Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவருட்பயன் பகுதி-1 திருவருட்பயன் பகுதி-3
முதல் பக்கம் » திருவருட்பயன்
திருவருட்பயன் பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

நான்காம் அதிகாரம் - அருளது நிலை

உயிரினது அறிவை மறைத்து அறியாமையை விளைவிக்கின்ற அக இருளாகிய ஆணவ மலத்தின் இயல்பை முந்திய அதிகாரத்தில் பார்த்தோம். இந்த இருளாகிய மலத்தைப் போக்க வல்லது எது? அது இறைவனது பேரறிவாகிய அருள் ஒளியே யாகும். அதனைச் சூரிய ஒளியோடு ஒப்பிடலாம். பேரொளியாய் எங்கும் அருக்கனென நிற்கும் அருள் என்று உமாபதி சிவம் கூறுவார். (செய்யுள் 32) சூரிய ஒளி செய்யும் செயல்கள் இரண்டு. ஒன்று, எங்கும் சூழ்ந்துள்ள இருளை நீக்கி உலகப் பொருள்களைக் காட்டுவது. மற்றொன்று, தனக்கு முதலாகிய சூரியனைக் காட்டுவது. சூரிய ஒளியின் உதவியாலேயே உலகப் பொருள்களை அறிந்து அனுபவிக்கின்றனர் மாந்தர். ஆயின் அவர்கள் சூரியவொளியை நினைப்பதில்லை. அதன்மீது கருத்துச் செலுத்துவதில்லை. அவர்கள் உலகப் பொருள்களிலேயே அழுந்தி நிற்பதுதான் அதற்குக் காரணம். இனி, உலகப் பொருள்களை நோக்காமல் தமது பார்வையைச் சூரிய ஒளியின் மீது செலுத்தி அதனைப் பற்றிக் கொண்டு அதன் வழியே மேலே நோக்கினால் அவர்களுக்கு அச்சூரிய ஒளி மேலேயுள்ள சூரியனைக் காட்டும். இறைவனது ஞானமாகிய அருளும் இவ்வாறே இரண்டு வகையில் செயல்படுகிறது. அது பக்குவமில்லாத உயிர்களுக்கு உலகைக் காட்டி உலகையே நோக்கும்படி செய்யும். இனி, உலக ஆசையைத் துறந்து தன்னை நாடுகின்ற பக்குவ ஆன்மாக்களுக்கு அவ்வருள் தன்னைக் காட்டிப் பின் தனக்கு முதலாய் உள்ள சிவத்தையும் காட்டும்.

உயிரில் உள்ள ஆணவம் அகவிருள் என்றால், உயிர்க்கு உயிராய் உள்ள திருவருளை அகவொளி எனலாம். உள்ளொளி என்பார் உமாபதிசிவம் (செய்யுள் 24). பேரறிவே வடிவான திருவருளை உணர்வு என்ற சொல்லாலும் குறிப்பிடுவர் (செய்யுள் 35). அருளைச் சத்தி என்று முன்னே குறிப்பிட்டார் ஆசிரியர். அது பதியாகிய சிவத்தை விட்டு என்றும் பிரியாதது. (செய்யுள் 2) அஃது, எல்லாவுயிர்களோடும் தொடர்புற்று நிற்கிறது; அவ்உயிர்களை மும்மலங்களோடு தொடர்புபடுத்தி உலக வாழ்க்கையில் செலுத்துகிறது. இவ்வாறு உயிர்களுக்குக் கட்டுநிலையை ஏற்படுத்திய அருளே பின் பக்குவமடைந்த உயிர்களைப் பாசமாம் பற்று அறுத்துப் பதியாகிய சிவத்தினிடம் சேர்க்கிறது. இவ்வாறு பதி பசு பாசம் ஆகிய முப்பொருள்களையும் தொடர்புபடுத்தி நிற்பது அருளேயாகும். இதுபற்றியே, இதுவரையில் முப்பொருள்களின் இயல்புகளைத் தனித்தனியே கூறிவந்த ஆசிரியர் அவை அனைத்தையும் தொடர்பு படுத்தி நிற்பதாகிய அருளினது தன்மையை இந்த நான்காவது அதிகாரத்தில் கூறலுறுகிறார் என்று கருதலாம்.

உலகிலேயே மிகவும் சிறந்த பொருள் எது? இதற்கு எல்லோரும் அவரவர் மனநிலைக்கேற்ப விடையளிப்பர். பணத்தினாலே எல்லாம் பெறமுடியும்; எதையும் சாதிக்க முடியும்; ஆகவே செல்வந்தான் சிறந்தது என்போர் பலர். உண்பதற்காகவே பிறந்தோம் என்று கருதுகிற சிலர், அறுசுவை உணவே அவனியில் சிறந்தது என்பர். மனைவி மக்களையே சிறந்த பொருளாக மதித்து வாழ்வோர் உண்டு. இவையெல்லாம் உலகியல் நோக்கில் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், இறையனுபவம் வாய்ந்த பெரியோர் இவற்றை ஒரு பொருளாகக் கொள்ளார். இப்பொருள்கள் மீது மையல் கொண்டு வாழும் மக்களை நோக்கி, வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் பித்தவுலகு என்பார் மணிவாசகர். நம் ஆசிரியராகிய உமாபதி சிவம் அருளே பெறுதற்குரிய தலையாய பொருள் என்றும், அதனைக் காட்டிலும் மேலான பொருள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை என்றும் தெளிவிக்கிறார். உயிர்கள் பிறவிக்கு வரும்போது தாம் விரும்பிய உடம்பைத் தாமே எடுத்துக் கொண்டு வருகின்றவா? அந்த ஆற்றல் உயிர்களுக்கு இருக்குமானால் சீரான, செம்மையான, குறைபாடில்லாத அழகான உடம்பையல்லவா அவை எடுத்துக் கொண்டு வரும். ஆனால், அப்படிப்பட்ட உடம்பு பலருக்கு அமையவில்லையே. சர்க்கரை நோய் முதலிய நோய்களையுடைய உடம்பையல்லவா பெற்றுள்ளார்கள். இதயம் முதலிய உள் உறுப்புக்களில் இயற்கையிலேயே குறைபாடு சிலருக்கு அமைந்து விடுகிறது. சிலருக்கு கண் இருந்தும் காண முடியாத நிலை. வாய் இருந்தும் பேச முடியாத நிலை. இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவரவர்க்கு அமைந்த உடம்பைத் தாமே எடுத்து வரவில்லை என்பது உறுதியாகிறது. உயிர்களின் வினைக்கேற்ப அவற்றிற்கு உடம்பைத் தருவது திருவருளே ஆகும்.

உயிர்களுக்கு வாழ் இடமாக உள்ளதும் திருவருளே. ஆயினும் அவை திருவருளை அறிய மாட்டாது துன்புறுகின்றன. ஆற்றைக் கடக்கின்ற ஒருவனுக்குத் தாகம் ஏற்பட்டால் அந்த ஆற்றுநீரை அள்ளிப் பருகித் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யாமல் வெள்ளத்துள் நாவற்றி நிற்கின்ற அவனது நிலையில் நாம் இருக்கிறோம். திருவருளிடத்தில் நாம் இருந்தும் அதனைக் கருதாமல் இருக்கிறோம். நிறைந்த இன்பத்துள் நின்றும் அதனை நுகரமாட்டாது துயருறுகிறோம். ஆணவ மலம் நமது உணர்வை மறைத்து உயர்ந்ததில் வெறுப்பும், இழிந்ததில் விருப்பம் தோன்றும்படியாகச் செய்கிறது. அதன் காரணமாக உயர்ந்த திருவருள் இன்பத்தை நாடாமல் அற்ப இன்பத்தைத் தரக் கூடிய உலகப் பொருள்களையே நாடி அலைந்து துன்பத்தைத் தேடிக் கொள்கிறோம். இந்நிலைமை, பாற்கடலில் உள்ள மீன்கள் அந்தப் பாலை உண்டு வாழாமல், அங்கே திரியும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்ண அலைவது போன்றதாகும். பாற்குடத்தின் மேலே அமர்ந்துள்ள பூனை அந்தப் பாலை உண்ணக் கருதாமல் பக்கத்தில் சுவரில் ஓடுகிற கரப்பான் என்னும் சிறு பூச்சியை பிடிக்க முயல்வது போன்றதாகும். எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் நிலம் போலத் திருவருளே நமக்கு ஆதாரமாய் நின்று தாங்குகிறது. வழிப்போக்கனுக்குப் பின்வரும் துணைவன் போல நம் உணர்விற்கு உணர்வாய் உடன் நின்று உதவுகிறது. அன்று தொட்டு இன்றுவரை திருவருளோடு கூடியிருந்தும் அதனோடு சிறிதும் பழகாமல், அதனைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்கிறோம். திருவருளைச் சிந்தித்து உணர்ந்தாலன்றி வீடு பெறும் தகுதி நமக்கு ஏது? என்று கூறுகிறார் உமாபதி சிவம். இனி, இக்கருத்துக்களை விரிவாகக் காணலாம்.

31. அருளே தலையாய பொருள்

அருளிற் பெரியது அகிலத்து இல் வேண்டும்
பொருளில் தலை யிலது போல்.

