பதிவு செய்த நாள்
24
நவ
2012
02:11
மதுரை என்றாலே, மீனாட்சி அம்மன் கோயில்தான் அடையாளம். அதிலும், பொற்றாமரைக்குளமும், பின்னணியில் தெற்கு கோபுரமும் கம்பீரமாக காட்சி தரும் போட்டோவை பார்க்கும்போது, வெளிநாடு, வெளியூர்களில் வசிக்கும் மதுரைக்காரர்கள் மனதில் தாய்வீடு ஏக்கம் குடிபுகுந்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் ததும்ப நிரம்பியிருக்கும் பொற்றாமரைக்குளத்தை, அப்படியே புதுப்பிக்கும் முயற்சியாக, நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. 165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்டு, செவ்வக வடிவில், கருங்கல் படிக்கட்டுளுடன் இக்குளம் உள்ளது. இதைச்சுற்றி, 4 திசைகளிலும் நடைபாதை மண்டபம் உள்ளது. அம்மன் சன்னதி எதிரேயுள்ள மண்டபத்தின் தூண்களில், சங்க புலவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புலவரின் கையில் ஏடும், எழுத்தாணியும் உள்ளது. கடைச்சங்க புலவர்களில் 49 பேரில், 24 பேரின் உருவங்கள் மட்டுமே உள்ளன. இம்மண்டபத்தின் நடுவே, கரைத்தூணில், மதுரையை உருவாக்கிய மன்னர் குலசேகர பாண்டியனின் உருவமும், எதிரில் கடம்பவனத்தில், ஈசனை கண்டு, மன்னனுக்கு தெரிவித்த வணிகர் தனஞ்செயனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தவிர, 64 திருவிளையாடல் சித்திரங்கள் மூலிகை ஓவியங்களாக உள்ளன. வடக்குப்புற சுவரின் மேல்பகுதியில் சுவாமி, அம்மன் கோயில் மாதிரி ஓவியங்கள் உள்ளன. இவை 1894ல் வரையப்பட்டவை. தெற்கு கரை மண்டபத்தில், 1330 குறட்பாக்கள் கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.இக்குளத்தின் வடக்குப்புற மண்டபம், படிக்கட்டுகள் 1562ல் பெருமாள் என்பவராலும், கிழக்குப்புற மண்டபம், படிக்கட்டுகள் 1573ல் குப்பையாண்டி என்பவராலும், தெற்குபுற மண்டபம், படிக்கட்டுகள் 1578ல் அப்பன்பிள்ளை என்பவராலும் அடுத்தடுத்து முழுமை பெற்று அழகாக காட்சியளிக்கிறது.