Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

லவகுசா பகுதி-5 லவகுசா பகுதி-5 லவகுசா பகுதி-7 லவகுசா பகுதி-7
முதல் பக்கம் » லவகுசா
லவகுசா பகுதி-6
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 பிப்
2011
17:44

சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. திடீரென எழுவாள். தன் இரு கைகளாலும் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிப்பாள். ஐயோ! இதென்ன கொடுமை என்றபடியே மயங்கிச் சாய்வாள். ஒரு கட்டத்தில், அவள் அசைவற்றுக் கிடந்தாள். இந்த துயரத்தை விண்ணுலகில் இருந்து கண்ட தேவர்கள், அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டி கண் கலங்கினார்கள். அண்ணியார் இப்படி துவண்டு விழுந்தது கண்டு, லட்சுமணன் அலறினான். அவனும் கீழே புரண்டு புலம்பினான். சிறிதுநேரத்தில் சீதாதேவி கண் விழித்தாள். அம்மா, அப்பா, என் உயிர் போன்ற சிநேகிதிகளே! கேட்டீர்களா கதையை! தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன? என் மாமியார்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்கள் கணமும் உயிர் வாழ மாட்டார்களே! என வருந்தி அழுதாள். மாமியார்- மருமகள் உறவுக்கு உதாரணம் நம் சீதாதேவி தான். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. நம்மூர் பெண்கள் ஒரு மாமியாரை வைத்துக் கொண்டே, சமாளிக்க கஷ்டப்படுவார்கள். ஆனால், நம் சீதாதேவி மூன்று மாமியார்களை சமாளித்தவள். மூவரையும், அனுசரித்து நற்பெயர் பெற்றவள். மாமியார் இல்லாவிட்டால் மருமகள் சந்தோஷப்படுவாள். ஆனால், மருமகள் இல்லாவிட்டால் மாமியார்கள் உயிர் துறந்து விடுவார் என்றால், அது நம் சீதாதேவி இல்லத்தில் மட்டுமே நடக்கிற ஒரு விஷயம். இந்த நிகழ்வின் மூலம், மாமியார்- மருமகள்கள் வீட்டில் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ வேண்டுமென்பதை பெண்களுக்கு சீதாதேவி உணர்த்துகிறாள். இப்படி தவித்த அண்ணியாருக்கு லட்சுமணன் ஆறுதல் சொன்னான்.

தாயே! நீங்கள் முற்பிறவியில் செய்த நல்வினையால் என் சகோதரனை கணவனாக அடைந்தீர்கள். இப்பிறப்பில் என்ன தீவினை செய்தீர்களோ அவரைப் பிரிந்து விட்டீர்கள். நல்வினை, தீவினை இரண்டுமே ஏதோ ஒரு பலனைத் தருகிறது. நல்வினையால் நல்லதும், தீவினையால் தீயதும் என்று நடக்காமல் இருக்கிறதோ, அந்நாளே மனித வாழ்வில் பொன்னாள். அப்படி ஏதும் நடக்காத ஒரு நிலையை மனிதகுலம் அடைய வேண்டுமானால், அதற்கு தவமே கண்கண்ட மருந்து. ஆம்...நீங்கள் இறை வழிபாட்டில் ஆழ்ந்து விடுங்கள். தவக்கோலம் பூணுங்கள். பெருந்தவ முனிவர்கள் பலர் இந்தக் காட்டில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும். உன் கணவனை மனதில் நினைத்து உயர்ந்த தவமிருக்க வேண்டும், என்றான். சீதை அவனிடம், லட்சுமணா! ஒரு பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசாதே. இதற்கு முன் உன் அண்ணனுடன் நான் காட்டில் இருந்த போது, எத்தனையோ முனிவர்களைத் தரிசித்து ஆசி பெற்றோம். இப்போது, அவர்களை நான் தனித்துப் பார்த்தால், ஏனடி உன் கணவன் உன்னைப் பிரிந்தான்? என்று கேட்டால், நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வேனேடா? சரி போகட்டும். நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல் என்று கோபத்தோடு சொன்னாள். ஒரு பெண் பொறுமையாக இருக்கலாம். பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவளது கற்பின் மீது களங்கம் சுமத்தப்படுகிறது என்றால் அவள் கொதித்து எழுந்து விட வேண்டும் என்பதற்கு சான்றாக, பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் புத்திரி சீதாதேவி இவ்விடத்தில் பெண்ணினத்துக்கு தகுந்த புத்திமதி சொல்கிறாள்.

அத்துடன் அவள் நிறுத்தவில்லை. லட்சுமணன் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு வார்த்தையை உதிர்த்தாள். ராமாயணத்தின் உத்தர காண்டத்திலேயே உணர்ச்சி மிக்க கட்டம் இதுதான். ஏ லட்சுமணா! நான் எப்படிப்பட்டவள் என உனக்குத் தெரியும். நான் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. எங்கே என்னைப் பார். கர்ப்பவதியான என் மேனி வருந்தாத வகையில் அந்தப் பார்வை இருக்கட்டும், என்றாள் ஆவேசமாக. அண்ணியாரின் திருவடியை மட்டுமே லட்சுமணன் அறிவான். அவள் முகத்தை அவன் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு மரியாதை. உலகில் எந்த ஒரு அண்ணிக்கும், எந்த ஒரு கொழுந்தனும் கொடுக்காத ஒரு பாக்கியம். அப்படிப்பட்ட சௌபாக்கியவதியான சீதாதேவி, தன் கொழுந்தனிடம் இப்படி கேட்கிறாள். ஏன் கேட்டாள் தெரியுமா? இந்த களங்கற்ற முகமா இப்படி ஒரு தவறைச் செய்திருக்கும் என்று அவனாவது தெரிந்து கொள்ளட்டும். அதற்காக வருந்தட்டும் என்று தான். இதைக் கேட்டானோ இல்லையோ, லட்சுமணன் கண்ணீர் வடித்தான். தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு புலம்பினான். தாயே! இப்படி ஒரு கொடிய சொல்லை உங்கள் வாயால் கேட்க, நான் என்ன பாவம் செய்தேனோ? இதுவரை இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்கள் வாயில் இருந்து வந்ததும் இல்லையே! இன்று ஏன் வந்தன?  என் சகோதரன் உங்கள் கைத்தலம் பற்றிய நாளில் இருந்து இன்று வரை உன் முகம் பார்த்தறியாதவன் நான். உங்கள் திருவடிகள் மட்டுமே எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட எனக்கு உங்கள் திருமேனியைப் பார்க்கும் துணிச்சல் எப்படி வரும்? யோசித்து தான் பேசினீர்களா? என்றான் கண்ணீர் ஆறாய்ப் பெருக. பின்பு சிரமப்பட்டு எழுந்தான். தலை குனிந்தபடியே அண்ணியார் அருகில் சென்றான். அண்ணியை அவன் பார்த்தானா?

 
மேலும் லவகுசா »
temple

லவகுசா பகுதி-1 பிப்ரவரி 01,2011

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-2 பிப்ரவரி 01,2011

அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-3 பிப்ரவரி 01,2011

சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-4 பிப்ரவரி 01,2011

உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் ... மேலும்
 
temple

லவகுசா பகுதி-5 பிப்ரவரி 01,2011

அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.