பதிவு செய்த நாள்
17
ஆக
2023
05:08
சென்னை : விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விவாதிக்க, ஹிந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு, போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 19ல் கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுதும், 2022ல் எத்தனை இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன; எந்தெந்த இடங்களில் பிரச்னைகள் வெடித்தன; பின்னணியில் இருந்த நபர்கள் யார் என்பது குறித்து, போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், சர்ச்சைக்குரிய இடங்களில் சிலைகள் வைப்பதற்கு, போலீசார் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, உளவுத் துறை போலீசார் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பில், எவ்வித குளறுபடியும் இருக்கக் கூடாது. பிரச்னைக்குரிய இடங்கள் மற்றும் நபர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என, எங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தொடர்பாக, ஹிந்து அமைப்புகளின் தலைவர்களுடன், மூன்று கட்டங்களாக கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலைகள் வைக்க அனுமதி கோரும்போதே, சர்ச்சைக்குரிய இடம் என, மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அனுமதியை மீறி, அந்த இடங்களில் சிலைகள் வைக்கும்போது தான் பிரச்னை எழுகிறது. இதனால், சர்ச்சைக்குரிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி கோரக் கூடாது என்றும், மீறி வைத்தால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பேச, பல்வேறு ஹிந்து அமைப்புகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.