Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவருட்பயன் பகுதி-3 திருவருட்பயன் பகுதி-5
முதல் பக்கம் » திருவருட்பயன்
திருவருட்பயன் பகுதி-4
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

68. பின் நிற்றல்

உற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்
நிற்கை அருளார் நிலை.

பொருள் : இருளில் நடப்போர் தீப்பந்தத்தை ஏந்தி வருகிறவன் முன்னே செல்லத் தாம் அவன் பின்னே செல்வர். அதுபோலப் பாசப் பற்றாகிய இருளை விலக்கி ஞானநெறியிற் செல்லும் உயிர்களுக்கு உதவியாக இறைவன் தனது திருவருள் ஒளியை வழங்கி வருகின்றான். உயிர் அவனுக்குப் பின் நிற்றலே திருவருளை முற்றப் பெறும் முறையாகும்.

சொற்பொருள் :

உற்கை தரும் - (இருளில் நடப்போர்) தீப் பந்தத்தை ஏந்திவரும்
பொற்கை உடையவர் போல் - அழகிய கையை உடையவன் முன்னே வழிகாட்டிச் செல்ல, அவனுக்குப் பின்னே நடப்பது போல,
உண்மைப் பின் நிற்கை - பாச இருளை விலக்கி ஞானநெறியில் செல்லும் உயிர்கள் தமக்கு உதவியாகத் திருவருள் ஒளியை வழங்கி வருகின்ற மெய்ப் பொருளாகிய முதல்வனுக்குப் பின்னே நிற்பதே
அருள் ஆர் நிலை - அவனது திருவருளை நிரம்பப் பெறும் முறையாகும்.

விளக்கம் :

உற்கை என்பது எரிகொள்ளியைக் குறிக்கும். உண்மை என்பது மெய்ப் பொருளாகிய இறைவனை உணர்த்திற்று. உண்மைப் பின் நிற்றலாவது, எச் செயலைச் செய்யினும் தன் முனைப்பால் யான் செய்கின்றேன் எனக் கருதிச் செய்யாது அவன் செய்விக்கின்றான் செய்கின்றேன்; ஆதலால் அச் செயலால் வரும் நன்மை தீமை, இன்பம் துன்பம், புகழ் இகழ் ஆகியவற்றுள் எதுவும் என்னுடையதன்று; எல்லாம் அவனுடையதே என இவ்வாறு உணர்ந்து நிற்றல் ஆகும். மக்களிடத்திலே ஒரு பழக்கம் உள்ளது. பேசும்போது இடையிடையே நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று அடிக்கடி சொல்வார்கள். ஒருவர் வீடு கட்டி முடிக்கிறார்; புதுமனை புகுவிழா நடைபெறுகிறது. வந்திருந்த நண்பர் ஒருவர் வீட்டை நன்றாகக் கட்டியிருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார். அதற்கு அவர், நானா கட்டி முடித்தேன்? ஆண்டவன் அருளால் தான் இது முடிந்தது என்று சொல்லுகிறார். இப்படி, நான் செய்யவில்லை, எல்லாம் ஆண்டவன் செய்கிறான். எனது செயல் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் ஆண்டவனுடையவை என்று சொல்வது எளிது. அதனை வாழ்வில் அனுபவமாகக் கடைப்பிடிப்பது என்பது மிகவும் அரியது. இந்த அரிய நிலை வருவதற்குக் தான் என்னும் தன்மையை இழந்து நிற்க வேண்டும். தனது அறிவு இச்சை செயல்களைச் சிவனது அறிவு இச்சை செயல்களுக்குள் அடங்கக் கொடுத்து நிற்கவேண்டும். இவ்வாறு நின்ற ஒருவர் மானக்கஞ்சாறர். அவரது ஒரே புதல்விக்கு அன்று திருமணம். வீட்டிலும் ஊரிலும் ஒரே விழாக் கோலம். மாப்பிள்ளை வீட்டார் ஊரை நெருங்கி விட்டனர். மணமகள் திருமணப் பொலிவோடு திகழ்ந்தார். அந்த நேரத்தில் ஒரு முனிவர் வீட்டிற் புகுந்தார். மானக் கஞ்சாறர் மகிழ்வோடு வரவேற்றார். வந்தவர் என்ன நிகழ்ச்சி இங்கே? என்று கேட்டார். திருமணம் நடைபெற உள்ளது என்பதை அறிந்து ஆசி வழங்கினார்.

மானக் கஞ்சாறர் தம் அருமை மகளை அழைத்து வந்து அவரது பாதங்களில் பணிவித்தார். நீண்டு தழைத்திருந்த அப்பெண்ணின் கூந்தலைப் பார்த்த முனிவர், இது நாம் மார்பில் அணியும் வடத்திற்கு ஆகும் என்று கூறினார். கஞ்சாறர் கணமும் தயங்கவில்லை. மகள் நிலையை எண்ணி மதி கலங்கவில்லை. திருமணம் என்னாவது? என்றெண்ணித் திகைக்கவில்லை. சிவனுடையது என்னறிவது எனவும், சிவனவனது என் செயலது எனவும் நின்ற அவரிடத்தில் உலகியல் உணர்வுகள் எப்படித் தோன்றும்? அப்பொழுதே உடைவாளை உருவி மகளாரின் மலர்க் கூந்தலை அடியோடு அரிந்து கொடுத்தார். இவ்வாறு தனது அறிவு இச்சை செயல் மூன்றும் சிவனது அறிவிச்சை செயல்களாகவே இருக்க வைத்துப் பயின்ற இவ்வடியார்களின் நிலையை உலகியலோடு மட்டும் பழகிய நம்மால் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? முதல்வனுக்குப் பின் நிற்றலாகிய இதனை அருளார் நிலை என்று இங்குக் குறிப்பிட்டார் ஆசிரியர். சிவப்பிரகாச நூலில் இந்நிலையைத் தான் பணியை நீத்தல் என்று சுட்டுவார். தன் செயலை முழுதுமாக நீத்து நிற்கும் நிலை என்பது அதற்குப் பொருளாகும்.

69. கருவிகளும் உயிரறிவும் அறியா

ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய
ஐம்புலன் ஆர்? தாம் ஆர்? அதற்கு.

பொருள் : உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளைக் கொண்டு அறிந்து வந்ததெல்லாம் மெய்ப் பொருளாகிய சிவம் நீங்கலாக ஏனையவற்றையேயாம். அப்படியிருக்க, முத்திக் காலத்தில் அம்மெய்ப் பொருளை அறிவதற்கு அக்கருவிகள் துணையாதற்கு என்ன உரிமையுடையன? இனி, அக்கருவிகள் இன்றி ஒன்றையும் அறிய மாட்டாத உயிர்களும் தனியாய் நின்று அம்மெய்ப் பொருளை அறிதற்கு என்ன உரிமையுடையன?

சொற்பொருள் :

தாம் ஐம்புலனால் கண்டது - உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளைக் கொண்டு அறிந்து வந்தது
அது ஒழிய என்றால் - மெய்ப் பொருளாகிய சிவம் நீங்கலாக ஏனையவற்றையே யென்றால்
அதற்கு - அம் மெய்ப் பொருளை அறிதற்கு
ஐம்புலன் ஆர் - ஐம்பொறி முதலிய அக்கருவிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?
தாம்ஆர் - இனி, அக்கருவிகளின் துணையின்றி ஒன்றையும் அறிய மாட்டாத உயிர்களும் தனித்து நின்று அம்மெய்ப் பொருளை அறிதற்கு என்ன உரிமையுடையன?

விளக்கம் :

கருவிகள் துணையாக மாட்டா :

கருவி கரணங்களால் சிவத்தையறிதல் இயலும் என்பது சைவரில் ஒரு சாரார் கொள்கை. அவர்கள் பின்வருமாறு கூறுவர். பெத்த காலத்தில் கருவிகள் சீவகரணம் எனப்பெயர் பெற்று இருளாய் நின்று உயிரை மயக்குதலின் அப்பொழுது அவை மெய்ப் பொருளைக் காணுதற்குத் துணை செய்யா என்பது பொருந்தும். ஆயின் முத்தி காலத்தில் அக்கருவிகள் அத்தன்மை நீங்கிச் சிவகரணம் எனப் பெயர் பெற்று ஒளியாய் நிற்றலின், அவை மெய்ப் பொருளை அறிதற்குத் துணை செய்யும் என்று கூறுவர். இக் கொள்கையை முதலில் எடுத்துக் கொண்டு மறுக்கிறார் ஆசிரியர். இன்று வரையிலும் இறைவனைக் காட்ட மாட்டாத இக்கருவி கரணங்கள் இனிமேல் அவனைக் கண்டு காட்டும் என்றல், பேதைமையாம் என்கிறார். முத்தி நிலையில் இக்கருவிகள் சிவனது கலப்பால் சிவத்தன்மையை உடையன வாயினும் அவை சுட்டுணர்வையன்றி வியாபக உணர்வைத் தரமாட்டா. சுட்டுணர்வினால் அறியப்படுபவை அழியக் கூடிய உலகப் பொருள்களேயாகும். இறைவன் சுட்டுணர்வுக்கு அப்பாற்பட்டவன். எனவே அவனை அறிதற்கு அக்கருவி கரணங்கள் என்ன உரிமையுடையன என்று கேட்கிறார்.

உயிரறிவு தனித்து நின்று அறிய மாட்டாது :

இனி, சிவசமவாத சைவர் என்பார் பின்வருமாறு கூறுவர். பெத்த காலத்தில் ஆன்ம அறிவு மலத்திற் கட்டுண்டு சிற்றறிவாய் நிற்பதனால் அப்பொழுது அது மெய்ப் பொருளாகிய சிவத்தைத் தனித்து நின்று அறிய மாட்டாது என்பது உண்மையே. ஆனால், முத்தி காலத்தில் ஆன்ம அறிவு மலம் முழுதும் நீங்கிப் பேரறிவாய் சிவனது அறிவுக்குச் சமமாய் நிற்கும். ஆதலால் அப்பொழுது அது மெய்ப்பொருளைத் தனித்து நின்று அறிய வல்லதாகும் எனக் கூறுவர். இவ்வாறு கூறுவது சிவநெறிக்குப் பெரிதும் புறம்பானதாகும். உயிரறிவு எக்காலத்திலும் சிவனது அறிவுக்குச் சமமாக முடியாது. உயிரினது சிறப்புத் தன்மை வேறு. சிவனது சிறப்புத் தன்மை வேறு. உயிரினது சிறப்புத் தன்மை, அறிவிக்க அறிவது. சிவனது சிறப்புத் தன்மை தானே அறிவது. பொருளினது சிறப்புத் தன்மை எக்காலத்திலும் மாறாது. எனவே, உயிரானது அறிவிக்க அறிவதாகிய தனது சிறப்புத் தன்மை மாறித் தானே அறிவதாகிய சிவனது சிறப்புத் தன்மையைப் பெறும் என்பது எக்காலத்திலும் நடவாது. உயிரினது அறிவு முன்பு சிற்றறிவாய் இருந்து பின் மலம் முழுவதும் நீங்கிய நிலையில் முழுமையாக விளங்கிப் பேரறிவு எனப் படுமாயினும், அப்பொழுதும் அது சிவனது முற்றறிவை நோக்கச் சிற்றறிவேயாம். அந்நிலையிலும் அது தானே அறியமாட்டாது. சிவனது அறிவு உடனின்று அறிவிக்கவே அறிவதாகும்.

நாழி என்ற முகத்தற் கருவியைக் கொண்டு கடல் நீரில் பல முறை ஆழமாக அமுக்கி முகந்தாலும் அந்த நாழி எங்கேயாவது நான்கு நாழி நீரை முகந்து கொள்ள முடியுமா? அது தன்னளவுக்கு உரிய நீரை மட்டுமே முகக்க இயலும். அதுபோல மலம் நீங்கிய முத்தி நிலையிலும் உயிரறிவு உயிரறிவாகவே இருக்கும். அது சிவனறிவுக்குச் சமமாக மாட்டாது. அப்பொழுதும் உயிர் சிவனது அறிவாகிய திருவருள் காட்டவே தன்னையும் சிவத்தையும் காண்பதாகும். ஆதலால் முத்தி நிலையில் ஆன்ம அறிவு சிவனறிவை ஒப்பதாகும் என்றும், மெய்ப் பொருளாகிய சிவத்தைத் தனித்து நின்று அறியும் என்றும் சிவசமவாதிகள் கூறுவது <உண்மைக்குப் புறம்பானதாகும். சிவனோடு ஒப்ப யாமும் எல்லாம் அறிந்து, எல்லா வல்லமையும் பெற்று வாழ்வோம் என்று அவர்கள் ஆசைப்பட்டு இப்படிக் கூறுகிறார்கள். மலைமேல் உள்ள தேனுக்கு ஆசைப்பட்டு முடவன் வாயூறி நின்றாற் போன்றது அவர்கள் நிலை! சிவசமவாத சைவரை நோக்கித் தாம் ஆர் அதற்கு என வினவுகிறார் ஆசிரியர் உமாபதிசிவம். சிவத்தை அருள் வழியாக அன்றித் தனியாய் நின்று அறிவதற்கு அவர்கள் என்ன உரிமையுடையவர்கள் என்பது இவ்வினாவில் அமைந்துள்ள குறிப்பு.

மூன்று ஞானங்கள் :

ஞானங்கள் மூன்றாகும். அவை பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம் என்பன. பாச ஞானம் என்பது கருவிகளால் வரும் அறிவாகும். பாசம் என்பது மாயையைக் குறிக்கும். ஐம்பொறி முதலிய கருவிகள் பாசமாகிய மாயையின் காரியங்கள். அக் கருவிகளால் அறியப்படுகின்ற உலகமும் பாசமாகிய மாயையின் காரியமாகும். இதனால் கருவிகளும் உலகமும் ஆகிய எல்லாம் பாசமே என்பது விளங்கும். இது பற்றியே, பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறிகின்ற அறிவு பாசஞானம் எனப்படுவதாயிற்று. இனி, அக்கருவிகளை வேறாகக் கண்டு நீங்கிய விடத்து உயிருக்கு விரிந்த அறிவு உண்டாகும். அந்நிலையில் உயிர் தன்னை சிவத்திற்குச் சமமாக மயங்கி உணரும். சிவனைப்போல எல்லாச் செயலும் செய்தல் கூடும் என உணரும். அப்பொழுதும் திருவருள்தான் செய்விக்கிறது என்பதை அது உணர்வதில்லை. இது பசுத்துவம் எனப்படுகிற ஆணவ மலத்தின் வாசனை நீங்காத நிலையாகும். இவ்வாறு பசுவாகிய தன்னையே பொருளாக மதிக்கின்ற இந்த ஞானம் பசு ஞானம் எனப்படுவதாயிற்று. மூன்றாவதாகிய பதி ஞானம் என்பது இறைவனது பேரறிவாகும். பதியினது ஞானம் பதி ஞானமாயிற்று. பதி சிவமேயாதலின் பதி ஞானம் சிவ ஞானம் என்றும் சொல்லப்படும். திருவருள் என்பதும் இதுவே. இவற்றுள் பாச ஞானமும், பசு ஞானமும் சிவனை அறிய மாட்டா. இதனையே இச் செய்யுளில் குறிப்பிட்டார் ஆசிரியர். ஐம்புலன் ஆர் அதற்கு? என்று கூறிக் கருவியறிவாகிய பாச ஞானம் இறைவனை அறியத் துணை செய்யாது என விலக்கினார். தாம் ஆர் அதற்கு? என்று கூறிப் பசு ஞானமும் தனித்து நின்று இறைவனை உணரமாட்டாது என விலக்கினார். இவ்வாறு இரண்டு ஞானங்களை விலக்கி, எஞ்சியுள்ள பதி ஞானமாகிய திருவருளைத் துணைக் கொண்டே பதியாகிய மெய்ப் பொருளை அறிய முடியும் என்ற கருத்தைப் பெற வைத்தார் ஆசிரியர். மூன்று பொருள்கள் உள்ள இடத்தில் இரண்டினை விலக்கி எஞ்சியுள்ள மூன்றாவது பொருளைத் துணிதல் பாரிசேடம் (ஒழிபு) என்னும் முறையாகும் என முன்னே கூறியுள்ளோம். (செ-33) அம் முறைமையை இச்செய்யுளிலும் நாம் காண்கிறோம்.

70. <உயிர் தனது வலிமையால் பெற முடியாது

தாமே தரும் அவரைத் தம்வலியினால் கருதல்
ஆமே? இவன் ஆர் அதற்கு?

பொருள் : முதல்வன் தானே தனது கருணையினால் உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கிறான். அங்ஙனமாக, அம்முதல்வனை உயிர் தானே தன் முயற்சியினால் அடைந்ததாகக் கருதுவது பொருந்துமோ? முதல்வனை இவ்வுயிர் தனது வலிமையால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது.

சொற்பொருள் :

தாமே தரும் அவரை - தானே தனது கருணையினால் <உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கும் முதல்வனை
தம் வலியினால் கருதல் ஆமே? - உயிர் தானே தன் வலிமையினால் உணர்ந்ததாகக் கருதுதல் பொருந்துமோ?
அதற்கு இவன் ஆர்? - அம் முதல்வனை உயிர்தனது முயற்சியால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது?

