Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர விரத முறை! பங்குனி உத்திரத்தில் காவடி எடுப்பது ஏன்? பங்குனி உத்திரத்தில் காவடி எடுப்பது ...
முதல் பக்கம் » பங்குனி உத்திரம்!
பங்குனி உத்திர சிறப்புகள்..!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
01:03

பால்போலவே வான்மீதிலே...: சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.

சம்பந்தர் பாட்டில் உத்திர விழா:  சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். இதையறிந்த சம்பந்தர், பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார். பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்! என்ற பொருளில் பாடல் பாடினார். சிவனருளால் அவள் உயிர் பெற்றாள். பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய் என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.

சுந்தர மூர்த்தி நாயனாரின் வாழ்வில் பங்குனி உத்திரம்: சுந்தர மூர்த்தி நாயனாரின் மனைவியான பரவை நாச்சியார், பங்குனி உத்தர நாளன்று கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு, அவளால் முடிந்த அளவு வறியவர்களுக்கு தானம் இடுவாள். இது சுந்தரருக்குத் தெரிய வந்தது. அவர் மனைவியுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் தானம் செய்யத் திட்டமிட்டார். அதற்கு நிறையப் பொருள் வேண்டுமே? என்ன செய்ய என்று யோசித்தார். அடியார்களுக்கு அப்பன் அன்றி யார் துணை? அவனையே கேட்பது என்று முடிவு செய்துகொண்டார். திருப்புகலூர் என்ற இடத்தில் இருக்கும் ஈஸ்வரனை வழிபட்டு பொன் கேட்டார். சுந்தரரோடு விளையாட திருவுளம் கொண்ட விடம் உண்ட கண்டன், அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை. கவலை பிடித்துக் கொண்டது சுந்தரர்க்கு, அதோடு நடந்து வந்த களைப்பும் மிகவே அங்கேயே கோபுரத்தடியிலேயே ஒரு சுட்ட செங்கல்லை தலையணையாகக் கொண்டு நன்கு உறங்கி விட்டார். விடிந்தபோது பார்த்தால் அங்கிருந்த செங்கற்கள் எல்லாம் தங்கக் கற்களாக மாறியிருந்தன, திருப்புகலூர் இறைவன் கருணையைப் புகழ்ந்து தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் என்ற பதிகத்தைப் பாடினார். இந்த அற்புதம் நிகழ்ந்தது பங்குனி உத்தர திருநாளில்தான்.

பங்குனியில் நந்தியின் திருமணம்: சிலாத முனிவர் திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறப்பர் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர், தம் உயிரான ஐயாறப்பரைப் பூசித்து கடும் தவம் செய்தார். தனக்கு அறிவார்ந்த மகன் வேண்டுமென்று பிரார்த்தித்தார். சிலாத முனிவரே! என்னைப் போன்றே உனக்கொரு மகன் வேண்டும் என்றால் நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் செய்ய யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு மட்டுமே. அவனை எடுத்துக்கொள்! என்று அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார். சிவனருளை எண்ணி சிலாதமுனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். இறைவன் அருளிய வண்ணம் யாக முடிவில் பூமியை உழும்போது ஒரு பெட்டகம் அகப்பட்டது. முனிவர் அதைத் திறந்து பார்த்தார். அதில் நான்கு தோள்களும் மூன்று கண்களும் பிறையணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டு வணங்கினார். ஐயாறப்பர் மீண்டும் அசரீரியாய், முனிவரே! பெட்டியை மூடித்திற என்று கட்டளையிட்டருளினார். பெட்டகத்திலிருந்த அம்மூர்த்தி முன்னைய வடிவம் நீங்கி பிரகாசத்தோடு அழகிய குழந்தை வடிவுடன் திகழ்ந்தது. அக்குழந்தையைக் கண்டு சிலாத முனிவரும் அவரது மனைவி சித்ராவதியாரும் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைந்தனர்.

