பதிவு செய்த நாள்
14
மார்
2023
08:03
காங்கேயம்: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி, நல்லெண்ணெய் இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் சென்று, சிவன்மலை ஆண்டவர் உத்தரவிடும் பொருள், இந்தப்பெட்டியில் வைத்து பூஜை செய்வது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இடம் பெற்றிருக்கும்.
அதேசமயம் பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்று, பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பெட்டியில் கடந்த, 8ம் தேதி முதல் உலக உருண்டை, அத்திரி என்ற பசு, அசுவம் என்ற குதிரை, இரண்டு திருமாங்கல்ய சரடு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் குன்னத்துார், சுள்ளிக்கரடு முத்துசாமி, 37, (சிவில் இன்ஜினியர்) கனவில் ஏழு கிலோ அரிசி, ஐந்து லிட்டர் நல்லெண்ணெய் வைக்க உத்தரவானது. நேற்று முதல் இது இரண்டும் பெட்டியில் இடம் பெற்றுள்ளது. அரிசி விளைச்சல் அதிகரித்து விலை குறையலாம் அல்லது ஏற்றுமதி வாய்ப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கலாம். நல்லெண்ணெய் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இதன் விலையும் அதிகரிக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.