விளக்கம் :

உடம்பு என்னும் தேர் :

நிலையற்றதாகிய இந்த உடம்பை ஒரு தேர் என்று சொல்லலாம். இந்தத் தேரில் அமர்ந்து கொண்டு பயணம் செய்பவன் ஆன்மா. ஐந்து இந்திரியங்கள்தாம் இத்தேரை இழுத்துச் செல்லும் குதிரைகள். மனம் தான் அவற்றைச் செலுத்துகிற தேர்ப்பாகன். இந்திரியங்கள் பொதுவாகத் தீய வழிகளில் செல்பவை. அவற்றை அவை போகும் போக்கில் விடக் கூடாது. விட்டால் அவை தேரையும், தேரில் செல்லும் ஆன்மாவையும் படுகுழியில் தள்ளிவிடும். ஆகவே மனமாகிய தேர்ப்பாகன் நல்லுணர்வு என்ற கடிவாளத்தைக் கொண்டு இந்திரியங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவன் திசை தெரியாத பாகனாக இருந்தால் தேரைக் கண்ட இடத்திற்குச் செலுத்தி விடலாம். எனவே ஆன்மா தான் போய்ச் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைய வேண்டுமானால் இந்திரியங்களாகிய பரிகளும் சரியாக இருக்க வேண்டும்; மனமாகிய பாகனும் செம்மையாக ஓட்டத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக, இறைவனது திருவருள் துணை நிற்க வேண்டும்.

பற்றறுதி :

உலகப் பற்று என்பது தவறான பாதை. தவநெறி என்பதே ஆன்மா மேற்கொள்ள வேண்டிய சரியான பாதை. உலகப் பற்றில் செல்லாமல் இருப்பது என்பது எளிதான செயலா? இல்லை. கண்ட கண்ட பொருளையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கிறது. எத்தனை எத்தனை ஆசைகள்! இந்த ஆசைகளுக்குத்தான் ஓர் எல்லை உண்டா? உலக ஆசைகளை விடுவது எப்படி? வைராக்கியம் ஒன்றே அதற்கு வழியாகும். வைராக்கியத்தைத் தமிழில் பற்றறுதி என்பர். பற்றற்று இருத்தலாகிய வைராக்கியம் எப்படி ஏற்படும்? உலகப் பொருள்களிலுள்ள குற்றங்களைப் பார்க்கத் தெரிந்து கொண்டு விட்டால் வைராக்கியம் ஏற்படும். உலகப் பொருள்கள் நிலையற்றவை; இடையில் நீங்கக் கூடியவை; முதலில் இன்பமாகத் தோன்றிக் கடைசியில் துன்பத்தைத் தருபவை என்று தெரிந்துகொண்டால் வைராக்கியம் தானே ஏற்படும். உலகப் பற்றுப் போய்விடும்; இறைவன் மீது பற்று ஏற்பட்டு விடும். இந்த நிலை வருவதற்கும் இறைவனது அருளே காரணம். இதைத்தான் திருவருள் பதிதல் என்கிறோம்.

எதையும் மலர்ச்சியுடன் ஏற்றல் :

எந்தப் பொருளும், எந்தச் சூழ்நிலையும் தன்னிடத்தில் இன்பத்தையோ, துன்பத்தையோ கொண்டிருக்கவில்லை. ஒருவருக்குத் துன்பமாகத் தோன்றும் அதே பொருளும், அதே சூழ்நிலையும் இன்னொருவருக்கு இன்பமாகத் தோன்றுகிறது. நமக்கே ஒரு சமயத்தில் இன்பமாகத் தோன்றும் பொருள் மற்றொரு சமயத்தில் துன்பமாகத் தோன்றுகிறது. எனவே, இன்பமும் துன்பமும் பொருளிலோ, சூழ்நிலையிலோ இல்லை என்பது தெளிவு. அவரவர் அணுகும் முறையில்தான் இன்பமோ துன்பமோ உள்ளது. நோய் வந்தால் மருந்து கசப்பாக இருந்தாலும் இனிப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு உட்கொள்ளுகிறோம். அதுபோல, வேண்டியது வேண்டாதது என்று கருதாமல், எது வந்தாலும் அதை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தையும் துன்பத்தையும், இகழையும் புகழையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதும் இந்த மனநிலை வருவதற்கு இறைவனது அருளே காரணம். இதைத்தான் இருவினை யொப்பு என்று சொல்லுகிறோம்.

ஞானக் கண்ணைத் தருதல் :

மேற்கூறிய பக்குவ நிலைகளை இறைவன் தான் உயிரின்கண் வருவிக்கின்றான். வருவித்து உயிருக்கு ஞானத்தைத் தருகின்றான். அந்த ஞானக் கண்ணால் உள்நோக்கித் தன்னை உணரும்படியாகச் செய்கின்றான். எனவே முதல்வனை உயிர் அவனது அருளால் உணர்ந்ததேயன்றித் தனது முயற்சியால் அன்று என்பது விளங்கும்.

உயிரின் முயற்சியால் ஆகாமை :

ஆனால், சைவரில் ஒரு சாரார் பின் வருமாறு கூறுவர். மரத்தின் நிழல் இருந்தபடியே இருக்கும். அது போய் வழிப் போக்கனை அழைத்துத் தன்னிடம் தங்க வைக்காது. வெயிலை விட்டு நீங்கி நிழலை அடைதல் வழிப் போக்கன் செயலேயன்றி, மரத்தின் செயல் அன்று. அதுபோல மலத்தின் நீங்கி இறைவன் திருவடியை அடைதல் உயிரின் செயலேயன்றி இறைவன் செயல் அன்று. மலத்தை நீக்குதல், உயிர்களைத் தனது திருவடியிற் சேர்த்தல் ஆகிய செயல்களை இறைவன் செய்தால் அவன் தனது நிலையில் வேறுபட்டவன் ஆகிவிடுவான். என்றும் ஒரு தன்மையன் என்ற இலக்கணத்திற்கு இஃது இழுக்காகிவிடும் என்று கூறுவர். உயிரே தனது முயற்சியினால் தானே இறைவனைச் சென்று அடையும் என்பார் கூற்றை இச்செய்யுளில் மறுத்துள்ளார் நம் ஆசிரியர். எல்லாம் இறைவன் செயலாய் இருக்க, உயிர் அவனைத் தனது முயற்சியால் உணர்ந்ததாகக் கருதுமாயின் அது மயக்க உணர்வாகும் என்பது இச்செய்யுளின் கருத்தாகும். காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே என்று திருமுறை கூறுவதும் அறியத்தக்கது. இறைவன் உயிர்களிடத்தில் பெருங்கருணை யுடையவன். இரும்பைக் காந்தம் ஈர்த்துத் தன்வசப்படுத்துகிறது. அச் செயலால் காந்தம் எந்த மாற்றமும் அடைவதில்லை. அதுபோல இறைவன் உயிர்களை ஈர்த்துத் தன் வசப்படுத்தி ஆட்கொள்கிறான். அச்செயலை அவன் தன் நினைப்பு மாத்திரத்தால் செய்தலின், அவன் தன் நிலையில் திரியான். அவன் என்றும் ஒரு தன்மையனே என்பது சைவ சித்தாந்த நிலையாகும்.

எட்டாம் அதிகாரம்

இன்புறு நிலை

கருவிகள் தாமாக நீங்கும் பொழுது உயிருக்குக் கேவலமாகிய அறியாமை உண்டாகும் எனவும், விழிப்பு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படங்கல் ஆகிய ஐந்தும் அவ்வாறு உண்டாகின்ற கேவல நிலைகள் எனவும் சென்ற அதிகாரத்தின் முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளது. விழிப்புநிலை வடமொழியில் சாக்கிரம் எனப்படும். கனவுநிலை சொப்பனம் எனப்படும். உறக்கநிலை சுழுத்தி எனப்படும். பேருறக்க நிலை துரியம் எனப்படும். உயிர்ப்பு அடங்கல் துரியா தீதம் எனப்படும். ஐவ் ஐந்து நிலைகளிலும் அறியாமை படிப்படியாக மிகுந்து வரும். இனி, கருவிகள் உள்ள பொழுதே அவற்றைத் தனக்கு வேறாகக் கண்டு நீங்கும்பொழுது உயிர் அறியாமையை அடைவதில்லை எனவும், திருவருளையே அடையும் எனவும் அங்கே கூறினோம். கருவிகளை இன்றி உயிர் அறியாமையைத் தலைப்படும் நிலை கேவலம் எனப் பெயர் பெற, கருவிகள் உள்ள பொழுதே அவற்றை நீங்கி உயிர் திருவருளைத் தலைப்படும் நிலை சுத்தம் எனப் பெயர் பெறும்.

சுத்தத்தில் ஐந்து நிலைகள் :

கேவலத்தில் உள்ளது போலத் திருவருளைத் தலைப்படும் சுத்தத்திலேயும் ஐந்து நிலைகள் உண்டு. அவையும் சாக்கிரம், சொப்பனம் முதலிய அதே பெயர்களைப் பெறும். கேவல நிலைகளிலிருந்து சுத்த நிலைகளாகிய இவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காகச் சுத்தம் என்ற அடைமொழியைச் சேர்த்து சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், சுத்த துரியாதீதம் என வழங்குவர். கேவல நிலைகளில் கருவிகள் நீங்க நீங்கப் படிப்படியே மல இருள் மிகுந்து வரும்; அறிவு நீங்கி வரும். இதற்கு மாறாகச் சுத்த நிலைகளில் கருவிகள் நீங்க நீங்கப் படிப்படியே திருவருள் ஞானமும், சிவானுபவமும் மிகுந்து வரும்; மல இருள் நீங்கி வரும். சுத்த நிலைகளில் மலம் நீங்கி வருவதைக் குறிக்கும் வகையில் நின்மலம் என்ற அடைமொழி சேர்த்து நின்மல சாக்கிரம், நின்மல சொப்பனம், நின்மல சுழுத்தி, நின்மல துரியம், நின்மல துரியாதீதம் எனவும் வழங்குவர்.

நின்மல சாக்கிரம் ஆகிய நிலையில் உயிர் திருவருள் ஞானத்தைப் பொதுவாகவும், நின்மல சொப்பனம், நின்மல சுழுத்தி ஆகிய நிலைகளில் ஐயமாகவும் உணர்ந்து நிற்கும். தனக்கென ஒரு செயலும் இல்லை எனவும், எல்லாம் திருவருட் செயல் எனவும் உணர்ந்தாலும் முன்னைப் பழக்கத்தினால் யான் செய்தேன் பிறர் செய்தார் என்று எண்ணும் தற்போதம் இங்கு எழவே செய்யும். இவ்வாறு எழும் தற்போதம் அறவே ஒழிந்து, தன் செயலற்றுத் திருவருளில் ஒன்றியிருக்கும் நிலையே நின்மல துரியம் ஆகும். இதுவே திருவருளைத் தெளிய உணர்ந்த நிலையாகும். என் செயலாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன் என வரும் பட்டினத்து அடிகள் திருவாக்கில் இத்தெளிவுணர்வைக் காணலாம். உயிர் விளக்கம் என்ற முந்திய அதிகாரத்தில் இந்த நிலையை விளக்கமாக அறிந்தோம். ஞானத்தின் படிநிலைகளாகக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கும் அமையும் என அறிந்துள்ளோம். கேட்டல் முதலிய நான்கும், இங்குக் கூறிய நின்மல சாக்கிரம் முதலிய ஐந்தும் வேற வேறல்ல; கேட்டல் முதலிய அவையே நின்மல சாக்கிரம் முதலிய இவைகளாய் நிகழும்.

கேட்டல் - நின்மல சாக்கிரம்
சிந்தித்தல் - நின்மல சொப்பனம் நின்மல சுழுத்தி
தெளிதல் - நின்மல துரியம்
நிட்டை கூடல் - நின்மல துரியாதீதம்

அருள்நிலையாகிய துரிய நிலை :

சிவம் கதிரவனும் அதன் கதிரும் போலத் தானும் தன் திருவருளும் என இரு திறப்பட்டு நிற்கும் என்பதே சித்தாந்தம். கதிரவன் தோன்றுவதற்கு முன்னே அதன் கதிர்கள் தோன்றிப் பரவுதலால் இருள் நீங்கும். அதுபோலச் சிவனை அடைதற்கு முன்னே திருவருளைப் பெறுதலால் ஆணவ இருள் நீங்கும். இவ்வாறு திருவருளை முதலில் அறிந்து அதனோடு ஒன்றுபடும் நிலையே அருள்நிலை என்றும், துரிய  நிலை என்றும் சொல்லப்படுகிறது. சிவயோகம் என்ற பெயரையும் இது பெறும். திருவருள் சிவத்தின் வேறாகாது அதன் குணமே யாதலால், சிவயோகம் என்பதில் உள்ள சிவம் என்ற சொல் திருவருளைக் குறிக்கும். யோகம் என்பதற்கு ஒன்றுதல் என்பது பொருள். எனவே, திருவருளோடு ஒன்றுதல் சிவயோகம் எனப்பட்டது. திருவருளோடு ஒன்றுபடுதலால் மலம் ஆகிய மாசு நீங்கி உயிர் தூய்மை பெறுதலால், சிவயோகம் ஆன்ம சுத்தியாகும் என அறியலாம்.

அருள் நியையை எய்தினார் பாச நீக்கம் பெறுவர் என்பது இதனால் விளங்கும். பாச நீக்கம் என்பது துன்பம் அற்ற நிலையாகும். துன்ப நீக்கமே முடிந்த பயன் ஆகாது. அதற்கும் அப்பால் உள்ள இன்பப் பேற்றைப் பெறுதல் வேண்டும். அதுவே உயிர் அடைதற்குரிய முடிவான பயனாகும். அருள்நிலை என்பது கண்ணில்லாதவன் கண் பெற்றாற் போன்றது. கண்ணில்லாதவன் கண்ணைப் பெற்ற அளவிலே இன்பத்தை அடையமுடியாது. கண் பெற்றதன் பயனாகப் பொருள்களை யெல்லாம் கண்டு அவற்றுள் வேண்டாத பொருளை விட்டு நீங்கி, வேண்டும் பொருளை அடையும் பொழுதே இன்பம் உண்டாகும். அதுபோலத் திருவருளைப் பெற்ற அளவிலே இன்பம் உண்டாகாது. திருவருளைப் பெற்றதன் பயனாக முப்பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு அறிந்து, வேண்டாத உலகியலினின்றும் நீங்கி, வேண்டும் பொருளாகிய சிவத்தை அடையும் போதே பேரின்பம் உண்டாகும். அருள்நிலை திருவருட்பேறு ஆகும். சிவத்தை அடையும் நிலை சிவப்பேறு ஆகும். திருவருட்பேறு ஆன்ம சுத்தியாகும் எனமேலே கூறினோம். சிவப் பேறாகிய இதுவே ஆன்ம லாபமாகும். அஃதாவது ஆன்மா பேரின்பத்தைத் துய்க்கும் நிலையாகும்.

நிட்டை ஆகிய அதீத நிலை :

அருள்நிலை துரியநிலை எனப்படுதலால், அதற்கு அப்பால் உள்ள இந்தப் பேரின்ப நிலையாகிய சிவப்பேறு துரியாதீத நிலை எனப்படுகிறது. இதனை அதீதநிலை எனச் சுருக்கமாகக் கூறுவர். இந்த அதீத நிலையே நிட்டை நிலை எனப்படுவது. மேற்கூறியவற்றிலிருந்து துரியாதீதம், நிட்டை, சிவப்பேறு, சிவபோகம், இன்புறுநிலை, ஆன்ம லாபம் ஆகிய எல்லாம் ஒரு பொருள் குறித்த சொற்களேயாம் என அறியலாம். நிட்டை ஆகிய அதீத நிலையை மேலு<ம் சிறிது விளக்குவோம். உலகத்தோடு தொடர்புற்று நில்லாமல், உலகை மறந்து, அறிகின்ற தன்னையும் மறந்து, சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தி நிற்பதாகிய நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே நிட்டையாகும். இந்நிலையில் பகல் இரவு முதலிய காலவேறுபாடுகள் தோன்றுவதில்லை. பிற நினைவுகள் எழுவதில்லை. இந்நிலையில் நிற்பார்க்கு எல்லையில்லாததோர் இன்பம் தோன்றும். அவ்வின்பம் மேலும் மேலும் பெருகி அவரை விழுங்கி நிற்கும். இதுவே பரமசுகம் எனப்படும். முடிந்த இன்பம் என்பது அதன் பொருள். மலரிலுள்ள மதுவினைப் பருகிய வண்டு எப்படி அம்மலரிலேயே மயங்கிக் கிடக்குமோ அப்படியே இறைவனது வியாபகத்துள் அடங்கி அழுந்திப் பேரின்ப வாரியில் திளைத்து நிற்பர்.

