பதிவு செய்த நாள்
06
ஏப்
2013
10:04
மதுரை : மதுரையில் ஏப்., 25ல் நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு பருவ மழையும் பொய்த்து விட்டதால், கண்மாய்கள் மட்டுமின்றி, அணைகளும் வறண்டு விட்டன. குடிநீர் பிரச்னையைக் கூட சமாளிக்க முடியுமா என்ற நிலை உள்ளது. இந்நிலையில், ஏப்.,25ம் தேதி நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு விழாவிற்காக, தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர். பெரியாறு கிரெடிட்டில் உள்ள தண்ணீர், மதுரையின் குடிநீருக்கு மட்டுமே பயன்படும். இதன்படி ஜூன் இறுதி வரையான தேவைக்கு அங்கு தண்ணீர் உள்ளது. வைகை அணையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முறையே 2:3:7 என்ற வீதத்தில் தண்ணீர் பங்கீடு வழங்கப்படும். இந்நிலையில், ஏப்.,15 முதல் 4 நாட்களுக்கு, மேற்கூறிய மாவட்டங்களின் தேவைக்காக வைகையில் தண்ணீர் திறந்துவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என ஆலோசனை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தினரோ, சற்று தாமதமாக திறந்தால் தங்கள் தண்ணீர் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதினர். திறக்க வாய்ப்பு: இதையடுத்து, அழகர் விழாவிற்கும், 3 மாவட்ட தண்ணீர் தேவைக்குமாக சேர்த்து, ஒரேநேரத்தில் தண்ணீர் திறக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். இதன்படி வைகை அணையில் இருந்து ஏப்., 20 முதல் 25ம் தேதி வரை 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கலாம் என அதிகாரிகள், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். வைகை அணையில்(உயரம் 71 அடி) நேற்றைய நிலவரப்படி 46 அடி நீர்மட்டம் உள்ளது. இதில் ஏப்., 20ம் தேதி நிலவரப்படி, 736 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும். இதில் ஆவியாதல் (30 மி.க.அ.,), இறுதிகட்ட ஸ்டோரேஜ் (43 மி.க.அ.,), அவசரத் தேவை (33 மி.க.அ.,) போக மீத இருப்பு 630 மி.க.அ., நீர்தான். இதில் 3 மாவட்டங்களுக்குமான விகிதாச்சாரப்படி, மதுரைக்கு 105 மி.க.அ., சிவகங்கைக்கு 157 மி.க.அ., ராமநாதபுரத்திற்கு 367 மி.க.அ., கிடைக்கும்.