பொருள் : உலகியலில் ஒருவன் ஒரு சமயத்தில் ஒரு பொருளைத் தனக்கு இன்றியமையாததாகக் கருதி விடுவானாயின் அவனுக்கு அந்தச் சமயத்தில் அந்தப் பொருள்தான் மிக உயர்ந்த பொருளாகத் தோன்றும். அதனைக் காட்டிலும் மேலான பொருள் வேறொன்றும் இருக்க முடியாது. அதுபோல ஆன்மீக நெறியிற் செல்லும் ஒருவன் திருவருளையே தனக்கு இன்றியமையாத பொருளாகக் கருதி அதனையே வேண்டி நிற்பான். அவனைப் பொறுத்தவரையில் திருவருளைக் காட்டிலும் மேலான பொருள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை.

சொற்பொருள் :

வேண்டும் பொருளின் - ஒருவனுக்கு ஒரு சமயத்தில் மிக இன்றியமையாததாக வேண்டப்படும் அந்த ஒரு பொருளைவிட
தலைஇலது போல் - தலை சிறந்ததாக வேறு எந்தப் பொருளும் அவனுக்குத் தோன்றாது. அதுபோல
அருளின் பெரியது - ஞானநெறியில் செல்பவனுக்குத் திருவருளை விடச் சிறந்த பொருள்
அகிலத்து இல் - இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை.

விளக்கம் :

உலகியல் உண்மை யொன்றை எடுத்துக் காட்டி அருளியலை விளக்குகிறார் ஆசிரியர். ஒருவன் நீர் வேட்கையோடு வருகிறான்; பருகுவதற்குத் தண்ணீர் கிடைக்குமா என்று அலைந்து பார்க்கிறான். எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. அவனது நாக்கு வறண்டு போய்விட்டது. உதடுகள் காய்ந்து விட்டன. தண்ணீருக்காக அவன் தவிக்கிறான். அந்த நேரத்தில் தண்ணீருக்குப் பதிலாக வகை வகையான உணவுகளை அடுக்கடுக்காக அவன் முன்னே வைத்தாலும் அவற்றை அவன் நாடுவானா? அல்லது, விலையுயர்ந்த பொன்னையும் நவமணிகளையும் அவன் முன்னே குவித்தாலும் அவற்றை மதிப்பானா? இவையெல்லாம் அவனுடைய தாகத்தைத் தீர்க்குமா? அவனுக்கு வேண்டியது தாகத்தைத் தணிக்கின்ற நீர் ஒன்றுதான். அந்த நேரத்தில் நீர்தான் அவனுக்குத் தலையான பொருள். இன்னொரு நிகழ்ச்சிளைக் கூறுவோம். வீட்டில் குழந்தை தரையில் விளையாட்டுப் பொருள்களைப் பரப்பி வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. தாய் கடைவீதிக்குப் போய் வரலாம் என்று புறப்படுகிறாள். குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் செல்கிறாள். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்குத் தாயின் நினைப்பு வந்து விட்டது. அவ்வளவுதான். விளையாட்டுப் பொருள்களை வீசியெறிந்தது. அது வரையில் சிறந்தவையாக விளங்கிய அப்பொருள்கள் இப்பொழுது அக்குழந்தைக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. இந்த நேரத்தில் தாய் தான் அதற்கு வேண்டும். அம்மாவை நினைத்து அழத் தொடங்கிவிட்டது. வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் அழுகையை நிறுத்த முயன்றார்கள். என்னென்ன பொருள்களையோ எடுத்து வந்து காட்டி அதன் கவனத்தை ஈர்க்கப் பார்த்தார்கள். ஆனால், அதன் அழுகை நின்றபாடில்லை. தாயைக் கண்டாலொழிய அதன் அழுகை ஓயாது. அக்குழந்தைக்கு அக்கணத்தில் வேண்டப்படுகிற ஒரே பொருள் தாய்தான். வேறு எந்தப் பொருளையும் அது நாடுவதில்லை. அக்குழந்தையைப் பொறுத்த மட்டில் அவள் தான் தலையாய பொருள். தாகமுற்றவன் தண்ணீரை நாடுதல் போலவும், அழும் குழந்தை தன் தாயை நாடுதல் போலவும் ஆன்மீக நெறியிற் செல்லும் சாதகன் திருவருள் ஒன்றையே வேண்டி நிற்பான்.

திருவருள் நாட்டம் வருதல் என்பது அவ்வளவு எளிதன்று. திருவருளே நமக்குப் புகல் என்ற உறுதியான எண்ணம் நமக்கு இல்லை. அப்படி நூல்கள் எடுத்துச் சொன்னாலும் நாம் நம்புவதாக இல்லை. எண்ணற்ற பிறவிகளை எடுத்து எடுத்து உலக வாழ்வு ஒன்றையே அறிந்த நமக்கு உலகப் பற்றே மீதூர்ந்து நிற்கிறது. அதனால், கண் கண்ட உலக சுகத்தையே பெரிது என்று நம்புகிறோம். காணாத திருவருள் இன்பத்தில் நமக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. பிறப்பினால் உண்டாகும் துன்பத்தையும், வாழ்க்கையின் முடிவில் இறப்பினால் உண்டாகும் துன்பத்தையும் நன்கு உணர்ந்து அஞ்சுபவர்க்கே உலகியலில் உவர்ப்பு ஏற்படும். பொறிகளால் நுகரும் இன்பங்களில் வெறுப்பு உண்டாகும். நிலையான புகலிடம் எது என்று தேடும் முயற்சி உண்டாகும். ஒருவன் தலையில் தீப்பற்றிக் கொண்டால் அவன் ஒரு கணமேனும் வாளா இருப்பானா? எங்கே தண்ணீர் என்று தேடி அங்குமிங்கும் ஓடி அலைவான். தண்ணீருக்காக அவன் தவிப்பது போலத் தம் நிலையை உள்ளபடி உணர்ந்தவரே திருவருளுக்காக ஏங்குவர். இப்படி ஆன்மீகப் பாதையில் செல்பவரை நோக்கியே அருளிற் பெரியது அகிலத்து இல் என்றார் ஆசிரியர்.

32. அருள் பேரொளியாய் நிற்றல்

பெருக்க நுகரவினை பேரொளியாய் எங்கும்
அருக்கண் எனநிற்கும் அருள்.

பொருள் : உலக மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டவும், பின் நுகரவும் துணை புரிந்து நிற்கும் சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி நிற்றல் போல, இறைவனது திருவருட் சத்தி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து புண்ணிய பாவங்களை ஈட்டவும் அவற்றின் பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகரவும் துணை செய்து பேரறிவாய் எங்கும் நிறைந்து நிற்கும்.

சொற்பொருள் :

அருக்கன் என - உலகர் பல தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் ஈட்டுதற்கும், அதனை நுகர்வதற்கும் துணைபுரியும் வகையில் சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி நிற்றல் போல
அருள் - இறைவனது திருவருள்
வினைபெருக்க - உயிர்கள் நல்வினை தீவினைகளைப் புரிந்து புண்ணிய பாவங்களை ஈட்டுவதற்கும்
நுகர - அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களை நுகர்வதற்கும் (துணைசெய்து)
பேரொளியாய் எங்கும் நிற்கும் - பேரறிவாய் எங்கும் நிறைந்து நிற்கும்.

விளக்கம் :

திரோதான சத்தி :

இறைவனது சத்தி பற்றி 2-ஆம் செய்யுளின் உரையில் கூறியிருப்பதை இங்கே நினைவு கூர்தல் வேண்டும். அச்சத்தி ஆணவ மலத்திற் கட்டுண்ட உயிர்களிடத்து மறைந்து நின்று அம்மலத்தின் ஆற்றலைச் செயற்படுத்தி உயிர்களின் அறிவை மறைப்பிக்கும். ஆணவ மலம் சடம் ஆதலின் அது தானே தொழிற்படாது. சத்தியே அதனைத் தொழிற்படுத்துகிறது. அங்ஙனம் சத்தியினால் செயற்பட்டு ஆணவமலம் உயிர்களிடத்தே தனது செயலைச் செய்கிறது. ஆணவத்தின் செயலாவது, உயிரறிவைத் திரிவுபடுத்தி விபரீத வுணர்வாகிய மயக்க வுணர்வை விளைவிப்பது. அம் மயக்க வுணர்வினாலேயே உயிர்கள் இழிந்த உலக போகத்தை உயர்வாக மதித்து அவற்றைப் பெறுவதற்காக நல்வினை தீவினைகளில் ஈடுபடுகின்றன. அவ்வினைகளால் மேலும் மேலும் பிறவியிற்பட்டுத் துன்புறுகின்றன. இறைவனது சத்தி ஆணவமலத்தை ஏன் செயற்படுத்தவேண்டும்? ஆணவம் செயற்படுவதனால் அல்லவா உயிர்களுக்கு வினை உண்டாகிறது. வினையின் காரணமாகப் பிறப்பு உண்டாகிறது. பிறப்பினால் துன்பம் உண்டாகிறது என்று கேட்கலாம். இறைவனது சத்தி ஆணவ மலத்தைச் செயற்படுத்துவது உயிர்களின் நன்மைக்காகத்தான். ஆணவத்தைச் செயற்படுத்துவது உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவதாயிருக்க, அஃது உயிருக்கு நன்மையைத் தருவது எங்ஙனம்? என்று ஐயுறலாம். இதற்கு விடை கூறுவோம். சடப்பொருள் செயற்படச் செயற்பட அதன் சத்தி மெலிவு அடைந்து தேயும். இதற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டினைத் தருவோம். நமது உடம்பிலுள்ள நரம்புகள் இளமையில் வலிமையோடு விளங்குகின்றன. இந்த நரம்புகள் இதே சத்தியோடு என்றும் இருப்பதில்லை. உடம்பின் செயற்பாட்டினால் நாளடைவில் நரம்புகளின் சத்தி வலிகுன்றிப் போவதைக் காணலாம். இவ்வாறு வலிமடங்கிப் போவது சட சத்திக்கு உரிய தன்மையாகும்.

