துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நள்ளிரவு வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.
தொடர் விடுமுறை, ஆடி கிருத்திகை, கிருஷ்ணஜெயந்தி என ஒரு சேர வந்ததால் நேற்று முன்தினம் திருச்செந்துார் திருவிழா கோலம் பூண்டது. வழக்கமாக திருச்செந்துார் முருகன் கோவிலில், இரவு 8:00 மணிக்கு கோவிலில் நடை சாத்தப்படுவது உண்டு. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், நேற்று முன்தினம் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை இலவச வரிசையாக மாற்றப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நள்ளிரவு, 1:30 மணி வரை முருகனை தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான நேற்றும், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை ரத்து செய்யப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘திருச்செந்துார் வந்துவிட்டு முருகனை தரிசிக்க முடிவில்லை என, பக்தர்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்புவதாக புகார் எழுந்தது. அதற்காக பக்தர்கள் அனைவரும் முழுமையாக தரிசனம் செய்துவிட்டு செல்ல, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஒரு லட்சத்து 20,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர்’ என்றனர். இதற்கிடையே, விழா நேரங்களில் கூட்டத்தை கண்காணிக்கவும், அசம்பாவிதம் செய்யும் நபர்களை கண்டறியவும் ட்ரோன் கண்காணிப்பு குழு துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் குழு செயல்பாட்டை துவக்கி வைத்தார்.