பதிவு செய்த நாள்
15
மார்
2011
05:03
காவலர்கள் போய் ராமனிடம் தகவல் சொல்லவே, லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர். தன்னைப் போலவே, அஞ்சன வண்ணத்தில் மிளிர்ந்த அந்த சிறுவர்களைக் கண்டு ராமபிரான் ஆனந்தம் கொண்டார். அவரையும் அறியாமல் பாச உணர்ச்சி மேலிட்டது. அந்தச்சிறுவர்கள் ராமபிரானை வணங்கி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே! தங்கள் வரலாறு மிகவும் திவ்வியமானது. உன் திருநாமமாகிய ராம என உச்சரித்தாலே பாவங்கள் நீங்கி விடுமென எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார். தங்கள் கதையைத் தாங்களே கேட்பதென்பது கூட பாவங்களை நீக்கும் மருந்தாகும். தங்கள் திவ்ய சரித்திரத்தை நாங்கள் பாட தாங்களும், அரண்மனையில் உள்ள பிறரும் கேட்டு மகிழ வேண்டும், என்றனர். ராமபிரான், அவ்வாறே ஆகட்டும் என சொன்னபோது, மூன்று பாட்டிகளும் அங்கே வந்தனர். அவர்களும் ராம சரிதம் கேட்க அவரவர் ஆசனங்களில் அமர்ந்தனர். ராமபிரானின் பிறப்பு முதல் சீதாதேவியை மீட்டு மீண்டும் அயோத்தி திரும்பியது வரையான சரித்திரத்தை மிக அருமையாகப் பாடினர். பொன்போன்ற நிறத்தையுடைய சீதாதேவியின் மைந்தர்கள் பாடிய அந்த சரித்திரம் அனைவர் கண்ணிலும் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது. ராமபிரான் மிகவும் மகிழ்ந்தார். உலகத்தில் தன் கதையை தானே கேட்ட ஒரே பாத்திரம் ராமபிரான் தான். அந்தளவுக்கு அது திவ்யமானது. இதனால் தான் ராமாயணத்தில் இருந்து தினமும் ஒரு ஸ்லோகம் அல்லது பாடல் அல்லது பொருள் ஏதாவது ஒன்றைப் படித்தாலே மிகுந்த புண்ணியம் கிடைத்து விடும் என்று சொல்கிறார்கள்.
கதை முடிந்ததும், ராமபிரான் லவகுசர்களை ஆரத்தழுவி மகிழ்ந்தார். அவருக்குப் புரிந்து விட்டது. அவர்கள் தனது குழந்தைகள் தான் என்று. அவர்களிடம், பச்சிளம் பாலகர்களே! தாமரை மலர் போன்ற கண்களையுடைய நீங்கள் யார்? எனக் கேட்டார். ஐயனே! லவகுசர் என்று எங்களை அழைக்கிறார்கள். நாங்கள் வால்மீகி முனிவரின் சீடர்கள். அவரே எங்களுக்கு தங்கள் சரித்திரத்தைக் கற்றுத் தந்தவர். இந்த திவ்ய சரித்திரத்தை தங்கள் தேசத்தில் சென்று பாடும்படி எங்களைப் பணித்தவரும் எங்கள் குருநாதரே, என்றனர். தாங்கள் சீதாதேவியின் குழந்தைகள் என்பதை வால்மீகியின் அறிவுரைப்படி, ராமபிரானிடம் சொல்லவில்லை. ராமன் அதிகாரிகளை அழைத்தார். இந்தக் குழந்தைகள் பாடிய பாடல்கள் நம் அனைவர் நெஞ்சையும் நெகிழ வைத்தன. இவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து அனுப்புவதே முறையானது. பதினெட்டு கோடி பொற்காசுகளை இவர்களுக்கு வாரி வழங்குங்கள், என்றார். இந்த தேசம் எவ்வளவு உயர்வான நிலையில் இருந்தது என்பதற்கு இந்த சன்மானத்தொகை எடுத்துக்காட்டு. பரிசுக்கே இவ்வளவு செலவழித்தால், கோசலநாட்டின் ஒட்டுமொத்த செல்வமும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். குசலவர்கள் ராமபிரானை நோக்கிச் சிரித்தனர். ஸ்ரீராமா, நாங்கள் பொருள் பெற்றுச் செல்வதற்காக தங்கள் சரிதையைப் பாடவில்லை. மேலும், இந்தப் பொருள் எத்தகைய துன்பங்களைத் தரும் என்பதையும் நாங்கள் அறிவோம்.
