பதிவு செய்த நாள்
06
ஏப்
2013
10:04
சென்னை : ""தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு, 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யப்படும், என, அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரெங்கசாமி பேசுகையில், ""தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு தேர் செய்து, தேரோட்டம் நடத்தப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆனந்தன் பேசியதாவது: தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாக,"யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இக்கோயிலை, மத்திய தொல்பொருள் துறை பராமரித்து வருகிறது. தஞ்சை கோயிலுக்கு, புதிய தேர் செய்ய, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணி விரைவில் முடிக்கப்பட்டு, தேரோட்டம் துவங்கும். இங்கு தேரோட்டம் நடந்து, 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது, தேர் இல்லை. மாநிலத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 2011-12ம் ஆண்டு, 17 தேர்கள், 94.34 லட்சத்திலும்; 2012 -13ம் ஆண்டு, 33 தேர்கள், 143.23 லட்சத்திலும் தயார் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.