பதிவு செய்த நாள்
04
மார்
2013
05:03
சிவராத்திரியன்று புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை : ஒரு மகா சிவராத்திரி நாளில் லிங்கோற்பவ காலத்தில் இறைவன் இத்தலத்தில் ஜோதி உருவாகக் காட்சி கொடுத்தார் என்கிறது சிவபுராணம். திருவண்ணாமலை தலத்தில் சிவராத்திரி தரிசனம் செய்வது வாழ்வில் தடைகளைப் போக்கி வெளிச்சமாக்கும்.
திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருத்தலம். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜை செய்த இடம் இது. எனவே இத்தலத்தை உருத்திரகோடி என்பார்கள். சிவராத்திரியன்று இத்தலத்தில் வழிபடுவது செழிப்பான வாழ்வளிக்கும்.
காஞ்சிபுரம் : தன் பதியான பசுபதியின் கண்களை பார்வதி விளையாட்டாகப் பொத்த உலகங்களும் இருண்டன. அதனால் சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பம் தாளாமல் உலக உயிர்கள் வருந்தின. அந்த சங்கடம் நீங்கிட ருத்திரர்கள் இங்கு பூஜை செய்தனர். காஞ்சியில் உள்ள கோயில்களான ஆனந்தருத்ரேசம், மகாருத்ரேசம், ருத்திரகோடீசம் ஆகியவை ருத்திரர்கள் பூஜித்த தலங்கள். காஞ்சியில் ஒருபகுதி உருத்திர சோலை எனப்பட்டது. உலகத்தாருக்குத் துன்பம் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுபட பார்வதி, காமாட்சியாக இருந்து சிவனை பூஜை செய்த இடமும் காஞ்சிபுரமே. எனவே காஞ்சியில் சிவராத்திரி தரிசனம் செய்வது, அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கும்.
திருவைகாவூர் : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தலம். இத்தல இறைவன் வில்வவனேஸ்வரரையும் அம்பிகை சர்வஜனரட்சகியையும் ஒரு சிவராத்திரி நாளில் தவநிதி என்ற முனிவர் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேடனால் துரத்தப்பட்ட ஒரு மான் கோயிலுக்குள் நுழைய, முனிவர் அபயமளித்தார். வேடன் முனிவரை தாக்க முற்பட, சிவபெருமான் புலி வடிவமெடுத்து வேடனைத் துரத்தவே வேடன் பயந்து அருகில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நிற்க வேடன் தூங்கி விடுவோமோ என்ற பயத்தில் வில்வ இலையை பறித்துக் கீழே போட்டான். அவை கீழே புலியாக நின்ற சிவபெருமான் மேல் விழ, அதனையே பூசனையாக ஏற்று வேடனுக்குக் காட்சியளித்து மோட்சம் அளித்தார் இறைவன். இத்தல வழிபாடு மோட்ச சித்தியளிக்கும். பிறவிப்பிணி தீர்க்கும்.
திருக்கடவூர் : தன் பக்தன் மார்க்கண்டேயனை பிடிக்க வந்த காலனை சிவன் காலால் உதைத்த சம்பவம் நடந்தது சிவராத்திரி நாள் ஒன்றில் என்பர். காலசம்ஹாரரை சிவராத்திரி நாளில் வணங்குவது, அகால மரணபயம் போக்கும்.
ஓமாம்புலியூர் : சிவராத்திரி நாள் ஒன்றில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைச் சொன்ன இடம் ஓமாம்புலியூர் இந்த ஊரை பிரணவ வியாக்ரபுரம் என்கிறார்கள். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் இது. இங்கே சிவராத்திரி வழிபாடு செய்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும் என்பது ஐதிகம்.