மன்னவா! பொருள் இருந்தால் அரசாங்கம் வலுவில் அதைக் கவரப்பார்க்கும். திருடர்கள் அதை கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள். நாம் தடுத்தால், அவர்கள் நம்மைக் கொல்லவும் தயங்கமாட்டார்கள். ஒருவேளை இந்தப் பொருள் ஏதோ காரணத்தால் செலவாகி விட்டால், இழந்ததை நினைத்து படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. பணமிருந்தால் தூக்கம் வராது. மேலும், அதைக் காவல் காப்பதிலேயே பொழுது போய்விடும். ராமா! இவையெல்லாவற்றையும் விட மிகக்கொடியதான பெண்ணாசையில் இது நம்மைத் தள்ளிவிடும். இப்படி, துன்பங்களை மட்டுமே தரும் பொருள் எங்களுக்கு எதற்கு? என்றனர். ராமபிரான், அந்தக் குழந்தைகளின் செல்வம் பற்றிய வித்தியாசமான கோணத்தை ரசித்தாலும், அவர்களின் எதிர்காலத்துக்கு பொருள் தேவை என்பதால், அவர்களுக்கு புத்திமதி சொன்னார். குழந்தைகளே! பொருள் தரும் துன்பங்களை மட்டுமே பட்டியலிட்ட நீங்கள், அதன் மேன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் வாழும் ஒரு அற்பன் கூட, பொருள் கிடைத்து விட்டால் அரசனாகி விடுகிறான். என்னென்ன வகை உணவுகள் வேண்டுமோ அவை அத்தனையையும் தயார் செய்து உண்டு மகிழலாம். நினைத்த காரியங்கள் அனைத்தையும் சாதித்துக் கொள்ள பொருள் அவசியம் தேவை. பொருள் இருந்தால் இந்திரலோகத்தில் கூட சகல வசதியும் கிடைக்கும். செல்வம் என்ற ஆயுதத்தைக் கண்டு, பகைவர்கள் கூட ஒருவனிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள். எனவே, நீங்கள் இந்தப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள், என்றார். ஸ்ரீராமச்சந்திர பிரபு! ஸ்ரீமன் நாராயணனின் தோற்றம் கொண்டவரே! நாங்கள் காட்டில் கிழங்குகளையும், சருகையும் உண்டு வாழும் முனிவர்களிடையே வசிப்பவர்கள். எங்களுக்கு எதற்கு பொருள்? நீங்கள் தரும் பொருளை நாங்கள் எட்டிக்காயாகத்தான் நினைக்கிறோம், என்றனர். அந்தக் குழந்தைகளின் மனஉறுதி, ஆசையின்மை கண்டு ராமபிரான் மகிழ்ந்தார். அந்தக் குழந்தைகளை மீண்டும் ஒருமுறை தழுவிக் கொண்டார். தன் மனதிற்குள், ஜானகி மைந்தர்களே! உங்கள் தாய் திருமகளின் வடிவமல்லவா? என்ன பாவம் செய்தேனோ? உங்களுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு! என்ற ராமன், ஒருமுறையேனும், அவர்களை மைந்தர்களே என அழைத்து விட வேண்டும் எனக் கருதி, என் அன்பு மக்களே! நீங்கள் நாளையும் அரண்மனைக்கு வர வேண்டும். அனைவர் மனம் மகிழும் வகையில் பாட வேண்டும், வருவீர்களா? என்றார். குழந்தைகளும் ஒப்புக்கொண்டனர். அயோத்தி மன்னா! நாளை நாங்கள் அரசவைக்கு வந்து பாடுகிறோம், என்று சொல்லி விடை பெற்றனர். மறுநாள் அப்படி ஒரு விபரீதம் நடக்குமெனத் தெரிந்திருந்தால், ராமபிரான் அவர்களை வரச்சொல்லியிருக்கவே மாட்டார்!