ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஆக.,25ல் சித்தி, புத்தியுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூரில் விநாயகர் கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபடும் வகையில் கருவறை அமைந்துள்ளதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சதுர்த்தி விழாவின் தொடக்கமாக இன்று காலை கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மூலவர், கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி ஊர்வலம் நடக்கிறது. விழாவின் எட்டாம் நாளான ஆக.,25 ல், விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடக்கிறது. தமிழகத்திலே இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவதால் இந்நிகழ்வு சிறப்பு பெற்றுள்ளது. ஆக.,26ல் தேரோட்டம் நடக்கிறது, ஆக.,27 ல் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.