புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கண்டெடுத்து உள்ளனர்.
இதுகுறித்து, அதன் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலுக்கு வடக்கே 7 கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளாளவயல் என்ற ஊரில், கருவேலங்காட்டை ஆய்வு செய்த போது, 1,000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் இருந்ததை கண்டறிந்தோம். இந்த சிற்பம், 9 – 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்ப அடையாளங்களுடன், 124 செ.மீ., உயரம்; 72 செ.மீ., அகலம் உள்ளது. வலது, இடது, பின் பக்கங்களில், ஒவ்வொன்றாக மூன்று சிம்ம யாளி சுமந்த, இணையரி ஆசனத்தில், மகாவீரர் அமர்ந்துள்ளார். அவரின் இரு புறமும், இயக்கண் மாதங்கன், இயக்கி சித்தாயிகா, சன்ன வீரம் பூண்டு கவரி வீசுகின்றனர். முக்காலத்தையும் உணர்த்தும், குடை மற்றும் சுருள் சுருளாக மலர்களுடைய, அசோக மரத்தின் கீழ், மகாவீரர் சாந்தமான முகத்துடனும், ஞான வடிவுடனும், தியான நிலையில் அமர்ந்துள்ளார். அவரது தலைக்கு மேல், ஒளி வட்டத்துடன் பிரபை வளையம் உள்ளது. ஆவுடையார் கோயிலில், மாணிக்கவாசகர் வரலாறு, சமணர்கள் கழுவேற்றப்பட்ட ஓவியங்கள் உள்ளன. தற்போது, கோவிலுக்கு அருகிலேயே மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது, அதற்கு வலு சேர்க்கிறது. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில், சிறுகானுார், வெள்ளாளக்கோட்டையூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில், சமண சின்னங்களும், சிற்பங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். – நமது நிருபர் –