Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவருட்பயன் பகுதி-2 திருவருட்பயன் பகுதி-4
முதல் பக்கம் » திருவருட்பயன்
திருவருட்பயன் பகுதி-3
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

பாற்கலன்மேல் பூனை :

இயல்பிலே இன்ப நாட்டம் உடைய உயிர், உயர்வற உயர்ந்த இன்பப் பொருளாகிய இறைப் பொருளை யல்லவா நாடி அடைய முற்பட வேண்டும்? நெல்லிக் கனியும் நிறை யின்னமுதும் போல இனிக்கும் மெய்ப் பொருளை யல்லவா புல்லிப் புணர விழைய வேண்டும்? அவ்வாறு விழையாமல் அழிதல் மாலையவாகிய உலகப் பொருள்களை யல்லவா பெற்று அனுபவிக்கத் துடிக்கிறது? ஆணவ மலமாகிய அழுக்கு நீங்கும் படியாக உலக வாழ்க்கை யென்னும் ஆற்றில் நீராடி வருக என்று உயிர்களைப் பணித்தான் இறைவன். ஆனால், உயிர்களோ ஆற்றின் பயனைக் கொள்ளாமையோடு சேற்றையும் அல்லவா வாரிப்பூசிக் கொள்கின்றன? ஐம்புல நுகர்ச்சியாகிய சேற்றில் அல்லவா அழுந்தி நிற்கின்றன? உயிர்கள் அறியாமையின் காரணமாக உயர்ந்ததில் வெறுப்பும் தாழ்ந்ததில் விருப்பும் கொண்டு நிற்கின்றன. இதனை ஓர் உவமையில் வைத்துக் காட்டுகிறார் ஆசிரியர். பசியோடு வருகிற ஒரு பூனை பாற்கலயத்தைப் பார்த்தது. அக்கலயம் உறியின்மேல் தொங்க விடப்பட்டிருந்தது. பூனை அதன் மேல் தாவி அமர்ந்தது. அந்த நேரத்தில் பக்கத்துச் சுவரிலே ஒரு கரப்பான் பூச்சி ஓடியது. அதைப் பார்த்த பூனை உயர்ந்ததாகிய பாலை மறந்தது. இழிந்ததாகிய கரப்பான் மீதே அதன் எண்ணம் சென்றது. பாலைக் குடிக்க விரும்பாமல் கரப்பானைத் தாவிப் பிடிக்க முயன்றது. அந்தப் பூனையின் நிலையில் நாம் இருக்கிறோம்; உயர்ந்ததாகிய திருவருள் இன்பத்தை நாடாமல், இழிந்ததாகிய சிற்றின்பத்தையே நாடி அலைகிறோம். அதனாலே துன்பத்தை அடைகிறோம்.

40. திருவருளோடு பழகாத உயிர்

இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொருள் : உயிர் அன்று தொட்டு இன்று வரையிலும் திருவருளோடு தான் கூடியிருக்கிறது. ஆயினும் அத்திருவருளைத் தெரிந்து கொள்ளாமல் அதனோடு சிறிதேனும் பழகுதல் இல்லாமல் இருக்கிறதே. இப்படிப் பயனின்றி வாழ்கின்ற இந்த உயிருக்கு வீடு பெற என்ன தகுதி இருக்கிறது?

சொற்பொருள் :

இற்றை வரை - அநாதியாகிய அன்று தொட்டு இன்று வரையிலும்
இயைந்தும் - திருவருளோடு கூடியிருந்தும் (அதனைத் தெரிந்து கொள்ளாமல்)
ஏதும் பழக்கம் இலா - அத்திருவருளோடு சிறிதும் பழகுதல் இல்லாத
வெற்றுயிர்க்கு - வீணாக வாழ்வைக் கழிக்கின்ற <உயிருக்கு
வீடு - துன்பத்தினின்றும் நீங்குதலாகிய வீடு
மிகை - வேண்டாததே யாகும்.

விளக்கம் :

இடையில் ஏற்பட்ட பழக்கம் :

இப்போது நாம் கண், காது முதலிய இந்திரியங்களோடு பழகி வருகிறோம். அவற்றின் வாயிலாக உலகப் பொருள்களை அறிந்து அவற்றோடும் பழகி வருகிறோம். இந்திரியங்களோடும் உலகப் பொருள்களோடும் நமக்கு உள்ள இந்தப் பழக்கம் பிறவி வந்த பிற்பாடுதான். ஆகவே, இவற்றின் தொடர்பு நமக்கு என்றுமுள்ள தொடர்பு அன்று, இடையில் ஏற்பட்ட பழக்கம் இது என்பது புலனாகும். ஆயினும், இவற்றோடு கொண்ட பழக்கம் எத்துணை வலிமையானது என்பதை எண்ணிப் பாருங்கள்!

இந்த இந்திரியங்கள் நமக்கு வேறானவை என்ற எண்ணமே நமக்கு இருப்பதில்லை. அவையே நாம் என்று கருதிக் கொண்டு அவற்றோடு ஒன்றுபட்டு வாழ்கிறோம். சுவையான உணவு நாவிற் படும்போது என் நாக்கு இதை விரும்புகிறது என்று சொல்வதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லி மகிழ்கிறோம். நாவே நாம் என்று இருப்பதையே இது காட்டுகிறது. இப்படி ஒவ்வொரு இந்திரியத்தோடும் அது அது நான் என்று ஒற்றுமைப் பட்டு வாழ்கிறோம். வாழ்நாள் முழுதும் இந்த இந்திரியங்களோடு இப்படி வேற்றுமையின்றிப் பழகி வருகிறோம். இவ்வளவு தூரம் நெருக்கமாகப் பழகி நின்றாலும் இந்த ஐம்பொறிகள் முதுமையில் மெல்ல மெல்ல நம்மிடமிருந்து விலகி ஓடப்பார்க்கின்றன. மூத்துத் தளர்ந்த நிலையில் இவை நம்மோடு ஒத்துழைப்பதில்லை. நமக்குத் தொல்லை தருகின்றன. நம்மைக் கைவிட்டு விடுகின்றன. இந்திரியங்களோடு பழகி வந்த நமது பழக்கம் இப்படியாக முடிகிறது.

இனம் இனத்தோடு சேர வேண்டும் :

உடம்பும் இந்திரியங்களும் உலகப் பொருள்களும் ஆகிய இவற்றோடு கொள்ளுகிற பழக்கம் உயிருக்கு இயற்கையானதன்று. இங்கே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இனம் இனத்தோடு சேரவேண்டும் என்பார்கள். உயிர் சித்து என்ற இனம். உடம்பும் உலகப் பொருள்களும் ஆகிய இவையெல்லாம் அறிவற்ற அசத்து என்ற இனத்தைச் சேர்ந்தவை. எனவே, இவை உயிருக்கு வேற்றினம் என்பது விளங்கும். சித்தாகிய உயிர் சித்தாகிய திருவருளோடு பழகுதலே முறை. அதுதான் உயிருக்கு இயற்கை. அதற்கு மாறாக உயிர் தன்னினம் ஆகிய திருவருளோடு பழகாமல், தன்னினம் அல்லாத வேற்றினமாகிய அசத்துப் பொருள்களோடு பழகி வருகிறது. முன்னே கூறியபடி அசத்துப் பொருள்கள் இடையிலே கை விட்டு நீங்கிவிடும். அப்படியின்றி, உயிர் எங்கே எப்படிச் சென்றாலும் அங்கே துணையாக நின்று உதவுவது திருவருளேயாகும். அதனால் பெரியோர் திருவருள் ஒன்றையே வேண்டி உருகிக் கண்ணீர் பெருகி நிற்பர். உனது திருவருள் என்று கிடைக்குமோ என்று இரைதேடும் கொக்குப்போலக் கவலையுடன் வாடி நிற்கின்றேன். நாயேனைப் பிரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தினையளவு கூட எண்ணமிருக்காது. நான்தான் உன் திருவடி மலரைப் பிரிந்திருக்கிறேன். உன்னை விட்டால் எனக்கு யார் உறவு? ஓடும், கோவணமுமே உறவு என்று நினைத்து, உள்ளம் கசிந்து, தேடும் பொருளும் சிவன் கழலே என நான் தெளிந்து கொண்டேன். உன் திருவடியன்றி வேறு பற்று எனக்கு இல்லை. என்றெல்லாம் சொல்லி வருந்தி நிற்பர். இவர்கள் நிலை இப்படி இருக்க நாமோ என்றும் தொடர்ந்து நிற்கும் தாயாகிய திருவருளை மறந்து, உலகப் பொருள்களையே பற்றி நின்று அவற்றோடு விடாமல் பழகி வருகிறோம்.

பன்னாடை போன்றவர்கள் நாம் :

நாமெல்லாம் இவ்வகையில் பன்னாடை போன்றவர்கள் எனலாம். பன்னாடை என்பது இழை நெருக்கம் இல்லாத துணிவகையாகும். அதற்கு நெய்யரி என்ற மற்றொரு பெயரும் உண்டு. நெய் என்பது தேனைக் குறிக்கும். காட்டில் எடுத்த தேனை வடிகட்டுவதற்குப் பன்னாடையைப் பயன்படுத்துவார்கள். பன்னாடை தன்மேல் வார்த்த தேனின் சாரத்தைக் கீழே ஒழுக விட்டு, வேண்டாத தூசி கசடு முதலியவற்றைத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். அந்த நிலையில் நாம் இருக்கிறோம். நிலையற்றனவாய் நம்மிடம் சிலகாலம் இருந்து செல்கின்ற பொருள்களையே நாம் விடாமல் பற்றி நிற்கிறோம். இப்பிறவியில் மட்டுமின்றி எப்பிறவியிலும் நம்மோடு தொடர்ந்து நின்று, தனு கரண புவன போகங்களையெல்லாம் தந்து காத்து வருகின்ற திருவருளை மறந்து விடுகிறோம். ஓரொரு சமயத்தில் திருவருளைப் பற்றிய நினைப்பு நமக்கு வருவதுண்டு. ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்க நேரும்போது அந்நேரத்தில் மட்டும் திருவருளை நினைக்கிறோம். நமது ஆற்றலையும் மீறி, நாம் தடுக்க முயன்றும் முடியாமல் ஏதேனும் ஒரு துயர நிகழ்ச்சி நடந்து விட்டால் அப்போது திருவருள் நினைப்பு வருகிறது. மற்ற சமயங்களில் அதுபற்றிய நினைவே இருப்பது இல்லை. இவ்வாறு ஓரொரு சமயத்தில் திருவருளை நினைக்க நேர்ந்தாலும் அந்த நினைப்பு அழுத்தமாக இருப்பதில்லை என்பதே உண்மை. பாசி மூடிய குளத்தில் நீர் புலப்படுவதில்லை. அதிலே ஒரு கல்லை விட்டெறிந்தால் கல் விழுந்த அந்த நேரத்தில் மட்டும் பாசி சிறிது விலக நீர் புலப்படும். பிறகு மீண்டும் பாசி வந்து மூடிக் கொள்ளும். பாசி படர்ந்த அந்தக் குளம் போல நாம் இருக்கிறோம். கல்லெறிப்பட்ட அந்தக் கணத்தில் மட்டும் நீர் புலப்படுவது போலத் திருவருளை நினைக்க வேண்டிய நிகழ்ச்சி ஏற்படுகிற அப்போது மட்டும் திருவருளைச் சற்று நினைக்கிறோம். பற்பல பிறவிகளை எடுத்துப் பழகிய நமக்கு உலகப் பழக்கமே மீதூர்ந்து நிற்கிறது. உலகப் பழக்கம் உள்ள வரையில் திருவருளோடு பழகுதல் என்பது இயலாது.

வெற்றுயிர் :

இவ்வளவு காலமும் திருவருளோடு கலந்து நின்றும் அதைச் சற்றேனும் உணரமாட்டாத உயிரை வெற்றுயிர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். மணிவாசகர் நீத்தல் விண்ணப்பத்தில் தன்னை வெற்றடியேன் (23) என்றும், வெறுந்தமியேன் (25) என்றும் சொல்லிக் கொள்வார். வெறுமை என்பதற்குப் பயனின்மை என்பது பொருளாகும். பயனின்மையாவது, இறைவனால் தரப்பெற்ற உடம்பையும் கருவிகளையும் கொண்டு அவனது அருளைப் பெற முடியாமல் பிழைகளையே பெருக்கிக் கொள்ளுதல்; எறும்புகளிடையே அகப்பட்ட புழு வென ஐம்புலன்களுக்கு ஆட்படுதல். சுருங்கக் கூறினால், வெறுமையான வாழ்வு என்பது திருவருளை மறந்து உலக வாழ்வில் மயங்கிக் களிப்பது. இவ்வாறு வாழும் உயிரையே இச் செய்யுளில் வெற்றுயிர் என்றார் ஆசிரியர் உமாபதிசிவம்.

ஐந்தாம் அதிகாரம்

அருளுரு நிலை

கட்டு :

நாம் உடம்போடு கூடிப் பிறப்பெடுத்து வாழ்கிறோம்; உடம்பிற்கு வேறு நான் என்பதை அறியாமல் உடம்பே நான் என்று கருதி வருகிறோம்; இவ்வுடம்பிற் கட்டுண்டு நிற்கிறோம். கட்டுண்டிருக்கிறேன் என்பதையும் அறியாமல் இருக்கிறோம். உடம்பில் உள்ள ஐம்பொறிகள் நம்மை வசப்படுத்தியுள்ளன. இயல்பிலே நமக்கு விரிந்த அறிவுண்டு. நமது விரிந்த அறிவை இவ்வைம் பொறிகள் கட்டுப்படுத்தி நிற்கின்றன. வலிய வேடர்கள் வழிச் செல்வோரை மறித்து அவர்களிடமுள்ள செல்வத்தைக் கவர்ந்து கொள்வது போல இந்த ஐம்பொறிகள் நமது அறிவாகிய பெருஞ் செல்வத்தைக் கவர்ந்து சிறுமைப்படுத்தியுள்ளன. இப்படிப் பட்ட ஐம்பொறிகளோடு கூடி அவையே நாம் என்று இருக்கிறோம். அவற்றினிடத்தில் கட்டுண்டிருக்கிறோம். அவ்வாறு கட்டுண்டிருக்கிற நமது நிலையையும் அறியாமல் இருக்கிறோம்.

இவ்வாறே மண், பொன் முதலிய உலகப் பொருள்களும் நம் அறிவைத் தம் வசப்படுத்தியுள்ளன. அந்தப் பொருள்களின் கவர்ச்சியில் மயங்கி அவற்றையே விடாமல் பற்றி நிற்கிறோம். சுருங்கக் கூறினால், உடம்பும், உடம்பிலுள்ள கருவிகளும், உலகமாகிய இடமும், அங்குள்ள நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய யாவும் நம் அறிவை மீளவிடாமல் பிணித்துள்ளன எனலாம். அதுபற்றியே இவை கட்டுக்கள் எனப்படுகின்றன. கட்டு என்பது துன்பத்தைத் தருவது. ஒருவனது கையிலும், காலிலும் விலங்கு இட்டுத் தளைப்படுத்தினால் அக்கட்டு அவனுக்குத் துன்பத்தைத் தரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அவ்வாறே நாம் உடம்போடும் உலகத்தோடும் தொடக்குண்டு துன்பப்படுகிறோம்.

கட்டிற்குக் காரணம் :

இக்கட்டு நிலையும், துன்பமும் ஆகியன அறியாமையால் ஏற்படுவன. நாமல்லாத உடம்பை நாம் என்று கருதுவது அறியாமைதானே. எல்லாப் பொருள்களும் இறைவனது உடைமையாய் இருக்க, அவற்றை எனது எனது என்று கருதுவது அறியாமைதானே. எல்லாச் செயல்களும் இறைவன் செயலாய் இருக்க, என் செயல் என் செயல் என்று கூறுவது அறியாமைதானே. உயிர்க்குயிராய் உள்நின்று இயக்குபவன் அவனாய் இருக்க, நானே எல்லாம் என்று எண்ணுவது அறியாமைதானே. அறியாமை என்பது இவ்விடத்தில் தவறான அறிவை - மயக்க அறிவைக் குறிக்கும். இதனை விபரீத ஞானம் என்பர். இதுவே கட்டு நிலைக்கும் துன்பத்திற்கும் காரணம்.

ஞானம் ஒன்றே வழி :

கட்டு நிலையிலிருந்து நீங்க வேண்டுமானால் அதற்குக் காரணமாகிய அஞ்ஞானம் நீங்க வேண்டும். அஞ்ஞானம் என்பது தவறான அறிவு எனப் பார்த்தோம். தவறான அறிவு எப்பொழுது நீங்கும்? உண்மையறிவாகிய ஞானம் வரும்போது தவறான அறிவு நீங்கிவிடும். அஞ்ஞானம் இருள் போன்றது. ஞானம் ஒளி போன்றது. ஒளி வந்தாலன்றி அஞ்ஞானம் நீங்காது. கட்டு நிலையும் போகாது. எனவே கட்டிலிருந்து விடுபடுவதற்கு ஞானம் ஒன்றே வழி என்பது இதனால் விளங்கும். ஞானமாவது மெய்யறிவு. அஃதாவது பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்தல். பொருள்களாவன கடவுள், உயிர், உலகு என்பன. இம்மூன்றன் இயல்பையும் நாம் உள்ளவாறு உணர்தல் வேண்டும். நான் அறிவுப் பொருள். ஆயினும் அறிவற்ற உலகத்தோடு கூடி வாழ்கிறேன். இவ்வுலகச் சார்பு எனக்கு இயற்கையன்று. இஃது இடையில் வந்தது; இடையில் நீங்கக் கூடியது. எனக்குரிய உண்மையான சார்பு - என்றைக்கும் உள்ள நிலையான சார்பு - இறைவனாகிய சார்பேயாகும். அவனே எனக்கு வாழ்முதல். அவனே எனக்குப் புகல். அவனை அணைந்து இன்புறுதலே பிறவியெடுத்ததன் பயன். இவ்வாறு <உலக நிலையையும், நமது இயல்பையும், தலைவனாகிய இறைவனது இயல்பையும் உள்ளவாறு <உணர்தலே ஞானமாகும்.

ஞானத்தைத் தரும் ஆசிரியர் :

எந்த ஓர் அறிவையும் அதனை உடையவர்பால் பெறுவதே உயிரின் இயல்பாக இருக்கிறது. அம்முறையில், ஞானமாகிய மெய்யறிவை யாரிடம் பெறுவது? என்ற வினா எழுகிறது. அறிவைத் தரும் ஆசிரியன்மார் பல திறத்தினர். எழுத்து சொல் ஆகியவற்றை வடிவு அளவில் கற்பிப்பவர் கணக்காயர் எனப்படுவர். செய்யுட்களையும் நூல்களையும் பொருள் உணர்வு தோன்றக் கற்பிப்பவர் வித்தியாகுரு எனப்படுவர். சமயம், விசேடம் ஆகிய தீக்கைகளைச் செய்வித்துச் சிவ வழிபாட்டினைப் பிறருக்கு அளிப்பவர் கிரியாகுரு எனப்படுவர். சிவவழிபாட்டினை எவ்விதப் பயனும் கருதாது உண்மையான அன்போடு செய்துவரின் உலகியலில் உவர்ப்புத் தோன்றும். சிவனையே பற்றாக உணரும் நிலை உண்டாகும். அப்படிப்பட்ட பக்குவம் வந்த மாணாக்கர்க்கு <உயிர்ச்சார்பும் பொருட்சார்பும் ஆகிய தளைகளின் இயல்பைத் தெளிவித்துப் பாசத்தை அறுத்துச் சிவனது திருவடி ஞானத்தை உணர்த்துவோர் ஞானகுரு என்றும், ஞானாசிரியர் என்றும் சொல்லப்படுவர். இவரே ஏனை ஆசிரியர் யாவரினும் மேலானவர்.

ஞானாசிரியர் சிவமே :

ஞானாசிரியராய் வருபவர் சிவமே என்று சித்தாந்தம் கூறும். நாட்டவருள் உள்ள ஒருவர் போலத் தோன்றுகிற ஞானாசிரியர் உண்மையில் சிவமே என்பது எவ்வாறு பொருந்தும் என்ற ஐயம் எழுவது இயல்பு. இதனைத் தெளிய விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். ஆணவமலம் உயிரை வன்மையாய் பிணித்துள்ள வரையில், அந்த உயிர் உலக வாழ்வையே பெரிதாகக் கருதும்; உலகப் பொருள்களின் பின்னேயே ஓடி ஓடித் திரியும். திருவருள் நாட்டம் சிறிதும் வராது. இப்படிப்பட்ட உயிருக்கு ஞானத்தைப் பெற வேண்டும் என்ற வேட்கை தோன்றாது என்பது வெளிப்படை. இறையருளால், <உயிரைப் பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தி தேயும் காலம் வரும் பொழுது அந்த உயிருக்கு இது வரையில் இனியனவாய்த் தோன்றிய உலகப் பொருள்களின் மீது வெறுப்புத் தோன்றும். ஒப்பற்ற கடவுட் பொருளை உணர வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும். அவ்வாறு ஆணவ மலம் தன் வலி குன்றி நீங்கும் நிலையை எய்துதலே மலபரிபாகம் எனப்படும். மலபரிபாகம் சிறிது சிறிதாக வரவர, அதற்கேற்ப அந்த உயிர் உலகத்தை விடுத்து இறைவனது திருவருளை நோக்கத் தலைப்படும். திருவருளை நோக்கும் நிலையே சத்தி நிபாதம் எனப்படும். மலபரிபாகமும், சத்தி நிபாதமும் நிகழ்ந்த இந்த நிலைதான் உயிரின் பக்குவநிலை என்று சொல்லப்படுகிறது. ஞானத்தைப் பெறுதற்கு ஏற்றநிலை என்று கொள்ளப்படுகிறது.

இந்தப் பக்குவநிலை ஒருவர்க்கு வந்துற்றது என்பதை எப்படி அறிய முடியும்? பக்குவம் என்பது உயிரில் நிகழ்வது; அது வெளியே புலனாவதன்று. சில பொய்ம்மையாளர்கள் பக்குவம் உடையவர்போல நடிப்பார்கள். மெய் எல்லாம் நீறு பூசித் திகழ்வார்கள். ஆனால், செய்வதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற செயலாக இருக்கும். அவர்களது வெளித் தோற்றத்தைப் பார்த்து, என்ன பக்தி! என்ன பணிவு! என்று உலகோர் வியப்பார்கள். ஆனால் அவர்களது அகம் எவ்வளவு இரக்கமற்றது என்பதை அறியமாட்டார்கள். இதனால், வெளித் தோற்றத்தைக் கொண்டு ஒருவரது பக்குவத்தை அறிய முடியாது என்பது விளங்கும். <உள்ளே நிகழ்வதாகிய பக்குவத்தை அறியும் தகுதி உலகர்க்கு இல்லை என்றே சொல்லி விடலாம். அப்படியானால் வேறு யார் தாம் அறியவல்லார்? உயிருக்கு <<உயிராக இமைப் பொழுதும் நீங்காமல் இருக்கின்ற இறைவன் ஒருவனே அவ்வுயிரின் பக்குவத்தை அறியவல்லான். இது பற்றியே, ஆணவ மலம் தேய்ந்த நிலையையும் பார்த்தருளி இறைவனே குருவாக வந்து ஞானத்தை உணர்த்துவான் என்று சைவசித்தாந்தம் கூறுகிறது.

குரு வடிவம் :

இறைவன் குருவாகி வருவான் என்றால், நமக்கு <உள்ளது போன்ற மாயா காரியமாகிய மானுட உடம்பை எடுத்து வருவானா? என்று கேட்கலாம். அவ்வாறு அவன் மானுட உடம்பை எடுப்பான் எனில் உயிர் இனத்தவன் ஆகிவிடுவான். இறைவன் ஆகான். ஆகவே அவன் மானுட <உடம்பெடுத்து வருவான் என்றல் பொருந்தாது. இனி இறைவன் எவ்வாறு குருவடிவம் கொள்கிறான் என்பதை நோக்குவோம். மலமாகிய மாசு தீர்ந்து வாழும் தூய அறிவினராகிய ஆன்மாவைச் சுத்தான்மா என்பர். அவர் தற்போதம் இழந்து நிற்பவர்; அஃதாவது, நான் என்ற உணர்வு சிறிதும் இல்லாதவர். அவரிடத்தில் இறைவன் தயிரில் நெய் போல இனிது விளங்கி நிற்பான். (நம்மிடத்தில் பாலில் நெய்போல மறைந்து நிற்பான்) அவ்வாறு விளங்கி, அவரது இயல்புகளைக் கீழ்ப்படுத்தித் தன்னியல்பு மேம்பட நிற்பான். ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். பேயால் பிடிக்கப்பட்டவரிடத்தில் அவரது இயல்புகள் கீழ்ப்பட்டு நிற்பதையும் பேயின் இயல்புகளே நிகழ்வதையும் காணலாம். அதுபோல இறைவன் சுத்தான்மாவிடத்தில் அவரது இயல்பைக் கீழ்ப்படுத்தித் தன்னியல்பு மேம்பட்டுத் தோன்ற நிற்பான். இவ்வாறு நிற்பது ஆவேசித்து நிற்றல் எனப்படும். பேய் ஆவேசிக்கப்பட்டாரது செயல்களெல்லாம் அவர் செயல் ஆகாது பேயின் செயலே ஆவது போல, சுத்தான்மாவின் செயல்கள் யாவும் சிவனாகிய இறைவன் செயலேயாம். சுத்தான்மாவாகிய அவரே ஞானகுரு ஆவார். சிவன் அவரை ஆவேசித்து நின்று பக்குவமுடைய மாணவர்க்கு ஞானத்தை உணர்த்துவான். இதனால் ஞானகுரு நம்மனோரில் ஒருவரல்லர் என்பதும், அவர் சிவனே யாவர் என்பதும் விளங்கும்.

அதிகார வைப்பு முறை :

ஞானாசிரியர் நிலை பற்றிக் கூறுவதாகிய இந்த அதிகாரத்தை அருளது நிலைக்கு அடுத்தபடியாக வைத்த பொருத்தம் நோக்குதற்குரியது. முன்னை அதிகாரத்தில் அருளினது இயல்பும் உயிர்கள் அதனை உணரவேண்டியதன் இன்றியமையாமையும் கூறி முடித்தார் ஆசிரியர். அந்த அருளை எவ்வாறு பெறுவது? <உயிர் தனது முயற்சியினால் அருளைப் பெறுதல் என்பது இயலாது. ஞானாசிரியர் வழியாகவே அதனை உணர்ந்து பற்ற முடியும். ஆதலால் அருளது நிலையை முன்னே கூறி, அருளை உணர்தற்கு வாயிலாகிய ஞானாசிரியர் பற்றிக் கூறுவதாகிய இந்த அதிகாரத்தை அடுத்து வைத்தார் என்பது அறிதற்குரியது.

கூறப்பட்டுள்ள கருத்துக்கள் :

இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பின்வருமாறு மூன்றாய் வகுத்துக் காட்டலாம்.

1. ஞான குருவாலேயே ஞானத்தை அடைய முடியும்.
2. ஞானகுரு சிவமேயாவர்.
3. ஞானகுருவை உலகம் உணரமாட்டாது.

தொகுத்துக் காணுதல் :

உயிர் அறியாதவாறு உள் நின்று உணர்த்தி வந்த முதல்வனே அவ்வுயிரின் பக்குவ நிலையைப் பார்த்தருளிக் கண்ணாற்காணும் குரு வடிவம் தாங்கி வந்து ஞானத்தை உணர்த்துவான். ஆதலால் ஞானத்தைத் தரும் ஆசிரியரை இறைவன் எனவே தெளிந்து வழிபடுதல் வேண்டும். ஒரு வீட்டில் ஒருவர் உற்ற நோயை அவ்வீட்டில் அவருடன் வாழ்வோரே அறிந்து தீர்க்க முடியும். அதுபோல உயிருக்கு உற்ற ஆணவ மல நோயை உயிரோடு உடனிருக்கும் இறைவனே அறிந்து தீர்க்க முடியும். அவனே குருவாக வெளிவந்து தனது அருள் மொழியாலும், செய்கையாலும் அம் மலநோயை நீக்குவான். மானைக் காட்டி மானைப் பிடித்தல் என்பார்கள். இறைவனும் அச் செயலையே செய்கிறான். பக்குவ ஆன்மாவாகிய மாணவரை ஆட்கொள்ளுதற்கு அவரைப் போன்ற மக்கள் வடிவில் - குருவடிவில் - வருகிறார். மானிட வடிவில் தன்னைக் காட்டி மாணவரை வசப்படுத்துகிறார்.

எந்த ஒரு கலையையும் ஒருவர் தாமாகப் பயிலுதல் இயலாது. எக்கலையை அறிய விரும்பினாலும் அக்கலையில் வல்ல ஆசிரியரை நாடியே அதனை அறிந்து கொள்ள முடியும். ஞானத்திற்கும் இது பொருந்தும். ஆன்மாதனது உண்மை இயல்பை உணர்வது ஞானம். இறைவனை உள்ளவாறு உணர்வது ஞானம். இந்த ஞானத்தை ஒருவர் தாமே முயன்று பெற முடியாது. நூல்களாலும் பெற முடியாது. ஞானாசிரியரை நண்ணியே அதனைப் பெற முடியும். அஃதாவது, ஞானாசிரியர் உணர்த்தவே ஆன்மாவினது உண்மையியல்பும், தலைவனாகிய இறைவனது இயல்பும் உள்ளவாறு விளங்கும். இந்த ஞானத்தை இறைவன் உயிர்க்குயிராய் உள்ளிருந்தே உணர்த்தினால் என்ன? குருவாக வெளிவந்துதான் உணர்த்த வேண்டுமா? என்று கேட்கலாம். உயிரினது அறிவு படிமுறையில் விளங்கும் அறிவாகும். ஒருமுறை உணர்த்தினால் போதாது. பலகாலும் உடனிருந்து உணர்த்துதல் வேண்டும். அவ்வப்போது எழுகின்ற ஐயங்களை உடனிருந்து களைதல் வேண்டும். திருநோக்கம், பரிசம் முதலிய செய்கைகளால் பாசப் பற்றை அறுத்தல் வேண்டும். ஞானப் பொருளைக் கேட்பித்தும், சிந்திப்பித்தும், தெளிவித்தும் மாணவரை நெறிப்படுத்தல் வேண்டும். இவற்றின் பொருட்டே இறைவன் குரு வடிவம் கொள்கிறான். இங்ஙனம் தோன்றி வந்து உடனிருந்து உணர்த்தித் தெளிவித்தாலன்றி உயிர்திருவருளைத் தெளியமாட்டாது.

ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது. நஞ்சை எப்படி இறக்குவது? பாம்புக்குப் பகையாகிய கீரியை அழைத்து வந்து அவன் மேல் விழுந்து புரளும்படி செய்தாலும் நஞ்சு இறங்காது. ஆனால், கீரிக்கு உரிய மந்திர பாவனையுடையோன் வந்து நோக்கிய மாத்திரத்தில் நஞ்சு இறங்கிவிடும். அதுபோல இறைவன் உயிர்க்குயிராய் உடனிருந்தாலும் உயிரிலுள்ள ஆணவ மலமாகிய விடம் நீங்குவதில்லை. அவன் ஞானாசிரியராக வந்து தனது அருள் நோக்கால் மாணவனைப் பார்த்த அளவில் அவனிடமுள்ள மலமாகிய விடம் நீங்கிவிடும். இவ்வாறு இறைவன் குருவாய் வரவில்லையென்றால், ஞானத்தை யார் உணரவல்லார்? சூரியனது முன்னிலையில் சூரிய காந்தக் கல்லிடத்தே நெருப்புத் தோன்றும். அதுபோல ஆசான் மூர்த்தியின் முன்னிலையில் மாணவனது அகத்தே ஞானம் தோன்றும். இத்தகைய ஞானகுருவினது பெருமையை உலகத்தார் சிறிதும் உணரமாட்டார். அவர்களது அறிவுதான் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுள்ளதே. அவர்களுக்கு உண்மை எங்கே தெரியப்போகிறது! பக்குவம் இல்லாத அவர்கள் திருவருளாகிய ஞானத்தையும் அறியமாட்டார்; அந்த ஞானமேயான குரு வடிவையும் அறிய மாட்டார். இவ்வாறு இவ்வதிகாரக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறலாம்.

41. வெளிவந்து நிற்கின்ற அருள்தலைவன்

அறியாமை உள்நின்று அளித்ததே காணும்
குறியாகி நீங்காத கோ.

பொருள் : உயிர் பக்குவம் உறாதநிலையில் இறைவன் அவ்வுயிரின் உள்ளாக மறைந்து நின்று அவ்வுயிர் அறியாதபடி அதன் அறிவைச் சிறிது சிறிதாக வளர்த்து வருவான். அவ்வுயிர் உண்மையை உணர்ந்து கொள்ளும் பக்குவம் எய்திய பொழுது அவ்விறைவனே கண்ணால் காணும் வடிவினையுடைய ஞானாசிரியனாய்த் தோன்றி வந்து அப்பக்குவ ஆன்மாவுக்குத் திருவருளைத் தெளிய உணர்த்துவான்.

சொற்பொருள் :

அறியாமை - (பக்குவம் வராத காலத்தில்) சிறிதும் அறிய முடியாதபடி
உள்நின்று - <உயிர்க்குயிராய் <உள்ளே மறைந்து நின்று.
அளித்ததே - அறிவை வளர்த்து வந்த அப் பரம் பொருளே (பக்குவம் உற்ற இப்பொழுது)
காணும் குறியாகி - கண்ணால் காணத் தக்க வடிவுடன் தோன்றி வந்து
நீங்காத - நீங்காமல் உடனாய் நின்று திருவருளைத் தெளிய உணர்த்துகிற
கோ - ஞானசிரியனாகிய தலைவன் ஆவான்.

விளக்கம் :

ஞானத்தை ஒருவர் பெற வேண்டுமாயின் அதற்குரிய பக்குவத்தை அவர் முதலில் பெறவேண்டும். பக்குவம் என்பது ஞானத்தைப் பெறுதற்குத் தகுந்த அறிவு நிலையே யாகும். ஐந்து வயதுக் குழந்தைக்குத் திருக்குறளைச் சொல்லித் தரமுடியாது. அதை வாங்கிக் கொள்வதற்கேற்ற அறிவுத் திறன் அஃதாவது பக்குவம் அக் குழந்தைக்கு அப்பொழுது இல்லை. எழுத்துக்கூட்டிப் படிக்கின்ற அளவுக்குத் தான் அதன் அறிவு நிலை உள்ளது. அதன் அறிவு நிலை படிப்படியாக வளர்ந்த பிற்பாடுதான் நுண்ணிய நூல்களைக் கற்கமுடிகின்றது. மாணாக்கர் ஒரே திருக்குறளைத்தான் கீழ் வகுப்பிலும் பயில்கின்றனர்; இளங்கலை வகுப்பிலும் பயில்கின்றனர். முதுகலை வகுப்பிலும் பயில்கின்றனர். மேல் மேல் வகுப்புகளில் செல்லச் செல்ல, திருக்குறளின் பொருள் மேல் மேல் விளக்கம் அடைகிறது. அதனை நுணுகி உணர முடிகிறது. மாணாக்கரின் அறிவுநிலை படிப்படியாக நுணுகிச் செல்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அறிவு நுணுக்கமே பக்குவம் எனப்படுவது. உலகியற் கல்விக்கே தகுதி வேண்டுமானால் மெய்ப் பொருளை உணர்தலாகிய ஞானத்தைப் பெறுவதற்கு எத்துணைப் பக்குவம் வேண்டும்! உயிரின் அறிவை அறியாமையுட்படுத்தி மயங்கச் செய்வது ஆணவ மலம். ஆணவ மலம் வன்மையாய் உள்ள வரையில் அஃது உயிரறிவை நுணுகிச் செல்லவிடாது, பருப்பொருளாகிய உலகத்தையே நோக்கும்படி செய்யும். அந்த ஆணவ மலம் தேய்ந்து தேய்ந்து வரும்போதுதான் உயிரறிவு படிப்படியே அறியாமையிலிருந்து விடுபடும். அதிலிருந்து விடுபட விடுபட, உயிரறிவு நுணுகி நுணுகிச் செல்லும்; நனிநுண் பொருளாகிய இறைவனை உணரும் செவ்வியை எய்தும்; அந்நிலையில் உலகத்தை நோக்காது இறைவனது திருவருளை நோக்கத் தலைப்படும். இந்நிலையே சத்தி நிபாதம் எனப்படும். இதுவே ஞானத்தைப் பெறுதற்குரிய பக்குவ நிலையாகும்.

இதுகாறும் உயிர்க்குயிராய் மறைந்து நின்று செயற்பட்டு ஆணவ மலத்தைத் தேயும்படி செய்து உயிரறிவை வளர்த்து வந்த இறைவனே இப்பொழுது இவ்வுயிரின் பக்குவ நிலையைப் பார்த்தருளி அதற்கு மெய்யுணர்வை அளித்தற்கு ஞானாசிரியனாய் வெளிப்பட்டு வருவான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது. உயிரின் அறிவு பக்குவம் எய்தாதபொழுது சிவன் அதற்கு வினைக்கு ஈடானவற்றையே உணர்த்துவான் என்பதும், பக்குவம் எய்திய பொழுது தன்னையே உணர்த்தி நிற்பான் என்பதும் அறியத்தகும்.

42. உள்ளிருந்து காண்பவன்

அகத்துறு நோய்க்கு உள்ளினர் அன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொருள் : வீட்டில் ஒருவர் நோயுற்றால் அவரது நோயின் தன்மையை அவ்வீட்டினுள் உள்ளவரே அறிவார். வெளியில் உள்ள பிறர் அதனை அறிவாரோ? அறியமாட்டார். அதுபோல, உயிரிடத்துப் பொருந்திய அறியாமையாகிய நோயினது நிலையை உயிரினுள் இருப்பவனாகிய இறைவனே அறிய வல்லான். உலகத்தவராகிய பிறர் அதனை எங்ஙனம் அறிதல் இயலும்?

சொற்பொருள் :

அகத்து - வீட்டில் உள்ளார்க்கு
உறு - உற்ற
நோய்க்கு - நோயினது நிலையை
உள்ளினர் அன்றி - அவ்வீட்டினுள் இருப்பவர் அறிவரே யன்றி
அதனை - அதனை
சகத்தவரும் - வெளியில் உள்ள பிறர்
காண்பரோ - அறிவரோ? அறிய மாட்டார். (அதுபோல)
அகத்து - உயிரின் அகத்து
உறு - பொருந்திய
நோய்க்கு - அறியாமையாகிய நோயினது நிலையை
உள்ளினர் அன்றி - உயிரினுள் நிற்பவனாகிய இறைவனே அறிவான். அவனை யன்றி
அதனை - அவ் அறியாமை நிலையை
சகத்தவரும் - உலகத்தவராகிய பிறர்
காண்பரோ - அறிய வல்லவரோ? அறியார்.

விளக்கம் :

அகம் என்பது வீடு. உள்ளினர் என்பது அவ்வீட்டினுள் உடன் உறைபவரைக் குறிக்கும். உவமைக்கு ஏற்ப, இச்சொற்களுக்கு இவ்வாறு பொருள் கொள்ள வேண்டும். இனி, உவமேயப் பொருளுக்கு ஏற்ப, அகம் என்பதற்கு உயிர் எனவும், உள்ளினர் என்பதற்கு உயிரின் உள்ளே உறைபவராகிய இறைவன் எனவும் பொருள் கொள்ள வேண்டும். பெரிய பதவியில் உள்ள அதிகாரி ஒருவர். அவருக்கு அன்று தாங்க முடியாத தலை நோவு. அதனால், அலுவலகத்திற்குச் செல்லவில்லை. அவரது மனைவிக்கு மட்டும்தான் நோய் பற்றித் தெரியும். அவள்தன் கணவருக்கு அருகில் இருந்து வேண்டும் உதவிகளைச் செய்து கொண்டிருந்தாள். நோய்க்கு உரிய மருந்துகளைக் கொடுத்தாள்; அதற்கேற்ற முறையில் உணவு செய்து கொடுத்தாள்.

இதற்கிடையில் வெளியே பல இடங்களிலிருந்து பல மனிதர்கள் அவரைத் தேடி வந்தார்கள். பரிந்துரைக் கடிதம் கேட்டுச் சிலர் வந்தார்கள். தமது குறைகளை முறையீடு செய்யச் சிலர் வந்தார்கள். அவரது அ<லுவலகப் பணி தொடர்பாகச் சிலர் வந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் அவரது நோய் நிலை பற்றித் தெரியாது. வெளியிலிருந்து ஒரு காரியமாக வந்தனர்; பேசினர்; சென்றனர். அவ்வளவுதான். அவரது நோய் நிலை பற்றித் தெரிந்தவர் ஒருவர்தான். அந்த வீட்டில் உடனிருந்த அவரது துணைவியார்தான் அந்த ஒருவர். இதுவரை சொன்னதை உவமையாகக் கொண்டு, செய்யுளின் பொருளுக்கு வருவோம். உயிரை ஒரு பெருநோய் பிடித்து வருத்துகிறது. அதுதான் மலமாகிய நோய். உயிரில் உடனிருப்பவனாகிய இறைவன்தான் அந்த நோயின் தன்மையை அறிவான். அந்த நோய்க்கு ஏற்றவாறு அவன் வினைப் போகம் ஆகிய மருந்தினை ஊட்டி வருகிறான். இவற்றால் மலமாகிய பிணி சிறிது சிறிதாகத் தேய்ந்து வரும்.

அறியாமை தேயாதிருக்கும் பொழுது உயிருக்கு அருளின் மீது நோக்கம் செல்லாது. உலக நாட்டமே மிகுந்திருக்கும். அந்த நிலையில் அவ்வுயிர்க்கு அருளை உணர்த்தி என்ன பயன்? பசி ஏற்படாதவனுக்கு உணவை வழங்கினால் அது அவனுக்குப் பயன்படுமா? தாகம் எடுக்காதவனுக்குத் தண்ணீர் தரலாமா? அதுபோல, அருள் வேட்கையில்லாதவர்க்கு அருளை உணர்த்திப் பயனில்லை. அதுபற்றியே அறியாமை தேயாத பொழுது அருளை உணர்த்துவது குற்றம் என்று சொல்லப்படுகிறது. இனி, அறியாமை தேய்ந்த நிலைதான் பக்குவம் எனப்படும். பக்குவம் உடையவர் அருள் ஒன்றையே நாடி நிற்பர். அப்படிப்பட்டவர்க்கு அருளை உணர்த்துவது இன்றியமையாதது. அதுபற்றியே அறியாமை தேய்ந்தபின் அவர்க்கு அருளை உணர்த்தாதிருப்பதும் குற்றம் என்று சொல்லப்படுகிறது. அறியாமை தேய்தல் என்பது அகத்தின் கண் நிகழ்கின்ற நிகழ்ச்சி யாகும். அதனை வெளியில் உள்ள பிறமாந்தர் அறிதல் இயலாது. உயிர்க்கு உயிராய் உள் நிற்கின்ற முதல்வனே அறியாமை தேய்ந்த நிலையை உணர்வான். உணர்ந்து, ஞானாசிரியனாக வந்து அருளை உணர்த்துவான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.

மற்றொரு பொருள் :

இச்செய்யுளுக்கு இன்னொரு வகையிலும் பொருள் கூறலாம். உடம்பிற்கு வந்த நோயின் தன்மையை அந்த உடம்பில் உறைகின்ற உயிர் அறியுமே யன்றி, அதன் தாய் தந்தையர் உற்றார் உறவினர் முதலிய பிறர் அறியமாட்டார். எடுத்துக் காட்டுக்கு ஒன்று கூறலாம். ஒருவருக்கு அடிவயிற்றில் குடல் இறங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாகியும் வலி தெரிவதில்லை. அதனால் அவரும் அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார். யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து விடுகிறார்.

அவருடம்பில் குடலிறக்கம் இருக்கிறது என்பதை அவர் மட்டுமே அறிவார். உலகத்தார் அறிய மாட்டார். அவருக்கு வலியும் வேதனையும் ஏற்பட்டு அறுவை மருத்துவம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை வரும்போது, அந்த நிலையை உணர்ந்து அவர் அதனைப் பிறருக்கு எடுத்துச் சொல்லும்போதே மற்றவர்களும் அதனை அறியும்படியாக நேர்கிறது. இதுபோலத் தமது உடம்பில் உள்ள நோய்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் வாழ்வோர் பலர். இதனையே அகத்துறு நோயை உள்ளினர் அறிவாரேயன்றிச் சகத்தவர் அறிவாரோ என்று இச்செய்யுள் கூறுகிறது. அகம் என்பது உடம்பைக் குறிக்கும். உள்ளினர் என்பது உடம்பில் உறையும் உயிரைக் குறிக்கும். உடம்பில் உற்ற நோயின் நிலையை அவ்வுடம்பில் வாழும் உயிரே அறியமுடியும். அதுபோல, உயிரில் உற்ற ஆணவ மலமாகிய நோயின் தன்மையை அவ்வுயிரில் உறைபவராகிய இறைவனே அறிய வல்லார். உலகத்தார் அறியமாட்டார். இப்படிப் பொருள் கூறுதற்கும் இச் செய்யுள் இடம் தந்து நிற்கிறது.

43. குருவின் நிலையை உலகர் உணராமை

அருளா வகையால் அருள் புரிய வந்த
பொருளா அறியா புவி.

பொருள் : சிவமாகிய முதற்பொருளே நேர் நின்று அருளாமல் குரு வடிவில் மறைந்து நின்று அருள் செய்ய நினைந்து இவ்வாறு வந்திருக்கிறது என்பதை உலகத்தார் உணரமாட்டார்கள்.

சொற்பொருள் :

அருளா வகையால் அருள்புரிய - நேரே வந்து அருளாமல், குருவடிவில் மறைந்து நின்று அருள் புரிதற்கு
வந்த - வந்திருக்கின்ற
பொருளா - சிவமாகிய முதற்பொருள் என்று
புவி - உலகத்தார்
அறியா - ஞானகுருவை உணர மாட்டார்கள்.

விளக்கம் :

உண்மையை உணரும் பக்குவம் இல்லாத உலக மக்கள் ஞானாசிரியரைத் தம்மில் ஒருவராகவே கண்டு போவர். ஞானாசிரியர் சிவமே என்பது பக்குவம் உடைய மாணாக்கர்க்கே விளங்குவதாகும். இதனை விளக்கும் நிகழ்ச்சியொன்றை இங்கே குறிப்பிடலாம். துறையூரில் ஒரு சிவாச்சாரியார் சிறந்து விளங்கினார். சகலாகம பண்டிதர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தார். மெய் கண்டார் ஆகிய ஞானக் குழந்தை பிறப்பதற்கு அவர்தம் தந்தையாருக்கு வழியருளிச் செய்தவர் இவரேயாவர். அக்குழந்தை மூன்றாண்டு நிரம்பாத அப்பிள்ளைப் பருவத்திலேயே இறையனுபவம் கைவரப் பெற்று ஞானத்தை உபதேசித்து வருவது பற்றிக் கேள்விப்பட்டார் சகலாகம பண்டிதர். அக் குழந்தையைக் காண விரும்பித் திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்றார். அங்குள்ளோர் அவரைச் சிறப்பாக வரவேற்று, மெய்கண்டார் ஆகிய அக்குழந்தை இருக்குமிடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். மெய்கண்டார் தம் மாணவர்களுக்கு ஆணவ மலம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அந்நிலையில் அவர் முன்னே போய் நின்றார் சகலாகமபண்டிதர். தம்மை அக்குழந்தை வந்து வணங்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவ்வாறு நிகழவில்லை. அதனால் அவர் உள்ளத்தில் சிறிது வருத்தம் உண்டாயிற்று. அத்தோடு தம்மை விட அக்குழந்தைக்கு என்ன தெரியும் என்ற எண்ணமும் எழுந்தது.

அவர் மெய்கண்ட தேவரைப் பார்த்து ஆணவ மலத்தின் இயல்பு யாது? எனக் கேட்டார். மெய் கண்டார் மறுமொழி ஏதும் கூறவில்லை. அவரை அடிமுதல் முடிவரை ஏற இறங்க நோக்கித் தமது வலக்கைச் சுட்டு விரலால் அவரையே சுட்டிக் காட்டினார். மெய்கண்ட தேவரது அருள்நோக்கத்தால் சகலாகம பண்டிதரிடமிருந்த ஆணவ மலம் அடியோடு அகன்றது. சிவனே குழந்தை வடிவில் ஞானகுருவாய் எழுந்தருளியிருப்பதை உணராதபடி செய்தது தம்மிடமிருந்த மலச் செருக்கே என்று உணர்ந்தார். மெய்கண்டாரை கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருளி மணணிடை வந்த சிவனாகவே தெளிந்து, அவரது திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார். மெய்கண்ட தேவர் அவரை ஆட்கொண்டு அருள்நந்தி என்னும் தீக்கைப் பெயர் சூட்டித் தம் மாணாக்கருள் அவரைத் தலைவராகக் கொண்டருளினார். மலம் நீங்கிய பக்குவர்க்கே ஞானாசிரியர் நிலை உள்ளவாறு விளங்கும் என்பதை இந்நிகழ்ச்சி வாயிலாக அறியலாம். உலகத்தார் உணராமற் போவதற்குக் காரணம், அவரிடமுள்ள பக்குவமின்மையே என்பது சொல்லாமலே விளங்கும். இதுபற்றி அடுத்த செய்யுளில் எடுத்து விளக்குவார் ஆசிரியர்.

44. உலகர் உணராமைக்குக் காரணம்

பொய் இருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய் இரண்டும் காணார் மிக.

பொருள் : ஆணவ மலமறைப்பினால் இருண்ட அறிவினையுடைய, பக்குவம் இல்லாத மாந்தர் ஞானமாகிய அருளையும் அறியார். அந்த அருளின் வடிவாகிய ஞானகுருவின் நிலையையும் அறியார்.

சொற்பொருள் :

பொய் - ஆணவ மல மறைப்பினால்
இருண்ட - அறியாமையே வடிவான
சிந்தை - அறிவினை உடையவராகிய
பொறியிலார் - திருவருளைப் பெறும் பக்குவம் இல்லாதவராகிய உலகர்
போதம் - ஞானம் ஆகிய அருளும்
ஆம்மெய் - அந்த அருள் கொண்டதாகிய குருவடிவும்
இரண்டும் - ஆகிய இவ்விரண்டையும்
மிகக் காணார் - முற்றிலும் அறிய மாட்டார்.

விளக்கம் :

பொய் :

ஆணவ மலத்தைப் பொய் என்ற சொல்லால் குறித்தார் ஆசிரியர். ஆணவ மலம் தன்னைப் பற்றியிருக்கிறது என்பதை உயிர்கள் சிறிதும் அறியமாட்டா. அம்மலம் உயிருக்குப் புலனாகாமல் உயிரின் கண் இல்லை என்று சொல்லும்படி பொய்ப் பொருள் போல் நிற்றலின் அதனைப் பொய் என்றார்.

பொறியிலார் :

பொறி என்பதற்கு, இவ்விடத்தில் பக்குவம் என்று பொருள் கூறப்பட்டது. திருவருளைப் பெறும் பக்குவம் இல்லாதவர் பொறியிலார் எனப்பட்டார். அவர்கள் அருளும் அருள் கொண்டதாகிய குரு வடிவும் ஆகிய இரண்டினையும் அறிய மாட்டார். அதற்குக் காரணம் ஆணவ மலமேயாகும். ஆணவமலம் உடையார்க்கு <உண்மை விளங்காது.

அருளும் குருவடிவும் :

போதமாம் மெய்யிரண்டும் என்ற தொடரை போதம், ஆம் மெய் ஆகிய இரண்டும் எனப் பிரித்து வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். போதம் என்பது ஞானம். இங்கு இறைவனது ஞானமாகிய அருளைக் குறித்தது. ஆம் மெய் என்பது அந்த அருள் கொண்டதாகிய குருவடிவு எனப் பொருள்படும். சிவனே குரு வடிவம் கொள்வான் என்று இதுவரை கூறிவந்து இங்கு, அருளே குருவடிவம் கொள்கிறது என்று கூறுவது ஏன்? என்று கேட்கலாம். சிவனும் அருளும் தம்மில் வேறல்ல என்பதை உணர்ந்தால் இவ்வினா எழாது. குருவாய் நின்று உணர்த்துவது சிவனே என்றாலும், குருவாய் நின்று உணர்த்துவது அருளே என்றாலும் பொருள் ஒன்றேதான். மலமாசு தீர்ந்து வாழும் தூய ஆன்மா ஆனவரின் அறிவில் இறைவனது அறிவாகிய அருள் விளங்கி நின்று அவ்வான்ம அறிவைத் தன் வயப்படுத்துகிறது. தன் வயப்படுத்துதலுக்கு ஓர் எடுத்துக் காட்டுக் கூறலாம். உலையில் இட்ட இரும்பை உலைத் தீ தன்னுள் அடக்கி அவ்விரும்பினிடத்தில் தீயே விளங்கி நிற்கிறது. இரும்பின் தன்மை கீழ்ப்பட்டு அடங்க, தீயின் தன்மையே மேம்பட்டு நிற்கிறது. இரும்பின் தன்மை என்பதின்றித் தீயே உள்ளது என்று சொல்லும்படி அவ்விரும்பைத் தீ தன் வயப்படுத்தி உள்ளது. அதுபோல இறைஞானமாகிய திருவருள் சுத்தான்மாவின் அறிவைத் தன்னுட்படுத்தி தானேயாய் விளங்கி நிற்கிறது.

தீயாய் நின்ற இரும்பு சுடுதலைச் செய்கிறது. இரும்பா அத்தொழிலைச் செய்கிறது? இரும்பை வயப்படுத்தி நின்ற தீயின் தொழில் அல்லவா அது? அதுபோல சுத்தான்மாவாகிய குருநாதர் ஞானத்தை உணர்த்துகிறார் என்றால், அச்செயல் அவர் செயலன்று. அவரறிவைத் தன்னுட்படுத்தி மேம்பட்டு நிற்பதாகிய அருள் செய்கின்ற செயல் அது. இதனால் அருள் குருவாய் நின்று உணர்த்துமாறு இனிது விளங்கும். இதுபற்றியே ஞானமாகிய அருளும், அந்த அருள் கொண்டதாகிய குருவடிவும் ஆகிய இரண்டையும் போதம் ஆம் மெய் இரண்டும் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர்.

45. குருவடிவாகிய போர்வை

பார்வை யென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை யெனக் காணா புவி.

பொருள் :

பழகிய விலங்கைக் காட்டிக் காட்டு விலங்குகளைக் கைப்பற்றுவதுபோல, இறைவன் நம்மைப் போல் இருப்பவராகிய ஞான குருவைக் கொண்டு பக்குவ ஆன்மாக்களை வயப்படுத்தி ஆட்கொள்ளுகிறான். இறைவன் தன்னை மறைத்துக் கொண்டு வரும் போர்வையே குருவடிவம் என்ற உண்மையை உலகத்தார் உணர மாட்டார்.

சொற்பொருள் :

பார்வையென - காட்டு விலங்குகளைக் கைப்பற்றுவதற்கு வாயிலாக வேடர் பழக்கி வைத்திருக்கும் பார்வை விலங்கு போல
மாக்களை - பக்குவ ஆன்மாக்களை
முன்பற்றிப் பிடித்தற்கு - ஆட்கொள்ளுதற் பொருட்டு
ஆம் போர்வை யென - இறைவன் தன்னை மறைத்துக் கொண்டுவரும் போர்வையே குருவடிவம் என்று
புவி - <உலகத்தார்
காணா - உணர மாட்டார்கள்.

விளக்கம் :

தீ இரும்பைத் தன் வண்ணம் ஆக்குவது போலச் சுத்தான்மாவாகிய குருவைச் சிவன் தானாக்கி விடுவான். அந்நிலையில் அந்தக் குரு சிவனேயாவார். அவர் சிவனேயான தன்மை பக்குவம் வாய்ந்த மாணவர்க்கு இனிது புலப்படும்.

சற்குருவின் செயல் :

சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவர் தன்னை அடைந்த மாணவர் பலருள்ளும் பாசப்பற்று அறும் பக்குவத்தை எய்திய மாணவனுக்கே ஞானத்தை உணர்த்துவார். அவர் ஒரு வார்த்தையைச் சொல்வாராயின், அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச் செய்யும். அவர் தனது அருள் மொழியாலும், திருவடி சூட்டலாலும் தன்னை அடைந்த மாணவராகிய பசுவைப் பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்க வல்ல சற்குரு ஆவார். மேற்கூறியவற்றால், ஞானகுரு தோற்றத்தால் நம்மில் ஒருவர் போல இருப்பினும் உண்மையில் அவர் நம்மின் வேறானவர் என்பது விளங்கும். ஓர் உவமை மூலம் இக்கருத்தை விளங்க வைக்கிறார் ஆசிரியர் <உமாபதிசிவம்.

பார்வை விலங்கும், குரு வடிவமும் :

வேடர்கள் காட்டு விலங்குகளைக் கையகப்படுத்துவதற்காக அவ்வவ் இனத்து விலங்கினைப் பழக்கி வைத்திருப்பர். அது பார்வை விலங்கு எனப்படும். அவ்விலங்கினைக் கொண்டு அவ்வினத்தைச் சேர்ந்த காட்டு விலங்குகளை அழைக்கச் செய்து பின் அவற்றைக் கைப்பற்றுவர். இந்தப் பார்வை விலங்கு போன்றது குரு வடிவம். பார்வை விலங்கைக் கண்டு ஏனைய விலங்குகள் அச்சமின்றி அணுகி வரும். அதுபோல இறைவன் தன்னை மறைத்துக் கொண்டு நிற்கும் குருவடிவம் பக்குவ ஆன்மாக்கள் ஆகிய மாணவர்கள் அச்சமின்றி அணுகி ஆட்படுவதற்கு வாயிலாய் உள்ளது.

நம்மின் வேறானவர் :

பார்வை விலங்கு தோற்றத்தால் ஏனைய விலங்குகள் போல இருப்பினும் உண்மையில் அவற்றினின்றும் வேறானதுபோல, ஞான குருவும் நம்மனோர் போலத் தோன்றினாலும் <உண்மையில் அவர் நம்மின் வேறானவரே யாவார்.

46. அருளாசிரியரின் இன்றியமையாமை

எமக்கு என்? எவனுக்கு எவை தெரியும் அவ்வ
தமக்கு அவனை வேண்டத் தவிர்.

பொருள் : எந்த ஒருவனுக்கு எந்தக் கலை தெரியுமோ அந்தக் கலையை அறிந்து கொள்வதற்கு அந்த ஒருவனது துணையையே நாட வேண்டியுள்ளது. அப்படியிருக்க, ஞானமாகிய அரிய பொருளை அறிய விரும்பும் நாம் அந்த ஞானத்தை உணர்த்தும் வல்லமையுடைய ஞானாசிரியரின் துணையை அல்லவா நாட வேண்டும்? அப்படிச் செய்யாமல், ஞானாசிரியரின் துணை இல்லாமலே ஞானத்தைப் பெறலாம் என்று கருதுவது பேதமையாகும்.

சொற்பொருள் :

எவனுக்கு - எவன் ஒருவனுக்கு
எவை தெரியும் - எக் கலைகள் நன்கு தெரியுமோ
அவ்வ - அக் கலைகளை
தமக்கு - தாம் தெரிதற் பொருட்டு
அவனை வேண்ட - அவனது துணையையே உலகத்தார் நாடி நிற்றல் எங்கும் காணப்படும் இயல்பாக இருக்க,
எமக்கு - ஞானத்தைப் பெற விரும்பும் எமக்கு
தவிர் - அதனை உணர்த்த வல்ல ஞானாசிரியரின் துணையைத் தவிர்தல்
என்? - எவ்வாறு கூடும்?

விளக்கம் :

இச்செய்யுளின் நடை, அதன் பொருள் எளிதில் விளங்காதபடி கடினமான முறையில் அமைந்துள்ளது. எனவே, சொற்களைப் பின்வருமாறு அமைத்துக்கொண்டு பொருள் செய்தல் வேண்டும். எவனுக்கு எவை தெரியும் - எவன் ஒருவனுக்கு எக் கலைகள் தெரியுமோ? அவ்வ தமக்கு அவனை வேண்ட - அக்கலைகளை அறிந்து கொள்வதற்கு அந்த ஒருவனது துணையை நாடுதலே உலகத்தில் காணப்படும் இயல்பாக இருக்க, தவிர் எமக்கு என்? - ஞானத்தை உணர்த்தவல்ல ஞானாசிரியர் துணையைத் தவிர்தல் ஞானத்தை உணர விரும்பும் நமக்கு எங்ஙனம் கூடும்? இதன் பொருளை மேலும் சிறிது விளக்குவோம். வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் ஓர் இளைஞன் சமையல் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ள விரும்பினான். கடைக்குச் சென்று சமையல் செய்வது எப்படி என்பது பற்றிய வகைவகையான புத்தகங்களில் சிலவற்றை வாங்கி வந்தான். அவற்றைப் படித்துப் பார்த்தபோது அவனுக்குக் குழப்பந்தான் உண்டாயிற்று. ஏனென்றால் ஒன்றில் உள்ளது போல, மற்றொன்றில் இல்லை. ஏதோ ஒரு வகையாகத் தாளில் குறிப்பெடுத்துக் கொண்டு சிற்றுண்டி செய்து பார்த்தான். தோசை மாவைக் கல்லில் வார்த்துப் பெயர்த்து போட முயன்றான். ஆனால், அது கல்லோடு அத்துவித இயைபு கொண்டு விட்டது போலும்! திருப்பிப் போட முடியாதபடி அது கல்லோடு ஒட்டிக் கொண்டு விட்டது. மற்றொரு சமயம், உப்புமா என்ற பெயரைப் பார்த்து உப்பை அள்ளிப் போட்டு விட்டான் போலும்! அதைக் கீழே கொட்டுவதைத் தவிர வேறுவழியில்லை. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். சமையல் புத்தகங்களை யெல்லாம் மூட்டை கட்டி வைத்தான். பேசாமல் (சமையல் தெரிந்த) ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டான்.

எளிய சமையலு<க்குக் கூட நூல்கள் கைகொடுத்து உதவாதபோது, இசை நாட்டியம் போன்ற நுண் கலைகளை அவை பற்றிய நூல்களைப் பயின்றே ஒருவர் தெரிந்து கொண்டு விடலாம் என்று கூறுவது எவ்வளவு அறியாமை என்பது புலனாகும். அவ்வக் கலைகளில் வல்ல ஆசிரியரைத் துணையாகக் கொண்டே அக்கலைகளை நாம் அனுபவமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு அவ்வாசிரியரிடம் பல காலம் முறையாகப் பயில வேண்டும். அவரது வழிகாட்டுதல் மூலமாகவே அக்கலைகளைப் பற்றிய நுணுக்கங்களைப் பெற முடியும். உலகியல் கலைகளின் நிலையே இவ்வாறிருக்க, உலகியல் கடந்த பொருளாகிய ஞானத்தை ஞானாசிரியர் இல்லாமலே நூல்கள் வழியாகப் பெற்றுவிட முடியும் என்று கூறுவது எத்துணைப் பேதைமை என்பது இதனால் விளங்கும். ஞானாசிரியன் இல்லாமல் கற்கும் போது ஞான நூல்களின் பொருள் விளங்காமல் நிற்கும்; அல்லது மாறுபாடாகத் தோன்றும். ஆதலால் ஞானநூல்கள் ஞானகுரவன் இன்றிப் பொருள் தெளிவைத் தரமாட்டா. சத்தி நிபாதம் என்னும் பக்குவம் வரப்பெற்றோர், தாமே மெய்ந்நெறியை உணர்ந்து ஒழுக முடியாதா? அவருக்கும் ஞானாசிரியர் வேண்டுமோ? என்று கேட்கலாம். பிறவியிலேயே கண்ணில்லாதவன் ஒருவன் மருத்துவ முறையினால் கண் பார்வை பெற்றான் என்றால், அவன் பொருள்களைக் காணும் திறனைப் பெற்றவன் ஆகிறான். ஆனால், இது இன்னபொருள் என்பதை அவனால் உணர முடியாது. அந்தப் பொருளை அறிந்த வேறொருவன் உணர்த்தவே அவன் அதனை உணர்தல் கூடும். அதுபோல, சத்தி நிபாதம் என்னும் பக்குவநிலையில் ஆணவ மல மறைப்பு நீங்கப் பெற்றவர் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணரும் ஆற்றலைப் பெறுவரே யன்றித் தாமே அப் பொருள்களின் இயல்பைத் தெரிந்து கொள்ள மாட்டார். அவற்றின் இயல்பையெல்லாம் உணர்ந்த ஞானாசிரியர் உணர்த்தவே அவற்றை உணர்ந்து கொள்ள முடியும். சத்தி நிபாதம் வரப் பெற்றோர்க்கும் அருளாசிரியரின் துணை இன்றியமையாதது என்பதை இச்செய்யுளில் வலியுறுத்தியுள்ளார் உமாபதி சிவம்.

47. இருள் நீங்குவது குருவின் திருநோக்கால்

விடம் நகுலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளும்
கடனில் இருள் போவது இவன் கண்.

பொருள் : பாம்பு கடித்து ஏறிய நஞ்சானது, பாம்புக்குப் பகையாகிய கீரியே வந்து கடிபட்டவன் உடல் மீது விழுந்து புரண்டாலும் நீங்காது. ஆயின், மாந்திரிகன் ஒருவன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவித்து அந்த மந்திர வடிவேயாக நின்று பார்க்கும் பார்வையினால் அந்தவிடம் நீங்குவதாகும். உயிரில் உள்ள மலமாகிய இருள் நீங்குவதும் இம்முறைமையில் ஆகும். இறைவன் உயிர்க்கு உயிராக உடன் நின்ற போதிலும் <உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை. இறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தாலேயே அது நீங்குவதாகும்.

சொற்பொருள் :

விடம் - பாம்பு கடித்து ஏறிய நஞ்சு
நகுலம் - பாம்புக்குப் பகையாகிய கீரியே
மேவினும் - நேரே வந்து பாம்பு தீண்டியவனது உடல்மேல் விழுந்து புரண்டாலும் (நீங்காது. ஆனால்)
மெய்ப்பாவகனின் - மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கவல்ல உண்மையான மாந்திரிகனது பார்வையால்
மீளும் - நீங்கும்
கடனில் - முறைமை போல
இருள் - ஆணவ மலமாகிய இருள்
போவது - நீங்குவது
இவன் - (உ<யிர்க்கு <உயிராய் உள் நிற்கும் சிவனால் அன்றி) சிவமேயாய் நிற்கும் ஞானகுருவின்
கண் - திருநோக்கினால் ஆகும்.

விளக்கம் :

இறைவன்தான் ஆன்ம அறிவில் எப்பொழுதும் நீங்காமல் இருக்கிறானே. அவ்வாறு இருக்கின்ற அவன் உள்ளிருந்தபடியே ஆணவ மலத்தை நீக்கக் கூடாதா? என்று கேட்கலாம். அக்கேள்விக்கு விடையாகவே இச் செய்யுளை அமைத்துள்ளார் ஆசிரியர். மாந்திரிகளை உவமை காட்டி மேற்கூறிய ஐயத்தைத் தெளிவிக்கிறார். கருட பாவனை என்பது நூல்களில் சொல்லப்படுகிறது. அதனை அறிந்து கொண்டால் இச் செய்யுளில் கூறப்பட்டுள்ள பாவகன் நிலை எளிதில் விளங்கிவிடும். மந்திர நூல்களில் உலகப் பொருள் ஒவ்வொன்றும் மூன்றாகப் கொள்ளப்படுகிறது. அவை பவுதிகப் பொருள் என்பன. பவுதிகப் பொருள் என்பது உலகத்தில் நாம் கண்ணாற் காணும் பொருள். அப்பொருளுக்குரிய மந்திரம் ஆன்மிகப் பொருள் எனப்படும். அம் மந்திரத்தை இடங்கொண்டு பயன்தரும் அதி தெய்வம் தைவிகப் பொருள் எனப்படும். கருடனிடத்திலும் இவ்வாறு மூன்று உள்ளன என அறியலாம். நாம் காணும் கருடப் பறவை ஆதி பவுதிக கருடன். அதற்குரிய மந்திரம் ஆதி ஆன்மிக கருடன். அந்த மந்திரத்திற்குரிய அதி தெய்வம் ஆதி தைவிக கருடன். இங்கே, அதி தெய்வம் என்றது சிவனது சத்தியேயாகும். அச் சத்தியே மந்திர வடிவாய் நின்று அம்மந்திரத்தைக் கணிக்கும் மாந்திரிகனுக்குப் பயன் தருகிறது.

மாந்திரிகன் அந்தச் சக்தியைத் தியானிக்கிறான்; அந்தச் சத்தியையே தானாகப் பாவிக்கிறான். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது என்பது நாம் அறிந்தது. அம்முறையில் மாந்திரிகனது ஆன்மா மந்திர வடிவாய் உள்ள சத்தியைத் தானாகப் பாவித்தால் அந்தச் சத்தி மயமாய் ஆகி விடுகிறது. அதனால் அவன் கருடனாகவே நிற்கிறான். அவனது உடம்பு கருடனாக மாறவில்லை. அவன் மந்திர கருடனை நாள்தோறும் தியானித்துப் பழகிய பயிற்சியினால் அவனது ஆன்மா அக்கருடனே தானாய் நிற்கிறது. எனவே, கருடனாய் நிற்கிறான் என்பதற்குப் பொருள், மந்திர வடிவாய் நிற்கிறான் என்பதே யாகும். அவ்வாறு நின்று அவன் பாம்பினால் கடியுண்டவனைத் தன் மந்திரக் கண்கொண்டு பார்ப்பானாயின் விடம் நீங்கியொழியும். சிவசத்தியே மந்திர வடிவாய் நின்று விடத்தை நீக்குகிறது. இக்கருடபாவனை போல மாந்திரிகன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கின்ற பாவனையை இச்செய்யுளில் கூறியுள்ளார் ஆசிரியர். கருடபாவனை பற்றி மேலே சொன்ன அத்தனையும் இப்பாவனைக்கும் பொருந்தும். கீரியே நேரே வந்தும் பாம்பின் விடம் நீங்காமை, இறைவன் உயிரில் பொருந்தியிருந்தும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்காமைக்கு உவமையாகும். மந்திர வடிவாய் நிற்கும் பாவகன் அருள் மயமாய் நிற்கும் குருவிற்கு உவமையாவான். பாவகனது மந்திரப் பார்வையால் விடம் நீங்குதல், குருவினது அருள் நோக்கத்தால் மலம் போவதற்கு உவமையாகும். இறைவன் சகலர் ஆகிய உயிர்களுக்கே இவ்வாறு குருமூர்த்தி வழியாக மலத்தைப் போக்கி ஞானத்தை உணர்த்துவான். சகலரினும் மேம்பட்ட வேறு உயிர்களுக்கு அவன் வேறு வகையில் உணர்த்துவான். அம்முறைகளை அடுத்த செய்யுளில் நாம் காணவிருக்கிறோம்.

48. மூவகை உயிர்களுக்கும் ஞானம் உணர்த்தும் முறை

அகலர்த் தரும் அருளை; ஆர்க்கும் வினை நீக்கும்;
சகலர்க்கு வந்து அருளும் தான்.

பொருள் : இறைவன் விஞ்ஞானகலர் ஆகிய உயிர்களுக்கு உள்ளிருந்தே ஞானத்தை உணர்த்துவான்; பிரளயாகலர் ஆகிய உயிர்களுக்குத் தெய்வ வடிவில் முன்தோன்றி அவரைப் பிணித்துள்ள வினையை நீக்கி ஞானத்தை அருள்வான். சகலர் ஆகிய உயிர்களுக்கு ஆசிரியர் வடிவில் வந்து அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வான்.

சொற்பொருள் :

தான் - இறைவன்
அகலர்(க்கு) - விஞ்ஞானகலர் ஆகிய அகலர்க்கு
அருளைத் தரும் - குருவாகி வராமலே உள்நின்று ஞானத்தை உணர்த்திவிடுவான். (பிரளயாகலர் ஆகிய அகலர்க்கு இறைவன் தனது இயற்கை வடிவத்துடன் முன்னே நின்று)
ஆர்க்கும் வினை - அவரைப் பிணித்துள்ள வினையாகிய கட்டினை
நீக்கும் - அறுத்து ஞானத்தை உணர்த்துவான்
சகலர்க்கு - (இனி, மேற்கூறிய இருவர் போலன்றி) மாயாமல பந்தம் உடையவராகிய சகலர்க்கு
வந்து - குரு வடிவில் பின்நின்று
அருளும் - அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வான்.

விளக்கம் :

மூவகை உயிர்களும் இறைவன் உணர்த்தவே ஞானத்தைப் பெறும் என்பதும், அவர் தம் பக்குவ வேறுபாட்டிற்கு ஏற்ப அவர்களுக்கு ஞானத்தை உணர்த்தும் முறை ஒரே வகையாக அமையாமல் வெவ்வேறாய் அமையும் என்பதும் இச்செய்யுளில் கூறப்பட்டன. அகலர் பற்றியும், சகலர் பற்றியும் உயிரவை நிலையில் (செய்யுள் 12,13) விரிவாக அறிந்தோம். விஞ்ஞான கலரும், பிரளயா கலரும் அகலர் எனப்படுவர். அவ்விருவருக்கும் இறைவன் அருள்புரியும் முறைமை முதலடியில் கூறப்பட்டுள்ளது. முதலடியில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியம் விஞ்ஞான கலர் பற்றியது. இரண்டாம் வாக்கியம் பிரளயாகலர் பற்றியது. எனவே, விஞ்ஞானகலர்க்கு (உள்நின்று) அருளைத் தரும்; பிரளயாகலருக்கு (முன்நின்று) ஆர்க்கும் வினையை நீக்கும் எனப்பொருள் கொள்ள வேண்டும்.

ஆணவம் ஆகிய ஒரு மலம் மட்டுமே உடையவர் விஞ்ஞான கலர். அம்மலமும் அவர்களிடம் மிக மெல்லியதாய் வாசனை அளவாய் நிற்கும். அஃது அவர்கள் அறிவை மயக்காது. ஆதலால் அவர்களுக்கு இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்தினாலே போதும். அவர்கள் ஞானம் பெற்று விடுவர். பிரளயாகலரிடத்தில் ஆணவமலம் வன்மையாயும் இல்லாமல், மென்மையாயும் இல்லாமல், இடைப்பட்ட நிலையில் இருக்கும். அவர்களுக்கு வினையும் உண்டு. இவ்வாறு இருமலம் உடையவராயிருப்பர். இம்மலங்களால் ஓரளவு மயங்கும் நிலை அவர்களுக்கு இருக்கும். அவர்களில் பக்குவம் உடையவர்களுக்கு இறைவன் நான்கு தோள்களும், முக்கண்ணும், கறைமிடறும் ஆகிய தனது இயற்கை வடிவத்துடன் முன் தோன்றி ஞானத்தை உணர்த்துவான். இனி, சகலர் என்போர் மும்மலம் உடையோர். ஆணவ மலம் அவர்களை வன்மையாய்ப் பற்றியிருக்கும். வலியவினையும் அவர்களைப் பிணித்திருக்கும். பெரு மயக்கத்தைச் செய்கின்ற பிரகிருதி மாயையின் தொடக்கத்தில் அகப்பட்டவர்கள் அவர்கள். அவர்களில் பக்குவப்ட்டவர்களுக்கு ஞானத்தை வேறு முறையில் தான் உணர்த்தவேண்டும். பிரளயாகலருக்குப் போல, இவர்களுக்கும் நேர் நின்று அருள் புரிய இறைவன் தனது உண்மை வடிவில், அஃதாவது நான்கு தோள்களும் நெற்றிக் கண்ணும் நீலகண்டமும் ஆகிய வடிவில், முன்னே தோன்றினால் அவர்கள் அதைக் கண்டு அஞ்சி விடுவர். மக்கள் வடிவிற்கு வேறுபட்ட எந்த வடிவமும் அவர்களுக்கு அச்சத்தையே தருவதாகும். அதுபற்றியே சகலராகிய பக்குவான்மாக்கள் அச்சமின்றி அணுகுதற் பொருட்டு இறைவன் தனது உண்மை வடிவில் தோன்றாமல் ஆசிரியர் வடிவில் மறைந்து நின்று ஞானத்தை உணர்த்துவான் என்பது கூறப்பட்டது.

49. ஞான நெறியை யார் அறிவார்?

ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும்
பேரறிவான் வாராத பின்.

பொருள் : ஆசை முதலிய குற்றங்களை யெல்லாம் அகன்றொழியச் செய்வது ஞானம். அப்படிப்பட்ட ஞானத்தைத் தர வல்லவன் முற்றறிவினை உடைய இறைவன் ஒருவனே. அவன் குருவாய் வந்து உணர்த்தாவிடின் மெய்யுணர்வாகிய ஞானத்தை யார்தாம் உணரமுடியும்?

சொற்பொருள் :

அருளும் - ஞானத்தை அருளவல்ல
பேரறிவான் - அறிவே வடிவான இறைவனே
வாராதபின் - குருவாக வாராவிடில்
எல்லாம் அகன்ற நெறி - ஆசை முதலிய குற்றமெல்லாம் அகலும்படியாகச் செய்வதாகிய ஞானத்தை
ஆர் அறிவார் - யார் தாம் உணர இயலும்? (ஒருவரும் உணர மாட்டார்)

விளக்கம் :
நெறி :

நெறி என்பதற்கு வழி என்பது பொருள். வீடு அடைவதற்கு நேர் வழியாய் இருப்பது ஞானமே. அதுபற்றியே ஞானத்தை நெறி என்று குறிப்பிட்டார் ஆசிரியர். சிலர் வேள்வியே வீட்டிற்கு வழி என்பர். சிலர் தானம், தவம், விரதம் முதலியன வீட்டைப் பயக்கும் என்பர். தீக்கை பெற்றாலே போதும், அதுவே வீடெய்துவிக்கும் என்பார் உளர். திருத்தலப் பயணம் செய்தல், புண்ணிய நதிகளில் நீராடுதல் முதலியவை முத்தியைப் பயக்கும் என்று கூறுவோர் உண்டு. இப்படிப் பல வழிகள் இருக்க, ஞானமே வீட்டிற்கு வழி என்று கூறுவது ஏன்? என்று கேட்கலாம். இதற்கு விடை கூறுவோம். மேற் கூறின வெல்லாம் நல்ல கதிக்கு வழிகளே என்பதில் ஐயமில்லை. ஆனால், அவை முத்திக்கு நேர்வழிகள் அல்ல என்பதை உணர்தல் வேண்டும். அவற்றை மேற்கொண்டால், இப் பிறப்பிலோ, வேறொரு பிறப்பிலோ ஞானத்தைப் பெறுதற்குரிய பக்குவம் வாய்க்கும். பின் நல்லாசிரியரை அடைந்து ஞானத்தைப் பெற்று வீடு எய்துதல் கூடும். எனவே ஞானத்திற்குரிய பக்குவத்தைப் பெறுதற்குத் துணை செய்வன என்ற வகையில் அவையெல்லாம் ஞானத்தை அடைதற்கு வழிகளே யன்றி, முத்திக்கு நேரே வழியாவன அல்ல. வேள்வி, தானம், தீக்கை முதலிய எவையாயினும் அவையெல்லாம் ஞானத்தைத் தந்து, பின், ஞானம் வழியாக முத்தியைத் தரும் என்பதே உண்மை. ஆகவே, ஞானம் இல்லாமல் முத்தியை அடைதல் இயலாது எனவும், ஞானமே முத்திக்கு நேர்வழி எனவும் அறியலாம். இன்னொன்றையும் கருதல் வேண்டும். ஞானம் இன்றியே வேள்வி, தானம் முதலியவை வீட்டைத் தருதல் இயலும் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? ஞானம் இல்லாமலும் முத்தியடையலாம் என்பதுதானே அதன் பொருள். ஞானம் இல்லாத நிலை என்பது அஞ்ஞானம்தானே. ஞானம் இன்றியே வீட்டை அடையலாம் என்றால் அஞ்ஞானத்தில் இருந்து கொண்டே முத்தி நிலையைப் பெறலாம் என்று ஆகிவிடுகிறது. இஃது எவ்வாறு பொருந்தும்?

அஞ்ஞானத்தால் <உண்டாவது கட்டுநிலை என்று அறிந்திருக்கிறோம். எனவே அஞ்ஞானத்தில் இருந்து கொண்டே வீட்டையடையலாம் என்றால் கட்டுநிலையே வீட்டுநிலை என்றாகி விடும்! இதை விட நகைப்பிற்கு இடமானது வேறு என்ன இருக்க முடியும்? ஆதலால், ஞானம் இன்றிப் பிறவகையினாலும் முத்தியைப் பெறலாம் என்பது சற்றும் பொருந்தாத கூற்றேயாகும். ஞானமாகிய ஒளி வர, அஞ்ஞானமாகிய இருள்தானே விலகி, முத்தி எளிதில் கைகூடும். ஆகவே ஞானம் ஒன்றே முத்திக்கு நேர்வழி எனவும், ஞானம் தவிர வேறு எதுவும் முத்தியை நேரே தரவல்லது ஆகாது எனவும் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். சிவஞான போதம் ஞானத்தை நன்னெறி என்று குறிப்பிடும். இங்கு நம் ஆசிரியர் ஞானத்தை நெறி என்ற சொல்லால் குறித்துள்ளார்.

எல்லாம் அகன்ற நெறி :

பக்குவப்படுவதற்கு முன்பு ஒருவன் எப்படியெல்லாமோ வாழ்கிறான். வீடு, வாசல், செல்வம் ஆகிய இவையே நிலையானவை என்று எண்ணுகிறான். உண்மையிலே துன்பம் கொடுப்பன எல்லாம் அவனுக்கு இன்பமாகத் தோன்றுகின்றன. யார் யாரையோ தனக்கு உறவு என்றும், அவர்கள் தாம் தன்னைத் தாங்குவார்கள் என்றும் நம்புகிறான். ஊர் வேண்டும், பேர் வேண்டும், உற்றார் வேண்டும் என்று அவற்றையே மெய்யென்று நினைத்து வேண்டுகிறான். ஆனால், பக்குவம் வந்தவுடன் - குருநாதரை அடைந்து அவரது <உபதேசத்தைப் பெற்றவுடன் - இந்த உலக மயக்கம் போய் விடுகிறது. முன்பு எவற்றை மெய் யென்று பாராட்டினானோ அவற்றை இப்பொழுது பொய் என்று தெளிந்து வெறுத்து ஒதுக்குகிறான். இறைவன் ஒருவனே மெய்ப் பொருள்; அவனே உயிர்த் துணை என்ற ஞானம் கைவந்தவுடன் உலக ஆசை முதலிய குற்றங்களெல்லாம் ஓடி மறைகின்றன.

இக்கருத்தைத் திருமூலர் தமக்கே உரியமுறையில் சுவைபட ஒரு விடுகதை போலச் சொல்லுகிறார். எனக்கென்று ஒரு தோட்டம் இருந்தது. சில தீயவர்கள் அதிற் புகுந்து அதனைத் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டனர். நானும் அவர்களோடு ஒட்டியே வாழும்படி நேர்ந்தது. ஒரு சமயம் சிறிது இடத்தைத் தோண்டிக் குழி செய்து கத்தரி விதையை ஊன்றினேன். என்ன வியப்பு! அந்த விதையினின்று பாகற்கொடி முளைத்துப் படர்ந்தது. அப்பாகற் கொடியோ பூசணிப் பூவைப் பூத்தது. அந்தப் பூவோ வாழைக்காயைக் காய்த்தது. அந்தக் காய் பழுத்துக் கனிந்தது. அங்கே குடியிருந்த அந்த அற்பர்கள் இதையெல்லாம் பார்த்து அஞ்சி விட்டனர். எனக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஓடி விட்டனர். இவ்வாறு திருமூலர் தாம் கூறவந்த பொருளை வெளிப்டையாகக் கூறாமல் மறைத்துக் கூறியுள்ளார். அவர்கூற வந்த பொருளை நோக்குவோம். ஆன்ம அறிவு என்பதைத்தான் அவர் தோட்டம் என்று குறிப்பிடுகிறார். காமம், வெகுளி, மயக்கம் முதலிய குற்றங்களே அதில் குடியிருந்த அற்பர்கள். குழியைத் தோண்டியது என்பது அவர் ஒரு குருநாதரை அடைந்து வழிபட்டமையைக் குறிக்கும். அதில் கத்தரியை விதைத்தது அவர் குருவின் உபதேசத்தைக் கேட்டதைக் குறிக்கும். கத்தரி விதையினின்றும் பாகற்கொடி முளைத்தது என்பது, குருவின் உபதேசத்தைப் பெற்றவுடன் அவருக்கு உலகியலில் வெறுப்புத் தோன்றிய நிலையைச் சுட்டுவதாகும். பாகற்கொடி பூசணிப் பூவைப் பூத்தது என்பது, உலகின் மேல் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியிலிருந்து வீடு பேற்றில் விருப்பம் உண்டாயிற்று என்பதை உணர்த்துகிறது. வாழைக்கனி பேரின்ப வாழ்வைக் குறிக்கிறது. அந்தத் தீயவர்கள் அஞ்சி ஓடினார்கள் என்பது ஞானம் வந்தபின் காமம், வெகுளி முதலிய குற்றங்கள் ஆன்ம அறிவை விட்டு அகன்றமையைக் குறிப்பதாகும். இவ்வாறு பாசப்பற்று முதலிய குற்றமெல்லாம் அகலும் படியாகச் செய்வது ஞானம் ஆதலின் ஞானத்தை எல்லாம் அகன்ற நெறி என்றும், குருவடிவில் நின்று அதனை அருளும் இறைவனைப் பேரறிவான் என்றும் குறிப்பிட்டார் நம் ஆசிரியர்.

50. அருட் குரு இன்றி ஞானம் வரும்!

ஞானம் இவன் ஒழிய நண்ணியிடும்; நற்கல் அனல்
பானு ஒழியப் படின்.

பொருள் : சூரிய காந்தக் கல்லினிடத்தில் சூரியனது ஒளி படாமலே நெருப்புத் தோன்றுதல் கூடுமாயின், ஆன்மாவினிடத்தில் அருட்குரு இல்லாமலே ஞானம் தோன்றுதல் கூடும்.

சொற்பொருள் :

நற்கல் - நல்ல சூரிய காந்தக் கல்லினிடத்தில்
பானு ஒழிய - சூரியவொளி படாமலும்
அனல் - நெருப்பு
படின் - தோன்றுதல் கூடுமாயின் (நன் மாணாக்கரிடத்தில்)
இவன் ஒழிய - ஞானகுரு  இல்லாமலும்
ஞானம் - ஞானமானது
நண்ணியிடும் - வந்து பொருந்துதல் கூடும்

விளக்கம் :

ஆசிரியர் கையாளும் உத்தி :

கவிஞர்கள் <உலகில் நடக்க முடியாத செயலை நடக்கக் கூடியது போலக் காட்டி வியப்புணர்ச்சியைத் தோற்றுவித்து, முடிவில் அது நடக்க முடியாத செயலே என்பதைப் பெறவைப்பர். இவ்வுத்தியை வடமொழி நூல்களிலும் தமிழ் நூல்களிலும் காணலாம். சுவேதா சுவதர உபநிடதத்தில் இவ்வாறு அமைந்த ஒரு வாக்கியம் வருகிறது. எப்பொழுது ஆகாயத்தைத் தோல் போல் சுருட்டுதல் கூடுமோ, அப் பொழுது சிவனை உணராமல் துன்பத்திலிருந்து நீங்குதல் கூடும் என்பது அவ்வாக்கியம். இவ்வுபநிடத வாக்கியத்தை அப்படியே எடுத்துத் தமது காஞ்சிப் புராணத்தில் அமைத்துக் கொண்டார் சிவஞானமுனிவர். மானுடன் விசும்பைத் தோல் போல் சுருட்டுதல் வல்லோனாயின் ஈனமில் சிவனைக் காணாது இடும்பை தீர் வீடும் எய்தும் என்பது காஞ்சிப்புராணப் பகுதி. சிவபெருமானை உணராமலே ஒருவர் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அஃது எப்படி முடியும்? இஃது எக்காலத்திலும் நடக்க முடியாத செயலல்லவா? ஆயின், நடக்கும் என்று கூறப்பட்டுள்ளதே. இது என்ன வியப்பு! அந்த வாக்கியத்தின் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு இவ்வாறு வியப்படைகிறோம். முழுமையாக நோக்கினால்தான் உண்மை விளங்கும். ஆகாயத்தை எங்காவது சுருட்டி வைக்க முடியுமா? அஃது எவராலும் செய்யக் கூடிய செயலில்லை. எனவே ஆகாயத்தைச் சுருட்டி வைப்பது முடியுமானால் சிவனை உணராமலே துன்பத்திலிருந்து விடுபடுதலும் முடியும் என்பதன் கருத்து சிவபெருமானை உணராமல் யாரும் பிறவித் துன்பத்திலிருந்து நீங்க முடியாது என்பதேயாகும். இந்த முறையிலேதான் நமது ஆசிரியர் உமாபதி சிவமும் கூறுகிறார்.

இதுவரையில் அருளாசிரியன் இல்லாமல் ஞானம் பெறுதல் இயலாது என்பதை வலியுறுத்தி வந்த ஆசிரியர் இங்கு அருளாசான் இன்றியும் ஞானம் கிடைத்துவிடும் என்று கூறிப் படிப்பவர்க்கு வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தி விடுகிறார். என்ன இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாரே என்று எண்ணத் தோன்றும். ஆனால் செய்யுளின் பிற்பகுதியில் கூறியுள்ளதையும் சேர்த்து வைத்துப் பார்க்கும்போதுதான் அவர் கூறியதில் எந்த மாறுபாடும் இல்லை என்பது தெளிவாகும். சூரிய காந்தக் கல்லிடத்தில் சூரியன் இல்லாமலே நெருப்புத் தோன்ற முடியுமோ? அஃது எக்காலத்திலும் நடக்க முடியாத செயல். அப்படி நடக்குமானால் ஆன்மாவிடத்தில் அருட்குரு இல்லாமலே ஞானம் தோன்றும் என்கிறார் ஆசிரியர். அதன் கருத்து, அருட்குருவையின்றி ஞானம் நிகழாது என்பதேயாகும்.

அருட்குருவினால் பாசங்கள் அகலுதல் :

உயிர் சூரியகாந்தக் கல் போன்றது. உயிரை மறைத்துள்ள பாசத்தை சூரிய காந்தக் கல்லை மூடியுள்ள பஞ்சுபோலக் கொள்ளலாம். சூரிய காந்தக் கல் தனியே இருக்கும் பொழுது தன்னை மூடியுள்ள பஞ்சினைச் சுட மாட்டாது. அதுபோல ஆன்மா தனியே நின்று தன்னைப் பிணித்துள்ள பாசத்தை நீக்கிக் கொள்ள மாட்டாது. அச்சூரிய காந்தக் கல் சூரியன் வந்த பொழுது அதன் ஒளிக் கதிரைப் பெற்றுத் தன்னை மூடியுள்ள பஞ்சினைச் சுட்டெரிக்கும். அது போலச் சிவன் ஞானாசிரியனாய் வந்த பொழுது ஆன்மா அக்குருவின் அருளைப் பெற்றுத் தன்னைப் பிணித்துள்ள மலங்களை அகன்றொழியச் செய்யும். இக்கருத்து செய்யுளில் கூறப்படவில்லை யாயினும் ஒரு பொருத்தம் கருதி வருவித்து உரைக்கப்பட்டது.

ஆறாம் அதிகாரம்

அறியும் நெறி

அருள் உருவாகிய ஞானாசிரியர் நிலை பற்றி முந்திய அதிகாரத்தில் அறிந்தோம். அவரே பக்குவ ஆன்மாவுக்கு உய்யும் வழியைக் காட்டவல்லவர். முப்பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு உணரும்படி உணர்த்தி ஆன்மாவைக் கட்டினின்றும் விடுவித்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானிடத்து அன்பை உண்டாக்கி, அவனது திருவடியைப் பற்றிக் கொள்ளுமாறு செய்பவர்.

பயன் மூன்று :

ஞானாசிரியரால் ஆன்மா எய்தும் பயன் மூன்றாகும். அவை பாசநீக்கம், அருள் விளக்கம், இன்பப்பேறு என்பன. ஆசிரியர் தமது <உபதேசத்தால், இவ்வுலகில் ஈட்டப்படும் செல்வமும், யாக்கையும் அவற்றின் மேல் செய்யும் பற்றும் ஆகிய யாவும் பொய் எனவும், முதல்வனது திருவருள் ஒன்றுமே மெய் எனவும் காட்டுவார். அவரது அருளுரையைக் கேட்ட காலத்தில் மாணவர் உள்ளத்தில் அருள் தோற்றம் சிறிது உண்டாகும். மருள் சிறிது நீங்கும். பின்னர் அவரது அருளுரையைச் சிந்தித்துத் தெளிந்த காலத்தில் ஆன்ம அறிவில் அருள் விளக்கம் மேலிடும். அவ்வாறு அருள் மிக்கு விளங்கியபோது மருள் முற்றும் நீங்கும். இதுவே பாச நீக்கமும் அருள் விளக்கமும் ஆகும். பின் அருள் ஒளியால் சிவத்தை உணர்ந்து அதில் அழுந்தும் நிலை உண்டாகும். இதுவே இன்பப் பேறு ஆகும்.

ஞானச் செய்திகள் மூன்று :

இந்த ஞானச் செய்திகளை மூன்று நிலைகளாக வகுத்துக் காட்டுகிறார் ஆசிரியர் <உமாபதிசிவம். இதனை அவரது சிவப்பிரகாச நூலிற் காணலாம். அம்மூன்று நிலைகளாவன ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்ம லாபம் என்பன. இவ்வுடம்பின் தன்மை எனக்கு உரியதன்று எனத் தன்னை உடம்பின் வேறாகக் காணுதல் ஆன்ம தரிசனம் ஆகும். உயிர் பதிஞானமாகிய திருவருளைப் பற்றும் காலத்தில் இந்த ஆன்ம தரிசனம் நிகழும். பின் திருவருள் ஒளியை முற்றப் பெற்று மல இருளாகிய மாசு நீங்கி விளக்கம் பெறுவது ஆன்ம சுத்தி ஆகும். என்செயலென ஒன்றில்லை எனத் தன்பணியை நீத்து அனைத்தையும் திருவருட் செயலாகக் காணும் காலத்தில் இந்த ஆன்ம சுத்தி நிகழும். உயிர் வற்றாத சிவானந்தப் பெருங்கடலில் திளைப்பது ஆன்ம லாபம் ஆகும். உயிர் திருவருள் வழியாகச் சிவத்தை அறிந்து அதில் அழுந்துங் காலத்தில் இந்த ஆன்ம லாபம் நிகழும்.

சிவப்பிரகாச நூலில் இம் மூன்றினையும் செறிவாகக் கூறிச் சென்ற ஆசிரியர் அவற்றையே மாணவர்க்கு ஏற்ற முறையில் எளிமைப்படுத்தியும், விரிவுபடுத்தியும், தனித்தனி அதிகாரமாக அமைத்துத் திருவருட்பயனில் கூறியுள்ளார். ஆன்ம தரிசனம் கூறுவது அறியும் நெறி என்னும் அதிகாரமாகும். ஆன்ம சுத்தியைக் கூறுவது உயிர் விளக்கம் என்னும் அதிகாரமாகும். ஆன்ம லாபம் கூறுவது இன்புறு நிலை என்னும் அதிகாரமாகும்.

கேட்டல் :

பக்குவம் வாய்ந்த உத்தமனாகிய மாணாக்கனுக்கு ஞானாசிரியர் பின்வருமாறு உணர்த்துவார். நீ உனது உடம்பு, ஐம்பொறிகள் முதலிய கருவிக் கூட்டத்தில் அகப்பட்டு அவற்றோடு வேற்றுமையின்றி அவையே நான் என மயங்கி நின்றாய். அவற்றிற்கே தோற்றமுண்டு; வளர்ச்சியுண்டு; அழிவுண்டு. பசி, தாகம், நோய் முதலியன வெல்லாம் அவற்றிற்கே உரியன. உயிராகிய <உனக்கு இவையெல்லாம் உண்மையில் இல்லையாகவும், நீ அக் கருவிகளோடு ஒற்றுமைப்பட்டு நின்றமையால் அவற்றிற்கு உரிய அத்தன்மைகளை உன்னுடையனவாகக் கருதி நின்றாய். நான் பிறந்தேன். நான் வளர்ந்தேன். நான் மெலிந்தேன். நான் பசித்தேன். நான் நோயுற்றேன் என்றெல்லாம் கருதுவது அறியாமையாகும். நீயோ சித்துப் பொருள். உனக்குத் தோற்றமேது! அழிவேது? சடமாகிய <உடம்பு முதலியவற்றிற்கே இம் மாற்றங்கள் உண்டு. உனக்கு யாதொரு மாற்றமும் இல்லை. சித்தாகிய நீ சித்தாகிய சிவத்தைச் சேர்வதே இயற்கை. எனவே உன் இனம் அல்லாத, சடப்பொருள் ஆகிய கருவிக் கூட்டங்களின் தொடர்பை விட்டொழிப்பாயாக. சிவத்தைச் சார்ந்து சிவத்தின் தன்மைகளை உன்னுடையனவாகப் பெற்று, வரம்பிலா இன்பத்தில் என்றும் ஒரு நிலையாய் இருப்பாயாக என்று உபதேசிப்பார்.

மேற்கூறிய <உபதேசத்தைக் கேட்ட மாணவர் மிகு சத்தி நிபாதம் உடையவராயிருப்பின் அப்பொழுதே தன்னைக் கருவிகளின் வேறாகக் கண்டு, ஆன்ம தரிசனமும், ஆன்ம சுத்தியும் விரைவாக நிகழப் பெற்று, வேறு எவற்றிலும் பற்றில்லாதவராய், சிவபெருமானது திருவடி ஒன்றையே பற்றிக்கொண்டு ஆன்ம லாபம் ஆகிய பேரின்பத்தைப் பெறுவர். அதிதீவிர நிலையில் உள்ள இவர்களுக்குக் கேட்டபொழுதே பாச நீக்கமும் சிவப்பேறும் உண்டாகி விடும். ஏனையோர்க்கு இந்நிலை உடனே வாய்ப்பதில்லை. அவர்கள் கேட்டலின் பின்னர் சிந்தித்தல், தெளிதல் என்றபடி நிலைகளில் சில காலம் நின்று முடிவில் சிவத்தைப் பெறுவர். அவர்களை நோக்கியே அறியும் நெறி முதலாக இனிவரும் அதிகாரங்களை அமைத்தார் ஆசிரியர் <உமாபதிசிவம்.

சிந்தித்தல் :

அறியும் நெறியாவது, ஞானாசிரியர் அறிவுறுத்திய அருள் மொழியின் பொருளைச் சிந்தித்து உணரும் முறையாகும். ஆசிரியரின் உபதேசத்தைப் பெற்று நான் யார்? என்பதைச் சிந்திக்கின்ற போது இந்த உடம்பு நானல்ல, ஐம்பொறிகள் நான் அல்ல. நாடி நரம்புகள் நானல்ல என இவ்வாறு கருவிகளை ஒவ்வொன்றாகக் கழித்துக் கொண்டு செல்லும் நிலை உண்டாகும். இவற்றுள் ஒரு பொருளையும் நான் எனக் கொள்ளுதல் கூடாமையால் உண்மையில் நான் யார் என்பதை அறியும் வேட்கை மேலும் எழும். இந்நிலையில், நான் யார்? என்னும் இந்த ஆராய்ச்சி அறிவு நமக்கு எப்படி உண்டாயிற்று? என்ற சிந்தனை வரும். இந்த ஆராய்ச்சியுணர்வு உடம்பின் அகத்தும் புறத்தும் உள்ள கருவிகளால் உண்டாகியிருத்தல் இயலாது. ஏனெனில், அக் கருவிகள் எல்லாம் புறப் பொருள்களைப் பற்றிய உணர்வைத் தருமேயன்றி மெய்யுணர்வைத் தரமாட்டா. அவ்வாறாக, நான் யார் என்ற ஆராய்ச்சியுணர்வும், நான் இந்த உடம்பு முதலிய பொருள்களுள் எதுவும் அல்ல என்னும் துணிவுணர்வும் நமக்கு உண்டானது எவ்வாறு என்று ஆழ்ந்து நோக்கினால், நம்முடைய அறிவுக்கு அறிவாய் உள்நின்று அறிவிக்கும் பொருளே இந்த ஆராய்ச்சி யறிவைத் தந்தது என்பது புலனாகும். அவ்வாறு உள்நின்று அறிவித்தது பதியினது ஞானமாகிய திருவருளேயாகும். இங்ஙனம் சிந்திக்கும் முறையில் உயிர்தன் உள்ளதாகத் திருவருளை உணர்ந்து பற்றும். ஆசிரியர் உரைத்த அறிவுரையின்படி, தற்போதமும் உலகப் பற்றும் இன்றி நிற்பின், உயிர் உணர்வில் அத்திருவருள் விளங்கி நிற்கும். மாணவனாகிய ஆன்மா திருவருளைப் பற்றும் நிலையையும், ஆசிரியர் அவனுக்கு அறிவுறுத்தும் பொருளையும் அறியும் நெறியாகிய இவ்வதிகாரத்தில் நாம் காணலாம்.

அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவை: இனி, இவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை நோக்குவோம். அருளாசிரியர் தம்மை அணுகி வரும் மாணாக்கர் பலராக இருப்பினும் அவருள் தகுதி வாய்ந்தவர்க்கே உண்மையை உபதேசிப்பார். தகுதியாவது, உயிரின் கண் இருவினையொப்பு மலபரிபாகம், சத்தி நிபாதம் என்னும் இவை நிகழப் பெறுதல். மல பரிபாகம் என்பது ஆணவ மலம் தேய்ந்து நீங்கும் நிலைமையை அடைதலாகும். மலத் தேய்வினால் உயிருக்கு உலக நாட்டம் நீங்கும். மல பரிபாகத்தின் அறிகுறியே இரு வினையொப்பு. இருவினை ஒப்பாவது நல்வினை தீவினைகளின் பயனாய்த் தனக்கு வருகின்ற இன்ப துன்பங்களை ஒப்பாக எண்ணி இரண்டிலும் விருப்பு வெறுப்பு அற்று இருத்தல். சத்தி நிபாதம் என்பது இறைவனது மறைத்தற் சத்தி அருளாக மாறி உயிருணர்வில் பதிதல். இப்பக்குவம் வரப்பெற்றவரே பிறவி துன்பத்தைத் தருவது என்பதை உணர்ந்து, அதற்கு அஞ்சி, வீடு பேற்றை அவாவி நிற்பர். அவருக்கே அருட் குரவர் ஞானத்தை உணர்த்துவார். அவருக்கே குருவினது உபதேசம் பயன் தருவதாகும். குருமுகமாக மாணவர் முதலில் அறிய வேண்டுவது பொருள்களின் எண்ணிக்கை, அவற்றின் இயல்பு, அவற்றுக்கிடையே உள்ள தொடர்பு முதலியனவாகும். அம்முறையில், கடவுள், உயிர்கள் ஆணவம், கன்மம், சுத்தமாயை, அசுத்தமாயை என்னும் ஆறும் என்றும் உள்ள பொருள்கள் என்பதை அறிதல் வேண்டும். பின் இவை ஆறும் செய்வினை, செய்பவன், செய்வினையின் பயன், சேர்ப்பவன் என நான்காகத் தம் முள் தொடர்புற்று நிற்கு முறையையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். இதற்குமேல் அறிய வேண்டுவது தனக்கும் திருவருளுக்கும் உள்ள தொடர்பாகும். திருவருள் உயிரிடத்து எப்போதும் பிரிப்பின்றி உடனாய் உள்ளது. உடம்பு வாழ்வதற்கு உயிர் வேண்டும். அதுபோல உயிரின் அறிவு, செயல்களுக்குத் திருவருளினது துணை எப்பொழுதும் வேண்டும்.

உயிர் பளிங்கு போன்றது. பளிங்கு தன்னருகில் உள்ள பொருள்களின் நிறங்களைப் பற்றி நிற்றலும் உண்டு. அவற்றைப் பற்றாமல் தன் ஒளியே விளங்கி நிற்றலும் உண்டு. பிற நிறங்களைப் பற்றி நிற்றல் பளிங்கிற்குப் பொதுவியல்பு. தன் ஒளியே விளங்கி நிற்றல் அதற்கு உண்மையியல்பு. இவ்விரண்டு இயல்பையும் பளிங்கிற்குத் தருவது சூரிய வொளியே யாகும். உயிருக்கும் பொது வியல்பு, உண்மையியல்பு என இரண்டு இயல்புகள் உண்டு. ஐம்பொறிகள், மனம் முதலிய கருவிக் கூட்டங்களைச் சார்ந்து அவையேயாய் நிற்பது பொது வியல்பு. கருவிகளைத் தனக்கு வேறாகக் கண்டு அவற்றின் நீங்கி வியாபகமாய் நிற்றல் உண்மையியல்பு. கட்டு நிலையில் விளங்குவது பொதுவியல்பு. முத்தி நிலையில் விளங்குவது உண்மையியல்பு. கட்டு நிலையில் சிற்றறிவும், முத்திநிலையில் வியாபக அறிவும் உண்டாகும். இவ்விரண்டு நிலைகளையும் தருவது திருவருளேயாகும். உயிரிடத்தில் பொது, உண்மை என்ற இவ்விரண்டு இயல்புகளையும் விளங்கச் செய்வது திருவருளே யாகும். ஞானாசிரியர் மாணவனுக்கு இவ்வாறு திருவருள் உண்மையை உணர்த்துவார். அதனைக் கேட்ட காலத்தில் திருவருளைப் பற்றிய உணர்வு ஆன்மாவிடத்தில் பொதுவாக நிகழும். பின்னர் அதனைச் சிந்திக்கின்ற போது திருவருளைப் பற்றிய உணர்வு ஐயமாக நிகழும். ஐயவுணர்வு என்பது, உலகியலை விடமுடியாத நிலையாகவும், திருவருளை உறுதியாகப் பற்ற மாட்டாத நிலையாகவும் இருக்கும். கயிறு முற்றிலு<ம் அறாமல், அறுந்து விழும் நிலையில் உள்ள ஊசற்பலகையை இங்கு ஒப்பிடலாம். அப்பலகையின் நிலை எப்படியிருக்கும்? அது கயிற்றிலும் உறுதியாக நில்லாது; தரையிலும் விழாது. அது போலத் திருவருளையும் சாராமல், <உலகியலிலும் நில்லாமல் அங்கும் இங்குமாய் அலமரும் நிலையே இந்த இடைப்பட்ட ஐயநிலை எனலாம். எல்லாம் திருவருட் செயல் என்பதை உணர்ந்தாலும் என் செயல் என்ற உணர்வை விட இயலாது நான் என்று எழும் தற்போதத்தை நீக்கிக் கொள்ள இயலாது. இந்நிலையில் அருட்குரவர் உடனிருந்து மாணவனைத் தெளிவிப்பார். ஐம்பொறிகளின் செயல் எப்படி உன் செயல் ஆகின்றதோ, அப்படியே உன் செயல் யாவும் திருவருட் செயலேயாகும் என்று காட்டுவார். கருவிகளால் வருவதாகிய பாச ஞானத்தை விடுத்துத் திருவருள் ஞானத்தையே உனது ஞானமாகக் கொண்டு காண்பாயாக எனவும், அந்த அருள் ஞானமே கண்ணாக முதற்பொருளைக் கண்டு அதில் அழுந்தி விடுவாயாக எனவும் அறிவுறுத்துவார். மேற்கூறிய பொருள் நிலையைக் கருத்திற் கொண்டு இனி அதிகாரத்துட் புகுவோம்.

51. அறியும் நெறிக்கு உரியவர்

நீடும் இருவினைகள் நேராக நேராதல்
கூடும் இறைசத்தி கொளல்.

பொருள் : முன்னே செய்து கொண்ட இருவினைகளின் பயன்களாய் வருகின்ற இன்பத் துன்பங்கள் ஆன்ம அறிவில் சமமாய் உணரப்படும் நிலை வருங்காலத்தில் அந்த ஆன்மா இறைவனது திருவருளைப் பெறுதல் கூடும்.

சொற்பொருள் :

நீடும் இரு வினைகள் - மேன்மேல் தோன்றி முடிவின்றிப் பெருகி வருகின்ற இருவினைகளது பயன்களாகிய இன்பத் துன்பங்களை
நேராக - (அவற்றை நுகர்வோன்) சமமாக உணர்ந்து
நேராதல் - விருப்பு வெறுப்பின்றி நடுவு நிலையாய் நிற்பானாயின்
இறைசத்தி - இறைவனது திருவருளை
கொளல் கூடும் - அவன் பெறுதல் கூடும்.

விளக்கம் :

நீடும் இரு வினைகள் :

வினைகள் மேன் மேல் தோன்றி முடிவின்றிப் பெருகி வரும். அவை தோன்றிப் பெருகும் முறையைச் சிறிது விளக்குவோம். பழ வினையின் பயனாக ஒருவருக்கு ஒரு நன்மை வரவுள்ளது என வைத்துக் கொள்வோம். அஃதாவது அவருக்கு எதிர்பாராத வகையில் ஒரு பதவி உயர்வு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவர் வாளா இருப்பாரா? அதுவரும் வரையில் பொறுமை காத்து இருக்க முடியுமா? அப்படியிருந்தால், தனக்கு வேண்டாதவர் யாரேனும் இடையில் புகுந்து தனக்குக் கிடைக்காதபடி செய்து விட்டால் என்ன செய்வது? ஆதலால் விரைவுபடுத்தி அதனைப் பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். அதன் பொருட்டு இரவு பகலாக அலைகிறார். மேலிடத்தில் உள்ளவர்களை அணுக வேண்டிய முறையில் அணுகுகிறார். ஆகாத வழிகளைக் கையாளவும் அவர் அஞ்சவில்லை. இவ்வாறு ஒரு நன்மையை விரைவில் பெறுவதற்கு அவர் தமது மனம் மொழி மெய்களால் செய்யும் முயற்சிகள்தாம் எத்தனை! இதுபோலப் பழவினைப் பயனால் ஒரு பெரிய துன்பம் தனக்கு வரப்போகிறது என்பதைச் சில அறிகுறிகளால் உணர்கிறார். அவர் ஒரு பெரிய அதிகாரி. கோடிக் கணக்கில் பணம் புரளும் துறையில் பணி புரிகின்றவர். அவர் மேலிடத்தில் உள்ளவர்களின் சொல்லைக் கேட்டுச் சில முறைகேடுகளைச் செய்ய நேர்கிறது. அத்தவறுகள் இப்பொழுது வெளியாகி விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏதாவது செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சிறைக்குச் செல்ல வேண்டிய அவமானம் தனக்கு ஏற்படும் என்று அறிகிறார். வருவதை எப்படித் தடுத்து நிறுத்துவது? பணத்தினால் மூடி மறைக்க முடியுமா? என்று பார்க்கிறார். குற்றத்தை வேறு யார் மீதாவது திருப்ப முடியுமா என்று முயற்சி பண்ணுகிறார். செல்வாக்கு உள்ளவர்களின் தயவை நாடிப் பின் செல்கிறார். இப்படித் தனக்கு வரவிருக்கும் துன்பத்தை விரையப் போக்குவதற்கு அவர் தமது மனம் மொழி மெய்களால் செய்யும் முயற்சிகள் தாம் எத்தனை?

இந்நிகழ்ச்சிகள் போல நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல நிகழ்கின்றன. நல்வினைப் பயனாகிய இன்பம் வரும்போது அதை அடையத் தக்கதாக உணர்ந்து விரும்புகிறோம்; தீவினைப் பயனாகிய துன்பம் வரும்போது அதை விலக்கத் தக்கதாக உணர்ந்து அதன்மேல் வெறுப்புக் கொள்கிறோம். நல்வினையும் தீவினையும் ஆகிய இருவினைகளையும் செய்து கொண்டவர்கள் நாம் தானே. அங்ஙனமாக, அவற்றுள் ஒன்றன் பயனை மட்டும் விரும்புதலும், மற்றொன்றின் பயனை வேண்டாது வெறுத்தலும் எப்படி முறையாகும்?

நல்வினையானது இன்பம் தருங் காலை மேற்கூறியவாறு விருப்பத்தால் அவ்வின்பத்தை விரையப் பெற முயல்கிறோம்; பெற்ற பின்னரும் அவ்வின்பத்தை நீங்காமற் காக்க முயல்கிறோம். தீவினையானது துன்பந்தருங்காலை, வெறுப்பினால் அத்துன்பத்தை வரவொட்டாமல் தடுக்க முயல்கிறோம். வந்துவிட்டால் அத்துன்பத்தை விரையப் போக்க முயல்கிறோம். இவ்வகையில் நாம் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் செய்யும் முயற்சிகளே புதுவினைகளாய்த் தோன்றி நிலை பெறுகின்றன. அவை அடுத்த பிறவிக்கு வித்தாய் அமைகின்றன. இவ்வாறு வினைகள் முடிவின்றிப் பெருகி வருதல் பற்றியே நீடும் இருவினைகள் என்றார் ஆசிரியர்.

மலபரிபாகம் :

ஞானவேட்கை உடையோர் ஒரு சிலராகவும், உலக நாட்டம் உடையோரே மிகப் பலராகவும் உள்ளனர். பல லட்சம் பேர் வாழும் பெருநகரில் மாலை நேரத்தில் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிதலையும், சாத்திரச் சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே விரும்பி அமர்ந்து கேட்டலையும் காணும் போது இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும். ஞானத்தில் வேட்கை செல்லாதபடி தடுப்பது ஆணவ மலமேயாகும். அது யான்செய்தேன் பிறர் செய்தார் என்னும் தற்போத உணர்வை உண்டாக்கி விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவிக்கிறது. அவ்விருப்பு வெறுப்புக்களோடு செய்யும் முயற்சிகளே வினை அல்லது கன்மம் எனப்படுகின்றன. இதனால், ஆணவ மலத்தின் வழியாக வருவது கன்மம் என்பது புலனாகும். ஆணவ மலம் விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவித்து உயிருக்கு நுகர்வோனாம் தன்மையைக் கொடுக்க, கன்ம மலம் உயிருக்கு இன்ப துன்பமாகிய போகத்தைக் கொடுத்து நுகர்விக்க, உயிர் இன்ப துன்ப <உணர்வுகளில் அழுந்தி நிற்கிறது. இவ்வாறு உயிர் இன்ப துன்பமாகிய உலக போகத்தில் மயங்கி நிற்கையில் அது ஞானத்தை விழைவது எங்கே! திருவருளை நோக்குவது எங்கே? இதனால் ஆணவமும் கன்மமும் உயிரறிவை வன்மையாகப் பிணித்திருக்கின்ற வரையில் உயிருக்கு ஞான நாட்டம் வராது என்பது தெளிவாகும். உயிர் பலப் பல பிறவிகளில் சென்று சென்று உலக வாழ்வில் ஈடுபட ஈடுபட, அத்தனை பிறவிகளிலும் அதனறிவை மறைத்து வந்த ஆணவ மலம் தனது செயற்பாட்டினால் சிறிது சிறிதாகத் தன் சத்தி மெலிந்து வரும். அதனால் நாளடைவில் உயிரை மறைக்க மாட்டாமல் அதன் பிணிப்பு நெகிழ்ந்து வரும். இவ்வாறு ஆணவ மலத்தின் ஆற்றல் தேய்ந்து நீங்கும் நிலையை அடைவதையே மலபரிபாகம் என நூல்கள் குறிப்பிடும்.

இருவினையொப்பு :

ஆணவ மலம் தேய்ந்து போகுமானால், உயிருக்கு உலக நாட்டம் குறையும் என்பது சொல்லாமலே விளங்கும். உலக நாட்டம் குறையுமானால், இன்ப நுகர்ச்சியில் முன்பு போல விரைவு இருக்காது. துன்பம் வருமானால் அவ்வளவாகக் கவலை ஏற்படாது. இன்ப துன்பங்களில் விருப்பு வெறுப்பின்றி இரண்டையும் சமமாகக் கருதும் பக்குவ நிலை உயிருக்கு வரும். இன்பத்தை அடையத் தக்கதாகவும், துன்பத்தை விலக்கத் தக்கதாகவும் வேறுபட உணர்ந்த பழைய மனநிலை போய் இரண்டையும் ஒன்றாக நோக்கும் மனநிலை உண்டாகும். இவ்வாறு இன்ப துன்பங்களில் விருப்பு வெறுப்பின்றி நடுவு நிலையாய் நிற்கும் தன்மையே இருவினை யொப்பு என்று சொல்லப்படும். எழுவகைப் பிறவிகளில் எப்பிறவி எய்துகினும் எய்துக; இன்பம் எய்தினும் எய்துக; வழுவகைத் துன்பம் வந்திடினும் வருக; வறுமை வருகினும் வருக; மதி வரினும் வருக; அவமதி வருகினும் வருக; உலகில் மற்று எதுவரினும் வருக; எது போகினும் போக; இறைவா! உன் இணையடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் என்று ஒருவர் வேண்டுவாரானால் அவர் இருவினையொப்பு வாய்த்தவர் என்று சொல்லிவிடலாம். முன் சொன்ன மலபரிபாகத்தின் அறிகுறியே இந்த இருவினை யொப்பாகும். அகத்தில் உள்ள ஆணவ மலம் தேய்ந்த நிலையைப் புறத்தில் காணமுடியாது. ஆனால், தன்னைப் பாராட்டும்போது அதற்காக மகிழாமல், பழிக்கும்போது அதற்காக வருந்தாமல் ஒருவர் இருப்பதை யாவரும் காண முடியும். மலபரிபாகத்தின் வெளிப்பாடுதான் இந்த இருவினையொப்பு. எனவே, இருவினையொப்பு ஒருவருக்கு வாய்த்துள்ள அளவை வைத்து அவரது மலபரிபாக நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

சத்தி நிபாதம் :

மலபரிபாகத்தோடு உடன் நிகழ்கின்ற மற்றொரு நிகழ்வும் உள்ளது. அதுவே சத்தி நிபாதம் என்பது. ஆணவ மல சத்தி தேய்ந்து நீங்கும் நிலையை அடைந்தால் அதற்கேற்ப, உயிரோடு உடனாக இருந்து அம் மலத்தைச் செயற்படுத்தி வந்த இறைவனது திரோதான சத்தியும் தன் தன்மை மாறும். முன்பு மறைத்தலைச் செய்து வந்த அதே சத்தி இப்பொழுது அருளலைச் செய்ய முற்படும். அதற்கேற்பத் திரோதான சத்தி என்ற பெயர் நீங்கி, அருட்சத்தி என்ற பெயர் பெறும். உயிரில் மறைந்து நின்ற முன்னைய நிலை மாறி உயிரில் விளங்கித் தோன்றும். இந்நிகழ்ச்சியே சத்தி நிபாதம் எனப்படுகிறது. நிபாதம் என்பதில் உள்ள பாதம் என்னும் சொல்லுக்கு வீழ்ச்சி என்பது பொருள். நி என்பது மிகுதியை உணர்த்துகிற ஒரு சொல். எனவே சத்தி நிபாதம் என்றால் இறைவனது சத்தி மிகுதியாக அல்லது விரைவாக வீழ்தல் என்பது பொருளாகும். அருட்சத்தி ஆன்மாவின் அறிவில் பதிதலையே சத்தி வீழ்தல் என்று குறிப்பிட்டார்கள். இறைவனது சத்தி வேறிடத்திலிருந்து வீழ்தல் இல்லை. அஃது எக்காலத்திலும் ஆன்மாவோடு உடனாகியே உள்ளது. அவ்வாறிருக்க, சத்தி வீழ்தல் என்று பெயர் வைத்தது ஏன் என்று கேட்கலாம். மக்கள் பலர் கூடியுள்ள இடத்தில் எதிர்பாராமல் துடுமென ஒரு கல் வந்து விழுந்தால், அவ்வீழ்ச்சி அம் மக்களிடத்திலே ஓர் அதிர்ச்சியை உண்டாக்கும். அவர்கள் அக்கணமே அவ்விடத்தை விட்டு அஞ்சி அகன்று விடுவர். அதுபோல இறைவனது சத்தி ஆன்மாவில் பதிந்தால் உலகியலில் நின்ற அவ் ஆன்மாவிடத்தில் ஓர் அதிர்ச்சி உண்டாகும். எதிர் பாரா நிலையில் ஒரு மாற்றம் உண்டாகும். அவ்வான்மா அக்கணமே உலகியலினின்றும் நீங்கும். இக்கருத்து பெயரிலேயே புலப்படும் வகையில் வீழ்ச்சி எனப் பெயரிட்டனர் முன்னோர். சத்தியினது தோற்றம், சத்தி புலப்பாடு என்றாற் போல வேறு வகையில் பெயரிட்டிருந்தால் அப்பெயர்கள் மேற்கூறிய கருத்தைப் புலப்படுத்த மாட்டா என்பது தெளிவு.

மலபரிபாகமும், சத்தி நிபாதமும் ஒரு காலத்தில் ஒருங்கே உடன் நிகழ்வனவாகும். மலபரிபாகம் ஏற்பட ஏற்பட, அதனோடு சத்தி பதிதலும் உடன் நிகழ்ந்து வரும். விடியலில் ஞாயிற்றின் ஒளி வரவர இருளும் விலகி விலகிச் செல்கிறது. ஒளிவரவு, இருள் விலகல் என்ற இரண்டில் எது முன்னே, எது பின்னே என்று சொல்ல முடியாது. முன்பின் என்பதின்றி அவை இரண்டும் ஒரே காலத்தில் ஒருங்கே நிகழ்கின்றன. அதுபோல ஆன்ம அறிவில் அகவிருளாகிய ஆணவ மலம் தேயத் தேய, உள்ளொளியாகிய திருவருள் ஒளி உடன் ஓங்கி வரும். இவற்றின் அறிகுறியே இருவினையொப்பு என்பதை அறிதல் வேண்டும். சத்தி நிபாதம் தொடக்கத்தில் அதிகமந்தமாய் நிகழும். பின்பு ஓரளவு மந்தமாய் நிகழ்ந்து அதன் பின்பு தீவிரமாய் கடைசியில் அதி தீவிரமாய் முடியும். இந்நால்வகைச் சத்தி நிபாத நிலைகளும் முறையே மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்று சொல்லப்பெறும். கடைசி நிலையாகிய தீவிர தரத்தை அதிதீவிரம் என்றும் குறிப்பிடுவர். நாலாம் சத்தி நிபாதமாகிய அதிதீவிர நிலையிலேயே ஆன்மாவுக்கு மெய்ஞ்ஞான நாட்டம் வரும். ஞானாசிரியர் உபதேசித்த பொருள் உள்ளவாறு விளங்கித் தோன்றும். நமது ஆசிரியராகிய உமாபதி சிவனார் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியையே இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

உமாபதி சிவனார் வாழ்வில் :

தில்லை நடராசப் பெருமானுக்கு வழிபாடு செய்துவிட்டு சிவிகையில் வந்து கொண்டிருந்தார் உமாபதியார். பகல்வேளை அது. அவர் அமர்ந்திருந்த சிவிகைக்கு முன்னே கை விளக்கை ஏந்தியவாறு ஏவலர் சென்றனர். இக்காட்சியைக் கண்டார் மறைஞான சம்பந்தர் என்ற நல்லாசிரியர். அவர் உமாபதியாரின் பக்குவ நிலையைப் பார்த்தருளினார். அவருக்கு உபதேசம் செய்தற்குக் காலம் வந்துற்றது என்பதையும் உணர்ந்தார். அவர் கேட்குமாறு பட்ட கட்டையில் பகற் குருடு போகிறது என்று கூறியருளினார். பட்டகட்டை என்பது உமாபதியார் ஊர்ந்து வந்த பல்லக்கு. பகலிலேயே விளக்கு முதலிய பரிவாரங்களுடன் வந்தமையால் அவர் பகற்குருடு எனப்பட்டார். இது வெளிப்படையான பொருள். இதன் பின்னே மற்றொரு உட்பொருளும் மறைந்திருந்தது. இந்த உலகம் நிலையற்ற தன்மையுடையது; அறிவற்றது; பட்டகட்டை போன்றது. இப்படிப்பட்ட உலக நிலையில் இவருக்கு உவர்ப்புத் தோன்றவில்லையே. வெற்று ஆடம்பரத்தில் இவருக்கு விருப்பம் போகவில்லையே. வேதம் ஆகமம் முதலிய கலை நூல்களை யெல்லாம் படித்திருந்தும் உண்மை ஞானம் பெறாமையினால் இவர் பகற்குருடு போன்றவரே. இந்த உட்பொருளும் மறைஞான சம்பந்தர் சொற்களில் அமைந்திருந்தது. அதி தீவிரம் என்னும் பரிபக்குவ நிலையில் இருந்தமையால், உமாபதி சிவம் இந்தச் சொற்களின் பொருளை உணர்ந்து கொண்டார். அவருக்கு உலகியலில் இருந்த பற்று ஒழிந்தது. ஞானம் பெற வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. அவருக்கு உண்மையை உணர்த்த வந்த ஞானாசிரியர் இவரே என்ற தெளிவு பெற்றார். மறைஞான சம்பந்தரின் மலரடிகளில் வீழ்ந்து அவருக்கு ஆட்பட்டார். அதி தீவிர சத்தி நிபாதமே ஞானம் பெறுதற்கு ஏற்ற பக்குவ நிலை என்பதை இந்நிகழ்ச்சி வாயிலாக நாம் அறியலாம்.

இனி, இச் செய்யுளின் பொருளுக்கேற்ப, நீடும் இரு வினைகள் நேராக நேராதற்கண் இறை சத்தி கொளல் கூடும் எனச் சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டும். நேராக - சமமாக; நேராதற்கண் - நிகழ்தற்கண், நிகழுங் காலத்தில். இரு வினைகள் நேராக நேராதல் என்றதனால் இரு வினையொப்பினையும், இறைசத்தி கொளல் என்றதனால் சத்தி நிபாதத்தையும் குறித்துள்ளார் ஆசிரியர். இரு வினையொப்பினால் அறியப்படுகின்ற மலபரிபாகம் வந்த பொழுதே உயிர் <உலகியலை விடுத்து இறைவனது திருவருளை நோக்கத் தலைப்படும். அந்நிலையே சத்தி நிபாதம் எனப்படும் என்பது கருத்தாயிற்று. குருநாதர் உபதேசித்த உண்மைகளைச் சிந்தித்து உணரும் முறையே அறியும் நெறியாகும். அவரது உபதேசத்தைக் கேட்டதற்கும் சிந்தித்தற்கும் உரியவர் யார் என்பதை இம் முதற் செய்யுளில் உணர்த்தியுள்ளார் ஆசிரியர். இருவினையொப்பும் மலபரிபாகமும் வரப் பெற்ற, சத்தி நிபாதத்து உத்தமராகிய மாணாக்கரே குரு மொழியைக் கேட்டுச் சிந்தித்துப் பயன் பெறுதற்குரியர். ஏனையோர்க்குக் குருமொழி பயன் தருதல் இல்லை என்பது குறிப்பாய் உணர்த்தப்பட்டது.

52. நித்தப் பொருள்கள்ஆறு

ஏகன் அனேகன் இருள் கருமம் மாயை இரண்டு
ஆக இவை ஆறு ஆதி இல்.

பொருள் : ஒருவனாகிய இறைவனும், பலவாகிய உயிரும், ஆணவமும், கன்மமும், சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும் ஆகிய இந்த ஆறு பொருள்கள் தோற்றம் இல்லாதவையாகும்.

சொற்பொருள் :

ஏகன் - ஒருவனாகிய இறைவனும்
அனேகன் - பலவாகிய உயிரும்
இருள் - ஆணவமும்
கருமம் - கன்மமும்
மாயை இரண்டு - சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும்
ஆக இவை ஆறு - ஆகிய இந்த ஆறு பொருள்கள்
ஆதி இல் - தோற்றம் இல்லாதன.

விளக்கம் :

இந்த ஆறு பொருள்கள் தோன்றியன அல்ல என்று கூறவே, அவை அழிவன அல்ல என்பதும் பெறப்படும். தோற்றமும் அழிவும் இல்லாதவை யாதலின் அவை என்றும் உள்ள பொருள்கள் என்று கொள்ளப்படும். தோற்றம் இல்லாதவற்றை அநாதி என்ற சொல்லால் குறிப்பர். எனவே இந்த ஆறும் அநாதி நித்தப் பொருள்கள் எனப்படும். சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையைக் கொள்ளும். அம்மூன்றன் இயல்புகளை முதல் மூன்று அதிகாரங்களில் விளக்கிச் சென்றார் ஆசிரியர். அம் மூன்றினையே இங்கு ஆறாக விரித்துக் கூறியுள்ளார். பதியை ஏகன் எனவும், பசுவை அனேகன் எனவும் குறிப்பிட்டவர் பாசத்தை இருள் கருமம் மாயை இரண்டு என அமைத்துக் கொண்டுள்ளார். பாசத்தை ஆணவம் கன்மம் மாயை என மூன்றாகக் கூறுவதே வழக்கு. ஆயின் நம் ஆசிரியர் இங்கு மாயையை இரண்டாக வைத்து, பாசத்தை நான்காகக் கூறியுள்ளதைக் காணலாம்.

மாயை இரண்டு :

மாயை இரண்டு என இவ்வாசிரியர் கூறியதே பற்றி, சுத்த மாயையும் அசுத்த மாயையும் வேறு வேறான இரு தனிப்பொருள்கள் என்று கொள்வாரும் உளர். அவ்வாறு கொள்வது பொருந்தாது. ஏனெனில், சடமாயும் பலவாயும் இருப்பன எல்லாம் தோன்றி அழிவெய்தும். ஆடை சடமாய் இருப்பது. அது பருத்தியாடை, பட்டாடை, தோலாடை எனப் பல வகையாய் உள்ளது. குடம் சடமாய் இருப்பதோடு மண்குடம், பொன்குடம், செப்புக்குடம் எனப் பலவகைப் படுவதாயும் உள்ளது. இவ்வாறு சடமாயும் பலவாயும் இருப்பதனாலே ஆடை, குடம் முதலியவை தோன்றி அழியக் கூடிய காரியப் பொருள்கள் என்பது விளங்கும். இவை போலச் சுத்தமாயையும், அசுத்த மாயையும் ஆகிய இரண்டும் சடமாய் இருப்பவை. அவை தனித்தனிப் பொருள்கள் எனக் கொண்டால் பல எனப்பட்டு, பலவாயும் சடமாயும் இருப்பதனால் அவை தோன்றி அழிவெய்தும் என்று கூறும்படி ஆகும். இது, மாயை இரண்டு உள்ளிட்ட ஆறும் நிலையான பொருள்கள் என்று ஆசிரியர் கூறியதற்கு மாறாகும். நம் ஆசிரியர் மாயை இரண்டு என்று கூறினாரேனும், அது பொருளால் இரண்டு என்பது அவர்க்குக் கருத்தன்று. இரண்டு என்று கருதியிருப்பாரானால், தமது மற்றொரு நூலான சிவப்பிரகாசத்திலும் அவ்வாறே கூறியிருப்பார். அங்ஙனம் கூறாமல்,

பகர் மாயை ஒன்று; படர் கன்மம் ஒன்று  (சிவப்பிரகாசம், 32)

என்றே தெளிவாகக் கூறியுள்ளார். இதனால் மாயை ஒன்று என்பதே அவர்தம் கருத்தாதல் விளங்கும். அவ்வாறாயின், திருவருட்பயனில் மாயை இரண்டு எனக் கூறியது எக் காரணம் பற்றி என வினவலாம். இதற்கு விடை காண்போம். மாயை ஒன்றே தன்னில் சுத்தப்பகுதியும், அசுத்தப் பகுதியும் என இரு பகுதியாய் நிற்கும். ஆணவ மலத்தோடு கலவாதது சுத்தப்பகுதி. ஆணவ மலத்தோடு கலந்தது அசுத்தப்பகுதி. குன்றிமணி ஒன்றே ஒரு பகுதி செம்மையாகவும், மற்றொரு பகுதி கரியதாயும் காணப்படுவது போல மாயை ஒன்றே இவ்வாறு இரு பகுதியாய் நின்று செயற்படும். மாயை உயிர்களுக்குத் தனு கரண புவன போகங்களைத் தோற்றுவித்து உதவும் என்பது நாமறிந்தது. சுத்த மாயையும் அசுத்த மாயையும் ஆகிய இவ்விரு பகுதியும் வெவ்வேறு முறையில் இக்காரியங்களைத் தோற்றுவிக்கும். சுத்த மாயை விருத்தியடைந்து காரியங்களைத் தோற்றுவிக்கும், அசுத்தமாயை பரிணாமம் அடைந்து காரியங்களை உண்டாக்கும். சிறியதாய் நின்றது பெரியதாய் விரிவதே விருத்தியாகும். மடக்கி வைக்கப்பட்டிருந்த துணியை விரித்துக் கூடாரமாக அமைப்பர். இவ்வாறு விரிவடைவது விருத்தி எனப்படும். இங்ஙனம் விருத்திப்படுவது சுத்தமாயை. இனி, ஒரு பொருள் மற்றொரு பொருளாய்த் திரிந்து வேறுபடுவது பரிணாமமாகும். பால் தயிராதல் இதற்கு எடுத்துக்காட்டு. இவ்வாறு பரிணாமம் அடைவது அசுத்தமாயை. இங்ஙனம் மாயை சுத்தப் பகுதியும் அசுத்தப் பகுதியம் என இரு பகுதியாய் நின்று, முன்னது விருத்தியாயும், பின்னது பரிணாமமாயும் இரு தன்மைப்பட்ட காரியங்களைத் தோற்றுவித்து உதவுகிறது. இவ்வேறுபாடு கருதியே ஆசிரியர் உமாபதி சிவம் இங்கு மாயையை இரண்டாக வைத்து ஓதினார் என்பது அறியத்தகும்.

கருமம் :

மனம் மொழி மெய்களினால் விருப்பு வெறுப்போடு செய்யும் முயற்சிகளே வினை அல்லது கன்மம் ஆகின்றன. இவ்வினைகள் நல்வினை, தீவினை என இரு வகையாய் அமைந்து, யாவருக்கும் புலப்படுவனவாய் உள்ளன. இவ்விரு வகை வினைகளும் ஆகாமியம் என்ற பெயரைப் பெறும். புலப்படுவனவாய் இருத்தலால் தூல கன்மம் எனப்படும். இவ்வாறு நல்லதும் தீயதுமாய்ச் செய்யப்படும் வினைகள் அச்செயல் முடிந்தபின் புலப்படும் நிலையின் நீங்கிப் புலப்படாத நிலையை அடைந்து நிற்கும். அந்நிலையில் அவை புண்ணியம், பாவம் எனப்படும். இவ்விரண்டும் சஞ்சிதம் என்ற பெயரைப் பெறும். புலப்படாமல் சஞ்சிதமாய் நிற்கும் வினைகள் தம் பயனைக் கொடுத்தற்குரிய காலம் வந்தபோது இன்பமும் துன்பமும் ஆகிய பயன்களைத் தம்மைச் செய்த ஆன்மாக்களுக்குக் கொடுக்கும். இவ்வாறு காலத்தில் வந்து பயனைக் கொடுத்து நீங்கும் வினைகள் பிராரத்தம் என்ற பெயரைப் பெறும். இதனால், வினைக்கு மூன்று நிலைகள் உண்டு என்பது விளங்கும். தோற்றநிலையில் அது ஆகாமியமாய் நிகழும். நிலை பேற்று நிலையில் அது சஞ்சிதமாய் நிற்கும். பின் அழிவு நிலையில் பிராரத்தமாய்க் கழியும் என அறியலாம். இங்கு மாணவர்க்கு ஓர் ஐயம் எழலாம். வினைதோன்றி நின்று அழியும் என்று கூறுவது, இச்செய்யுளில் கன்மம் பற்றிக் கூறிய கருத்திற்கு மாறாக அல்லவா உள்ளது. தோற்றம் என்பது இல்லாத, என்றும் உள்ள பொருள்களில் ஒன்றாக கன்மத்தை ஆசிரியர் கூறியிருக்கும்போது அதற்குத் தோற்றமும் அழிவும் உண்டு என்று கூறுவது எப்படிப் பொருந்தும் எனக் கேட்கலாம். இதற்கு விடை கூறுவோம்.

கன்மத்திற்கு இரு நிலைகள் உண்டு. ஒன்று காரண நிலை; பிறிதொன்று காரியநிலை. கன்மம் தனித்து நில்லாது. அது மாயையாகிய பொருளைப் பற்றியே நிற்கும். எனவே கன்மத்திற்குப் பற்றுக்கோடு மாயை என அறியலாம். மாயையிடத்தில் கன்மம், நிகழ்ச்சியின்றி இருந்தபடி இருக்கும் நிலையே அதன் காரண நிலையாகும். இந்நிலையில் அது மூல கன்மம் எனப்படும். இனி உயிர்கள் மாயையின் காரியங்களாகிய தனு, கரண, புவன, போகங்களைப் பெற்ற காலத்தில் அம்மாயா காரியங்களின் வழியே மூலகன்மம் ஆகாமிய, சஞ்சித, பிராரத்தங்களாய்க் காரியப்படும். மனம், மொழி, மெய் முதலியனவெல்லாம் மாயையின் காரியங்களே. அவற்றின் வழியாக வினைகள் தோன்றி நிலை பெறுவதையும் பின் அழிவதையும் மேலே பார்த்தோம். இதுவே கன்மத்தின் காரிய நிலையாகும். இதனால் காரண நிலையில் செயலின்றி உள்ளது மூல கன்மம் என்பதும். செயல் நிலையில் உள்ளது காரிய கன்மம் என்பதும் விளங்கும். இவற்றுள், காரிய கன்மமே உயிர்களைப் பிணித்து நின்று மயக்குவது எனவும், மூலகன்மம் அவ்வாறு ஆகாது எனவும் அறிதல் வேண்டும். மேலும், காரிய கன்மத்திற்கே தோற்ற அழிவுகள் உண்டு என்பதும் மூலகன்மம் அவ்வாறின்றி அநாதியாய் நிற்பது என்பதும் அறியத்தகும். மூலகன்மம், காரிய கன்மங்களைப் பின்வருமாறு வேறுபடுத்தி அமைத்துக் காணலாம்.

மூலகன்மம்            - காரியகன்மம்
1. தோற்றம் இல்லது        - தோன்றி அழிவது.
2. நன்மை தீமை என்ற பாகுபாடு இல்லாதது    - நல்வினை, தீவினை என்னும் பாகுபாடு உடையது.
3. உயிர்கட்கு நேரே பந்தம் ஆகாது    - உயிர்கட்குநேரே பந்தம் ஆவது.

இதுகாறும் கூறியவற்றால் இச்செய்யுளில் ஆசிரியர் கருமம் என்று குறிப்பிட்டது காரண கன்மமாகிய மூலகன் மத்தையே என்பது இனிது விளங்கும். காரிய கன்மத்தை அடுத்த செய்யுளில் செய்வினையும் என்பதனால் குறிப்பிடுவார். சித்தாந்த ஞான நெறியைத் தலைப்படுவோர் நித்தப் பொருள்கள் ஆறு உள்ளன என உணர்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

53. பொருள்கள் தம்மில் இயைந்து நிற்றல்

செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்
உய்வான் உளன் என்று உணர்.

பொருள் : மாணவனே, வினையைச் செய்பவனாகிய நீயும், உன்னால் செய்யப்படுவனவாகிய இருவினைகளும், அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களும், அப்பயன்களை உன்னோடு கூட்டுவிப்பவனாகிய இறைவனும் என இம்முறையில் நீ பாசத்தோடும் பதியோடும் தொடர்பு கொண்டுள்ளாய். இவ்வாறு யான் உள்ளேன் என்று உன்னியல்பை உணர்வாயாக.

சொற்பொருள் :

செய்வானும் - (மாணவனே!) வினையைச் செய்பவனாகிய நீயும்
செய்வினையும் - உன்னால் செய்யப்படும் வினையும்
சேர்பயனும் - அவ்வினையின் வழியாக உன்னை வந்து அடைகின்ற இன்பத் துன்பங்களாகிய பயனும்
சேர்ப்பவனும் - அவ்வினையின் பயன்களை உன்பால் சேர்ப்பிப்பவனாகிய இறைவனும் (ஆகிய இந்நான்கு பொருள்களை)
உய்வான் - யான் உய்தி பெறுதற்கு
உளன் - உடையேன்
என்று உணர் - என்று உணர்வாயாக.

விளக்கம் :

முந்திய செய்யுளில், சித்தாந்தத்திற் கொள்ளப்படும் பொருள்களைப் பெயரளவில் சொல்லிச் சென்றார். இச் செய்யுளில், அப்பொருள்கள் தம்முள் எவ்வாறு தொடர்பு பட்டு நிற்கின்றன என்பதைக் காட்டுகிறார். ஏகன் எனப்பட்ட இறைவன் சேர்ப்பவன் ஆகின்றான். அனேகன் எனப்பட்ட உயிர் செய்வான் ஆகின்றான். இருள், கருமம், மாயை ஆகியவை செய்வினையும், சேர் பயனும் ஆகியவற்றுக்குக் காரணம் ஆகின்றன. மும்மலங்களும் தம்முள் இயைந்து இன்ப துன்ப விளைவிற்கு எவ்வாறு ஏதுவாகின்றன என்பதைக் காண்போம். இன்பத் துன்பங்கள் உயிருக்கு இயற்கையல்ல; உயிரோடு என்றும் உடனாக இருப்பவையல்ல. அவை இடையிலே வந்து உயிரைப் பற்றுகின்றன. பின் இடையிலே நீங்கி விடுகின்றன. இன்பத் துன்பங்கள் இவ்வாறு தோன்றி நீங்குவதால் அவை காரியம் எனப்படும். ஒரு காரியத்திற்குப் பல காரணங்கள் உண்டு. அக்காரணங்கள் எல்லாம் கூடியபோதே அக்காரியம் நிகழும். அக்காரணங்களை மூன்றாகக் கூறுவர். அவை முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என்பன. இவற்றுள் முதற்காரணமே முதன்மையுடையதாய் இருக்கும். ஏனைய காரணங்கள் அதற்குத் துணையாய் அமையும். உதாரணமாக குடம் என்ற காரியம் தோன்றுவதற்கு முதற் காரணமாக இருப்பது களிமண். சக்கரம், கழி, நீர் முதலியவை அதற்குத் துணை செய்வதால் துணைக் காரணம் எனப்படும். இனி, முதற் காரணமாகிய களிமண்ணையும், பிற துணைக் காரணங்களையும் இயைவித்துக் குடமாகிய காரியத்தைச் செய்கின்ற குயவன் நிமித்த காரணம் ஆகின்றான்.

இன்பத் துன்பங்கள் காரியம் என்று கூறினோம். எனவே அவற்றிற்கும் மேற்கூறிய மூன்று காரணங்கள் தேவை என்பது விளங்கும். இன்பத் துன்பங்களுக்கு முதற் காரணமாய் இருப்பது வினையாகும். துணைக் காரணமாய் அமைவது மாயையாகும். நிமித்த காரணமாய் நிற்பது ஆணவ மலமாகும். இக்கருத்தை மே<லும் சிறிது விளக்குவோம். நெல்லில் முளை, தவிடு, உமி என்ற மூன்று <உள்ளன. முளை என்பது முளைத்தற் சத்தியைக் குறிக்கும். நெல்லில் <உள்ள முளைத்தற் சத்தியே முளையைத் தோற்றுவிக்கிறது. அச்சத்தி இல்லையேல் நெல் எக்காலத்திலும் முளைக்காது. எனவே முளைத்தற் சத்தியே முளை தோன்றுவதற்கு முதற்காரணம் என்பது புலனாகும். இம்முளைத்தற் சத்திக்குத் துணைபுரிந்து நிற்பது அரிசியோடு ஒட்டிக் கொண்டுள்ள தவிடு ஆகும். தவிட்டை நீக்கி விட்டால் முளைத்தற் சத்தி தன் காரியத்தைத் தோற்றுவிக்க மாட்டாது. எனவே, தவிடு முளை தோன்றுவதற்குத் துணைக் காரணம் என்பது புலனாகும். இனி, அம்முளைத்தற் சத்தியைக் கெடாது பாதுகாத்து அது முளையைத் தோற்றுவித்தற்கு நிமித்தமாக நிற்பது உமியாகும். இதனால், உமி நிமித்த காரணம் என்பது புலனாகும்.

முளைத்தல் என்னும் காரியத்திற்கு முளைத்தற்சத்தி முதற் காரணமும், தவிடு துணைக் காரணமும், உமி நிமித்த காரணமும் ஆதல் போல, இன்பத் துன்பங்களாகிய காரியத்திற்குக் கன்மம் முதற்காரணமும், மாயை துணைக் காரணமும், ஆணவம் நிமித்த காரணமும் ஆகின்றன. இந்த ஒப்புமையைப் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம்.

உவமை        - பொருள்
1. முளை (முளைத்தற்சத்தி)    - கன்மம்
2. தவிடு        - மாயை
3. உமி        - ஆணவம்

கன்ம மலம் முதற் காரணமாய் நின்று இன்பத் துன்பங்களை உயிரறிவில் தோற்றுவித்து <உயிருக்கு போகத்தைத் தருகிறது. இன்பத் துன்பங்கள் உயிருக்கு நேரே வருவதில்லை. உலகப் பொருள்களின் வழியாகவே வருகின்றன. உலகப் பொருள்கள் யாவும் மாயையின் காரியங்கள் என்பது வெளிப்படை. எனவே மாயை இன்பத் துன்பங்களுக்குச் சார்பாய் உள்ள தனு, கரண, புவன போகங்களைத் தந்து கன்ம நுகர்ச்சிக்குத் துணை செய்கிறது என அறியலாம். மேலும், தனது காரியங்களாகிய உடம்போடும் உலகோடும் உயிரைப் பிணிப்புண்டு நிற்கச் செய்கிறது. இவ்வாறு மாயை துணைக் காரணமாய் நின்று உயிருக்குப் பந்தத்தைத் தருகிறது. ஆணவ மலம் நிமித்த காரணமாய் நின்று, இன்பத் துன்பங்களைத் தோற்றுவிக்கின்ற கன்மம் உயிரைவிட்டு நீங்காதவாறு அக்கன்மத்தை நிலை நிறுத்துகிறது. உயிரிடத்தில் நான் என்ற உணர்வை உண்டாக்கி உயிருக்கு நுகர்வோனாம் தன்மையைக் கொடுக்கிறது. இம்மும் மலங்களின் செயற்பாட்டினைப் பின் வருமாறு அமைத்துக் காட்டலாம்.

மலங்கள்:    செயல்கள்:
1. கன்மம்-முதற்காரணம்-போகத்தைத் தருதல்
2. மாயை-துணைக்காரணம்-பந்தத்தைத் தருதல்
3. ஆணவம்-நிமித்தகாரணம்-நுகர்வோனாம் தன்மையைத் தருதல்

இவ்வாறு மும்மலங்களும் இயைந்து நின்று இன்பத் துன்ப அனுபவங்களுக்கு ஏதுவாகின்றன.

உய்வான் உளன் என்று உணர் :

இறைவன் சேர்ப்பவனாய் நிற்க, உயிர் செய்வோனாகவும் நுகர்வோனாகாவும் இருந்து, பிறவித் துன்பத்திற் பட்டு உழல்கிறது. இதிலிருந்து விடுபடும் வழியில்லையோ? என்று மாணவர் கேட்கக் கூடும். அதற்குப் பின்வருமாறு குறிப்பாய் விடை கூறுகிறார் ஆசிரியர். எல்லாக் கேட்டிற்கும் மூலமாய் உள்ள ஆணவ மலமே தீராத பெரு நோயாகும். அதற்கு மருந்தாகவே வினைப்பயனைச் சேர்ப்பிக்கின்றான் இறைவன். ஆகவே, செய்வானும் செய்வினையும் சேர்ப்பயனும் சேர்ப்பவனும் ஆகிய இந்நான்கு பொருள்களை நீ உடையவனாக இருப்பது நீ உய்தியடைதற் பொருட்டேயாகும் என்று தெளிவிப்பாராய், உய்வான் உளன் என்று உணர் என்கிறார் ஆசிரியர். இந்நான்கு பொருள்களும் ஆன்மாவை மலத்தினின்றும் நீக்கி ஈடேற்றுவன என்பது கருத்து.

54. உயிர் அருளோடு சேர்ந்து வாழும் ஒற்றுமை

ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே; ஊனொடு உயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தரம்.

பொருள் : உடம்போடு சேர்ந்து நிற்பதாகிய உயிர் நிறைந்த ஞானமாகிய திருவருளோடு பிரிப்பின்றிக் கூடி வாழ்கிறது. திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போன்றது எனில், உயிரோடு கூடி வாழும் உடம்பு அந்த உயிரோடு கொண்டுள்ள ஒற்றுமையைப் போன்றது ஆகும்.

சொற்பொருள் :

ஊனொடு உயிர் - உடம்போடு கூடி நிற்பதாகிய உயிர்
தான் - தான்
உணர்வோடு - அறிவு வடிவான திருவருளோடு
ஒன்றாம் தரம் - ஒன்றுபட்டு வாழும் நிலை
ஊன் - உடம்பானது
உயிரால் - உயிரோடு
வாழும் - கூடி வாழும்
ஒருமைத்து - ஒற்றுமையை ஒப்பதாகும்.

விளக்கம் :

உயிர் உடம்பிற் கலந்து தான் சிறிதும் புலப்படாமல் உடம்பே உள்ளது என்று சொல்லும்படி அதனோடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. உயிரும் உடம்பும் பொருளால் இரண்டு என்ற தன்மை அங்கே இல்லை. இவ்வாறு இரு பொருள்கள் பிரித்தறிய வாராதபடி இயைந்து நிற்பின் அந்த ஒற்றுமைத் தொடர்பு அத்துவித சம்பந்தம் என்று சொல்லப்பெறும். இம்முறையில் உடம்பு உயிரோடு கூடி நிற்பதாகிய தொடர்பு அத்துவிதம் எனப்படுகிறது. உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள இந்தத் தொடர்பே உயிருக்கும் திருவருளுக்கும் இடையே உள்ளது. திருவருள் உயிரில் நீக்கமறக் கலந்திருப்பினும் அதன் இருப்புச் சிறிதும் புலப்படாமல் உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லு<ம்படி உயிரோடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. உடம்புக்கென்று தனியே செயலில்லை. உயிர் செலுத்தவே அது செயற்படும். அதுபோல உயிர்தானே தனித்து நின்று அறிவதில்லை. திருவருள் உள்நின்று அறிவிக்கவே உயிர் அறிவதாகும். திருவருள் இயக்கவே உயிர் செயற்படுவதாகும். சுருங்கக் கூறினால், உயிரையின்றி <உடலுக்கு வாழ்வில்லை; அதுபோலத் திருவருள் துணையின்றி உயிருக்கு வாழ்வில்லை. உயிருக்கு வாழ் முதலாகிய பொருள் அருளே என்பது இதனால் விளங்கும். உயிர் உடம்பின் உள்ளாகத் தன்னை அறிதல் போலத் தன்னுள்ளே இருப்பதாகிய திருவருளை அறிதல் வேண்டும். திருவருள் எப்பொழுதும் தன்னிடத்தே பிரிப்பின்றி உள்ளது எனவும், அறிவு விளக்கத்திற்கு அதன் துணை இன்றியமையாதது எனவும் உணர்தல் வேண்டும்.

55. பளிங்கிற்குப் பகலவன் போல உயிர்கட்குத் திருவருள்

தன்னிறமும் பன்னிறமும் தான் ஆம் கல் தன்மை தரும்
பொன்னிறம் போல் மன்னிறம் இப் பூ.

பொருள் : பளிங்குக் கல் தனக்குப் பக்கத்தில் உள்ள பல பொருள்களின் நிறங்களையும் கவர்ந்து அப் பன்னிறங்களையே தன் நிறமாகக் காட்டி நிற்கும். இனி, சூரியன் உச்சியில் வரும்போது, பக்கத்தில் பல பொருள்கள் இருப்பினும் பளிங்குக் கல் அவற்றின் நிறங்களைக் கவராமல் தன் ஒளியை மட்டுமே தோற்றி நிற்கின்ற நிலையும் உண்டு. இங்ஙனம், பிற பொருள்களின் நிறத்தைக் காட்டி நிற்றலும், தனது நிறத்தை மட்டும் காட்டி நிற்றலும் ஆகிய இரு தன்மைகள் பளிங்கிற்கு உண்டு என அறியலாம். பளிங்கிற்கு அவைமுறையே பொதுவியல்பும், தன்னியல்பும் ஆகும். அவ்விரு தன்மைகளையும் பளிங்கிற்குத் தருவது சூரியனது ஒளியேயாகும். சூரியவொளி இன்றேல் பளிங்கு பிற பொருள்களின் நிறங்களைக் கவர்தலும், தனது ஒளியை மட்டும் தோற்றி நிற்றலும் ஆகிய இரண்டும் இல்லையாம். அச்சூரியவொளி போன்றது இறைவனது திருவருள். திருவருளின் உதவியாலேயே உயிர்களுக்குக் கட்டு நிலையில் பொது வியல்பும், முத்திநிலையில் தன்னியல்பும் விளங்குகின்றன.

சொற்பொருள் :

இப் பூ - இவ்வுலகில்
மன் நிறம் - இறைவனது திருவருள் (நிற்கும் முறைமை)
தன் நிறமும் - தனது நிறத்தையும்
பன்னிறமும் - பிற பொருள்களின் நிறத்தையும்
தான் ஆம் - தன்னிடத்தே காட்டி நிற்கும்
கல் - பளிங்குக் கல்லிற்கு
தன்மை தரும் - அவ்இரு தன்மையையும் கொடுக்கின்ற
பொன்நிறம்போல்- சூரியனது ஒளி நிற்கும் முறைமை போன்றதாகும்.

விளக்கம் :

ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சேர்க்கையால் செயற்கையாக வருகிற இயல்பு பொதுவியல்பு எனப்படும். அவ்வாறின்றி ஒரு பொருளுக்கு இயற்கையாய் உள்ள இயல்பு தன்னியல்பு எனப்படும். அதனை உண்மையியல்பு எனவும் கூறுவர். உயிர் பிறப்பு நிலையில் உடம்பின் சேர்க்கையைப் பெற்று நிற்கிறது. உடம்பின் சேர்க்கையால் உயிருக்குப் பிறப்பும் இறப்பும் நிகழ்கின்றன. பிறத்தலும் இறத்தலும் ஆகிய இவை உயிருக்குப் பொதுவியல்பு ஆகும். மேலும் உடம்பிலுள்ள ஐம்பொறி முதலிய கருவிகளின் சேர்க்கையால் சிற்றறிவாகிய மயக்க அறிவு உண்டாகிறது. இந்தச் சிற்றறிவும் உயிருக்குச் செயற்கையாக வருகிற பொதுவியல்பே யாகும். இன்னும் உயிர் உடம்பிற் கட்டுண்டு உடம்பையே தானாக நினைக்கிறது. உடம்பின் தன்மைகளையே தன்னுடைய தன்மைகளாகக் கருதுகிறது. அஃதாவது, பசி, தாகம், உறக்கம், விழிப்பு முதலியவை உடம்பிற்கு உரியவை. அவற்றைத் தன்னுடைய இயல்புகளாகக் கொள்கிறது. இவையெல்லாம் உயிருக்குப் பொது வியல்புகளேயாகும். திருவருள்தான் உயிர்களுக்கு உடம்பைக் கூட்டி உலக வாழ்வில் செலுத்தி மேற்கூறிய பொதுவியல்புகளை அடையும்படி செய்கிறது. பொதுவியல்பு என்பது இடையில் வருவது. அவ்வியல்புக்கு எப்பொருளின் சேர்க்கை காரணமோ அச் சேர்க்கை நீங்கும்போது அவ்வியல்பும் நீங்கி விடும். அம்முறையில் மலங்களின் சேர்க்கையாகிய கட்டு நிலை நீங்கும் போது பிறப்பு, இறப்பு, சிற்றறிவு முதலிய பொதுவியல்புகள் நீங்கிவிடும். பொதுவியல்பு நீங்கினால் உயிர் தனது உண்மையியல்பாகிய தன்னியல்பைப் பெறும். வியாபக அறிவு (விரிந்த அறிவு) என்பது உயிருக்கு உரிய தன்னியல்பாகும். கட்டுநிலை நீங்கி முத்தி நிலையில் உயிர் தனக்குரிய இயற்கையாகிய வியாபக அறிவைப் பெறும். சிற்றறிவால் <உலகப் பொருள்களை அறிந்து வந்த சிறுமை நீங்கித் தனது வியாபக அறிவால் இறைவனை அறிந்து அனுபவிக்கும்.

திருவருள்தான் பக்குவமுற்ற உயிருக்கு மும்மலங்களின் தொடர்பை அறுத்து, <உடம்பின் சார்பை நீக்கி, அவற்றால் உண்டான பொதுவியல்பாகிய சிற்றறிவையும் ஒழித்துத் தன்னியல்பாகிய வியாபக அறிவை விளங்கச் செய்து இறைவனை உணரும்படி செய்கிறது. உயிருக்குப் பொதுவியல்பு, தன்னியல்பு என்னும் இரண்டு இயல்புகள் உள்ளன என்பதும், பளிங்கிற்குப் பொதுவியல்பும் தன்னியல்பும் சூரியனது ஒளியால் விளங்குவது போல உயிரிடத்து அவ்விரு வகை இயல்புகளும் இறைவனது திருவருளாலேயே விளங்குவன என்பதும் இச்செய்யுளில் உணர்த்தப்பட்டன. இதனால் உயிர்கட்குப் பெத்தம், முத்தி இரண்டினையும் தருவது திருவருளே என அறிதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

குறிப்பு : கல் என்பது பளிங்குக் கல்லைக் குறிக்கும். பொன் என்பதற்குச் சூரியன் என்பது பொருள். நிறம் என்பது ஒளி. சூரிய ஒளியைப் பொன்னிறம் என்றார். மன் - தலைவன்; இங்கு இறைவனைக் குறிக்கும். இறைவனது ஒளியாகிய திருவருளை மன்னிறம் எனக் குறிப்பிட்டார். பூ - உலகம்.

56. இடையே நிற்கும் திருவருள்

கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை
உண்டு இல்லை அல்லது ஒளி.

பொருள் : கண் தொன்று தொட்டுப் பொருளைக் கண்டு வரும் முறைமை, கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நிற்பதனால் உண்டாகின்றது. அவ்வாறு ஒளி நில்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.

சொற்பொருள் :

கண் - கண்
தொல்லை - தொன்று தொட்டு
காணும் நெறி - பொருள்களைக் கண்டு வரும் முறைமை
கண் உயிர் நாப்பண் - கண்ணுக்கும் உயிருக்கும் இடையே
ஒளி நிலை - ஒளி நிற்றலால்
உண்டு - உளதாகிறது
அல்லது - ஒளி அவ்வாறு நிற்கவில்லையாயின்
இல்லை - கண் காணுதல் இல்லை.

விளக்கம் :

கண் காணும் நெறி :

கண் ஒரு பொருளைக் காணுமிடத்து அது தானே தனித்து நின்று காண்பதில்லை. உயிர் உடனாக இருந்து செலுத்தவே அது காணவல்லதாகும். இனி, கண் செயற்படுவதற்கு உயிர் உடனிருந்து செலுத்துதலாகிய அந்த உதவி மட்டுமே போதுமோ எனில், போதாது. போதும் எனில் இருளில் நிற்கும் பொழுதும் கண் பொருளைக் காணுதல் வேண்டும். அப்பொழுதும் உயிர் உடனிருந்து செலுத்தவே செய்கிறது. ஆயினும் கண் காணமுடியவில்லையே. இதனால் உயிர் உடனிருந்து செலுத்துவதாகிய உதவி மட்டும் கண்ணுக்குப் போதாது என்பது புலனாகும். வேறொரு பொருளின் உதவி கண்ணுக்குத் தேவைப்படுகிறது. அஃதாவது பகலில் சூரிய வொளியும் இரவில் விளக்கொளியும் வேண்டியிருக்கிறது. சூரிய வொளியோ, விளக்கொளியோ கண்ணொளியோடு கலந்து காட்டும் பொழுதே கண் பொருளைக் காண வல்லதாகின்றது. இவ்வாறு, கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நின்று உதவுகிறது. கண் காணும் நெறி இதுவாகும். இப்பொருளுக்கு ஏற்ப, செய்யுளின் இறுதியில் உள்ள ஒளி என்ற சொல்லை எடுத்து முதலடியின் இறுதியில் உள்ள நிலை என்பதற்கு முன்னே கூட்டி, கண் காணும் நெறி கண் உயிர் நாப்பண் ஒளி நிலையால் உண்டு; அல்லது இல்லை என அமைத்துக் கொள்ள வேண்டும். இச் செய்யுளில் கூறப்பட்டுள்ளது உவமை மட்டுமே. இதனைக் கொண்டு ஆசிரியர் உணர்த்த விரும்பும் கருத்தை இனிக் காண்போம்.

உயிர் அறியும் நெறி :

கண் போல இருப்பது உயிர். கண் தானே காண மாட்டாது போல உயிரும் தானே அறிய மாட்டாது. உயிருக்கு அறிவு விளங்குதற் பொருட்டுக் கருவி கரணங்களைக் கூட்டுவித்தது திருவருள். கருவி கரணங்களை உயிருக்குச் சேர்த்ததோடு திருவருளின் செயல் முடிந்து விட்டது என்றோ, கருவிகளைப் பெற்ற உயிர் அவற்றைத் தன் விருப்பப்படியே இயக்கி விரும்பியவாறு அறியும் என்றோ கருதி விடலாகாது. கருவிகள் நம் விருப்பப்படி இயங்குவதில்லை என்பதையும் அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் அன்றாட அனுபவத்திற் காணலாம். சிலர் குணத்தில் நிறைமதியாய் இருப்பார்கள். அவர் மனத்தில் எப்பொழுதும் சாந்தமே குடி கொண்டிருக்கும். அமைதியும் அடக்கமுமே அவரிடம் நிலை கொண்டிருக்கும். அப்படிப்பட்டவரும் கூட ஓரொரு சமயத்தில் தமது பொறுமையையும் அமைதியையும் இழந்து கோபத்தின் வசப்பட்டு விடுவார்கள். இவருக்கா இவ்வளவு சினம்! என்று பிறர் வியந்து போகும் படியாகச் சினத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். இஃது எதைக் காட்டுகிறது? மனமாகிய கருவி அவர்கள் வசத்தில் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. சொல்வன்மை படைத்தவர் பலர் இருக்கிறார்கள். எந்த இடத்தில், எந்தச் சமயத்தில், எந்தச் சொல்லை ஆள வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குக் கைவந்த கலை. அவர்களை வசன நிர்வாகர் என்று குறிப்பிடுவார் தாயுமானவர். அப்படிப்பட்டவரும் கூட ஓரொரு சமயத்தில் சொல்லக் கூடாத சொல்லை வாய் தவறிச் சொல்லி இடர்ப்பாட்டிற்கு உள்ளாகிறார்கள். இஃது எதைக் காட்டுகிறது? வாக்கு ஆகிய கருவி அவர் வசத்தில் இல்லை என்பதைத் தானே காட்டுகிறது.

ஒருவர் சென்னையிலிருந்து புறப்பட்டார். அவர் செல்ல வேண்டிய ஊர் மதுரையைக் கடந்து உள்ளது. மதுரையை நெருங்கும் பொழுது ஆலயத்தின் நெடிதுயர்ந்த கோபுரங்கள் கண்ணிற்கும் கருத்திற்கும் விருந்தளிக்கும். அக் கோபுரங்களைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டே வந்தார். வண்டி மதுரையை நெருங்கியபோது அவர் தம்மையறியாமல் உறங்கி விட்டார். உடற்சோர்வும், மெல்லென வீசிய இளம் காற்றும் அவரை மெய் மறந்து தூங்க வைத்து விட்டன. திடீரென அவருக்கு விழிப்பு உண்டாயிற்று. வெளியே எட்டிப் பார்த்தார். வண்டி மதுரையைத் தாண்டி விட்டது என்பதை உணர்ந்தார். பாழாய்ப் போன தூக்கம் வந்து கெடுத்து விட்டது என்று நொந்து கொண்டார். இந்நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது? <உடம்பு ஆகிய கருவி அவர் வசத்தில் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. இதனால், கருவிகள் இயங்குவது உயிரின் விருப்பப்படி அன்று என்பது தெளிவாகும். திருவருளே கருவிகளைக் கூட்டுவிப்பதோடு அவ்வவ்வுயிரின் வினைக்கேற்ப அக்கருவிகளைச் செலுத்தியும் வருகிறது. எப்படி கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நிற்கிறதோ அப்படியே கருவிகளுக்கும் உயிருக்கும் இடையே திருவருள் ஒளி நின்று செலுத்துகிறது. திருவருள் அவ்வாறு நில்லாவிடில் உயிர் அறிதல் இல்லையாம். இங்குப் பெத்த நிலை மட்டுமே கூறப்பட்டுள்ளது. பெத்த நிலையில் மட்டுதான் இப்படி என்று எண்ணி விடவேண்டா. முத்தி நிலையிலும் திருவருளின் துணையின்றி உயிர் அமையாது என உணர்தல் வேண்டும்.

57. நின் செயல் மன் செயல்

புன் செயலின் ஓடும் புலன் செயல்போல் நின்செயலை
மன் செயல தாக மதி.

பொருள் : சிற்றின்பப் பொருள்களின் மேல் விரைந்து செல்லுகின்ற ஐம்பொறிகளின் செயல், உண்மையில், அப்பொறிகளைச் செலுத்துகின்ற உயிரின் செயலேயாகும். அதுபோல, மாணவனே, நீ செய்யும் செயல்கள் யாவும் உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே அறிவாயாக.

சொற்பொருள் :

புன் செயலின் - புல்லிய இன்பத்தையே தரும் உலகப் பொருள்களின் மேல்
ஓடும் - விரைந்து செல்லுகின்ற
புலன் செயல் போல் - ஐம்பொறிகளின செயல் அவற்றைச் செலுத்துகின்ற உயிரின் செயலாய் இருத்தல் போல
நின்செயலை - (மாணவனே) உனது செயல்களையெல்லாம்
மன் செயலதாக - உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே
மதி - அறிவாயாக.

விளக்கம் :

உலகத்திலுள்ள சிற்றின்பப் பொருள்களைப் பற்றுவதற்காக ஐம்பொறிகளும் வெளியே ஓடுகின்றன. ஓர் இளைஞன் தனிமையான ஓரிடத்தில் கண்மூடித் தியானத்தில் அமர்ந்தான். சற்று நேரத்தில் அந்த வழியாகச் சில பெண்கள் வந்தார்கள். அவன் கண் திறந்து அக் காட்சியைக் காணும்படி நேர்ந்தது. அதனால் அவனது தியானம் கலைந்தது. அடுத்த நாள் முதல் யார் வந்தாலும் கண்களைத் திறக்கக் கூடாது என்று முடிவு செய்தான். மறுநாள் கண்களைத் துணியினால் கட்டிக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டான். அன்றைக்கும் அதே பெண்கள் வந்தார்கள். அவர்களது பேச்சொலியும், வளையல் ஒலியும் அவனது காதுகளைக் கவர்ந்தன. அப்பொழுதும் அவனது தியானம் கலைந்து விட்டது. இனிக் கண்களை அடைத்தது போலக் காதுகளையும் அடைக்க வேண்டும் என்று முடிவு செய்தான். மறுநாள் தன் இரு செவிகளையும் பஞ்சினால் மூடிவிட்டுத் தியானத்தில் அமர்ந்தான். வழக்கம் போல அதே நேரத்தில் அந்தப் பெண்களும் வந்தார்கள். கண்கள் காணாவிடினும், காதுகள் கேளா விடினும், அவனது நாசியாகிய பொறியை அவர்கள் சூடியிருந்த மல்லிகையின் நறுமணம் ஈர்த்தது. அதனால் அவனது தியானம் தடைப்பட்டது. இனி மூக்கினையும் மூடுவது என்று முடிவு செய்தான். அடுத்த நாளில் கண், காது, மூக்கு ஆகிய பொறிகளை அடக்கிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தான். சற்று நேரமாயிற்று. அவனது மனமானது எண்ணிக் கொண்டது. இது அந்தப் பெண்கள் வருகிற நேரமாயிற்றே. அவர்கள் வந்திருப்பார்களா இல்லையா? என்று எண்ணி மனம் அலைபாய்ந்தது. இந்த எண்ணம் வந்த பிறகு தியானம் செய்வது எங்கே!

இவ்வாறு கண் காது முதலிய பொறிகள் உருவம் ஓசை முதலியவற்றைப் பற்றுகிற செயல் அவற்றின் செயலா என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். அவையெல்லாம் கருவிகளாகிய சடப்பொருள்களே. அவற்றிற்கென்று என்ன செயல் இருக்கிறது? ஆன்மா செலுத்தவே அவை செயல்படுகின்றன. எனவே அவற்றின் செயலெல்லாம் ஆன்மாவின் செயலே யாதல் விளங்கும். இந்த ஐம்பொறிகளின் நிலையில் ஆன்மாவை வைத்துக் காணுதல் வேண்டும். ஐம்பொறிகளுக்கென்று தனித்த செயல் இல்லாமை போல, ஆன்மாவிற்கும் சுதந்திரமான செயல் ஒன்றும் இல்லை. ஆன்மா செலுத்தவே ஐம்பொறிகள் செயற்படுகின்றன. அதுபோலத் திருவருள் செலுத்தவே ஆன்மாவும் செயற்படுகின்றது. எனவே, ஐம்பொறிகளின் செயல் ஆன்மாவின் செயலாதல் போல, ஆன்மாவின் செயலும் திருவருளின் செயலேயாகிறது என்பது தெளிவாகும். இந்த உண்மையை நூல்கள் வாயிலாக உணர்தல் கூடும். ஆனால், அந்த நூலுணர்வினால் உண்மை ஞானம் பிறவாது. அருளாசிரியர் இந்த உண்மையை அறிவுறுத்த, அவரது உரையே மாணாக்கனுக்கு அனுபவ ஞானத்தைத் தந்துவிடும். நீ செய்வன வெல்லாம் திருவருள் செய்விக்கச் செய்யும் செயல்களாம் என்று அவர் உணர்த்த, மாணாக்கன் அவர் உணர்த்தியவாறே உணர்ந்து திருவருளைப் பற்றிக் கொள்வான்.

58. திருவருள் ஒளியைக் காணும் முறை

ஓராதே ஒன்றையும் உற்று உன்னாதே; நீ முந்திப்
பாராதே; பார்த்ததனைப் பார்.

பொருள் : மனம், மொழி, மெய்களின் தொழிற்பாடாகிய முயற்சிகளுள் யாதொன்றையும் உன்னுடையதாகக் கருதாதே. அம் முயற்சியால் விளையும் நலம் தீங்குகளை உன்னுடையனவாகக் கொண்டு அவற்றில் அழுந்தாதே. தற்போதம் நீங்கிய இடத்து வேறற விளங்கி நிற்பதாகிய திருவருளை உனது தற்போதத்தினால் காண முற்படாதே. உன்னறிவில் நிலைத்து நின்று உன்னைக் கண்டு வருவதாகிய அத்திருவருளை மனம் அசைவற நின்று காண்பாயாக.