தன்வசம் அழிந்த தலைவி :

இந்நிலையைத் தலைப்பட்டவர் எவ்வாறு இருப்பர் என்பதைக் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் நிலையில் வைத்துக் காட்டுகிறார் நாவுக்கரசர்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

நங்கையொருத்தி ஒருநாள் திருவாரூர்ப் பெருமானின் திருப்பெயரைக் கேட்டாள். அவனது பெயரைக் கேட்ட அளவிலேயே அவன் மீது அவளை யறியாமலே ஓர் ஈடுபாடு உண்டாயிற்று. அந்தப் பெயருக்கு உரியவன் எப்படி இருப்பான்? இதையறிய அவள் உள்ளம் விழைந்தது. தன் தோழியிடம் இதுபற்றி வினவினாள். அவன் கண்ணைக் கவரும் கட்டழகன். அவனது வடிவழகைச் சொற்களிலே வடித்துக் காட்ட முடியுமா? அடடா! என்ன அழகு! பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் என்று தோழி கூறினாள்.

முதலில் அவனது பெயரைத் தெரிந்து கொண்ட தலைவி இப்பொழுது அவனது வண்ணத்தைக் கேட்டறிந்தாள். பின்னும் அவளது உள்ளத்தில் வேட்கை கிளர்ந்தெழுந்தது. நித்தம் மணாளன், நிரம்ப அழகியன் என்றெல்லாம் சொல்கிறாயே; அந்தச் செம்பவள மேனியன் எங்கே இருக்கிறான் என்பது பற்றிச் சொல் என்று தோழியிடம் கேட்டாள். அவன் இருக்குமிடம் திருவாரூர் என்று சொன்னாள் தோழி. இவ்வாறு பெயர், வண்ணம், ஊர் இவற்றைக் கேட்டறிந்தவுடன் அத்தலைவன் மீது அவள் தீராக் காதல் கொண்டு விட்டாள். எப்பொழுதும் அவனைப் பற்றிய நினைவுதான்! காதலினால் அவள் பிச்சியாகவே ஆகிவிட்டாள். பெற்று வளர்த்த அம்மா அப்பா எல்லோரையும் தன் மனத்திலிருந்து அகற்றி விட்டாள்; உலகத்தார் வகுத்து வைத்த ஆசாரத்தையும் கடக்கத் துணிந்து விட்டாள். அஃதாவது, தலைவனைத்தேடி அவனிருப்பிடத்திற்குத் தனியே செல்லத் துணிவு கொண்டாள். உணவை மறந்தாள்; உறக்கத்தை மறந்தாள்; தன்னையே மறந்தாள்; தன்வசம் அழிந்து, தலைவன் வழிப்பட்டு விட்டாள். இனி, இக்கருத்தை அருளியலோடு பொருந்திக் காண்போம்.

சத்தி நிபாதத்து உத்தமர் :

தலையன்புடைய இத் தலைவியின் நிலையில் உள்ளவர் சத்தி நிபாதம் வாய்க்கப் பெற்ற உத்தமர். அவள் முதலில் தலைவனது பெயரைக் கேட்டாள் என்பது, ஞானாசிரியரிடம் உபதேசத்தைக் கேட்டு இறைவனது இயல்பைப் பொதுவாக உணர்ந்த நிலையைக் குறிப்பதாகும். இது கேட்டல் என்றபடி நிலையாகும். அந்நங்கை அடுத்துத் தலைவனது வண்ணத்தைக் கேட்டறிந்தாள் என்பது, பின்னர் இறைவனது இயல்பை ஆராய்ந்து உணர்ந்த நிலையைக் குறிப்பதாகும். இது சிந்தித்தல் என்றபடி நிலையாகும். உலகியலில் ஒரு பெண் ஓர் இளைஞனைச் சந்தித்துப் பழக நேரிடும்போது முதலில் பொதுவாக நட்பு ஏற்படுகிறது. அவ்வளவில் நில்லாமல் அப்பெண் அவ் இளைஞனைப் பற்றி அடிக்கடி நினைக்கிறாள் என்றால் அந்நட்புக் காதலாக மலர்கிறது என்பது பொருளாகும். அதற்கும்மேல், அவள் அவ் இளைஞனுடைய இருப்பிடம், அவனது சூழ்நலை முதலியவற்றை அறிந்து அங்கே செல்ல மிகுந்த ஆர்வம் காட்டுகிறாள் என்றால் அவள் காதலில் உறுதிகொண்டு விட்டாள் என்பது பொருள்.

அவ்வாறே தலைவி தலைவனது திருவாரூர் பற்றிக் கேட்டறிந்தாள் என்பது அவன் மீது கொண்ட காதலின் உறுதிப்பாட்டைப் புலப்படுத்தும். இது ஞானாசிரியரிடம் கேட்டு அதைப் பலகாலும் சிந்தித்துப் பின்னர் தெளிவுணர்வு பெற்ற நிலையைக் குறிப்பதாகும். இது தெளிதல் என்றபடி நிலையாகும். அந்நங்கை அவனுக்கே பிச்சியானாள் என்பது, தெளிவுணர்வின் பயனாக இறைவனிடத்தில் அழுந்தி நிற்பதாகிய நிலையைப் பெற்றதைக் குறிப்பதாகும். இது நிட்டை கூடுதல் என்றபடி நிலையாகும். அன்னையையும் தந்தையையும் நினைவிலிருந்து அகற்றினாள் அந்நங்கை என்பது ஞான நெறியில் என்ன பொருளைக் குறிக்கும் என்பதைக் காண்போம். ஞான நெறியில் அன்னையாக இருப்பது திரோதான சத்தி. அத்தனாக இருப்பவன் அச் சத்திக்குரிய தடத்த சிவன். திரோதான சத்தியே தாயாக நின்று பாசமாம் பற்றினை அறுத்து உயிரைப் படி முறையில் வளர்த்து வருகிறது. சத்தி நிபாதம் என்ற பரிபக்குவ நிலையில் திரோதான சத்தி நீங்கி விடுகிறது. தடத்த சிவன் என்ற நிலையும் அவ்வாறேயாம். இதுவே ஞானநெறியில் அன்னையையும் அத்தனையும் நீத்த நிலையாகும்.

அகலிடத்தார் ஆசாரம் என்பது திருமணப் பருவம் வந்த பெண் இல்லினை இகந்து செல்லாதிருத்தல் என்ற பழைய மரபாகும்; தலைவி அதனை அகன்றாள். அஃதாவது, இல்லிறந்து செல்லத் துணிந்தாள். ஞானநெறியில் அகலிடத்தார் ஆசாரம் என்பது, உலக மாந்தர் தன் முனைப்போடு கூடி வினைகளை ஈட்டியும் வினைப்பயனை நுகர்ந்தும் உழலுதல். நிட்டை கூடிய ஞானியர்க்குத் தன் முனைப்பும் இல்லை; வினைகளை ஈட்டுதலும் இல்லை; வினைப் பயனால் தாக்குறுதலும் இல்லை. ஆதலால் அவர் அகலிடத்தார் ஆசாரத்தை அகன்றவர் ஆவார். நங்கை தலைவன் ஒருவனையே நினைத்து தன்னை மறந்து நின்றாள். அவ்வாறே நிட்டை கூடியவரும் தம்மையும் உலகையும் மறந்து, இறைவன் ஒருவனையே அறிந்து நிற்பர். கன்னிப் பெண் என்ற பெயர் நிறை அழியாதிருக்கும் நிலையைக் குறிக்கும். இவள் தலைவனையே நினையும் நினைவினால் நிறையழிந்து நின்றாள் ஆதலால், தன் நாமம் கெட்டாள் எனப்பட்டாள். நிட்டை கூடியவரும் சீவத் தன்மை கெட்டு நிற்பர். ஆதலால் நாமம் கெடுதல் அவர்க்கும் பொருந்துவதேயாம். நங்கை தலைவன் தாளைத் தலைப்பட்டாள் என்பது, அவள் தனக்கென ஒன்று இன்றி அவன் வழிப்பட்டு விட்டாள் என்பதைக் குறிக்கும். ஞான நெறியில் தாளைத் தலைப்படுதல் என்பது நிட்டையில் நின்றார் எய்தும் இன்புறு நிலையை உணர்த்தும். இப்படியெல்லாம் ஒற்றுமை கண்டு மகிழும்படியாக உலகியலையும் அருளியலையும் இணைத்து நிட்டை நிலையை இனிது விளக்கியுள்ளார் நாவுக்கரசர்.

ஞானத்தின் நிறை நிலை :

ஞானத்தின் படிநிலைகளாகிய கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்ற நான்கினுள் நிட்டையே ஞானத்தின் நிறைநிலை ஆகும். அதுபற்றி, அதனை ஞானத்தில் ஞானம் என்பர். ஏனைக்கேட்டல் முதலிய மூன்றனையும் முறையே ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம் என்பர். ஞானத்தின் நிறைநிலையாவது சிவத்தின் உண்மையியல்பைத் தலைப்படுதல். சிவத்தின் உண்மையியல்பாவது, இன்ப வடிவினதாயிருத்தல். கேட்டல், சிந்தித்தல் ஆகிய நிலைகளில் நிற்போர் இறைவனது பொதுவியல்பை அறிந்தவரே யன்றி உண்மையியல்பை அறிந்தவர் ஆகார். நிட்டை நிலையை எய்தினோரே அவனது உண்மையியல்பாகிய வரம்பிலா இன்பத்தைத் தலைப்பட்டு அதன் கண் அழுந்தி நிற்போர் ஆவர். ஞானத்தின் நிறைநிலையை அடைந்த அவரே ஞானியர் எனப்படுகின்றனர்.

ஞானியர் நாடுவது :

உலகத் தொடர்பை விடுத்து நிட்டை கூடி நிற்றலையே ஞானியர் நாடுவர். அவர்க்கு உடம்பும் மிகையாகும். அவர் உடம்பிற் கட்டுண்டிருத்தலைச் சிறிதும் பொறார். உடம்பைப் பெரிய சுமையாகக் கருதுவர். இந்நிலைக்கு ஓர் உவமை கூறலாம். ஊரின் புறத்தே ஓர் இடுகாடு. அதனை நோக்கி விரைந்து வருகிறான் ஓர் ஆடவன். அவன் கையில் ஒரு சவம்! அவன் கூலிக்காக அதைச் சுமந்து வருகிறான். இடுகாட்டில் அதைச் சேர்த்துவிட வேண்டும். அவ்வளவே அவன் வேலை. மற்று, அவனுக்கும் அச்சவத்துக்கும் வேறு எவ்வித ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. அப்பிணச் சுமையை எப்போது கீழே இறக்கலாம் என்ற விரைவே அவன் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது. அவனது உள்ள நிலை போன்றது ஞானிகளின் நிலை. பிணத்தைச் சுமந்து செல்பவனுக்கும் அப்பிணத்திற்கும் என்ன தொடர்போ அன்ன தொடர்பே தமக்கும் தம் உடம்பிற்கும் என்று கருதுவர் ஞானிகள். அதனால் தம் உடம்பை விரையக் கழித்தலையே அவர்கள் கருதியிருப்பர். மாணிக்கவாசகர், தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே என்று கூறுவது உடல் வாழ்க்கையில் அவருக்கிருந்த வெறுப்பினைப் புலப்படுத்தும். வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் என்று கூறுவது, நிட்டையிற் புகுந்து சிவானந்தப் பேற்றைப் பெறுதலில் அவருக்கிருந்த விரைவினைப் புலப்படுத்தும். ஞான நிட்டையாகிய இது மோன சமாதி எனவும்படும். பேசா அனுபூதி என்பதும் இதுவே. இது மனம் வாக்குகள் செயற்படும் நிலை அன்று. ஆதலால் இதில் விளையும் சிவானந்தம் அனுபவத்தால் அறியப்படுமேயன்றி, அயலவர் உரையால் அறிய வராது. மருவி இருவரும் புணர வந்த இன்பம் வாயினாற் பேசரிது; மணந்தவர் தாம் உணர்வர் என்றது இது பற்றியேயாம்.

ஞானமும் அன்பும் :

ஞானமாவது பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு அறிவது. அவ்வாறு அறியும் பொழுதே, துன்பந்தரும் பொருளை விட்டு நீங்கி இன்பம் தரும் பொருளைப் பற்ற முடியும். எனவே இன்பப் பொருளைப் பற்றுதற்கு ஏதுவாக இருப்பது ஞானம் என்பது விளங்கும். ஆயினும் அந்த ஞானமே இன்பத்தைத் தந்துவிடாது. ஞானத்தால் வ்வின்பப் பொருளைப் பற்றியவன் அதனை மேலும் மேலும் விரும்பும் போதே அவனது உணர்வு அப்பொருளிடத்தில் அழுந்தி இன்பத்தை அனுபவித்தல் கூடும். அந்த விருப்பமே அன்பு. அந்த அன்பு எந்த அளவிற்கு மிகுகின்றதோ அந்த அளவிற்கு இன்பமும் மிகுந்து செல்லும். இதனால், ஞானத்தால் வருவது அன்பு என்பதும், அந்த அன்பினால் விளைவது இன்பம் என்பதும் பெறப்படும். எனவே, நிட்டை நிலையில் உள்ள பெருமக்கள் சிவம் ஒன்றையே அறிந்து, அதன்பால் மேலும் மேலும் அன்பு மீதூரப் பெற்று, அதனிடத்தே அழுந்தி ஆராத இன்பத்தைத் துய்த்து நிற்பர் என்பது இனிது விளங்கும். இங்கே ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். ஞானமும் அன்பும் இணைபிரியாதவை. இவையிரண்டும் ஒன்றை ஒன்று விட்டு நிற்பன அல்ல. ஒன்றில் ஒன்று கலந்தேயிருக்கும். முற்றிய ஞானத்தின் பயனே பக்தி என்பதைத் தெளிவுறுத்தி,

ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார் - (திருஞானசம்பந்தர் புராணம் செ.843)

என்று சேக்கிழார் பெருமான் அருளிச் செய்துள்ளமை காணலாம். இப்பிறப்பில் பத்தி நிலையில் உள்ளவரும் கூட முற்பிறப்பில் ஞான நிலையில் நின்ற தொடர்புடையவர்களே என்பது சிவநெறிக் கொள்கையாகும். சில சமயத்தார் ஞானம்வேறு, பக்தி வேறு எனக் கொண்டு, ஞானத்தையே உயர்த்திக் கூறுவர்; ஞானம் ஒன்றே முத்திக்கு வழி என்றும் வலியுறுத்துவர். ஞானத்தை மட்டும் வேண்டிப் பத்தியை வேண்டாத அவர்கள் கொள்கையைச் சித்தாந்த சைவம் ஏற்படுவதில்லை. ஞானத்தால் வீடு என்று நாமும் கூறுவோம். ஆனால், அதற்கு நாம் கூறுகிற பொருள் அவர்கள் கூறுவது போலன்று. ஞானம் அன்பாக வடிவெடுத்து இறைவனிடத்து அன்பு மீதூரப் பெற்று அவன் திருவடிக்கீழ் சென்று புகுதலே வீடு என்பது நமது கொள்கையாகும்.

தொகுத்துக் கூறுதல் :

மேற்கூறிய செய்திகளைக் கருத்திற் கொண்டு பயின்றால் இவ்வதிகாரத்தின் பொருள் முழுதும் இனிது விளங்கும். செய்யுள் அமைந்துள்ள வரிசை முறையில் அவற்றின் கருத்துக்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். தன்முனைப்போடு யான் செய்கின்றேன் என்று எண்ணிச் செய்வது, திருவருளைப் பின்னிட்டுத் தான் முற்பட்டு நிற்றலாகும். இவ்வாறு தன்னை முன்நிறுத்திச் செயற்படுவோர் முன்புகுவார் ஆவார். நாம் செயற்படுவது திருவருளால் என்பதை மறவாமல் நினைத்து, தமது செயலை இறைவனது பணியாகக் கருதிச் செயற்படுதல், தன்னைப் பின்னிட்டுத் திருவருளை முன்னிட்டு அதன் வழி நிற்றலாகும். இவ்வாறு நிற்போர் பின் புகுவார் ஆவார். முன் புகுந்தவராகிய அவரே பக்குவம் வந்த காலத்தில் திருவருளின் பின் புகுந்து பேரின்பத்தை எய்துவர். உயிர் அருளோடு கூடி ஒற்றுமைப்பட்டிருப்பது அருள்நிலை எனப்படும். அருள் இறைவனது ஒளியாதலின் அவ்வொளி உயிரைப் பற்றியுள்ள மல இருளை ஓட்டும். இவ்வாறு உயிர் அருளைச் சேர்ந்ததன் பயனாகப் பாசத்திலிருந்து விடுபடும். இதனால் துன்பம் நீங்கும். இதுவே முடிந்தநிலை அன்று. அறிவின் பயன் இன்பம் தரும் பொருளைச் சார்ந்து இன்புறுதலாகும். இன்பப் பொருளாய் இருப்பது சிவம். சிவம் பகலவன் போலவும், அதன் அருள் பகலவன் ஒளி போலவும் இருப்பவை. கண் போல இருப்பது உயிர். கண் பகலவனது ஒளியைப் பெறுவது போன்றது உயிர் அருளோடு பொருந்துவது. ஒளியைப் பொருந்திய கண் அதனால் பகலவனை நோக்கி அந்த வளப்பெருங்காட்சியில் அழுந்தி நிற்பது போன்றது உயிர் அருள் வழியாகச் சிவத்தை யறிந்து இன்புறுவது. இதனால், அருள்நிலையில் இன்பமில்லை என்பதும், சிவத்தோடு கூடுவதே இன்பநிலை என்பதும் விளங்கும். உயிரும் அருளும் சேர்வது இருவர் மடந்தையர் சேர்வது போன்றது என்றும். உயிரும் சிவமும் சேர்வது ஒருவனும் ஒருத்தியும் தம்மிற் கலந்து இன்புறுவது போன்றது என்றும் ஆசிரியர் கூறுகிறார். ஒருவனும் ஒருத்தியும் கூடும் கூட்டத்தில் அவ்விரு பாலாரும் இன்புறுகின்றனர். இவ் உவமையின்படி பார்த்தால் உயிர் இன்புறுவது போலச் சிவமும் இன்புறுதல் வேண்டும். சிவத்திற்கு இன்ப நுகர்ச்சி உண்டோ? என்ற ஐயத்தைப் போக்குகிறார் ஆசிரியர். இன்ப நுகர்ச்சி என்பது உயிருக்கே யன்றிச் சிவத்திற்கு இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்.

சொற்புணர்ச்சி ஒன்றைக் காட்டி, உயிரும் சிவமும் இயைந்து ஒன்றாய் நிற்றலை விளக்குகிறார். தாள், தலை என்னும் இரு சொற்கள் புணர்ந்து தாடலை என ஒரு சொல்லாய் நிற்றல் போல உயிரும் சிவமும் இயைந்து பிரிப்பின்றி நிற்கும். முத்தியில் இன்பத்தைக் கொடுப்பதாகிய சிவமும், அவ்வின்பத்தைத் துய்ப்பதாகிய உயிரும் ஆகிய இரு பொருளும் உள்ளனவாயினும் இரண்டு என்று சொல்ல வாராதபடி ஒற்றுமைப் பட்டிருக்கும். இந்நிலையே ஏகம் அல்லது ஒன்றாதல் எனப்படும். அபேத வாதம் கூறுவோர் உயிரும் இறைவனும் பொருளால் ஒன்றே என்பர். ஒரு பொருளே என்றால் ஒன்றுதல் என்பது எவ்வாறு நிகழும்? இரண்டு பொருள் இருந்தால்தான் ஒன்றுதல் நிகழமுடியும். மேலு<ம், அவர்கள் கூறுவது போல ஒன்றே எனில், பெறுவானும் இல்லை. இன்பப் பேறும் இல்லை என்பதாய் முடியும். ஆதலால் அபேதம் எனப்படும் ஒருமைக் கொள்கை பொருந்தாது.

இனி, பேதவாதம் கூறுவோர் உயிரும் இறைவனும் இருளும் ஒளியும் போல முற்றிலும் வேறுபட்ட இருவேறு பொருள்கள் என்பர். இருவேறு தன்மையுடைய பொருள்கள் எக் காலத்திலும் ஒன்றுதல் இயலாது. ஒன்றுதல் இல்லையாயின் அனுபவித்தலும் இல்லையாம். ஆதலால் பேதம் எனப்படும் இருமைக் கொள்கையும் பொருந்தாது. சித்தாந்த நெறிப்படி, உயிரும் சிவமும் உப்பும் நீரும் போலத் தம்மில் இயைந்து ஒன்றாதற்குரிய இருபொருள்கள், <உப்பு, நீரில் கலந்து வேறு காணப்படாது நிற்றல் போல உயிர் சிவத்தோடு கலந்து ஒன்றாய் நிற்கும். அங்கும் உயிர் உள்ளதாயினும், தான் என்ற உணர்வு தோன்றாமல் தன்னை மறந்து பேரின்பத்தில் மூழ்கியிருக்கும். ஆதலால் உயிர் வேறு காணப்படாமல் சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும். இதுவே முத்தியில் உயிரும் சிவமும் நிற்கும் முறையாகும். சிவத்தை அடைவிக்கும் ஞானம் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என நான்குபடி நிலைகளாய் நிகழும். கேட்டல், சிந்தித்தல் என்னும் படிநிலைகளில் நிற்போருக்கு யான் எனது என்னும் பற்று அறுதல் இல்லை. உலகப் பழக்கத்தை அவர்களால் முற்றிலு<ம் விட இயலாது. திருவருளை உறுதியாகப் பற்றி நிற்றலும் இயலாது. இவர்களைப் பற்றார் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இந்நிலையைக் கடந்து, தெளிவுணர்வை உற்றுத் திருவருளோடு ஒன்றி நிற்பவர்களை உற்றார் என்று குறிப்பிடுகிறார். இதற்கு மேல் திருவருள் வழியாகச் சிவத்தைக் கண்டு அதனோடு கலந்து ஆனந்த வெள்ளத்துள் அழுந்தி நிற்கும் நிலையே நிட்டை எனப்படும். நிட்டையாகிய சிவப்பேற்றினை எய்திய அவர்களையே பெற்றார் என்று குறிப்பிடுகிறார்.

இவர்களுள், பற்றாராய் நிற்போர் <உலகியலை விடுத்துத் திருவருளை முற்றாக உணர்ந்து அருள் நிலையைத் தலைப்படுவதற்கு என்ன வழி என்பதை அடுத்துக் கூறுகின்றார். தன் செயல் அறுதலே அதற்கு வழியாகும். பேய் பிடிக்கப்பட்டவருக்குத் தன் உணர்வு என்பது இருக்காது. அதுபோன்ற நிலையை ஆன்மா அடைந்து தன் செயலற்று நின்றால் திருவருள் வெளிப்பட்டு அவரைத் தன் வயப்படுத்திக் கொள்ளும். இவ்வாறு அருள்நிலையைத் தலைப்பட்டோர் அப்பால் ஆனந்த நிலையாகிய அதீத நிலையை எய்துவார். அதுவே நிட்டை நிலையாகும். இன்ப வடிவாகிய சிவத்தில் அழுந்திநிற்கும் அவர்தம் உணர்வில் அம்மெய்ப்பொருள் ஒன்றுமே தோன்றும். பிறிதொன்றும் தோன்றாது. முன்பு தாம் மேற்கொண்டு செய்து வந்த யோகம், கிரியை, சரியை முதலிய சாதனங்கள், உறங்கியவன் கையிலுள்ள பொருள் எப்படித் தானே நழுவுமோ அப்படியே அவரறியாமலே அவரை விட்டு நீங்கும். அவற்றை இனி மேற்கொள்ள வேண்டியதில்லை என்று எண்ணி அவற்றை விடுவதில்லை. அவற்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவரிடத்தில் எழுவதில்லை.

இந்த இன்புறு நிலையைத் தலைப்பட்ட ஞானியர் சிவத்தை இறுகப்புல்லிப் புணர்ந்து தம்மை மறந்து தமது அறிவையும் மறந்து பேரின்ப வெள்ளத்துள் மூழ்கித் திளைப்பர். நுகர்பவன், நுகர்ச்சி அறிவு, நுகரப்படும் பொருள் ஆகிய மூன்றும் வேறு வேறாய் உள்ள தன்மை தோன்றாத, உரை உணர்வுக்கு எட்டாத இன்ப நிலை அது. யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே என்று சொல்வது இந்நிலையே ஆகும். இன்புறு நிலைக்கு அடிப்படை இறைவனிடத்துச் செய்யும் அன்பாகும். இறைவன் செய்து வரும் இடையறா உதவியை நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் நனைந்து நனைந்து அவனிடத்து இடையறாப் பேரன்பு செய்தலே பேரின்பத்திற்கு வழி என்று சொல்லி முடிக்கின்றார் ஆசிரியர். இனி இவ்வதிகாரத்துள் புகுவோம்.

71. பின் புகுவார் இன்புறுவார்

இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின்.

பொருள் : பக்குவம் வருவதற்கு முன்னே, துன்பம் தரும் இருளில் வழி காட்டி வருகின்ற திருவருள் ஒளிக்கு முன்னால் சென்றவர், பக்குவம் வந்த காலத்தில் அதன் பின்னால் செல்வர்; அவ்வாறு பின் சென்று பேரின்பமாகிய பயனை அடைவர்.

சொற்பொருள் :

துன்புஆர் இருளின் - (பக்குவம் வராத காலத்தில்) துன்பம் நிறைந்த இருளில்
எழும் சுடரின் - தோன்றி வழிகாட்டி வரும் திருவருள் ஒளிக்கு
முன் புகுவார் - முன்னால் சென்றவர்
பின் - பக்குவம் வந்த காலத்து
பின்புகுவார் - அவ்வொளிக்குப் பின்னால் செல்வர்.
இன்புறுவார் - அவ்வாறு பின் சென்று பேரின்பத்தை அடைவர்.

விளக்கம் :

முன்புகுவார் :

உடம்பிற்குப் பல வகையான குற்றங்குறைகள் உண்டு. முதலாவதாக, அது பிறக்கும் பொழுதும் துன்பத்தைத் தருகிறது. இறக்கும் பொழுது அதைவிடப் பெரிய துன்பத்தைத் தருகிறது.

இரண்டாவதாக, மூப்பு என்னும் நிலை அதற்கு ஏற்படுகிறது. மூப்பு நிலை எவ்வளவு துன்பமானது! உடலெங்கும் சுருக்கங்கள் விழுகின்றன. நடக்க முடியாமல் நடை தள்ளாடுகிறது. கண்பார்வை மங்கிப் போகிறது. பற்கள் கழன்று போகின்றன. காது சரியாகக் கேட்பதில்லை. வாயில் எப்பொழுதும் இருமல். அவனை யார் மதிப்பார்கள்? மனைவியும் அவன் சொன்னபடி கேட்பதில்லை. மகனைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. மகன் அவனிடம் எதிரி போல நடந்து கொள்கிறான். மூன்றாவதாக, நெஞ்சுவலி, பல்வலி, மூட்டுவலி, கால்வலி, மேல்வலி, நீரிழிவு என்று தொல்லை கொடுக்கின்றன. இளமைக் காலத்தில் விருந்தினர் போல எப்போதாவது வந்து சென்ற நோய் மூப்பு வந்ததும், குடும்பத்தில் ஒருவர் போலக் கூடவே தங்கி விடுகிறது!

உலகினர் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. சிந்தித்தால் உடல்மீது இவ்வளவு பற்று ஏற்படுமா? இவ்வாறு கூறுவது கொண்டு, உடம்பைப் பேணாது புறக்கணிக்க வேண்டும் என்று கருதி விடலாகாது. சிவ நூல்கள் உடம்பை நன்கு போற்று என்றுதான் கூறுகின்றன. நலமாக வைத்துக்கொள் என்றுதான் கூறுகின்றன. ஏனெனில், ஞானம் பெறுவதற்கு உடம்புதான் சாதனம். உடம்பை உயிர் நலத்திற்குக் கருவியாகப் பயன்படுத்த வேண்டுமேயன்றி, உடம்பைப் பேணுதல் ஒன்றையே முடிந்த பயன் என்று நினைத்து விடக்கூடாது. ஆக்கைக்கே இரை தேடி அலையலாகாது. உடல் மீது அளவு கடந்த பற்று வைத்தல் கூடாது. உலகர் உடற்பற்றும் பொருட் பற்றும் உடையராய் இருப்பதிலே வியப்பொன்றும் இல்லை. ஆனால், ஞான நெறியிற் செல்லும் சிலரும் அவ்வாறு இருப்பது தான் வியப்பு. ஞானாசிரியனிடத்தில் உடல், பொருளோடு ஒப்பத் தம்மையும் அவனுடையனவாக ஒப்புவித்துத் தானம் செய்த பிற்பாடு, தானம் செய்தவழியிலே நிற்றலே முறையாகும். தானம் செய்த வழியிலே நிற்றலாவது, தாம் சிவனுக்கு அடிமை என்பதை உணர்ந்து, அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமல் நிற்றலேயாகும். அவ்வாறு நில்லாமல், உடல் பற்றும், பொருட்பற்றும் உடையவராய்த் தன் முனைப்போடு நிற்றல் எவ்வகையில் உய்வைத் தரும்?

இது பற்றித் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார். காட்டில் உள்ள கோடிக்கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்து எடுத்த சந்தனத்தையும், வானைத் தொடும்படி குவித்த மலர்களையும் பயன்படுத்திச் சிவனை வழிபட்டாலும் என்ன பயன்? உடம்பைத் தமக்கு வேறாக உணர்ந்து, அதன்மீது வைத்த பற்றை விடுத்துச் சிவனையே பற்றாக உணர்ந்தாலன்றி அவனது திருவடியைப் பெற இயலாது என்கிறார். ஒரு நோய் குணமாவதற்கு மருத்துவர் சில மருந்துகளைக் கொடுப்பார். அதனோடு சில பத்தியங்களையும் விதிப்பார். இதை உண்ணக் கூடாது. அதைத் தொடக்கூடாது என்றெல்லாம் சொல்வார். அவர் சொன்னபடி மருந்தையும் உட்கொள்ள வேண்டும். பத்தியத்தையும் பின்பற்ற வேண்டும். பத்தியத்தை விடுத்து மருந்தை மட்டும் உட்கொண்டு பயனில்லை. பத்தியத்தை மேற்கொள்ளாமல் மருந்தினை மட்டும் உட்கொள்வார் போல, பற்று நீங்கியிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல் முதலியவற்றை மேற் கொள்ளாமல் சிவ பூசை செய்கின்றனர்; சிவ பூசை செய்யும் போதே மனைவி மக்கள் மீது சீறிப்பாய்கின்றனர். அதை ஏன் செய்தாய்? இதை ஏன் செய்யவில்லை? என்று கடிந்து கொள்கின்றனர். இவ்வாறு திருவருளில் அடங்கி நில்லாமல் தன் முனைப்போடு திருவருளுக்கு முன்னே செல்லும் இவரையே இருளின் எழும் சுடரின் முன் புகுவார் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

பின் புகுவார் :

உடைமைகளும் உறவுகளும் ஆகிய எல்லாம் கடலில் மிதக்கும் கட்டைகள் போன்றவை என்பார்கள். இந்தக் கட்டைகள் ஒரு சமயம் சேர்ந்து இருக்கும். பிறகு காற்றோ, அலையோ அடிக்கும் பொழுது அவை பிரிந்து வெவ்வேறு திசைகளில் சென்று விடும். செல்வம், மனைவி, மக்கள், உறவினர் எல்லோரும் கடலில் ஒன்று சேர்க்கப்பட்ட கட்டைகள் போன்றவர். எப்பொழுது போக வேண்டுமோ அப்பொழுது போக வேண்டியவர்கள். இந்த உண்மையைத் தெளிந்தால் பற்றை விடுவது எளிது. தாமரை இலை தண்ணீரிலேயே பிறந்து தண்ணீரிலேயே வளர்கிறது. ஆயினும் அது தண்ணீரைத் தன் மீது தங்க விடுவதில்லை. தண்ணீர் மீது அதற்குப் பற்றுதல் இல்லை. அந்தத் தாமரையிலையைப் போல வாழ வேண்டும்; பற்று இல்லாமல் வாழ வேண்டும். நான் செய்கிறேன் என்று நினைக்காமல், எல்லாவற்றையும் இறைவன் செயலாக உணர்ந்து அவன் வழியில் நிற்க வேண்டும்.

பக்குவம் வராத பொழுது திருவருளுக்கு முன்னால் சென்ற அவரே பக்குவம் வந்த காலத்தில் உண்மையைத் தெளிந்து, எல்லாப் பற்றினையும் விடுத்துத் திருவருளுக்குப் பின்னே செல்வர். ஆதலால் இருளின் எழும் சுடரின் பின் புகுவார் என்று குறிப்பிட்டார் ஆசிரியர். முந்திய அதிகாரத்தில் உள்ள உற்கை தரும் பொற்கை என்னும் செய்யுளின் தொடர்ச்சியாகவே இச்செய்யுள் அமைந்துள்ளது. அச்செய்யுள் அருள்நிலை இப்படிப்பட்டது என்பதை உணர்த்தியது. இச்செய்யுள் அருள்நிலையால் விளையும் பயனை உணர்த்துகிறது. அஃதாவது, அருள் நிலையினால் இன்புறு நிலை உண்டாகும் என்று கூறுகிறது.

குறிப்பு :

பொருள் நிலைக்கு ஏற்பச் செய்யுளில் உள்ள சொற்களைப் பின் வருமாறு அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். துன்பார் இருளின் எழும் சுடரின் முன் புகுவார் பின் பின்புகுவார் (ஆனபொழுது) இன்புறுவார் என அமைத்துக் கொண்டால் பொருள் இனிது விளங்கும்.

72. அருள்நிலைக்கு அப்பால் உள்ளது

இருவர் மடந்தையருக்கு என்பயன்? இன்பு உண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின்.

பொருள் : பெண் பாலார் இருவர் சேர்வதிலே இன்பம் இல்லை. பெண் மகள் ஒருத்தியும் ஆடவன் ஒருவனும் கூடும் கூட்டத்திலேயே இன்பம் உண்டாகும். அதுபோல, உயிர் அருளோடு சேரும் நிலையில் இன்பமில்லை. உயிர் அருளுக்கு முதலாகிய, சிவத்தோடு கூடும் போதே பேரின்பம் விளையும்.

சொற்பொருள் :

இருவர் மடந்தையருக்கு என்பயன் - பெண்பாலார் இருவர் சேர்விலே பயன் உண்டோ?
ஒருவன் ஒருத்தி உறின் - ஆடவன் ஒருவனும் பெண் மகள் ஒருத்தியும் தம்மில் கூடின்
இன்பு உண்டாம் - அப்போதே இன்பம் உண்டாகும்.
திருவருளைப் பற்றிய அளவிலே உயிருக்குப் பேரின்பம் விளையாது; சிவத்தை அறிந்து அதில் அழுந்திய போதே ஆனந்த நிலை உண்டாகும் என்பது இக்குறட்பாவின் கருத்து.