ஆணவ மலமும் சடப்பொருள். அது செயற்படச் செயற்பட உயிரைப் பிணித்துள்ள அதன் சத்தி மெலிவடையும். உயிரைப் பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தியை மெலிவித்தற் பொருட்டே இறைவனது சத்தி அதனைச் செயற்படுத்துகிறது. ஆணவமலம் மெலிந்து தேய்வதுதானே உயிருக்குப் பெரியநன்மை. நோயாளி ஒருவனுக்கு மருந்து கொடுத்து அனுப்புகிறார் மருத்துவர். அந்த மருந்து வாயிற் பட்டாலே கசக்கிறது. இந்தக் கசப்பான மருந்தைப் போய் எனக்குத் தருகிறாரே. இவர் என்ன வைத்தியர்? என்று அந்த நோயாளி நினைக்க மாட்டான். தனது நன்மை கருதியே அம் மருந்தைத் தந்துள்ளார் என்றே அவன் மதித்துப் போற்றுவான். அந்த நோயாளியின் நிலையில் உயிர்களாகிய நாம் இருக்கிறோம். ஆணவ மலந்தான் நம்மிடமுள்ள நோய். வினையும், வினையினால் வரும் துன்பங்களும் அந்நோயைத் தீர்க்கக் கூடிய கசப்பான மருந்துகள். நோய் நீங்க வேண்டுமானால், அவற்றை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இவ்வாறு கட்டு நிலையில் ஆணவ மலத்தைச் செயற்படுத்தி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து அவற்றின் பயன்களை நுகர்ந்து வருமாறு செய்கின்ற இறைவனது சத்தி திரோதான சத்தி (மறைப்புச் சத்தி) என்று சொல்லப்பெறும். இச் செய்யுளில் அருள் என்று குறிக்கப்படுவது இத் திரோதான சத்தியேயாகும்.

சத்தியும் சூரியவொளியும் :

இச்செய்யுளில் இறைவனது சத்தி சூரியவொளி போன்றது என்று கூறப்பட்டுள்ளது. சூரியவொளி உலக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து பொருள் ஈட்டி அவற்றை நுகரத் துணை செய்யும். இறைவனது சத்தியாகிய பேரொளி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து இன்ப துன்பங்களாகிய பயன்களை நுகரத் துணை செய்யும். இஃது ஒப்புமை. இனி, வேற்றுமையை நோக்குவோம். சூரியவொளி சட சத்தியாகும். அஃதாவது அறிவற்ற சத்தியாய் இருப்பது. உலக மக்களுக்கு உதவ வேண்டும் என்று அறிந்து அது செயற்படுவதில்லை. இறைவனது சத்தி சிற் சத்தியாகும். அஃதாவது அறிவாகிய சத்தியாய் இருப்பது. அஃது ஒவ்வொரு உயிரின் நிலையையும் அறிந்து அந்தந்த உயிரை அதன் அதன் நிலைக்கேற்பச் செயற்படுத்தி வருவது. மேலும், சூரியவொளி உலகின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஒளிரும். மறுபக்கம் இருளாக இருக்கும். அது போலன்றி இறைவனது சத்தி அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் நிற்பதாகும். இவை வேற்றுமை.

33. அருளே உயிரையும் உடம்பையும் கூட்டுவித்தல்

ஊன் அறியாது என்றும்; உயிரறியாது ஒன்றும்; இவை
தான் அறியாது ஆரறிவார் தாம்.

பொருள் : உடம்பு சடம். அதற்கு எக்காலத்திலும் அறிவு இல்லை. ஆகவே அது தனக்குரிய உயிரை அறிந்து சென்று சேர மாட்டாது. உயிரும் இருள் மலத்தால் மூடப் பெற்று அறிவிழந்து நிற்கிறது. ஆகவே அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து எடுத்துக் கொள்ளாது. அப்படியானால் இந்த உயிர் இன்ன உடம்பைப் பெறுதற்குரியது என்று அறிந்து கூட்டுவிப்பது எது? இவ்விரண்டையும் கூட்டிச் செயற்படுத்துவது திருவருளே யாகும். திருவருள் கூட்டுவிக்காமல் வேறு யார் அறிந்து கூட்டுவிக்க முடியும்?

சொற்பொருள் :

ஊன் - உடம்பு
என்றும் அறியாது - எக்காலத்திலும் அறிவுடையதாவதில்லை. (ஆகவே, அது தனக்குரிய உயிரை அறிந்து தேடிச் சென்று அடையாது.)
உயிர் ஒன்றும் அறியாது - உயிரும் ஆணவ மலத்தால் மூடப்பெற்று ஒன்றையும் அறிய மாட்டாது நிற்கிறது. (ஆகவே, அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து எடுத்துக் கொள்ளாது.)
(இந்நிலையில்)
இவை - உடம்பும், உயிரும் ஆகிய இவ்விரண்டையும்
தான்அறியாது - திருவருள் அறிந்து கூட்டுவிக்காமல்
ஆர்அறிவார் - வேறு யார் அறிந்து கூட்டுவிப்பார்?

விளக்கம் :

இச்செய்யுளில், பாரிசேடம் (ஒழிபு) என்ற முறையால் திருவருள் உண்மையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். பாரிசேடமாவது, மூன்று பொருள்கள் உள்ள இடத்தில் இரண்டினை விலக்கி எஞ்சியுள்ளதைத் துணிவது. முதலில் ஓர் எடுத்துக்காட்டினால் இதனை விளங்கிக் கொள்வோம். கணவன், மனைவி, குழந்தை என்போர் அடங்கிய சிறிய குடும்பம் அது. அன்று விடுமுறை. கணவன் வீட்டில் இருந்து குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். மனைவி கடைவீதிக்குச் சென்றிருக்கிறாள். அந்த நேரம் பார்த்து யாரோ ஒருவர் தேடி வருகிறார். கணவன் குழந்தையை நடுக் கூடத்தில் விட்டுவிட்டு வந்து, வந்தவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு அவர் போன பிற்பாடு வீட்டிற்குள்ளே வருகிறான். விட்ட இடத்தில் குழந்தையைக் காணவில்லை. அடுத்த அறையை எட்டிப் பார்க்கிறான். அங்கே தொட்டிலில் அது கண் வளர்கிறது. குழந்தையும் தொட்டிலும் சேர்ந்தது எப்படி? தொட்டில் அறிவற்ற சடம். அது சென்று குழந்தையை எடுத்துக் கொள்ளாது. குழந்தை அறிவுடையதாயினும் அது தானே சென்று தொட்டிலைச் சேர்வதற்கேற்ற வலிமை இல்லாதது. அப்படியானால் குழந்தையையும் தொட்டிலையும் கூட்டுவிக்க வீட்டில் மூன்றாமவர் இருக்கிறார் என்பதையும், அவர் கடைக்குச் சென்று திரும்பிய தன் மனைவியே என்பதையும் அவன் தெரிந்து கொள்கிறான். இவ்வாறு உண்மையைத் துணிவதே பாரிசேடமாகும்.

இனி, இச்செய்யுளின் பொருளுக்கு வருவோம். உடம்பும் உயிரும் இணைந்தது எப்படி? உடம்பு சடமாதலின் அது தனக்குரிய உயிரை அறிந்து சென்று அடையாது. உயிர் அறிவுடையதாயினும் ஆணவ மலத்தால் அறிவிழந்திருப்பதனால் அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து சென்று அடையாது. அப்படியானால் உடம்பையும் உயிரையும் கூட்டுவிப்பதாகிய மூன்றாவது பொருள் இருக்கிறது என்பது தெளிவாகும். அதுவே திருவருள். இவ்வாறு பாரிசேட முறையால் திருவருள் உண்மையை உணர்த்துகிறார் ஆசிரியர். உடம்பை எடுப்பதும், உடம்பில் வாழ்வதும், உடம்பிலிருந்து போவதும் நம்முடைய கையில் இல்லை. திருவருளே நம் வினைக்கு ஏற்ப உடம்பைத் தருகிறது. ஆணவ மலமும் அதனை ஒட்டியதாகிய கன்ம மலமும் உள்ள வரையில் வேறுவேறு உடம்புகளிற் புகவேண்டிய நிலையே இருக்கும். நமக்கு வருகிற சில துன்பங்களை நம்மால் போக்கிக் கொள்ள முடியும். பசியினால் உண்டாகும் துன்பம், உடல்நலக் குறைவினால் வரும் துன்பம் முதலியவற்றை ஓரளவு நம்முடைய முயற்சியினால் நீக்கிக் கொள்கிறோம். ஆனால், உடம்பெடுத்து வருவதும் போவதுமாகிய பிறப்பு இறப்புத் துன்பங்களை நம்மால் மாற்றுவதற்கு இயலாது. அதற்குத் திருவருளின் துணை வேண்டும்.

34. உயிர்கள் மயக்கவுணர்வால் திருவருளை அறியாமை

பால்ஆழி மீன் ஆளும் பான்மைத்து அருள் உயிர்கள்
மால் ஆழி ஆழும் மறித்து.

