பதிவு செய்த நாள்
01
பிப்
2011
05:02
மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ராமபிரான் பதவியேற்று விட்டார். இனி என்றும் எங்களுக்கு இன்பமே, என்று மக்கள் ஆரவாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ராமபிரானை தரிசிக்க காத்திருந்த மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஏனெனில், ராமராஜ்யம் தொடங்கி விட்டதல்லவா! ராமன் என்றாலே ஒழுக்கம் என்பது தானே பொருள். மக்கள் தாங்களே வரிசையை வகுத்துக்கொண்டு ஒழுங்குபட நின்றனர். வெளியே இப்படி என்றால், அரண்மனைக்குள் இன்னும் கோலாகலம். பட்டாபிஷேகம் காண வந்திருந்த பெண்கள் பயமின்றி நடமாடினர். சகோதரி! ராமராஜ்யம் துவங்கி விட்டது. இனி இரவு, பகல் என்ற வித்தியாசம் இங்கில்லை. நாம் எப்போது வேண்டுமானாலும், சிங்கங்கள் நிறைந்த காட்டிற்குள் கூட போகலாம். நம்மை ஏறிட்டு பார்க்கக்கூட ஆண்கள் தயங்குவார்கள். ஏனெனில், ராமராஜ்யத்தில் பண்பாடு என்பது ஊறிப்போனதாக ஆகிவிடும், என மகிழ்ச்சி பொங்க, ஒரு பெண், இன்னொருத்தியிடம் சொன்னாள். ஆம்...இயற்கை தானே! ராமபிரானின் தம்பி லட்சுமணன், தன் அண்ணனுக்கு திருமணமாகி இந்த நிமிடம் வரை, அண்ணியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்ததில்லை. இப்போதும், அவன் பட்டாபிராமன் முன்னால், கைகட்டி பவ்வியமாகத் தான் நின்று கொண்டிருந்தான். கோபக்காரன் தான்...மற்றவர்கள் முன்பு. அண்ணனையோ, அண்ணியாரின் திருப்பாதத்தையோ பார்த்துவிட்டால் பசுவைப் போல் ஒடுங்கி விடுவான். கோபமுள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்! அப்படிப்பட்ட தம்பியைப் போலவே தான் அயோத்தி வாழ் மக்களும், பெண்கள் விஷயத்தில் மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மாமுனிவர், தமிழ்க்கடல் அகத்தியர் அங்கே வந்தார். ஸ்ரீராமனின் வெற்றிக்கு போர்க்களத்துக்கே வந்து அருளாசி செய்த மகான் அவர். ராமா! ராவணனை வெல்வோமா மாட்டோமா என சந்தேகம் கொள்ளாதே. இந்த உலகில் வெற்றி தரும் சூரிய மந்திரம் ஒன்று உள்ளது. அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல், வெற்றி உன்பக்கம் தான், என்றவர் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ராமன் சொன்னார், வென்றார்.
