுக வேண்டும். பகவானுக்கு நிவேதனம் செய்த உணவையே உண்ண வேண்டும். இறைவனைச் சதாகாலமும் நினைத்து அவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

பின்னர் நாரதர் பதரிகாசிரமம் சென்று நாராயண ரிஷியைத் தரிசித்தார். அவர் நாரதனைப் பூலோகம் சென்று சிருஞ்சியர் என்பவரின் மகள் சுவர்ண கிரீயை மணந்து வாழ்வைத் தொடங்குமாறு கூறினார். அவ்வாறே நாரதரும் தன் வாழ்க்கையை சுவர்ண கிரீயை மணந்து வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவருடைய சகோதரர் சனத்குமாரர் அங்கு வந்து, அவருக்கு நாராயண தாரக மந்திரத்தை ஓதினார். இதனால் பற்றற்ற நிலையை அடைந்த நாரதர் கானகம் சென்று கடுமையாகத் தவம் இருந்தார். அப்போது அவருக்கு விஷ்ணு காட்சி அளித்தார். வேண்டும் வரம் கேட்குமாறு அருளிட நாரதர் திருமாலை இனிய பாடல்களால் பாடித் துதிக்க வேண்டும் என்று வரம் கேட்டார். மேலும், அதற்கேற்ப இசைப் பயிற்சி பெற வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிட, பகவான் பூலோகத்தில் மானசரஸ் ஏரிக்கரையில் உள்ள கோட்டானிடம் சென்று இசைப்பயிற்சி பெறுமாறு கூறி அருளினார்.

(நாரதர் கோட்டானிடம் பாடம் கேட்ட வரலாறு - லிங்க புராணம் காண்க)

5. ஸ்ரீமதி பரிணயம் நாரதர், பர்வதர்

நாரதர், பர்வதர் இருவரும் அம்பரீஷன் மகள் ஸ்ரீமதியை மணம் புரிய வேண்டினர். அதற்காக விஷ்ணுவின் உதவியை நாடி ஸ்ரீமதி காணும் போது அரி முகமாகக் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டினர். சுயம் வரத்தின்போது இருவரும், குரங்கு முகத்துடன் காணப்பட அவர்கள் இடையே தோன்றிய ஸ்ரீ விஷ்ணுவுக்கு மாலை அணிவித்தாள் ஸ்ரீமதி. கோபம் கொண்ட முனிவர்கள் அம்பரீஷனை இருள் மூடச் சாபம் அளிக்க, அவன் பயந்து விஷ்ணு சக்கரத்தைச் சரணடைய அது அவனைக் காப்பாற்றியது. (முழு விவரம் - சிவ புராணம், லிங்க புராணம் காண்க)

6. சதி அனுசூயா

நாரதர் ஒரு நாள் முப்பெரும் தேவியர்களாகிய அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரையும் தரிசிக்க தேவலோகம் சென்றார். அங்கு மூவரும் ஒரேயிடத்தில் உரையாடிக் கொண்டு இருந்தனர். அங்கு வந்தடைந்த நாரதரை மூவரும் வரவேற்று, எங்கிருந்து வருகிறீர்? என்ன சேதி என்று கேட்டனர். அப்போது நாதர், பூவுலகில் உள்ள அத்திரி முனிவரின் மனைவி அனுசூயைப் பற்றியும், அவளது கற்பைப் பற்றியும் அனைவரும் புகழ்வதாகக் கூறிப் பெருமைபட்டார். அதற்கு முப்பெரும் தேவியர், அனைவரும் புகழுமளவிற்கு அவளிடம் என்ன பெருமை இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு நாரதர் தன் கையிலிருந்த இரும்புக் கடலையைக் காட்டி, இதனை உங்களால் வறுத்துக் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். இரும்புக் கடலையை யாராலும் வறுத்துத் தரமுடியாது. நீங்கள் கூறும் கற்புக்கரசி அனுசூயையாலும் கூடத்தான் என்றனர். நாரதர், அனுசூயையிடம் கொடுத்திருந்தால் அந்தக் கற்புக்கரசி இந்நேரம் இதை வறுத்துக் கொடுத்திருப்பாள் என்று கூறிக்கொண்டே பூலோகம் சென்றார். இரும்புக்கடலையை அனுசூயையிடம் கொடுத்து வறுத்து கொடுக்கச் சொல்ல, அவளும் தன் கற்புத் திறனால் முனிவரை மனதில் தியானித்து வறுத்துக் கொடுத்தாள். உடனே நாரதர் மூன்று தேவியரிடம் அதைக் காட்டி, அனுசூயையின் கற்புத்திறனை ஒப்புக் கொள்ளுமாறு கூறினார்.

ஆனால், அவர்களுக்கு அனுசூயை மேல் அசூயைதான் ஏற்பட்டது. மேலும் அவளைச் சோதிக்க விரும்பினர். அதை அறிந்த நாரதர் இனி நான் அவளிடம் செல்லமாட்டேன். வேறு யாரையாவது அனுப்புங்கள். நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள். உங்கள் கணவன்மார்களாகிய அயன், அரி, அரன், ஆகிய மூவரையும் அனுப்பி வையுங்கள் என்றார். உடனே மூன்று தேவியரும் தத்தம் கணவர்களை நினைக்க, அவர்கள் வந்து சேர்ந்தவுடன் அவர்களிடம், அத்திரி முனிவரின் மனைவி அனுசூயையின் கற்புப் பற்றி நாரதர் பாராட்டுவதோடு மூவுலகிலும் பறைசாற்றி வருகிறார். அவள் உண்மையில் கற்புக்கரசிதானா என்று அறிந்து வாருங்கள் என்று கூறி அனுப்பினர். மும்மூர்த்திகளும் பதறிப் போய் இவ்விஷப் பரீட்சை எதற்கு, இதனால் விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும் என்று தடுத்தும் பலனில்லை. உடனே வேறுவழியின்றி மும்மூர்த்திகளும் நாரதரையும் உடன் அழைத்துக் கொண்டு அத்திரி முனிவரின் ஆசிரமத்தின் அருகில் வந்தனர். மூவரும் முனிவர்களாக உருமாறி ஆசிரமத்தில் நுழைந்தனர். நாரதரிடம் மேற்கொண்டு நடக்க வேண்டியதைக் கவனிக்க, அவரை வெளியிலேயே இருக்கச் சொன்னார்கள். முனிவர்களாக வந்த மும்மூர்த்திகளையும் கற்புக்கரசி வரவேற்று, கணவர் வெளியே சென்றிருப்பதாகவும், இருப்பினும் அவர்களுக்கு உணவு படைப்பதாகவும் அதனை ஏற்றுக்கொண்டு ஆசி கூறுமாறும் வேண்டினாள்.

