பதிவு செய்த நாள்
04
மார்
2013
04:03
சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபிஷேகங்களும், நான்கு கால பூஜையும்தான். யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும், மனை சிறக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம். சிவராத்திரி பலவகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மாத சிவராத்திரி அல்லது நித்திய சிவ ராத்திரி, பட்சராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மஹா சிவ ராத்திரி.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை சதுர்த்தசி, மற்றும் தேய்பிறை சதுர்த்தசி தினங்கள் மாத சிவராத்திரிகளாகும், அப்படிப் பார்க்கும்போது ஒரு வருடத்திற்கு இருபத்து நான்கு மாத சிவ ராத்திரிகள் உள்ளன.
பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து பதின்மூன்று நாட்கள், மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒரு பொழுது மட்டுமே உணவு உண்டு, சிவனை பூஜித்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருந்து மறுநாள் விரதத்தை முடிப்பது பட்ச நாளான சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி: 24 மணி நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒரு நாளை நம் முன்னோர்கள் 60 நாழிகை யாகப் பிரித்தார்கள். சூரிய உதயம் முதல், இரவு வரை அமாவாசைத் திதி இருந்தால் அன்று யோக சிவராத்திரி. மேலும் திங்கட்கிழமை இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால் அதுவும் யோக சிவராத்திரி என்று சொல்லப்படும். அதே போல திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில் அமாவாசைத் திதி அரை நாழிகைப் பொழுதேனும் இருந்தால் அதுவும் யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படுகிறது. சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்) என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால் அது மூன்று கோடி மற்ற சிவராத்திரி விரதம் இருந்த பலனுக்கு சமம் என்பது ஐதிகம்.
மஹா சிவ ராத்திரி : மாசிமாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது. யுகம் யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக, ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து, அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி அது!
ராத்ர என்ற சொல்லுக்கு, யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள். எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது, ராத்திரி எனும் பெயர் ஏற்றது. ஒருமுறை உலகமே இருண்டு கிடந்த மகா சங்கார (சம்ஹார) காலமாகிய ஊழிக் காலத்தில், பஞ்சபூதங்களும் செயலற்று மாயையில் ஒடுங்கும், எங்கும் இருள் சூழ, உலகம் செயலற்று எங்கும் அமைதி நிலவும். இந்த நிலையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார். அவரை அடுத்திருக்கும் சக்தியான தேவி, உலக உயிர்களை மீண்டெழச் செய்திட இரவு முழுதும் விழித்திருந்து மறுநாள் பொழுது விடிந்து சிவபூஜை செய்து உலகம் மீண்டும் தழைக்கும் என்ற வரத்தைப் பெற்றாள். அதோடு, தான் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அந்த இரவை சிவராத்திரியாக அழைத்து முறைப்படி விரதமிருந்து இரவில் நான்கு கால சிவபூஜை செய்வோர்க்கு மங்களங்கள் யாவும் தந்து நிறைவில் மேலான பதமும் தரவேண்டும் எனவும் வேண்டினாள். ஈசன் அவ்வாறே வரம் அளித்தார். ராத்திரி என்ற சொல்லுக்கு அளித்தல் என்ற பொருளும் உண்டு. உலக உயிர்களும் மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். எனவே, சிவராத்திரி என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. ராத்ர என்பதற்குப் பூஜித்தல் என்பதும் ஒரு பொருள். ஆக, சிவனாரை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி என்றும் கூறுவர். உணவும், உறக்கமும் உயிர்க்குப் பகை. இந்த இடத்தில் உணவு என்பது வினைகள். அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்க நேரும். உறக்கம் என்பது மாயைக்குட்பட்டு மயங்குதலாகும். ஆக... உணவு நீக்கம் என்பது வினைகளை அகற்றுதலும், விழித்திருத்தல் என்பது ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதும் ஆகும். இந்த தாத்பரியத்தின்படி, மகா சிவராத்திரி தினத்தில் ஊண், உறக்கம் ஒழிப்பது என்பது உண்மையில் வினைகளை வென்று ஆன்மாவானது தன்னை உணர்ந்து கொள்வதற்காகவே என சிவராத்திரி விரதம் குறித்து அற்புதமாக விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள்.
ஆதியும் அந்தமும் இல்லா பராபரவஸ்து ஜோதி ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்ய ரூபத்தை அடைந்த புண்ணிய தினம்தான் சிவராத்திரி.சிந்தை மகிழும் சிவராத்திரியில் லிங்க தரிசனம் செய்வதும், வழிபடுவதும் விசேஷம். லிங்கத்தில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதேபோன்று இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியன அதிலேயே அடங்கியுள்ளன என்கின்றன புராணங்கள். சிவாலயங்களில் விளங்கும் பிரதிஷ்டா லிங்கங்கள் பிரம்மன், சிவா மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும் வகையிலேயே அமைகின்றன என ஆன்றோர் விளக்குவர். திருக்கோயில்களில் அருளும் சுயம்பு லிங்கங்களுக்கு அமையும் பீடம் பிரம்ம பாகமாகவும், நீர் விழும் கோமுகப் பகுதி மகாவிஷ்ணுவாகவும் போற்றப்படுகின்றன என்பர். ஆக, சிவலிங்க தரிசனத்தால் மும்மூர்த்தியரின் அருளையும் பெறலாம்.
சிவராத்திரியின் மிக முக்கியமான அம்சம் இரவில் நடக்கும் நான்கு கால பூஜைகள்தான். சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் விதவிதமான பொருட்களைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் அபிஷேகம் செய்வார்கள். அதே போல நிவேதனமும் வேறுபடும்.
