பதிவு செய்த நாள்
11
செப்
2013
10:09
கேதார்நாத்: கேதார்நாத் சிவன் கோவிலில், 86 நாட்களுக்கு பின், இன்று பூஜைகள் நடைபெற உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது எனவும் கூறப்படும், உத்தரகண்ட் மாநிலத்தின், கேதார்நாத் சிவன் கோவிலில், இடைவிடாமல், பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த பூஜை மற்றும் புனஸ்காரங்கள், கடந்த ஜூன், 16ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. உத்தரகண்டில் பெய்த பேய் மழையால், கேதார்நாத் கோவில் அமைந்துள்ள மந்தாகினி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பலத்த சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி இறந்தனர். தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில், 200 உடல்கள் எடுக்கப்பட்டன. அவற்றை, எரியூட்டும் பணிகளும் துவங்கியுள்ளன. கோவிலிலும் புனரமைப்புப் பணிகள் முடிந்ததால், இன்று முதல், பூஜைகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.