இலை போட்டு மூவரையும் வந்து அமர வேண்டினாள். உணவு கொள்ளத் தயக்கம் என்ன? என் கணவர் வந்த பின்தான் பசி ஆறுவீர்களா? என்று கேட்க அவர்கள் அவளிடம் ஒரு நிபந்தனை என்றனர். அதாவது அவர்கள் விரதப்படி பிறந்த மேனியாய் உணவு பரிமாறப் படவேண்டும் என்றனர். அவள் சிறிதும் மனம் கோணாமல் அவர்கள் முகத்தை உற்று நோக்கித் தன்னுள் கணவரை எண்ணி இதில் ஏதோ சூழ்ச்சி என அறிந்து அவர்கள் கோரிய படியே உணவைப் பரிமாறுவதாக ஒப்புக் கொண்டாள். மூவரும் இலையில் அமர்ந்தவுடன் அவள் உள்ளே சென்று தன் கணவனை மனதில் பிரார்த்திக்க, வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்று தெரிந்து கொண்டாள். மேலும், இம்மூவரும் குழந்தைகள் ஆகவேண்டும் என்று கணவனை நெஞ்சில் துதித்தாள். அவர்கள்மீது நீர் தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டனர்.

வெகுநேரமானதால் நாரதர் உள்ளே என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தார். மூன்று குழந்தைகள் தவழ்ந்து விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தேவலோகம் சென்று மூன்று தேவிகளையும் கண்டு நடந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறினார். உடனே அவர்களும் நாரதரை அழைத்துக் கொண்டு பூவுலகில் அத்திரி முனிவர் ஆசிரமத்தை அடைந்து, தமது கணவர்கள் குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதை பதைத்தனர். வந்தவர்கள் யாரென்று தெரிந்து கொண்ட கற்புக்கரசி அனுசூயை அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். அனுசூயையிடம் அவர்கள் கற்பை ஒப்புக் கொள்வதாகக் கூறி, மும்மூர்த்திகளைத் திருப்பித் தருமாறு வேண்டினர். அனுசூயையும் கணவரை மனதில் நினைத்துத் திரும்பவும் குழந்தைகள் மீது நீர் தெளிக்க அங்கே மும்மூர்த்திகளும் சுய உருவில் நின்றனர். அவர்கள் தங்கள் அம்சமாக தத்தாத்திரேயரை அளித்து மறைந்தனர்.

7. மோகினி ருக்மாங்கதன்

விதேச நாட்டை ருக்மாங்கதன் ஆண்டு வந்தான். அவனது மனைவி சந்தியாவனி. மகன் தர்மாங்கதன். இவர்கள் சிறந்த விஷ்ணு பக்தர்கள். ஏகாதசி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்து வந்தனர். மேலும் மன்னன் இவ்விரதத்தின் மகிமையை மக்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களையும் அவ்வாறு செய்வித்தான். எட்டு வயது முதல் எண்பத்தைந்து வயதுக்குட்பட்ட ஆண் பெண் அனைவரும் அனுஷ்டிக்குமாறு மன்னன் ஆணை பிறப்பித்திருந்தான். தசமி அன்று ஒருவேளை அன்னம் உட்கொண்டு, ஏகாதசி அன்று உபவாசமிருந்து துவாதசி அன்று பகவானைப் பிரார்த்தித்து பாராயணம் செய்வர். எல்லா மாதங்களிலும் ஏகாதசி விரதம் இருந்தாலும், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்புடையது. இது முக்கியமாக விஷ்ணு பக்தர்களால் அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதமாகும். விதேச நாட்டு அரசரும், அவர் குடும்பத்தினரும் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் அதன் பயனைக் கருதி ஏகாதசி விரதமிருந்து பாவம் நீங்கி சொர்க்கத்தை அடைந்தனர். ஒருவர்கூட நரகத்துக்குச் செல்வதில்லை. இது யமதர்மனுக்கு ஒரு சோதனையாக இருந்தது. ஒருநாள் நாரதர் அங்கு வர யமன், எல்லோரும் சொர்க்கம் சென்றுவிட நரகம் காலியாக உள்ளது. அதனால் தனக்கு வேலையில்லை என்று கூறி வருந்தினார். இருவரும் சத்தியலோகம் சென்று பிரம்மனிடம் முறையிட, அவர் தன் மாய சக்தியால் மோகினி என்ற பெண்ணைப் படைத்து, அவளிடம், பூலோகம் சென்று ருக்மாங்கதனை மயக்கி, மணம் செய்து கொண்டு அவன் ஏகாதசி என்று பணித்தார். அவளும் அவ்வாறே செய்வதாகக் கூறி பூலோகம் சென்றாள்.

ஒருநாள் காட்டில் வேட்டையாடிக் களைத்த ருக்மாங்கதன் வாமதேவர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தான். அப்போது மோகினி அந்த ஆசிரமத்துக்குச் சற்று தூரத்தில் இருந்து பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய கானத்தில் மயங்கிய மன்னனைக் கண்டு மோகினியும் மயங்கினாள். இருவரும் கந்தர்வ மணம் செய்து கொண்டனர். இருவரும் அரண்மனை அடைந்தபோது மன்னர் மனைவியும், மகனும் மோகினியை ஏற்றுக் கொண்டனர். சில மாதங்கள் கழித்து மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி வந்தது. ருக்மாங்கதன் மோகினியிடம் ஏகாதசி விரதம் பற்றிக் கூறி அவளையும் விரதமிருந்து மேலான நிலை அடையுமாறு அறிவுறுத்தினான். ஆனால், அவள் அதனை விரும்பாமல் விரதம் என்பதும் தவம் என்பதும் முற்றும் துறந்த முனிவர்களுக்கே அன்றி மன்னர்களுக்குக் கிடையாது. அதனால் தன்னை விட்டு எங்கும் போகாமலிருக்குமாறு கூறினாள். ருக்மாங்கதன் மோகினியின் மீதிருந்த மயக்கத்தின் காரணமாக அவள் மாளிகையிலேயே இருந்து வந்தான். எனினும், தசமி நடுஇரவில் எழுந்து ஏகாதசி விரதம் பற்றிய எண்ணத்துடன் மோகினியையும் எழுப்பினான். தன்னைத் தடுக்க வேண்டாம் என்றும் விரதத்திலிருந்து தவற முடியாதென்றும் கூறிவிட்டான். தான் விரதத்தைக் கைவிடமுடியாதென்று கண்டிப்பாகக் கூறினான்.

