திருக்குறுங்குடியில் 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2023 08:03
திருநெல்வேலி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பங்குனி திருவிழாவில் நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பிராயர் கோயில் பழமை வாய்ந்தது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினசரி நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நேற்று முன்தினம் இரவில் தொடங்கியது. இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய ஐந்து நம்பி சுவாமிகளும் தனித்தனியாக 5 வருட வாகனங்களில் எழுந்தருளி நேற்று அதிகாலை 3:20 மணிக்கு மேல ரத வீதியில் மகேந்திர மலையை நோக்கி சித்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 10ம் திருவிழாவன்று வரும் 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.