பொருள் : அருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் அவ் வருளைப் பொருந்தி நின்று பேரின்பத்தை நுகர அறியாமல், மாயையின் காரியமாகிய உலகப் பொருள்களையே நுகர விரும்பி மயக்கமாகிய கடலில் ஆழ்ந்து போய் உள்ளன. இது, பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை உண்ணும் பொருள் என்று அறியாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் நிலையைப் போன்றது.

சொற்பொருள் :

அருள்உயிர்கள் - அருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் (அவ்வருளை அறிந்து அனுபவியாமல்)
மால் ஆழி - (மாயை காரியமாகிய இழிந்த உலகப் பொருள்களையே விரும்பி அனுபவித்து) மயக்கமாகிய கடலில்
மறித்து - மீண்டும் மீண்டும்
ஆழும் - ஆழ்ந்து போய் உள்ளன. (இஃது எது போ<லும் என்றால்)
பால் ஆழி மீன் - பாற்கடலில் உள்ள மீன்கள்
ஆளும் பான்மைத்து - அப்பாலை நுகர அறியாமல், அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் தன்மை போன்றது.

விளக்கம் :

மாயை தரும் மயக்கம் :

மாயை உலகமாக விரிந்து நின்று, உயிர்களைக் கவர்ந்து வசப்படுத்துகிறது. மாயையின் கவர்ச்சித் தன்மையை நோக்கி அதனை மோகினி என அழைப்பர். நாடக மேடையில் கண்ணைக் கவரும் ஆடை அணிகளோடு ஓர் அழகு மங்கை தோன்றி ஆடுகிறாள். அவளது அழகும் ஆடலும் பார்ப்பவரைக் கவர்ந்து அவரது அறிவை வேறெங்கும் செல்லாதவாறு தடுத்துத் தம் வசப்படுத்தி விடுகின்றன. அவர்கள் தம்மை மறந்து அக்காட்சியில் ஈடுபட்டு நிற்கின்றனர். அந்நடன மங்கையைப் போல, மாயை தனது காரியமாகிய உலகப் பொருள்களால் மாந்தரின் அறிவை மயக்கி நிற்கிறது.

பொருளும் அருளும் :

மாந்தர் உலக வாழ்வில் மயங்கி, இறைவனது அருளைப் பெறவேண்டும் என்ற தெளிவு இல்லாமல், உலகப் பொருள்கள் மீது மேலு<ம் மே<லும் ஆசையைப் பெருக்கிக் கொள்கிறார்கள். நெடுகிலும் வாங்கிப் போட்ட நிலங்கள், வீடுகள், கணக்கு இல்லாத பணம் ஆகிய இவற்றை உடைய வாழ்க்கையைத்தான் சிறந்த வாழ்க்கை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். இவ்வாறு தேடிய பொருள்கள் அமைதியைத் தருவதில்லை என்பதுதான் அந்த உண்மை. கணக்கில் வாராத பணத்தை எப்படி மறைத்து வைத்துக் காப்பது என்ற கவலை பலருக்கு. போற்றிப் பாதுகாக்கும் பொருள் நம்மை விட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தினால் மன அமைதி போய் விடுகிறது. பொருள் இருந்தால் எல்லாவிதமான இன்பங்களையும் எய்தலாம் என்று எண்ணத் தோன்றும். மயக்கத்தினால் அவ்வாறு நினைத்தே பொருள்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், அந்தப் பொருள்கள் நிலையானவை அல்ல. ஆதலால் அவற்றால் வரும் இன்பமும் எந்தச் சமயத்திலும் போய்விடலாம். நாம் பெறுகிற இன்பம் நிலையானதாக இருக்க வேண்டுமானால், என்றைக்கும் நிலையான பொருளோடு தொடர்பு இருக்க வேண்டும். எல்லா இன்பத்திற்கும் காரணமானதும் என்றும் நிலையானதுமான ஒன்றைப் பெற நாம் முயல வேண்டும். இறைவன் திருவருள்தான் அது. அதை மறந்து விட்டு, நிலையில்லாத பொருளுக்காக அலைகிறோம்.

திருவருள் இன்பத்தை நம்பாத நிலை :

எத்தனையோ காலமாக, எத்தனையோ பெருமக்கள் திருவருளின்பம் தான் நிலையானது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மொழிகளில் நமக்கு நம்பிக்கை வரவில்லை. யார் யாரோ சொல்வதையெல்லாம் நம்பி விடுகிறோம். வானிலை அறிவிப்பாளர் அடுத்த 24 மணி நேரத்தில் சிற்சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று அறிவித்தால் அதை அப்படியே நம்பி விடுகிறோம். தேர்தலில் நிற்போர் அள்ளி வீசும் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து விடுகிறோம். ஆனால், பல பெரியவர்கள் திருவருள் இன்பத்தை அனுபவமாக உணர்ந்து சொல்லியும் நாம் நம்புவதாக இல்லை. இந்த உலகம் ஐம்புல நுகர்ச்சிக்கு ஏற்ற பொருள்களைக் கொண்டிருக்கிறது. அவற்றைக் கண் முன்னாலே பார்க்கிறோம். கண்ணுக்குத் தெரியும் அப்பொருள்களிடத்திலே ஆசையும் நம்பிக்கையும் உண்டாகிறது. ஆனால், திருவருள் அனுபவம் அத்தகையதன்று. அது நமது புலன்களுக்கு எட்டாதது. அதனாலேயே அதனிடத்தில் நம்பிக்கை உண்டாகவில்லை.

மாந்தர் நிலைக்கு உவமை :

மாந்தர் உயர்ந்ததாகிய திருவருள் இன்பத்தை அறியாமல், இழிந்தனவாகிய உலக போகங்களில் விருப்பம் கொண்டு வாழ்கின்றனர். இன்பத்தை அடையப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டு துன்பத்தை அடைகின்றனர். இந்நிலைமையை விளக்கிக் காட்டவே பாற்கடலில் உள்ள மீன்கள் அந்தப் பாலை உண்டு வாழாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ண அலைவதை உவமை காட்டுகிறார் ஆசிரியர்.

குறிப்பு :

பாற்கடலில் உள்ள மீன் உணவுக்காக அங்குள்ள சிற்றுயிர்களைத் தேடி அலையும் என்ற கருத்துச் செய்யுளில் வெளிப்படையாகச் சொல்லப் பெறவில்லை. பொருள் பொருத்தம் கருதி அக்கருத்து வருவித்து உரைக்கப் பட்டதாகும்.

35. பின்னே வரும் துணை

அணுகு துணை யறியா ஆற்றோனில், ஐந்தில்
உணர்வை உணரா உயிர்.

பொருள் : தனக்குப் பின்னே துணையாக வருகின்றவனை அறியாது தனி வழியில் அச்சத்துடன் நடந்து செல்லு<ம் வழிப்போக்கனைப் போல உயிர்கள் தமக்குத் தோன்றாத் துணையாய் பின்நின்று உதவும் பேரறிவாகிய திருவருளை உணராது துன்புறும். மற்றுமோர் உவமை கூறலாம். உயிர் உடன் நின்று செலுத்தவே ஐம்பொறிகள் செயற்படுகின்றன. ஆனால், அவ்வாறு தம்மைச் செலுத்தி நிற்கும் உயிரை அவை அறிவதில்லை. அந்த ஐம்பொறிகளைப் போல உயிர்கள் தமது அறிவிற்குத் துணையாய் உள்ள திருவருளை உணராது நிற்கும்.

சொற்பொருள் :

அணுகு துணை - தனக்குப் பின்னே பாதுகாவலாக வருகின்ற துணைவனை
அறியா - அறியாமல் தனிவழியில் அஞ்சி நடந்து செல்லுகின்ற
ஆற்றோனில் - வழிப்போக்கனைப் போலவும்
ஐந்தில் - (தம்மை உள்நின்று செலுத்தும் <<உயிரை அறிய மாட்டாத) ஐம்பொறிகளைப் போலவும்
உயிர் - உயிர்கள்
உணர்வை - பேரறிவாகிய திருவருளை
உணரா - உணராது நிற்கும்.

விளக்கம் :

துணைவனை அறியா வழிப்போக்கன் :

நாமெல்லாம் பிறவி என்ற நீண்ட வழியில் சென்றுகொண்டு இருக்கிறோம். ஒருநாள் இருநாளில் சென்றுவிடக் கூடிய தொலைவாக இருந்தாலே துணையோடல்லது நெடுவழி போகேல் என்பார்கள். அப்படியிருக்க, நாம் போகின்ற தொலையா வழிக்குத் துணை வேண்டாமா? உலக வாழ்வில் நமக்குத் துணையாக, நம்முடைய செயலுக்கு உதவி செய்பவராகப் பலர் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் யாரொருவரை நாம் துணையாக எண்ணியிருக்கிறோமோ அவருக்கு வலிமை குறையும்போது அவரால் ஒரு பயனும் பெற முடியாமல் போய் விடுகிறதே. மேலும், ஓரிடத்தில் துணையாக நிற்பவர் மற்றோரிடத்தில் துணையாக நிற்க இயலாது. ஒரு காலத்தில் துணையாக இருப்பவர் மற்றொரு காலத்தில் துணையாக இருக்க இயலாது. காட்டாக, வகுப்பறையில் ஆசிரியர் துணையாக நிற்பார். அவரே வயலில் நாற்று நடுகிற இடத்தில் துணையாக வரமுடியுமா? அந்த இடத்தில் அவரால் யாதொரு உதவியும் செய்ய இயலாது. அந்தத் தொழிலில் பழக்கமுடைய வேறு சிலர்தான் அந்த இடத்தில் உதவ முடியும். நெருக்கடி மிகுந்த சாலையில் அதனைக் கடப்பதற்குக் காவல்துறையைச் சேர்ந்தவர் துணையாக நிற்கிறார். அவரே ஆற்றைக் கடப்பதற்கும் துணை செய்யவேண்டும் என்றால் அது முடியுமா? அங்கு அவர் துணை பயன்படாது. ஆற்றைக் கடப்பதற்குப் படகு செலுத்துபவரின் துணையே வேண்டும். இப்படி ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றபடி துணைகள் அமைகின்றன.

எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எந்த நிலையிலும் நமக்குத் துணையாக வரக் கூடியவர் யாரேனும் உண்டா? உலக மாந்தர்க்கு அத் திறன் இல்லை. திருவருள் ஒன்றுதான் அப்படிப்பட்ட பெரிய துணையாக விளங்குவது. திருவருள் உயிரோடு ஒட்டியதாய் எப்போதும் பிரிப்பின்றி நிற்பது; உயிர் செல்லும் இடங்களில் எல்லாம் உடன் வருவது; அது நம்மை எப்போதும் பற்றிக் கொண்டிருக்கிறது. உலகத்தில் வேறு யாரும் துணையில்லை; நீ தான் துணை என்று நாம்தான் அதனை இறுகப் பற்றிக் கொள்ளாமல் இருக்கிறோம். அதன் இருப்பையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். உயிர்களாகிய நாம் திருவருளை உணராதிருப்பதற்கு இரண்டு உவமைகள் கூறியுள்ளார் ஆசிரியர். அணுகு துணையறியா ஆற்றோன் என்பது முதல் உவமை. ஆறு - வழி; ஆற்றோன் என்பதற்கு வழிப்போக்கன் என்பது பொருள். தனக்குக் காவலாகத் தன்பின்னே வருகின்ற துணைவனை அறியாது இருட்டு வழியில் நடுக்கத்துடன் பயணம் செய்யும் வழிப்போக்கனைப் போல உயிர்களாகிய நாம் இருக்கிறோம். பின்னே தொடர்ந்து வருகின்ற துணைவன்தான் திருவருள். வழிப்போக்கன் திரும்பிப் பார்த்தால் பின்னே வரும் துணைவனைத் தெரிந்து கொள்வான். அச்சமும் கவலையும் நீங்குவான். அதுபோல, உயிர்களாகிய நாம் வெளியுலகிற் செல்லும் நமது நாட்டத்தைத் தடுத்து உள்முகமாகத் திரும்பி நோக்கினால் திருவருளை உணர்ந்து கொள்ளலாம்; கவலையும் துன்பமும் நீங்கலாம்.

<உயிரை அறியாத ஐம்பொறிகள் :

மாணவருக்கு முதல் உவமை பற்றிப் பின்வருமாறு ஐயம் எழலாம். வழிப்போக்கனுக்குப் பின்னே வரும் துணைவன் அவனிலிருந்து இடத்தால் விலகி நிற்கின்றான். அதனாலேயே வழிப்போக்கன் அவனைத் தெரிந்து கொள்ள இயலாமற் போகிறது. அது போலத் திருவருள் உயிரிலிருந்து விலகி நிற்கவில்லையே. உயிரோடு ஒன்றுபட்டு அல்லவா உள்ளது. அப்படியிருந்தும் அதனை உயிர் உணர்ந்து கொள்ளாதது ஏன் என்பதே அவ் ஐயம். அந்த ஐயத்தை நீக்குதற்கு ஐம்பொறிகளை உவமை கூறுகின்றார் ஆசிரியர். கண் முதலிய பொறிகள் உருவம் முதலியவற்றைத் தாமே அறிவதில்லை. உயிர் உடனிருந்து செலு<த்தவே அவை அறிகின்றன. ஆயினும் அவை உயிர் தம்மோடு உடன் நிற்பதையோ, உயிர் தம்மைச் செலுத்துகிறது என்பதையோ அறிவதில்லை. அந்த ஐம்பொறிகளின் நிலையில் உயிர் உள்ளது. தம்மோடு ஒன்றுபட்டுள்ள உயிரை அறிய மாட்டாத அந்த ஐம்பொறிகளைப் போல, உயிரும் தம்மோடு ஒன்றுபட்டுள்ள திருவருளை அறியாது; திருவருள்தான் தன்னை இயக்கி வருகிறது என்பதையும் அறியாது.

ஐம்பொறிகள் சடம். ஆகையால் அவை தம்மோடு ஒன்றுபட்டுள்ள உயிரை அறியாததில் வியப்பேதும் இல்லை. ஆனால், உயிரோ அறியும் தன்மையுடைய சித்து. அது சித்தாய் இருந்தும் தன்னோடு ஒன்றுபட்டுள்ள திருவருளை அறியாதிருப்பது ஏன்? எனக் கேட்கலாம். சித்தாகிய உயிர் ஆணவமலத்தின் வயப்பட்டிருக்கிறது. ஆணவ மலம் உயிரைப் புற உணர்வு உடையதாகச் செய்கிறது. அஃதாவது, புறவுலகையே நோக்குமாறு செய்து உலகப் பொருள்கள் மீது ஆசையை உண்டாக்குகிறது. அதே நேரத்தில் உயிர் உள்முகமாக நோக்கித் தன்னை உணர விடாதபடியும் செய்கிறது. இவ்வாறு உயிர் ஆணவ மலத்தால் புறவுணர்வு மாத்திரம் உடையதாய், அகவுணர்வை இழந்து நிற்கிறது. எனவே உயிர் சித்தாய் இருந்தும் அக வுணர்வு இன்றி நிற்பதனால், தன்னோடு ஒன்றாய் உள்ள திருவருளை அறிய முடியாது போகிறது. இவ்வகையில், திருவருளை உணரமாட்டாத உயிர், தன்னைச் செலுத்துகிற உயிரை அறிய மாட்டாத ஐம்பொறிகளைப் போன்றதாகிறது.

36. திருவருளும் நிலமும்

தரையை அறியாது தாமே திரிவார்;
புரையை உணரா புவி.

பொருள் : நிலமே எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருந்து அனைத்தையும் தாங்கி நிற்கிறது. ஆயினும் மாந்தர் தம்மைத் தாங்கி நிற்பது நிலம் என்பதனைச் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நிலத்தின் உதவியை அறவே மறந்து தாமே தமக்கு ஆதாரம் என்று எண்ணித் திரிவர். அதுபோலத் திருவருள்தான் தம்மைத் தாங்கி நின்று நடத்துகிறது என்பதனைச் சிறிதும் உணராமல் உயிர்கள் இவ்வுலகில் வாழ்கின்றன.

சொற்பொருள் :

தரையை அறியாது - மாந்தர் நிலத்தின்மேல் வாழ்ந்தும், நிலம்தான் தம்மைத் தாங்கி நிற்கிறது என்பதை நினையாமல்
தாமே திரிவார் - தாமே தமக்கு ஆதாரம் என்று எண்ணித் திரிவர். (அதுபோல)
புவி - உயிர்கள்
புரையை உணரா - திருவருளால் எல்லாவற்றையும் பெற்று நின்றும், அவற்றைத் தந்து தம்மை வழிநடத்துவது திருவருள் என்பதைச் சிறிதும் உணர்வதில்லை.

விளக்கம் :

திருவருளே ஆதாரம் :

இறைவனது திருவருள் அவனது திருவடியாகச் சொல்லப் பெறும். அளவிடற்கரிய இறைவனது பெருமையைக் கூற வந்த மணிவாசகர், அவனது திருவடி கீழுலகம் ஏழினுக்கும் கீழாக உள்ளது என்று கூறுகிறார். பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் (திருவெம்பாவை 10) இதன் கருத்து இறைவனது திருவடியே எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதாகும். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்தாலன்றித் தாங்குவது என்பது அமையாது. அப்படிப்பட்ட ஆதாரப் பொருள் திருவருள். திருவருளே ஆதாரம் என்பதை எப்படி விளங்கிக் கொள்வது? எல்லோருக்கும் தெரிந்த ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அவ்வுண்மையை விளங்க வைக்கிறார் ஆசிரியர். நிலம்தான் நம்மையெல்லாம் தாங்கி நிற்கிறது. நிலமாகிய ஆதாரம் இல்லையென்றால் நம்மால் நிற்க முடியுமா? ஓட முடியுமா? நிமிர்ந்து கைவீசி நடக்கத்தான் முடியுமா? அந்த நிலத்தைப் போல இருப்பது திருவருள். நமது வாழ்வுக்கு முதலாக இருந்து தாங்கி நடத்துவது திருவருள்.