அப்போது மோகினி கோபம் கொண்டு தன்மீது உண்மையான ஆசையிருந்தால் மன்னன் விரதம் இருக்கக்கூடாது என்றும், தன் பேச்சை மீறி நடந்தால் தன்னை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தாள். தன் ஆணைக்கு மன்னன் கட்டுப்படாததை அறிந்த மோகினி அங்கிருந்து புறப்பட எத்தனித்தாள். மகாராணியும் இளவரசியும் செய்தி அறிந்து அங்கு வந்து ஏகாதசி மகிமை பற்றி அவளிடம் கூற, மோகினி அத்தனை சிறப்புடையதென்றால் தான் சொல்வதுபோல் செய்யுமாறு கூறினாள். மகன் தர்மாங்கதனை இரு துண்டாக்கி, விரத மகிமையால் அவனை உயிர்ப்பிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியாது என்றால் மன்னன் விரதம் இருக்கக் கூடாது என்றாள். ருக்மாங்கதன் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனால், ராணி பிள்ளையைக் கொடுக்க ஒப்புதல் அளித்தாள். தர்மாங்கதன் தனக்கு அது பெரிய பாக்கியம் என்று பலிக்குத் தயாரானான். மேலும், தர்மாங்கதன் தந்தையிடம் இத்தனை காலம் விரதமிருந்து வருகிறீர்களே. அது வீண் போகாது. தயக்கம் வேண்டாம், வெட்டுங்கள் என்று தயாரானான். ருக்மாங்கதன் மகாவிஷ்ணுவை மனதில் தியானித்து வணங்கி, வாளெடுத்து ஓங்கினான். அப்போது பேரொளியுடன் சங்கு சக்கரதாரியாக மகாவிஷ்ணு தோன்றினார். வாள் மலர் மாலையாகித் தர்மாங்கதன் கழுத்தில் விழுந்தது. அப்போது பகவான் கூறினார், ருக்மாங்கதா ! உன் பக்தியின் சிறப்பைக் கண்டு மெச்சினேன். நீ பலகாலம் ஆட்சி புரிந்து மனைவி மக்களோடு என் பதம் அடைவாய் என்று கூறி மறைந்தார். அங்கு வந்த நாரதர் எமதர்மனிடம், ஏகாதசி விரதத்தின் சிறப்பு அத்தன்மையது. விரதமிருப்பவர்கள் அதன் நற்பலனை அனுபவிக்கட்டும். நீ வருந்தாமல் உன் வேலையைக் கவனி என்று கூறி மகிழ்வித்தார்.

8. சனி பகவானின் பார்வை

ஒரு நாள் நாரதர் கயிலாயம் சென்றனர். அங்கு தேவர்கள் எல்லாம் வல்ல இறைவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். ஆனால் சனி பகவான் மட்டும் பகவானுக்கு முதுகைக் காட்டிய வண்ணம் உட்கார்ந்து இருந்தார். இதன் காரணத்தை அறிய நாரதர், தக்க சமயம் பார்த்து பார்வதி தேவியிடம் சென்று, இது பற்றிக் கூறி விளக்கம் கேட்டார். ஆனால் தேவியோ ஈசனைக் கேட்டுக் கூறுகிறேன். நாளை வந்து தெரிந்து கொள்ளுங்கள் என்றாள். அவ்வாறே ஈசனிடம் இதுபற்றி தேவி கேட்க, ஈசன் அவர் அப்படித்தான் அமரவேண்டும் என்றார். அது நம்மை அவமதிப்பது போல் இருக்கிறது. எல்லோரையும் போல் அவரும் நம்மைப் பார்த்தே அமரட்டும் என்றாள் தேவி ஈசனிடம். மறுநாள் சபையில் சனி எல்லோரையும் போல ஈசனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அதைப் பார்த்த பார்வதியின் மீது சனி பகவானின் பார்வையும் பட்டது. பிறகு பார்வதி தன் ஆசனத்தில் அமரச் சென்றாள். அங்கே இரண்டு ஆசனங்களில் சிவனும், பிரமனும் ஐந்து தலைகளுடன் அமர்ந்திருந்தனர். யார் சிவன் என்று அறிய முடியவில்லை. பின்னர் தன்னுள் சிவனைத் தியானித்தாள். இதனை உணர்ந்த சிவபெருமான் சனி பகவானைத் திரும்பி அமரும்படிக் கூற அவரும் திரும்பி அமர்ந்தார். உடனே பார்வதிக்கு இருந்த குழப்பமும் நீங்கியது. சிவபெருமான் தன் தேவியிடம், சனியின் பார்வை பொல்லாதது. நமக்கே இந்நிலை என்றால் மற்றவர்களைப் பற்றிக் கூறுவானேன். அதனால்தான் சனியை முகத்தைக் காட்டாமல் திரும்பி உட்காரும்படிக் கூறினேன் என்றார். பார்வதியும் சமாதானமடைந்தாள்.

மறுபடியும் நாரதர் பார்வதியைக் காண வர, பார்வதி விடை பகன்றாள். ஆனால் நாரதர் தன்னால் தானே ஏற்பட்டது என்று கூறி தன்னை மன்னிக்கக் கோரினார். மேலும் சனி பகவானின் பார்வை பற்றித் தெளிவாக தெரிந்து கொண்டதாகக் கூறினார். இலங்கை வேந்தன் இராவணன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, வரங்கள் பெற்று, தேவர்களையும் நவக்கிரகங்களையும் கூட அடக்கி, தனக்கு ஏவல் செய்யச் செய்தான். அவனது அரியாசனத்தில் ஒன்பது படிக்கட்டுகளிலும் ஒரு கிரகம் வீதம் கவிழ்ந்து படுக்கவைத்திருந்தான். அவற்றின் முதுகின் மீது கால் வைத்து அரியாசனம் ஏறிவந்தான். இதனால் நாரதர் மனம் நொந்து இந்த அவல நிலைக்கு ஒரு வழி காண எண்ணினார். அடுத்த முறை இராவணனைக் காணச் செல்லும்போது அவனிடம் அங்குப் படிகளாக படுத்திருப்பவர்கள் யார் என்று கேட்டு அவர்கள் நவக்கிரகங்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களில் கவிழ்ந்து படுத்திருப்பவர்களில் சனியைக் காட்டி அது யார்? என்று கேட்டார். அப்போது அந்தப் படியில் படுத்திருந்த சனி பகவான் மெல்லத் தலையைத் தூக்கினான்.

மேலும் நாரதர் இராவணனிடம், அவனது இழிநிலை அவனுக்குத் தெரியவில்லை. எனவே, அவனை மட்டும் மேல் நோக்கிப் படுக்கச் சொல்லி, அவன் மார்பில் காலை வைத்து அழுத்தி ஏறிச் செல். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும். அவன் கர்வம் அடங்கும் என்றார்.  அதுதான் சரியான தண்டனை என்று மகிழ்ச்சியுடன் இராவணன் சனியனை மல்லாந்து படுக்கச் சொன்னான். அப்போதே அந்த சனீஸ்வரனுடைய பார்வை இராவணன் மீதுபட அவனுக்கு அழிவு காலம் தொடங்கியது. இவ்வாறு சனியின் முழுப்பார்வை இராவணன் மீது விழ அவன் அழிந்து போனான். மேலும் பல புராண நாயகர்கள் சனி பார்வையால் பாதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணன் மீது சனி பார்வை

1. ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணன் பாமா, ருக்மணியுடன் அமர்ந்திருக்க சனி பகவான் உள்ளே நுழைந்தார். பகவானும் அவரை வரவேற்றார். அப்போது சனி மன்னிக்க வேண்டும். நாளை முதல் தங்களுக்குச் சனி தசை ஆரம்பமாகின்றது என்று கூற, சரி என்று கூறி சனியை வழி அனுப்பினார் கிருஷ்ண பரமாத்மா. இரண்டு நாள் கழித்துச் சனி சறுபடியும் சவுக்கியம்தானே என்று கேட்டுக் கொண்டு வர, பகவான் கேலியாக உன்னுடைய தசை ஆரம்பமாகி விட்டதா? என்று கேட்டார். அதற்குச் சனி கூறினான், நேற்றே தங்களைப் பற்றிக் கொண்டேனே. உலக ரட்சகராகிய தாங்கள் கேவலம் ஒரு பிள்ளைப் பூச்சியாக மாறி சாக்கடையில் போய் ஒளிந்து கொண்டீரே, அது போதாதா, இன்னுமா துன்புறுத்த வேண்டும் என்று அனுதாபத்துடன் கூறிவிட்டு அவ்விடம் விட்டகன்றான் சனி பகவான்.

(சனி பொல்லாதவன், வந்தனை செய்தால் மனமிரங்கி அருள் செய்வான். ஐஸ்வர்யங்களையும் தருவான்).

2. இராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தார்.

3. பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு அஞ்ஞான வாசமும் அனுபவித்தனர்.

சனி தசையின் போதுதான் நளன் புஷ்கரனுடன் சூதாடித் தோற்று நாட்டை இழந்தான். அரிச்சந்திரன் மனைவி மகனை விற்று சுடுகாட்டில் வெட்டியானாக இருந்ததும் சனி தசையில்தான். சோதிடர்கள் சனியின் பார்வை கொடூரமானது என்கின்றனர். எனினும் பொங்கு சனி, மங்கு சனி, தங்கு சனி என்று மூன்று வகையில் சனியினால் ஏற்படும் பலன் பற்றியும் கூறப்படுகிறது.

9. இராவணன் கயிலாய மலையைப் பெயர்த்தல்

ஒரு சமயம் இராவணன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்தான். ஓமகுண்டம் வளர்த்து அதில் தன் ஒன்பது தலையையும் ஒவ்வொன்றாகக் கொய்து போட்டான். பத்தாவது தலையையும் வெட்ட முயலும்போது சிவன் தோன்றி அவனுக்கு அவன் கேட்ட வரத்தை அளித்தார். அதன்படி இராவணனை மூவுலகிலும் யாவராலும் வெல்ல முடியாது. அவன் தோள்கள் மலைகளுக்குச் சமமாயிருக்கும். இனி தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற ஆணவத்துடன் இருந்த போது, அவ்விடம் வந்த நாரதர், செய்தியை யறிந்து அவன் ஆணவத்தை அடக்க ஓர் உபாயம் செய்தார். அவர் இராவணனிடம், உன்னுடைய தோள்களுக்கு மலையை அசைக்கும் வலிமை உண்டா என்று சோதித்துப் பார்க்க வேண்டாமா? என்றதும் அவன் அவர் சொன்னதை கேட்டுச் சிரித்து அதற்கான வழியையும் கூறும்படி நாரத முனிவரிடமே கேட்டான். அப்போது நாரதர், பெரிய மலையான கயிலையையே அசைத்துப் பார்க்கலாமே என்று யோசனை கூற, இராவணன் கயிலையை நோக்கிப் புறப்பட்டான். மலையின் அடிவாரத்தை அடைந்ததும் இருபது கைகளையும் பூமியில் வைத்துக் கைலயங்கிரியைப் பெயர்க்க முனைந்தான். உச்சியில் அமர்ந்திருந்த பார்வதி அஞ்சி பரமசிவனை அணைத்துக் கொண்டாள்.

ஞானப் பார்வையால் எம்பெருமான் நடப்பதென்ன என்று அறிந்து கொண்டார். இராவணன் ஆணவத்தால் அறிவை இழந்து என்னிடமே நான் அளித்த வரத்தைச் சோதித்துப் பார்க்கிறான். பார் அவன் கதியை என்று தேவியிடம் கூறியவாறே கால் கட்டை விரலை அழுத்த மலை அசைவு நீங்கி நேராக நின்று விட்டது. மலையின் அடியில் இராவணன் கைகள் சிக்கிக் கொள்ள அவன் சக்தி வீணாகி ஆணவம் அழிந்தது. இராவணன் கண் கலங்கினான். அப்போது அங்கு வந்த நாரதரிடம் தன் அவல நிலையைக் கூறி, அதிலிருந்து மீளும் வழியைக் கூறுமாறு வேண்ட, பின்னர் நாரதர் வீணையை மீட்டி சாமவேதத்தை இசையுடன் பாட, அந்த உருக்கமான இனிய இசையில் மயங்கிய சிவபெருமான் அழுத்தியிருந்த கட்டை விரலை நகர்த்த இராவணன் கைகள் விடுபட ஈசன் அவன் முன்பு தோன்றினார். இலங்கை வேந்தே ! என்னிடமே உன் ஆணவத்தைக் காட்டத் துணிந்தாய். போர்க் களத்தில் உனது பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி உன்னை வதைக்கப் போகும் புருஷன் அவதரிப்பான் என்று கூறி மறைந்தார். அவ்வாறே இராமாவதாரத்தில் இராமன் இராவணனைக் கொன்றான்.

10. இராவணன் பெற்ற ஆத்மலிங்கம்

சிவபக்தனான இராவணனன் சிவனிடம் இருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்று இலங்கையில் வைத்துவிட்டால் தன்னை யாரும் எதுவும் செய்யமுடியாதென்று எண்ணி அவன் சிவனைக் குறித்துக் கொடூர தவம் செய்தான். தேவர்கள் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த எண்ணி நாரதரிடம் கூற, அனைவரும் கூடித் திருமாலிடம் இதைத் தெரிவித்தனர். இராவணன் தவத்தால் மனம் குளிர்ந்த ஈசன், இராவணன் முன் தோன்றி, என்ன வேண்டும்? என்று கேட்க, அவன் விஷ்ணு மாயையால் மனம் மாறி பார்வதியைக் தனக்குக் கொடுக்குமாறு கேட்டு பெற்று, தேவி பின் தொடர அவன் இலங்கை நோக்கி பயணமானான். நடுவில் நாரதர் ஒன்றும் அறியாதவர் போல் பார்வதியின் செயலுக்குக் காரணம் கேட்க, அவளும் நிகழ்ந்தவற்றைக் கூறினாள். அப்போது நாரதர் இராவணன் ஆத்மலிங்கத்திற்காகத் தவம் புரிந்தான். விஷ்ணு மாயையால் பார்வதியைக் கேட்டு பெற்றதாகக் கூற, பார்வதியும் கோபம் கொண்டு ஸ்ரீ ஹரி மனிதனாகப் புவியில் பிறக்கும்போது அவன் மனைவியையும் இதே இராவணன் தூக்கிச் செல்வான் என்று சபித்தாள். அதனைப் பயன்படுத்திக் கொண்டார். இலங்கை சென்ற பின் மாயை விலக இராவணன் பார்வதி தேவியை விடுவித்து அனுப்பி வைத்தார். மறுபடியும் தவம் ஆற்றி, சிவனிடம் ஆத்மலிங்கத்தைப் பெற்றுப் புறப்பட்டு விட்டான் இலங்கைக்கு. இப்போது தேவர்கள், நாரதருடன் கூடி தங்களுக்கு உதவ விநாயரை வேண்டினர். அவரும் சரி என்று ஒப்புதல் அளித்து விட்டார். இரண்டு கைகளிலும் ஆத்ம லிங்கத்தை ஏந்திச் சென்ற இராவணன் மாத்யாஹ்னிகம் செய்ய வேண்டி வந்தது. எனவே ஆத்ம லிங்கத்தை யாரிடமாவது கொடுத்து வைத்து மத்தியான கர்மாவை முடித்துவிட்டு மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று யாரேனும் கிடைப்பார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

