பதிவு செய்த நாள்
17
ஆக
2023
05:08
பேரூர்: பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடி அமாவாசையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை தினத்தன்று, ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வது வழக்கம். பேரூர், முக்தி ஸ்தலம் என்பதால், பேரூர் படித்துறை நொய்யலாற்றில், ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, தை அமாவாசை ஆகிய நாட்களில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள். இந்தாண்டு, ஆடி மாதத்தில், ஜூலை 17ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16ம் தேதி என, இரண்டு அமாவாசை வந்தது. ஜூலை 17ம் தேதி, ஆடி அமாவாசை நிறைவடைந்தது. ஆடி மாதத்தின், இரண்டாவது அமாவாசையொட்டி, நேற்று , பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஏராளமான பொதுமக்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து சென்றனர். தற்போது, மழைப்பொழிவு இல்லாததால், பேரூர் பட்டித்துறை நொய்யல் ஆற்றில் நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்களின் வசதிக்காக பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், படித்துறை அருகே உள்ள போர்வெல் மோட்டரில் இருந்து, 120 அடி நீளத்திற்கு, தற்காலிக குழாய்கள் மூலம் ஆற்றில், ’சவர்’ போன்று அமைத்துள்ளனர். பொதுமக்கள், இங்கு நீராடிவிட்டு, திதி கொடுத்து சென்றனர்.