செம்பை சங்கீத உற்ஸவ பொன்விழா பாலக்காடு அருகே துவக்கம்
பதிவு செய்த நாள்
18
ஆக 2025 11:08
பாலக்காடு; ‘‘காலமும் வரலாறும் இருக்கும் வரை, செம்பை வைத்தியநாத பாகவதரின் இனிமையான குரல் எதிரொலிக்கும் என்றும், அந்த இசையின் சமகால பொருத்தத்தைப் பரப்புவதே இந்தப் பொன் விழா கொண்டாட்டத்தின் நோக்கம்,’’ என, கேரள தேவஸ்தான அமைச்சர் வாசவன் தெரிவித்தார். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில், ஆண்டு தோறும், ஏகாதசி உற் ஸவம் நடக்கிறது. இதையொட்டி, செம்பை சங்கீத உற்ஸவத்தின் பொன்வி ழா கொண்டாட்ட துவக்க விழா, நேற்று பாலக்காடு மாவட்டம், செம்பை கிராமத்தில் நடந்தது. விழாவை, தேவஸ்தான அமைச்சர் வாசவன் துவக்கி வைத்து பேசியதாவது: காலமும் வரலாறும் இருக்கும் வரை, செம்பை வைத்தியநாத பாகவதரின் இனிமையான குரல் எதிரொலிக்கும். அந்த இசையின் சமகால பொருத்தத்தைப் பரப்புவதே, இந்தப் பொன் விழா கொண்டாட்டத்தின் நோக்கமாகும். பாகவதர், ஜாதி அல்லது நிற வேறுபாடு இல்லாமல் செயல்பட்டு, ஒரு முன்மாதிரியாக அமைந்து, சமூக முன்னேற்றத்திற்கான ஒரு வழிமுறையாக, கலையின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார். இசைக்கான ஒரு பண்பாட்டை உருவாக்க பாடுபட்ட பாகவதர், கேரளத்தின் இசைப் பண்பாட்டை வடிவமைத்தார். தனக்கு பின்னால் பல சீடர்களை வளர்க்கவும் அவர் கடுமையாக உழைத்தார். இவ்வாறு, அமைச்சர் பேசினார். கோயில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுமோத் பங்கேற்றார். விழாவில், பிரபல கவிஞரும், எழுத்தாளருமான ஆலங்கோடு லீலா கிருஷ்ணன், செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவுரையாற்றினார். குருவாயூர் கோயில் நிர்வாகி அருண்குமார், கோயில் நிர்வாக உறுப்பினர்களான மனோஜ், மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, விஸ்வநாதன், தினேசன், செம்பை சுரேஷ், சுப்பராமன், கீழத்தூர் முருகன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பொன்விழாவின் ‘லோகோ’வை அமைச்சர் வாசவன், குருவாயூர் கோயில் நிர்வாகி அருண்குமாருக்கு வழங்கி வெளியிட்டார். பொன்விழா நினைவு தபால் தலை மற்றும் தபால் கவர் ஆகியவை வெளியிடல் நிகழ்வும் நடந்தது. ‘செம்பை சங்கீதமும் வாழ்க்கையும்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் பொன்விழா பதிப்பை எம்.எல்.ஏ., சுமோத், செம்பை சுரேஷிற்கு வழங்கினார். தொடர்ந்து பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்., கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி நடந்தது. அவருக்கு திருவனந்தபுரம் சம்பத், ஹரி நாராயணன், திருவனந்தபுரம் ராஜேஷ் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். பொன்விழாவின் தொடர் நிகழ்ச்சிகள் மாநிலத்தில் பல மையங்களில் நடத்திய பின், குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் நிறைவு பெறுகின்றது.
|