முதல் காலம்: இந்தக் காலத்தில் சிவன் சோமஸ்கந்த ரூபத்தில் வணங்கப்படுகிறார் அப்போது அவருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் நடக்கும். அது முடிந்ததும் களபம் சாத்தி (சந்தனப் பூச்சு) செய்து சிவப்புப் பட்டு வஸ்திரம் சார்த்துவார்கள், பச்சைப்பருப்பு கலந்த வெண் பொங்கல் நிவேதனம் செய்வார்கள். பழங்களில் வில்வம் பழம் முதல் காலத்தில் நிவேதனம் செய்யப்படுகிறது. ரிக் வேத பாராயணம் நடைபெறும் விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவர். அதோடு மாணிக்க வாசகரின் சிவபுராணமும் ஓதப்படும். ஸ்வாமிக்கு திருநீற்றுப் பச்சிலை, தாமரை, அரளி போன்ற மலர்களை சமர்ப்பிப்பர்.
இரண்டாம் காலம்: இரண்டாம் காலம் மவுன குருவான தட்சிணா மூர்த்தி ரூபம். பல பழங்களைப் பாலோடு சேர்த்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வர். அப்போது பச்சைக் கற்பூரக் காப்பு, மஞ்சள் பருத்தி ஆடை சாற்றப்படும். பாயசமும், லட்டும் நிவேதனமாகப் படைக்கப்படும். பலாப்பழம் இந்தக் காலத்துக்கு உரியது. யஜுர் வேத பாராயணம் நடைபெறும். அதோடு தாமரையும் வில்வமும் சமர்ப்பிக்கப்படும். இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றப்படும். ருத்ர தாண்டகம் என்ற திருத்தாண்டகம் ஓதப்படும்.
மூன்றாம் காலம்: இந்தக் காலத்தில் சிவன் லிங்கோத்வ ரூபியாக ஆராதிக்கப்படுகிறார். இறைவனுக்குத் தேனால் அபிஷேகம் செய்து, அதில் காப்பு சாத்துவார்கள். வெள்ளைக் கம்பளி ஆடையாக சாத்தப்படும். நிவேதனமாக சத்து மாவும், பாயசமும் படைக்கப்படும், மாதுளம் பழமும் இந்த பூஜைக்கு உரியது. சாம வேதப் பிரியனான சிவனுக்கு சாம வேதத்தைப் பாராயணம் செய்வது இந்தக் காலத்தில்தான். நெய்விட்டு கும்ப தீபம் ஏற்றப்படும். அறுகம் புல்லும் தாழம் பூவும் சமர்ப்பிக்கப்படும். தாழம்பூ இந்த நாளில் மூன்றாம் காலத்தில் மட்டுமே இறைவனுக்கு சாத்தப்படும். வேறு எந்த சமயத்திலும் எந்த நாளிலும் அந்தப்பூ சிவ பூஜையில் பயன் படுத்தப்படுவதே இல்லை. லிங்க புராண திருக்குறுந்தொகை ஓதப்படும்.
மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவ ரூபியாக சிவன் வணங்கப்படுவதால், லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதே நேரம் கருவறைக்குப் பின்னால் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அவருக்கு நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவிப்பர். ஸ்ரீ ருத்ரம், சமகம் போன்ற துதிளை பாராயணம் செய்வர், சிவ சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து பொரி உருண்டை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்யப்படும்.
நான்காம் காலம்: நான்காம் காலம் சிவஸ்வரூப மாகவே லிங்கம் வழிபடப்படுகிறது. அப்போது கரும்புச்சாறு அபிஷேகம் செய்து கஸ்தூரிக் காப்பு சாத்தப் படுகிறது. பச்சைவண்ண மலர்களே ஆடையாக அணிவிக்கப்படும். கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்த உணவினை நிவேதனம் செய்வர். அதர்வண வேத பாராயணம் நடைபெறும். நல்லெண்ணெய் விட்டு மகா மேரு தீபம் ஏற்றப்படும், எல்லா விதமான மலர்களும் கலந்து சமர்ப்பக்கப்படுகின்றன. அப்பர் அருளிய திருத்தாண்டகம் ஓதுவர். விரதம் இருப்பவர்கள் இந்த நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு பூஜைகளை கண்ணாரக் கண்டு உமாமகேசனை உளமார நினைத்து வழிபட வேண்டும். இந்த நான்கு கால பூஜை முடிந்தவுடன் சற்று நேரத்தில் உஷத் காலம் (அதிகாலை நேரம்) வந்துவிடும். அப்போது மறு நாளைக்குரிய உஷத் கால பூஜைகள் நியமப்படி நடக்கும். அதோடு உச்சிக்கால பூஜையையும் சேர்த்து முடித்து விடுவார்கள். பக்தர்கள் வீடு வந்து சிறிதுநேரம் அமர்ந்த பின்னர் நீராடி பஞ்சாட்சரத்தை ஜபித்து திருநீறு அணிந்து யாராவது ஒருவறியவருக்கு உணவிட்டு தானும் உண்ண வேண்டும். அதுவே விரதத்தை முடிக்கும் முறை, அவ்வாறு செய்தால் எல்லா ஞானமும் சித்தியும் கை வரப்பெறுவதோடு அவர்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்கள் சிவராத்திரி விரதமிருந்து பூஜை செய்தால் மிகச் சிறந்த கணவன் வாய்க்கப் பெறுவார்கள். மணமான பெண்கள் விரதமிருந்தால் கணவனுக்கு நீண்ட நோய் நொடியற்ற வாழ்நாளும் புத்திரர்களுக்கு நல்ல படிப்பும் சேர்க்கையும் கிடைக்கும். மனை சிறக்கும் மங்களங்கள் பெருகும்.