அங்கே ஓர் ஆட்டிடையன் காணப்பட அவனிடம் ஆத்மலிங்கத்தைக் கொடுத்து, அதனைக் கீழே வைக்காமல் தான் திரும்பி வந்தவுடன் கொடுக்குமாறு கூறிச் சென்றான். ஆத்மலிங்கத்தை அளித்தபோதே ஈசன் லிங்கத்தை எங்கும் கீழே வைக்கக் கூடாதென்றும், அப்படி வைத்து விட்டால் திரும்பவும் எடுக்க முடியாதென்றும் கூறியிருந்தார். இப்போது ஆட்டிடையன் இராவணனிடம் நான் மும்முறை அழைப்பேன். அதற்குள் வராவிட்டால் கீழே வைத்துச் சென்று விடுவேன் என்ற நிபந்தனையுடன் லிங்கத்தை ஏற்றுக் கொண்டான், ஆட்டிடையனாகத் தோன்றிய கணபதி. ஆட்டிடையன் மும்முறை கூவி அழைத்தும் இராவணன் வராததால் நிபந்தனையின்படி ஆத்மலிங்கத்தைக் கீழே வைத்துவிட்டான். இராவணன் மோசம் போனான். லிங்கம் அங்கேயே நிலைத்துவிட்டது. அந்த இடமே இன்று கோகர்ணம் எனப்படுகிறது.

11. ஓர் எழுத்தில் சூக்குமம் கும்பகர்ணன் உளறல்

சப்த ரிஷிகளின் சாபத்தால் உலகில், திருமாலின் துவாரபாலகர்களாகிய ஜயன், விஜயன் இருவரும் மூன்று பிறவிகள் எடுத்தனர். அவர்கள் எடுத்த ஜனனங்கள் 1. இரணியாக்ஷன், இரணிய கசிபு 2. இராவணன், கும்பகர்ணன் 3. சிசுபாலன், தந்தவக்கிரன். கும்பகர்ணன் இராவணனைப் போலவே தவம் புரிந்து வரங்கள் பெற விரும்பினான். அவன் பிரம்ம தேவரைக் குறித்துத் தவம் செய்ய பிரமன் அவன் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

கும்பகர்ணன் மனதில் நித்யத்வம் (அதாவது அழிவின்றி நிலைத்து நிற்பது) என்று கேட்க எண்ணினான். ஆனால் நாரதரின் சூழ்ச்சியால் நா பிறழ்ந்து நித்ரத்வம் என்று கேட்டான். (அதாவது தூங்கிக் கொண்டே இருத்தல். இந்த நித்ரத்வம் என்ற வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தவர் நாரதர்) அதிலிருந்து கும்பகர்ணன் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்க, அது ஆறுமாதமாகக் குறைந்தது. எனவே, அரக்கர்களின் தவறுகளைத் திருத்தி அவர்களுக்கு எதிராகவும், தேவர்களுக்கு உதவியாகவும் அவ்வப்போது நாரதரே உதவி வந்தார்.

12. வால்மீகி என்ற வேடன்

ஒரு சமயம் நாரதர் ஒரு காட்டு வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு முரட்டு வேடன் அவரை வழிமறித்து அவரிடமுள்ள பணம், பொருள் ஆகியவற்றைக் கொடுத்துவிடுமாறு மிரட்டினான். நாரதர் தான் திரிலோக சஞ்சாரி. பிரம்மச்சாரி. தன்னிடம் உள்ளது வீணை ஒன்றுதான் என்று கூற, வேடன் அவரை நம்பி விடுவதாக இல்லை. நாரதர் அவனை எவ்வாறு மடக்கலாம் என்று யோசித்தார். வேடனிடம் மெதுவாய் பேச்சு கொடுத்தார். அவன் யார்? அவன் எத்தனை நாட்களாகக் கொள்ளை அடிக்கிறான்? ஏன்? மற்றும் அவன் கொலை செய்வதும் உண்டா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். வேடனும் சளைக்காமல் பதில் கூறினான். வேட்டையில் மிருகங்கள், பறவைகள் கிடைக்காதபோது வழிப்போக்கர்களிடம் கொள்ளை அடிப்பதாகவும், பொருள் கொடுக்காமல் வம்பு செய்தால் சில சமயம் கொலை செய்வதும் உண்டு என்றான். அப்போது இத்தனையும் பாவச் செயல்கள்-இவற்றை ஏன் செய்கிறாய்? என்று கேட்க, வேடன் தன் மனைவி, மக்களுக்காகவே இக்காரியங்களைச் செய்வதாகக் கூறினான். அப்படியானால் இப்பாவச் செயல்களில் அவர்களுக்கும் பங்கு உண்டு அல்லவா! என்று கேட்ட நாரதர்க்கு அவர்களும் ஏற்றுத்தானே ஆக வேண்டும் என்று கூற நாரதர், அதனை நீ சொன்னால் போதாது. மனைவி மக்களிடம் கேட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து வா என்று கூற, அவனும் வீடு சேர்ந்தான்.