பெற்றோர் அக்குழந்தைக்கு செபேசுவரர் என்று நாமகரணம் செய்து வளர்த்து வந்தார்கள். செபேசுவரர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்கள் உட்பட சகல கலைகளிலும் வல்லவரானார். அழகிலும் அறிவிலும் சிறந்த இம்மைந்தனை இன்னும் இரண்டு வருடத்தில் இழக்க நேருமே என்று ஏங்கி வருந்திய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஐயாறப்பர் ஆலயத்தை அடைந்தார் செபேசுவரர். இறைவனைத் தொழுது வழிபட்டார். தனக்கு நீண்ட ஆயுளைத் தந்து பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தருளும்படி வேண்டினார். பின்னர் அங்கிருந்த அயனரி தீர்த்தத்திலே நீராடிய பிறகு, இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்தார். செபேசுவரரின் அருமைத் திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செபேசுவரரின் உறுதியான தவத்தையும், வைராக்கியத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்த இறைவன் ஐயாறப்பர் அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் வேண்டிய படியே நிலையான நீண்ட ஆயுளைத் தந்தருளினார். அதோடு, நிலைத்த பதினாறு பேறுகளையும் தந்தருள வேண்டும் என்று வரமாக அருளினார். மேலும், செபேசுவரரது புண்பட்ட உடலை நலமுறச் செய்தல் வேண்டுமெனத் திருவுளங் கொண்டு கங்கை நீர், மேகநீர், பிரமன் கமண்டலநீர், அம்மையின் முலைப்பால், இடபநந்தியின் வாய்நுரைநீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார், இறைவன். அதனால் செபேசுவரர் உடல் ஊறு நீங்கிச் சூரியன் போல் பிரகாசித்தார். சிலாத முனிவர் தம் மகனுக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார். அதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். வசிஷ்ட முனிவரின் பவுத்திரியும், வியாக்ரபாதமுனிவருடைய புத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாச அம்மையாரை தமது புதல்வன் செபேசுவரருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினார்.

இறைவன் ஐயாறப்பர்; இறைவி அறம் வளர்த்த நாயகி ஆகியோரின் முன்னிலையில், திருமழபாடி வஜ்ர தம்பேசுவரர் கோயிலில் பவித்திரமான பங்குனித் திங்களில் புனர்வசு நட்சத்திரதினத்தில் செபேசுவரர்க்கும் சுயம்பிரகாச அம்மையாருக்கும் இனிதே திருமண விழா நடந்தேறியது. பின் செபேசுவரர் ஐயாறப்பரால் உபதேசம் பெற்று கைலாயத்தில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியும்; முதன்மைத் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும், சைவ ஆச்சார்யருள் முதல் குருவாகும் தன்மையும் பெற்றார். இறைவன் அருளால் இத்தகைய பேறு பெற்ற செபேசுவரர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐயன் ஐயாறப்பரும்; அம்மை அறம் வளர்த்த நாயகியும், புதுமணத்தம்பதியரான நந்தியெம்பெருமானையும் சுயம்பிரகாச அம்மையாரையும் அழைத்துக் கொண்டு சப்த ஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குத் திருவுலா சென்று வருகிறார்கள். இறைவனும் இறைவியும் கண்ணாடிப் பல்லக்கிலும் நந்தியெம்பெருமானும் சுயம்பிரகாச அம்மையும் வெட்டிவேர் பல்லக்கிலும் உலா வருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஏழூர் திருவிழா என்று இன்றளவும் நடைபெற்று வருகிறது.

பகீரதனுக்கு அருளிய முருகன்: கங்கையை பூமிக்கு வரவழைத்த பகீரதன் ராமாயண காலத்துக்கு முன்பே வாழ்ந்தவன். ஆனால், அவனுக்கு தமிழ்க்கடவுளான முருகனின் அருள் கிடைத்தது என்பது தேனூர் வரகவி சொக்கலிங்கனார் எழுதிய "சேய்த்தொண்டர் புராணம் என்ற நூல் மூலம் தெரிய வருகிறது. "சேய் என்றால் "குழந்தை முருகன். அவரது தொண்டர்கள் 78 பேர் வரலாறு இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பகீரத நாயனார். இவர் சென்னை தாம்பரம் அருகிலுள்ள வல்லக்கோட்டை பகுதியை ஆண்டார். திருப்புகழில் அருணகிரியார் இவ்வூரை "கோடைநகர் என குறிப்பிட்டுள்ளார். பகீரதனுக்கு கோரன் என்ற எதிரி இருந்தான். இவன் பகீரதனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றினான். பகீரதன் சுக்ராச்சாரியாரை சரணடைந்து, இழந்த நாட்டை மீட்க வழி கேட்டான். வெள்ளிக்கிழமைகளில் பாலமுருகனை வழிபாடு செய்தால் குறை தீரும் என்றார் சுக்ரன். அதன்படி, அவனும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து கோரனை ஜெயித்து நாட்டை மீட்டான். முருகனுக்கு பிடித்தமான பங்குனி உத்திர விரதத்தையும் பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளலாம்.

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார். சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் தெய்வானையை மணந்ததும் பங்குனி உத்திர நாளில்தான்.  ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது இன்றைய தினமே; இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்நாளே காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ஆண்டாள்  ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ஜுனன் பிறந்ததும் இந்நாளில்தான். சுவாமி ஐயப்பனின் அவதாரத் திருநாளும் பங்குனி உத்திரத் திருநாளே.

