பதிவு செய்த நாள்
15
மார்
2011
05:03
ராமனின் கட்டளைக்கிணங்க மறுநாள் குசலவர் அரண்மனைக்கு வந்தனர். ராமனுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே! நாங்கள் இங்கே வந்ததில் இருந்து, தங்கள் திருமுகத்தைத் தான் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். சீதாதேவியாரின் இன்முகத்தையும் நாங்கள் தரிசிக்க வேண்டாமா! அவர்களது அன்பான அரவணைப்பும், ஆசியும் எங்களுக்கு வேண்டாமா! ஐயனே! அழையுங்கள் அந்த அன்புத்தாயை! உலகத்தில் எந்தத்தாயும் அனுபவிக்காத கஷ்டங்களை அனுபவித்த அவர்கள், தீயில் மூழ்கியெழுந்து தங்கள் கற்பை நிரூபித்தவர் என்பதை அறியும் போது, எங்கள் உடல் புல்லரிக்கிறது. அவரை வரச்சொல்வீர்களா? என்றனர். ராமபிரான் விக்கித்துப் போனார். அவருக்கு தெரியும்...அவர்கள் தன் குழந்தைகள் என்று! ஒரு காலத்தில், இந்த உண்மை தெரிந்து, தங்கள் தாயை தான் ஒதுக்கி வைத்தது தெரிந்தால் எந்தளவுக்கு விபரீதம் ஏற்படும்! ஐயோ! இந்த பிஞ்சுக்குழந்தைகளின் கேள்விக்கு, உலகாளும் ராமன் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறானே! சீதா...உன்னை அனுப்பிவிட்டு, நான் படும் வேதனையைப் பார்...இல்லை தாயே! உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார். லவகுசர்கள் கொதித்து விட்டனர்.
ஏ ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை! அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்! உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கேட்டனர். ராமபிரான் அவர்களைச் சமாதானம் செய்தார். அன்புக்குழந்தைகளே! என் நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள். நான் நாடாள்பவன். நாடாளும் ஒருவன் எவ்வித பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் குருகுலத்தில் பயின்றிருப்பீர்கள். அந்த அடிப்படையிலேயே அவ்வாறு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டேன், இதைத் தவிர என்னால் வேறென்ன செய்ய முடியும்? என்றார். செய்வதையும் செய்து விட்டு, சமாதானமா செய்கிறீர்! உம் விளக்கத்தை எந்நாளும் ஒப்புக் கொள்ள முடியாது. பொறுமை மிக்க பூமித்தாய் பெற்றெடுத்த அந்தப் புண்ணியவதியை ஒதுக்கி வைத்த உம் முகத்தில் விழித்ததே பாவம். நாங்கள் வருகிறோம், என்றவர்களாய் வேகமாக வெளியேறினர். அங்கு வந்த கவுசல்யா தேவியும் குழந்தைகளை அழைத்து சமாதானம் சொன்னாள். சீதாதேவிக்கு சிறந்த மாமியாக நடந்து கொள்ள தங்களால் முடியவில்லை போலும் என அவளிடமும் கோபித்துக் கொண்டு அவர்கள் காடு நோக்கிப் புறப்பட்டனர். வால்மீகியின் ஆஸ்ரமத்தை அடைந்து தாயிடம் நடந்ததைக் கூறினர். குழந்தைகள் பெற்ற தந்தையை எதிர்த்துப் பேசியதை அறிந்த சீதாதேவி அவர்களைக் கடிந்து கொண்டாள்.
இந்த உலகிலேயே சிறந்தவர் அல்லவா ஸ்ரீராமர்! அவரைப் போயா எதிர்த்துப் பேசினீர்கள்! அவரது திருநாமம் சொன்னாலே பாவங்கள் நீங்கி விடுமே! அவரை நிந்தித்திருக்கிறீர்கள்! ஐயோ! இனியும் நான் வாழ வேண்டுமா! என அவள் கதறினாள். வால்மீகி முனிவர் அவளைச் சமாதானம் செய்து குழந்தைகளை விளையாடச் செல்லும்படி அனுப்பி விட்டார். நாட்கள் கடந்தன. ஒருநாள் லவகுசர், தங்கள் நண்பர்களுடன் குருகுலத்தில் அமர்ந்து இனிமையான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு குதிரை அங்கு வந்தது. அதன் நெற்றியில் ஒரு பட்டை இருந்தது. அந்த பட்டையில், அயோத்தி மன்னர் தசரத புத்திரர் ராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரை இது. இது எந்த இடத்திற்கு வருகிறதோ, அந்நாட்டு மன்னர் தமது விசுவாசத்தை ராமபிரானுக்கு காட்ட வேண்டும். ராமபிரானுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தைகள் குதிரையைப் பார்த்தார்களோ இல்லையோ...அம்மா திட்டியதை எல்லாம் மறந்து விட்டார்கள். சீதாதேவியை அவமதித்த ராமனுக்கு, அஸ்வமேத யாகம் செய்ய தகுதியில்லை என்ற எண்ணமே மேலோங்கியது. அவர்கள் குதிரையைப் பிடித்து கட்டி வைத்து விட்டனர். குதிரையின் பின்னால் வந்த வீரர்கள் இதைப் பார்த்து, குருகுலத்தில் இருந்த சிறுவர்களைக் கண்டித்தனர். குழந்தைகளே! என்ன விளையாட்டு இது! இது தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அஸ்வமேத யாகக்குதிரை. இதையா கட்டி வைத்தீர்கள்! நீங்களெல்லாம் படித்தவர்கள் தானே! குதிரையின் நெற்றியில் எழுதி கட்டப்பட்டுள்ள பட்டயத்தை யாருமே பார்க்கவில்லையா! அறியாக் குழந்தைகள் என்பதால் உங்களை மன்னிக்கிறோம். உம்...குதிரையை அவிழ்த்து விடுங்கள் என்று விரட்டினர். லவகுசர்களோ, இதர சிறுவர்களோ இவர்களின் மிரட்டலைக் கண்டு கொள்ளவே இல்லை. கட்டிய மனைவியைச் சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் செய்தவன், அவள் தீக்குளித்த பின்பும், ஊரார் சந்தேகப்படுகிறார்களே என்பதற்காக மீண்டும் அவளைக் கானகம் அனுப்பியவன்...அவன் தானே உங்கள் ஸ்ரீராமன்! அவனுக்கு என்ன தகுதியிருக்கிறது அஸ்வமேதம் நடத்த! குதிரையை நாங்கள் விடமாட்டோம். மீறி அவிழ்க்க முயன்றால் நடப்பதே வேறு, என எச்சரித்தனர் லவகுசர்கள். ஏவலர்கள் அந்தக் குழந்தைகளைப் பார்த்து ஏளனமாக சிரித்தபடியே, குதிரையை அவிழ்க்க முயல, சில அம்புகளை அவர்கள் மீது எய்தனர் லவகுசர். ஏவலர்களால் அவர்களின் தாக்குதலுக்கு பதில் கொடுக்க முடியவில்லை. இதென்ன அதிசயம் என்றவர்களாய், தங்கள் படைக்கு தலைமையேற்று வந்து சற்று தூரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சத்ருக்கனனை நோக்கி ஓடினர்.