அப்போது வேடன் மனைவி, என்னையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. அது பாவத்தினால் வந்தது என்றால் அதன் பலாபலன்களை நீயே அனுபவிக்க வேண்டும் என்று கூறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற வேடன் நாரதரிடம், திரும்பி வந்து நடந்தவற்றைக் கூற, நாரதர் வேடா, பாவத்தின் பலாபலன்களை அவரவர்தான் அனுபவிக்க வேண்டும். எனவே யாருக்காகவும் பாவம் செய்யக் கூடாது. செய்தால் பாதிப்பு செய்தவருக்கே என்று கூறி அவன் கண்களைத் திறந்து விட்டார். பின்னர் நாரதன் வேடனிடம், ராமநாமத்தை உச்சரித்து வந்தால் பாவம் விலகி எல்லா நலனும் உண்டாகும் என்றார். வேடன் அவரை விடுவித்து அவர் சொல்லியபடி அருகிருந்த மாமரத்தின் அடியில் அமர்ந்து கண் மூடியபடி பல காலம் ராமநாமத்தை ஜபித்து வந்தான். அவன் மீது புற்று மூடியது. அந்தப் புற்றிலிருந்து ராமநாம ஜபப் பலனாக அவன் வால்மீகி ரிஷி ஆனான்.  (வல்மீகம்-புற்று, எனவே வால்மீகி என்று பெயர்)

13. வால்மீகி ராமாயணம் இயற்றுதல்

வல்மீகம் என்ற புற்றிலிருந்து வெளிவந்த வால்மீகி முனிவர் சிறந்த ரிஷியானார். அவருடைய மனம் ஒருநாள் அமைதி இழந்து கிடந்தது. உலகில் மக்களின் அவல நிலையினால் அவர் பாதிக்கப்பட்டார். அவ்வமயம் நாரதர் அவர் முன் தோன்ற, முனிவர் நாரதரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். எனினும் அவர் அகத்தின் வேதனையை முகத்தில் கண்ட நாரதர், அதற்கான காரணம் என்ன என்று கேட்டார். வால்மீகி தன் மனவேதனையை விவரித்தார். அப்போது நாரதர், உலகில் குணநலன்கள் ஒருங்கே அமைந்த ஒரு புருஷன் இருக்கிறான். அவனே தசரத குமாரன் இராமன் என்றார். வால்மீகி அந்த இராமனின் வரலாற்றைக் கூறுமாறு வேண்டிட, நாரதர் இராமன் கதைச் சுருக்கத்தைக் கூறி வால்மீகியை மகிழ்வித்தார். நாரதர் வால்மீகியிடம் இராமர் வரலாற்றை ஒரு காவியமாகப் பாடுமாறு கூறிச் சென்றார். அதுவே இராமாயணம் என்னும் காவியம். அதனைப் பாடிய வால்மீகியே ஆதிகவி எனப்படுகிறார்.

இராமாயணத் தோற்றம்

ஒருநாள் வால்மீகி தமசாநதியில் நீராடச் சென்றார். அங்கு மரக்கிளையில் இரண்டு கிரவுஞ்சப் பறவைகள் கொஞ்சி குலாவி மகிழ்ந்து இருந்தன. அச்சமயம் அங்கு வந்த ஒரு வேடன் அவற்றின் மீது அம்பு எய்ய அது ஆண் பறவை மீது தைக்க, அது துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. பெண் பறவை ஆண் பறவையின் பிரிவைத் தாங்காது கூவிக் கொண்டிருந்தது. அந்த வேடன் மீது கோபம் கொண்ட வால்மீகி அவனைக் கடுஞ்சொற்களால் தூற்றினார். அச்சொற்கள் ஓர் இனிமையானக் கவிதையாக வெளிப்பட்டது. அச்சமயம் அங்கு பிரம்மதேவர் தோன்றிட முனிவர் அவரை வணங்கினார். அப்போது பிரமன், வால்மீகி, தாங்கள் வேடனைச் சாடி கூறியவை அனைத்தும் ஒரு சுலோகம். அதைத் தொடர்ந்து இராமாயணத்தைப் பாடி முடியுங்கள் என்று ஆசி கூறி மறைந்தார். வால்மீகி இராமாயணத்தைப் பாடி முடித்தார்.

14. பாரிஜாத மரமும், மலரும்

ஒரு சமயம் தேவலோகம் சென்றிருந்த நாரதருக்கு தேவேந்திரன் ஒரு பாரிஜாத மலரைக் கொடுக்க, அதை அவர் எடுத்து வந்து கிருஷ்ணனிடம் தர, அதனைக் கிருஷ்ணன் தன் கையாலேயே ருக்மிணிக்குத் தலையில் சூட்டினார். அடுத்து சத்தியபாமையின் இல்லாம் சேர்ந்த நாரதர் பாமாவிடம் நடந்தவற்றைக் கூறி அவள் மனதில் அசூயையை உண்டாக்கினார். சற்று நேரம் கழித்து பாமாவின் இல்லம் வந்த கிருஷ்ணனை பாமா தக்கமுறையில் வரவேற்காமல் அழுதவண்ணம் கோபமாகப் படுத்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி எழுப்பி காரணத்தை அறிந்துகொண்டு பாமாவின் இல்லத்திற்கு பாரிஜாத மரத்தையை கொண்டு வந்து தருவதாக வாக்களித்தார். நரகாசூரன் வதத்திற்குப் பின் இந்திரனுக்கு உதவிய கிருஷ்ணன் இந்திரனிடம் பாரிஜாத மரத்தைக் கேட்டுப் பெற்றுவர நாரதரை அனுப்ப, அவன் மறுத்திட இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் மரத்துக்காக போர் நிகழ்ந்தது. காசிப முனிவர் அறிவுரைப்படி பாரிஜாத மரத்தைத் துவாரகைக்கு அனுப்பி வைத்தான் இந்திரன். மரம் பாமாவிற்குக் கிடைத்தது பற்றி மனமகிழ்ந்த அவள் மலர்கள் அருகே உள்ள ருக்மிணி வீட்டில் குவிவது பற்றி திரும்பவும் கோபம் கொண்டாள். ருக்மணி மீது பொறாமையும் ஏற்பட்டது.

மறுநாள் கிருஷ்ணன் பாமாவுடன் ருக்மிணியின் வீட்டிற்குச் சென்றார். ருக்மிணி அகமகிழ்ந்து வரவேற்றாள். ருக்மணி உள்ளே சென்று தொடுத்து வைத்திருந்த பாரிஜாத மலர் மாலையை எடுத்து வந்து கிருஷ்ணனுக்குச் சூட்டி மகிழ்ந்தாள். அப்போது கிருஷ்ணன் ருக்மிணியிடம் எல்லா மலர்களையும் எனக்கே சூட்டிவிட்டாயே? உனக்கு எங்கே? என்று கேட்டார். அதற்கு ருக்மிணி என்னையே பகவானுக்கு அர்ப்பணித்தவிட்ட பிறகு எனக்கென்று வேறு எதற்கு? பகவான் மகிழ்ச்சியே எனக்கு நிறைவைத் தருகிறது என்றாள். இதைக் கேட்டு சத்தியபாமா வெட்கித் தலை குனிந்தாள். பாமா மலரைத் தானே சூடி மகிழ நினைத்தாள். மலர் கிடைப்பது அரிதாயிற்று. அதனை பகவானுக்கே அர்ப்பித்தாள் ருக்மிணி. எனவே தான் முயற்சி இல்லாமலேயே மலர் ருக்மிணிக்குக் கிடைத்தது. பாமா முயன்றும் அவளால் பெற முடியவில்லை. அப்போது சத்தியபாமா தன்னை மன்னித்து விடுமாறு வேண்டி கிருஷ்ணன் பாதங்களில் விழுந்து வணங்கினாள். பாமாவின் மனத்தில் இருந்த துவேஷம் நீங்கியது பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்தார் கண்ணன். அன்று முதல் தன் வீட்டில் விழும் பாரிஜாத மலர்களைப் பறித்து ருக்மிணிக்குக் கொடுத்து வந்தாள்.