தேவிகாபுரம் : ஒரு காலத்தில் இப்பகுதி பெரிய காடாக இருந்தது. ஒரு சமயம் சிவராத்திரி நாளில், வேடன் ஒருவன் இப்பகுதியில் நிலத்தைத் தோண்டியபோது, ஒரு லிங்கம் வெளிப்பட்டது. கடப்பாரை பட்டதால் லிங்கத்திலிருந்து ரத்தம் வழிந்தது. அதிர்ச்சியடைந்த வேடன், காயம்பட்ட இடத்தில் மூலிகை வைத்துக் கட்டினான். பிறகு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்தால் காய்ச்சல் வந்து விடுமோ என்று வெந்நீரால் அபிஷேகம் செய்தான். அதை தொடர்ந்து இன்றும் இத்தலத்தில் இவருக்கு வெந்நீர் அபிஷேகமே செய்யப்படுகிறது. இந்த வழியே போருக்குச் சென்ற மன்னன் போரில் வெற்றி அடைந்தால் அந்த லிங்கத்திற்கு மலையின் மீது கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி பெற்றதும் ஆலயம் அமைத்தான். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நேரத்தில் சுயம்பு லிங்கம் காணாமல் போனதால், காசியிலிருந்து லிங்கம் கொண்டு வரச் செய்தான். அப்போது, காணாமல் போன லிங்கம் கிடைத்துவிடவே, அதற்குக் கனககிரீஸ்வரர் என்று பெயர் சூட்டி, ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்தான். இக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி சாலையில் மலைக்குன்றின் மேல் உள்ளது. இங்கே சிவராத்திரி பூஜை செய்வது வாழ்வில் வெற்றிக்கு வழிசெய்யும்.
கோகர்ணம் : ராவணனுக்கு ஈசனாலேயே வழங்கப்பட்ட பிராணலிங்கம் உள்ள தலம். பிள்ளையார், ராவணனுடன் நடத்திய திருவிளையாடலால் இறைவன் இங்கேயே அமைந்தார். சுவாமி மகாபலேஸ்வரர். அம்பிகை தாம்ரகவுரி. மாசி மாத சிவராத்திரி நாள் ஒன்றில் பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டதையொட்டி இங்கு பிரம்மோத்சவமும் சிவராத்திரி அன்று இரவு தேரோட்டமும் நடக்கும். கர்நாடக மாநிலம் ஹுப்ளிக்கு அருகில் உள்ள இங்கு சிவராத்திரி வழிபாடு செய்வது முன்வினை போக்கும்.
ஸ்ரீசைலம் : சிலாதமுனிவரின் மகனான நந்தி சிவவழிபாடு செய்து சிவனைத் தாங்கும் வரம் பெற்ற தலம். நந்தி தேவரே இங்கு மலை உருவில் இருக்கிறார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் அழைப்பர். ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றான இங்குதான் ஆதிசங்கரமகான் சிவானந்தலஹரி ஸ்லோகத்தினை இயற்றினார். அச்சம்பவம் சிவராத்திரி நாள் ஒன்றில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர். இத்தலத்தில் சிவராத்திரியன்று சிவனை வழிபடுவது ஏராளமான புண்ணியப் பலன்களை தரக்கூடியது.
காளஹஸ்தி : இக்கோயிலில் ஒவ்வொரு பட்சத்தில் வரும் சதுர்த்தசி நாளும் நித்திய சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. கண்ணப்ப நாயனார் சிவராத்திரி நாள் ஒன்றில்தான் தன் கண்களை சிவபெருமானுக்குக் கொடுத்தார். சிவராத்திரி நாட்களில் இங்கு தேரோட்டம், ரிஷப வாகன சேவை நடக்கிறது. சிவராத்திரி தரிசனத்தை இத்தலத்தில் மேற்கொள்வது இறையருளால் வாழ்வில் இன்றியமையாத யாவும் கிடைக்கச் செய்யும்.
நாகராஜனான வாசுகியும் மற்ற நாகங்களும் சிவராத்திரி இரவில் நான்கு சிவாலயங்களை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திரும்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் நாகராஜன் வழிபாடு செய்தான் என்பது தொன்மையான தகவல்.