பதிவு செய்த நாள்
24
நவ
2012
04:11
சென்னை என்பது நின்று பேச நேரமில்லாத ஜனசமுத்திரம் மிகுந்த இடமாகவும், போக்குவரத்து நெரிசலால் திணறும் இடமாகவும் மட்டுமே அறியப்பட்டவர்களுக்கு, பொக்கிஷம் போல இங்கே அமைதி தரும் சில ஆன்மிக தலங்களும் உண்டு என்பதையும், அதில் கார்த்திகை தீப திருவிழா மூலமாக கடந்த சில ஆண்டுகளாக, சின்ன திருவண்ணாமலை போல பிரபலமாகிவரும், திருக்காட்டூர் தையல் நாயகி சமேத உத்ரவைத்ய லிங்கேஸ்வரர் ஆலயம் பற்றி இந்த நேரத்தில் அறிந்து கொள்வோம்.
காரணம் இன்னும் இரண்டு நாளில் அதாவது வருகின்ற 26ம் தேதி (திங்கட்கிழமை) 1008 சங்கு பூஜையும், 27ம் தேதி 48,000 விளக்கு பூஜையும் இங்கு சீரும் சிறப்புடனும் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை.
சென்னையில் இருந்து திருப்போரூர் போகும் வழியில் உள்ளது திருக்காட்டூர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வழி, வெண்பேடு அஞ்சல், காட்டூர் கிராமத்தில், இயற்கை எழிலார்ந்த சின்ன, சின்ன கிராமங்கள் சுற்றி அமைந்திருக்க நடுவே கம்பீரமாக வீற்றிருக்கிறது, வைத்தியலிங்கேஸ்வரர் கோயில். இந்த கோயிலுக்கு பலவித சிறப்புகள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாறைக் கொண்டுள்ளது. அகத்திய மாமுனி தங்கியிருந்து வழிபட்ட ஈஸ்வரனைக் கொண்டுள்ளது. சிறந்த செவ்வாய் பரிகார தலமாக விளங்குகிறது. அற்புதமான அகத்தியர் தீர்த்தம் அமைந்துள்ளது. பங்குனி உத்திர திருநாளுக்கு மூன்று தினங்கள் முன்பாக காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் சூரியன் தன் பொற்கிரணங்களால் தரிசித்து வணங்கி செல்லும் சிறப்பைக் கொண்டுள்ளது. வேம்பும், பனையும் தல விருட்சமாக அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தில் மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவராக உத்திர வைத்திய லிங்கேஸ்வரரும், தையல்நாயகி அம்பாளும் வீற்றிருக்கின்றனர்.
வருட ஆரம்பத்தில் வைகாசி விசாகமும், ஆடிப்பூரத்தன்று பால்குடமும், புரட்டாசியில் நவராத்திரி கொலுவும், ஐப்பசியில் அன்னாபிஷேகமும், கார்த்திகை மாதம் 1008 சங்காபிஷேகமும், தீப திருநாளான்று திருவிளக்கேற்றுவதும், மார்கழியில் ஆருத்திரா தரிசனமும், தையில் மகர சங்கராந்தி பூஜையும், பங்குனியில் திருக்கல்யாணமும் என வருடம் முழுவதும் இந்த கோயிலில் விழா நடைபெறுகிறது. பல சிறப்புகள் அமையப்பெற்ற இந்த தலத்தில் சமீப வருடங்களாக நடைபெறும் கார்த்திகை தீபம் திருவிழா பிரசித்தம் பெற்றுவருகிறது. சிறந்த சிவ பக்தரான எஸ்.ராஜு என்பவர் இந்த கோயிலில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கொஞ்சம் விளக்கேற்றி வழிபட, அது கோயிலுக்கு மட்டுமல்லாது அவரது வாழ்க்கையிலும் பிரகாசத்தை ஏற்படுத்த, விளக்குகளின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி, இந்த வருடம் வருகின்ற 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு 48 ஆயிரம் விளக்குகளை ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ஆதரவோடு நடத்திட உள்ளார். இவரைப் போலவே நிறைய கோயில்களில் பக்தி பணியாற்றிவரும் பத்திரிகையாளர் ஜெயா சுந்தரம் இந்த கார்த்திகை தீப திருவிழா சிறக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
கோயிலில் 48 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படும் அதே வேளையில் திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதைப் போல இங்கேயும் பக்கத்தில் உள்ள பைரவர் மலையில் அகண்ட தீபம் ஏற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்று தீபம் ஏற்றவோ அல்லது கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யவோ விரும்பும் பக்தர்கள் இது தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9444878797, 9445736549.
-எல்.முருகராஜ்.