அன்றாட வாழ்க்கையில் உணரலாம் :

இத்தகைய திருவருளை எல்லோரும் அவரவருடைய வாழ்க்கையில் நன்றாக உணரலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலேயும் உணரலாம். அதற்கு மனம்தான் வேண்டும். எதிர்பாராத நிகழ்ச்சிகள் நம் வாழ்க்கையில் எத்தனையோ நடக்கின்றன. சான்றுக்கு ஒன்றைக் காட்டலாம். ஒரு திரைப்படம் பல மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கு! நமக்கு இருக்கின்ற ஆசை மனைவிக்கும் இருக்காதா? ஆகவே அவளையும் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்கிறோம். ஒரு நண்பரோடு தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு அந்தப் படத்திற்கு இரண்டு நுழைவுச் சீட்டுகள் வேண்டும் என்று சொல்லுகிறோம். அவரும் மாலை 5 மணிக்கே கொண்டு வந்து தருவதாக வாக்களிக்கிறார். (அது அவரால் மட்டுமே முடியும்!) அதன்படி நாமும் காத்திருக்கிறோம். அந்த நேரமும் வந்தாயிற்று. ஆனால், அவர் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல நம்மனம் பதைக்கிறது. அவரோ கடைசி வரையில் வரவேயில்லை. எப்படியிருக்கும் நமக்கு? அந்த நண்பரை மனத்திற்குள் திட்டித் தீர்க்கிறோம். மறுநாள் காலையில் செய்தித் தாளைப் பார்த்ததும் நாம் அதிர்ந்து போகிறோம். நாம் போக இருந்த அந்தத் திரையரங்கு தீப்பற்றிக் கொண்டதாம். தீக்குப் பலியானோர் பலர். உயிர் அச்சத்தோடு ஓடிய மக்கள் கூட்டத்தில் மிதிபட்டு மாண்டோர் மிகப் பலர். படுகாயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் இன்னும் பலர். இந்த சோகச் செய்தியைப் படித்ததும் நேற்று அந்த நண்பர் வராததே நல்லதாய்ப் போயிற்று என்று நினைக்கிறோம். அவர்தான் நம்மைக் காப்பாற்றியதாகக் கருதுகிறோம். இறைவனுடைய திருவருள் என்று நினைக்க நமக்கு மனம் இல்லை.

மாந்தரது செருக்கு :

எல்லா நலம் தீங்குகளையும் திருவருள் வருவிக்கிறது என்பதை உணராமல் மாந்தர் நன்மை வரும்போது நம்முடைய பெருமையால் அதனை அடைந்தோம் என்று செருக்குக் கொள்கிறார்கள்; தீங்கு வரும்போது பிறர் செய்தார் என்று எண்ணிக் கோபம் கொள்கிறார்கள். கோபுரத்தின் கீழ்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மை நினைத்ததாம். இவ்வளவு உயரமான கோபுரத்தை நானல்லவா தாங்கி நிற்கிறேன்! நானில்லை என்றால் இந்தக் கோபுரம் இப்படி நிமிர்ந்து நிற்க முடியுமா? என்று எண்ணிச் செருக்குக் கொண்டதாம்! அதுபோல மாந்தர் திருவருளை மறந்து தாமே மற்றவர்களைத் தாங்குவதாக எண்ணிக் கொள்கிறார்கள்; நான் இத்தனை பேருக்குத் தலைவன் என்று அகந்தை கொள்கிறார்கள். இஃது எது போன்றது எனில், எல்லாரையும் எல்லாவற்றையும் தாங்குவது நிலமாக இருக்க, அதனை மறந்து அவரவரும் தாமே தமது ஆற்றலால் நிற்பதாகவும், உலவுவதாகவும் கருதிக் கொள்வது போன்றதாம்.

37. திருவருளை இழந்தவர்

மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொருள் : திருவருள் உணர்வை இழந்தவர் மலையை இழந்தவரோடு ஒப்பர்; நிலத்தை இழந்தவரோடு ஒப்பர்; வானை இழந்தவரோடு ஒப்பர். அவர் தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆவார்.

சொற்பொருள் :

ஞானம் தலை கெடுத்தோர் - சிவஞானமாகிய திருவருளை உணராது வாழ்வோர்
மலை கெடுத்தோர் - மலைமேல் பல காலம் குடியிருந்தும், அம்மலைதான் தம்மைத் தாங்கி நிற்கிறது என்று எண்ணாது வாழ்பவரோடு ஒப்பர். (மேலும்)
மண் கெடுத்தோர் - நிலத்தின்கண் வாழ்ந்தும், அந்நிலம் செய்யும் உதவியை நினையாமல் வாழ்பவரோடு ஒப்பர். (இன்னும்)
வான் கெடுத்தோர் - வான் ஆகிய வெளியில் தாம் உலவியும், அவ்வானே தாம் இயங்குவதற்கு இடம் கொடுப்பது என்பதை உணராது வாழ்பவரோடு ஒப்பர்.
தற்கேடர் - இவ்வாறு திருவருளை உணராது வாழ்பவர் தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆவார்.

விளக்கம் :

திருவருளை இழந்தவர் :

எல்லா உயிர்களுக்கும் நிலைக்களமாய் நின்று தாங்கியும் அவற்றை இயக்கியும் வருவது திருவருள். ஆயின், மாந்தர் தம்மைச் செலுத்துகின்ற திருவருளைச் சிறிதும் உணராதவராய், திருவருள் நாட்டம் இல்லாதவராய், உலக வாழ்வில் அழுந்தி யுள்ளனர். இவர்களையே ஞானந் தலை கெடுத்தோர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இங்கு ஞானம் என்பது திருவருளாகிய பேரறிவைக் குறிக்கும். தலைகெடுத்தோர் என்பதில் தலை என்பதற்குத் தனியே பொருளில்லை. கெடுத்தல் என்பது இழத்தல் எனப் பொருள்படும். எனவே, திருவருளை இழந்தவரே ஞானம் தலை கெடுத்தோர் எனப்பட்டார் என்பது விளங்கும். திருவருளை இழத்தலாவது, அருள் இடமாக வாழ்ந்தும் அதனை அறியாதிருத்தல்.

மூன்று உவமைகள் :

திருவருளை இழந்தவர் நிலையை மூன்று உவமைகள் கொடுத்து உணர்த்துகிறார் ஆசிரியர். அவ்வுவமைகளைப் பின்வருமாறு விளக்கிக் காட்டலாம்.

1. ஊட்டி, கொடைக்கானல் முதலிய மலைகளில் வீடு கட்டிக் கொண்டு வாழ்வோர் நிலத்திற்கு மேல் இவ்வளவு உயரமான இடத்தில் தாம் இருப்பதையோ, அம் மலை சிறிது நிலை குலைந்தாலும் தம் நிலை என்னவாகும் என்பதையோ சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. அன்றாட வேலைகளில் மூழ்கி, மலையே தமக்கு ஆதாரம் என்பதை அடியோடு மறந்து அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களையே மலை கெடுத்தோர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அஃதாவது, மலையில் இருந்து கொண்டே அம் மலையின் உதவியைச் சிறிதும் உணராமல் வாழ்வோர். அவர்களைப் போன்றவரே திருவருள் நிலையை உணராதிருப்போர்.

2. நிலமின்றி உயிர் வாழ்க்கை இல்லை. மாந்தர் நிலத்தில் தோன்றி, நிலத்தில் வாழ்ந்து, நிலத்தில் மடிகிறார்கள். உடம்போடு கூடிய உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உணவு முதலிய நுகர்ச்சிப் பொருள்களைத் தந்து உதவுவது நிலமேயாகும். நிலத்தின் ஈர்ப்பு ஆற்றல் அன்றோ நம்மை யெல்லாம் தாங்கி நிற்கிறது. இவ்வா றெல்லாம் தாய் போலத் தாங்குகிற நிலத்தின் உதவியைச் சிறிதும் நினையாமல், பொருளை ஈட்டும் முயற்சியிலேயே பொழுதை யெல்லாம் போக்கி ஆடி ஓடி அலைவர் மாந்தர். அவர்களையே மண் கெடுத்தோர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அஃதாவது, மண்ணிடையே வாழ்ந்தும் அதன் உதவியைச் சிறிதும் எண்ணாதிருப்போர். அவர்களோடு ஒப்பர் திருவருள் நிலையை உணராதவர்.

3. வான் எல்லாப் பொருளுக்கும் இடமாய் அவற்றை இருக்கச் செய்கிறது. மாந்தர் போய் வந்து இயங்குவதற்கு இடம் தருகிறது. வான் ஆகிய வெளியில் உலவும் மாந்தர் அவ்வெளியின் உதவியைச் சிறிதேனும் நினைத்துப் பார்ப்பதுண்டா? வெளியானது இடம் தருவதனால் அன்றோ மக்கள் நடமாட முடிகிறது. அதனை மறந்து தம் திறனாலேயே நடமாடுவதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். அவர்களையே வான் கெடுத்தோர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அஃதாவது, வான் ஆகிய வெளியில் இயங்கியும் அதன் உதவியைச் சிறிதும் எண்ணாதிருப்போர். அவர்களோடு ஒப்பர் தம்மை இயக்குகிற திருவருளை உணராதிருப்போர்.

மூன்று உவமைகள் சொல்லக் காரணம் :

இச்செய்யுளில் ஞானமாகிய திருவருளுக்கு உவமையாக மலை, மண், வான் ஆகிய மூன்று பொருள்களைக் கூறியுள்ளார் ஆசிரியர். இவ்வாறு ஒரு பொருள் மேல் மூன்று உவமைகளைக் கூறுவது எதற்கு? என்று கேட்கலாம். இதற்குப் பின்வருமாறு விடை கூறலாம். திருவருள் எங்கும் வியாபித்து நிற்பது. எங்கும் என்பதை மேல், கீழ், புடை (பக்கம்) என்னும் மூவிடங்களாக விரித்துக் கூறலாம் அல்லவா? உமாபதி சிவம் அவ்வாறு கொண்டு, அவ்விடங்களிற் பரந்து நிற்கும் திருவருளுக்குத் தனித்தனியே உவமை சொல்லப் புகுந்து, முறையே மலையையும் மண்ணையும் வான் ஆகிய வெளியையும் கூறினார் எனலாம். மேல் என்பதற்கு ஏற்ப மலையும், கீழ் என்பதற்கு ஏற்ப மண்ணும், உலவும் இடமாகிய புடை என்பதற்கு ஏற்ப வானும் பொருந்திய உவமைகளாயின. இதற்கு முந்திய செய்யுளில் தரையை அறியாது தாமே திரிவார் என்று கூறிக் கீழ் இடமாகிய நிலத்தை எடுத்துக் காட்டி, அதுபோலத் திருவருள் அனைத்துப் பொருளையும் தாங்கி நிற்றலை உணர்த்தினார். அப்படியானால், மேல் புடை ஆகிய இடங்களில் திருவருள் தாங்கி நிற்றல் இல்லையோ? என்னும் ஐயம் மாணாக்கர்க்கு எழலாம் அல்லவா? அவ் ஐயம் அறுத்தற் பொருட்டே மலையும் மண்ணும் வானும் போல மேல், கீழ், புடை ஆகிய எவ்விடத்திலும் தாங்கி நிற்பது திருவருளே என இச்செய்யுளில் வரையறுத்துக் கூறி முடித்தார் என்பது உணர்தற்குரியது. இவ்வுவமை மூன்றனுள் மலை என்பது மண்ணில் அடங்கி நிற்பது. அந்த மண்ணோ வானில் அடங்கி நிற்பதாகிறது. இந்த மூன்றுக்கும் உள்ள இவ் இயைபு கருதியே, மலை மண் வான் என அந்த வரிசை முறையில் நிறுத்தினார் ஆசிரியர் எனலாம்.

இங்கு ஓர் வினா எழலாம். மலை, மண் உள்ளிட்ட எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பது வான் தானே. அந்த வான் ஒன்றையே திருவருளுக்கு உவமையாகக் கூறினால் போதுமே. பிறவற்றைக் கூறுதல் எதற்கு? என்று கேட்கலாம். இவ்வாறு கேட்பது பொருந்துவதே. நாம் அறிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. அதுவே பிற பொருள்கள் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு விரிந்து நிற்பது. அதுபற்றியே எங்கும் நிறைந்து நிற்பதாகிய திருவருளை வான் என உருவகப்படுத்திக் கூறினார் பெரியோர். அருள்வெளி எனவும், சிதாகாசம் எனவும், சிற்பர வியோமம் எனவும் (வியோமம் - வெளி) வரும் வழக்குகளைக் காணலாம். தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும்படிக்கு இச்சை வைத்து என்பது தாயுமானவர் வாக்கு. வான் ஆகிய வெளி ஒன்றையே திருவருளுக்கு உவமையாகக் கூறுவது பொருந்துமாயினும், மாணவர் எளிதில் விளங்கிக் கொள்வதற்காக, மேலே தாங்கி நிற்பது மலை, கீழே தாங்கி நிற்பது மண், இடையே உலவுவதற்கு இடம் கொடுப்பது வான் என்ற முறையில் அம் மூன்றையும் உவமையாகக் கூறி, மேல் கீழ் புடை என எவ்விடத்தும் உயிர்களுக்குத் தாரகமாய் இருப்பது திருவருளே எனத் தெளிவித்தார் ஆசிரியர் எனக் கொள்ளலாம்.

தற்கேடர் :

திருவருளில் இருந்தும் திருவருளை யறியாதவர் வினைத் துன்பத்திற்கு ஆட்படுகிறார்; திருவருளால் பெறுதற்குரிய மெய்யுணர்வினைப் பெறாதே போகிறார். வீடு பேறாகிய பெரும் பயனையும் இழந்தவராகிறார். சுருங்கக் கூறினால், தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆகிறார். திருவருளின் உதவியினால் நன்மையைத் தேடிக் கொள்ளாமல் இவ்வாறு துன்பத்தை வருவித்துக் கொள்கிறார்களே என்ற இரக்கக் குறிப்புத் தோன்ற அவரைத் தற்கேடர் என்று சுட்டுகிறார் ஆசிரியர்.

38. திருவருளை உணராமல் தாமே முதல்வர் எனல்

வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்து இருளாம்
கள்ளத் தலைவர் கடன்.

பொருள் : எங்கும் நிறைந்துள்ள திருவருள் இடத்திலேதான் எல்லா உயிர்களும் உள்ளன. ஆயினும் பொய்த் தலைவராகிய அந்த உயிர்கள் திருவருளால் வரும் பேரின்பத்தை நுகராமல் துன்புறுகின்றன. உயிர்களது இந்த நிலை, நல்ல நீர்ப் பெருக்கிலே நின்று கொண்டு ஒருவன் நீர் வேட்கையால் நா வறண்டு நிற்பதைப் போன்றது ஆகும். இதற்கு இன்னொரு உவமையும் கூறலாம். பொழுது விடிந்த பின்னும் அதனை உணராமல், இருள்வயப்பட்டு உறங்கிக் கிடப்பதைப் போன்றது திருவருளை உணராத நிலை என்றும் கூறலாம்.

சொற்பொருள் :

கள்ளத் தலைவர் - எச்செயலிலும் தமக்குச் சுதந்திரம் சிறிதும் இல்லாதிருக்கவும், எல்லாவற்றிற்கும் தாமே முதல்வர் எனக் கூறிக்கொள்ளும் பொய்த் தலைவராகிய உயிர்கள்.
கடன் (ஆல்) - திருவருளை மறந்து செய்யும் செயலால்
வெள்ளத்துள் நா வற்றி - நல்ல நீர்ப் பெருக்கில் நின்று கொண்டு இருந்தும் நீர் வேட்கையால் நாவறண்டு துன்புறுவது போன்ற நிலையே உளதாகும்.   (மேலும்)
எங்கும் விடிந்து இருளாம் - பொழுது விடிந்த பின்னும் பகலவனது ஒளியை உணராது இருள் வயப்பட்டு உறங்கிக் கிடப்பதைப் போன்ற நிலையே உளதாகும். (நிறைந்த இன்பத்துள் நின்றும் அதனை நுகரமாட்டாது துன்புறும் நிலையே உயிர்களுக்கு உண்டாயிற்று என்பது கருத்து.)

விளக்கம் :

கள்ளத் தலைவர் :

ஒன்றுக்கும் பற்றாத எளிய உயிர்கள் நாமெல்லாம். ஆயினும் நம்மைப் பற்றி எப்படியெல்லாம் எண்ணிக் கொள்கிறோம்! இந்த உலகத்தையே நாம்தான் தாங்கி நிற்கிறோம் என்பதாகவும், நமக்கு இணையாக வேறொருவர் இல்லை என்பதாகவும் எண்ணி இறுமாக்கின்றோம். பிறரைவிடத் தம்மை மிகுதியாகக் கருதிக் கொள்ளுதலும், எச் செயலுக்கும் தம்மையே தலைவராகக் கொள்ளுதலும் ஆகிய இவையெல்லாம் ஆணவ மலத் தொடர்பினால் விளைவனவாகும். எச்செயலும் இறைவன் செயலாய் இருக்க, அதனை உணராது யாதொரு செயற்கும் தம்மையே தலைவராகக் கொள்ளும் உலகவரின் நிலையை என்னென்பது! அப்படிப் பட்டவர்கள் பட்டங்கள் பெறவதில் ஆசையுள்ளவர்களாய் இருப்பார்கள் அல்லவா? ஆதலால் அவர்களுக்கு ஒரு பட்டம் வழங்குகிறார் ஆசிரியர் உமாபதி சிவம். கள்ளத் தலைவர் என்பதே அப்பட்டம்! எவ்வளவு பொருத்தமான பட்டம்! இறைவனது தலைமையைக் கவர்ந்து தமதாக்கிக் கொள்ள முனையும் மடமை கருதி அவரைக் கள்ளத் தலைவர் என்றார்.               
ஒருவர் அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் அவர் மேற்கொண்ட செயல் முடியாமற் போதலைக் காண்கிறோம். ஒரு பொருளைக் பெற நினைத்து ஒரு செயலில் ஈடுபட்டால் அப்பொருள் கிடைக்காமல் போகிறது. ஒரு பொருளை நினையாதிருக்கும் பொழுது அப்பொருள் தானே வந்து கிடைக்கிறது. இதையெல்லாம் கருதியே, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது என்றும், எல்லாம் ஈசன் செயல் என்றும் பெரியோர் கூறினர். எனவே, எல்லாம் திருவருட் செயலாய் இருக்க, அதனை உணராமல், இச்செயலை நானே செய்து முடித்தேன் எனவும், இது எனது சாதனை எனவும், இதனைச் செய்வதற்கு என்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் எனவும் கருதிக்கொண்டு, அச் செயல்களுக்குத் தம்மையே தலைவராகக் கொள்பவரே கள்ளத் தலைவர் ஆவர்.

உவமைகள் :

1. வெள்ளத்துள் நாவற்றுதல் :

இந்த உவமை, மாணிக்க வாசகர் தமது நிலையைக் குறிக்கப் பயன்படுத்தியதாகும். (நீத்தல் விண்ணப்பம், செ.14) இறைவனது அருளில் தோயப் பெற்றும், பொறி புலன்களால் வரும் துன்பத்திலிருந்து நீங்க முடியவில்லையே என்ற தமது ஆற்றாமையை இவ்வுவமை மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வுவமையை இங்கு உயிர்களின் நிலைக்குப் பொதுமைப் படுத்திக் கூறியுள்ளார் உமாபதி சிவம். உயிர்கள் திருவருளோடு கலந்து உள்ளன. இது வெள்ளத்துள் நிற்பதைப் போன்றது. ஆயின் அவ்வுயிர்கள் திருவருளால் வரும் பேரின்பத்தை அனுபவியாமல் துன்புறுகின்றன. இது வெள்ள நீரைப் பருகாமல் நா வறண்டு நிற்பதைப் போன்றது.

