பதிவு செய்த நாள்
25
ஜன
2023
11:01
கன்னியாகுமரி மாவட்டம் தாடகை மலை அடிவாரத்தில் சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் தவழ்ந்த தவபூமியான தொன்மைமிகு பூதையில் திருமலையை கோபுரமாக கொண்டு ஜம்புலிங்கேஸ்வராக, சாலியர் கண்ட திருமேனியராக, குடைவரை நாதராக, பஞ்சபூதங்களும் வழங்கும் முதற்பொருளாக விளங்குபவர் அருள்மிகு சிவகாமி உடனுறை பூதலிங்கேஸ்வரர், அற்புதங்கள் பல படைத்து அடியார் திருக்கூட்டத்திற்கு பேரருள் புரிபவர். ஆதவன் உதிக்கும் திசையில் நீரோடை முன்செல்ல, குபேர திசையில் தெப்ப மண்டபத்தோடு தெப்பக்குளம் அமைய, ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் அமைப்பு ஊரின் தென்கிழக்கு மூலையில் திருக்கோவில் மேற்கு நுழைவாயில் அமை ந்துள்ளது. தலைவாசலில் 47 அடி உயரம் கொண்ட கோபுரத்தில் 41 இறை சிற்பங்கள் ஐந்து கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் இருந்து கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோ மீட்டர் அகலமும், உயரமும் கொண்ட தாடகை மல்லாந்து வீழ்ந்து கிடப்பது போன்ற பிரமிக்கத்தக்க காட்சியுடன் தாடகை மலை கிழக்கு அரணாக இயற்கையாகவே அமைந்து உள்ளது. இதன் அடிவாரத்தில்
வடக்கு மலையில் உற்பத்தியாகும் பஃறுளி எனும் பழையாறு இயற்கை ஆறாக தெற்கு நோக்கி ஓடி கன்னியாகுமரி அருகே மணக்குடி கோயிலில் அரபிக்கடலில் சங்கமமாகிறது.
பாண்டியன் துயர் துடைத்த பரம்பொருள் ஆதி சிவபக்தனாகிய பசும்பொன் பாண்டியன் என்னும் அரசன் வயிற்றுவலியால் பெரும் துன்பம் அடைந்தான். அசரீரி வாக்கின் வழி இத்தலத்திற்கு வந்து, இறைவனை வணங்கி நோய் நீங்கப்பெற்று மகிழ்வுற்றான். தன் தந்தை பூதப்பாண்டியன் பெயரால் தேரோடும் அகன்ற வீதிகளுடன் கூடிய பூதப்பாண்டி என்ற ஊரை
அமைத்து, பூதலிங்க ஈஸ்வரமுடைய நாயனாருக்கு அழகிய கற்கோவிலை எழுப்பினான். இக்கோவில் கி.பி., 1050 – 1075க்கு இடையில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கொடிமரமண்டபம் கொடிமரம் மண்டபம் திருக்கோவில் கிழக்கு நுழைவாயிலில் நெடிது உயர்ந்த கொடிமரமும், பலிபீடமும், பூதகணங்களும் காவல் தெய்வமாக உள்ளது. மூன்றாவதாக நிறுவப்பட்ட கொடிமரம் கேரள மாநிலம் தானி என்ற ஊரில் இருந்து கொண்டு வரப்பட்ட நாட்டு தேக்குமரத்தில் செதுக்கப்பட்டு 2012ல் நிறுவப்பட்டது. கொடிமரம் 54 அடி உயரம் கொண்டது. என்ணைக்கலவைகளால் பாடம் செய்யப்பட்டு வலுவூட்ட பட்டுள்ளது. இரண்டாவது கொடிமரம் கி.பி., 1789ல் நிறுவப்பட்டதாக கல்வெட்டு சான்றுகள் கூறுகிறது. மண்டபத்தில் சுழலும் கல்விளக்கு, கல் சங்கிலி, சித்தர்கள், ஈசன் மீது பசுபால் சொரியும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்கு யாகசாலையில் தெற்கு அலங்கார மண்டபமும் அமை ந்துள்ளது. திருத்தல விருட்சம் ஏரழிஞ்சல் திருக்கோவில் கன்னிமூலையில் உள்ள நினைத்ததை முடிக்கும் விநாயகர் சன்னதி எதிரில் நிற்கும் 500 ஆண்டுகள் பழமையான ஏரழிஞ்சல் மரம்தல விருட்சமாக கருதப்படுகிறது. மரத்தின் பழமும், விதைகளும் தொழுநோய் மற்றும் விஷக்கடி நீக்கும் அற்புதமருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. சித்திரை மாதம் பூ பூத்து, காய்க்கும் கனியை உண்பதற்கு செந்நிறம் கொண்ட எறும்புகள் வருவதை காணமுடியும். அயினி விதையை போன்று அவை காணப்படும். இனிப்பும், புளிப்பும் கலந்த கலவை கொண்டது. பூ பூக்கும் காலத்தில் மரத்தடியில் நறுமணம் பரவும். அண்மை காலத்தில் பூக்கள் பூப்பது அரிதாக உள்ளது. திருத்தேர் தை மாத ம் ஒன்பதாம் திருவிழா அன்று புனர்பூச நட்சத்திரத்தில் விநாயகர், சிவகாமியம்மாள் , பூத லிங்கேஸ்வரர் ஆகியோர் மூன்று தேர்களில் பவனி வருகிறார்கள்.
பெரிய தேர்சுசீந்திரம் திருத்தேருக்கு நிகராக அதிக எடையும், உயரமும், உறுதியும், சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாக அமை ந்துள்ளது. இனம், மதம், மொழி வே றுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஈசன் அழகு தேரில் அசைந்து அசை ந்து உலாவரும் அருட்காட்சி காண்போர் உள்ளத்தை நிறைவு பெற வைக்கும்.