ஒருநாள் நாரதர் சத்தியபாமாவின் இல்லத்திற்கு வர பாமா அவரை வரவேற்று, வணங்கி கண்ணனின் அன்பு காரணமாக பாரிஜாத மரம் கிடைத்தது என்று கூறி மலர்களைக் கொண்டு அவர் பாதங்களில் அர்ச்சித்தாள். அப்போது நாரதர் பாமாவை பாக்கியவதி என்றும் அவள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் கிருஷ்ணனைப் பெற்று இருப்பதாகவும் கூறினார். பாமா முற்பிறவியில் கார்த்திகை ஏகாதசி விரதம் இருந்து, துளசிச் செடியை வைத்து வளர்த்து வழிபட்டு வந்ததன் பலனாகவே இப்பிறவியில் பகவானை அடைந்திருப்பதாகவும் கூறினார். பாரிஜாத மரமும் அதனாலேயே கிடைத்தது. கணவன் அன்பு நிலைத்திருக்க துலாபாரம் போட்டுத் தானம் செய்வாயாக என்று நாரதர் பாமாவுக்கு அறிவுறுத்தினார். அப்போது பாமா அந்தத் துலாபார தான விவரம் பற்றி கேட்க, நாரதர் அது பற்றி தெரிவித்தார்.

கிருஷ்ணனை ஒரு தராசுத் தட்டில் அமர்த்தி அவர் எடைக்குப் பொன் வைத்து அதனைத் தானம் செய்தால் அப்படி செய்பவரை விட்டுப் பிரியாமல் கிருஷ்ணன் இருப்பார் என்று கூற, சத்தியபாமா அதற்கான முயற்சியில் ஈடுபட்டாள். மேலும் அந்தத் தானத்தைப் பெரும் தகுதி நாரதருக்கே எனவும் பிரார்த்தித்தாள். இதில் நாரதர் சூழ்ச்சியை அவள் அறியவில்லை. குறிப்பிட்ட நாளில் தராசுத் தட்டில் பகவானை அமர வைத்து, அவர் எடைக்கு பொன்னை மற்றொரு தட்டில் வைக்குமாறு தனது பணிப்பெண்களுக்கு ஆணை இட்டாள். அவள் மனதில் கிருஷ்ணன் எடைக்கு மேல் பொருள் இருப்பதாகக் கர்வம் இருந்தது. அப்போது நாரதர் சூழ்ச்சியால் எவ்வளவு பொன்னை வைத்தும் கிருஷ்ணன் எடைக்கு அவை சரியாக இல்லை. என்ன செய்வதென்று அறியாமல் விழிக்க, மற்ற கிருஷ்ண பத்தினிகள் அவளையும், அவள் துலாபாரம் செய்ய முற்பட்டதையும் பற்றி ஏசலாயினர். கடைசியில் ருக்மிணியால் ஏதாவது செய்ய முடியுமா என்று எல்லாரும் எண்ணி சத்தியபாமாவை ருக்மிணியிடம் சென்று வேண்டிக்கொள்ளுமாறு சொல்ல வேறு வழியின்றி சத்தியபாமா ருக்மிணியைப் பிரார்த்தித்தாள். உடனே ருக்மிணி அங்கு வந்து தட்டில் உள்ள பொருள்களை எல்லாம் அகற்றுமாறு கூறி கிருஷ்ணனை முழு மனதுடன் தியானித்து அவன் அருள் வேண்டி துளசி தளங்களை அத்தட்டில் வைக்க தட்டிரண்டும் சமமாயிற்று. தவறை உணர்ந்த பாமா தலை குனிந்தாள். அப்போது நாரதர், எந்தப் பக்தையின் பக்தியினாலும், செயலினாலும் துலாபாரம் நிறைவேறியதோ அவருக்கே கிருஷ்ணன் சொந்தம் என்றார்.

15. கிருஷ்ணாவதாரத்தில் இராமன்

ஒரு சமயம் நாரதர் துவாரகைக்குச் சென்றார். நாராயணா நாராயணா என்று உச்சரித்தபடி, கிருஷ்ணன் மாளிகைக்குள் நுழைந்தார். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த கிருஷ்ணன் நாரதரை வரவேற்றார். நாரதர் கிருஷ்ணனிடம் அவர் மனதில் உள்ள சிந்தனையைப் பற்றிக் கேட்க கிருஷ்ணன் அண்ணன் பலராமன், சத்தியபாமா இருவரைப் பற்றியதே என்றார். மேலும் பலராமன் தன்னை யாராலும் வெல்லமுடியாதென்றும், சத்தியபாமா தனக்கு மிஞ்சிய இளமை, அழகு உடையவர் யாருமில்லை என்றும் கர்வம் கொண்டுள்ளனர். மேலும் கருடனுடைய கொட்டத்தையும் அடக்க வேண்டும் என்றார். அதற்காக உங்கள் ஒத்துழைப்புத் தேவை என்றார் கிருஷ்ணன். பரந்தாமா, ஆணையிடுங்கள் காத்திருக்கிறேன் என்றார் நாரதர். பகவான் சொன்னார், நான் முன்னம் அனுமனிடம் துவாபர யுகத்தில் கிருஷ்ணவதாரத்திலும் அவனுக்கு இராமனாகக் காட்சி தருவதாக வாக்களித்துள்ளேன். அதை நிறைவேற்ற உன் உதவி தேவை என்று கூறி, உடனே கருடனை அழைத்து வரச் சொன்னார். நாரதர் கருடனுடன் வர, கருடனிடம் கிருஷ்ணன், வைனதேயா! இவ்வூர் எல்லையில் ஒரு குரங்கு வந்துள்ளது. அதன் தொல்லை தாங்க முடியவில்லை. நீ சென்று அதனைப் பிடித்து வா என்றார். கருடன், ஒரு குரங்கைப் பிடிக்க நான் செல்ல வேண்டுமா? என்று சிறிது மமதையுடன் கேட்க, வீரர்கள் சென்று அதைப் பிடிக்க முடியாமல் திரும்பி விட்டதால் தான் உன்னை அனுப்புகிறேன் என்றார் கிருஷ்ணன். பின்னர் நாரதரிடம், கருடனை அந்தக் குரங்கிடம் கூட்டிச் சென்று வாரும் என்றார்.