2. விடிந்து இருளாம் :

இனி, இரண்டாவது உவமை எங்கும் விடிந்து இருளாம் என்பது. உமாபதி சிவம் முதல் உவமையைத் திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து எடுத்து அமைத்துக் கொண்டார் என அறிந்தோம். நீத்தல் விண்ணப்பத்தை அடுத்து இருப்பது திருவெம்பாவை என்ற பகுதி. திருவெம்பாவையில் வரும் பெண்களின் உரையாடலிலிருந்து இந்த இரண்டாவது உவமையை அமைத்துக் கொண்டாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. திருவெம்பாவையில், எழுப்ப வந்த பெண்கள் மிக்க தூக்கம் உடையவளாய்த் தன்னை மறந்து படுக்கையிற் கிடக்கும் ஒருத்தியைப் பார்த்து இன்னும் விடியவில்லையா? என்று கேட்கிறார்கள். படுக்கையிற் கிடந்தவளுக்கோ எழுவதற்கு மனமில்லை. ஆனால், அதை எப்படிச் சொல்வது? அதனால் அவர்களைப் பார்த்து வரவேண்டிய அத்தனைப் பெண்களும் வந்து விட்டார்களா? என்று கேட்கிறாள். வரவில்லையென்றால் அது வரையில் தூங்கலாமே என்ற ஆசை அவளுக்கு!

உறங்கிக் கிடத்தல் என்பது ஆணவ மல இருளின் வசப்பட்டிருத்தலைக் குறிக்கும். உறக்கம் நீங்கி எழுதல் என்பது மலப் பிணிப்பிலிருந்து விடுபட்டுப் பக்குவம் பெறுதலைக் குறிக்கும். நீராடுதல் என்பது திருவருளில் தோய்ந்து இன்புறுதலைக் குறிப்பதாகும். எனவே, விடிந்த பின்னும் உறங்கிக் கிடக்கின்ற அப்பெண்ணின் நிலை, திருவருளில் தோய்வதற்கு விருப்பமின்றி ஆணவ இருளின் வசப்பட்டுக் கிடக்கும் உயிர்களின் நிலையைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். திருவெம்பாவையில் வரும் அப்பெண்ணின் நிலையை நினைந்தே நம் ஆசிரியர் <உமாபதி சிவம் பக்குவமில்லாத உயிர்களின் நிலையைச் சுட்ட எங்கும் விடிந்து இருளாம் என்றார் போலு<ம்!

39. உயர்ந்ததை விட்டு இழிந்ததை நாடுதல்

பரப்பு அமைந்து கேண்மின்! இது பாற்கலன்மேல் பூஞை
கரப்பு அருந்த நாடும் கடன்.

பொருள் : உலகப் பொருள்களின் மேல் பரந்து ஓடுகின்ற மனத்தை ஒரு நெறிப்படுத்தியாம் கூறுவதைக் கேளுங்கள். திருவருளை மறந்து உலகப் பொருள்களில் கிடைக்கும் அற்ப சுகத்தைப் பெறுதற்கு நீங்கள் விரைகிறீர்கள். இந்த விரைவு எது போன்றது எனில், பால் நிறைந்த கலத்தின் மேல் ஏறி அமர்ந்த பூனை அந்த பாலைப் பருக நினையாமல், சற்றுத் தொலைவில் காணப்படும் கரப்பான் என்னும் பூச்சியைப் பிடித்து உண்ணுதற்குக் கருதும் முறைமை போன்றதாகும்.

சொற்பொருள் :

பரப்பு - (திருவருளை மறந்து உலக நுகர்ச்சியில் நீங்கள் காட்டுகின்ற) மனவேகம்
அமைந்து - அடங்கப் பெற்று
கேண்மின் - யாம் கூறுவதைக் கேளுங்கள்.
இது - உலக நுகர்ச்சியில் நீங்கள் கொள்ளுகின்ற இந்த விரைவு (எது போன்றது எனில்)
பாற்கலன் மேல் - பாலை வைத்த கலத்தின் மேல்
பூஞை - ஏறி அமர்ந்த பூனை (அந்தப் பாலைப் பருக நினையாமல்)
கரப்பு - சற்றுத் தொலைவில் காணப்படும் கரப்பான் பூச்சியை
அருந்த - பிடித்து உண்ண
நாடும் கடன் - கருதும் முறைமை போன்றது ஆம்.

விளக்கம் :

பரப்பு அமைந்து கேண்மின் :

சிற்றூர்களில் பெண்கள் ஊர்ப்புறத்தில் உள்ள கிணற்றுக்கோ, குளத்திற்கோ சென்று நீர் எடுத்து வருவார்கள். அவர்கள் தலைமேலே பெரிய நீர்க்குடம் இருக்கும்.. அக் குடத்தின் மேல் மற்றொரு சிறிய குடமும் வைத்திருப்பார்கள். இவை போதா என்று இடுப்பிலும் ஒரு நீர்க் குடத்தை வைத்துக் கொண்டு வருவார்கள். வரும்போது ஊர்க் கதையெல்லாம் பேசுவார்கள்; கையை வீசிக் கொண்டு நடப்பார்கள். அவர்களைப் பார்த்தால் தலை மேல் உள்ள குடத்தையே மறந்து விட்டவர்களைப் போலத் தோன்றும். பார்க்கின்ற நமக்குத்தான் குடம் கீழே விழுந்து விடுமோ? என்ற கவலை உண்டாகும்! அப்படி அவர்கள் பேசிக் கொண்டும், கை வீசிக் கொண்டும் வந்தாலும் அவர்கள் மனம் நீர்க்குடத்தின் மேலேயே இருக்குமாம். ஆனால், அது நமக்குத் தெரியாது. அதுபோல ஞானிகள் உலகத்தில் மற்றவர்களைப் போல உண்டும் உடுத்தும் தொழில் செய்து வாழ்ந்தாலும் அவர்கள் மனம் திருவருளையே பற்றியிருக்கும்.

இந்த நிலையோடு நமது மனத்தின் நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள்! நமது மனம் ஓரிடத்தில் நில்லாமல் எங்கெல்லாமோ ஓடி அலைகிறது. பூசனை செய்யும்போது வெளியே ஏதேனும் ஓசை கேட்டால் மனம் அங்கே ஓடுகிறது. கோயிலுக்குப் போய் இறைவன் திருமுன் நிற்கும்போது கூட மனம் அக்காட்சியில் ஈடுபடாமல் பற்பலவற்றை எண்ணி அலைபாய்கிறது. நமது மன ஓட்டத்திற்கு ஓர் உவமை சொல்லலாம். வீதியில் பிள்ளைகள் பம்பரம் விடுகிறார்கள். பம்பரத்தில் கயிற்றைச் சுற்றி வேகமாக விடுகிறார்கள். அந்தப் பம்பரம் எங்கெல்லாமோ சுற்றிச் சுழல்கிறது. வரையறையின்றிப் பெரிதாக வட்டமடித்துச் சுற்றுகிறது. அதுபோல நம் மனமும் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டேயிருக்கிறது. இப்படிப்பட்ட மனமுடையவர்களுக்கு உபதேசம் செய்வது வீண் செயலாகும். அவர்கள் யார் என்ன சொன்னாலும் அதை ஏற்கமாட்டார்கள். அறியாக் குழந்தையிடம் வெறும் தாளைக் கொடுத்தாலும் அதைக் கிழித்து விடும். நூறு ரூபாய்த் தாளைக் கொடுத்தாலும் கிழித்தெறியும். இரண்டு தாளுக்கும் உள்ள வேறுபாடு அக்குழந்தைகளுக்குத் தெரியாது. அதே குழந்தைக்கு நூறு ரூபாய்த் தாளின் மதிப்பை உணரச் செய்து பிறகு கொடுத்தால் அது கிழித்தெறியாமல் பாதுகாக்கும். அதுபோலப் பரந்து ஓடுகின்ற, அமைதியற்ற மனம் உபதேசத்தின் அருமையை உணராது அதைத் தூக்கியெறிந்து விடும். ஆகவே முதலில் மனத்தை ஒரு நெறிப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் உபதேசத்தின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபற்றியே பரப்பமைந்து கேண்மின் என்றார் ஆசிரியர்.

 
மேலும் திருவருட்பயன் »
7. திருவருட்பயன் - முன்னுரைஆசிரியர் உமாபதி சிவம்பொருள், தெளிவுரை : ஆ. ஆனந்தராசன்சைவ சித்தாந்தத்தின் ... மேலும்
 
பாற்கலன்மேல் பூனை :இயல்பிலே இன்ப நாட்டம் உடைய உயிர், உயர்வற உயர்ந்த இன்பப் பொருளாகிய இறைப் பொருளை ... மேலும்
 
68. பின் நிற்றல்உற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்நிற்கை அருளார் நிலை.பொருள் : இருளில் நடப்போர் ... மேலும்
 
81. அனைத்து நூற்பொருளும் ஐந்தெழுத்தின் பொருளேயாம்அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்பொருள் நூல் ... மேலும்
 
92. வேறொன்றையும் விரும்பாமைஐந்தொழிலும் காரணர்கள் ஆம் தொழிலும் போகம் நுகர்வெந்தொழிலும் மேவார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar