பதிவு செய்த நாள்
06
ஏப்
2013
10:04
கூடலூர்: தமிழக,கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவை முன்னிட்டு, இரு மாநில கலெக்டர்கள் ஆலோசனைக்கூட்டம், இன்று தேக்கடியில் நடக்கிறது. மங்கலதேவி கண்ணகி கோயில் விழா, ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தில் நடைபெறும். தமிழக கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வர். கோயில் அமைந்துள்ள பகுதி, யாருக்குச் சொந்தம் என்பதில், தமிழக, கேரள மாநிலங்கள் இடையே பிரச்னை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருந்த போதிலும், விழா நடத்துவதில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள், கோயிலை சுத்தப்படுத்துவது, கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து, விழா நடப்பதற்கு முன், இரு மாநில கலெக்டர்கள் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி, விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி தினமான,ஏப்ரல் 25ம் தேதி, மங்கலதேவி கண்ணகி கோயில் விழா நடக்கிறது. இதற்காக, தேனி கலெக்டர், இடுக்கி கலெக்டர் பாஸ்கரன் தலைமையில், இன்று பகல் 2 மணிக்கு, தேக்கடி ராஜீவ் காந்தி கல்வி மையத்தில், ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் இருமாநிலங்களை சேர்ந்த, அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.