கருடன் அனுமாரிடம் சென்று வீரவசனம் பேசி, ராமநாம ஜபத்தில் இருந்த அவனைப் பற்ற முயற்சிக்கையில் அனுமார் கருடன் கன்னத்தில் ஓர் அறை விட அவன் மூர்ச்சித்து விழுந்தான். கருடன் சிறிது நேரம் கழித்து மெதுவாக எழுந்துத் திரும்பிப் பார்க்காமல் கிருஷ்ணனிடம் வந்து சரணாகதி செய்தான். அப்போது கிருஷ்ணன், கருடா! பயப்படாதே! நீ சென்று இராமன் படாடாபிஷேகக் காட்சி தருகிறார். உங்களை அழைத்து வருமாறு சொன்னார் என்று கூறி அழைத்து வா என்றார். அய்யோ திரும்பவும் நான் சென்று மற்றொரு அறை வாங்கினால் என் உயிர் போய்விடும் என, அனுமார் உன்னை ஒன்றும் செய்யமாட்டார் என்றார். ஏற்கனவே பலராமர் சேனையுடன் சென்று அனுமான் முன் நிற்க முடியாமல் தோற்று வந்தவர், அனுமார் வருகிறார் என்றறிந்து மிகுந்த அச்சம் கொண்டு கிருஷ்ணனிடம் தெரிவிக்க, கிருஷ்ணன் தான் அளிக்கப்போகும் இராமவதார காட்சி பற்றிக் கூறி அவரை லக்ஷ்மணனாக மாற்றினார். பலராமனில் பல நீக்குமாறு கூறினான் அனுமான்.

இனி சீதைக்கு ஏற்பாடு செய்ய நாரதரிடம் சொல்லி அனுப்பினார். அவர் சத்தியபாமாவிடம் சென்று அவளை சீதையாக வருமாறு கூறிட அவள் தன்னை மிக்க அழகியாக, பட்டத்து ராணியாகப் புறப்பட்டு வந்தாள். அதைக் கண்ட கிருஷ்ணன், இராமன் சீதையை இந்த அலங்காரத்திலா கண்டான் என்று கூற, அவள் வெட்கி திரும்பவும் அசோகவனத்துச் சீதையாக அலங்கோலமாக வந்தாள். இதைக் கண்டும் அதிருப்தியைக் காட்டி கிருஷ்ணன் நாரதரிடம் ருக்மிணியைச் சீதையாக வரச்சொல்லி நாரதரை அனுப்ப, அவள் நாரதரிடம் தான் இருந்த நிலையிலேயே புறப்பட்டாள். மேலும் பகவானே தன்னை எப்படி வேண்டுமோ அப்படிச் செய்யட்டும் என்றாள். ருக்மிணி வந்தவுடன் அவளைச் சீதையாக்கி, பலராமனை லக்ஷ்மணனாக்கி, தான் இராமனாக மாறி அனுமானுக்கு இராமவதாரக் காட்சி தந்தார் பகவான். இதற்குள் அனுமார் இச்செய்தி அறிந்து கருடனையும் நாரதரையும் தன் தோள் மீது சுமந்து கொண்டு வேகமாய் வந்து இராமர் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி உற்றார். இதன் மூலம் கிருஷ்ணர் கருடன், பலராமன் ஆகிய இருவருடைய பலவான் என்ற ஆணவத்தையும், சத்தியபாமாவின் கர்வத்தையும் அடக்கினார். பாமாவும் ருக்மிணியை சீதையாகக் கண்டு மகிழ்ந்தாள்.

16. பஸ்மாசுரன் பெற்ற வரம்

சகன் என்ற அசுரனின் மகன் பஸ்மாசுரன். முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் பலவித தொல்லைகள் கொடுத்து வந்தான். ஒருநாள் நாரதர் தேவலோகம் செல்ல அங்கு தேவர்கள் நாரதரை வணங்கி பஸ்மாசுரன் அழிவுக்கு ஓர் உபாயம் செய்ய வேண்டினர். அவர்களிடம் அஞ்சாதீர்கள் என்று கூறி பஸ்மாசுரனைக் காண வந்தார். பஸ்மாசுரன் நாரதரை வரவேற்று உபசரித்தான். அப்போது நாரதர் அசுரனிடம் உன் முன்னோர்களைப் போல் கவுரவமாய் வாழ ஈசனைக் குறித்துத் தவம் செய்து வரங்கள் பெறு என்று அறிவுரை கூறினார். அப்போது பஸ்மாசுரன் யாரை நோக்கித் தவம் இருப்பது, என்ன வரம் கேட்பது? என்று நாரதரையே கேட்டான். அதற்கு நாரதர் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, நீ யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாகும் படி வரம் பெற வேண்டும் என்றார். உடனே பஸ்மாசுரன் சிவனைக் குறித்துக் கடுந்தவம் செய்ய, சிவபெருமான் அவன் முன்தோன்றி அவன் கேட்டவாறே அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள் என்று வரம் அளித்தார்.

அப்போது பஸ்மாசுரன், ஈசன் கொடுத்த வரத்தை அவரது தலையிலேயே கை வைத்துச் சோதனை செய்ய முனைந்தான். உடனே சிவபெருமான் அவனுக்குப் பயந்து ஓட, அவன் அவரைப் பின் தொடர்ந்தான். ஈசன் தப்பித்துக் கொள்ள ஐவேலங் காட்டினுள் மறைந்து கொண்டார். அவர் கொடுத்த வரம் பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் தன் இருப்பிடம் திரும்பினான். இஃதறிந்த நாரதர் வைகுந்தம் சென்று நடந்ததைக் கூறிச் சிவனாரைக் காப்பாற்ற வேண்டினார். பரந்தாமன் சம்மதித்து, மோகினியாக உருவெடுத்து பஸ்மாசுரன் இருக்குமிடம் வந்து சேர, அவன் மோகினியின் அழகில் மயங்கி அவளை அடைய விரும்பினான். மோகினியும் அதற்கு சம்மதித்து அவனை நீரில் மூழ்கித் தூய்மையாக வருமாறு கூற அவன் தன் கையை நீராடும் போது தலை மீது அறியாமலே வைத்துக் கொள்ள எரிந்து சாம்பலானான். சில புராணங்களில் பஸ்மாசுரன் மோகினியுடன் நடனமாட மோகினி தன் தலை மீது கை கொண்டு செல்ல, அவனும் அவ்வாறே செய்து எரிந்து சாம்பலானான் என்றும் சொல்லப்படுகிறது.

பின்னர் மோகினி வடிவில் இருந்த நாராயணன் ஈசன் ஒளிந்திருந்த ஐவேல மரத்திற்கு வந்து நடந்ததைக் கூற, ஈசன் வெளியே வந்தவர் மோகினியின் அழகில் மயங்கி தன்னை இழந்து கட்டித் தழுவ அதன் பலனாய் ஹரிஹரபுத்திரனான ஐயப்பன் தோன்றினான்.

 
மேலும் நாரத புராணம் »
temple news
17. சத்வகுணமூர்த்தி-ஸ்ரீமந் நாராயணன்: ஒரு சமயம் முனிவர்கள் ஒன்று கூடி காசியப முனிவரின் தலைமையில் பெரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar