திருப்பரங்குன்றத்தில் வேல் வாங்கும் விழா: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் தரிசனம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2026 10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரலீலை நாளை (நவ. 15) நடக்கிறது. அதன் முன் நிகழ்ச்சியாக இன்று மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று மாலை சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், பவளக் கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு பூஜை முடிந்து திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்படும். அம்பாள் கரத்தில் இருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று கம்பத்தடி மண்டபத்தில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்படும். தீபாராதனை முடிந்து பூச்சப்பரத்தில் சுவாமி திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் சென்று அருள் பாலிப்பார்.
ஆண்டுக்கு ஒருமுறை: கோயிலின் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகம் கொண்ட சண்முகர் எழுந்தருளியுள்ளார். சண்முகருக்கு கந்த சஷ்டி திருவிழா, மற்ற நாட்களிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி விசாகத்தன்று வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் விசாக கொரடு மண்டபத்தில் எழுந்தருள்வார். பக்தர்கள் கொண்டு வரும் பால் சண்முகர் வள்ளி தெய்வானை அபிஷேகம் செய்யப்படும். நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் சண்முகர், ஆண்டுக்கு ஒருமுறை கந்த சஷ்டி 4ம் திருவிழா அன்று மட்டும் மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிப்பார்.