அந்த மரியாதைக்குரியவர் வந்ததும், அவையே அவையடக்கத்துடன் எழுந்து நின்று அவரை தலைபணிந்து தாழ் பணிந்து வரவேற்றது. ராமபிரானும், சீதாதேவியாரும் அந்த மாமுனிக்கு பாதஸ்நானம் செய்து, அந்த தீர்த்தத்தை தங்கள் தலையில் தெளித்து வரவேற்றனர். தங்க சிம்மாசனத்தில் அகத்தியர் அமர்ந்தார். ராமபிரான் அவரிடம், மாமுனியே! நான் பல அரக்கர்களை வனவாசத்தின் போது வென்றேன். அவர்களெல்லாம் யார்? அவர்களின் பிறப்பு என்ன? என்று கேட்டார். அகத்தியர் விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளித்தார். ராமன் தன் அருகில் நின்ற அனுமானை அழைத்தார். முனிவரே! என் சீதாவை காட்டில் துறந்த வேளையில், எனக்காக வானரவீரர்கள் நாற்திசைகளிலும் சென்று தேடினர். தெற்கே சென்ற இந்த அனுமான் என்னைக் காப்பாற்றும் வகையிலான நற்செய்தி கொண்டு வந்தான். இறந்து போன வீரர்களை எழுப்ப மருந்துமாமலையைக் கொண்டு வா என்றால், வடக்கேயிருந்து அதை எடுத்து வர இவன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தான். இது இவனால் எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டார். ராமா! மிகச்சரியானதொரு கேள்வி கேட்டாய். இந்த அனுமனின் சரித்திரம் அற்புதமானது. இவனது வரலாறு கேட்டாலே பாவங்கள் நசிந்து போகும். தன் சக்தியின் பெருமை இன்னதென அறியாதவன் இந்த ஆஞ்சநேயன். செருக்கற்றவன்; பிறர் நலம் விரும்புபவன்; கருணையும், சாந்தமும் இவனிடம் ஊறிப்போனவை. கருணை எங்கிருக்கிறதோ, அங்கே தான் வீரலட்சுமி குடியிருப்பாள். இவனது வீரம் அளவிட முடியாதது. சொல்கிறேன் கேள், என்றவர் அனுமானின் கதையை ஆரம்பித்தார். ராமா! காற்றுக்கு அதிபதியான வருணபகவான், அஞ்சனை என்ற இவனது அன்னை மீது ஆசை கொண்டான். அந்த அஞ்சனையின் வயிற்றில் இந்த அனுமன் பிறந்தான். இவன் பிறந்ததுமே, இவனுக்குரிய ஆற்றல் அதீதமாக இருந்தது கண்டு பெற்றவர்கள் ஆச்சரியமடைந்தனர், இந்த வீரனால் அரக்கர் குலம் அழியும் என தேவர்கள் ஆனந்தம் கொண்டனர்.
அவன் தன் இளம்பிராயத்தில், தன் தாயிடம், அம்மா! எனக்குரிய இனிய உணவு எது? என்று கேட்டான். மகனே! இந்த குளிர்ந்த சோலையில் எந்தக் கனியெல்லாம் சிவந்து போயிருக்கிறதோ, அதுவெல்லாம் உனக்குரியது தான் என்று சொல்லிவிட்டு இவனுக்காக பழம் பறிக்க வெளியே சென்று விட்டாள். அப்போது, வான்வெளியில் சூரியன் உதயமாக, அதை பழமெனக் கருதி இவன் மேலே பாய்ந்தான். வாயுவின் மகன் என்பதால், இவனுக்கு காற்றில் பறக்கும் சக்தி இயற்கையிலேயே வாய்த்தது. இப்படி சூரியனையே பழமாக நினைத்தவனுக்கு, இலங்கை ஒன்றும் பெரியகாரியமாக படவில்லை, என்றார் அகத்தியர். பின்னர் விபீஷணன், சுக்ரீவன், அனுமான், அங்கதன், சேது அணை கட்டிய நளன் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகளை வழங்கினார் ராமன். அனைவரும் ராமனைப் பிரிய மனமின்றி கண்ணீருடன் அவரவர் ஊர் திரும்பினர். அனுமான் ரொம்பவே கண்ணீர் வடித்து விட்டான். சுக்ரீவனின் நிலைமை கருதி, அவனுடேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட ராமன், அனுமானை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் சீதாதேவியுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். அவருக்கு திருமணம் நடந்த போது வயது 12. சீதாவுக்கு 6 வயது. 18 வயதில், 12 வயது சீதாவுடன் காட்டுக்குப் போய் விட்டார். 32 வயதில் திரும்பியிருக்கிறார். சீதாவுக்கு இப்போது 26 வயது. இவர்கள் தங்கள் இளமையை காட்டில் கழித்து விட்டனர். அரண்மனை சுகத்தை அனுபவிக்க இப்போது தான் நேரம் வாய்த்திருக்கிறது. இன்ப வானில் அந்த தம்பதிகள் சிறகடித்துப் பறந்தனர். ஆனால், விதி என்னும் விரோதி அந்த இன்பத்தை நீண்டநாள் நீடிக்க விடவில்லை.