பதிவு செய்த நாள்
08
டிச
2021
01:12
திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வரும் 14ம் தேதி நடைபெறும் சொர்க்க வாசல் திறப்புக்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
கலெக்டர் சிவராசு வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த 3ம் தேதி இரவு, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வரும் 14ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அன்று அதிகாலை 4:45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள், மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
உள்ளூர் விடுமுறை : சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும் 14ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதே சமயம், பள்ளி, கல்லுாரி தேர்வுகள் நடைபெறுவதில், இந்த விடுமுறை பொருந்தாது. இதற்கு மாற்றாக, டிசம்பர் 18 ம் தேதி, வேலை நாளாக இருக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.