இந் நன்னாளில்தான் காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றார். இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது;  சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

மணவிழா காணும் குன்றத்து முருகன்: திருப்பரங்குன்றம். பாடல் பெற்ற சிவத்தலமாகவும், முருகனின் அறுபடைவீடுகளில் முதல் தலமாகவும் உள்ளது. வடதிசை நோக்கி அமைந்துள்ள குடைவரைக் கோயிலான இங்கு, சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பவளக்கனிவாய்ப் பெருமாள் மேற்குநோக்கியும், கற்பகவிநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்குநோக்கியும் அருள்பாலிக்கின்றனர். தனியாக கோவர்த்தனாம்பிகை சன்னதி உள்ளது.  தெய்வானை திருமண வைபவத்தைக் காண மும்மூர்த்திகள், துவாதச ஆதித்தியர், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், அஷ்டதிக் பாலகர்கள், இந்திராதி தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கூடியதால் இத்தலம் கயிலாயத்திற்கு ஈடானதாகும். சம்பந்தர் பாடிய தேவாரத்தில் இம்மலை சிவலிங்கமாக காட்சியளிப்பதாக பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையை நக்கீரர் இங்குள்ள முருகன் மீது பாடினார். பங்குனியில் முருகப்பெருமானுக்கு பிரம்மோற்சவமும், திருக்கல்யாணமும் நடக்கிறது.

மணவாழ்வு தரும் உத்திர திருநாள்: பங்குனி உத்திரநாளில் சிவபார்வதி திருமணம் நடந்தது. நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம்.  இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

பிரம்மா, சரஸ்வதி: சரஸ்வதிதேவி, பங்குனி உத்தர விரதமிருந்துதான் பிரம்மாவின் நாவில் அமரும் பேறு பெற்றாள்.

ஆண்டாள் ரங்கமன்னர் திருமணம்: மற்றொரு தெய்வத் திருமணமான ஆண்டாள் திருக்கல்யாணமும் இந்தப் பங்குனி உத்தர நாளில்தான் நடைபெற்றது.

பக்தியுள்ள கணவர் கிடைக்க: தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள். அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

சாஸ்தாவின் அவதார நாள்: சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். ஐயப்பன் வழிபாட்டில் நெய்த்தேங்காய்க்கு முக்கியத்துவம் உண்டு. நெய்த்தேங்காய் இருமுடியில் இடம் பெறும் பொருட்களில் ஒன்றாகும்.தேங்காயில் வலக்கண், இடக்கண், ஞானக்கண் என்னும் மூன்று கண்கள் உண்டு. ஒரு கண்ணைத் தோண்டி அதில் இருக்கும் இளநீரை வெளியேற்றிவிடுவர். இளநீர் உலக இன்பத்தைக் குறிப்பதாகும். அதை வெளியேற்றுவதன் மூலம் நம் அஞ்ஞானம் விலகுகிறது. இன்ப வேட்கை மறைகிறது. நெய்யை நிரப்புவதன் மூலம் தெய்வீக சிந்தனை நம்முள் நிரம்புகிறது. இந்தச் சடங்கின் நோக்கமே மனத்தூய்மை பெற்று ஞானம் அடைவது தான். இப்போதும், இவரது கோயில்கள் ஆற்றங்கரை, காடுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலேயே இருக்கும். இதனால், இங்கு செல்ல அச்சப்பட்ட மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். சாத்து என்ற சொல்லுக்கு கூட்டம் என்று பொருள். இதனால், இவர் சாத்தா, சாஸ்தா, சாஸ்தான், சாத்தான் என்றெல்லாம் கிராமமக்களால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறார். தென்மாவட்ட கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக உள்ளன. பங்குனி உத்திரத்தன்று இங்கு கூட்டம் அலைமோதும்.

வருமானத்துக்கு உத்திர வழிபாடு: தொழிலதிபர்கள், வியாபாரிகள் தங்கள் தொழிலில் பங்குதாரராக பழநிமுருகனைச் சேர்த்துக் கொள்வர். தொழில் தொடங்கும் போதேதண்டாயுதபாணியின் பெயரிலும் முதல் போட்டு விடுவர். அந்த பங்குத்தொகையில் கிடைக்கும் லாபத்தை பங்குனிஉத்திரவிழாக்காலத்தில் உண்டியலில்சேர்த்து விடுவர். முருகனைப்பார்ட்னராக ஏற்றுக் கொண்டால் லாபம் அமோகமாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

 
மேலும் பங்குனி உத்திரம்! »
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி உத்திரம் என்றாலே காவடி வழிபாடுதான் நினைவுக்கு வரும். முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பதைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar