பதிவு செய்த நாள்
08
நவ
2013
03:11
81. அனைத்து நூற்பொருளும் ஐந்தெழுத்தின் பொருளேயாம்
அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள் நூல் தெரியப் புகின்.
பொருள் : அருள் நூலாகிய ஆகமங்களும், அற நூலாகிய வேதங்களும், இவையல்லாத பிற நூல்களும் ஆகிய யாவும் திருவைந்தெழுத்தின் பொருளை விளக்கும் நூல்களேயாம்.
சொற்பொருள் :
அருள் நூலும் - அருள் நூல் ஆகிய ஆகமங்களும்
ஆரணமும் - அறநூல் ஆகிய வேதமும்
அல்லாதும் - இவ்விரு முதல் நூல் அல்லாத புராணம், இதிகாசம் முதலிய ஏனைய எல்லா நூல்களிலும்
தெரியப் புகின் - ஆராய்ந்து பார்த்தால்
ஐந்தின் பொருள் நூல் - திருவைந்தெழுத்தின் பொருளை விரித்துக் கூறும் நூல்களாகவே முடியும்.
விளக்கம் :
இறைவன் அருளிச் செய்தவை முதல் நூல்கள் எனப்படும். அவை வேதமும் ஆகமமும் ஆகும். அவற்றுள் வேதம் பொது நூல் என்று கொள்ளப் பெறும். ஆகமம் சிறப்பு நூல் என்று கூறப்படும். பொது நூல் என்பது உண்மையை முற்றாக உணர்த்தாது ஓரளவாக உணர்த்துவது. உலகமாந்தர் உண்மையை ஓரளவே உணரவல்லவர். அவர் பொருட்டாகச் செய்யப்பட்டதே பொது நூல். சிறப்பு நூல் உண்மையை முற்ற உணர்த்துவது. சத்தி நிபாதர் முற்ற உணர வல்லவர். அப் பக்குவர் பொருட்டாகச் செய்யப்பட்டதே சிறப்பு நூலாகும். பொது நூலின் நோக்கம், மக்களுக்கு அறம் முதலியவற்றை உணர்த்தி அவர்களை உலகியலில் நிறுத்துவது. இம் முறையில் அமைந்த பொது நூலாகிய வேதம் அறநூல் எனப்படுவதாயிற்று. சிறப்பு நூலின் நோக்கம், உலகியலில் உவர்ப்புற்ற சத்தி நிபாதர்க்கு இறைவனது திருவருளைத் தெளிவித்து அவரை அருள் நெறியில் நிறுத்துவது. அம்முறையில் அமைந்த சிறப்பு நூலாகிய ஆகமம் அருள் நூல் எனப்படுவதாயிற்று.
இச் செய்யுளில் ஆகமத்தை அருள்நூல் என்று குறிப்பிட்டமையால் ஆரணமாகிய வேதம் அறநூல் என்பதுதானே பெறப்படும். இம்முதல் நூல்களை அடியொற்றி எழுந்த வழி நூல், சார்பு நூல்களாயிருப்பவை. மிருதி, புராணம், இதிகாசம் என்பவை. இந்த எல்லா வகை நூல்களின் கருத்தையும் ஆராய்ந்து பார்த்தால், அவையெல்லாம் திருவைந்தெழுத்தின் பொருளாகிய பதி பசு பாசங்களை விளக்கிக் கூறும் நூல்களாய் இருத்தல் புலனாகும். ஆசிரியர் உமாபதி சிவம் சிவப்பிரகாச நூலில்,
பல கலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப்
பதி பசு பாசம் தெரித்தல்
எனக் கூறியுள்ளமை காணலாம். எனவே, எல்லா நூற்பொருள்களும் திருவைந்தெழுத்தினுள் அடங்கியுள்ளன என்பது இனிது விளங்கும். அவ்வம்மதத்தினர் தாம் கொண்டுள்ள முடிவைப் பல வகையாக விளக்காமல் சுருக்கமாக ஒரு தொடரில் அமைத்துக் கூறுவதுண்டு. அவ்வாறு சுருக்கமாகத் தொகுத்துக் கூறும் தொடர் மகாவாக்கியம் எனப்படும். வடமொழி வேதம் ஒவ்வொன்றிற்கும் மகா வாக்கியம் உண்டு. அவ்வாறே சிவ நெறிக் கொள்கையின் முடிவைத் தொகுத்துக் கூறும் மகா வாக்கியமாக விளங்குவது திருவைந்தெழுத்தாகும். திருவைந்தெழுத்து எல்லா நூற்பொருளும் திரண்டு கூடிய பெருமொழியாய் இருப்பது என அதன் சிறப்பை இம்முதற் செய்யுளில் கூறினார் ஆசிரியர்.
82. ஐந்தெழுத்தில் நிற்கும் பொருள்கள்
இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி
உற நிற்கும் ஓங்காரத் துள்
பொருள் : ஓங்காரத்தின் பரிணாமம் ஆகிய ஐந்தெழுத்தில் இறையும், அதன் சத்தியும், தளையாகிய ஆணவமும், எழில் மிக்க மாயையும், ஆன்மாவும் என்பவை பொருளாகப் பொருந்தி நிற்கும்.
சொற்பொருள் :
(சி,வா,ய,ந,ம என்னும் ஐந்தெழுத்தில்)
இறை - இறைவன்
சத்தி - அவனது ஆற்றல்
பாசம் - தளையாகிய ஆணவமலம்
எழில் மாயை - எழில் மிக்க மாயை
ஆவி - உயிர் என்பவை
உற நிற்கும் - பொருளாகப் பொருந்தி நிற்கும்
ஓங்காரத்துள் - ஓம் என்னும் பிரணவத்திலும் அவ்வாறேயாம்.
விளக்கம் :
சிவாய நம என்னும் ஐந்தெழுத்தில் அவ்வெழுத்துக்களின் பொருள்கள் இவை என்பதைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். இவருக்குக் காலத்தால் முற்பட்டதாகிய உண்மை விளக்கம் என்னும் நூல்
சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும்
அவன்எழுத்து அஞ்சின் அடைவாம்
எனக் கூறிற்று. எனவே, சிகாரம் சிவன்; வகாரம் அருட்சத்தி; யகாரம் ஆன்மா; நகாரம் திரோதான சத்தி; மகாரம் ஆணவமலம் என்றதாயிற்று. இவ்வாறு அந்நூல் சிவாய நம என்னும் ஐந்தெழுத்தில் அவ்வெழுத்துக்கள் நின்ற வரிசை முறையிலேயே அவற்றின் பொருளை வரிசைப்படுத்திக் கூறியுள்ளமை காணலாம். ஆயின் நம் ஆசிரியர் உமாபதிசிவம் அதுபோல வரிசை முறையில் பொருள் கூறவில்லை என்பது காணத்தக்கது. முன்னே உள்ள சிகார வகாரங்களின் பொருளை இறைசத்தி என வரிசையாகக் குறிப்பிட்டவர், அடுத்து அம் முறையை மாற்றி, அவ்வைந்தெழுத்தைப் பின்னிருந்து நோக்கிப் பொருள் கூறலுறுகிறார். பின்னிருந்து நோக்கினால் ம, ந, ய என வரும். அவற்றின் பொருளையே பாசம், எழில் மாயை, ஆவி எனக் குறிப்பிடுகிறார். எனவே மகாரம் பாசம்; நகாரம் மாயை; யகாரம் ஆன்மா என்றதாயிற்று. இவ்வாறு ஆசிரியர் மாற்றி வைத்துப் பொருள் கூறக் காரணம் என்ன என்று கேட்கலாம். ஆசிரியர் அவ்வாறு கூறியதற்கு ஒரு நோக்கம் உண்டு. அடுத்த செய்யுளில் ஊன நடனமும், ஞான நடனமும் ஐந்தெழுத்தில் அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.
சி, வா என்பது ஞான நடனம்
ம, ந என்பது ஊன நடனம்
ய என்பது இவ்விரண்டிற்கும் நடுப்பட்டது.
இவ்வாறு அடுத்த செய்யுளில் கூறுவதற்கு ஏற்ப இம்முதற் செய்யுளில் பொருள்களை இறை, சத்தி, பாசம், எழில் மாயை, ஆவி என அமைத்துக் கொண்டார். இவ்வமைப்பை நோக்கினால், ஞான நடனம் எனப்பட்ட இறையையும் சத்தியையும் முதலில் கூறினார் என்பதும், அடுத்து ஊன நடனம் எனப்பட்ட பாசத்தையும் மாயையும் கூறினார் என்பதும், பின்னர் அவற்றின் இடைப்பட்டதாகிய உயிரைக் கூறினார் என்பதும் புலனாகும். சி, வா, ய, ந, ம என்பவற்றில் ஆசிரியர் கொண்ட இப்பொருள மைப்புக்கு நேரே இடமில்லை என்பது தெளிவு. ஆகவே, முதலில் நிற்கும் சி, வா என்பவற்றை அப்படியே முறை நிரல் நிறையாகக் கொண்டு இறையும் சத்தியும் எனப் பொருள் கூறினார். எஞ்சிய எழுத்துக்களை இறுதியில் நின்று எதிர் நிரல் நிறையாகக் கொண்டு ம, ந, ய என வைத்து பாசம், மாயை, ஆவி எனப் பொருள் கூறினார். எனவே, அடுத்த செய்யுளின் நிலைக்கு ஏற்ப இச் செய்யுளில் பொருள்களை இறை, சத்தி, பாசம், மாயை, ஆவி எனக் கூறினாராயினும் சி, வா, ய, ந, ம என்பவற்றின் பொருள் முறையே இறை சத்தி, ஆவி, மாயை, பாசம் என்பனவேயாம் என அறியலாம்.
திருவைந்தெழுத்தில் நகாரம் திரோதான சத்தியைக் குறிக்கும் என்பதே வழக்கு. மேலே காட்டிய உண்மை விளக்கச் செய்யுளும் அவ்வாறே குறித்தது காணலாம். ஆயின் நம் ஆசிரியர் நகாரத்தின் பொருள் மாயை எனக் கூறியிருப்பது நோக்குதற்குரியது. இதில் மாறுபாடு ஏதும் இல்லை. மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அமைதலின், திரோதான சத்தியைக் கூறவே மாயை கன்மங்களையும் கூறியதாகக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறே, மாயையைக் கூறவே, அதனைக் கூட்டுவிக்கின்ற திரோதான சத்தியையும் கூறியதாகக் கொள்ளுதல் வேண்டும். ஆசிரியர் மகாரத்திற்குப் பாசம் எனப் பொருள் கூறினாராயினும், பாசங்களுள் முதலாவதாகிய ஆணவ மலத்தையே தலைமை பற்றி இங்குக் கொள்ளுதல் வேண்டும்.
83. இரு வகை நடனம்
ஊன நடனம் ஒருபால்; ஒரு பாலா
ஞான நடம்; தான் நடுவே நாடு.
பொருள் : சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தில் ஊன நடனத்தைக் குறிக்கும் பொருள்கள் ஒரு பக்கம் சேர்ந்திருக்க, ஞான நடனத்தைச் செய்யும் பொருள்கள் மற்றொரு பக்கம் சேர்ந்திருக்க, அந்நடனங்களால் பயன் அடைகின்ற உயிர் அவ்விரு பொருள்களுக்கும் இடையே நிற்கும். மாணவனே, இதனை ஆராய்ந்து உணர்வாயாக.
சொற்பொருள் :
ஊன நடனம் - உயிருக்கு அறியாமையைச் செய்யும் பொருள்
ஒருபால் - ஒரு பக்கம் சேர்ந்திருக்க
ஞானநடம் - அறிவைத் தரும் பொருள்கள்
ஒருபாலா - மற்றொரு பக்கம் சேர்ந்திருக்க
தான் - அந்நடனங்களால் பயன் அடைகின்ற உயிர்
நடுவே - அவ்விரு வகைக்கும் இடையே நிற்கும்
நாடு - மாணவனே, இதனை ஆராய்ந்து உணர்வாயாக.
விளக்கம் :
நடனம் :
இறைவனது செயலை நடனம் என்றும், கூத்து என்றும் குறிப்பிடுவர். அனைத்துப் பொருள்களும் தத்தம் நிலைக்கேற்பச் செயற்படுமாறு இறைவனே அவற்றை இயக்கி வருகின்றான். உலகை இயக்குகிற செயல் அவனுக்கு விளையாட்டுப் போல அத்துணை எளிதாய் இருத்தலின் அதனைக் குறிக்கும் வகையில் அவனது செயலை நடனம் என்றனர். நடனம் என்பதற்கு விளையாட்டு என்பது பொருள்.
பெத்தமும், முத்தியும் இறைவன் செய்யும் செயலேயாதலின் அவையிரண்டும் நடனம் எனப்படும். பெத்தத்தில், ஆணவ மலத்தோடு மாயை கன்மம் என்னும் இரு மலங்களையும் சேர்த்து உயிர்கள் இம் மும் மலங்களிற் பட்டுச் சுழலு<மாறு செலு<த்துகின்றான். மும்மலப் பிணிப்பினால் உயிர்கள் அறிவு மயங்கித் தம்மையும், தலைவனாகிய இறைவனையும் அறியாது ஞானத்தில் வேட்கையின்றி உலக வாழ்வில் அழுந்தி நிற்கும். இத்தகைய பெத்தம் ஊன நடனம் எனப்படுகிறது. ஊனம் என்பதற்கு ஞானம் இல்லாமை என்பது பொருளாகும். ஊன நடனத்திற்பட்ட உயிர்கள் படிப்படியே அறிவு முதிர்ச்சி பெற்றுத் தம்மையும் தலைவனையும் உணரும் பக்குவத்தை எய்தும். அப்படிப்பட்ட உயிர்களுக்கு ஞானத்தைத் தந்து, மலம் மாயை கன்மங்களை நீக்கி இன்பப் பேற்றை வழங்குவான். இச் செயல் ஞான நடனம் எனப்படுகிறது. இதன் பொருள் வெளிப்படை. சிவனது சத்தி ஊன நடனத்தில் திரோதான சத்தியாயும், ஞான நடனத்தில் அருட்சத்தியாயும் செயற்படும். சிவசத்தி ஒன்றே யாயினும் செயல் பற்றி இவ்வாறு இரண்டாக வகுத்துக் கூறப்படுகிறது. திரோதான சத்தி மறைத்தலையும், அருட்சத்தி அருளலையும் செய்யும்.
ஊன நடனம் :
திருவைந்தெழுத்தில் ஊன நடனத்தைக் குறிப்பவை நம என்னும் எழுத்துக்களாகும். அவற்றால் குறிக்கப்படுபவை திரோதான சத்தியும், ஆணவ மலமும் ஆகும். ம என்பது ஆணவ மலத்தால் நிகழும் அறியாமையைக் குறிக்கும். அறியாமை நிலை கேவலம் எனப்படும். ந என்பது திரோதான சத்தி மாயை கன்மங்களைக் கூட்டி உயிரினது அறிவை விளக்கி வரும் நிலையைக் குறிக்கும். இதனால் உண்டாவது சிற்றறிவாகும். இவ்வாறு சிற்றறிவு விளங்கும் நிலை சகலம் எனப்படும். உயிர் அறிவு அறியாமைகளாகிய சகல கேவலங்களை மாறி மாறி அடைந்து வருகிறது. நமது உணர்வில் அவ்வப்போது நிகழ்கின்ற நினைப்பும், மறப்பும் சகல கேவலங்களேயாகும். புறவுலகில் வருகின்ற பகல் இரவு போல நமது உணர்வில் மாறி மாறி வருகின்ற பகலும் இரவுமாக இந்த அறிவு அறியாமைகளைக் குறிப்பிடுவர். இவ்வாறு உயிர் ஆணவத்தில் அழுந்தி அறியாமையுடைய தாயும், மாயை கன்மங்களில் அழுந்திச் சிற்றறிவுடைய தாயும் உலக வாழ்வில் உழன்று வரும். இங்ஙனம் உழலும்படியாகச் செய்வது இறைவனது திரோதான சத்தி. இங்ஙனம் செய்யும் செயலை ஊன நடனம் என ஆசிரியர் குறிக்கின்றார். பெத்த நிலையில் உள்ள உயிர்களெல்லாம் இந்த ஊன நடனத்திற் பட்டுச் செல்வனவேயாம்.
ஞான நடனம் :
திருவைந்தெழுத்தில் ஞான நடனத்தைக் குறிப்பவை சி, வா என்னும் எழுத்துக்களாகும். அவற்றால் குறிக்கப்படுபவை சிவமும் அருட்சத்தியும் ஆகும். சி என்பது சிவத்தில் அழுந்தி நிற்கும் இன்புறு நிலையைக் குறிக்கும். வா என்பது அதற்கு முன்னே அருளை உணர்ந்து அதில் அழுந்தி நிற்கும் அருள் நிலையைக் குறிக்கும். முத்தி நிலையில் உயிர் சகல கேவலங்களிற் செல்லாமல், அஃதாவது அறிவு அறியாமைகளை மாறி மாறி அடையாமல், ஒரு நிலைப்பட்ட மெய்யுணர்வினை உடையதாய், சிகார வகாரங்களால் குறிக்கப்படும் ஆனந்தநிலை, அருள்நிலை என்பவற்றில் நிற்கும். இவ்வாறு கேவல சகலங்களாகிய இரவு பகலை நீக்கி உயிரை இரவு பகலற்ற இடமாகிய திருவருளில் உய்த்து, அருள்நிலை ஆனந்த நிலை என்பவற்றில் நிலை பெறுத்தும் இறைவனது செயலை ஞான நடனம் என ஆசிரியர் குறிக்கின்றார்.
தான் நடுவே நாடு :
மேற்கூறியவற்றால், உயிர்களாகிய நமக்கு இரண்டு வகையான சார்புகள் உள்ளன என்பது புலனாகும். ஒன்று, ஞான நடனத்தால் குறிக்கப்படுகின்ற இறைவன் என்ற சார்பு. பிறிதொன்று, ஊன நடனத்தால் குறிக்கப்படும் உலகம் என்ற சார்பு. இவற்றுள் இறைவனாகிய சார்பே நமக்கு நிலையானது. அன்று தொட்டு இன்று வரையிலும், இனிமேலு<ம் என்றென்றும் இருப்பது. நம்மைவிட்டு நீங்காதது. உலகச் சார்போ நிலையில்லாதது; இடையில் வந்தது ஆகலின் நம்மை விட்டு இடையிலேயே நீங்கக் கூடியது.
அறியாமை காரணமாக நாம் இவ்வுலகச் சார்பையே நமக்குரிய உண்மையான சார்பு என்று தவறாக எண்ணுகிறோம். உலகியல் மீது மேலும் மேலும் பற்றுக் கொள்கிறோம்; உலகச் சார்பினால் விளையும் துன்ப நிலையை உணராதிருக்கிறோம். இறைவன் நடுவு நிலைமையன்; நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே என்று பாடினார் ஓர் அருளாளர். உயிர்களாகிய நாமும் ஒரு வகையில் நடு நிலைமை உடையவர்களே! எவ்வாறெனில், ஒரு பால் அறிவே வடிவான இறைவன். மற்றொருபால் அறிவில்லாத சடவுலகம். இவ்விரண்டிற்கும் நடுப்பட்டவர்கள் நாம். அவ்வகையில் நாம் நடுநிலைமையாளர்தாமே! தான் நடுவே நாடு என்று ஆசிரியர் குறிப்பிட்டது இதனையேயாம். தான்-சீவன்; அல்லது ஆன்மா.
திருவெழுத்து அஞ்சில் ஆன்மா
திரோதம் மாசுஅருள் சிவம் சூழ்
தர, நடு நின்றது
எனச் சிவப்பிரகாசச் செய்யுளிலும் ஆன்மா நடுநின்றமையை ஆசிரியர் குறித்திருத்தல் காணலாம்.
ஒரு குறிப்பு :
இறைவனது செயலை நாதன் நடம் எனப் பெயரிட்டு முதன் முதல் விளக்கிய பெருமை மனவாசகங் கடந்தார் என்ற ஆசிரியரைச் சாரும். உண்மை விளக்கம் என்ற அவரது நூலில் இறைவனது நடனத்தை அழகிய முறையில் விளக்கிக் காட்டும் செய்யுட்கள் பல உள்ளன. ஆயின் அவர் ஊன நடனம், ஞான நடனம் என்ற குறியீடுகளை எடுத்துப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. அவருக்குப் பின் வந்த உமாபதி சிவமே இறைவனது செயலை
ஊன நடனம் என்றும், ஞான நடனம் என்றும் முதன் முறையாகக் குறிப்பிட்டவராவர். அவர் இக்குறியீடுகளை அமைத்துக் கொள்வதற்குப் பின்வரும் திருவாசகப்பாடலே அடி நிலையாய் அமைந்ததோ என்று எண்ண வேண்டியுள்ளது.
ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான்
உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்
துடைய விச்சையே (திருச்சதகம் 95)
84. இருவகை நடனத்தாலும் விளைவன
விரிய ம ந மேவி யவ்வை மீளவிடா; சித்தம்
பெரிய வினை தீரின் பெறும்.
பொருள் : ஆணவ மலமும், அது காரணமாகத் திரோதான சத்தி, மாயை, கன்மம் ஆகியனவும் உயிரை அழுத்தமாகப் பற்றியுள்ளன. அவை தம்மினின்றும் உயிரை மீண்டு போக விடுவதில்லை. உயிரினது பழவினை முழுதும் கெடுமாயின் உயிர் ஞானம் பெற்று அவற்றினின்றும் மீண்டு சிவத்தை அடையும்.
சொற்பொருள் :
ம, ந - முன்னர் ஆணவ மலமும் பின்னர் அது காரணமாக வந்து சேர்ந்த திரோதாயி, மாயை, கன்மம் என்பனவும்
விரிய மேவி - அழுத்தமாகப் பற்றி நின்று
யவ்வை - உயிரை
மீளவிடா - தம்மினின்றும் மீண்டு போக விடமாட்டா
தம் பெரிய வினை தீரின் - உயிரினது பழவினையாகிய சஞ்சிதம் முழுதும் கெடுமாயின்
சி பெறும் - உயிர் ஞானம் பெற்று அவற்றினின்றும் மீண்டு சிவத்தை அடையும்.
விளக்கம் :
மவும், நவும் மேவி யவ்வை மீளவிடா எனவும், சியைப் பெறும் எனவும் எழுத்துக்களாகக் கூறினாராயினும், அவை குறிக்கும் பொருள்களையே நாம் கொள்ளுதல் வேண்டும். இனி வரும் செய்யுட்களிலும் இவ்வாறே கூறிச் செல்வார் ஆசிரியர். யவ்வை ம ந விரிய மேவி மீளவிடா; தம் பெரிய வினை தீரின் சி (யைப்) பெறும் எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தைப் பின்னிருந்து நோக்கி ம ந மேவி யவ்வை மீளவிடா எனக் கூறியிருப்பது நோக்குதற்குரியது.
யவ்வை மீள விடாமை :
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் நாமறிந்தவை. அவற்றோடு மற்றும் இரு மலங்களைச் சேர்த்து மலங்கள் ஐந்து என்பதும் உண்டு. அஃது எவ்வாறு எனின், மாயை என்பது புலப்படாதது; அது காரண நிலையில் இருப்பது. அதிலிருந்து தோன்றிய காரியங்களே தனு, கரண, புவன போகங்கள் என்னும் நான்குமாகும். காரிய நிலையில் உள்ள இந்நான்கையும் மாயேயம் என வேறொரு பெயரால் குறிப்பர். மாயேயம் ஆகிய உடம்பும், இந்திரியங்களும், நிலமும் நிலத்திற் காணப்படும் பிற நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய இவையெல்லாம் உயிரறிவை மயக்கி வருதல் கண் கூடாகத் தெரிந்த உண்மை. ஆகவே, இம் மாயேயங்களையும் ஒரு மலமாகக் கூறுகிற வழக்கு ஏற்பட்டது. இனி, ஐந்தாவதாகச் சொல்லப்படுகிற மலம் ஒன்று உண்டு. அஃது இறைவனது சத்தியேயாகும். அதனைத் திரோதம், திரோதானம், திரோதாயி, திரோதான சத்தி என்றெல்லாம் குறிப்பர். இஃது உண்மையில் மலம் அன்று. இதுவே மேற்கூறிய மலங்கள் தம் தொழிலைச் செய்யுமாறு அவற்றை ஏவி நடத்தி வருகிறது. இவ்வாறு மலங்களைச் செயற்படுத்தி, அம்மலங்கள் உயிரறிவை மறைத்து மயக்குதற்குச் சார்பாய் இருப்பது பற்றியே திரோதான சத்தியும் ஒரு மலமாகச் சொல்லப்படுகிறது. திரோதான சத்தி உண்மையில் அருளேயாயினும் அஃது உயிர்களை மலங்களின் வழியாகச் செலுத்திப் பிறவித் துன்பத்திற்படுதலின் அதுவும் மலம் எனப்படுவதாயிற்று. எனவே, ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதனம் ஆகிய ஐந்தும் மலங்களாதல் இனிது விளங்கும். இம்மலங்கள் ஐந்தினையும் ஆசிரியர் உமாபதிசிவம் தமது சிவப்பிரகாச நூலில் பின் வருமாறு ஒருங்கே தொகுத்துக் கூறியுள்ளார்.
மோகம் மிக <உயிர்கள் தொறும் உடனாய் நிற்கும்
மூல ஆணவம் ஒன்று; முயங்கி நின்று
பாகம் மிக உதவு திரோதாயி ஒன்று;
பகர்மாயை ஒன்று; படர்கன்மம் ஒன்று
தேகமுறு கரணமொடு புவன போகச்
செயலாரும் மாயேயத் திரட்சி ஒன்று
ஆகமலம் ஐந்தென்பர்; ஐந்தும் மாறாது
அருள்என்பது அரிதென்பர் அறிந்துளோரே.
இச் செய்யுளில், மலங்களுள் முதலாவதாகிய ஆணவத்தை முதலிற் குறிப்பிட்டார். அம்மலத்தைப் பாகப்படுத்தி உதவும் திரோதான சத்தியை இரண்டாவதாகக் குறிப்பிட்டார். பின்னர் திரோதான சத்தியின் வழிப்பட்டனவாகிய மாயை கன்மம் மாயேயங்களைக் குறிப்பிட்டார். இவ்வைந்தும் உயிரை விட்டு நீங்காத வரையில் இறைவனது அருளைப் பெறுதல் இயலாது என்றும் கூறினார். இக் கருத்தையே இந்தத் திருவருட் பயன் செய்யுளிலும் சுருக்கமாக அமைத்துள்ளார். மலங்கள் உயிரைத் தம்மினின்றும் போகவிடாமையை எடுத்துக் காட்டி, அம்மலங்கள் தீருமாயின் உயிர் சிவத்தையடையும் என்று கூறியுள்ளார். சிவப்பிரகாசச் செய்யுளில் ஐந்தும் மாறாது அருள் என்பது அரிது என எதிர் மறையாகச் சொன்னவர் இங்கு தீரின் சிவத்தைப் பெறும் என உடன்பாடாகக் கூறினார் என்பதே வேறுபாடு.
பெரிய வினை தீர்தல் :
இங்கு ஓர் ஐயம் எழலாம். எல்லாத் தீமைகளுக்கும் அடி நிலைக் காரணமாக இருப்பது ஆணவமலம். அது நீங்கினாலன்றோ உயிர் சிவத்தைப் பெறுதல் கூடும். அந்த ஆணவ மல நீக்கம் பற்றி ஏதும் கூறாமல் வினை தீருமாயின் சிவத்தை அடையலாம் என்று வினை நீக்கமே இச் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. இஃது எவ்வாறு பொருந்தும் என்பதே அவ்ஐயம். ஆணவத்திற்கும் வினைக்கும் உள்ள தொடர்பு நாம் அறிந்தது. ஆணவமலம் உயிரை உள்முகமாக நோக்க விடாமல் புறப்பொருள்களையே நோக்கும்படி செய்யும். அவ்வாறு நோக்கி அப்பொருள்களின் மீது விருப்பு வெறுப்புக் கொள்ளும்படி செய்யும். அவ்விருப்பு வெறுப்புக் காரணமாக உயிர் மனம் மொழி மெய்களால் நல்லதும் தீயதுமான செயல்களைச் செய்யும். அச்செயல்களே வினைகள் ஆகின்றன. எனவே ஆணவ மலத்தின் வழிப்பட்டதே வினை என்பது விளங்கும். ஆணவ மலம் உள்ளவரையில் வினையும் உயிரை விடாது பற்றியிருக்கும். ஆணவமலம் நீங்குதற்குரிய நிலையை அடையுமாயின், அஃதாவது மலபரிபாகம் ஏற்படும் காலத்தில், வினையும் நீங்குவதாகும். ஆன்மாவிடத்தில் மலபரிபாகம் முற்ற நிகழ்ந்து, சத்தி நிபாதமும் அதி தீவிரமாய் நிகழும் காலமே ஞானம் பெறுதற்குரிய காலமாகும். அந்நிலையில் ஞானாசிரியர் சஞ்சித கன்மத்தை முற்றிலுமாக எரித்தொழித்து ஆன்மாவை வினைக்கட்டினின்றும் விடுவிப்பார். முத்தி பஞ்சாக்கரத்தை உபதேசித்து, சிவாகமங்களின் ஞானபாதப் பொருளை உணர்த்தி முப்பொருள் இயல்பையும் நன்கு உணரச் செய்வார். இதுவே நிருவாணதீக்கையாகும்.
வினையானது அறிவை வேறுபடுத்தித் தன் வழியிற் செலுத்துவது ஆகலின், வினை உள்ளவரையில் அறிவு நன்கு விளங்காது. எனவே வினை ஞானத்திற்குத் தடையாகும். அது பற்றியே ஆசிரியர் சஞ்சித கன்மத்தை முற்றாக நீக்கிப் பின் ஞானத்தை உணர்த்துகிறார். இவ்வாறு ஞானத்திற்குத் தடையாய் இருந்த வினைக்கட்டு ஆணவ மல பரிபாகம் காரணமாக மெலிவடைந்து நிருவாண தீக்கையில் அடியோடு அழியும். அப்பொழுது பொருள்களின் இயல்பு உள்ளவாறு விளங்கும். அவ்வான்மா பொய்யைப் பொய்யென்று கண்டு கழித்து மெய்யாகிய சிவத்தை உணர்ந்து பற்றும். இக்கருத்துப் படவே பெரியவினை தீரின் சிவத்தைப் பெறும் என்றார் ஆசிரியர். பெரியவினை என்றது சஞ்சித வினையாகும். ஆணவ மலம் பரிபாகம் அடைந்த வழியே வினை நீங்குவதாகும். எனவே, வினை நீங்குதல் கூறவே, ஆணவமலம் நீங்குதலையும் கொள்ளுதல் வேண்டும். மேலும் வினை நீங்கவே, அதற்குச் சார்பாகிய மாயையும் உடன் நீங்குவதாகும். இதுபற்றியே இச் செய்யுளில் வினை தீர்தலையே சிறப்பாக எடுத்துக் கூறி, ஆணவம், மாயை ஆகியவற்றின் நீக்கத்தையும் பெறவைத்தார் ஆசிரியர் எனலாம். ம, ந வால் குறிக்கப்படும் ஊன நடனத்தால் உயிர் உலகியலில் அழுந்தி நிற்கும் என்பதும் பின் பக்குவம் வந்த காலத்தில் ஞான நடனத்தால் அது பயனடையும் என்பதும் கூறப்பட்டன.
85. ஊன நடனத்தால் பாசநிலை நீங்காமை
மால்ஆர் திரோதம் மலம் முதலா மாறுமோ
மேலா சி மீளா விடின்.
பொருள் : மயக்கம் பொருந்திய திரோதான சத்தியைக் குறிக்கின்ற நகாரமும், ஆணவ மலத்தைக் குறிக்கின்ற மகாரமும் முதலாய் நிற்க, சிவத்தைக் குறிக்கின்ற சிகாரம் முதலாகும் படி மீளுதல் இல்லையென்றால் பாசநிலை நீங்குமோ? நீங்காது.
சொற்பொருள் :
(திருவைந்தெழுத்தை ஓதும் முறைமையில்)
சி - சிவத்தைக் குறிக்கின்ற சிகாரம்
மேலா - முதலாய் நிற்கும் வகையில்
மீளாவிடின் - முறை மாறாமல் உள்ளதாயின்,
மால்ஆர் திரோதம், மலம் - மயக்கம் நிறைந்த திரோதான சத்தியைக் குறிக்கின்ற நகாரமும், ஆணவ மலத்தைக் குறிக்கின்ற மகாரமும்
முதலா - முதலாய் நிற்பதால்
மாறுமோ - மலம் முதலிய பாசங்கள் நீங்குமோ? அவை நீங்காவாம்.
விளக்கம் :
நமசிவாய எனப் பாச எழுத்துக்களாகிய நம முற்பட்டு நிற்க ஓதிவரின் பாசநிலை நீங்காது. முற்பட்டு நிற்பதே தலைமைப் பொருளாகும். அதன்பின் நிற்பது அடிமைப் பொருளாகும். அம்முறையில் பாசங்களே முற்பட்டு நிற்க, உயிர் அவற்றின் பின் நின்றால் உயிர் பாசங்களுக்கு அடிமைப்பட்டதாய் அவற்றினின்றும் மீள இயலாது. ஆதலால் பாசங்களின் வழிப்பட்ட இந்நிலை மாற வேண்டும். சிகாரத்தை முதலாகக் கொண்டு சிவாய நம என ஓதிவரின், சிவமும் அருளும் முன் நிற்க, உயிர் அவற்றின் பின் நிற்பதாய் அமையும். இங்ஙனம் சிவமும் அருளும் தலைமைப் பொருளாய் முன் நிற்க, உயிர் அவற்றிற்கு அடிமைப்பட்டு அவற்றின் வழி நின்று பாசம் நீங்கப் பெறும். இதனை வலியுறுத்தி,
நம் முதலா ஓதில் அருள் நாடாது; நாடும் அருள்
சிம் முதலா ஓதுநீ சென்று
என உண்மை விளக்கம் கூறுவதும் அறியத்தக்கது.
இதனால் ஊன நடனத்தின் வழிநிற்பின் பாசம் நீங்காது என்பதும், ஞான நடனத்தின் வழி நிற்றல் வேண்டும் என்பதும் கூறப்பட்டது. இச்செய்யுளால், பஞ்சாக்கரத்தின் வகைமையை யறியலாம். நகாரம் முதலாக அமைவது தூல பஞ்சாக்கரம் எனப்படும். சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் எனப்படும்.
86. உலகப்பற்று இரங்கத்தக்கது
ஆராதி ஆதாரம்; அந்தோ! அது மீண்டு
பாராது மேலோதும் பற்று.
பொருள் : விசேடதீக்கை பெற்ற மாணவனே, நீ எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் உள்ள சிவத்தை வழிபடு. (அஃதாவது, சிகாரத்தை முதலாக வைத்துத் திருவைந்தெழுத்தை ஓது). அவ்வாறு சிகாரம் முதலாக மீளுமாறு ஓதாமல் மேலும் மேலும் நகாரத்தை முற்படக் கொண்டு ஓதுவதற்கு ஏதுவாகிய உலகப்பற்று, அந்தோ! மிகவும் இரங்கத்தக்கது.
சொற்பொருள் :
ஆதாரம் - (விசேட தீக்கை பெற்றுக் கிரியை நெறியில் நிற்கும் மாணவனே அனைத்துப் பொருளுக்கும் ஆதாரமாய் உள்ள சிவத்தை)
ஆராதி - நீ வழிபடுவாயாக. (அஃதாவது, சிகாரத்தை முற்பட வைத்துத் திருவைந்தெழுத்தை ஓதுக.)
அது - சிகாரம்
மீண்டு - முதலெழுத்தாக மீளுமாறு வைத்து ஓதுதலை
பாராது - கருதாமல்
மேல் - முன் போலவே
ஓதும் - நகாரத்தை முற்பட வைத்து ஓதுதற்குக் காரணமாகிய
பற்று - உலகப் பற்று
அந்தோ - ஐயோ! (பெரிதும் இரங்கத் தக்கது.)
விளக்கம் :
(மாணவனே) ஆதாரம் ஆராதி; அது (முதலாக) மீளப் பாராது மேல் ஓதும் பற்று, அந்தோ; (இரங்கத்தக்கது) என வேண்டும் சொற்களை வருவித்து அமைத்துக்கொண்டால் பொருள் நன்கு விளங்கும். உலகப் பற்றை விட விரும்பாதவர் முதலில் சமய தீக்கை பெற்றுத் திருவைந்தெழுத்தை நகாரம் முதலாகக் கொண்டு உச்சரித்தற்கு உரியர். அங்ஙனம் ஓதி வரவர, உலகப் பற்றும் ஓரளவு நீங்கி வரும். அந்நிலையில் அவர் விசேட தீக்கை பெற்றுத் திருவைந் தெழுத்தைச் சிகாரம் முதலாகக் கொண்டு உச்சரித்தற்கு உரியர். சிகாரம் முதலாகிய திருவைந்தெழுத்து பற்றினை விட விரும்புவோர் ஓதுதற்குரியது. இத்தகைய விடேசதீக்கை பெற்றும் சிகாரம் முதலாக ஓதும் முறைமையை நோக்காமல், நிட்காமியமாக வழிபாட்டினைச் செய்யாமல், உலகப் பயனில் பற்று நீங்காமல் நிற்கும் மாணவரை நோக்கியே இச்செய்யுளைக் கூறுகின்றார் ஆசிரியர். நம என்னும் எழுத்துக்கள் ஊன நடனத்தைக் குறிப்பன எனப் பார்த்தோம். நகாரம் முதலாக ஓதி ஊன நடனத்தின் வழி நின்றால் அது பிறவி நீங்குதற்கு வழியாகாது. சிகாரம் முதலாக ஓதுதலே ஞான நடனத்தின் வழி நிற்றலாகும். சிகாரம் முதலாக ஓத முயலாமல், உலகியலில் பற்று நீங்காமல் இருப்பது இரங்கத்தக்கது என்கிறார் ஆசிரியர்.
87. பிறவி நீங்க
சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்; இதுநீ ஓதும் படி.
பொருள் : திருவைந்தெழுத்தில் சிகாரம் வகாரம் என்னும் இரண்டும் முதலில் வருமாறு உச்சரித்தல் கூடுமாயின் பிறவி நீங்கும். பிறவிக்கு அஞ்சுகின்ற நீ ஓத வேண்டிய முறைமை இதுவாகும்.
சொற்பொருள் :
சிவ- சி,வ என்னும் இரண்டெழுத்துக்களும்
முதலே ஆமாறு - முன் நிற்கும் முறையில்
சேருமேல் - (திருவைந்தெழுத்தை ஓதுதல்) கூடுமாயின்
பவம் தீரும் - பிறவி நீங்கும்
நீ - (பிறவியிலிருந்து விடுபட விரும்புகின்ற) நீ
ஓதும்படி - ஓத வேண்டிய முறை
இது - இதுவாகும்
விளக்கம் :
திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன் எனத் திருநாவுக்கரசரும், நானேயோ தவஞ்செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன் என மணிவாசகரும் உரைத்துள்ளனர்.
சிவாய நம என்று சிந்தித் திருப்பார்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை
என்கிறார் ஒளவையார். அவர் அபாயம் என்று குறிப்பிடுவது ஊழின் தாக்குதல் ஆகும். ஊழ்வினை துன்பத்தைத் தரும் போது அதனைச் சிவாய நம என்று சொல்லி ஏற்க வேண்டும். அங்ஙனம் அதனை அவனருள் என்று கொண்டு அனுபவித்தால் அத்துன்பம் உடலளவாய்க் கழியுமேயன்றி உயிரைத் தாக்காது என்பது கருத்து.
88. யவ்வை வாழ்விக்கும்
வா சி யருளி யவ்வை வாழ்விக்கும்; மற்று அதுவே
ஆசில் உருவமுமாம் அங்கு.
பொருள் : முத்தி பஞ்சாக்கரத்தில், வகாரமாகிய திருவருள் சிகாரமாகிய சிவத்தைக் காட்டி யகாரமாகிய ஆன்மாவை வீட்டின்பத்தில் இருத்தும். மேலும், அந்தத் திருவருளே அம்முத்தி நிலையில் ஆன்மாவிற்குக் குற்றமற்ற உடம்பாயும் நிற்கும்.
சொற்பொருள் :
வா - (சிவாய என்னும் முத்தி பஞ்சாக்கரத்தில்) வகாரம் ஆகிய திருவருள்
சி அருளி - சிகாரம் ஆகிய சிவத்தை அடையும்படி செய்து
யவ்வை - யகாரம் ஆகிய ஆன்மாவை
வாழ்விக்கும் - பேரின்பப் பெருவாழ்வில் இருத்தும்
மற்று அதுவே - மேலும் அந்தத் திருவருளே
அங்கு - அம் முத்தி நிலையில்
ஆசு இல் - (ஆன்மாவிற்கு) குற்றம் அற்ற
உருவமும் ஆம் - உடம்பாயும் நிற்கும்.
விளக்கம் :
முந்திய செய்யுளில், சிவ முதலாக ஓதினால் பிறப்பு நீங்கும் என்று கூறப்பட்டது. சிவ முதலாக ஓதுவது எப்படிப் பிறப்பினை நீக்கும் என்ற வினாவுக்கு இச் செய்யுளில் விடை கூறப்பட்டுள்ளது.
அருள் ஆன்மாவை வாழ்வித்தல் :
பிறப்பிற்கு அஞ்சி வீடுபேற்றை விரும்பிய மாணாக்கன் சைவ ஆசாரியரை அடைந்து முதலில் சமயதீக்கை பெற்றுச் சரியையில் நிற்பான். பின்பு விசேட தீக்கை பெற்றுக் கிரியையிலும் பின் யோகத்திலும் நிற்பான். அந்நிலையிலும் பேரின்பம் விளையாமையால் ஞானாசிரியரை அடைந்து அவர்பால் அடைக்கலம் புகுவான்.
ஞானாசிரியர் நிருவாண தீக்கையால் அவனது சஞ்சித கன்மங்களைப் போக்கி இனி நீ திருவருளைத் துணையாகக் கொண்டு நின்மல சாக்கிரம் முதலியபடி நிலைகளில் நின்று ஒவ்வொன்றையும் கடந்து, நான்காம் ஐந்தாம் நிலைகளாகிய துரியம் துரியாதீதங்களை அடைந்தால் உனது சீவத்தன்மை நீங்கி, நீ சிவமாவாய் என்று உபதேசிப்பார். அவ்வுபதேசத்தைப் பெற்ற மாணாக்கன் அதில் உறைத்து நின்று, முத்தி பஞ்சக்கரத்தைக் கணித்துச் சிவமாம் தன்மையைத் தலைப்படுவன். முத்தி பஞ்சாக்கரத்தில் சிவன் முதலில் நிற்க அவன் கீழ் அருள் நிற்க, அருளின் கீழ் ஆன்மா நிற்கிறது. எனவே அருளே ஆன்மாவின் சீவத்தன்மையை நீக்கி அதனைச் சிவன்பால் சேர்த்துத் சிவமாந் தன்மைப் பெருவாழ்வில் வாழச் செய்யும். இதனையே, வா சி அருளி யவ்வை வாழ்விக்கும் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர்.
அருளுடம்பு :
உயிர் இன்ப துன்பங்களை நுகர்தற்கு இடமாய் இருப்பது உடம்பு. இது மாயையினால் ஆகாது. மாயையின் காரியமாகிய உலக போகத்தை உயிர் நுகர்வதற்கு மாயையின் மற்றொரு காரியமாகிய உடம்பு துணை செய்வது பொருத்தமே. இப் பெத்தநிலை நீங்கிச் சிவத்தை அணைந்த காலத்தில் உயிர் பேரின்ப நுகர்ச்சியைத் தலைப்படும். பேரின்பம் என்பது உலக இன்பத்திற்கு முற்றிலும் வேறானது. அவ்வாறாக, உலக நுகர்ச்சிக்கு உரிய மாயாகாரியமாகிய அதே உடம்பு பேரின்ப நுகர்ச்சிக்கும் உதவியாகும் என்பது எப்படிப் பொருந்தும்? எனவே மாயேயம் ஆகிய இந்த உடம்பு பேரின்ப நிலைக்கு உதவாது என்பது வெளிப்படை. ஓருண்மை இங்கே அறிதற்குரியது. மாயை அதன் காரியமாகிய மாயேயம், கன்மம் என்னும் மூன்றும், திரோதான சத்தியும் ஆகியவை ஆன்மா நின்ற நிலைக்கு ஏற்பவே நிற்கும். திரோதான சத்தி மருட் காலத்தில் மருளாயும், அருட்காலத்தில் அருளாயும் நிற்கும் என்பது நாமறிந்தது. ஆன்மா ஆணவத்தினின்றும் நீங்கிய பொழுது திரோதான சத்தி அருட்சத்தியாய் மாறி விடுதல் போல, மாயை முதலியனவும் அருளாய் மாறி விடும். ஆன்மா மலத்திற் பிணிப்புண்டு பசு எனப் பெயர் பெற்று நின்ற பொழுது, மாயை முதலியன பாசம் எனப் பெயர் பெற்று மலமாய் நிற்கும். ஆன்மா பசு என்னும் பெயர் நீங்கி அருளோடும் கூடி நின்ற பொழுது மாயை முதலியனவும் பாசம் என்னும் பெயர் நீங்கி அருளேயாய் நிற்கும். ஆன்மாவை ஆணவ இருள் பற்றியிருந்த காலத்தில் மாயை, கன்மம், மாயேயங்களையும் அவ்விருள் பற்றியிருக்கும். அதனால் மாயை முதலியவை இருளாய் நிற்கும். ஆன்மாவை ஆணவம் பற்றாது நீங்கிய முத்தி காலத்தில் மாயை முதலியவற்றையும் ஆணவம் பற்றாது. அதனால் மாயை முதலியவை ஒளியாய் நிற்கும் என அறிதல் வேண்டும். எனவே, ஆணவம் நீங்கிய முத்தி நிலையில் அம் முத்தரின் உடம்பு மலமாய் விளங்கிய தன்மை நீங்கித் திருவருள் விளக்கத்தினால் அருளுடம்பாய் நிற்கும் என்பது புலனாகும். அவ்வருளுடம்பே முத்தி நிலையில் இறையின்பத்தை நுகர்தற்குத் துணையாய் நிற்பது. இது கருதியே ஆசிரியர், மற்றதுவே (வா ஆகிய அருளே) ஆசில் உருவமுமாம் அங்கு என்றார். அங்கு என்பது முத்தி நிலையைக் குறிக்கும்.
89. வாசியிடை நிற்கை
ஆசின் ந வா நாப்பண் அடையாது அருளினால்
வா சி இடை நிற்கை வழக்கு.
பொருள் : திரோதானத்தைக் குறிப்பதாகிய நகாரத்திற்கும் அருளைக் குறிப்பதாகிய வகாரத்திற்கும் இடையே ஆன்ம எழுத்தாகிய யகாரம் நில்லாமல், அவ்வகாரத்திற்கும் சிவத்தைக் குறிப்பதாகிய சிகாரத்திற்கும் இடையில் நிற்றலே முத்தி முறைமையாகும்.
சொற்பொருள் :
ஆசின் - ஆணவ மலத்தின் வாசனை காரணமாக
ந - திரோதானத்தைக் குறிப்பதாகிய நகாரத்திற்கும்
வா - அருளைக் குறிப்பதாகிய வகாரத்திற்கும்
நாப்பண் - இடையில்
அடையாது - (ஆன்ம எழுத்தாகிய யகாரம்) நில்லாமல்
அருளினால் - அருளின் துணையினால்
வா - அவ்வருளைக் குறிப்பதாகிய வகாரத்திற்கும்
சி - சிவத்தைக் குறிப்பதாகிய சிகாரத்திற்கும்
இடை - இடையில்
நிற்கை - நிற்றலே
வழக்கு - முத்தி முறைமையாகும்.
விளக்கம் :
விலக்குதல் : சிவாய நம எனத் திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதும் பொழுது ஆன்ம எழுத்தாகிய யகாரம் நகாரத்திற்கும் வகாரத்திற்கும் இடையே நிற்கிறது. அது வேண்டா என இங்கு விலக்கப்பட்டது. அவ்வாறு விலக்குவதற்கான காரணம் அறியத்தக்கது.
விலக்குதற்குக் காரணம் :
நகாரம் சகல நிலையைக் குறிக்கும் என்பதும், வகாரம் அருள் நிலையைக் குறிக்கும் என்பதும் நாமறிந்தது. சகல நிலை என்பது பாச ஞானம் விளங்கும் நிலையாகும். அருள்நிலை என்பது பதி ஞானம் விளங்கும் நிலையாகும். சகல நிலை, அருள்நிலை என்னும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது பசு ஞான நிலையாகும். அஃதாவது, பசுவாகிய தன்னையே பெரும் பொருளாகக் கருதி நான் முதல் என உணர்வதும், நான் சிவனுக்குச் சமம் என உணர்வதும் ஆகிய நிலையே பசு ஞான நிலையாகும். இவ்வாறு உணர்வது உண்மையுணர்வு ஆகாது. இது பதி ஞானத்தை உணர்வதற்கு முன்னே தோன்றுகிற ஓர் இடைப்பட்ட அனுபவ நிலையாகும். இப்பசு ஞானம் நீக்குதற்குரிய நிலையாதலின் யகாரம் ந வா நாப்பண் அடைய வேண்டா என விலக்கப்பட்டது.
ஆணவ மலத்தின் வாசனை :
ஞான நெறியிற் செல்லு<ங் காலத்தில் உயிர் கருவி கரணங்களைத் தன்னின் வேறாகக் கண்டு அவற்றால் வரும் பாச ஞானத்தினின்று நீங்கினா<லும், ஆணவ மலத்தின் வாசனை காரணமாகப் பதி ஞானமாகிய திருவருளை உணராது நிற்கும். அம்மல வாசனை உயிருக்கு நான் என்னும் செருக்கினை உண்டாக்கி மேற்கூறியவாறு நான்முதல், நான்சிவ சமம் என்னும் பசு ஞான நிலைகளை அடைவிக்கும். இதனால், ந வா நாப்பண் அடைதல் என்பது பசு ஞான நிலை என்பதும், அந்நிலையை அடைதற்குக் காரணமாக இருப்பது ஆணவ மலத்தின் வாசனை என்பதும் விளங்கும். ஆணவ மலத்தை ஆசு என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கமுடையவர் நம் ஆசிரியர். இங்கு, ஆணவ மலத்தின் வாசனையை ஆசு எனக் குறிப்பிட்டார். ஆசின் என்பதற்கு ஆணவ மலத்தின் வாசனை காரணமாக என்பது பொருளாகும்.
முத்தி பஞ்சாக்கரம் :
இனி, இந்தப் பசு ஞான நிலை நீங்கி, முற்றிலும் திருவருள் வயப்பட்டு அடங்கி, அருள் நிலைக்கும் இன்புறு நிலைக்கும் இடையில் நிற்றலே முத்தி முறைமையாகும். இவ்வாறு அனுபவத்தில் நிற்கும் முறையையே வா சி இடை நிற்கை வழக்கு என ஓதும் முறையாகக் கூறினார் ஆசிரியர். யகாரத்தை வா, சி இவற்றின் இடையே நிற்க வைத்து உச்சரித்தல் வழக்கம் எனக் கூறப்பட்டது. இதனால், நகார மகாரங்கள் நீங்கி நிற்கும் சிவாய என்னும் மூன்றெழுத்தே உச்சரித்தற் குரியது என்பது விளங்கும் இதனைச் சிவாய சிவாய எனத் திரும்பத் திரும்பக் கணிக்கும் போது யகாரம் வா, சி இவற்றிற்கு இடை நிற்பதாக ஆகின்றது. எனவே சிவாய என்னும் மூன்றெழுத்தே பாசம் நீங்கிய முத்தி பஞ்சாக்கரம் ஆகும். இதனை அதிசூக்கும பஞ்சாக்கரம் என்பர். இவ்வாறு இச்செய்யுளில், சிவாய நம எனச் சிகாரம் முதலாக ஓதினால் யகாரம் நகார வகாரங்களுக்கு இடையே நிற்கும் ஆதலால் அவ்வாறு ஓதுவதும் முத்தி முறைமை ஆகாது என விலக்கி, வாசி இவற்றிற்கு இடை நிற்க ஓதுதலே முத்தி பஞ்சாக்கரம் என்பது உணர்த்தப்பட்டது. இம்முத்தி பஞ்சாக்கரம் குருமுகமாக உபதேச முறையால் உணர்தற்கு உரியது.
முரண்பாடு இல்லை :
இங்கு ஓர் ஐயம் எழலாம். 87-ஆம் செய்யுளில் சிகார வகாரங்கள் முன் நிற்கும்படி சிவாய நம என ஓதி நின்றால் பிறவி நீங்கும் எனக் கூறிய ஆசிரியர் இங்கு வேறு விதமாக, வாசி இடை நிற்க ஓதி நின்றால் பிறவி நீங்கும். முத்தியாகும் என்பதுபடக் கூறியுள்ளாரே. இது முன்னுக்குப் பின் முரணாக அல்லவா உள்ளது என்று கேட்கலாம். பார்ப்பதற்கு முரண்பாடு போலத் தோன்றினாலு<ம் உண்மையில் இவ்விரண்டிற்கும் முரண்பாடு இல்லை என்பதை அறிதல் வேண்டும்.
ஒருவர் திருச்சியிலிருந்து நெல்லைக்குப் புறப்படுகிறார். தன்னுடைய வண்டியில் கிளம்புகிறார். நண்பர்களிடம் எப்படிப் போக வேண்டும் என்று கேட்கிறார். ஒரு நண்பர் மதுரை வழியாகப் போக வேண்டும் என்கிறார். மற்றொருவர் கோவில்பட்டி வழியாகப் போக வேண்டும் என்கிறார். இருவரும் இருவேறு விதமாகக் கூறினாலும் அவர்கள் கூறியதில் முரண்பாடு இல்லை. இருவர் கூற்றும் சரியே. ஆனால், ஒரு வேறுபாடு உண்டு. கோவில்பட்டி நெல்லைக்கு நேர் வழியாகிறது. மதுரை அங்ஙனம் ஆகாமல் கோவில்பட்டிக்குச் செலுத்தி அம்முறையில் வழியாகிறது. இதனைக் கருத்திற் கொண்டு பொருளுக்கு வருவோம். வாசியிடை நிற்க ஓதுதலே முத்தி பஞ்சாக்கரம் என மேலே அறிந்தோம். எனவே, அதுவே பிறவி நீங்குதற்கு நேரே வாயில் ஆகிறது என்பது தெளிவு. முன்னே (செ.87) சிவாய நம என ஓதி நின்றால் பவம் தீரும் என ஆசிரியர் கூறியது பிறவி நீங்குதற்கு அது நேர் வாயிலாகிறது என்னும் கருத்தினால் அன்று. மதுரை நெல்லைக்கு நேர்முறையில் வழியாகாமல் கோவில்பட்டிக்குச் செ<<லுத்து முகமாக வழியாதல் போல, சிவாய நம என்னும் ஐந்தெழுத்து பிறவி நீங்குதற்கு நேரே வாயில் ஆகாமல், அதுவே சிவாய என்னும் மூன்றெழுத்தாகி அம் முத்தி பஞ்சாக்கரம் வழியாகவே பிறவி நீங்குதற்குக் காரணமாகிறது என்பதே கருத்தாகும். இதனால், சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும் பவம் என்று முன்னே குறிப்பிட்டது வழி முறையால் வாயிலாதல் பற்றி என அறியலாம்.
90. நிலையால் பலவகைப்படுதல்
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து.
பொருள் : ஆன்மா பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாமல் படி முறையிலே சிறிது சிறிதாகவே நீங்கும் இயல்புடையது. அதனைக் கருதியே ஆகமங்கள் திருவைந்தெழுத்தினை ஒருபடியாகக் கூறாமல் இங்ஙனம் படிமுறைக்கு ஏற்பப் பல வகையாக அமைத்துக் கூறுகின்றன.
சொற்பொருள் :
இவன் - ஆன்மா
அகன்று நில்லா வகையை - பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாத தன்மையை
நினைந்து - கருதியே
எல்லா வகையும் - திருவைந்தெழுத்தினைப் பல வகையாகவும்
இயம்பும் - ஆகமங்கள் அமைத்துக் கூறும்.
விளக்கம் :
ஐந்தெழுத்தின் பல நிலைகள் :
ஐந்தெழுத்து தூலம், சூக்குமம், அதிசூக்குமம் எனவும், அவற்றினும் நுட்பமாய்க் காரணம், மகா காரணம் எனவும் பல வகையாய் நிற்கும் என்பதை அறிந்தோம்.
பற்றுக்களைவிட விரும்பாதவர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்துக் கணிப்பர். பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்துக் கணிப்பர். ஞான குருவின் உபதேசத்தைப் பெற்றுப் பற்றுக்களை விட்டொழிக்க முயல்கின்றவர்கள் பாசம் நீங்குதற் பொருட்டுப் பாச எழுத்துக்கள் இரண்டையும் நீக்கி மற்றை மூன்றெழுத்தை மட்டுமே கணிப்பர். முத்தியை எய்தும் நிலையுடையவர் அம் மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை மட்டுமே மந்திரமாகக் கொண்டு தொடர்ந்து இடைவிடாது கணிப்பர். அப்பால், சி என்னும் ஓரெழுத்தாகிய மகாகாரண பஞ்சாக்கரக் கணிப்பினால் சிவானந்தத்தில் மூழ்கியிருக்கும் நிலை உண்டாகும்.
இவ்வாறு பாசப்பற்றில் அழுந்தியிருத்தல், பாச நிலையிலிருந்து சிறிது விடுபடுதல், பாசப்பற்று நீங்கித் திருவருள் நிலையைப் பெறுதல், திருவருள் நிலை வாய்க்கப் பெற்றும் நிட்டை கூடப் பெறாமை, நிட்டை கூடியும் அதிலிருந்து மீண்டு உலகினை நோக்கும் நிலை என அவரவர் நிற்கும் அனுபவ நிலைகள் பலவாய் இருத்தலின் அவ்வனுபவ நிலைகளுக்கு ஏற்ப அவரவர் ஓதுதற்குரிய ஐந்தெழுத்தின் நிலைகளும் பலவாயின என அறியலாம்.
சிறந்த சாதனம் :
ஞான நெறியில் ஐந்தெழுத்து சிறந்த சாதனமாய் அமைகிறது என்பது இதனால் விளங்கும். பந்தமாகிய கீழ்நிலையில் உள்ளவர் அதிலிருந்து நீங்கி வீடாகிய மேல்நிலையை அடைவதற்கும் அது சாதனம் ஆகின்றது. மேல் நிலையை எய்தினோர் பழைய பழக்கத்தால் மீளவும் உலகினை நோக்கிச் சென்று விழாதபடி காத்துக் கொள்வதற்கும் அது சாதனம் ஆகின்றது. மேல்நிலையை அடைந்த பின்னரும் கீழ்நிலைக்கு வருதல் உண்டோ என்று கேட்கலாம். அவ்வாறு நிகழ்தல் உண்டு என்பதைச் சில பெரியோர் வாழ்விலிருந்து அறிகிறோம். பலகாலம் தூய்மையான துறவு வாழ்க்கையை மேற் கொண்டவரும் சூழ்நிலை காரணமாக உலக இச்சைக்கு ஆட்பட்டுத் தமது தவ நெறியினின்றும் வழுவித் தவறு இழைத்து விடுவதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்? அதைத்தான் பழைய பழக்க வாசனை என்கிறார்கள். வேப்ப மரத்தில் வாழ்ந்த ஒரு புழு அதன் இலை, பூ, காய் முதலியவற்றையே தின்று பழக்கப்பட்டிருந்தது. அது தற்செயலாய் அருகில் வளர்ந்திருந்த கரும்பின் மேல் வீழ்ந்தது. அதனைப் பற்றிக்கொண்டது. அதனைச் சுவைத்தது. சில காலம் அந்த இன்சுவையை நுகர்ந்தது. காலமெல்லாம் அங்கேயே அது வாழ்ந்திருக்கலாம் அல்லவா? ஆனால், அவ்வாறு அது செய்யவில்லை. கசப்பான வேம்பினையே உண்டு பழகிய அந்த முன்னைப் பழக்கம் அதனை விட வில்லை. அப்பழக்க வாசனையால் அதற்கு வேம்பின் மேல் மீண்டும் விருப்பம் சென்றது. அதன் காரணமாக அது இனிய கரும்பினை விடுத்துத் தனது பழைய இடமாகிய வேப்ப மரத்திற்கே திரும்பியதாம்! அதுபோலப் பாச ஞானத்தை விட்டொழித்துப் பதி ஞானத்தைப் பெற்று அதனால் பதியை அடைந்து பேரின்பத்தை நுகர்ந்த பின்னரும் முன்னைப் பழக்க வாசனையால் உலகத்தை நோக்கும் விருப்பம் நிகழ்தல் கூடும். அந்நிலை நிகழாதவாறு நீக்குதற்கும் ஞான நிலையில் உறைத்து நிற்பதற்கும் ஐந்தெழுத்து இன்றியமையாத சாதனமாய் விளங்குகிறது. இக்கருத்துப் பற்றியே நம் ஆசிரியர் உமாபதிசிவம் இன்புறு நிலையைக் கூறி முடித்து, அதன்பின்னாக ஐந்தெழுத்தருள் நிலையாகிய இதனை வைத்தார் என்பது அறிதற்குரியது.
இன்னொரு பொருள் :
இவன் அகன்று நில்லா வகையை நினைந்து என்பதற்கு, ஆன்மா பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாத தன்மையை நினைந்து என்று பொருள் கூறினோம். இதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கூறலாம். ஆன்மாவாகிய இவன் திருவருளை நீங்கி நில்லாது, அதனை விடாது பற்றி நிற்றல் வேண்டி ஆகமங்கள் திருவைந்தெழுத்தினைப் பலவகையாக அமைத்துக் கூறும் என்று பொருள் கொள்வதும் பொருந்தும்.
பத்தாம் அதிகாரம்
அணைந்தோர் தன்மை
உயிர் சுத்த நிலையை எய்துதல் :
காலைப் பொழுதில் கீழ் வானில் எழுந்த கரிய மேகக் கூட்டம் கதிரவனை முற்றிலும் மறைத்து விடுகிறது. அதன் இருப்புச் சிறிதும் தோன்றாதவாறு செய்கிறது. அதன் பொன்னொளி சிறிதும் புலனாகவில்லை. பரிதி இருந்தும் விளங்காத நிலை அது. அப் பரிதியின் நிலையில் உயிர் முதலில் இருந்தது. ஆணவ மலமாகிய முகிற் படலத்தால் அது மறைக்கப்பட்டுத் தனது அறிவு இச்சை செயல்கள் சிறிதும் விளங்காமல், தானொரு பொருள் உண்டு என்ற உணர்வும் இல்லாமல், முழு இருளில் அழுந்திக் கிடந்தது. இது கேவல நிலை. கதிரவனை மறைத்திருந்த முகிற் கூட்டம் சிறிது கலைகிறது. இடைவெளி தோன்றுகிறது. அந்த இடைவெளியூடே கதிரவன் ஒளி மெல்ல எட்டிப் பார்க்கிறது. அந்நிலையில் கதிரவன் ஒளி மழுங்கியே காணப்படுகிறது. அது போன்றது சகல நிலை. இறைவன் உயிருக்கு உடம்பையும் கருவிகளையும் மாயையினின்றும் படைத்துக் கொடுக்க அவற்றோடு கூடிய உயிர் பிறந்தும், இறந்தும், உலகப் பயனாகிய இன்பத் துன்பங்களை நுகர்ந்தும் வருகிறது. இச் சகல நிலையில் ஆணவ இருள் சிறிது நீங்க உயிரின் அறிவு இச்சை செயல்கள் சிறிது விளங்கப் பெறுவது, முகிற் கூட்டம் சிறிது விலகிய போது கதிரவன் தனது ஒளி சிறிது விளங்கி நிற்கும் தன்மை போன்றது ஆதல் காணலாம். அப்பொழுது வேகமாகப் பெருங் காற்று வீசுகிறது. அது மேகக் கூட்டத்தை அடித்துத் துரத்துகிறது. முன்பு சிறிது விலகிய முகிற் கூட்டம் இப்பொழுது முற்றுமாக நீங்குகிறது. இது போன்றது சுத்தநிலை. உயிர் வினைகளை ஈட்டியும் நுகர்ந்தும் வருவதால் ஆணவ மலம் மெலிந்து தேய்வடைகிறது. உயிர் தவநெறியில் ஈடுபட்டு இருவினை யொப்பும் சத்தி நிபாதமும் எய்திய காலத்தில் இறைவன் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்த, அதனைக் கேட்டும் சிந்தித்தும் தெளிந்தும் மும்மலங்களும் வாசனையும் தோன்றாது நீங்கப் பெறுகிறது. அந்நிலையில் உயிரின் அறிவு இச்சை செயல்கள் முற்றும் விளங்கி நிற்பது, முகிற் கூட்டம் முற்றும் நீங்கிய பொழுது கதிரவன் தனது ஒளி எங்குமாக விளங்கி நிற்கும் தன்மை போன்றதாதல் காணலாம்.
இங்ஙனம் விளங்கிய தனது அறிவு இச்சை செயல்களால் உயிர் இறைவனையே அறிந்தும், அன்பு செய்தும், அவனது திருவடியின்பத்தில் திளைத்து நிற்கும். அவ்வின்பம் மேலும் மேலும் எல்லையின்றி விளைந்து கொண்டேயிருக்கும். அந்த ஆரா இன்பத்தில் ஆன்மா அழுந்தித் தன்னையும் மறந்திருக்கும். இதுவே நிட்டை நிலையாகும். இன்புறு நிலையாகிய அதிகாரத்தில் இதனை விளங்க அறிந்தோம்.
அணைந்தோர் - விளக்கம் :
நிட்டை கூடித் திருவடியின்பத்தில் திளைத்திருப்போர் இவ்வுலகில் வாழ்ந்தாலும், இவ்வுடம்போடு கூடியிருந்தா<லும், அவர் முத்தி பெற்றவரே. அவரைச் சீவன் முத்தர் என்று அழைப்பர். தமிழில், அணைந்தோர் என்பர். உடம்பு உள்ள போதே இறைவனது திருவடியை அணைந்தோர் ஆதலின் அவ்வாறு சொல்லப்படுவர். உடம்பை விட்டுப் போன பிறகு எந்த முத்தியின்பத்தை அடையலாமோ அந்தப் பேரின்பத்தை இந்த உடம்பில் இருக்கும்போதே பெற்றவர்கள் அவர்கள்.
பிறரிடமிருந்து வேறுபட்டு நிற்றல் :
சீவன் முத்தர் பார்ப்பதற்கு மற்றவர்களைப் போலத்தான் இருப்பர். ஆனாலும் அவருக்கும் பிறருக்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஓர் எடுத்துக் காட்டினால் இதனை விளக்கலாம். நெல்லை ஓரளவு சூடு ஏறும்படி வறுத்து எடுத்தால், அதற்கும் வறுக்காத நெல்லுக்கும் வேறுபாடு வெளியே தெரியாது. பார்வைக்கு இரண்டும் ஒன்று போலவே தோன்றும். ஆனாலும், வேறுபாடு இருக்கிறது அல்லவா? வறுத்த நெல் முளைக்காது; மற்றது முளைக்கும். அதுபோலச் சீவன் முத்தராய் உள்ளவர் பிறரைப் போல உண்டும், உடுத்தும், பூசுவன பூசியும், புனைவன புனைந்தும் வாழ்ந்தாலும் பிறரிடமிருந்து வேறுபட்டு நிற்பர். அவர் வினையினின்றும் நீங்கியவராதலின் இந்த உடம்பை விடுத்துச் சென்றால் வேறு உடம்பை எடுக்கமாட்டார். மீளப் பிறத்தல் என்பது அவர்க்கு இல்லை. ஏனையோரெல்லாம் இந்த உடம்பினின்றும் நீங்குவது மீண்டும் வேறு உடம்பை எடுப்பதற்குத் தான்; அடுத்த பிறவியில் இன்பதுன்பங்களை அடைவதற்குத்தான்.
உடம்பில் ஒட்டாமை:
சீவன் முத்தர் இந்த உடம்பில் இருந்தாலும் உடம்போடு ஒட்டுதல் இன்றி வாழ்வர். புளியங்காயில் மேலே உள்ள தோடும் உள்ளே உள்ள காயும் பிரிக்க முடியாதபடி இணைந்து ஒட்டியே இருக்கும். அதுவே பழமானால் தோடும் பழமும் தனித்தனியே பிரிந்து விடும். இரண்டுக்கும் ஒட்டுறவு இருக்காது. புளியம்பழம் தோட்டினுள் இருந்தாலும் அதனோடு தொடர்பு கொள்ளாதது போலச் சீவன் முத்தர் உடலில் பற்றுதல் இல்லாமல் வாழ்வர். இதுவரை கூறியவற்றால், முத்தியின்பத்தை இந்த உடம்போடு வாழும் போதே பெறலாம் என்பதும், அந்த நிலையே நிட்டை நிலை என்றும், சீவன் முத்தி நிலை என்றும் சொல்லப்படுகிறது என்பதும், அந்நிலையை அடைந்த சீவன் முத்தர் உடம்போடும் உலகியலோடும் ஒட்டாமல் பற்றுதல் இன்றி வாழ்வர் என்பதும் பெறப்படும்.
தூங்கிக் கண்டார் :
திருமூலர் இவரைத் தூங்கிக் கண்டார் என்று குறிப்பிடுவார். தூங்குதல் என்பது ஒன்றையும் அறியாத நிலையல்லவா? அந்நிலையில் எப்படிக் காண முடியும்? என்று எண்ணலாம். தூங்குதலும், காணுதலும் ஆகிய இரண்டையும் நம்மால் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஆனால், சீவன் முத்தரால் அது முடியும். அவர் கொள்வது ஞானத்தூக்கம் ஆயிற்றே. அவர் தம்மையும், தம்மைச் சார்ந்துள்ள உடம்பு, உலகம் என்பவற்றையும் அறிதலை ஒழிந்து, எல்லாம் மறந்து, தன் வசம் அழிந்து, சிவானந்தத்தில் தோய்ந்திருப்பர். ஆதலின் அவர் தூங்கியவர் ஆனார். அதேநேரத்தில் அவர் சிவத்தை இடைவிடாது உணர்ந்து நிற்றலின் கண்டவரும் ஆனார். இவ்வாறு இவ்விரு நிலைமையும் அவரிடத்து ஒருங்கு நிகழ்தல் பற்றி அவர்தம் நிலையைத் தூங்காமல் தூங்குதல் எனக் கூறுவர்.
தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்நிறைவில்
நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ?
என்பது தாயுமானவரின் அனுபவ மொழி. உலகத்தார் பகல் முழுதும் வேலை செய்து உழைத்து இரவில் கருவி கரணங்கள் எல்லாம் அறிவு இன்றி ஒடுங்கிய நிலையில் துயில் கொள்வர். சீவன் முத்தரோ கருவி கரணங்கள் எல்லாம் அறிவோடு ஒடுங்கிய நிலையில் பேரின்பத்தில் அழுந்தி அறிதுயில் கொள்வர்.
சோம்பர் :
சீவன் முத்தராகிய ஞானியரைச் சோம்பர் என்ற சொல்லால் குறிப்பதும் உண்டு. சோம்பர் என்பவர் தாமத குணம் உடையவராய், எங்கும் செல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்து வீணே பொழுது போக்குபவர். இவ்வாறு சும்மாயிருப்பது அஞ்ஞான நிலை. இனி, ஞானிகளும் சும்மா யிருப்பர். அஃதாவது, யான் எனது என்னும் செருக்கு ஒழிந்து, மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றும் செயலற்று, மவுன நிலையடைந்து, இறைவனடி திருவடி நிறைவில் ஒடுங்கி இன்புற்றிருப்பர். இவ்வாறு சும்மாயிருப்பது ஞான நிலையாகும். செயலற்றிருத்தல் என்பது சோம்பருக்கும் உரியது. ஞானியருக்கும் உரியது. ஆயின், இவ்விருவர் நிலைகளும் தம்முள் ஒவ்வாதன என்பது மேற்கூறியவற்றால் விளங்கும். என்றாலும், சும்மாயிருத்தல் என்னும் சொல் ஒற்றுமை பற்றி, ஞானியர் சோம்பர் எனப்பட்டனர் என அறியலாம்.
மவுனம் :
சும்மாயிருக்கின்ற ஞானியராகிய சீவன் முத்தரை உலகர் அறியாமற் போதல் கூடும். எடுத்துக் காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். ஞானி ஒருவர் கோயிலுக்கு நாள்தோறும் வருவார்; வழக்கமாக ஓர் இடத்தில் அமர்வார்; யாருடனும் பேசமாட்டார்; எதுவும் கேட்க மாட்டார்; எப்பொழுதும் மவுனமாகவே இருப்பர். கோயிலிலிருந்து அவருக்கு ஒரு பட்டைச் சோறு நாள்தோறும் கொடுப்பது வழக்கம். அங்கிருந்த அதிகாரி மாறுதலாகிப் போனார். புதிய கோயிலதிகாரி வந்தார். அவர் கணக்குகளைப் பார்த்தபோது சும்மாயிருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை என்று எழுதியிருப்பதைக் கண்டார். பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்துக் கோபத்தோடு கேட்டார். சும்மா இருப்பவர்களுக்கு எதற்குச் சோறு? இன்று முதல் அந்தச் சாமியாருக்குக் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அவர்கள் அந்த ஞானியின்மேல் மட்டில்லா மதிப்பு வைத்திருந்தனர். ஆதலால் அவர்களில் ஒருவர் அந்த அதிகாரியை அணுகி மெல்ல எடுத்துரைத்தார். சும்மாயிருப்பது என்பது எளிமையான காரியமன்று. முற்றுந்துறந்த ஞானிகளுக்குத்தான் அது முடியும். அவர் பெரிய ஞானி என்று கூறினார். அதற்கு அந்த அதிகாரி, சும்மா இருப்பது பெரிய காரியமா? என்னால் அப்படி இருக்க முடியும். நான் இன்று முழுதும் யாருடனும் பேசாமல் இருந்து காட்டுகிறேன் என்று வீறாப்பாய் பேசிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.
அங்கேதான் அவருக்குச் சோதனை காத்திருந்தது! அவர் வீட்டிற்குள் நுழையும்போதே அவரது மனைவி காய்கறி எல்லாம் தீர்ந்து விட்டது. கடைக்குப் போய் ஏதாவது வாங்கி வருகிறீர்களா? என்று கேட்டாள். அவர் வாயைத் திறக்கவில்லை. பேசாமல் உள்ளே போனார். அவரது மவுன விரதம் அந்த அம்மாவுக்கு எப்படித் தெரியும்? அவளுக்குச் சற்று எரிச்சல் உண்டாயிற்று. நான் பேசிக் கொண்டேயிருக்கிறேன். நீங்கள் பேசாமல் போகிறீர்களே. உங்களுக்கு என்ன ஆயிற்று? என்றாள். அதற்கும் அவர் பேசவில்லை. இன்றைக்குச் சமையல் செய்யாமல் இருந்து விடுகிறேன். எனக்கு என்ன? என்று கூறியபடி உள்ளே போய் விட்டாள். இது என்ன தொல்லை என்று நினைத்துக் கொண்டே மவுனமாக இருந்தார். அன்றைக்குப் பார்த்து ஒருவர் மேல் ஒருவராக அவரைத் தேடி ஆட்கள் வந்த வண்ணமாய் இருந்தனர். அவர் கைகளாலும், முகத்தாலும் என்னென்னவோ சைகை செய்தார். வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர் ஏன் இப்படி ஊமையாகி விட்டார்? முனி, கருப்பு ஏதாவது இவரை அடித்திருக்குமோ? என்று கவலைப்பட்டார்கள் சிலர்; இவர் இப்படியே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று உள்ளூர ஆசைப்பட்டவர்களும் உண்டு! வந்தவர்களையெல்லாம் வாய் பேசாது வழியனுப்பி வைத்தார். அவரது பொறுமை எல்லாம் போயிற்று. தனது மவுனத்தைக் குலைக்க இந்த உலகமே தனது எதிராகச் சதி செய்வதாக அவருக்குத் தோன்றியது.
மாலை ஐந்து மணியிருக்கும். அப்பொழுது இடி போல ஒரு செய்தி வந்து அவரைத் தாக்கியது. பள்ளிக்குப் போன அவரது ஒரே பிள்ளை இன்னும் வீடு திரும்பவில்லை. ஐயோ, பையனுக்கு என்ன ஆயிற்று? எங்கே போனானோ? என்று அலறித் துடித்தாள் அவரது மனைவி. அவரால் இப்பொழுது சும்மாயிருக்க முடியவில்லை. அவரை யறியாமல் அவரது வாய் பேசியது. வேலையாட்களைக் கூவி அழைத்தார். நீ அந்தப் பக்கமாகப் போய்ப் பார்; நீ இந்த வழியாகச் சென்று தேடு என்று அவர்களுக்கு ஆணையிட்டார்; அவரும் தேடப் புறப்பட்டார். அந்த நேரத்தில் அவரது மகன் தனது நண்பர்களோடு வந்து சேர்ந்தான். அவர்கள் வகுப்பிற்குச் செல்லாமல் திரைப்படம் பார்த்துவிட்டு இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. மவுனமாக இருப்பது எவ்வளவு சிரமமான செயல் என்பதை அனுபவமாகத் தெரிந்து கொண்டார் அந்த அதிகாரி. மறுநாள் அவர் கோயிலுக்குச் சென்றார். சென்றவுடன் ஆணை பிறப்பித்தார். சும்மாயிருக்கும் சாமியாருக்கு இரண்டு பட்டைச்சோறு என்பதுதான் அந்த ஆணை. மோனம் என்பது அனுபவத்திற்கு அறிகுறி. இன்ப அனுபவம் தலைப்படும்போது மோனம் தலைப்படும். இன்ப அனுபவம் ஞானத்தின் நிறைநிலையில் வரும். இதுபற்றியே மோனம் என்பது ஞான வரம்பு என்றார் அவ்வையார்.
சிவனருளாகக் கருதுவர் :
சீவன் முத்தர்களுக்கு உடம்பு உள்ள அளவும் பிராரத்த வினை இருக்கும். பிராரத்த வினை காரணமாக இன்பத் துன்பங்கள் தோன்றினால் அவைகளை இறைவனது அருளாகவே கருதுவர். அவ்வாறு கருதிய ஒருவரைக் குறிப்பிடுவோம். அவர் ஒரு சிவயோகி. ஒருநாள் அவர் காவிரிக் கரை வழியே செல்லும்போது ஓரிடத்தில் பசுக் கூட்டங்கள் வருந்திப் புலம்புவதையும், அவற்றை மேய்க்கும் இடையன் இறந்து கிடப்பதையும் கண்டார். அப்பசுக்களின் துயரை ஒழிக்கத் திருவுளம் கொண்டார். தம்முடைய உடலை ஓரிடத்தில் காவல் செய்து வைத்துத் தம் உயிரை மூலன் என்ற பெயரை உடைய அந்த இடையனது உடலுட் புகுத்தித் திருமூலராய் எழுந்தார். மாலையில் பசுக்கள் தாமாக ஊரை நோக்கிச் சென்றன. திருமூலரும் சாத்தனூர் என்ற அவ்வூரை யடைந்து, இடையனது மனைவியின் அழைப்பை மறுத்து, அங்கிருந்த பொது மடத்தில் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்தார். பின் அந்நிலையினின்றும் எழுந்து தமது முன்னைய உடலைத் தேடினார். அதனைக் காணவில்லை. பாதுகாப்பில் வைத்த தம் உடம்பு காணாமற் போனதையும், தாம் மூலன் உடம்பிலே இருக்க நேர்ந்ததையும் குறித்து அவர் வருந்தவில்லை. அதனைச் சிவனருளாகவே கருதி ஏற்றார் என்பது நினைக்கத்தக்கது.
மூவகை வினையும் நீங்குதல் :
ஞானிகளாகிய சீவன் முத்தர் வினைப் பயனாகிய இன்பத் துன்பங்களை அவனது அருளாகவே கருதி, இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் பற்றற்ற நிலையில் நுகர்ந்து கழிப்பர். பற்றுச் செய்யாமையால் பிராரத்த வினை அவர்தம் உணர்வைத் தாக்காமல் உடலையே தாக்கி ஒழியும். அஃதாவது, உடம்பில் நோய், புண், முதலியவற்றைத் தோற்றுவித்து ஒழியும். அவர் உடம்பு நாமல்ல என்று தெளிந்தவர் ஆதலால் உடம்பிற்கு வருகின்ற ஊறுபாடு அவர் தம் உணர்வைத் தாக்குவதில்லை. இன்பம் வரும்போது அதனை விரும்பி நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயல்வதில்லை. துன்பம் வரும்போது அதனை விரைவில் போக்க முயல்வதும் இல்லை. அதனால் அவர்களுக்கு ஆகாமிய வினை உண்டாகாது என அறியலாம். சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்னும் மூவகை வினைகள் நாம் அறிந்தவை. அவைகளுள் சஞ்சிதம் முன்னரே ஞானாசிரியர் செய்த நிருவாண தீக்கையால் எரிக்கப்பட்டு ஒழிந்து விட்டது. இப்பிறப்பிற்கு என்று முகந்து கொண்டு வந்த பிராரத்தம் உள்ளது. அதனை அனுபவித்துத் தீர வேண்டும். அவர் அதனை மேற் கூறியவாறு பற்றுதல் இன்றி நுகர்வர். ஆதலால் அஃது அவரது உணர்வைத் தாக்காது உடலளவாய் வந்து நீங்கும். தன்முனைப்பின்றி எல்லாம் அவனருள் என்று அவர் அனுபவித்த லால் ஆகாமியமும் உண்டாகாது. இவ்வாறு மூன்று வகையான வினைகளும் நீங்குவதால் அவர்க்கு இனிப் பிறவியில்லை என்பது சொல்லாமலே விளங்கும். அதனால் இவ்வுடம்பு நீங்கியதும் அவர் அடைவது வீடு பேறேயாகும்.
உயிர்களிடத்தில் கருணை :
ஞானிகள் எல்லோரையும் சமமாகப் பார்ப்பர். மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் செல்வக் கடவுள் தொண்டர்கள் அவர்கள். மூச்சுக் காற்று நான் செல்வரது உடலுக்குள்தான் சென்று வருவேன். ஏழையின் உடலுக்குள் புகமாட்டேன் என்று சொல்லாது. தண்ணீர் நான் பசுவின் தாகத்தை மட்டும் தீர்ப்பேன்; புலியின் தாகத்தை தீர்க்க மாட்டேன் என்று சொல்லாது. முழுநிலவு பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவருக்கும் குளிர்ச்சியை அளிக்கும். இவற்றைப் போல ஞானிகள் எல்லா உயிர்களிடத்தும் வேறுபாடின்றிக் கருணை காட்டுவார்கள். பள்ளங்களைப் பார்த்ததும் அவற்றின் குறையை முற்றிலும் நிறைவு செய்த பின்பே முன்னேறிச் செல்கின்ற வெள்ளத்தைப் போல் அவர்கள் துன்புற்றவர்களின் தளர்ச்சியைப் போக்கிய பின்பே மேலே செல்வார்கள். திருமருகல் என்ற ஊரில் ஒரு வணிகப் பெண் தான் மணக்க விரும்பியவனோடு வந்து தங்கியிருந்தாள். வந்த இடத்தில் பாம்பு தீண்டி அவன் இறந்தான். அப்பெண் ஆதரவற்ற நிலையில் அழுது அரற்றினாள். அவளது அழுகுரல் ஞான சம்பந்தரின் திருச்செவியில் சேர்ந்தது. இது அவள் விதி என்று அவர் சொல்லிச் செல்லவில்லை. அவள் மீது கருணை கொண்டு, அவன் உயிர் பெற்று எழுமாறு செய்தார். இருவரும் மணம் செய்து கொள்ளவும் வழி செய்தார். ஓர் ஊரில் எல்லாருமே சுர நோயால் வாடுவதைக் கண்டு இரங்கி அப்பிணியை அவ்வூரை விட்டே ஓட்டினார். இவ்வாறு பிறர் துன்பந் தீர்க்க முந்துவது ஞானிகளின் இயல்பாகும். எங்கும் நிறைந்திருக்கும் வானம் ஒன்றிலும் பற்றில்லாது இருப்பது போன்று, உலகரோடு ஒட்டி வாழ்ந்தும் உலகில் அவர்கட்கு எவ்வகைப் பற்றும் இல்லாதிருக்கும்.
திருவடி நிழலில் அகலாது நிற்றல் :
எப்பொழுதும் தம்மைச் சிவத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் அவர்கள் அதனின் நீங்கிப் புறம் போதார். புறம் போக நேருமாயின், அப்பொழுது அவர் செய்யும் செயல்கள் திருக்கோயில்களுக்குச் சென்று வணங்குதல், அடியார்களுடன் கூடி இறைவனைப் பற்றிப் பேசி இன்புறுதல் போன்ற வீட்டு நெறிச் செயல்களாகவே யிருக்கும். சுருங்கக் கூறினால், அவர் உலகிற்கு வழிகாட்டியாய் வாழ்வர். உலகில் வாழ்ந்தாலும் இறைவன் திருவடி நிழலில் அகலாது நிற்பர்.
அதிகாரத் தொகுப்பு :
இனி, இவ்வதிகாரத்தின் வழி நின்று சீவன் முத்தராகிய அணைந்தோர் தன்மையினைத் தொகுத்துக் கூறுவோம். சிவப்பேறு பெற்ற சீவன் முத்தர் திருவருளில் அடங்கி நின்று பேரின்பத்தைத் துய்ப்பர். இன்பத்துள் ஆழ்ந்தமையால் அவருக்கு எந்த நினைவும் எழாது. நினைவின் வழிப்பட்டதே சொல். நினைவு எழாதாகவே சொல் எழாமையும் பெறப்படும். எனவே அவர் பேச்சடங்கி மோன நிலை பூண்டிருப்பர் என்பது விளங்கும். எல்லையின்றிப் பெருகும் சிவானந்தத்தைத் துய்த்தவர் ஆதலின் வேறு எந்த இன்பமும் அவருக்கு ஒரு பொருட்டாகத் தோன்றாது. இறைவனைப் போலத் தாமும் ஐந்தொழில் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. காரணக் கடவுளர் பதவிகளைப் பெற வேண்டும் என்றும் கருதார். பொறி வழியாக நுகரும் உலக இன்பங்களில் சிறிதும் இச்சை கொள்ளார்.
எல்லாவற்றையும் அறியும் அறிவாகிய சிவனது அறிவைப் பெற்றவராயினும் அவ்வறிவைக் கொண்டு வேறு பொருள்களை அறியார்; சிவம் ஒன்றையே உணர்ந்து நிற்பார். ஆமை நிலத்தில் இயங்கும் பொழுது தனக்குத் தீங்கு வருகிறது என்று <உணர்ந்தால் அப்பொழுதே தனது தலையையும் நான்கு கால்களையும் தனக்குப் பாதுகாப்பாக உள்ள ஓட்டினுள்ளே அடக்கிக் கொண்டு அசைவற்றுக் கிடக்கும். அதுபோலத் தமது மனம் உலக வாசனை காரணமாக உலக சுகங்களில் செல்வதாக உணர்ந்தால், அக்கணமே அவ்வுணர்வை அடக்கிச் சிவஞானத்துள் ஒடுங்கி உலகை நினையாதிருப்பர். அணைந்தோர் சீவத்தன்மை நீங்கிச் சிவமாம் தன்மை பெற்றவர். சிவனது தன்மை வியாபக நிலை. சிவனை அணைந்தோரும் சிவனைப் போலவே எங்குமாய் நிற்பர். எந்த இடமும் சிவனையின்றி இல்லை. அவ்வாறே சீவன் முத்தரையின்றியும் எந்த இடமும் இல்லை. சிவம் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பதால் சிவஞானிகள் எவ்விடத்திலும் எப்பொருளிலும் சிவத்தையே கண்டு நிற்பர். உலகம் அவர்க்குச் சிவமாய்த் தோன்றும். ஆதலால் எப்பொருளையும் அவர் வெறுத்தல் இல்லை. மாந்தர் தன் முனைப்போடு பொருந்திப் பற்றோடு செய்யும் செயல்களுக்குப் பயன் இன்ப துன்பமாகிய உலக போகம் ஆகும். அணைந்தோர் தன் முனைப்பின்றி அருள் வழியிலே நின்று பற்றின்றிச் செய்யும் செயல்களுக்குப் பயன் பர போகமாகிய வரப்பில் இன்பமே யாகும். அணைந்தோர் உடம்பு முகந்து வந்த வினையை நுகர்ந்து கழிப்பர். அவர் பற்றின்றி நுகர்வதனால் ஆகாமிய வினை தோன்ற வழியில்லை. எப்பொழுதாயினும் பிராரத்த நுகர்ச்சியில் விருப்பு வெறுப்புத் தோன்றி அது காரணமாக ஆகாமியம் தோன்றுமாயின் அது வளராதவாறு திருவருளே அதனைச் சுட்டழிக்கும். இவ்வாறு அவர்க்கு வினை நீங்குதலால் இனிப் பிறப்பு என்பது அவர்க்கு இல்லை. சீவன் முத்தர் இவ்வுடம்பு உள்ள போதே அது நீங்கிய பின் பெறுதற்குரிய பரமுத்தி யின்பத்தைப் பெற்றவராவர். அவர்கள் ஏனைய ஆன்மாக்கள் படும் துயருக்கு மிகவும் இரங்குவர். அவர்கள் மேல் பரிவு கொண்டு நூல் வாயிலாகவும் உபதேச வாயிலாகவும் அவர்களுக்கு உய்யும் நெறியை உணர்த்துவர். இனி, இக்கருத்துக்களை விளக்கமாகக் காண்போம்.
91. பேசா அனுபூதி
ஓங்கு உணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்கத்
தூங்குவர்; மற்று ஏதுண்டு சொல்.
பொருள் : சீவன் முத்தராகிய ஞானிகள் தமது உணர்வில் மேம்பட்டு விளங்குகின்ற சிவனது ஞானமாகிய திருவருளின் உள்ளே அடங்கி நிற்பர். அங்ஙனம் அடங்கி நிற்றலால் விளைகின்ற பேரின்பம் அவர் அறிவினிடத்தே ததும்பி நிறைந்து நிற்கும். அவ்வின்பத்தையே நுகர்ந்து திளைத்து வேறொன்றையும் அறியாதிருப்பர். அந்நிலையில் அவரிடத்தில் சொல் ஏதும் எழாது. பேச்சற்ற மோனநிலை அது.
சொற்பொருள் :
(அணைந்தோர் ஆகிய ஞானிகள்)
ஓங்கு - தமது உணர்வில் மேம்பட்டு விளங்குகின்ற
உணர்வின் - சிவனது ஞானமாகிய திருவருளின்
உள்ளடங்கி - உள்ளே அடங்கி
இன்பு - அதனால் விளைகின்ற பேரின்பம்
உள்ளத்துள் ஒடுங்க - தமது அறிவினிடத்தே ததும்பி நிற்க
தூங்குவர் - அவ்வின்பத்தை நுகர்ந்து திளைத்திருப்பர்; அது தவிர வேறொன்றை அறியார்.
சொல் மற்று ஏது உண்டு - அந்நிலையில் சொல் ஏதும் உண்டாகுமோ?
விளக்கம் :
சிவஞானத்துள் அடங்கி நிற்றல் :
சீவன் முத்தர்க்கு உடம்பு <உள்ள வரையில், முன்னே நீங்கிய மலம் மாயை கன்மங்கள் அவரிடத்து வாசனையாய் நுழைந்து அவர் உணர்வைத் தாக்குதல் கூடும். மும்மலங்களுள் கன்ம மலமே முன்னர்த் தலையெடுக்கும். ஏனெனில் அதுவே உடம்பு இருப்பதற்குக் காரணமாய் உடம்போடு ஒட்டியிருப்பது. இங்குக் கன்மம் என்பது பிராரத்த கன்மமே. அதுவே இன்பதுன்பங்களைப் பயப்பதாய் முன்னர்த் தோன்றி அவரது உணர்வைத் தாக்கும். அவரது உணர்வில் விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறு பிராரத்தத்தால் விருப்பு வெறுப்பு விளையுமாயின், எங்கும் சிவமாகக் காணுகிற அவர்கட்கு அக்காட்சி மறைந்து, மாயா காரியமாகிய உலகம் காட்சிப்படும். அவ்விருப்பு வெறுப்புக் காரணமாக, இன்பப் பொருள் என்றும், துன்பப் பொருள் என்றும், உறவுப் பொருள் என்றும், பகைப் பொருள் என்றும் இவ்வாறாக வேறுபடுத்தி உணரும் உணர்வை மாயாமலம் தோற்றுவிக்கும். அந்நிலையில், எல்லாம் அவனே என்னும் மெய்யுணர்வு மறைந்து, யான் எனது என்னும் தற்போத உணர்வு தலையெடுக்கும். இத்தற்போத உணர்வை ஆணவமலம் தோற்றுவிக்கும். தற்போதத்தால் நல்லதும் தீயதுமாகிய முயற்சி எழும். அம்முயற்சி பிராரத்த வினையை நுகர்தற்குத் துணையாய் நிற்கும். மேலு<ம், அம்முயற்சியில் புதுவினையாகிய ஆகாமியம் தோன்றி அடுத்த பிறப்பிற்கு வித்தாய் விடும்.
இங்ஙனம் சீவன் முத்தர் சிறிது சோர்ந்திருந்த சமயம் பார்த்து மும்மலங்களும் மேற்கூறியவாறு நுழைந்து, அவரது உணர்வைத் தாக்கி அஞ்ஞானத்தை உண்டு பண்ணும்; பரமே பார்த்திருந்த அவரை உலகைப் பார்க்குமாறு செய்யும். சீவன் முத்தர் அவற்றை எங்ஙனம் நீக்கிக் கொள்ள இயலும் என்ற வினா எழுகிறது. அதற்கு விடையாகவே ஓங்குணர்வின் உள்ளடங்கி எனக் கூறியுள்ளார் ஆசிரியர். சீவன் முத்தர் சிவ ஞானமாகிய மெய்ஞ்ஞானத்துள் அழுந்தி அங்கு நிலைத்து நின்று மும்மலங்களையும் நீக்கிக் கொள்வர் என்பது விடையாகும். அவர் சிவஞானத்தின் உள்ளே அடங்கி நிற்றலால், பிராரத்த கன்மம் இன்ப துன்பங்களாய்த் தோன்றும் பொழுது அவைகளில் விருப்பு வெறுப்புக் கொள்ளும்போதே அவை உயிர்க்கு நுகர்ச்சியாகும். அணைந்தோர் விருப்பு வெறுப்பின்றி நிற்பதால் அவ்வின்ப துன்பங்கள் அவர்க்கு நுகர்ச்சி ஆகாது உடலளவாய்க் கழியும். இதுவே கன்மமலத்தை நீக்குதலாகும். பிராரத்தத்தின் விளைவாகிய இன்ப துன்பங்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பவை உலகப் பொருள்கள். அப்பொருள்கள் வழியாகவே இன்ப துன்பங்கள் வந்து சேரும். சிவஞானத்துள் அடங்கி நிற்கும் அவர்க்கு இன்ப துன்பங்கள் நுகர்ச்சியாகாமையால், அவற்றிற்குப் பற்றுக் கோடாய் உள்ள பொருள்கள் அவர் தம் அறிவிற்குப் பொருளாய்த் தோன்ற மாட்டா. அங்ஙனம் அவை தோன்றாது ஒழியச் செய்தலே மாயா மலத்தை நீக்குதலாகும். பிராரத்தத்தின் விளைவாகிய இன்ப துன்பங்களுக்குப் பற்றுக் கோடாய் உள்ள பொருள்கள் தோன்றாது போகவே, அவை குறித்துச் செய்யும் முயற்சிகளில் அவர்களுக்கு யான் எனது என்னும் செருக்கு எழ மாட்டாது. சிவஞானத்துள் அடங்கி நின்று அச்செருக்கை எழாதபடி செய்தலே, ஆணவ மலத்தை நீக்குதலாகும். இங்ஙனம் சீவன் முத்தர் ஓங்குணர்வின் உள்ளடங்கி மும்மலங்களையும் களைவர் என அறியலாம்.
தூங்காமல் தூங்குதல் :
ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடியின் உதவி வேண்டும். கண்ணாடி அணிந்தால் அக் கண்ணிற்குப் பார்வை நிகழும்; கண்ணாடி இல்லாத பொழுது பார்வை நிகழாது. ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட நம்முடைய அறிவு ஒளி குறைந்த கண் போன்றது. நமக்குக் கிடைத்த மனம் முதலிய கருவிகள் கண்ணாடி போன்றவை. கண்ணாடியால் பார்வை நிகழ்வது போலக் கருவிகளின் உதவியால் நாம் அறிய முடிகிறது. நமக்கு நினைப்பு உண்டாகிறது. கண்ணாடி இல்லாத பொழுது பார்வை நிகழாதது போலக் கருவிகள் செயற்படாது ஒடுங்கும் போது நாம் அறிய முடிவதில்லை. நமக்கு மறப்பு உண்டாகிறது. நமது அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டிருப்பதால் கருவிகள் செயற்படும்போது விளங்கியும், செயற்படாதபோது விளங்காம<லு<ம், இவ்வாறு நினைப்பும் மறப்புமாய் நிலைமாறிக் கொண்டேயிருக்கும். இனி, ஆணவ மலம் நீங்கி விட்டால் கருவிகளின் உதவி வேண்டாமற் போகின்றது. ஆணவ மலம் நீங்கிய அறிவு ஒளி குறையாத கண் போன்றது. ஒளி குறையாத கண்ணிற்குக் கண்ணாடி எதற்கு? அதற்குக் கண்ணாடியில்லாமலே எப்பொழுதும் பார்வை நிகழும். அதுபோல ஆணவ மலம் நீங்கப் பெற்ற அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும். அறியாமை யாகாது. அதற்குக் கருவிகளால் ஆவதொன்றில்லை. ஞானிகளின் அறிவு இப்படிப்பட்ட அறிவு; நினைப்பும் மறப்பும் இன்றி எப்பொழுதும் ஒரே நிலையில் நிற்கின்ற அறிவு. அவர்களது அறிவில் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிற்கும். இதனால், ஞானிகள் எப்பொழுதும் சிவத்தை மறவாது உணர்ந்திருப்பர் என்பது விளங்கும். இந்நிலையைத் தூங்காத நிலை எனலாம். இனி, உலகத்தில் உறங்குவார் உலக நினைவை விடுத்து அல்லல் இன்றி இருப்பர். அதுபோல, ஞானிகளும் உலகவாதனை யின்றி ஆனந்தத்தில் தம்மை மறந்திருப்பர். அதனால் இந்நிலையைத் தூங்குகிற நிலை என்றும் சொல்லலாம்.
இவ்வாறு சிவத்தையே உணர்ந்து நிற்றலும், உலக வாதனையின்றி இருத்தலும் ஆகிய இரு நிலைகளும் சீவன் முத்தரிடத்தில் ஒருங்கே நிகழ்தலால் அவர்நிலையைத் தூங்காமல் தூங்குதல் என நூல்கள் நயம்படக் கூறும். இந்த ஞானத் தூக்கத்தை மேலும் சிறிது விளக்கலாம். உலகத்தில் நாம் எதனைத் தூக்கம் என்று சொல்லு<கிறோம்? கருவி கரணங்கள் எல்லாம் ஓடியாடி ஓய்ந்து போய்ச் சற்றே இளைப்பாறும் நிலையையே நாம் தூக்கம் என்கிறோம். இளைப்பு நீங்கினால் அவை மீண்டும் ஓடத் தொடங்கிவிடும். இக்கருவி கரணங்கள் சோர்வடையாமல் வலிமையோடு இருக்கும்போதே அவற்றின் ஓட்டத்தைத் தடுத்து மனம் அடங்கிச் செயலற்றிருப்பதே ஞானத்தூக்கம். நாம் தூங்குகிற தூக்கத்தில் கருவி கரணங்கள் ஓய்ந்து போய் நிற்கும். ஞானிகளது தூக்கத்தில் கருவி கரணங்கள் ஒழிந்து போய் நிற்கும். நம்மைப் பார்த்து ஒருவன் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் சும்மா இருப்போமா? பதிலுக்குத் திட்டுவோம்; பல மடங்கு திட்டுவோம். கை நீட்டி அடிக்கவும் செய்வோம். அவன் நமக்கு அஞ்சியவனாக இருந்தால், நம் கை வலிமையானது என்று தெரிந்தால், அவன் நேரே திட்டமாட்டான். ஒருவேளை நாம் உறங்குகிற சமயம் பார்த்து நம் பக்கத்தில் வந்து நின்று ஆசைதீர நம்மைத் திட்டலாம்! அவனுக்கு அந்தத் துணிவு எப்படி ஏற்பட்டது? அவனது வசவும் திட்டும் நம் காதில் ஏறாது என்பது அவனுக்குத் தெரியும். நாம் எழுந்து சென்று அவனை அடிக்கப் போவதில்லை என்பதும் தெரியும். அதனாலேயே அவனுக்கு அந்தத் துணிவு. அந்த நேரத்தில் நமது கருவி கரணங்கள் உணராமல் இருக்கின்றன. நான் என்ற உணர்வு இல்லாமற் போகிறது.
தூங்கும் போதுதான் இப்படியிருக்கிறோம். விழித்திருக்கும் போது நம்மால் இப்படி இருக்க முடிகிறதா? விழிப்பு நிலையில் நான் என்பது இல்லாமல் இருக்க முடிகிறதா? மனம் முதலியவை ஒழிந்து நிற்க முடிகிறதா? விழித்துக் கொண்டிருக்கும் போதும் இந்நிலை வருமானால், அதுதான் உண்மையான தூக்கம்; தூங்காத தூக்கம். ஆசிரியர் உமாபதிசிவம் இந்நிலையில் நிற்பவரை உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர் என இங்குக் குறிப்பிட்டார். தமது சிவப்பிரகாச நூலிலும். ஓங்குணர் வகத்து அடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்க நேரே தூங்குவர் (செ.93) எனக் குறித்துள்ளமை காணலாம்.
மோன நிலை :
சீவன் முத்தர் சிவானந்தத்தை நுகர்ந்து அந்த நுகர்ச்சியில் தம்மையும் மறந்திருப்பார்கள். இன்பத்துள் ஆழ்ந்திருக்கும் அவருக்கு எந்த நினைவும் எழுவதில்லை. நினைவு எழும்போதே அதன் வழியாகச் சொல் எழுவதாகும். நினைவு அற்ற நிலையில் சொல் எப்படி எழும்? அவர்கள் மோன நிலையில் இருப்பார்கள் என்பதனை ஆசிரியர் இங்கே குறிக்கின்றார். இன்பத்தில் திளைத்திருத்தலைத் தவிர வேறொன்றை அறியாத அவர்க்குச் சொல் ஏதும் உண்டாகுமோ? என்பாராய், மற்று ஏதுண்டு சொல் என்கிறார். மோனம் என்பது அனுபவத்திற்கு அறிகுறி. இன்ப அனுபவம் தலைப்படும் போது மோனம் தலைப்படும்.
கணவன் வெளியூருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனைவி கண் கலங்கி நின்றாள். அவன் புறப்படும்போது ஒரு வாரத்தில் உறுதியாக வந்து விடுவதாக வாக்குறுதியளித்தான். அவர் இல்லாமல் இந்த ஏழு நாட்களை எப்படிக் கழிப்பது என்று கவலைப்பட்டாள் அவள். மறக்காமல் கடிதம் போடுங்கள் என்று சொல்லி விடை கொடுத்தாள். அவன் சென்று இரண்டு நாளாயின; மூன்று நாளாயின. கடிதம் ஒன்றும் வரவில்லை. அவளுக்கு ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாகத் தோன்றியது. ஒரு வாரமாகியும் அவன் ஊர் திரும்பவில்லை. அவளுக்கு அடங்காத கோபம் உண்டாயிற்று. ஆண்களே இப்படித்தான். சொன்னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம் கூடப் போட முடியாமல் அப்படி என்ன வேலை? நான் ஒருத்தி தனியாக இருக்கிறேன் என்ற கவலை துளியாவது அவருக்கு இருந்தால் இப்படிச் செய்வாரா? அவர் வந்தால் அவரைச் சும்மா விடப் போவதில்லை என்று அடுத்த வீட்டுத் தோழியிடம் சினந்து கூறினாள். நீ என்ன செய்து விடுவாய் என்று வேடிக்கையாகக் கேட்டாள் அந்தத் தோழி. என்ன பண்ணுகிறேன் என்பதை நீயே நேராகப் பார்க்கத்தான் போகிறாய் என்றாள் தலைவி. பத்து நாளுக்குப் பிறகு தலைவன் வீடு திரும்பினான் சற்றுத் தொலைவில் அவன் வரும்போதே தலைவியின் அகமும் முகமும் மலர்ந்தன. வெட்கமும் மகிழ்ச்சியும் களிப்பும் அவளைக் கவ்விக் கொண்டன. அவன் மீது கொண்டிருந்த கோபமெல்லாம் போன திசை தெரியவில்லை. இனிய முறுவலால் அவனை வரவேற்றாள். ஏதும் பேசாமல் அவனுக்குத் தேநீர் கொண்டுவர உள்ளே சென்றாள்.
பெரிய அமர்க்களம் நடக்கப் போகிறது என்று எண்ணிய அடுத்த வீட்டுத் தோழிக்குப் பெரிய ஏமாற்றம். இத்தனை நாளும் கணவனை ஏசியும், அவனது குறைகளைப் பேசியும் வந்த இவளுக்கு இப்பொழுது என்ன ஆயிற்று? கடிந்து ஒரு வார்த்தை பேசாது வாய் மூடி மவுனமாக இருக்கிறாளே, இது என்ன விந்தை! இது பற்றித் தலைவியிடமே கேட்டுவிட்டாள். தலைவி பின் வருமாறு கூறினாள். கண்ணுக்கு மையிடுகிற கோல் தந்தத்தினாலோ, தங்கத்தினாலோ, செய்ததாயிருக்கும். தூரத்தில் இருக்கும் பொழுது அது தந்தமா, தங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. மை தீட்டுவதற்கு அதனைக் கண்ணருகில் கொண்டு சென்றால் அந்தக் கோல் தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன்மீது ஆயிரம் குறைகள் தெரிந்தன. அவன் அருகில் வந்துவிட்டால் ஒரு குறையும் புலப்படுவதில்லை. ஆம். அவள் சொன்னது உண்மைதான். தலைவன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிப் போகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை. இந்த உலக அனுபவத்தைக் கொண்டு இறையனுபவத்தை நாம் ஒருவாறு உணரலாம். இறைவனை அணைந்தவர்கள் அத்தலைவியைப் போல் மோன நிலையை அடைந்து விடுவார்கள். மோனம் என்றால் வாய் திறந்து பேசாமை என்று மட்டும் நினைக்கிறோம். அப்படியன்று. உண்மையில் அது, சீவன் சிவத்தில் அழுந்தித் தனது சீவ போதத்தை இழந்து நிற்கும் நிலையைக் குறிப்பதாகும். இப்பேசா அனுபூதி நிலையைப் பெற்றவரே அணைந்தோர்.
நாயோட்டு மந்திரம் :
திருவைந்தெழுத்து இறுதியில் ஓரேழுத்தேயாகி விடுவது சிவத்தை அணைந்தோர் ஆனந்தத்தில் மூழ்கி மோன நிலையைத் தலைப்படுதலைக் குறிப்பதாகும். சிகாரம் ஆகிய இந்த ஓரெழுத்து மந்திரம் நாயோட்டு மந்திரம் என நகை விளையுமாறு மறைத்துக் கூறப்படும். இது நாயை ஓட்டுவது அன்று! நாயின் தன்மையை ஓட்டுவது என்று பொருள்படும். நாயின் தன்மையாவது எப்பொழுதும் குரைப்பது. ஞானநெறியில் நில்லாது பேசும் பேச்செல்லாம் நாயின் குரைப்பைப் போன்றவை. அப்படிப்பட்ட பேச்சாகிய குரைப்பினை ஓட்டுகிற மந்திரம் இது. பேச்சை ஒழித்து மவுனத்தை உண்டாக்குவது என்ற பொருளில் இதனை நாயோட்டு மந்திரம் என்றனர்.