விளக்கம் :

உயிர் சிவத்தை அணைந்து பெறும் பேரின்பத்தை எப்படி விளக்குவது? உலகர்க்குத் தெரிந்த சிற்றின்பத்தை வைத்துப் பேரின்பப் பொருளை விளக்கிக் காட்ட முற்பட்டனர் நமது சமயச் சான்றோர். சிற்றின்பப் பொருளைப் பல துறைகளாக வகுத்துத் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலியோர் கூற்றாக அமைத்துப் பாடுவது பழைய அகப் பொருள் மரபாகும். அம் மரபையே இவர்களும் பின்பற்றினர். இறைவனைத் தலைவனாகவும், உயிரை அவன் மீது தீராக் காதல் கொண்ட தலைவியாகவும் வைத்துப் பாடல்கள் புனைந்தனர். ஞானசம்பந்தர் முதலிய அருளாசிரியர்கள் அகப் பொருளுக்குரிய தலைவி முதலியோர் கூற்றாகப் பல பதிகங்களைப் பாடியுள்ளதைக் காணலாம்.

அக இலக்கியத் தலைவி :

பழைய அக இலக்கியத்தில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. காதல் வயப்பட்ட தலைவன் ஒருவன் தலைவியைக் காணப் புறப்பட்டு வருகிறான். அது நள்ளிரவு. வழியில் ஒரு காட்டாறு. மதயானைகளையும் அடித்துக் கொண்டு செல்லும் வேகத்தோடு ஓடுகிறது. அதையும் பொருட்படுத்தாது குறுக்கே பாய்ந்து நீந்தி வருகிறான். தலைவி சொன்ன குறிப்பிட்ட இடத்தில் வந்து நிற்கிறான். வீட்டிலுள்ள தலைவி இந்நேரம் அவர் வந்திருப்பாரே என்று தவிக்கிறாள். முன்கோபம் கொள்ளும் தந்தை இருக்கிறார். அவருக்குத் தெரியாமல் வெளியேற வேண்டும். எனவே காற்சிலம்பை ஓசையெழாதபடி கட்டிக் கொண்டு ஏணிமேல் ஏறித் தோட்டத்தில் இறங்கி, மழை சோ வெனப் பெய்யும் அந்த நள்ளிரவில் காதலன் அகலத்தைத் தழுவுகிறாள்.

ஆன்மாவாகிய தலைவி :

இவளைப் போன்ற துணிவுள்ள தலைவியைத் திருநாவுக்கரசர் பதிகத்திற் காணலாம். திருவாரூர்ப் பெருமான் மீது காதல் வயப்பட்டுத் தன்வசம் அழிந்த தலைவி அவள். பக்குவப்பட்ட ஆன்மா தான் அந்தத் தலைவி. அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள். அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை என்று அவளது செயலைத் தோழி கூற்றாகக் குறிப்பிடுகிறார் நாவுக்கரசர். ஆன்மாவாகிய இந்தத் தலைவியின் செயல் அக இலக்கியத்தில் வரும் அந்தத் தலைவியின் செயலை நமக்கு நினைவூட்டுகிறது அல்லவா?

உவமையளவிலே கொள்ளுதல் :

உயிரைத் தலைவியாக வைத்துப் பாடும் மரபினை ஒட்டியே இங்கும் நம் ஆசிரியர் உமாபதிசிவம் உயிரைப் பெண்ணாகக் குறிப்பிடுகிறார். உயிர் அருளோடு கூடிய அளவில் இன்ப நிலை உண்டாகாது. உயிரும் சிவமும் கூடியபோதே இன்ப நிலை உண்டாகும் என்னும் பொருள்பட இன்புண்டாம் ஒருவன் ஒருத்தி உறின் எனக் கூறுகிறார். இங்கு இறைவன் ஆணாகவும் உயிர் பெண்ணாகவும் கூறப்பட்டுள்ள நிலையைக் காணலாம். இது கொண்டு, உயிர் இயற்கையிலே பெண்ணியல்பினது என்று கருதிவிடலாகாது. ஆண் பெண் என்னும் வேறுபாடு உடம்பிற்கேயன்றி உயிருக்கு இல்லை. எனவே, இச்செய்யுளில் ஒருவன் ஒருத்தி என்றதை உவமை என்ற அளவிலே மட்டும் கொள்ள வேண்டும்.

இருவர் மடந்தையர் :

உயிர் கட்டு நிலையில் உலகைச் சார்ந்து நிற்கிறது. முத்தி நிலையில் இறைவனைச் சார்ந்து நிற்கிறது. எவ்விடத்திலும் இறைவனது துணையின்றி அதற்கு நிலையில்லை; அறிவில்லை; செயலில்லை; வாழ்வில்லை. மணிவாசகர் இறைவனது திருவருட் சார்பு இல்லாமையால் தமக்கு ஏற்பட்ட நிலை பேறின்மையையும், வாட்டத்தையும் புலப்படுத்துவாராய், கொம்பர் இல்லாக் கொடிபோல் அலமந்தனன் என்று கூறுதல் காணலாம். இவ்வாறு எவ்விடத்தும் ஒரு துணையின்றித் தனித்து நிற்கும் இயல்பு இல்லாமை பற்றி உயிர் பெண்ணோடு உவமிக்கப்பட்டது. சிவம் முதலாக இருக்க, அருள் அதன் குணமாக இருப்பது. முதலாகிய பொருளை விட்டுக் குணம் தனித்து நில்லாது. ஆசிரியர் உமாபதி சிவம் தமது சிவப்பிரகாச நூலில்,

இறையவன்முதல்; அவன்றன்
இலங்கொளி சத்தியாமே

என்று கூறியிருத்தல் காணலாம். இவ்வாறு சிவத்தையன்றித் தனித்து நிற்றல் கூடாமை பற்றிக் குணமாகிய அருளும் பெண்ணோடு உவமிக்கப்பட்டது.

அருள்நிலையும் ஆனந்த நிலையும் :

உயிர் முதலில் திருவருளை உணர்ந்து அதனோடு கலந்து ஒற்றுமைப்படும். அவ்வாறு அருளோடு கூடிய அளவிலே உயிருக்கு இன்பநிலை உண்டாகாது. உயிரும் அருளும் பெண்டிர் நிலையில் உள்ளவையாதலின், பெண்டிர் இருவர் சேர்வதால் இன்பம் உண்டாகுமா? என்றார். அவ்வருள் தமக்கு முதலாக உள்ள சிவத்தைக் காட்ட, உயிர் சிவத்தை யறிந்து அதில் அழுந்தும் போதே பேரின்பம் விளையும். இதனையே, இன்புண்டாம் ஒருவன் ஒருத்தி உறின் என்றார். அருள்நிலையை எய்தினார் அவ்வளவில் நில்லாது நிட்டை கூடலாகிய ஆனந்த நிலையை அடைதல் வேண்டும் என்பது இச் செய்யுளின் கருத்தாகும்.

73. முதல்வனுக்கு இன்ப நுகர்ச்சியில்லை

இன்பதனை எய்துவார்க்கு ஈயும் அவற்கு உருவம்
இன்ப கனம் ஆதலினால் இல்.

பொருள் : தன்னை அடைந்தார்க்கு இன்பத்தை வழங்குகின்ற இறைவன் இன்பமயமான வடிவினன். அப்படிப்பட்ட அவன் அவ்வின்பத்தைத் தான் நுகர்தல் என்பது இல்லை.

சொற்பொருள் :

இன்புதனை - இன்பத்தை
எய்துவார்க்கு - தன்னை அடைந்தார்க்கு
ஈயும் - தருகின்ற
அவற்கு - இறைவனுக்கு
உருவம் இன்ப கனம் - இன்ப மயமான வடிவம்
ஆதலினால் - ஆதலால்
இல் - அப்படிப்பட்ட அவன் அவ்வின்பத்தைத்தான் நுகர்தல் என்பது இல்லை.

விளக்கம் :

இறைவனுக்கு நுகர்ச்சியில்லை :

முந்திய செய்யுளில், பெண்மகள் ஒருத்தி ஆடவன் ஒருவனை அணைந்து இன்புறுவதை உவமை காட்டி, உயிர் சிவத்தை அணைந்த பொழுதே அதற்கு இன்ப நிலை உண்டாகும் என்பது கூறப்பட்டது. அந்த உவமையின்படி தம்மிற் கூடிய ஒருவன் ஒருத்தி ஆகிய இருவருமே இன்பத்தைத் துய்க்கின்றனர். அதன்படி பார்த்தால், முத்தி நிலையில் சிவத்தை அணைந்த உயிர் இன்பத்தைத் துய்ப்பது போல உயிரை அணைந்த சிவமும் இன்பத்தை நுகர்தல் வேண்டும் என்று ஆகிறது. அப்படியானால், இறைவனுக்கும் இன்ப நுகர்ச்சி உண்டோ? என்ற ஐயம் எழுகிறது. அவ்வையத்தை இச் செய்யுளில் நீக்குகின்றார் ஆசிரியர். உயிருக்கு இன்பமேயன்றி இறைவனுக்கு இன்பமில்லை என்று தெளிவுபடுத்துகிறார்.

இரண்டு காரணங்கள் :

இறைவனுக்கு நுகர்ச்சியில்லை என்பதை இரண்டு காரணங்கள் காட்டி நிறுவலாம்.

1. முன்பு இல்லாதது பின்பு பெற்ற பொழுதே நுகர்ச்சி என்பது உண்டாகும். உயிரிடத்தில் இன்பம் இயற்கையாக இல்லை. இன்பத்தைத் தன்னிடம் கொண்டிராத உயிரே இறைவனைச் சார்ந்து அவனது இன்பத்தைப் புதிதாகப் பெற்று நுகரும். இறைவனிடத்தில் இன்பம் பெறும் இருத்தலால் அவனே இன்ப வடிவம் ஆதலால், அவன் இன்பத்தைப் புதிதாகப் பெற்று நுகர்தல் இல்லை.

2. அனுபவித்தல் என்பதற்கு அழுந்தி நிற்றல் என்பது பொருளாகும். அந்த அந்தப் பொருளில்தான் அதுவேயாய் அழுந்தி நிற்றல் ஆன்மாவின் இயல்பேயாகும். இறைவன் எதிலும் தோயாது நின்று அறிபவன். அவன் எதனையும் அழுந்தியறியான். ஆகவே, அவனுக்கு எதிலும் நுகர்ச்சியில்லை என்பது இனிது விளங்கும்.

திருவாசகச் சான்று :

இனி, மூன்றாவதாக இறைவனை அனுபவித்த பெரியோர் அருளிச் செய்த அனுபவ மொழிகளும் மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும். திருவாசகப் பாடற் கருத்து ஒன்றினை இங்கு எடுத்துக் காட்டலாம். எம் பெருமானே, அடியேன் அனுபவிக்கும் படியாக உன்னைத் தந்தாய். உன்னைத் தந்ததற்கு மாற்றாக என்னைக் கொண்டாய். நம் இருவருள் யார் அறிவுத் திறம் படைத்தவர்? உயர்ந்த பொருளைக் கொடுத்து இழிந்த பொருளைக் கொண்டவரா, இழிந்த பொருளைக் கொடுத்து உயர்ந்த பொருளைப் பெற்றவரா, இப்பண்டமாற்றில் யார் வல்லவர்? அடியேன் உன்னைப் பெற்றதனால் எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தேன். நீ என்பால் பெற்றது யாது? ஒன்றும் இல்லை. கோயில் திருப்பதிகத்தில் வருகின்ற ஒரு பாடற்பொருள் இது. உலகில் நெல்லைக் கொடுத்துப் பதரைக் கொள்வார் உண்டோ? அவ்வாறு கொண்ட பேதையர் செயல் போன்றது இறைவன் செயல் என்று பழிப்பது போலக் கூறி இறைவனது கைம்மாறு கருதாத பெருங்கருணைத் திறத்தினைப் போற்றுகிறார் மணிவாசகர். சிவத்தினிடமிருந்து சீவன் பெற்றது ஆனந்தம். சீவனிடமிருந்து சிவன் பெற்றது என்ன? என்று வினவி, இறைவனுக்கு இன்ப நுகர்ச்சி இல்லை என்ற கருத்தைப் பெற வைத்துள்ளமை காணலாம்.

74. இன்பக் கூடலுக்கு உவமை

தாடலை போல் கூடியவை தாம் நிகழா வேற்றின்பக்
கூடலை நீ ஏகம் எனக் கொள்.

பொருள் : தாள், தலை என்னும் இரு சொற்கள் புணர்ந்து, இரண்டாகக் காணப்படுதல் இன்றித் தாடலை என ஒரு சொல்லாய் நிற்கின்றன. இச் சொற்புணர்ச்சி போல உயிரும் சிவமும் ஆகிய இரண்டும் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்திநிலை என்று நீ கொள்வாயாக. மாணவனை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

சொற்பொருள் :

தாடலை போல் - தாள், தலை என்னும் இருசொற்கள் தம்முட் கூடித் தாடலையென ஒரு சொல்லே போல் ஒன்றாய் நிற்கின்றன. அதுபோல்
கூடியவை - தம்முட் கூடிய உயிரும் சிவமும் ஆகிய இருபொருளும்
தாம் நிகழா வேற்று இன்பக் கூடலை - வேறுநில்லாத பேரின்பப் புணர்ச்சியையே
நீ - மாணவனே, நீ
ஏகம் எனக் கொள் - ஒன்றாதல் ஆகிய முத்திநிலை என்று உணர்வாயாக.

விளக்கம் :

தாடலை போல் கூடல் :

உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு உவமையாகச் சொற்புணர்ச்சி ஒன்றினை எடுத்துக் காட்டுகிறார் நம் ஆசிரியர்.

தாடலை என்பதில் தாள், தலை என்னும் இருசொற்கள் இணைந்துள்ளன. ஆயின் அவை வேறாகக் காணவாராமல் ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பதை ஒரு சொல் என்றும் கொள்ள முடியாது. இரு சொல் என்றும் கூற ஒண்ணாது. அதுபோல உயிர் சிவத்தோடு சேரும்போது ஒரு பொருளேயாகி விடாமலும், இரண்டு பொருளாய் நில்லாமலும் இயைந்திருக்கும். முத்தியில் இன்பத்தைத் துய்க்கின்ற உயிரும், அதற்கு அவ்வின்பத்தைக் கொடுக்கின்ற சிவமும் ஆகிய இரு பொருளும் உள்ளன. ஆயினும் அவை அங்ஙனம் பிரித்தறிய வாராமல் ஒன்றாய் உள்ளன என்பதாம். இக்கருத்தை அடுத்த செய்யுளிலும் எடுத்துக் கொண்டு மேலும் விளக்குவார் ஆசிரியர். இறைவனோடு இரண்டற்றுக் கூடி நின்று நுகரும் இன்பத்தை விரும்பிய வாதவூரடிகள் புல்லிப் புணர்வது என்று கொல்லோ? (புணர்ச்சிப்பத்து) என்று அருளியமை இங்கு நினையத் தக்கது. அருணகிரி நாதரும் இந்நிலையை விரும்பி,

இறவியொடு பிறவியற நீயும் நானுமாய்
ஏகபோகமாய் இறுகும் வகை பரமசுகம் அதனையருள்
என வேண்டி நிற்பார்.

தாள், தலை ஆகியவை நினைப்பிக்கும் பொருள் :

இனி, இது போன்ற புணர்மொழிகள் வேறு பல இருக்கவும், தாடலை என்ற இதனை ஆசிரியர் எடுத்துக் காட்டியதிலே ஒரு குறிப்பு உண்டு. தாள் என்பது இறைவனது திருவடியைக் குறிக்கும். தலை என்பது உயிரைக் குறிக்கும். உயிர்களாகிய நம்மிடம் நான் என்ற அகங்காரம் உள்ளது. எனது என்ற மமகாரம் உள்ளது. இந்த இரண்டும் இருப்பதைக் காட்டும் அடையாளமே நமது நிமிர்ந்த தலை. நம்மிடமுள்ள இந்தச் செருக்கு அடியோடு எப்போது போகின்றதோ அப்போது இறைவனது திருவருளுக்கு உரியவர் ஆவோம். இச் செருக்கினைப் போக்க வல்லது வழிபாடு. பெருமானே, எல்லாம் என் செயலால் நடக்கிறது என்று எண்ணி இறுமாந்திருந்தேன். எனக்கென்று என்ன செயல் இருக்கிறது? நீதான் உள் நின்று இயக்குகிறாய். நீதான் செய்விக்கிறாய். எனவே எல்லாம் உன் செயலேயாகும் என அடியற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்து இறைவனது திருவடியில் தலை வைத்து வணங்கினால் எல்லாச் செருக்கும் போய் விடும். தலையைப் பெற்ற பயன் இறைவன் தாளில் விழுந்து வணங்குவதுதான். இவ்வாறு வணங்குவதையே திருவடியைச் சூடுதல் என்றும், திருவடியைப் புனைந்து கொள்ளுதல் என்றும் குறிப்பிடுவர்.

