பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
10:04
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட சைவ, அசைவ உணவு வகைகளை ஆற்றுக்குள் கொண்டு வந்து நிலவொளியில் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நேற்று வைகை ஆற்றுக்குள் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் அழகர் பத்தி உலாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த மண்டகப்படிக்கு மானாமதுரை பகுதி மக்கள் நிலாச்சோறு மண்டகப்படி என்றும் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். நேற்று இரவு நடைபெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சியை முன்னிட்டு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சைவம் மற்றும் அசைவ உணவுகளான மட்டன்,சிக்கன்,மீன்,காடை,நண்டு, பிரியாணி உள்ளிட்டவற்றை வீட்டில் சமைத்துக் கொண்டு கார், வேன், லாரி மற்றும் டூவிலர்களில் மானாமதுரை வைகை ஆற்றுக்கு வந்து சித்ரா பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் வைகை ஆற்றுக்குள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.ஏராளமானோர் இரவு முழுவதையும் வைகை ஆற்றுக்குள்ளேயே படுத்து உறங்கி அதிகாலை தங்களது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.இந்த நிலாச்சோறு நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்களது வீடுகளில் சமைத்த உணவுகளை வைகை ஆற்றுக்குள் கொண்டு வந்து உறவினர்களோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.