சொற்பொருள் :

ஒன்றையும் ஓராதே - மனம், மொழி, மெய்களாற் செய்யும் செயல்களுள் எந்த ஒன்றையும் உன்னுடையதாகக் கருதாதே.
உற்று உன்னாதே - அச் செயல்களால் விளையும் நலன் தீங்குகளை உன்னுடையனவாகக் கொண்டு அவற்றில் அழுந்தாதே.
நீ முந்திப் பாராதே - திருவருளை உன்னுடைய தற்போதத்தால் காண முற்படாதே.
பார்த்ததனை - உன் அறிவில் நின்று உன்னைக் கண்டு வருவதாகிய அத்திருவருளை
பார் - மனம் அசைவற்று நின்று காண்பாயாக.

விளக்கம் :

எந்நிலையிலும் தனக்குத் துணையாய் நின்று உதவும் திருவருளை உயிர் மறந்து யான் என முனைத்து நிற்றலே சீவபோதம் அல்லது தற்போதம் எனப்படும். இந்த <உலகத்தில் நான் வாழ்கிறேன். இவை எல்லாம் எனக்கு உரிய பொருள்கள். நான் நினைத்தால் எந்த இன்பத்தையும் அனுபவிக்கலாம் என்று வரும் நான் நான் என்ற நினைப்பே சீவபோதம். சீவபோதம் இருக்கும்வரை திருவருள் வெளிப்படாது. ஓர் எடுத்துக்காட்டுக் கூறி இதனை விளக்கலாம். மேட்டினை அடுத்து ஒரு வயல் இருக்கிறது. அருகிலேயே ஆறும் ஓடுகிறது. ஓடி என்ன பயன்? மேடு இடையில் தடையாக இருப்பதனால் ஆற்று நீர் வயலில் பாய முடியவில்லை. வயலுக்கு நீர் வேண்டுமானால் ஆற்றோரத்தில் இருக்கிற மேட்டினை வெட்டிவிட வேண்டும். பிறகு ஆற்றுநீர் தானே வயலில் பாயும். வயல் போல இருப்பது உள்ளம். தடை செய்கின்ற மேடாக இருப்பது தற்போதம். அதனை நீக்கினால், தன் முனைப்போடு மற்றச் செயல்களைச் செய்யாமல் மனம் அடங்கி மவுனமாக இருந்தபடி இருந்தால் அருள் அங்கே வரும். யான் எனதென்றற்ற இடமே திருவடி என்பார்கள். யான் என்ற அகங்காரத்தையும், எனது என்ற மமகாரத்தையும் நீக்கினால் அங்கே திருவருள் வெளிப்படும் என்பது இதன் கருத்தாகும்.

ஒரு கவிஞர் பின்வருமாறு சொன்னார்.

நான் மறையைக் கற்றவனா ஞானி? - தன்னுள்
நான் மறையக் கற்றவனே ஞானி

என்று அழகாக விளக்கம் அளித்தார். நான் மறையாகிய வேதங்களைக் கற்றதனால் மட்டும் ஒருவன் ஞானியாகிவிட முடியாது. நான் என்று எழுகிற தற்போதம் மறையக் கற்றவனே உண்மையான ஞானியாவான் என்று நயம்படக் கூறினார். எனவே, தம் முனைப்புத் தோன்ற நில்லாமல், உரையும் உணர்வும் அற்று அசைவற்று நிற்பின், அருளொளியாகிய சிவஞானம் உன்னறிவில் தானே வெளிப்பட்டு உன்னை அடக்கிக் கொள்ளும் என்பது மாணவனுக்கு ஆசிரியர் கூறும் அறிவுரையாகும்.

59. ஒளிக்குள் ஒளிந்து நில்!

களியே மிகுபுலனுமாக் கருதி ஞான
ஒளியே ஒளியா ஒளி.

பொருள் : ஞானமாகிய அருள் வழியாக உண்டாகும் இன்பத்தையே அடையத்தக்க மேலான பேரின்பமாக உணர்ந்து, அத்திருவருள் ஞானத்தையே பற்றாகப் பற்றி நின்று, அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக.

சொற்பொருள் :

களியே - முதல்வனை அவனது அருள் வழியாகக் காணுமிடத்துத் தோன்றுகிற இன்பத்தையே
மிகு புலனுமா - அடையத்தக்க மேலான பேரின்பமாக
கருதி - உணர்ந்து
ஞான ஒளியே - அத்திருவருள் ஞானத்தையே
ஒளியா - பற்றாகப் பற்றி நின்று
ஒளி - அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக.

விளக்கம் :

இனிய சுவைக் கரும்பு :

இறைவன் கரும்பைத் தேனைப் பாலைக் கனியமுதைக் கண்டைக் கட்டியை ஒத்திருப்பின் அந்த முத்தியினில் என்பர். பார்த்தாலும் நினைத்தாலும் பரிந்து உள்ளுணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும்  இனித்த சுவைக்கரும்பாக அவன் இருக்கிறான் என்பர்.

முன்பு கண்டறியாத இன்பம் :

இத்தகைய இனிய பொருளாகிய அவனை நமது அறிவாகிய பாசஞானத்தால் அறிய முடியாது. அவனது அறிவாகிய பதி ஞானத்தாலேயே அவனை அறிய முடியும். அருளே பதி ஞானம் எனப்படுகிறது. பேரின்பப் பொருளாகிய பதியைப் பதிஞானமாகிய அருள் வழியாகக் காணுமிடத்து, முன்பு என்றும் கண்டறியாத ஓர் இன்பம் தோன்றும். ஞான நெறியிற் செல்லும் சாதகன் அதனையே அடையத்தக்க பெரும் பயனாகக் கருதிப் பற்ற வேண்டும் என்பார், களியே மிகு புலனுமாக் கருதி என்றார்.

பதி ஞானமாகிய ஒளி :

அருளாகிய பதிஞானம் ஒளியாய் இருப்பது; <உயிரில் உள்ளொளியாய்க் கலந்திருப்பது. இதுவரையில் கருவிகளால் வரும் பாச ஞானத்தைப் பற்றி நின்ற சாதகன் அப்பாச ஞானத்தை விடுத்துத் தன்னுள் விளங்கும் பதி ஞானத்தையே தனக்குப் பற்றுக் கோடாகப் பற்ற வேண்டும் என்பார் ஞான ஒளியே ஒளியா என்றார்.

ஒளியிலே ஒளிந்து நில் :

அவ்வாறு பதி ஞானமாகிய ஒளியையே பற்றாகப் பற்றி நீ அதனுள் ஒளிந்து நிற்பாயாக என்று மாணவனுக்கு அறிவுறுத்துகிறார் ஆசிரியர். இருளான இடத்திலேதான் ஒளிந்து நிற்க முடியும். ஒளியிடத்தில் எப்படி ஒளிந்து நிற்பது! இஃது உலகியலில் நடவாத காரியம். ஆனால் அருளியலில் இந்நிலை மாறுகிறது. இங்கே, ஞான ஒளியில் சாதகன் ஒளிந்து நிற்க வேண்டும். அதன் கருத்து, அவன் தன்னை இழந்து, யான் எனது என்னும் நினைப்பு இன்றித் திருவருளின் வசப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். ஞான ஒளியிலே புகுந்து நின்றால் உலகப் பொருள்களிலே அவனது கருத்துப் போகாது. தண்ணீருக்குள் மூழ்கி நிற்பவனுக்கு வெளியிலுள்ள பொருள்கள் எப்படித் தெரியும்? அது போல, ஞானத்துள் மூழ்கி நிற்பவனுக்கு வெளியுலக விடயங்களாகிய இன்பத் துன்பங்கள் தோன்றுதலும் இல்லை. அவற்றால் அவன் கவரப்படுதலும் இல்லை.

நாவுக்கரசர் வாழ்வில் :

நாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த ஒன்றை இங்கே நினைத்துப் பார்க்கலாம். அவரை வெய்ய நீற்றறையில் விடுத்துக் கதவைத் தாளிட்டுக் காவலும் இட்டனர். ஆண்ட அரசு அதனுள்ளே சென்ற பொழுது அம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் பெருமானுடைய தாள் நிழலைத் தலைக் கொண்டார் என்றும், மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுதிருந்தார் என்றும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். தாள் நிழலைத் தலைக் கொண்டார் என்பது, அவர் தன் செயலற்றுத் திருவருளுக்குள் அடங்கி நின்றார் என்பதைக் காட்டும் மூண்ட மனம் நேர் நோக்கி என்பது, தன்னறிவில் வேறொன்றும் புலப்படாது திருவடி நினைவில் உறைத்து நின்ற அவரது நிலையைக் குறிக்கும். இவ்வாறு அவர் ஞான ஒளியில் ஒளிந்து நின்றமையால் ஊனம் இலராகி இருந்ததோடு, ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி உவந்திருந்தார். இவ்வரிய நிகழ்ச்சியை நினைப்பிக்கும் வகையில், களியே மிகு புலனுமாக் கருதி ஞான ஒளியே ஒளியா ஒளி என்றார் ஆசிரியர் எனலாம்.

60. திருவருளின் வசப்பட்டிரு

கண்டபடியே கண்டு காணாமை காணாமை
கொண்ட படியே கொண்டிரு.

பொருள் : மாணாக்கனே, அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்தாதவாறு, கருவிகளை உனக்கு வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய். பின்னும் அவ்வாறு அதனையே விடாது பற்றி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளும். அது உன்னை விழுங்கிக் கொள்ளுமாறு அதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டிரு.

சொற்பொருள் :

கண்டபடியே - மாணாக்கனே, கருவிகளை உன்னின் வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய் இனியும் அவ்வாறே
காணாமை காணாமை - கருவிகள் நீங்கினமை காரணமாக அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்துமாகலின், அது பொருந்தாதவாறு
கண்டு - அத்திருவருளையே விடாது பற்றி நின்று
கொண்டபடியே கொண்டு இரு - அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளுதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டு இரு.

விளக்கம் :

கருவிகளை நீங்கித் திருவருளோடு கூடுதல் :

கண், செவி முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும் உயிருக்குப் புலனுணர்வைத் தருமேயன்றி மெய்யுணர்வைத் தரமாட்டா; அவை உலகத்தைக் காட்டுமேயன்றி உயிரின் இயல்பையோ, உயிரின் கண் உள்ள திருவருள் ஞானத்தையோ காட்டமாட்டா. அக்கருவிகள் உலகையே காட்டி உயிரை மயக்குவதால் அம் மயக்கத்தில் ஆழ்ந்த உயிர் அக்கருவிகளையே தானாகக் கருதி நிற்கும். அக்கருவிகள் சடம் என்பதையும், தான் அவற்றிற்கு வேறாய் உள்ள அறிவுப் பொருள் என்பதையும் ஞானாசிரியர் உணர்த்த உயிர் உணரும். அவரது உபதேசத்தைப் பெற்றுச் சிந்திக்கின்ற முறையினால் அக் கருவிகளைத் தனக்கு வேறாகக் கண்டு நீங்கும். அவ்வாறு நீங்கிய உயிருணர்வில் திருவருள் ஞானம் இனிது விளங்கித் தோன்ற உயிர் அதனோடு கூடும்.

காணாமை காணாமை :

இங்கு ஓர் ஐயம் எழும். கருவிகளை நீங்கினால் உயிருக்கு அறியாமை அல்லவா உண்டாகும். கனவு, உறக்கம், மூர்ச்சை போன்ற நிலைகளில் உயிர் கருவிகளினின்றும் நீங்கி அறியாமையைத் தலைப்படுதல் யாவரும் அறிந்தது. அப்படியிருக்க, கருவிகளை நீங்கிய உயிர் திருவருளைக் கண்டு அதனோடு கூடும் எனல் எவ்வாறு பொருந்தும் என்பதே அவ்ஐயம். இது பற்றிய விளக்கத்தை அடுத்த அதிகாரத்தின் முன்னுரையில் காணலாம். இங்கும் அதனைக் கூறுவோம். கருவிகள் சோர்வுற்றுச் செயற்படாமல் தாமே நீங்கும் போது தான் உயிர் யாதொன்றையும் அறிய மாட்டாமல் அறியாமையைப் பொருந்தும். அவ்வாறு உண்டாகின்ற அறியாமை நிலைகளே கனவு, உறக்கம் போன்றவை. இனி, கருவிகள் நீங்காமல் இருக்கவும், உயிர் அவற்றைத் தனக்கு வேறு எனக் கண்டு நீங்க முடியும். கருவிகளை நீங்குதலாவது, அவற்றின் வழிப் படாதிருத்தல். அவற்றைப் பற்றி நின்று புலன் உணர்வில் செல்லாதிருத்தல். இவ்வாறு கருவிகளை வேறு எனக் கண்டு அவற்றைப் பற்றாது விடுத்தால், தன்னறிவில் விளங்குகிற திருவருளாகிய ஞானத்தை உயிர் பற்றிக் கொள்ளும். அந்த ஞானம் எல்லாவற்றையும் அறிகின்ற இறைவனது ஞானம் ஆதலின் அதனைப் பற்றிய உயிருக்கு அறியாமை எங்ஙனம் உண்டாகும்? இக்கருத்தையே முதலடியில் உணர்த்தியுள்ளார் ஆசிரியர். காணாமை காணாமை கண்டபடியே கண்டு எனச் சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டும். முதலில் உள்ள காணாமை என்பதற்கு அறியாமை என்பது பொருள். அடுத்துள்ள காணாமை என்பதற்குக் காணாதவாறு எனப்பொருள் கொள்ளுதல் வேண்டும். எனவே காணாமை காணாமை கண்டு என்பதற்கு அறியாமை ஏற்படாதவாறு கருவிகளை விட்டு நீங்கித் திருவருள் ஞானத்தை உனதறிவில் கண்டு என்பது பொருளாகும்.

திருவருள் அடக்கிக் கொள்ளுதல் :

உயிர் எந்நிலையிலும் தனக்குத் துணையாய் நின்று உதவும் திருவருளை மறந்து, யான் என முனைத்து நிற்றலே அதற்குமாசு ஆகும். அம்முனைப்பு சீவபோதம் எனப்படும். உயிர் திருவருளைக் கண்டு அதன் வழியில் நிற்பின், அத்திருவருள் யான் என்னும் சீவபோதத்தை எழவொட்டாது தன்னுள் அடக்கிக் கொள்ளும். அதனால் உயிர் மாசு நீங்கித் தூய்மையுறும். எனவே உயிரைத் தூய்மைப்படுத்துவது சிவனது அருளே என்பது விளங்கும்.

ஏழாம் அதிகாரம் உயிர் விளக்கம்

அறிவும் அறியாமையும் :

மாயையின் காரியங்களாகிய உடம்பையும் கருவிகளையும் கொண்டு உலகை அறிந்து வருகிறோம். இவைகள் நமக்கு உலக அறிவைத் தருகின்றன. இக்கருவிகள் நம்மை விட்டு நீங்கும்போது அறிவு நிலையும் நீங்குகிறது; அறியாமை மேலிடுகிறது. கருவிகள் நீங்குதல் என்பதன் பொருள், அவை சோர்வுற்றுச் செயற்படாமல் மடங்கி நிற்றல் என்பதாகும். அவ்வாறு நீங்கிய கருவிகள் மீண்டும் வந்து கூடிச் செயற்படும்போது நாம் அறியாமையிலிருந்து விடுபட்டுப் பழையபடி உலகை அறிந்து வருகிறோம். இது நமது அன்றாட அனுபவம் ஆகும். விழிப்பு நிலையில் எல்லாக் கருவிகளும் நன்கு செயற்படுவதனால் அறிவு நன்கு விளங்குகிறது. ஆனால், எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்க முடிகிறதா? அவ்வாறு இருக்க நாம் விரும்பினாலும் கருவிகள் நம்மோடு ஒத்துழைப்பதில்லை. அவை நம்மிடம் சொல்லாமலே நம்மை விட்டு நீங்குகின்றன! கண்கள் சோர்ந்து இமை மூடுகின்றன. செவி முதலிய ஏனைய கருவிகளும் படிப்படியாகச் செயலிழக்கின்றன. உறக்கம் வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. விழிப்பு என்பது அறிவு நிலை என்றால், உறக்கம் என்பது அறியாமை நிலையாகும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கனவு என்ற நிலை உண்டு. கனவு என்பது அரை குறையான அறிவு நிலையாகும். இனி உறக்க நிலையையும் தாண்டிப் பேருறக்கம் என்ற நிலை வரும். அதற்கும் அப்பால் மூச்சுக் காற்றும் இயங்காமல் நிற்கிற, முழு அறியாமையில் உயிர் அழுந்துகிற உயிர்ப்பு அடங்கல் என்ற நிலையும் உண்டு. இப்படி விழிப்பு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படங்கல் என்ற ஐந்து நிலைகளை நாம் நாள்தோறும் அடைகிறோம். சிலசில கருவிகள் செயற்படாமல் நீங்க நீங்க, இந்த நிலைகளும் படிப்படியாக உண்டாகும்.

விழிப்பு நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையாகக் கடந்து உயிர்ப் படக்க நிலைக்குச் செல்வதும், பின் மீண்டும் அங்கிருந்து ஒவ்வொரு நிலையாகக் கடந்து பழையபடி விழிப்பு நிலைக்கு வருவதுமாகப் போக்குவரவு செய்கிறோம். விழிப்பு நிலையிலிருந்து இறங்க இறங்க அறியாமை மிகுந்து வரும். கீழ்நிலையிலிருந்து மேலே செல்லச் செல்ல அறிவு விளங்கி வரும். வேறு வகையாகச் சொன்னால், கருவிகள் நீங்க நீங்க அறியாமையும், கருவிகள் சேரச் சேர அறிவு நிலையும் உண்டாகும் எனலாம். கருவிகள் நீங்கி அறியாமைப்படும் நிலையைக் கேவலம் என்றும், கருவிகளோடு கூடி அறிவு விளங்கும் நிலையைச் சகலம் என்றும் கூறுவர். எனவே, கேவலம் என்பது அறியாமையைக் குறிக்கும். சகலம் என்பது அறிவு நிலையைக் குறிக்கும்.

நினைப்பும் மறப்பும் :

இனி, விழிப்பு நிலையிலிருந்து இறங்காமலே, அஃதாவது நன்றாக விழித்திருந்து உலகத்தை நன்றாக அறிந்து நிற்கும் போதே நமது உணர்வில் பல நிலைகள் உண்டாகும். அதனை இங்கே விளக்குவோம். ஒருவர் வங்கியில் ஒரு பெருந்தொகையை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார். காலம் கெட்டுக் கிடக்கிறது. அதனால் வழியில் எங்கேயும் நிற்கக் கூடாது; வேடிக்கை பார்க்கக் கூடாது என்றெல்லாம் எண்ணிக் கொண்டு நடந்தார். ஆனால், வரும் வழியில் ஒரு நண்பர் அவரைப் பிடித்துக் கொண்டார். நெடு நாட்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்ததால் அவர் இவரை விடுவதாக இல்லை. நாட்டு நடப்புகள் பற்றி அவர் பேசிக் கொண்டே போனார். அவரிடமிருந்து தப்பித்தால் போதும் என்றாகி விட்டது இவருக்கு. ஒரு வழியாக அவரிடம் விடை பெற்று விரைவாகக் கிளம்பினார். அந்த விரைவில் பணப்பையை அந்த இடத்திலே மறந்து போய் வைத்துவிட்டார். வீட்டிற்குப் போய்ப் பார்த்தால் பையைக் காணவில்லை. எப்படியிருக்கும் அவருக்கு? ஒரு கணம் மூச்சே நின்று விட்டது போல் ஆகிவிட்டது. நெஞ்சு படபடத்தது. மயக்கம் வருவது போன்ற நிலை. அப்படியே பொத்தென்று இருக்கையில் விழுந்து கண்ணை மூடிக் கொண்டார். அவரது துணைவியார் பதறிப் போனார். உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கண் கலங்கி நின்றார். சிறிது நேரம் சென்ற பின் மயக்கம் ஒருவாறு தெளிந்தது; படபடப்புத் தணிந்தது. துன்ப மிகுதியால் செய்வதொன்றும் தோன்றாமல் மனம் கலங்கி நின்றார். பின்பு கலக்கம் நீங்கி அந்தப் பணப்பையை எங்கே, எவ்வாறு தவறவிட்டோம் என்று எண்ணிப் பார்த்தார். நண்பரோடு பேசிக்கொண்டு நின்ற அந்த இடத்தில் தான் அதனை விட்டிருக்க வேண்டும் என்ற துணிவு பிறந்தது. உடனே அதனைத் தேடிப் புறப்பட்டார். நல்ல காலமாக அந்தப் பை அங்கேயே கிடந்தது. அவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பொருளை ஓரிடத்தில் வைத்து விட்டு மறந்தது, பின் அப்பொருளைப் பற்றிய நினைவு வந்தது என்ற இரண்டிற்கும் இடையே அவருக்கு ஏற்பட்ட பல நிலைகளை இங்கே காணலாம். முதலில் மயக்கநிலை, பின் ஒருவாறு தெளிந்த நிலை, செயலற்றுக் கலங்கிய நிலை, பின் அந்தப் பொருள் எங்கே, எப்படிப் போயிருக்கும்? என்று சிந்தித்த நிலை இந்த இடத்தில் தான் அதனை விட்டிருப்போம் என்ற நினைவு தோன்றிய நிலை என இப்படிப் பல நிலைகள் தோன்றியதைக் கண்டோம். இன்னொரு நிகழ்ச்சியைக் கூறுவோம். ஒரு நாள் நான் கடை வீதி வழியே சென்று கொண்டிருந்தேன். எதிரே அழகான சிறிய காரை ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார். நடுத்தர வயதிருக்கும். நல்ல எடுப்பான தோற்றம். உயர்ந்த நிலையில் இருப்பவராகத் தோன்றியது. என்னைக் கண்டவுடன் அவர் வண்டியை நிறுத்தி இறங்கினார். வணக்கம் செலுத்தினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் இன்னார் என்பதும் தெரியவில்லை. திகைப்பே ஏற்பட்டது.

அவர் பேசத் தொடங்கினார். <உங்களை என்னால் என்றும் மறக்க முடியாது. உங்களால் தான் நான் இந்த நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்றார். உடனே, அவர் என்னிடம் பயின்ற மாணவர் என்பது தெரிந்து போயிற்று. ஆனால், எப்பொழுது பயின்றார்? என்பது நினைவில் இல்லை. அவரது பெயரும் நினைவுக்கு வரவில்லை. பழைய நினைவுகளைக் குடைந்து பார்த்தேன். சட்டென்று அவரது பெயர் எனது நினைவில் தட்டுப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருடைய பழைய உருவம், படித்த காலத்தில் அவர் செய்த குறும்புகள் முதலியவையெல்லாம் பளிச்சென்று தெரிந்தன. முதலில் அவர் இன்னார் என்றே தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தேன். சிறிது நேரம் திகைத்து நின்றேன். பிறகு சிறிது சிறிதாகத் தெளிவு பிறந்தது. அவரைப் பற்றிய பல செய்திகளை நினைவுக்குக் கொண்டு வர முடிந்தது. ஒரு பொருளை அறியுமிடத்தில் உயிருணர்வில் இப்படிப் பல நிலைகள் தோன்றும். இவையெல்லாம் விழிப்பு நிலையிலே ஏற்படுகிற பல நிலைகளாகும். சுருங்கச் சொன்னால், விழிப்பு நிலையில் மாறி மாறி வரும் நினைப்பும் மறப்புமே இவை எனலாம். கருவிகள் கூடியும் குறைந்தும் செயற்படுவதனால் நினைப்பும் மறப்பும் உண்டாகின்றன. அறியாமையைக் கேவலம் என்றும், அறிவு நிலையைச் சகலம் என்றும் முன்னே குறிப்பிட்டோம். மறப்பு என்பது அறியாமை தானே. அதனால் மறப்பு கேவலம் எனப்படும். அறிவு நிலையாகிய நினைப்பு சகலம் எனப்படும். உயிர் நாள்தோறும் இடையறாது வரும் நினைப்பும் மறப்பும் ஆகிய சகல கேவலங்களிற் பட்டுச் சுழலும்.

இரவும் பகலும் :

மெய்ந்நூல்கள் கேவலத்தை இரவு என்ற குறியீட்டினால் உணர்த்தும்; சகலத்தைப் பகல் என்ற குறியீட்டினால் உணர்த்தும். வெளியுலகில் இரவும் பகலும் மாறி மாறி வருதல் போல உயிருணர்வில் கேவலமும், சகலமும் ஆகிய - மறப்பும், நினைப்பும் ஆகிய இரவு பகல் மாறி மாறி வருகின்றன. இதனை விளங்கும் படியாகச் சொன்னால், உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளின் வசப்பட்டு நின்று, உலகப் பொருள்களை அறிந்து, அந்தப் புலன் <உணர்வில் அழுந்தி நிற்கும் என்பதாகும். உயிர் புலனுணர்வில் மயங்கி நிற்கும் போது தன்னியல் பையும் அறிய மாட்டாது. தன்னுள் இருந்து இயக்கும் தலைவனையும் அறிய மாட்டாது.

கருவிகளை நீங்குதல் :

கருவிகளின் இயல்பு என்ன வென்றால், அவை உயிரியல்பை உணரவிடாமற் செய்து தம்மையே காட்டி நிற்கும். ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். பளிங்கின் மேல் பல நிறங்களைத் தீட்டி வைத்தால் அவ்வேற்று நிறங்கள் பளிங்கின் ஒளியைத் தெரிய விடாமல் மறைக்கும்; தம்மையே பளிங்கின் நிறமாகக் காட்டி நிற்கும். அதுபோல <உயிரைப் பொருந்திய ஐம்பொறி முதலிய கருவிகள் உயிரியல்பை உணர்த்தாது, தம்மால் கவரப்பட்ட புலன்களின் உணர்வையே தோற்றுவிக்கும். உயிர் அப்புலனுணர்வில் மயங்கித் தன்னியல்பை மறந்து நிற்கும். உயிர் பக்குவமுற்ற காலை ஞானாசிரியரின் உபதேசத்தைப் பெற்றுக் கருவிகளைத் தன்னின் வேறாகக் கண்டு நீங்கும். கருவிகளை விட்டு நீங்குவது எப்படி? என்று கேட்கலாம். பிடிக்காத வீட்டை விட்டு நீங்கி வேறு இடத்திற் குடிபுகலாம். வேண்டாத மனைவியைக் கூட விட்டு விலகலாம். ஆனால் எப்போதும் உடனாகவே வருகின்ற இந்த உடம்பையும் கருவிகளையும் விட்டு எப்படி நீங்க முடியும்? என்று வினவலாம். இங்கே நீங்குதல் என்றால் இடத்தால் நீங்குதல் அன்று; அறிவால் நீங்குதலாகும். அஃதாவது கருவி கரணங்கள் நமக்கு வேறானவை என அறிவால் தெளியக் கண்டு அவற்றில் பற்றுச் செய்யாது நிற்பதே நீங்குதல் எனப்படும்.

திருவருளைச் சேர்தல் :

உயிருக்கு அமைந்த சார்புகள் இரண்டே. ஒன்று அசத்தாகிய சார்பு; பிறிதொன்று சத்தாகிய திருவருட் சார்பு. அசத்தாகிய கருவி கரணங்களின் சார்பு இடையில் வந்தது. ஆகலின் அஃது உயிருக்குச் செயற்கையான சார்பாகும். திருவருட் சார்பே என்றுமுள்ள இயற்கையான சார்பாகும். ஆதலால் மேற்கூறியவாறு செயற்கையாகிய கருவிகளின் சார்பு நீங்கிய பொழுதே உயிர் திருவருட் சார்பைப் பெற்று விடும். இங்கே ஓர் ஐயம் எழலாம். கருவிகள் நீங்கினால் உயிருக்குக் கேவலம் ஆகிய அறியாமையல்லவா உண்டாகும்? கருவிகள் நீங்கியதும் உயிர் உறக்கம், பேருறக்கம் முதலிய நிலைகளை அடைவது இதைத்தானே காட்டுகிறது. அப்படியிருக்க, உயிர் கருவிகளை நீங்கினால் திருவருளைச் சேரும் என்று கூறுவது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். இவ்விடத்தில் ஒன்றைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். கருவிகள் சோர்வுற்றுத் தாமாகவே நீங்கும் பொழுது தான் உயிருக்கு அறியாமை உண்டாகும். அப்படியின்றிக் கருவிகள் நன்கு செயற்படினும், அவை நாமல்ல என்று கண்டு நீங்கினால், அவற்றின் வசப்படாமல், அவற்றில் பற்றுச் செய்யாமல் நின்றால்-உயிர் திருவருளையே சேர்வதாகும். உயிர் வியாபகப் பொருள். அதன் அறிவும் வியாபகமானது. இதுவே உயிரின் உண்மை நிலை. இந்த விரிந்த அறிவு கட்டு நிலையில் விளங்காமல் இருந்தது. அதன் அறிவை விளக்குவதற்காகவே கருவிகள் சேர்ந்தன. கருவிகள் சிறுமையுடையவை. அதனால், அவற்றால் விளங்குகின்ற அறிவும் சிற்றறிவாய் அமைந்தது. உயிர் கருவிகளை வேறாகக் கண்டு நீங்கித் திருவருளைச் சேரும் என்று அறிந்தோம். இந்நிலையில், உயிரறிவை விளக்குவது திருவருளேயன்றிக் கருவிகள் அல்ல. திருவருள் வியாபக அறிவாதலால் அதனால் விளங்குகிற உயிரறிவும் வியாபகத் தன்மையைப் பெறுகிறது. சிற்றறிவு நீங்குகிறது.

இரவு பகல் அற்ற இடம் :

இங்ஙனம் கருவிகளையும் அவற்றால் வரும் புலன் உணர்வுகளையும் நீங்கி உயிர் திருவருளைச் சேர்ந்து நிற்றலையே இரவு பகல் அற்ற இடத்தில் இருப்பதாக நூல்கள் கூறும். திருவருட் சார்பு இரவு பகலற்ற இடமாதல் எப்படி என்பதை நோக்குவோம். உயிர் திருவருள் ஒளியில் நிற்கும் போது ஒன்றையும் அறியாமையாகிய கேவலம் எப்படித் தலை காட்டும்? ஆகவே அது இரவு என்பது நீங்கிய இடம் ஆகிறது. அதுகாலை கருவிகள் செயற்பட்டுச் சிற்றறிவைத் தருமாயினும் திருவருளால் வியாபக அறிவு விளங்கிய பிற்பாடு அச் சிற்றறிவு என்ன பயனைச் செய்யும்? எல்லாவற்றையும் விளங்கக் காட்டும் சூரியவொளி வந்த பின்னர் எரிகின்ற விளக்கின் ஒளி போன்றது அச்சிற்றறிவு எனலாம். உயிர் பேரறிவாகிய திருவருள் ஒளியில் நிற்கும்போது சிற்றறிவாகிய சகலம் எப்படித் தலைக்காட்டும்? ஆகவே அது பகல் என்பது நீங்கிய இடம் ஆகிறது. இவ்வாறு திருவருள் ஞானத்தால் உயிருக்கு அறியாமையும் சிற்றறிவும் நீங்கி விடுதலால் திருவருட்பேறு இரவு பகல் அற்ற இடம் எனக் கூறப்படுவதாயிற்று.

திருவருளைச் சேர்தல் என்பதன் பொருள் :

நமக்கு இனியவராகிய ஒருவர் வேறோர் இடத்தில் இருந்தால், அவர்பால் சேர்வதற்கு நாம் அந்த இடத்திற்கு நடந்தோ வாகனத்திலோ செல்லுதல் வேண்டும். இஃது உடம்பின் செயல் ஆகும். திருவருளைச் சேர்தல் என்பது அப்படியன்று. திருவருள் வேறு எங்கோ, கண் காணாத இடத்தில் இல்லை. அஃது உயிரிலேயே உடனாக இருப்பது. அதனைச் சேர்தல் என்பது அதனை அறிதலேயாகும். எனவே இஃது அறிவின் செயலாகிறது. அறிதல் மூன்று வகையாய் நிகழும். பொதுவாக அறிதல், ஐயமாக அறிதல், தெளிவாக அறிதல் என்பன அவை. திருவருளை அறிதலிலும் இப்படி நிலைகள் நிகழும்.

ஐய நிலை :

ஞானாசிரியர் செய்த உபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்த காலத்தில் ஐம்பொறி முதலிய கருவிகளைத் தனக்கு வேறாகக் காணும் அறிவு ஐயமாக நிகழும். இந்த ஐய நிலையே ஆன்மதரிசனம் ஆகும். அது காலை கருவிகளை நீங்கியும், நீங்காமலும் நிற்கும் நிலையே உளதாகும். கருவிகளை நீங்கித் திருவருளை ஒருவாறு உணர்ந்தும் பின் திருவருளை மறந்து மீண்டும் கருவிகளோடு கூடி உலகத்தை அறிந்தும் இவ்வாறு அங்கும் இங்குமாய் அலமரும் நிலையே உளதாகும். பாசப் பற்று முற்றிலும் அறாத நிலையில் ஏற்படும் தடுமாற்றம் இது. ஊசற்கயிறு முற்றும் அறாத பொழுது ஊசற்பலகை கயிற்றிலும் நில்லாது தரையிலும் வீழாது நிற்பது போன்றது இது என முந்திய அதிகாரத்தில் குறிப்பிட்டோம்.

தெளிவுணர்வு :

சிந்தனையின் பயனாய் இந்த ஐயநிலை நீங்கித் தெளிவுணர்வு உண்டாகும். தெளிவுணர்வாவது, பொருட்சார்பும், உயிர்ச் சார்பும் ஆகிய பற்றுக்களை யெல்லாம் விடுத்துச் சிவத்தையே தனக்கு உயிராகத் தெளிந்து நிற்றல். இதற்குச் சான்றாக விளங்கும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுவோம். சிவனடியார்க்கு மகேசுரபூசை செய்து வணங்கும் முறைமையினை ஒருவர் மேற்கொண்டிருந்தார். அவரது மனைவியாரும் அதற்கு உறுதுணையாக நின்றார். அந்நியமப்படி அவர் ஒரு நாள் தம் வீட்டிற்கு வந்திருந்த அடியார்களை ஒவ்வொருவராக அணுகிப் பாதபூசை செய்தார். அவரது மனைவியார் பக்கத்தில் நின்று பாதம் விளக்க நீர் வார்த்து வந்தார். ஒரு சிவனடியார்க்குப் பாத பூசை செய்யும் முறை வந்தபோது அந்த அம்மையார் அவ்வடியவரை இனங் கண்டு கொண்டார். அவர் முன்னொரு சமயம் அவ்வீட்டில் பணி செய்த வேலையாள். இப்பொழுது அடியவர் கோலத்தில் வந்திருக்கிறார். இந்த எண்ணம் வந்ததும் அந்த அம்மையார் சற்றுத் தயங்கி நின்றார். பாத பூசையில் ஈடுபட்டிருந்த கணவர் அவரது மன ஓட்டத்தைத் தெரிந்து கொண்டார். இவ்வாறு எண்ணுவது இயல்புதானே என்று அவர் கொள்ளவில்லை. செய்தது மனைவிதானே என்று பொறுத்துக் கொள்ளவும் இல்லை. சிறிதும் கண்ணோட்டம் இன்றி வாளையெடுத்து அவரது கையை வெட்டினார். பின் பாத பூசையை முடித்து அடுத்த நிகழ்ச்சியாகிய அன்னம் பாலிப்பையும் தாமே நிறைவேற்றினார்.

எப்படிப்பட்ட உறுதி இது! சிவனடிப்பற்றையன்றி மற்றோர் பற்றில்லார் என்பதையல்லவா இது காட்டுகிறது. மனைவிக்கு இப்படி நேர்ந்து விட்ட பிறகும் மனங்கலங்காமல் சித்த சலனம் அடையாமல் சிவப்பணியை நடத்தி முடித்த இச்செயல், சிவத்தையன்றி வேறொன்றையும் பொருளாகக் கொள்ளாத அவரது தெளிவுணர்வைப் புலப்படுத்துவதாகும். இவ்வாறு திருவருளை முதலில் பொதுவாகவும், பின்னர் ஐயமாகவும், அதன் பின்னர்த் தெளிவாகவும் உணர்ந்த உயிர் அத்தெளிவுணர்வால் திருவருளை இறுகப் பற்றிக் கொள்ளும். திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்; புறம் போகேன்; இனிப்புறம் போகல் ஒட்டேனே என்று சொல்லும் நிலை இதுவாகும்.

திருவருளோடு ஒன்றாய் நிற்றல் :

முன்னே உள்ள ஐய நிலையில் உயிர் திருவருளுக்கு வேறாக நிற்கும். வேறாய் உள்ள வரையில் பாசப்பற்று முழுதுமாக நீங்குவதில்லை. தெளிய உணர்ந்த இந்நிலையில் உயிர்வேறாய் நில்லாமல் திருவருளோடு ஒன்றாய் நிற்கும். கயிறு முற்றும் அறப் பெற்ற ஊசற் பலகை தரையை அடைவது போலத் திருவருளைச் சேர்ந்து விடும். நான் என்னும் தற்போதத்தை இழந்து திருவருளுக்குள் அடங்கி நிற்கும். தன் செயலற்று அனைத்தையும் திருவருட் செயலாக உணரும்.

உயிர் விளக்கம் :

திருவருள் ஒளியில் மூழ்கி நிற்கும் இந்நிலையில் உயிரைப் பற்றியுள்ள மல இருள் முற்றிலும் நீங்கும். திருவருளும் சிவனும் கதிரும் கதிரவனும் போல்வர் என்பது நாமறிந்ததே. கதிரவன் காணப்படுவதற்கு முன்னே கதிர்கள் பரவி இருளை நீக்குதல் போலச் சிவனை அடைதற்கு முன்பே திருவருள் விளக்கம் ஏற்பட்டு மல இருள் நீங்கும் என அறியலாம். இதனால், இவ்வதிகாரம் திருவருட் பேற்றினைக் கூறுவது என்பதும், திருவருளால் மலமாகிய மாசு நீங்கி உயிர் தூய்மை பெறும் முறைமை உணர்த்துவதால் இதன்கண் கூறப்படும் நிலை ஆன்ம சுத்தி என்பதும், அது பற்றியே அப்பொருள்பட இவ்வதிகாரத்திற்கு உயிர் விளக்கம் எனப் பெயரிட்டார் ஆசிரியர் என்பதும் அறிதற்குரியன.

அதிகாரப் பொருள் நிலை :

இவ்வதிகாரத்தின் பொருள் நிலையைப் பின்வருமாறு தொகுத்து உணரலாம்.

தெளிவுணர்வால் திருவருளை இறுகப் பற்றிய உயிர் அத்திருவருளுக்கு வேறாய் நில்லாமல் அதனோடு ஒன்றாய் நிற்கும். வெயிலில் வந்தவன் குளிர்ந்த மர நிழலைக் கண்டபோது ஓடிச் சென்று அந்நிழலையடைந்து அதனுள் அடங்கி நின்று இன்புறுவதைப் போன்றது இது.

பித்தம் உள்ள நாவிற்கு இனிய பாலும் கசப்பாகத் தோன்றும். பித்தம் நீங்கிய பிறகு அதே நா பாலின் இனிய சுவையை அறியும். அதுபோல ஆணவ மலமாகிய நோய் இருக்கும் வரையில் ஆன்மாவுக்குத் திருவருள் வேண்டாத பொருளாகத் தோன்றும். மலநோய் தீர்ந்த முத்தி காலத்தில் அவ்வான்மாவுக்குத் திருவருள் இனிய உறவுப் பொருளாகத் தோன்றும். மலம் நீங்கிய உயிர் தனது <உண்மை இயல்பாகிய வியாபக அறிவைப் பெறும். அந்நிலையிலும் திருவருள் விளக்கவே, அதன் வியாபக உணர்வு விளங்குகிறது. இதனை உணராமல், திருவருளை மறந்து நானே எல்லாம் அறிகிறேன் எனவும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் எனவும், நானே பிரம்மம் எனவும் மயங்கி உணரும். மலம் நீங்கியும், மலவாசனை நீங்காத நிலையில் அதனால் உண்டாகின்ற யான் எனது என்னும் செருக்கினால் நிகழ்வது இது. இப்பேதைமை உணர்வு உயிருக்கு மாசு ஆகும். அதனை நீக்கித் தெளிவு பெறுதல் வேண்டும். திருவருள் ஒளியும் ஆணவ மலமாகிய இருளும் ஒரு வகையில் ஒற்றுமை உடையன. எவ்வாறெனில் ஆணவ இருளின் வயப்பட்ட வரும் தம்மை முழுதும் அறியாது கிடப்பர். அருளின் வயப்பட்ட வரும் தம்மை முற்றாக யிழந்து நிற்பர். மேலும் ஆணவ இருளில் உள்ளவர்க்கும் உலகம் புலப்படுவதில்லை. அருள் நிலையில் உள்ளவர்க்கும் உலகம் புலப்படுவதில்லை. அஃதாவது அவர்க்கு <உலகம் சிவமாய்த் தோன்றும். மாயா காரியப் பொருளாக அதனை அவர் பார்ப்பதில்லை என்பது கருத்தாகும்.

உலகச் சார்புகளை விடுத்துத் தன்னையே சார்பாக உணர்ந்து ஒழுகும் மெய்யன்பரை இறைவன் தாங்கிக் கொள்வான். தன்னையே விடாது பற்றி நிற்கும் குழந்தையை எடுத்துத் தாய் தன் இடுப்பிலும் தோளிலும் வைத்துச் சுமப்பது போலத் தன்னையே புகலாக அடைந்த அவ்வன்பரை இறைவன் எடுத்துச் சுமப்பான். அவர் எச்செயல் செய்யினும் அதனைத் தன் செயலாகக் கொண்டு வினைகள் அவரைச் சாராதவாறு காப்பான். பளிங்குத் தூண் காலையிலும் மாலையிலும் பிற பொருள்களின் நிழல்களைத் தன்னிடம் கொண்டிருக்கும். ஆனால், உச்சி வேளையில் அது சூரியவொளி ஒன்றையே முழுமையாகப் பெற்று நிற்கும். அந்நேரத்தில் பிற பொருள்களின் நிழல்களை அது பற்றாது. பகலவன் ஒளியில் மூழகி நிற்கும் அப்பளிங்குத் தூண் போல உயிர் பிற <உலக <உணர்வுகளைப் பற்றாமல் திருவருள் உணர்வு ஒன்றையே பற்றி நிற்குமாயின், மலவாசனை அடியோடு நீங்கும். இருளில் நடப்போர், முன்னே வழிகாட்டிச் செல்கின்ற தீப்பந்தத்தின் பின்னே செல்வது போல, உயிர் எச்செயலைச் செய்யினும் திருவருளை முன்னிட்டுத் தான் அதன் பின்னே நிற்க வேண்டும். திருவருளை முன்னிட்டுச் செய்தலாவது, நான் செய்கின்றேன் என்னும் முனைப்புச் சிறிதும் இன்றி, எல்லாம் உன்னுடைமையே; எல்லாம் உன் அடிமையே; எல்லாம் உன்னுடைய செயலே; நீ செய்விக்க நான் செய்கின்றேன்; நான் உன் கருவி மாத்திரமே; எனக்கென்று என்ன செயலிருக்கிறது? நீயே எல்லாம் என்று உண்மையாக உணர்ந்து செய்தலாகும். இதுவே அருள் வழி நிற்றல் ஆகும்.

கட்டு நிலையில் உயிர் திருவருளுக்கு வேறாய் நின்றது. அப்பொழுது ஆணவ மலமே முன் நிற்க, உயிர் அதன் வழிப்பட்டு நின்றது; நான் ஒரு முதன்மைப் பொருள் என்று கருதியது. தன் முனைப்போடு கூடிய முயற்சிகளைச் செய்து வினைகளை ஈட்டியது; மாயா காரியமாகிய உலகப் பொருள்களை அடையத் துடித்தது. முத்தி நிலையில் இந்நிலை அடியோடு மாறுகிறது. இப்பொழுது உயிர் திருவருளுக்கு வேறாய் இல்லை. நானே எல்லாம் என்ற பேதைமை உணர்வு நீங்கித் திருவருளே எல்லாம் என்ற தெளிவுணர்வைப் பெற்றுத் திருவருளோடு ஒன்றாய் நிற்கிறது. திருவருளை முன் நிறுத்தி உயிர் அதன் வழிப்பட்டு நிற்கிறது. நான் என்ற உணர்வு மாய்ந்து போன இந்நிலையில் ஆணவ மலத்திற்கு என்ன வேலை! அஃது உயிரிடத்தில் இருந்தும் இல்லையாகிறது. மனம் மொழி மெய்களால் யாதொன்று செய்யவரினும் அச்செயலைச் தன்செயலாக நினையாது திருவருட் செயலாக உணர்வதால் வினையும் இல்லையாகிறது. நெருப்பைக் கரையான் அரிக்க முடியுமா? அதுபோல், அருளைச் சார்ந்து அருளாய் நின்ற உயிரை மாயையின் காரியமாகிய தனுகரண புவன போகங்கள் மயக்கி ஆசைக் குழியில் வீழ்த்த முடியுமா? ஆகவே மாயையும் தோல்வியடைந்து நீங்குகிறது. இவ்வாறு மலம் மாயை கன்மம் ஆகிய மாசு படிந்திருந்த உயிர் திருவருள் ஞானத்தைப் பெற்று அம்மாசுகள் நீங்கித் தூய்மையடைந்து விளங்கும் மாட்சிமையை இவ்வதிகாரத்தில் காணுகின்றோம்.     

61. அதுவாய் நிற்றல்

தூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்
தான் அதுவாய் நிற்கும் தரம்.

பொருள் : வெயிலில் அலைந்து வருந்தியவன் குளிர்ந்த நிழலை உடைய இடத்தைக் கண்டால் பிறர் சொல்லாதிருக்கவும் தானே அவ்விடத்தை அடைந்து நிழலில் அடங்கி நின்று இன்புறுவான். அதுபோல, அறியும் நெறியால் திருவருளை உணர்ந்த உயிர் தான் வேறாய் நில்லாமல் அத்திருவருளோடு ஒன்றுபட்டு அதனுள் அடங்கி அதுவேயாய் நிற்கும்.

சொற்பொருள் :

தூநிழல் ஆர்தற்கு - (வெயிலில் மிகவும் துன்புற்று வருபவன்) நிழலை உடைய தூய இடத்தைக் கண்டால் அவ்விடத்தைப் பொருந்துதற்கு
ஆரும் சொல்லார் - யாரும் சொல்ல வேண்டாமலே
தொகும் - தானே அவ்விடத்தைச் சென்று சேர்ந்து இன்புறுவான்
இதுபோல் - இதனைப் போன்றது
தான் - (அறியும் நெறியைப் பெற்ற) உயிர்
அதுவாய் - மெய்ப் பொருளை உணர்ந்து அதனோடு ஒன்றி அதுவேயாய்
நிற்கும் தரம் - அதனுள் அடங்கி நிற்கும் தன்மை.

விளக்கம் :

சுவரும் அருளும் :

இந்நாளில் எங்கேயும் சுவர் என்பதே தெரியாது! இது விளம்பர காலம். ஆதலால் எந்தச் சுவரையும் விட்டு வைக்கமாட்டார்கள். சுவரொட்டி மேல் சுவரொட்டியாக ஒட்டிச் சுவரே தெரியாதபடி செய்து விடுவார்கள். வழிச்செல்வோரில் சிலர் அந்தச் சுவரொட்டிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள்; சிலர் அருவருப்பு அடைவார்கள். விருப்பு வெறுப்புத் தானே பற்று என்பது. பார்ப்பவர்கள் பற்றோடு பார்க்கிறார்கள் என்பது இதனால் விளங்கும். அவ்வாறு பார்க்கின்ற அவர்கள் ஒன்றைப் பார்க்கத் தவறி விடுகிறார்கள். அவர்கள் பார்க்கத் தவறியது, அந்தக் கவர்ச்சி விளம்பரங்களை ஒட்டுவதற்கு ஆதாரமாய் உள்ள அந்தச் சுவராகும். வழிச் செல்வோரில் யாராவது அந்தச் சுவரை நினைக்கிறார்களா? இன்றைக்கு ஒட்டிய சுவரொட்டி நாளைக்கு இருப்பதில்லை. அது கிழிக்கப்பட்டிருக்கும்; அல்லது அதன் மேல் வேறொன்று ஒட்டப்பட்டிருக்கும். இவ்வாறு நிலையில்லாமற் போகின்ற சுவரொட்டிகளின் கவர்ச்சியில் ஈடுபட்டுப் பற்றோடு பார்ப்பவர்களே பலர். அவ்விளம்பரங்களுக்குப் பின்னால் ஆதாரமாய், நிலையாய் நிற்பதாகின்ற சுவரின் தன்மையை யாரும் நோக்குவதில்லை. இந்த உலகிற் காணப்படும் பொருள்கள் யாவும் அந்த விளம்பரச் சுவரொட்டிகளைப் போன்றவை. நாம் உலகப் பொருள்களைத் தனித்தனியே நோக்கி அவற்றின் மீது பற்றுக் கொண்டு நிற்கிறோம். சுவரொட்டிகள் எப்படி நிலையில்லாமற் போகின்றனவோ அப்படியே அவையும் நிலையற்ற தன்மை உடையனவாகும். ஆனால், அதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த நிலையற்ற உலகிற்கு ஆதாரமாய் இருப்பது எது? சுவர் போல உலகிற்குத் தாரகமாய் நிற்பது திருவருளாகும். விளம்பரக் கவர்ச்சியில் ஈடுபட்டுச் சுவரை மறப்பவரைப் போல நாமும் உலகியற் பொருள்களில் பற்றுச் செய்து, திருவருளைப் பற்றாமல் விடுகிறோம். அடிப்படையாக உள்ள சுவரை நோக்குவார்க்கு அதில் ஒட்டப்பட்டுள்ள படக் காட்சிகள் சலனத்தைச் செய்யா; விளம்பரங்கள் அவரது கருத்திற் பதியா; அவரிடம் பறறினைச் செய்ய மாட்டா. அவர்க்குச் சுவரின் தன்மையே புலப்படும். அதுபோல அறிவை மயக்குகிற உலகப் பொருள்களில் பற்று வைக்காமல் அவற்றைத் தள்ளி நோக்குவார்க்கு அவற்றிற்கு ஆதாரமாய் உள்ள திருவருள் இனிது புலப்படும். அறியும் நெறியில் நின்று இவ்வாறு பாசப்பற்றை நீக்கித் திருவருளை உணர்ந்தவர் பின் அதனோடு ஒன்றி நிற்கும் முறையினை இச்செய்யுள் உணர்த்துகிறது.

பிறவி வெப்பமும் திருவருள் நிழலும் :

திருவருளை இறைவன் திருவடி நிழல் என்று சிறப்பிப்பர். உயிர் திருவருளைச் சேர்ந்து பிறவியாகிய வெப்பம் நீங்கித் தண்மையாகிய இன்பம் பெற்று மகிழ்தலால் அது திருவடி நிழல் எனப்படுகிறது. பிறவி எடுத்தவரெல்லாம் பிறவித் துன்பத்தை உணர்ந்தவர் அல்லர். வெயிலில் நடப்போர் எல்லாம் வெயில் தரும் துன்பத்தை உணராதிருப்பது போன்றது இது. பிள்ளையைப் பள்ளியில் எப்பாடு பட்டாவது சேர்க்க வேண்டும். இவரைப் போய்ப் பார்த்தால் அது நடக்கும் என்று அவரைப் பிடிப்பதற்காக வேகின்ற வெயிலில் வேகமாய் நடப்போர் உண்டு. வழியில் நிழலைக் கண்டாலும் நின்று இளைப்பாற மாட்டார். அதற்குள் அவர் போய்விட்டால் என்ன செய்வது? நட்ட நடுப்பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் திரையரங்கின் வாசலில் மணிக்கணிக்காய்த் தவம் கிடப்போர் உண்டு. அவர் எல்லாம் வெயிலின் வெம்மையை உணராதவர் ஆவார். இனி, ஒரு பற்றும் இல்லாத ஏழை இரவலன் ஒருவனும் அந்த வெயிலில் வருகிறான். அவனுக்கு வீடில்லை. வாசலில்லை. யார் பரிந்துரையையும் நாடிச் செல்ல வேண்டியதில்லை. படக் காட்சியைப் பார்த்தே தீர வேண்டும் என்ற வெறியும் இல்லை. வேறு வருத்தமும் இல்லை. அவனை இப்பொழுது வருத்துவதெல்லாம் இந்த வெயில்தான். இதிலிருந்து விடுபடுவது எப்படி? சுற்றுமுற்றும் பார்க்கிறான். அதோ! ஒரு மரநிழல். ஓடிச்சென்று அதனை அடைகிறான்; வெயிலின் கொடுமையிலிருந்து விடுபடுகிறான். உடலும் உள்ளமும் குளிர்கிறான்; இன்புறுகிறான். இவ்வாறு நிழலையடைந்து இன்புறும் இவனைப் போன்றவர் பிறவி வெப்பத்தை உணர்ந்து அறியும் நெறியில் நின்று திருவருள் நிழலை அடைந்து நிற்பர்.

இயற்கையே செயற்கை போலத் தோன்றுதல் :

வழிச் செல்வோனுக்கு வேறாக இருக்கிறது மர நிழல். அவன் சென்று அதனை அடைகிறான். அதுபோலத் திருவருளும் உயிருக்கு வேறாக இருக்கிறது என்று கருதி விடக் கூடாது; திருவருள் உயிரோடு என்றும் பிரிப்பின்றி ஒன்றாகவே உள்ளது. மல மறைப்பினால் உயிர் இவ்வுண்மையைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறது. ஆணவ மலம் உயிருக்கு நான் என்ற தன் முனைப்பைக் கொடுத்து நான் ஒரு தனி முதல் என்று கருதும்படியாகச் செய்கிறது. அதனால் உயிர் தான் இறைவனுக்கு வேறாக இருப்பதாக உணர்கிறது. இது பொய்யுணர்வாகும். பின், ஞானம் பெற்று மலம் நீங்கித் திருவருளை உணரும் காலத்தில் அத்திருவருட்காட்சி அதற்குப் புதியதாகத் தோன்றுகிறது. இந்நிலையை ஓர் உவமையினால் விளக்கலாம். பிறவிக் குருடன் ஒருவனுக்குக் கண்பார்வை கிடைத்தால் அவனுக்குச் சூரியவொளி புதியதாகத் தோன்றும். ஆனால், அவ்வொளி புதிதாக வந்ததன்று. இதுகாறும் அவன் சூரியவொளியில் தான் நின்றான். அவனுடைய கண்ணிலும் சூரியவொளி பொருந்தி நின்றது. படலம் கண்ணை மறைந்திருந்தபடியால் சூரியவொளி புலப்படாமல் இருந்தது. இப்பொழுது படலம் நீங்கிக் கண்பார்வை வந்தவுடன் சூரியவொளி அவனுக்குப் புதியதாகத் தோன்றுகிறது. அது போலப் பக்குவப்பட்ட உயிர் மலம் நீங்கித் திருவருட் காட்சி புலப்பட்டவுடன், அதனோடு தான் புதிதாக ஒன்றுபடுவதுபோல உணர்கிறது. சுருங்கக் கூறினால், இயற்கையே அதற்குச் செயற்கை போலத் தோன்றுகிறது எனலாம். மலமறைப்பும் அதன் நீக்கமுமே உ<யிர் இவ்வாறு உணர்வதற்குக் காரணமாகும்.

திருவருளோடு ஒன்றாய் நிற்றல் :

தெளிவுணர்வால் திருவருளை இறுகப் பற்றிய உயிர், அதனோடு ஒன்றுபட்டு நிற்கும் நிலையினைத் தான் அதுவாய் நிற்கும் தரம் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். உயிர் அதுவாய் நிற்றல் எவ்வாறு என்பதை நோக்குவோம். உயிர் தன்னை வேறாய் அறிகிற நிலை போக வேண்டும். நான் என்ற தற்போதம் நீங்கவேண்டும். நான் என ஒரு முதல் இல்லை என்று திருவருள் நிறைவில் அடங்கி நிற்க வேண்டும். பெத்த காலத்தில் இறைவன் உயிரிடத்தில் அடங்கித்தான் சிறிதும் புலப்படாமல், உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லும்படியாக நின்றது போல இம் முத்திகாலத்தில் உயிர் தான் முனைந்து தோன்றாமல் அருளிடத்தில் அடங்கி நிற்றல் வேண்டும். எனவே, திருவருளைத் தெளிய உணர்ந்த உயிர் தன்னறிவு வேறாய் நில்லாமல் சிவனது அறிவாகிய அத்திருவருளிற் பொருந்தி நான் என்ற உணர்வை இழந்து அதனோடு ஒன்றி நிற்றலே அதுவாய் நிற்றல் என ஒருவாறு அறிந்து கொள்ளலாம்.

62. கசப்பும் இனிப்பும்

தித்திக்கும் பால் தானும் கைக்கும் திருந்திடும் நாப்
பித்தத்தின் தான் தவிர்ந்த பின்.

பொருள் : பால் தித்திப்பாக இருப்பது அதன் இயற்கை. அந்த இயற்கைக்கு மாறாகப் பால் கசப்பது நாவில் சேர்ந்த பித்தம் என்னும் செயற்கையினால் ஆகும். பித்தமாகிய செயற்கை நீங்கியபோது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல, உயிருக்கு என்றும் உறவுப் பொருளாக இருப்பது திருவருள். அவ்வியல்புக்கு மாறாகத் திருவருள் பகைப் பொருளாக உயிர்க்குத் தோன்றுதல் அவ்வுயிரைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையினால் ஆகும். அச்செயற்கை நீங்கியபோது, திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும்.

சொற்பொருள் :

நா பித்தத்தின் - நாவில் பித்தநோய் உள்ள பொழுது
தித்திக்கும் பால் தானும் - தித்திக்கின்ற பாலும்
கைக்கும் - அதற்குப் கசப்பாகவே தோன்றும்
தான் தவிர்ந்த பின் - அந்நாக்கு பித்தமாகிய குற்றம் நீங்கிய பிறகு
திருந்திடும் - அப்பால் அதற்கு உள்ளவாறு தோன்றும்; அதாவது, இனிமை தருவதாய் விளங்கும்.
(இங்கு உவமை மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஆசிரியர்கூற வந்த கருத்தை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்)

விளக்கம் :

உலகியலை விடாது பற்றி நிற்கின்ற மாந்தர், அனைத்துயிர்களையும் தாங்கி நின்று நடத்துகின்ற திருவருளினது இருப்பையும் இயல்பையும் சிறிதும் உணரார். இந் நிலைக்கு ஓர் உவமை சொல்லலாம். கடலுக்கு அருகிலே உள்ள கிணற்றில் ஓர் ஆமை வாழ்ந்து வந்தது. அதற்கு அந்தக் கிணறுதான் உலகம். அதைத்தவிர வேறு ஒன்றையும் அது அறியாது. ஒரு நாள் கடலிலிருந்து ஒரு பெரிய ஆமை கரைக்கு வந்து மெல்ல ஊர்ந்து இந்தக் கிணற்றை வந்தடைந்தது. கிணற்று நீரில் இறங்கியது. கிணற்றில் வாழ்ந்த ஆமைக்குக் கடலாமையைப் பார்க்கப் பார்க்க வியப்பு உண்டாயிற்று. நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டது. நான் கடலிலிருந்து வருகிறேன் என்று கடலாமை கூறியது. கடலா? அது எப்படியிருக்கும்? இது கிணற்று ஆமையின் கேள்வி. அது நீர் நிறைந்த இடம். எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான் இருக்கும் என்று விளக்கியது கடலாமை. கிணற்று ஆமைக்கு அது விளங்கவில்லை. அந்தக் கடல் இந்தக் கிணறு அளவுக்கு இருக்குமா? என்று கேட்டது! கடலாமைக்குச் சிரிப்பு வந்தது. கடல் கிணற்றை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரியது. அதனை அளவிடவே முடியாது என்று கூறியது. கிணற்று ஆமை அதை நம்பவில்லை. இந்தக் கிணற்றை விடப் பெரியதொன்று எப்படி இருக்க முடியும்? நீ சொல்வது அத்தனையும் பொய்! என்று மறுத்துச் சொன்னதாம். அந்தக் கிணற்று ஆமையின் நிலையில் இருக்கிறார்கள் மக்களில் சிலர். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த உலகியல் ஒன்றுதான். இதனின் மேம்பட்ட ஒரு வாழ்க்கை உண்டு என்பதை அவர் அறியார்.

தொன்று தொட்டு இன்று வரை உடல்கள் நீர்க்குமிழி போலத் தோன்றியும் அழிந்தும் வருகின்றன. இப்பொழுது இருக்கின்ற உடல்கள் எதிர்காலத்தில் இருக்கப் போவதில்லை. நடைமுறை உண்மை இதுவாக இருந்தும் அவர்கள் தமது உடல் வாழ்க்கை என்றென்றும் நிலைத்திருக்கும் என்றே நினைக்கின்றனர்; உடலுக்கு வேண்டிய உணவும் உடையும் கிடைத்துவிட்டால் மகிழ்ந்து போகின்றனர். இதற்குமேல் வாழ்க்கையில் பெறுவதற்கு என்ன இருக்கிறது என்ற முடிவுக்கு வருகின்றனர். வாழ்க்கையில் அதைவிட மேலான குறிக்கோள் இருக்கிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. அருளே பெரிய பொருள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அருளே உயிரைத் தூய்மை செய்து பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அறிந்தோர் சொன்னாலும் அதனை ஏற்காமல் எள்ளி நகையாடிப் போவர். இப்படி, அருளைப் பற்றிச் சிந்திக்காமல் அப்படி ஒன்று தமக்கு வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வாழ்கிறவர்கள் இவர்கள். அவர்களிடத்தில் உள்ள ஆணவமலம் நீங்காத வரையில், அவர்களுக்குத் திருவருள் என்பது வேண்டாத பொருளாகவே, கசப்பான பொருளாகவே இருக்கும். நாக்கில் பித்த நோய் உள்ளவன் பால் கசக்கிறது என்று சொல்வான். அதற்குப் பால் காரணமன்று. அவனது நோயே காரணம். மலத்தின் வழிபட்டு, உலக இச்சை கொண்டவர்களுக்குத் திருவருள் இனியதாக இராது. அதற்குக் காரணம் அவர்களுக்குப் புலன் நுகர்ச்சியிலே நாட்டம் இருப்பதேயாகும்.

திருவருள் இனித்தல் :

ஓர்அறை நெடுங்காலமாகப் பூட்டியே கிடக்கிறது. அதற்குள் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஒருநாள் அதன் கதவுகள் திறக்கப் பெற்றன. கை விளக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த விளக்கொளியில் அறையின் சுவர்கள் பளிச்சென்று தோன்றின. அங்கே அரிய ஓவியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவ்வுண்மை விளக்கொளியாலேயே விளங்கியது. அதுபோல ஆணவமலம் சூழ்ந்த இருட்டறையாக நமது சிந்தை உள்ளது. ஞானம் ஆகிய ஒளி அங்கே வந்ததும் வாழ்க்கையைப் பற்றி முன்னே கொண்டிருந்த எண்ணம் அறவே மாறி விடுகிறது. உண்டு உடுத்து இன்புற்றிருப்பது வாழ்க்கையின் நோக்கமன்று. இறைவனைச் சார்ந்து இன்புற்றிருப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பது தெளிவுபட விளங்குகிறது. மலம் நீங்கிய தூய ஆன்மாக்களுக்கு இவ்வுண்மை நன்கு விளங்கும். அவர்கள் தமக்கு எக்காலத்திலும் எவ்விடத்திலும் துணையாக நிற்பது இறைவனது திருவருளே என்று அதனைப் பற்றிக் கொள்கிறார்கள். அன்பினால் அகங்குழைந்து அழுகிறார்கள். அவர்களுக்கு அமுதம் போல இனிக்கிறது திருவருள். நாவில் பித்தம் நீங்கியபோது பால் தித்திப்பது போன்றது இந்த நிலை.

அன்போடு அழுவோர்க்கு
அமுதங்கள் காண்க
ஐயாறன் அடித்தலமே

என்றாற்போல வரும் திருமொழிகளால் இதனை உணரலாம்.

63. பொய்க்கருத்து

காண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான்கண்ட
வீண் பாவம் என்னாய் விடும்?

பொருள் : ஒருவன் இருளில் நிற்குங் காலத்தில் ஒளி தோன்றி எப்பொருளையும் அவன் காணுமாறு அவற்றை அவனுக்குக் காட்டுகிறது. ஆனால், அவன் அவ்வொளியினாலேயே தான் கண்டதாக எண்ணுவதில்லை. தானே கண்டு விட்டதாகக் கருதிக் கொள்கிறான். அதுபோலப் பெத்த நிலையிலும், முத்தி நிலையிலும் உயிர் யாதொன்றையும் அறியும் படியாகத் திருவருளே அறிவித்து வருகிறது. யாதொரு செயலையும் செய்யும்படியாகத் திருவருளே செய்வித்து வருகிறது. ஆனால், உயிர் திருவருளாலேயே தனக்கு அறிவும் செயலும் நிகழ்கின்றன என்பதை எண்ணுவதில்லை. தானே அறிந்தும் செய்தும் வருவதாகக் கருதுகிறது. இது பொய்யான கருத்தாகும். இப்பொய்க் கருத்து என்ன பயனைச் செய்யும்?

சொற்பொருள் :

இருளில் - ஒருவன் இருளில் உள்ளபோது
காண்பான் - அவன் பொருள்களைக் காணும்படி
ஒளி காட்டிடவும் - ஒளி தோன்றி அவனுக்கு அவற்றைக் காட்டி நிற்கவும்
தான் கண்ட - ஒளியின்றி அப்பொருள்களைத் தானே கண்டுவிட்டதாகக் கருதுகிற
வீண்பாவம் - பொய்யான கருத்து
என்னாய் விடும் - அவனுக்கு என்ன பயனைச் செய்யும்?
முந்திய குறட்பாவில் உள்ளது போல இங்கும் உவமை மட்டுமே உள்ளது. இதனைக் கொண்டு ஆசிரியர் கூற வந்த கருத்தை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்.

விளக்கம் :

கட்டு நிலையில் உயிர் திருவருளை மறந்து தானே எல்லாவற்றையும் அறிவதாகக் கருதும். இது ஆணவ மலத்தினால் நிகழ்வது. இனி, ஆணவமலம் நீங்கிய நிலையிலும் கூட உயிர் திருவருளை உணராமல்தானே எல்லாவற்றையும் அறிவதாகக் கருதும். அதுதான் வியப்பு! ஞானாசிரியரின் உபதேசத்தைப் பெற்ற மாணாக்கன் நான் யார்? என்பதைச் சிந்திக்கின்ற காலத்தில் இந்த உடம்பும் ஐம்பொறி முதலிய கருவிகளும் ஆகிய இவையெல்லாம் சடப்பொருள்களே என்றும் நான் இவற்றுக்கு வேறானவன் என்றும் உணர்வான். அங்ஙனம் உணர்ந்து அவற்றைத் தனக்கு வேறாகக் கண்டு அவற்றின் தொடர்பிலிருந்து நீங்குவான். உயிருக்கு இயற்கையிலே விரிந்த அறிவு உண்டு. அது வியாபக அறிவு எனப்படும். இப்படிப்பட்ட அறிவை ஐம்பொறி முதலிய தத்துவங்கள் கட்டுப்படுத்தியிருந்தன. அஃதாவது, ஆணவமலத்தைச் சிறிதளவு நீக்கி உயிரினது அறிவைச் சிறிதே விளங்கும் படி செய்தன. இத்தத்துவங்கள் உள்ளவரையில் உயிருக்குச் சிற்றறிவே விளங்கும். இத்தத்துவங்களைத் தனக்கு வேறாகக் கண்டு நீங்கும்போது, இது காறும் மறைந்திருந்த பதியினது ஞானமாகிய திருவருள் வெளிப்பட்டு அவ்வான்மாவினது வியாபக அறிவை விளங்கச் செய்யும். இவ்வாறு தத்துவங்களின் நீங்கித் தனது வியாபக நிலையைத் தலைப்பட்ட மாணாக்கன் அந்நிலையில் தன்னையே பெரும் பொருளாக மதிப்பான். நானே பிரம்மம் என்று உணர்வான். இவ்வுணர்வு உண்மையுணர்வு ஆகாது. ஆணவ மலம் நீங்கினாலும் அதன் வாசனை நீங்காமையால் ஏற்படுகிற மயக்கவுணர்வு இது. வியாபக அறிவைப் பெற்ற அப்பொழுதும் உள் நின்று உணர்த்தி வருவது திருவருளேயாகும். இதனை உணராமல் தானே வியாபக நிலையைப் பெற்றதாகவும், தானே எல்லாவற்றையும் அறிவதாகவும் உணர்வது மயக்க உணர்வுதானே.

இதனையே வீண் பாவம் என்று குறிப்பிடுகிறார் நம் ஆசிரியர். பாவம் என்பதற்குக் கருத்து என்று பொருள். எனவே வீண்பாவம் என்பது பொய்யான கருத்து எனப் பொருள் படும். ஆணவ மலமாகிய பாசத்தில் நின்றவர்கள் திருவருளை மறந்து தானே அறிந்தும் செய்தும் வருவதாகக் கருதுவதிலே வியப்பொன்றும் இல்லை. ஆணவ மலத்தின் நீங்கியவரும் திருவருளை மறந்து இவ்வாறு கருதுவாராயின் அஃது அவர்க்குப் பெரியதோர் இழுக்காகும். நானே பிரம்மம் (அகம் பிரம்மாஸ்மி) என உணர்வது, மெய்ப் பொருளை உணர்வதற்கு முன்னே தோன்றி நீங்குகிற ஓர் இடைப்பட்ட அனுபவ நிலையாகும். ஒருவன் தலைநகரில் உள்ள அரச மாளிகைக்குச் செல்ல விரும்புகிறான். அந்தக் குறிக்கோளோடு புறப்பட்டு வருகிறான். தலைநகரைச் சூழ்ந்துள்ள புற நகரை அடைகிறான். அதுவே அரச மாளிகையை அடைந்ததாகுமா? அது போன்றதே இந்த இடைப்பட்ட உணர்வு நிலை. இதுவே முடிந்த மெய்யுணர்வு ஆகாது என்று சைவசித்தாந்திகள் கொள்வர். நானே முதற்பொருள் என்னும் உணர்வு நிலையில் நின்ற மாணாக்கனுக்கு ஞானாசிரியர் திருவருளின் உண்மையைப் பின்வருமாறு நினைப்பிப்பார். உன்னறிவை நீயே வேறு துணையின்றி அறிவாயாயின், இவ்வளவு காலமாகப் பாசத்தோடு கூடிப் பிறந்து இறந்து துன்புற்றிருக்க மாட்டாய். நீரும் அதில் பொருந்திய சுவையும் போல உன் அறிவினுள் என்றும் நீங்காத அறிவாகி நின்று உணர்த்தி உன்னை இந்நிலைக்குக் கொண்டு வந்தது திருவருளே என்பதை உணர்வாயாக என்று தெளிவிப்பார். எனவே, உயிர் திருவருளை மறத்தலே அதற்கு மாசு ஆகும். அம்மாசு சிறிது இருப்பினும் அஃது <உயிர்க்குப் பேதைமையாய் முடியும் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.

64. அருள் இருளையொக்கும்!

ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெளியாச் செயல்.

பொருள் : ஒளியும், இருளும் ஒரு வகையில் ஒத்த தன்மை உடையனவாம். அஃதாவது, சூரியனுடைய பேரொளியை நோக்கும் போதும் கண் தெரியாது. இருளிலும் கண் தெரியாது. ஒளியில் அழுந்தியபோதும், இருளில் அழுந்தியபோதும் கண் பிற பொருள்களைக் காண மாட்டாததாகிறது. இஃது ஒப்புமை. இனி இரண்டிடத்திலும் கண் செயலற்று விடினும் இரண்டும் ஒன்றாவதில்லை. இரண்டிற்கும் என்ன வேறுபாடு எனில், ஒன்று ஒளியால் நிகழ்கின்ற தெளிந்த நிலை. மற்றொன்று இருளால் விளைகின்ற தெளியா நிலை.

சொற்பொருள் :

ஒளியும் இருளும் ஒருமைத்து - ஒளியும் இருளும் ஒரு வகையில் ஒப்புமை உடையன. (அதாவது, பேரொளியில் அழுந்தும்போதும் கண்பிற பொருள்களைக் காண மாட்டாது. அது போலவே, பேரிருளில் அழுந்தியபோதும் அக்கண்ணுக்குப் பொருள் ஏதும் புலப்படுவதில்லை.
பன்மை - இனி, அழுந்தி நிற்றலாகிய இவ்விரண்டிற்கும் வேறுபாடு என்ன எனில்
தெளிவு தெளியாச் செயல் - ஒளியில் அழுந்தும் நிலை தெளிவு நிலை. இருளில் அழுந்தும் நிலை தெளியாநிலை.
இதுவும் உவமையே. இதனைக் கொண்டு ஆசிரியர் உணர்த்த வந்த கருத்தை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்.

விளக்கம் :

உலகத்திற் காணப்படும் ஒளி, இருள் என்பவற்றின் தன்மைகளை உவமை காட்டித் திருவருள் ஒளி, ஆணவ இருள் என்பவற்றின் தன்மைகளைப் பெற வைக்கிறார் ஆசிரியர். அருளோடு கூடி நிற்றல் ஒரு வகையில் இருளோடு கூடி நிற்றல் போலும் என்கிறார். ஆன்மா ஆணவ இருளில் கிடக்கும் நிலை கேவலம் என்பதும், திருவருள் ஒளியில் நிற்கும் நிலை சுத்தம் என்பதும் நாமறிந்தது. கேவலத்தில் ஆன்மா தான் என்பது சிறிதும் தோன்றாமல் ஆணவ இருளோடு ஒன்றுபட்டு அதுவாய் நிற்கும். உறக்கம் என்பது ஒரு வகையில் கேவல நிலைதான். உறக்கத்தில் நாம் இப்படித் தானே நம்மை நாம் அறியாமல் அழுந்திக் கிடக்கிறோம். இந்த உறக்க நிலையை வைத்து அந்தக் கேவல நிலையை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். இனி, கேவலத்தின் நீங்கிச் சுத்த நிலையை அடைந்த ஆன்மா அங்கும்தான் என்ற உணர்வு சிறிதும் இல்லாமல் அருளோடு ஒன்றுபட்டு அதுவாய் நிற்கும்.

மேலும், இருள் மேம்பட்ட கேவலத்திலும் உலகம் புலப்படாது. அதுபோல, அருள் மேம்பட்ட சுத்தத்திலும் உலகம் வேறாய்ப் புலப்படாது. இவ்வாறு இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிடலாம். இருள் நிலையில் உலகம் புலப்படாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. அருள் நிலையில் ஞானியர்க்கு உலகம் காட்சிப் படாது என்பதை எப்படி விளங்கிக் கொள்வது? அவர்களும் நம்மைப் போல உண்டு உடுத்து இவ்வுலகில் வாழ்கிறார்களே. அவர்களுக்கு எப்படி உலகம் காட்சிப் படாது போகும்? என்று கேட்கலாம். ஞானிகளுக்கு உலகம் காட்சிப் படாது என்பதன் கருத்து, உலகப் பொருள்கள் தனி முதலாய் அவர்களுக்குக் காட்சிப் படுவதில்லை என்பதாகும். அப்பொருள்களிடத்திலே அவர்கள் சிவத்தையே எப்பொழுதும் கண்டு கொண்டிருப்பர். ஆதலால் அப்பொருள்கள் வேறாய் நின்று தம்மியல்பைக் காட்டி அவர்களை மயக்குவதில்லை. இது பற்றியே அவர்களுக்கு உலகம் காட்சிப்படாது என்று சொல்லப்படுகிறது. இவ்வுண்மையை அருளாளர் வாழ்வில் அனுபவ முறையிற் காணலாம். மயிலையில் ஞான சம்பந்தர் இறந்து போன பூம்பாவையை எழுப்பினார். மட்டிட்ட எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி நிறைவு செய்த அளவில், என்பும் சாம்பலும் நிறைந்த குடத்தினின்றும் தாமரை மலரிலிருந்து எழுவாளைப் போன்று பூம்பாவையார் பன்னிரண்டாண்டு அளவு வளர்ச்சியுடன் எழுந்தார். ஞானத்தின் திருவுருவாகிய சம்பந்தர் இக்காட்சியை நம்மைப் போலக் காணவில்லை. பதினாறு ஆண்டே எய்திய அப்பிள்ளையார் பூம்பாவையாரிடம் மாயா காரியமாகிய உருவ அழகைக் காணவில்லை. அது அவருக்குப் புலப்படவில்லை. சிவபெருமானது கருணை வெள்ளத்தையே அவர் கண்டார்.

திருவையாற்றில் நாவுக்கரசர் அனைத்துப் பொருள்களிலும் சிவ முதற்பொருளையே கண்ட காட்சியையும் எண்ணலாம். இப்படி அசத்தாகிய உலகைக் காணாது பார்க்கின்ற பொருளையெல்லாம் சிவமாகக் காண்பர் அருளாளர். இதுவரை கூறியவற்றால், இருள் நிலையும் அருள் நிலையும் ஒரு வகையில் ஒற்றுமையுடையன என்பது விளங்கும். அவ்வொற்றைமையாவது அவ்விரண்டிடத்தும், ஆன்மா ஒன்றுபட்டு அதுவாய் நிற்றல்; <உலகம் காட்சிப் படாதிருத்தல். இவ்வொற்றுமையைக் கருதியே ஒளியும் இருளும் ஒருமைத்து என்றார் ஆசிரியர். இவ்வாறு ஒருமை காட்டியதோடு நில்லாமல் அவற்றிடையே உள்ள வேறுபாட்டினையும் சொல்லி முடிக்கின்றார். அருள்நிலை ஒருவாறு இருள் நிலையை ஒத்ததாயினும், அருள்நிலையில் ஆன்மா பேருணர்வாகிய திருவருளோடு கூடிப் பேருணர்வாய்ப் பொலியும் ஆதலின் அதுவே தெளிவு நிலை. மற்றையது தெளியா நிலை என்று தெளிவிக்கின்றார்.

*****************
65. எடுத்துச் சுமப்பான்!

கிடைக்கத் தகுமே நற் கேண்மையார்க்கு அல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று.

பொருள் : இறைவன், தம் செயலற்று நிற்கும் அன்பரை எவ்விடத்தும் தாங்கிக் காப்பான்; அவரைத் தன் மேல் வைத்துச் சுமந்து செல்லும் துணைவனாய் இருப்பான். இப்படிப்பட்ட துணை வனை ஏனையோர் பெறுதல் கூடுமோ?

சொற்பொருள் :

இன்று - இம்முத்திக் காலத்தில்
எடுத்துச் சுமப்பானை - தம் செயல் அற்று நிற்கும் அன்பரை எடுத்துத் தன்மேல் வைத்துச் சுமந்து செல்கின்ற இறைவனாகிய துணைவனை
கிடைக்க - பெறுவது
நற்கேண்மையார்க்கு அல்லால் - அவ் அன்பருக்கன்றி
தகுமே? - மற்றவர்க்குக் கூடுமோ?

விளக்கம் :

நற்கேண்மையார் :

திருவருளை மழையோடு ஒப்பிடலாம். மழை மேடு பள்ளம் என்று பாராமல் எவ்விடத்திலும் பெய்கிறது. ஆனால் மேட்டு நிலத்திலுள்ள பாறை அந்த மழை நீரைப் பற்றிப் பிடித்து வைத்துக் கொள்வதில்லை. மழை பெய்து ஓய்ந்த சிறிது நேரத்தில் அந்தப் பாறையைப் பார்த்தால் அதன்மீது ஒரு சொட்டு மழை நீர் இருக்காது. அதில் மழை பெய்ததற்கான அறிகுறியே தென்படாது. ஆனால், மேட்டுநிலத்திற்குக் கீழை தரையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதைக் காணலாம். சில நாட்கள் சென்றாலும் அப்பள்ளத்தில் மழை பெய்ததற்கான அடையாளமாக நீர் கட்டிக் கிடக்கும். மக்களில் பெரும்பாலோர் பாறையைப் போல் வன்நெஞ்சப் பேதையராய் வாழ்கிறார்கள். அவர்களிடத்தில் அருள் இருந்தும் அதனைப் பற்றிக் கொள்வதில்லை. பக்குவ ஆன்மாக்களாகிய சிலரே பள்ளத்தைப் போல அருள் வெள்ளத்தைத் தம்மிடம் தேக்கி வைத்துக் கொள்கிறார்கள். திருவருளை முற்றாகப் பெற்ற இவர்கள் எந்நிலைமையிலும் இறைவனையே உணர்ந்து நிற்பர். வாழினும், சாவினும், வருந்தினும் போய் வீழினும் உனது திருவடியை விடுவேன் அல்லேன் என்ற உறுதியோடு இருப்பர். இறைவனையன்றி வேறு துணையில்லாத இவர்களையே நற்கேண்மையார் என்று குறிப்பிடுகிறார் நம் ஆசிரியர் உமாபதிசிவம்.

எடுத்துச் சுமப்பான் :

நல்ல நட்பினராகிய இவர் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவன் தன்னுடையனவாக ஏற்றுக் கொள்கிறான். இவ்வடியார்கள் மனம் மொழி மெய்களால் யாதொரு செயல் செய்யினும், இவர் செயலெல்லாம் என் செயல் என்றும், இவருக்குச் செய்தது எனக்குச் செய்ததாகும் என்றும் கொண்டு, வினைத் துன்பம் அவரைத் தாக்காதவாறு முன்னின்று காப்பான். தம் செயலற்று, எல்லாம் இறைவன் செயல் என உணரும் இவ்வன்பர்கள் பாதகத்தைச் செய்திடினும் அதனைப் பணியாக்கி விடுவான். அன்பர்களின் நிலையைக் குழந்தையின் நிலையோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள். குழந்தைக்குத் தனக்கெனச் செயலில்லை. அது நடப்பதில்லை. அதனைச் சுமந்து கொண்டு தாய் நடக்கிறாள். அது தானே உண்பதில்லை. தாய் ஊட்டுகிறாள். நோய் வந்தால் அந்தக் குழந்தையா மருத்துவரிடம் செல்கிறது? தாய் தானே தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். தாயின் காலைப் பற்றிக் கொண்டு வாழும் குழந்தைக்கு என்ன கவலை? அதற்கு வேண்டியவற்றை யெல்லாம் தாய் பார்த்துக் கொள்கிறாள். கண நேரமும் இறைவனை உள்ளத்தில் பிரியாமல் அவனைப் பற்றிக் கொண்டவர்களுக்கு இந்தக் குழந்தையின் நிலை வரும். தமக்கெனச் செயலற்ற நிலையை அவர்கள் அடைகிறார்கள். இறைவனது திருவடியைப் புகல் அடைந்துவிட்டால் அப்பால் அவர்களுக்கு ஒரு பொறுப்பும் இல்லை. இறைவனே அவர்களைத் தாங்கிக் கொள்வான். தன் கடன் அடியேனையும் தாங்குதல் என்ற அப்பர் பெருமானின் மொழியை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

இறைவன் தன்னடியார் படும் பசித்துன்பம் முதலியவற்றைப் பொறாமல் ஓடிவந்து உதவி செய்த நிகழ்ச்சிகள் பல உண்டு. சுந்தரர் திருக்குருகாவூர் செல்லும்போது பசியினாலும் நீர் வேட்கையினாலும் மிகவும் வருந்தினார். அதனை உணர்ந்த இறைவன் அவர் வரும் வழியில் குளிர் பந்தல் அமைத்துத் தண்ணீரும் பொதி சோறும் கொண்டு மறையவர் வடிவில் காத்திருந்தார். அடியவர் திருக்கூட்டத்துடன் நம்பியாரூரர் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் மறையவர் நீர் இப்போது பசியால் வாடுகிறீர்; இதனை உண்ணும் என்று கூறியருளினார். அவர் அளித்த பொதி சோற்றை அடியாரும் உண்டு பசி தீர்ந்து சிறிது நேரம் கண்ணுறங்கி விடுகிறார். விழித்துப் பார்த்தபோது மறையவரும் இல்லை. தண்ணீர்ப் பந்தரும் இல்லை. இறைவன் தமக்குச் செய்த கருணையே இது என்றறிந்த சுந்தரர் ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் என்று பெருமானைப் போற்றினார். நற்கேண்மையராய் ஒழுகும் அடியார்களுக்கு இறைவன் எளிவந்து அருளுதலை, இவ்வாறு பொதிசோறு சுமந்து வந்து அளித்தமை, பஞ்சம் வருத்தாது படிக்காசு தந்தமை முதலிய பல நிகழ்ச்சிகளில் வைத்து உணரலாம். இங்ஙனம் தம் செயலற்று நிற்கும் அடியார்களை வலிய வந்து காத்தருளும் இறைவனது எளிவந்த தன்மை இனிது புலப்படும் வகையில் எடுத்துச் சுமப்பான் என்ற அருமையான, பொருள் ஆழமான தொடரை அமைத்த ஆசிரியரின் திறம் எண்ணி மகிழ்தற்குரியது.

ஒரு குறிப்பு :

சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்றும் தவம் எனப்படும். இத்தவ நிலையில் நின்று முதிர்ச்சி பெற்றவரை, கேடில் புகழ் தருஞ் சரியை கிரியா யோகக் கேண்மையர் (செ.49) என்று சிவப்பிரகாச நூலில் குறிப்பிட்டார் உமாபதிசிவம். இத்தவநிலையில் நின்றோர் சென்று அடைதற்குரியது ஞானநிலை. அதுவே மேலான நிலையாகும். ஞானநிலைக் கண் நின்றவரே திருவருளைச் சேர்ந்து பாசப்பற்றை அறுத்துக் கொண்டவர் ஆவர். இவரே அடியவர் என்றும், அருளாளர் என்றும் சொல்லப் பெறுகின்றனர். இவரை நற்கேண்மையார் என்று திருவருட்பயனில் குறிப்பிட்டார் உமாபதிசிவம். முன்னே காட்டியவாறு தவநெறியில் நின்றவரைக் கேண்மையர் என்று மட்டும் சுட்டிய ஆசிரியர், ஞான நெறியில் நின்றவரைக் குறிக்க வரும்போது நல் என்ற அடைமொழி சேர்த்து நற்கேண்மையார் எனச் சிறந்தெடுத்துக் கூறியுள்ளமை அறிதற்குரியது. நம் ஆசிரியர் அருளை நினைப்பிக்கும் இடங்களில் நல் என்ற அடை மொழியைச் சேர்க்கும் இயல்பினர் என்று சொல்லலாம். காட்டாக, சிவப்பிரகாசத்தில் பசு இலக்கணம் கூறும் செய்யுளில் (19) உயிரை நற்பசு வர்க்கம் என்கிறார். உயிர்கள் திருவருள் உதவியால் மலநீக்கம் பெற்றுச் சிவத்தை அடைதற்கு உரியன. ஆதலின் நல் என்ற அடைமொழி சேர்த்து அவ்வாறு குறிப்பிட்டார் என்று கருதலாம். அவ்வாறே, இங்கும் தம் செயலற்று அருள் வயப்பட்டிருக்கும் அடியவரின் நிலைக்கு ஏற்ப அவரை நற்கேண்மையார் எனக் குறிப்பிட்டார் எனக் கொள்வது பொருத்தமாகும்.

66. அருள்நிதி

வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத்
துஞ்சினனோ? போயினனோ? சொல்.

பொருள் : ஒருவன் வைத்துள்ள நிதியை மற்றொருவன் கள்ளமாய்க் கவர்ந்து கொள்வதற்கு, வைத்திருப்பவன் உறங்கி விட்டானோ? அல்லது அவ்விடத்தை விட்டுப் போய்விட்டானோ? சொல்வாயாக.

சொற்பொருள் :

ஒருவன் வைத்த - ஒருவன் சேமித்து வைத்துள்ள
நிதி - பொருட் செல்வத்தை
வஞ்சமுடன் கவர - வேறொருவர் கள்ளமாய்க் கவர்ந்து கொள்வதற்கு
துஞ்சினனோ - பொருளை வைத்திருப்பவன் உறங்கி விட்டானோ?
போயினனோ - அல்லது அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டானோ?
சொல் - சொல்வாயாக.
இக்குறட்பாவில் உள்ளதும் உவமையே. இதனைக் கொண்டு ஆசிரியர் கூற வந்த பொருளை வருவித்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம் :

செல்வரும் திருடனும் :

இவ்விடத்திற்குப் பொருத்தமான நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிடுவோம். இரண்டு பேர் இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெட்டியில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர்களில் ஒருவர் பணக்காரர். அவர் ஒரு துணிப் பையில் நிறையப் பணம் வைத்திருந்தார். இன்னொருவன் திருடன். அவரிடம் பணம் இருப்பது தெரிந்து, அதைத் திருடுவதற்காக அவன் அந்தப் பெட்டியில் ஏறியிருந்தான். அவன் திருடன் என்பது அந்தப் பணக்காரருக்குத் தெரியும்! தெரிந்தும் அவனது கண் எதிரிலேயே பையைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தார். உறங்க வேண்டிய நேரம் வந்தது. முதலில் திருடன் குளியலறைக்குச் சென்று தன் உடைகளை மாற்றிக் கொண்டு வந்தான். படுக்கையில் படுத்துத் தூங்குவது போல நடித்தான். பணக்காரர் குளியலறைக்குச் சென்றார். திரும்பி வரச் சற்று நேரம் ஆயிற்று. அவர் அப்பால் போனதும் அதற்காகக் காத்திருந்த திருடன் அவரது பெட்டிகளைத் திறந்து பார்த்தான். பணப்பையைக் காணவில்லை. அவரது துணிமணிகளையெல்லாம் உதறிப் பார்த்தான். அது கிடைக்கவில்லை. அந்த மனிதர் அதைக் கையில் கொண்டு போகவில்லை. அதனால் இங்குதான் வைத்திருக்கவேண்டும். நாம் இவ்வளவு தேடியும் அது கிடைக்கவில்லையே என்று திருடன் அதிசயித்தான். குளியலறையிலிருந்து திரும்பி வந்த பணக்காரர் படுக்கையில் படுத்தார். அடுத்த நொடியே அவரிடமிருந்து குறட்டையொலி எழுந்தது. இப்பொழுது அந்தத் திருடன் மீண்டும் தேடித் துருவிப் பார்த்தான். அவனுக்கு வேண்டியது கிடைக்கவில்லை.

திருடன் இரவு முழுதும் தூங்கவே இல்லை. பொழுது விடிந்தது. பணக்காரர் கண் விழித்துக் கொண்டார். திருடன் அவரைப் பார்த்து, ஐயா, நான் திருடன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனக்கு ஒன்று தெரிய வேண்டும். உங்கள் பணப்பையை எங்கே வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டான். உடனே பணக்காரர் சிரித்துக் கொண்டே திருடனின் தலையணைக்கு அடியிலிருந்து பணப்பையை எடுத்து இங்கேதான் வைத்திருந்தேன் என்றார். இந்தக் கதையில் திருடன் பணத்தைக் கைப்பற்றக் காத்திருந்தான். அதற்கு வாய்ப்பாக அந்தப் பணக்காரரும் பணத்தை அங்கே வைத்துவிட்டு வெளியே போய் வந்தார். அடுத்ததாக, நன்றாகத் தூங்கியும் போனார். ஆனாலும், அவருடைய சாதுரியமான ஏற்பாட்டினால் பணத்தை அவன் திருட முடியாமற் போயிற்று. பொதுவாக, இச் செய்யுளில் கூறியுள்ளபடியே களவு நடை பெறுவது கண்கூடு. உடைமைக்கு உரியோர் உறங்கிய நேரம் பார்த்து உள்ளே புகுந்து திருடிச் செல்வார்கள். அல்லது அவர் வெளியே போயிருக்கும் சமயத்தில் வீட்டிற் புகுந்து நகை பணம் முதலியவற்றைக் கவர்ந்து செல்வார்கள்.

அருள் நிதியை அடையும் வழி :

இறைவன் பெரு நிதியம் உடையவன். ஏரி நிறைந்தனைய செல்வன் என்பார் அப்பர் சுவாமிகள். அந்த நிதிதான் அருள் என்பது. அவ்வருள் நிதியை அவன் தராமல் உயிர்கள் தாமே பெறுதல் இயலாது. அதனைக் கள்ளத்தால் கவர்ந்து கொள்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று அவன் சோர்ந்திருக்கும் சமயம் பார்த்துக் கவர்தல். இறைவன் சிறு பொழுதாயினும் சோர்ந்திருந்தால் அல்லவா இது கை கூடும்? அவனுக்குச் சோர்வென்பது ஏது? வான் கெட்டு, மாருதம் மாய்ந்து, அழல் நீர், மண் கெடினும் தனக்கு ஒரு கேடு இல்லாதவன் அவன். சலிப்பு அறியாத் தன்மையன் அவன். ஆதலால் இம்முதல் வழி பயன்படாது. இனி இரண்டாவது வழி, அவன் தனது நிதியத்தை வைத்து விட்டு வேறிடம் போன சமயம் பார்த்து அதனைக் கவர்தல். இறைவன் தனது திருவருளை விட்டுச் சிறு பொழுதாயினும் பிரிந்திருந்தால் அல்லவா இது கைகூடும்! அவன் எஞ்ஞான்றும் திருவருளுக்கு வேறாய் நிற்பவன் அல்லன். ஆதலால் இவ்வழியும் கூடி வாராது. இவ்வாறு அவ்விரண்டு வழிகளையும் விலக்கி, உயிர்கள் முதல்வனது திருவருளை அவன் வழங்கவே பெறும் என்ற கருத்தைப் பெற வைக்கிறார் ஆசிரியர்.

67. பளிங்குத் தூண்

தனக்கு நிழல் இன்றா ஒளி கவரும் தம்பம்
எனக் கவர நில்லாது இருள்.

பொருள் : உச்சிவேளையில் பளிங்குத் தூண் பிற பொருள்களின் நிழல்கள் தன்னிடத்தில் படியாதபடி சூரியவொளி ஒன்றையே கவர்ந்து நிற்கும். அப்பளிங்குத் தூண்போல், உயிர் தன்னிடத்தில் பிற உணர்வுகள் சிறிதும் எழாதபடி திருவருள் ஒன்றையே முழுதுமாகப் பற்றி நிற்குமாயின் மலஇருள் அடியோடு நீங்குவதாகும்.

சொற்பொருள் :

தனக்கு நிழல் இன்றா - (பளிங்குத் தூண்) <உச்சிவேளையில் தன்னிடத்தில் பிற பொருள்களின் நிழல் பொருந்தாதபடி
ஒளி கவரும் தம்பம் என - சூரியனது ஒளி ஒன்றையே கவர்ந்து நிற்கும். அவ்வாறு கவர்ந்து நிற்கின்ற பளிங்குத் தூண்போல
கவர - உயிர்தன்னிடத்தில் பிற உலகவுணர்வுகள் பொருந்தாதபடி முதல்வனது திருவருள் ஒன்றையே பற்றி நிற்குமாயின்
இருள் - அஞ்ஞானத்தைச் செய்யும் ஆணவ மலமாகிய இருள்
நில்லாது - அடியோடு நீங்கும்.

விளக்கம் :

திருவருளை முழுதுமாகப் பற்றி நிற்றல் :

பளிங்குத் தூண் காலை வேளையில் சூரிய ஒளியைக் கிழக்குப் பக்கத்தில் கவர்ந்து நிற்கும். பிற பக்கத்தில் வேறு பொருள்களின் நிழலைத் தன்னிடம் கொண்டிருக்கும். மாலை வேளையிலும் இவ்வாறே அது சூரிய ஒளியை மேற்குப் பக்கத்தில் மட்டும் கவர்ந்து மற்றப் பக்கங்களில் வேறு பொருள்களின் நிழலைக் கொண்டிருக்கும். உச்சிவேளையில் தான் அத்தூண் சூரிய ஒளியை முழுதுமாகக் கவர்ந்து நிற்கும்; சூரிய ஒளியில் முழுமையாக மூழ்கி நிற்கும். அப்பொழுது வேறு பொருள்கள் அருகில் இருந்தாலும் அவற்றின் நிழல்களை அது கவர்வதில்லை. சூரிய வொளியில் மூழ்கி ஒளிமயமாய்த் திகழும் அப்படிகத் தூண் போல உயிர் தன்னை முழுதுமாகத் திருவருளில் கொடுத்துத் திருவருள் ஒன்றையே பற்றி நிற்குமாயின், பிற பொருள்களின் நிழல்கள் படிகத்தூணைப் பற்ற மாட்டாததுபோல, வேறு உணர்வுகள் அவ்வுயிரைப் பற்ற மாட்டா.

இதற்கு இலக்கியமாக வாழ்ந்த ஒருவரைக் குறிப்பிடலாம். அவர் திருக்கடவூர் என்ற ஊரினர். சிறந்த சிவபக்தர். பெருமானுக்குக் குங்குலியத் தூபம் இடும் பணியைச் செய்து வந்தவர். வறுமை அவரது வாழ்வில் புகுந்தது. உணவுக்கும் வழியில்லாத நிலை. வீட்டில் உள்ள எல்லாவற்றையும் விற்றாயிற்று. இனி விற்பதற்கு ஒன்றும் இல்லை. பிள்ளைகள் இரண்டு நாளாகப் பட்டினி கிடந்தனர். அதனைப் பொறாத அவரது மனைவியார், தம்முடைய தாலியைக் கழற்றிக் கொடுத்து, அதனை விற்று நெல் வாங்கி வருமாறு கூறினார். அடியவர் அதனைப் பெற்றுக் கொண்டு கடைவீதிக்குச் சென்றார். வழியில் ஒரு வணிகனைக் கண்டார். அவன் வைத்திருந்ததோ குங்குலியப் பொதி. அவருக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? மனைவி, மக்கள், பசி, பட்டினி முதலிய உலக உணர்வுகள் அவரைவிட்டு அகன்றன. திருவருள் உணர்வு அவரை விழுங்கி விட்டது. தன்னையே இழந்து நின்ற அவரிடம் சிவநினைவு ஒன்றே ஓங்கி நின்றது. தாலியைக் கொடுத்துக் குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டார். சிறிதும் நிற்கவில்லை. மகிழ்ச்சியோடு விரைந்து கோயிலுக்குச் சென்றார்; குங்குலியப் பணி செய்து அங்கேயே தங்கிவிட்டார். சிவசிந்தனையில் மூழ்கி வேறு உணர்வுகளுக்கு இடங்கொடாமல் நின்ற அவரது நிலை, சூரியவொளியை முழுதும் பெற்று நின்ற பளிங்குத் தூணின் நிலை போன்றது என்று சொல்லலாம்.

இருள் நில்லாது :

பெத்த நிலையில் உள்ள உயிர்களாகிய நாம் நமக்கு வேறானதாகிய உடம்போடு வேற்றுமையின்றிக் கூடி வாழ்கிறோம்! வேற்று விகார விடக்கு உடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் என்று சொல்லும் பக்குவம் நமக்கு இல்லை. அதனைப் பிரிய மனமில்லை. அதுவே நாம் என்று இருக்கிறோம்; அந்த அளவுக்கு அதனோடு ஒற்றுமைப் பட்டிருக்கிறோம். ஆனால், உயிருக்கு இனிய உறவுப் பொருளாக, என்றும் உடனாக இருப்பவனாகிய இறைவனோடு ஒன்றுபட்டு நிற்கத் தெரியவில்லை நமக்கு. அது ஏன்? அவனோடு ஒன்றுபட்டு நிற்க வொட்டாதபடி செய்வது ஆணவ மலமாகும். பெத்த நிலையில் அம்மலம் உயிரை வன்மையாய்ப் பற்றி நின்று அதன் அறிவை மயக்கி, நான் இறைவனுக்கு வேறாக உள்ள தனியொரு முதல் என்று கருதும்படியாகச் செய்கிறது. பின், ஞானாசிரியரை அடைந்து அருளுபதேசம் பெற்ற காலத்தில் ஆணவ மலம் நீங்குகிறது. நீங்கினாலும் அது வாசனையளவாய் நிற்கும். அந்த நிலையிலும் அது <உயிருக்குச் சிவானுபவம் விளையவொட்டாது தடுக்கும். அஃது எங்ஙனம் எனில், உயிர் பதியாகிய சிவத்தை அதன் அருளையே கண்ணாகப் பெற்று அறியுமிடத்து யான் பதியை எனது அறிவால் அறிகின்றேன் எனத் தன்னையும், தன் அறிவையும் உணரச் செய்வது மல வாசனையே யாகும். இங்ஙனம் ஆன்மா தன்னையும், தனது அறிவையும் வேறு வேறாகப் பகுத்து உணரின் சிவானுபவம் இல்லையாகும். இங்ஙனம் வேறு வேறாகப் பகுத்துக் காணுதலை விடுத்து ஆன்மா தன்னையும் தன்னறிவையும் மறந்து பதி ஒன்றையே உணர்ந்து அதில் அழுந்துவதே சிவானுபவ நிலையாகும். இச்சிவானுபவ நிலையை எய்த ஒட்டாதபடி செய்வது மலவாசனையே என்பது இதனால் விளங்கும். அவ்வாசனை திருவருளோடு உயிர் முற்றிலுமாக ஒன்றுபட்டு நிற்கும்போதே அடியோடு நீங்கும். இதனையே நில்லாது இருள் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். மலவாசனையே உயிரைப் பற்றியுள்ள மாசு-ஆகும். அம்மாசு அடியோடு நீங்குமாறு திருவருளை முற்றப் பெறுதலே உயிர் விளக்கம் அடைதற்கு வழியாகும் என்பது இச் செய்யுளில் உணர்த்தப்பட்டது.

 
மேலும் திருவருட்பயன் »
7. திருவருட்பயன் - முன்னுரைஆசிரியர் உமாபதி சிவம்பொருள், தெளிவுரை : ஆ. ஆனந்தராசன்சைவ சித்தாந்தத்தின் ... மேலும்
 
நான்காம் அதிகாரம் - அருளது நிலைஉயிரினது அறிவை மறைத்து அறியாமையை விளைவிக்கின்ற அக இருளாகிய ஆணவ ... மேலும்
 
68. பின் நிற்றல்உற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்நிற்கை அருளார் நிலை.பொருள் : இருளில் நடப்போர் ... மேலும்
 
81. அனைத்து நூற்பொருளும் ஐந்தெழுத்தின் பொருளேயாம்அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்பொருள் நூல் ... மேலும்
 
92. வேறொன்றையும் விரும்பாமைஐந்தொழிலும் காரணர்கள் ஆம் தொழிலும் போகம் நுகர்வெந்தொழிலும் மேவார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar