அவிநாசி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா; ஏப். 29, 30 தேதிகளில் தேரோட்டம்
பதிவு செய்த நாள்
11
மார் 2026 10:03
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை தேரோட்டம் நடைபெற உள்ளது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், காசியில் வாசி அவிநாசி என்ற சிறப்பு பெற்றதும், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்ற பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ் வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. அவ்வகையில், நடப்பாண்டு தேர்த்திருவிழா, வரும் ஏப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றைய தினம் இரவு, திருமுருகன்பூண்டி கோவிலிலிருந்து திருமுருகநாதர் வருகை, 22ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சி, 23ம் தேதி அதிகாரநந்தி, கிளி, பூதம், அன்னபட்சி வாகன காட்சி, 24ம் தேதி கைலாச வாகனம், புஷ்பக விமான காட்சி, 25ம் தேதி, 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியருளல், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியும் விமரிசையாக நடக்கிறது. விழாவில், ஏப். 26ம் தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி நடக்கிறது. 27ம் தேதி அதிகாலை பூர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளல், 28ம் தேதி சோமாஸ்கந்தர் தேர் வடம் பிடித்தல் மற்றும் வடக்குரத வீதியில் நிலை நிறுத்துதல், 29ம் தேதி வடக்குரத வீதியில் வடம் பிடித்து நிலை நிறுத்துதல், 30ம் தேதி அம்மன் தேர் வடம் பிடித்தல், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆகியன நடக்கிறது. அன்றைய தினம், இரவு வண்டித்தாரை நடக்கும். வரும், மே 1ம் தேதி மாலை பரிவேட்டை, 2ம் தேதி மாலை தெப்பத்தேர் உற்சவம், 3ம் தேதி ஸ்ரீநடராஜபெருமான் தரிசனம், 4ம் தேதி மஞ்சள் நீர் விழா மற்றும் இரவு மயில்வாகன காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. தேர்த்திருவிழா ஏற்பாடுகள் விரைவில் துவங்க உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் தெரிவித்தார்.
|