இனி, ஞான நெறியில் நிற்கும் மாணாக்கர் தமது உடல், பொருள், ஆவி மூன்றனையும் சிவனது உடைமையாக உணர்ந்து அவற்றை அருட்குரு வினிடத்தில் நீர் வார்த்து ஒப்புவிப்பர். அருட்குரவர் அவை முழுவதையும் தம்முடையனவாக ஏற்றுக் கொண்டு, அம்மாணாக்கரது பழவினை முழுவதையும் பற்றற ஒழித்து, அதன்பின் தமது திருவடிகளை அவரது தலைமேற் சூட்டிப் பிறவித் தொடக்கு அறும்படியாக ஞானத்தைத் தந்தருள்வர். எனவே, தாளின்கீழ் தலையை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய், ஆன்மா தன் முனைப்பு அடங்கி அருள்வழி நிற்றலைக் குறிப்பதாகும். தலையின்மேல் தாளினை வைத்தல் என்பது ஆசான் மூர்த்தியாகிய இறைவன் செயலாய் பாசப் பற்றறுத்து அருள் வழங்குவதைக் குறிப்பதாகும். இவற்றையெல்லாம் நினைப்பிக்கும் வகையிலே தாள், தலை என்னும் சொற்களை எடுத்துக் கொண்டார் நம் ஆசிரியர் என்று கருதலாம். வேறு ஏதேனும் ஒரு புணர் மொழியை எடுத்துக் கொண்டிருந்தால் இப்பொருள்கள் எல்லாம் நம் சிந்தனைக்கு வருமா என்ன?

75. முத்தியில் உயிரும் சிவமும் நிற்கும் முறைமை

ஒன்றானும் ஒன்றாது இரண்டானும் ஓசையெழாது
என்றால் ஒன்றன்று இரண்டும் இல்.

பொருள் : உயிரும் கடவுளும் பொருளால் ஒன்றே எனில், முத்தியில் ஒன்றுதல் என்பது நிகழாது. ஒன்றுதலாவது இரு பொருள்களின் செயலாகும். பொருள் ஒன்றே உள்ளது என்றால், ஒன்றுதல் என்பது எப்படி நிகழ முடியும்? இனி, முத்தியில் உயிரும் கடவுளும் இரண்டாய் நிற்கும் என்றலும் பொருந்தாது. அவை இரண்டாய்ப் பிரிந்து நிற்பின் அங்கே ஒன்றுதல் என்னும் பேச்சு எழுவதற்கே வழியில்லை. இதனால், முத்தியில் உயிர் இறைப்பொருளோடு ஒன்றாய்ப் போய் விடாமலும், உயிரும் இறைவனும் தம்முள் இயையாத வேறுபட்ட இரண்டு பொருள்களாய் நில்லாமலு<ம், உயிர் இறைவனோடு கலப்பினால் ஒன்றாய் நின்று பேரின்பத்தை நுகரும் என்பது பெறப்படும்.

சொற்பொருள் :

ஒன்றானும் - உயிரும் சிவமும் (குட ஆகாயமும் பெரிய ஆகாயமும் போல) பொருளால் ஒன்றேயெனின்
ஒன்றாது - முத்தில் அவை ஒன்றும் என்பது கூடாது.
இரண்டானும் - இனி, உயிரும் சிவமும் (இருளும் ஒளியும் போல) இரு வேறு தன்மையையுடைய பொருள்களாயிருப்பின்
ஓசை எழாது - ஒன்றுதல் என்னும் பேச்சு எழுவதற்கே வழியில்லை.
என்றால் - இவ்வாறாதலின்
ஒன்றன்று - உயிரும் சிவமும் பொருளால் ஒன்றும் அன்று.
இரண்டும் இல் - தம்முள் இயையாத, இருவேறு தன்மைப்பட்ட பொருள் ஆதலும் இல்லை.

விளக்கம் :

ஒருமைக் கொள்கையை மறுத்தல் :

ஆசிரியர் முதலில் ஏகான்மவாதம் என்னும் ஒருமைக் கொள்கையை எடுத்து மறுக்கிறார். அக் கொள்கைப்படி, உள்ள பொருள் ஒன்றே. அதுவே பிரமம் ஆகிய பரம் பொருள். அதனின் வேறாய் உயிர் என்பதொன்று இல்லை. அப்பிரமமே எண்ணிறந்த உயிர்களாய்த் தோற்றம் அளிக்கிறது. குடத்தினுள் இருக்கும் ஆகாயமும் வெளியில் உள்ள ஆகாயமும் ஒன்றேயாம். குடம் உடையும்போது உள்ளேயிருக்கும் குட ஆகாயம் வெளியிலு<ள்ள பெரிய ஆகாயத்தோடு சேர்ந்து விடுகிறது. அதுபோல, பிரமமும் உடம்பில் தொடக்குண்டிருக்கும் சீவனும் உண்மையில் ஒன்றுதான். முத்திநிலையில் சீவன் உடம்பின் தொடர்பு நீங்கித் தன் உண்மை நிலையாகிய பிரமம் ஆகிவிடும் என்று அக்கொள்கை கூறும். இவ்வொருமைக் கொள்கையை ஒன்றானும் ஒன்றாது என்ற தொடரால் மறுக்கின்றார் ஆசிரியர். உயிரும் இறைவனும் குட ஆகாயமும் பெரிய ஆகாயமும் போலப் பொருளால் ஒன்றாய் இருப்பின், அவை பின்னர் ஒன்றும் என்றல் கூடாது. ஒன்றுதல் என்பது இரு பொருளின் செயலாகும். ஒரு பொருளுக்குப் பிறிதொரு பொருள் இருந்தாலன்றி ஒன்றுதல் என்பது நிகழாது. முத்தியில் ஒன்றுதல் நிகழ்வதனால், பொருள் ஒன்றன்று; இரண்டே என்பது விளங்கும்.

இருமைக் கொள்கையை மறுத்தல் :

இனி, மற்றொரு கொள்கை உள்ளது. அது முன்னைய கொள்கை போலில்லாமல் உயிரும் கடவுளும் என இரண்டு பொருள்களை ஒப்புக் கொள்ளும். ஆயின் அவற்றின் இயல்பைக் கூறும் போது, அவை இருளும் ஒளியும் போல இருவேறு தன்மைப்பட்ட பொருள்கள் என்று கூறும். இக் கொள்கை துவைதம் அல்லது பேத வாதம் எனப்படும். தமிழில் இருமைக் கொள்கை எனக் குறிக்கப்படும். இக் கொள்கையை இரண்டானும் ஓசையெழாது என்ற தொடரால் மறுக்கின்றார் ஆசிரியர். வேறுபட்ட தன்மையை உடைய இரு பொருள்கள் எக்காலத்திலும் ஒன்றுதல் இயலாது. ஆதலால் உயிரும், கடவுளும் இருளும் ஒளியும்போல வேறானவை என்றால் ஒன்றின என்ற சொல் எழுவதற்கே வழியில்லாமற் போகிறது. இவ்வாறு இருமைக் கொள்கை பொருந்தாமையை எடுத்துரைக்கிறார்.

சைவ சித்தாந்த நிலை :

இங்ஙனம் முதலடியில் இரு சாரார் கொள்கைகளையும் மறுத்துரைத்த ஆசிரியர் அடுத்த அடியில் சைவ சித்தாந்தக் கொள்கை இது எனத் தெரித்துக் காட்டுகிறார். முத்தியில் உயிர், சிவம் எனப் பொருள் இரண்டு உளதாயினும் அவை இரண்டாய்ப் பிரித்து நிற்றல் இல்லை. நுகர்பவன் நுகரப்படும் பொருளுக்கு வேறாய் நிற்பின் இன்ப நுகர்ச்சி உண்டாகாது. அவன் அப்பொருளோடு ஒன்றுபடும் போதே இன்ப நுகர்ச்சியைத் தலைப்படுவான். இஃது உலக இன்பத்திற்கும் பொருந்தும்; முத்தியின் பத்திற்கும் பொருந்தும். முத்தியில் நுகர்பவனாகிய உயிர் நுகரப்படும் பேரின்பப் பொருளாகிய சிவத்திற்கு வேறாய் (உயிரும் சிவமும் இரண்டாய்) பிரிந்து நிற்குமானால் உயிருக்குப் பேரின்பம் விளையாது. முதற் கொள்கை கூறியபடி உயிர் சிவத்தோடு ஒன்றாய்ப் போய் விடுமானாலு<ம் இன்ப நுகர்ச்சி உண்டாகாது. நுகர்பவனாகிய உயிரே இல்லாத போது நுகர்ச்சி எப்படி ஏற்படும்?

இதுவரை கூறியவற்றால், முத்தியில் உயிர் சிவத்தோடு ஒன்றாய்ப் போதலும் இல்லை. இரண்டாய் நிற்றலும் இல்லை என்பது விளங்கும். இதனையே ஒன்றன்று இரண்டு மில் என்ற தொடரால் உணர்த்துகிறார் ஆசிரியர். இங்ஙனமாயின், வேறு எப்படிக் கொள்வது? என்ற வினா எழும். சைவ சித்தாந்தம் இதற்கு விடையளிக்கிறது. உயிரும் சிவமும் ஒரு பொருள் அல்ல; தம்முள் இயைபில்லாத, இரு வேறு தன்மைப்பட்ட பொருள்களும் அல்ல. அவை இரண்டு ஆயினும் இயைந்து ஒன்றாதற்குரியவை. அம்முறையில் உயிர் சிவத்தோடு, இரண்டு என்று சொல்ல வாராதபடி, ஒன்றி, வேறு காணப்படாது நிற்கும் என்பதாம்.

உப்பும் நீரும் :

இவ்வாறு உயிர் சிவத்தோடு ஒன்றாய் நிற்றலுக்கு உவமையாக நீரில் உப்பானது கலந்து அந்நீரோடு ஒன்றாய் நிற்றலை எடுத்துக் காட்டுவர். உப்பும் நீரும் இரு வேறு பொருள்களாயினும் தம்முள் இயைந்து ஒன்றாதற்குரிய பொருள்கள். அவை போல உயிரும் சிவமும் உள்ளன. நீரில் கலந்த உப்புக் கண்ணுக்குப் புலனாகாது நீர் மட்டுமே உள்ளது போலத் தோன்றும். அதுபோல உயிர் சிவத்தோடு ஒன்றி வேறு காணப்படாது நிற்கச் சிவம் ஒன்றுமே உள்ளது போலத் தோன்றும். உப்பும், நீரும் இயைந்துள்ள நிலையில் அதனை ஒன்று என்பதா? இரண்டு என்பதா? <உப்பு அடியோடு இல்லாமற் கெட்டொழியுமாயின், ஒன்று என்று சொல்லி விடலாம். ஆனால், உப்புக் கெடாமல் நிற்கிறது. நீரில் உள்ள உவர்ப்புச்சுவை நீங்காமையால் உப்பாகிய பொருள் அங்கே கெடாமல் உள்ளது என அறியலாம். எனவே அதனை ஒன்று என்பது பொருந்தாது. இனி, இரண்டு என்று சொல்ல வேண்டுமாயின், உப்பு தனது கட்டித் தன்மை நீங்காமல், நீருக்கு வேறாய் நிற்றல் வேண்டும். அப்பொழுதுதான் நீரும் உப்பும் ஆகிய இரண்டு அங்கே உள்ளன என்று கூற முடியும். ஆனால், உப்பு அவ்வாறு தனியே நிற்றல் இன்றித் தனது கட்டித் தன்மை நீங்கி நீரோடு வேறற நிற்கிறது. எனவே அதனை இரண்டு என்று சொல்வதும் பொருந்தாது.

உயிரும் சிவமும் :

இதுபோலத் தான் முத்தியில் உயிரும் சிவமும் இயைந்துள்ளன. அதனை ஒன்று என்பதா? இரண்டு என்பதா? சிவத்தை அணைந்த உயிர் கெட்டொழியுமாயின், ஒன்று என்று சொல்லி விடலாம். ஆனால், உயிர் கெடாமல் நிற்கிறது. சிவம் இன்பத்தைத் தரும் பொருளாய் நிற்க, உயிர் இன்பத்தைப் பெறுபவனாய் நிற்றல் நீங்காமையால், உயிர் அங்கே கெடாமல் உள்ளது என அறியலாம். எனவே அதனை ஒன்று என்பது பொருந்தாது. இனி இரண்டு என்று சொல்ல வேண்டுமாயின், உயிர் தனது சீவத்தன்மை நீங்காமல் சிவத்திற்கு வேறுபட்டு நிற்றல் வேண்டும். அப்பொழுது தான் உயிரும் சிவமும் ஆகிய இரண்டு அங்கே உள்ளன என்று கூற முடியும். ஆனால், உயிர் அவ்வாறு தனியே நிற்றல் இன்றித் தனது சீவத் தன்மை நீங்கிச் சிவத்தோடு வேறற நிற்கிறது. எனவே அதனை இரண்டு என்று சொல்வதும் பொருந்தாது. இவ்வாறு உயிரும் சிவமும் ஒன்றாகாமல் இரண்டாகாமல் நிற்கும் முறைமையையே ஒன்றன்று இரண்டும் இல் - எனக் குறிப்பிட்டார் நம் ஆசிரியர்.

76. உற்றார், பெற்றார், பற்றார்

உற்றாரும் பெற்றாரும் ஓவார்; உரை ஒழியப்
பற்றாரும் அற்றார் பவம்.

பொருள் : தாம் வேறு நில்லாது திருவருளிற் பொருந்தி அதனோடு ஒன்றாய் நின்றவரும், அதன்மேல் சிவப் பேற்றினை எய்தி நிட்டையில் நின்றவரும் மெய்ப் பொருளை ஒருபோதும் நீங்க மாட்டார். அவர்க்கு இனிப் பிறவி இல்லை. இந்த உற்றாரும், பெற்றாரும் போல மெய்ப் பொருள் ஒன்றையே பற்றமாட்டாமல் கேட்டல், சிந்தித்தல் என்ற படிநிலைகளில் நிற்ப வரும் மேற்படிகளை எய்திப் பிறவி அறும் நிலையைப் பெறுவார்கள்.

சொற்பொருள் :

உற்றாரும் - தெளிதல் என்ற நிலையிற் சென்று, திருவருளிற் பொருந்தி அதனோடு ஒன்றாய் நின்றவரும்
பெற்றாரும் - அதன்மேல் உள்ள நிட்டை கூடுதலாகிய முடிந்த நிலையை எய்திப் பேரின்பத்தில் அழுந்தினவரும்
ஓவார் - மெய்ப் பொருளை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டார். அவர்கள் மீளப் பிறத்தல் இல்லை.
உரைஒழியப் பற்றாரும் - இனி, தெளிதல், நிட்டை ஆகிய நிலைகளிற் சென்று மெய்ப் பொருள் ஒன்றையே பற்றமாட்டாதவராய், கேட்டல், சிந்தித்தல் ஆகிய படி நிலைகளில் நிற்பவரும்
பவம் அற்றார் - மேற்படிகளை எய்திப் பிறவி அறும் நிலைமையைப் பெறுவார்கள்.

விளக்கம் :

உற்றார் :

முந்திய அதிகாரத்தில் நாம் பார்த்தபடி எல்லாப் பற்றினையும் அறவே விடுத்து, யான் எனது என்னும் நினைப்புச் சிறிதும் இன்றி, எச் செயலையும், தன் செயலாக உணராது திருவருட் செயலாக உணர்ந்து, அத்திருவருளிடத்தில் அடங்கி நிற்கப் பெறும் நிலையே சுத்த துரியம் என்னும் அருள் நிலையாகும். இங்கு ஒரு கேள்வியை எழுப்பலாம். இந்நிலையில் நிற்கும் ஞானிகளும் யான் செய்தேன், யான் செய்வேன் என்றெல்லாம் சொல்கிறார்களே. எனவே அவர்களுக்கும் நான் என்ற முனைப்பு இருக்கத்தானே செய்கிறது. இதற்குச் சான்றாகப் பின்வரும் நிகழ்ச்சி ஒன்றைக் காட்டலாம். பாண்டிமாதேவியாரும் அமைச்சர் குலச் சிறையாரும், ஞான சம்பந்தப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தமது உயிரையும் மன்னவன் உயிரையும் உய்விக்கும்படி வேண்டுகிறார்கள். அவர்களை நோக்கிப் பிள்ளையார், நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டா. மெய்யுணர்வில்லா அமணர்களை யாவரும் காண வாதில்வென்று பாண்டியனைத் திருநீறு அணியும்படி செய்வேன் என்கிறார். யான் இதனைச் செய்து முடிப்பேன் என்று தன் முனைப்போடு நாம் சொல்வோம் அல்லவா? அதுபோலத் தானே ஞானசம்பந்தரும் சொல்கிறார். நமக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? என்று கேட்கலாம்.

சாதி குலம் பிறப்பு என்னும் தடஞ்சுழியில் தடுமாறி நிற்கும் நம்மவர் நிலை எங்கே! ஞானத்தின் திருவுருவாய்ப் பொலியும் சம்பந்தப் பெருமானின் நிலை எங்கே! அவரது நிலையை உணராமல் கேட்கின்ற கேள்வி இது. ஞானிகளது புறத்தோற்றம் உலகத்தாரது தோற்றத்தோடு ஒத்துத் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறு இல்லை என்பதை உணர்தல் வேண்டும். உலகத்தார்போல அவர்களும் யான் செய்தேன், யான் செய்வேன் எனச் சொல்வழக்குப் பற்றிக் கூறுவாராயினும் அவர் உணர்வு, எல்லாம் சிவன் செய்தது என்றே உணர்ந்திருக்கும். ஞானசம்பந்தர் தாம் சொல்லியவாறே சமணரை வாதில் வென்று பாண்டியனுக்குத் திருநீறு அளித்தருளினார். சிவ பெருமானது திருநெறி எங்கும் திகழச் செய்தார். இச்செயலையெல்லாம் அவர்தாம் செய்ததாக நினையாது இறைவனது செயலாகவே உணர்ந்து நின்றார். உன்னையன்றி வேறொரு உணர்வும் இல்லேன். உயிர்கள் <உய்யும் வண்ணம் நீ திருக்கூத்து இயற்றுவதை இடையறாது நினைப்பதே நியமமாகும் என்று அவர் அருளிச் செய்த அருள் மொழிகள் ஆழ்ந்து உணர்தற்குரியவை.

கொன்றையம் முடியினாய் கூடல்ஆழ வாயிலாய்
நின்றயங்கி ஆடலே நினைப்பதே நியமமே

என இறைவனது திருக்கூத்தினைக் குறிப்பிட்டு எல்லாச் செயலும் அவன் செய்தனவேயாம் என்பதைப் புலப்படுத்தி, அதனை என்றும் மறந்தறியாத தமது நிலையை அவர் இங்கே உணர்த்தியுள்ளமை காணலாம். இவ்வாறு எச் செயல் செய்யவரினும் அதனைத் திருவருட் செயலாகத் தெளிந்து திருவருளோடு ஒன்றி நிற்கும் நிலையாகிய இது சிவயோகம் எனப்படும் துரிய அருள் நிலையாகும். இந்நிலையில் நிற்பவரையே உற்றார் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். உற்றார் என்பதற்குத் திருவருளைத் தலைப்பட்டு ஒன்றினோர் என்பது பொருளாகும்.

பெற்றார் :

இதற்கு மேல், திருவருளுக்கு முதலாகிய சிவத்தை அணைந்து பேரின்பத்தில் தோய்ந்து நிற்கும் நிலையாகிய நிட்டையினை எய்தியவரைப் பெற்றார் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். முடிவாய் உள்ள சிவபோகமாகிய துரியாதீத ஆனந்த அனுபவத்தைப் பெற்றவர் ஆதலின் இப்பெயர் அவருக்குப் பொருந்தியதாயிற்று.

சிவத்தை அணைந்து இன்புறுதல் பரமுத்தியாதலின் அதனை உடம்பு நீங்கிய பிறகு அல்லவா பெற இயலும். உடம்பு உள்ள பொழுதே அதனைப் பெற இயலுமோ? என்று ஐயுறலாம். அவ்வாறு ஐயுற வேண்டுவதில்லை. உடம்பு உள்ள பொழுதும் இறைவன் உடன் இருக்கவே செய்கிறான். எப்பொழுதும் உடனாக இருக்கின்ற அவனை உடம்பு உள்ள பொழுதே அடையலாம். அணைந்து இன்புறலாம். ஆயின் அதற்கு அவனை என்றும் மறவாமை வேண்டும். பத்தியினால் அவனை இடையறாது ஏத்துதல் வேண்டும். மறவாமையும், பத்தியினால் ஏத்துதலும் ஆகியவற்றை இடையறாது செய்து வருபவர் இவ்வுடம்பு உள்ள பொழுதே சிவத்தை அணைந்து இன்புறுவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சிவத்தை அணைந்து அவனை நீங்காதே நிற்பது நிருவிகற்ப நிட்டை என்று சொல்லப்படும். நிட்டை என்று சொன்னாலே அது நிருவிகற்ப நிட்டையையே குறிப்பதாகும். இனி, நிட்டை கூடியவர் அந்நிலையினின்றும் நீங்கி உலக நினைவுற்று உலகத்தாரோடு பொருந்தி நிற்பது சவிகற்ப நிட்டை எனப்படும். இவ்வாறு சிவபோகமாகிய நிட்டையினின்றும் மீள்வோர் சிவயோகமாகிய அருள்நிலையில் நிற்றலன்றி அதற்குக் கீழே வாரார். நால்வர் பெருமக்களும் மற்றுள்ள நாயன்மார்களும் சவிகற்ப நிட்டையில் இருந்தவர்களே யாவர். அஃதாவது, உலக வாழ்வில் உள்ள பொழுதே திருவருளில் அழுந்தி நின்றவராவர்.

பற்றார் :

கேட்டல், சிந்தித்தல் நிலைகளில் நின்று திருவருளைத் தலைப்பட மாட்டாதவர் பற்றார் எனப்பட்டார். இவரது நிலையினை அறியும் நெறி, உயிர் விளக்கம் என்ற அதிகாரங்களின் முன்னுரையில் ஓரளவு அறிந்துள்ளோம். கேட்டல் சிந்தித்தல் நிலைகளில் யான் எனது என்னும் பற்றுக்கள் அறுதல் இல்லை. அவை முற்றாக நீங்குவது தெளிதல் என்ற நிலையிலேதான். ஆகவே, தெளிதல் நிலைக்குச் சென்று திருவருளை உறுதியாகப் பற்ற முடியாமலும், யான் எனது என்னும் பற்றினை விட முடியாமலும் நிற்பவராகிய இவர்கள் ஏனைய உலக மாந்தர் போலப் பிறப்பிற்கு ஆளாவர் போலும் என்ற எண்ணம் நமக்கு எழலாம் அல்லவா? அதனை நீக்குகிறார் ஆசிரியர். உலக வாழ்வில் உழலும் நமக்கும் சிற்சில சமயம் ஞான வேட்கை எழுதல் உண்டு! சிறந்த சித்தாந்தச் சொற் பொழிவைக் கேட்கும்போது இவ்வளவு அருமையான கருத்துக்கள் சித்தாந்த நூல்களில் உள்ளனவா? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் காலத்தை வீணாக்கி விட்டோமே. இனிமேலாவது சிவஞான போதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி எழும்....

ஆனால், அந்த ஆர்வம் வீடு வரையில் தான். வீட்டிற்குள் புகுந்து விட்டால் குடும்ப எண்ணங்கள் மனத்திற்குள் குடிபுகுந்து விடும். ஞான வேட்கை வந்த சுவடு தெரியாமல் போய்விடும். இதற்கு ஓர் உவமை சொல்லலாம். இரவில் உறக்கத்தின் போது இடையிடையே சிறிது விழிப்பு உண்டாகும். சில நொடிகள் தான் அந்த விழிப்பு இருக்கும். பிறகு மறுபடியும் கண்மூடி உறக்கத்தில் ஆழ்ந்து விடுவோம். அந்தச் சிறிது நேர விழிப்பைப் போலத்தான் நமக்கு ஏற்படுகிற ஞானவேட்கையும் நிலைத்தல் இன்றி விரைவில் நீங்குகிறது. ஆனால், ஞான நெறியை மேற்கொண்டு, கேட்டல் சிந்தித்தல் என்ற நிலைகளில் நிற்பவர்களின் ஞானவேட்கை நிலையுடைய உண்மையான ஞானவேட்கையாகும். ஆதலால் சத்தி நிபாதம் வாய்க்கப் பெற்ற அவர்கள் இப்பொழுது பற்றார் என்ற நிலையில் நின்றாலும் ஞானவேட்கையில் தீவிரம் கொண்டு தெளிதல் முதலிய மேல்நிலைகளைப் படிப்படியே அடைந்து பிறவி அறும் நிலையைப் பெறுவார்கள் என்பது உறுதி. அது பற்றியே பற்றாரும் அற்றார் பவம் என்றார் நம் ஆசிரியர்.

77. தன் செயல் அறுதல்

பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி
நீ ஒன்றும் செய்யாது நில்.

பொருள் : மாணவனே, பேய் வசப்பட்டாரது தன்மை போல அருள் வயப்பட்டு நிற்கும் தன்மை உனக்கு உண்டாகும் வரையும், நீ தன் முனைப்போடு யாதொரு செயலு<ம் செய்யாமல் நிற்பாயாக.

சொற்பொருள் :

நீ - மாணவனே, நீ
பேய் ஒன்றும் தன்மை - பேய் பிடிக்கப்பட்டாரது தன்மை போல அருள் வயப்பட்டு நிற்கும் தன்மை
பிறக்கும் அளவும் - உனக்கு உண்டாகும் வரையும்
இனி - இனிமேல்
ஒன்றும் செய்யாது - தன் முனைப்போடு யாதொரு செயலும் செய்யாமல்
நில் - நிற்பாயாக.

விளக்கம் :

செய்யாமை செய்தல் :

செய்யும் செயல் எதுவும் சிவனால் அன்றி நிகழ்வதில்லை. சிவனால் அன்றிப் பயன் கொடுத்தல் இல்லை. நீயே உள் நின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும், நிலவுவதோர் செயல் எனக்கு இன்று; உன் செயலே என்றும் நினைத்து ஒழுகுவர் ஞானிகள். தற்போதம் இழந்து, தம் செயலற்று நிற்கும் அவர்கள் தம்மில் விளங்கும் சிவத்துடன் ஒற்றித்து நிற்கும் தன்மையால் தம்மால் நிகழவரும் எச்செயலையும் சிவன் செயல் என வைத்து இயற்றுவர். ஆதலால், அச்செயலால் அவர்க்குப் புண்ணியமோ பாவமோ விளைதல் இல்லை. பாம்பு கடித்து இறந்த வணிகன் ஒருவனை உயிர் பெற்றெழச் செய்து வணிகக் கன்னி ஒருத்திக்கு வாழ்வளித்தார் ஞானசம்பந்தர். அப்பூதியடிகளின் மகனை விடம் நீங்கி எழும்படியாகச் செய்து அப் பெற்றோர்களுக்குப் பெருநலம் செய்தார் அப்பர். முதலைவாயில் அகப்பட்டு இறந்த அந்தணச் சிறுவனை அவனது வளர்ச்சியோடு மீட்டுக் கொடுத்து தவினார் சுந்தரர். இப்பெரு மக்களுக்கு இச் செயல்களால் யாதொரு புண்ணியமும் விளையாமையை அறியலாம். தந்தையினது காலை வெட்டிய சண்டேசுரருக்கு அதனால் யாதொரு பாவமும் விளையாமையையும் அறியலாம்.

இவ்வாறு ஞானிகள் செயல் செய்தும் புண்ணிய பாவங்கள் பொருந்தாமல், வினையால் சிறிதும் பற்றப்படாமல் இருப்பர். அவரது செயல் செய்யாமை செய்தல் எனப்படும். செய்யாமை செய்தல் என்பதனைச் சிறிது விளக்குவோம். கற்றிருந்தும் அதன் பயனாய் அறிவு ஏற்படாத நிலை கற்றும் கல்லாமை எனப்படும். உண்டும் அதன் பயனாகிய நிறைவு ஏற்படாத நிலை உண்டும் உண்ணாமை எனப்படும். அதுபோலச் செயல் செய்தும் அதன் பயனாகிய வினைத்தாக்கம் ஏற்படாத நிலை செய்தும் செய்யாமை எனப்படும். இதனையே செய்யாமை செய்தல் என்றும் குறிப்பிடலாம். திருக்களிற்றுப் படியார் என்னும் பதிகம் இப்படித்தான் குறிப்பிடுகிறது. ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு என்று அந்நூல் உலகர் நிலைக்கு இரங்கிக் கூறுகிறது. எச்செயலையும் தன்னோடு இயைபுபடுத்திக் கொள்ளாது, தன் செயல் சிவன் செயலாம்படி சிவனோடு ஒற்றித்து நின்று செய்தலே செய்யாமை செய்தலாகும் என்பது இதனால் நன்கு விளங்கும்.

பேய் ஒன்றும் தன்மை :

பேய் ஒன்றும் தன்மையாகிய உவமையில் வைத்து இந்நிலையை இங்கு விளக்குகிறார் நம் ஆசிரியர். பேய் பிடித்த ஒருவன் தன் உணர்விழந்து நிற்பான் என்பது கண்கூடு. அவனுக்குத் தன்னறிவும் இல்லை. தன் செயலும் இல்லை. பேயினுடைய அறிவும் செயலுமே அவன்பால் நிகழ்கின்றன. அதுபோலத் தன் செயல் ஒன்றுமின்றித் திருவருளின் வசப்பட்டு நிற்றலே துரியம் என்னும் அருள் நிலையாகும். இந்நிலையை அடைய அவாவும் மாணவனை வழிப்படுத்துகிறார் ஆசிரியர். தன் செயலறுதலே துரியமாகிய அருள்நிலை வருவதற்கு வழியாகும். அருள்நிலையைத் தலைப்பட்ட பின்னர் துரியாதீத நிலையாகிய இன்புறு நிலையைத் தலைப்படுதல் எளிது என்பது கருத்தாகும்.

78. உறங்குபவன் கைப் பொருள்

ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாத
கண்படுப்போர் கைப்பொருள்போல் காண்.

பொருள் : மெய்ப் பொருளாகிய சிவத்தில் அழுந்தினவர்களுக்கு அதனால் வரும் பேரின்பம் ஒன்று தவிர ஏனையவெல்லாம், உறங்கிப் போனவனது கையிலுள்ள பொருள் தானே நழுவுவது போலத் தாமே நீங்கிவிடும்.

சொற்பொருள் :

ஒண் பொருட்கண் - அறிவே வடிவான மெய்ப் பொருளாகிய சிவத்தில்
உற்றார்க்கு - அழுந்தினவர்களுக்கு
உறுபயனே அல்லாத - அதனால் வரும் பேரின்ப நுகர்ச்சியாகிய பயன் ஒன்று தவிர, ஏனைய உலக ஒழுக்கங்களும் சரியை முதலிய தவவொழுக்கங்களும் ஆகிய எல்லாம்
கண்படுப்போர் - உறங்குவோர்
கைப்பொருள் போல் - கையிலுள்ள பொருள் அவரறியாதவாறு நழுவி விழுவது போல அவரை விட்டுத் தாமே நீங்குவனவாம்.
காண் - இதனை அறிவாயாக.

விளக்கம் :

ஒண்பொருட்கண் உற்றார் :

ஞானத்தில் ஞானமாம் அசைவிலா நிட்டை நிலையை எய்தினோர் அன்பினால் தம்மைச் சிவத்தில் ஆழ்த்தி வைத்திருப்பர். மதுவுண்ட வண்டு அந்த மது மயக்கத்திலே தன்னையும் அறியாது கிடத்தல் போலச் சிவானந்தத்தை நுகர்ந்து அந்த நுகர்ச்சியில் தம்மையும் மறந்திருப்பார்கள்.

ஊன் கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு
என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ?

என்னும் திருவாசகம் இவ்வனுபவத்தை உணர்த்தி நிற்கிறது. தோற்றத்தில் அவர் உலகர் போலக் காணப்படினும் உண்மையில் அவரது நிலை முற்றிலும் வேறானது என்பது இதனால் விளங்கும். சிவபெருமானுக்குப் பித்தன் என்ற பெயருண்டு. அஃது அவனது பேரருள் உடைமை பற்றி வழங்கும் பெயராகும். இறைவன் என்னை மதி மயங்கி ஆண்டு கொண்டான் என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார். நாயேன் தனையாண்ட பேதாய் என்கிறார். பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் என்று பழிக்கிறார். மதிமயங்கி, பேதை, பிததன் என்பனவெல்லாம் பழிப்புரை போலத் தோன்றினாலும் கருத்து வகையால் அவையெல்லாம் புகழுரைகளாய் அமைதல் காணலாம். ஆட் கொள்ளுதற்குரிய தகுதி ஒன்றேனும் இல்லாதிருக்கவும், இறைவன் தன் பேரருள் ஒன்றே காரணமாக என்னையும் ஆட்கொண்டருளினான் என அவனது கருணையின் மிகுதியை இவ்வாறு புலப்படுத்துகிறார் மணிவாசகர்.

அந்தப் பெரும் பித்தனுக்கு ஆட்பட்ட ஞானிகள் எப்படியிருப்பார்கள்? அவர்களும் பித்தராகத்தானே இருப்பார்கள்! பித்தர் செயல் ஒரு நெறிப்பட்டதாக இருக்காது. அவர் வேண்டிய தொன்றனைச் செய்யாதொழிவர். வேண்டாத ஒன்றைச் செய்வர். ஞானிகள் செயலிலும் இவ்வாறே ஒரு நெறி முறை அமையாது. கவலையற்றிருப்பதால் அவர்களது செயல் சில வேளைகளில் இளஞ்சிறுவர்களது செயல் போலவும், பித்துக் கொண்டவர் செயல் போலவும் நிகழும். நிட்டையில் நின்றோர் பாலருடன் உன் மத்தர் பிசாசர் குணம் மருவி, உலகியல் உணர்வு கெட்டிருப்பர். ஆதலால், தற்போதம் இழந்த நிலையில் அவரிடத்து நிகழும் செயல் எவ்வாறும் இருக்கும்.

ஞாலமதில் ஞானநிட்டை உடையோருக்கு
நன்மையிலை; தீமையிலை; நாடுவதொன்றில்லை;
சீலமில்லை; தவமில்லை; விரதமொடு ஆச்சிரமச்
செயலில்லை; தியானமில்லை

என்று அவரைப் பற்றிக் கூறுவர்.

உறங்கினவன் கைப்பொருள் :

உலகியல் ஒழுக்கங்களும், யோகம் கிரியை சரியை முதலிய தவ ஒழுக்கங்களும், உறங்கினவன் கையிலுள்ள பொருள் தானே நழுவி விழுவது போல அவரிடமிருந்து தாமாக நழுவி விடும்.

உறங்காத வரையில் ஒருவன் தன் கையிலுள்ள பொருளை விடாது பற்றியிருப்பான். உறக்கம் வந்து அவனை ஆட்கொண்டு விட்டால் அவன் தன்னை மறந்து விடுகிறான். வெளியுலகை மறந்து விடுகிறான். அதனால் அவனது நினைப்பு இன்றியே அவனது கைப்பொருள் மெல்ல நழுவுகிறது. அதுபோல நிட்டை எய்திப் பேரின்பத்தில் அழுந்தியவர் உலகவுணர்வு தோன்றப் பெறாமல், நான் என்ற உணர்வு கெட்டு நிற்பதனால் ஞானம் பெற்று விட்ட நமக்கு இந்த நியமங்களெல்லாம் இனிச் செய்ய வேண்டுவதில்லை என்று தன் முனைப்போடு அவற்றை விட்டு விடுவதும் இல்லை. செய்து வர வேண்டும் என நியமித்துச் செய்வதும் இல்லை. அவர்களையறியாமல் அவைதாமே நீங்கும் என்பது கருத்து. இன்புறு நிலையில் உயிர்க்கு அவ்வின்ப நுகர்ச்சி ஒன்றே உண்டு என்பது இச் செய்யுளில் கூறப்பட்டது.

79. மூன்றாய தன்மை தோன்றாமை

மூன்றாயதன்மை அவர் தம்மின் மிகமுயங்கித்
தோன்றாத இன்பம் அது; என் சொல்?

பொருள் : சிவனும் உயிரும் ஆகிய அவ்விருவரும் தம்முள் மிகவும் கலந்து ஒன்றாய் நின்ற அந்நிலையில் உயிர் பேரின்பத்தை நுகரும். அவ்வின்ப அனுபவத்தில் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் இருந்தாலும் அம்மூன்றும் வெவ்வேறாகத் தோன்றுவது இல்லை. மூன்று பொருள் என்ற வேறுபாடு தோன்றாத ஒருமை நிலை அது. உயிர் தன்னை மறந்து, தனது அறிவை மறந்து சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தியிருக்கும். அவ்வின்ப அனுபவம் இன்னவாறு இருந்தது என்று எவ்வாறு சொல்ல இயலும்?

சொற்பொருள் :

அவர் - சிவனும், சீவனும் ஆகிய அவ்விருவரும்
தம்மின் மிக முயங்கி - தம்முள் மிகவும் கலந்து (ஒன்றாய் நின்ற அந்நிலையில்)
மூன்றாய தன்மை - நுகர்பவன், அவனது அறிவு, நுகரப்படும் பொருள் ஆகிய மூன்றும் இருந்தாலும் அம் மூன்றும் வேறு வேறாய் உள்ள தன்மை
தோன்றாத இன்பம் - தோன்றாத பேரின்ப அனுபவமே
அது - முந்திய செய்யுளில் உறுபயன் எனப்பட்ட அப் பயனாகும்.
சொல் என்? - அவ்வின்ப அனுபவம் இப்படி இருந்தது என்று எவ்வாறு சொல்ல இயலும்?

விளக்கம் :

மூன்றாய தன்மை :

எந்த ஓர் அனுபவத்திலும் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்று பொருள்கள் இருக்கும். அறிபவன் ஞாதிரு அல்லது ஞாதா எனப்படுவான். அறிவு ஞானம் எனப்படும். அறியப்படும் பொருள் ஞேயம் எனப்படும். ஞாதிரு, ஞானம், ஞேயம் ஆகிய இம்மூன்றையும் திரிபுடி என்பர். நான் இந்த மலரின் மணத்தை அறிகிறேன் என்னும் போது, நான் அறிபவன் ஆகிய ஞாதா ஆகிறேன். அதற்குக் கருவியாகிய எனது அறிவு ஞானம் ஆகிறது. மலர் மணம் அறியப்படும் பொருள் ஆகிய ஞேயம் ஆகிறது. எனவே இக்காட்சியில் இம்மூன்று பொருள்களும் உள்ளன என்பது விளங்கும். இவ்வாறு அறிகின்ற தான், தனது அறிவு, அறியப்படும் பொருள் ஆகிய மூன்றையும் அறிந்து நிற்றலைத் திரிபுரி ஞானம் என்பர். இத்திரிபுடி ஞானம் உள்ள பொழுது, அஃதாவது, அறிகின்ற தன்னையும், தனது அறிவையும், அறியப்படும் பொருளையும் வேறு வேறாகப் பகுத்துக் காணும் நிலை உள்ள பொழுது - இன்ப அனுபவத்தை முழுமையாகப் பெற இயலாது. ஒரு நிகழ்ச்சி வாயிலாக இதனை விளக்குவோம்.

நான் ஒரு தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிறு பிள்ளைகள் பலரும் என்னுடன் அமர்ந்து அதைப் பார்க்கிறார்கள். எனது அறிவு படத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இந்தக் காட்சியை வேறு விதமாக எடுத்திருந்தால் நன்றாயிருக்குமே, இவருக்கு நடிப்பே வரவில்லையே, இவரை எப்படித் தேர்ந்து எடுத்தார்கள்? இயக்குநர் இந்தக் காட்சியில் தூங்கி விட்டாரா, என்ன? என்று இப்படியெல்லாம் என் சிந்தனை ஓடுகிறது. நானும் என் அறிவும் படத்திற்கு வேறாக இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது. படக் காட்சியோடு ஒன்றும் போதே அதனால் வரும் முழு இன்பத்தைப் பெற முடியும். நானும் அறிவும் வேறாக நிற்பதனால் காட்சியின்பத்தை நான் முழுமையாகப் பெறவில்லை என்பது தெளிவு. ஆனால், அந்தச் சிறு பிள்ளைகளைப் பாருங்கள். அவர்களுக்குப் படத்தைப் பற்றிய ஆராய்ச்சி உணர்வு இல்லை. அவர்களது அறிவு படத்திற்கு அப்பால் வேறு எங்கும் செல்லவில்லை. அவர்கள் படத்தோடு ஒன்றிப் போய் விடுகிறார்கள்; மகிழ்ச்சியினால் துள்ளுகிறார்கள்; கை கொட்டுகிறார்கள்; ஆகா என்கிறார்கள்; ஐயோ என்கிறார்கள். அவர்கள் அக்காட்சியோடு ஒன்றுபட்டு விடுவதனால் அதனால் வரும் இன்பத்தை முழுமையாகப் பெறுகிறார்கள் என்பது தெளிவு.

நான் பார்க்கும் முறையில், அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் பகுத்து உணரும்படியாக வெவ்வேறாய் நிற்கின்றன. அஃதாவது ஞாதிரு, ஞானம், ஞேயம் என்ற வேறுபாடு தோன்றுவதால் திரிபுடி ஞானம் அங்கே உள்ளது. திரிபுடி ஞானம் இருக்குமானால் இன்ப அனுபவம் முழுமை பெறவில்லை என்பது பொருள். அந்தப் பிள்ளைகள் தம்மை மறந்து, பிறவற்றையெல்லாம் மறந்து, காணப்படுகிற அக்காட்சி ஒன்றையே அறிந்து நிற்கிறார்கள். இங்கே அறிபவரும், அறியப்படும் பொருளும் அறிவும் ஆகிய மூன்றும் வேறு பிரித்து அறிய வாராமல் உள்ளன. அஃதாவது அம்மூன்றும் வேறாகத் தோன்றாமையால் திரிபுடி ஞானம் இல்லை எனலாம். திரிபுடி ஞானம் நீங்கிய நிலையே முழுமையான அனுபவநிலை.

மூன்றாய தன்மை தோன்றாத இன்பம் :

இதுவரை உலகியல் அனுபவத்தை வைத்து விளக்கினோம். முத்தி நிலையில் ஆன்மா எய்தும் சிவானுபவத்திற்கும் இது பொருந்தும். ஆன்மா நான் சிவத்தை அறிந்து அனுபவிக்கிறேன் என்று உணருமானால், தான், தன், அறிவு, அறியப்படும் பதி ஆகிய முப்பொருளையும் அந்நிலையில் உணர்கிறது என்று ஆகும். இது திரிபுடி ஞானம் உள்ள நிலையாகும். ஆன்மா சிவம் ஒன்றை மட்டுமே அறிந்து அதில் அழுந்தும் போதே பேரின்பம் விளையும். சிவத்தையன்றிப் பிற பொருள்களையும் அறியுமானால் ஆன்மாவிற்குப் பேரானந்தம் எப்படி உண்டாகும்? ஆன்மா ஒன்றை அறியுங் காலத்தில் மற்றொன்றை அறிய மாட்டாது ஆகலின், முத்தி நிலையில் தன்னையும் தனது அறிவையும் அறியுமானால், சிவத்தை அறியாது மறக்கும்; அவ்வாறு மறக்குமானால் அதற்குச் சிவானந்தம் இல்லையாகும். அதனால், ஆன்மா தன்னையும் தனது அறிவையும் அறியாது, சிவம் ஒன்றையே அறிந்து நிற்றல் வேண்டும். இதுபற்றியே, திரிபுடி ஞானம் நீங்கிய நிலையே, அஃதாவது ஆன்மா தன்னையும், தனது அறிவையும் அறிதலை விடுத்துச் சிவம் ஒன்றை மட்டும் அறிந்து அதில் அழுந்தி விடுவதே பரமசுகம் ஆகிய பேரின்ப நிலை என்று சித்தாந்த சைவம் கூறும். இதனையே மூன்றாய தன்மை தோன்றாத இன்பம் எனக் குறித்தார் ஆசிரியர் உமாபதிசிவம்.

சொல்லொணாத இன்பம் :

மேற்கூறியவாறு ஆன்மா தன்னை மறந்து, தனது ஞானத்தை மறந்து சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தி நிற்கும் நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே நிட்டை என்று சொல்லப்படுகிறது. தனித்திருந்து நிட்டை கூடிச் சிவத்தில் அழுந்தி நிற்பதாகிய இச்சிவானுபவ நிலையைக் குறித்துக் கூறும்போது சொல் என்? என்கிறார் ஆசிரியர். சொல் என் என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர். அவ்விடத்துச் சொல் எழுவதற்கு வழி ஏது? என்பது ஒரு பொருள். அஃதாவது பேச்சற்று மோனமாக உள்ள அநுபூதி நிலை அது என்பதாம். இனி, சொல் என் என்பதற்கு மற்றொரு பொருள் அவ்வின்ப அனுபவத்தைச் சொல்லால் வெளியிட்டுரைப்பது எவ்வாறு இயலும் என்பது. அஃதாவது இன்னவாறு இருந்ததென்று சொல்ல இயலாத ஆனந்த நிலை அது என்பதாம். இவ்விரு பொருள்களுள் இவ்விடத்திற்குச் சிறந்தது எது? என்பதை நோக்குவோம். இவ்வாறு சிவத்தில் அழுந்தி நிற்போர் எவ்வாறு இருப்பர் என்பதை இறுதி அதிகாரத்தில் விளக்கியுள்ளார் ஆசிரியர். அவ்வதிகாரத்தின் முதற் செய்யுளில், அவர்கள் பேரின்பத்தில் திளைத்திருத்தலையன்றி வேறொன்றை யறியார் எனவும் அவர்க்குச் சொல் ஏதும் உண்டாகுமோ? எனவும் கூறுகிறார். எனவே சொல் எழாமல், பேச்சற்று, இன்பத்துள் ஆழ்ந்திருப்பர் என்பது அங்கே கூறப்பட்டது. அங்கே கூறிய அதே பொருளை இன்புறு நிலையாகிய இங்கேயும் கூறினார் என்று நாம் கொள்ள வேண்டுவதில்லை.

சொல் என் என இங்கே கூறியதற்கும், மற்று ஏதுண்டு சொல் என அங்கே கூறுவதற்கும் ஒரே பொருளைக் கொள்ளாமல், இன்ப அனுபவத்தைச் சொல்வது எவ்வாறு இயலும் என இங்கேயும், இன்பத்துள் ஆழ்ந்திருப்பதால் சொல் எவ்வாறு எழும்? என அங்கேயும் பொருள் உரைப்பது பொருத்தமாகும். எனவே, மேற்காட்டிய இரு வகைப் பொருள்களுள் முன்னதை விடுத்து, இரண்டாவதாகக் கூறிய பொருளே இவ்விடத்திற்குச் சிறந்தது என்று முடிவு செய்யலாம். ஆன்மாவை விழுங்கிப் பெருகும் வெள்ளமாகிய பரம சுகத்தை வாயினாற் சொல்லிக் காட்ட இயலாது. அது ஐந்து இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட இன்பம். இந்திரியங்களின் நுகர்ச்சியைக் கூட வாயினாற் சொல்ல முடியாது என்பார்கள். அப்படியிருக்க, இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட அதனை எப்படி வாயால் சொல்ல முடியும்? ஒரு தாய் உலக வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவப் பாடங்களை யெல்லாம் தன் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். ஆனால், பக்குவம் வராத அந்தப் பெண்ணுக்குச் சிற்றின்பமாகிய அனுபவத்தை எப்படிச் சொல்லுவது? அது சொன்னால் விளங்காதது. அதுபோல, இறைவனாற் பெறுகின்ற இன்ப அனுபவம் பக்குவம் இல்லாதவர்களுக்குத் தெரியாத ஒன்று. அதனைச் சொல்லிக் காட்ட முடியாது; சொன்னாலும் தெரிந்து கொள்ள முடியாது. எங்ஙன் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன் என்றார் இறைவனை ஆரத்துய்த்த ஓர் அடியவர். வாதவூரடிகள் சொல்ல வொண்ணா அளப்பரிய பேரின்பம் தமது உள்ளத்திலும் உடலிலும் ஒரு சேர நிறைந்து ததும்பி நின்ற அதிசய நிலையைக் குறித்து, சொல்லுவது அறியேன் வாழி முறையோ என்றார். இவற்றையெல்லாம் உட் கொண்டே சொல் என் என்றார் ஆசிரியர் உமாபதிசிவம்.

80. அன்பும் இன்பும்

இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று <உண்டாம்
அன்பு நிலையே அது.

பொருள் : இன்பங்கள் எல்லாவற்றிலும் இனிமையுடையது எனச் சிறப்பிக்கப்படும் முத்தியின்பத்தை இப்பிறப்பிலேயே பெறலாம். அதற்கு முன்னே ஆன்மா ஒன்றைப் பெறவேண்டும். அந்த ஒன்று எது எனில், இறைவனிடத்தில் இடையறாது அன்பு செய்து நிற்கும் நிலையேயாகும். இந்த அன்பு நிலை இன்று உண்டானால், பேரின்பமும் இப்பொழுதே உண்டாகும்.

சொற்பொருள் :

அது - மூன்றாய தன்மை தோன்றாத அப்பேரின்பம்
அன்பு நிலையே - இறைவனிடத்து இடையறாது அன்பு செய்து நிற்கும் நிலையில் உண்டாவதே.
இன்பில் இனிது என்றல் - இவ்வின்பம் இதுவரையில் நுகர்ந்து வந்த இன்பங்கள் எல்லாவற்றினும் மிக இனியதாய் உள்ளது என்று உணரும் அன்பு
இன்று உண்டேல் - ஆன்மாவிற்கு இப்பிறப்பில் உண்டாகுமாயின்
இன்று உண்டாம் - பேரின்பமும் இப்பொழுதே உண்டாகும்.

விளக்கம் :

இன்பம் :

இன்பம் என்றால் என்ன? இன்பந்தரும் பொருளினது தன்மையை உணர்தலே இன்பமாகும். உலகப் பொருளின் தன்மை முற்றும் உணரப்படுவது ஆகலின், அப்பொருளால் வரும் இன்பம் முடிவுடையதாய், வரையறைப்படுவதாய் இருக்கும். ஆனால், இறைவனது தன்மை அங்ஙனம் முழுதுமாக அறிய வாராதது. அதனால் இறைவனது தன்மையை உயிர்கள் உணர உணர இன்பம் புதிது புதிதாய் விளைந்து கொண்டேயிருக்கிறது. அவனது தன்மை அளக்க ஒண்ணாதது. ஆதலால் அவ்வின்பமும் வரையறைப்படாததாய் உள்ளது. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே என்பது திருவாசகத் தொடர். அளவிடப் படாத தன்மையை உடையவன் ஆதலால் அனுபவிக்க அனுபவிக்கத் தெவிட்டாத இன்பமாய் இருக்கின்றான் என்பது அதன் பொருளாகும்.

உலக இன்பமும் இறையின்பமும் :

உலக போகம் வரம்புடைய இன்பமேயாக, சிவபோகம் எல்லையற்றதாய், மேலும் மேலும் வளர்வதாய், புதுமையுடையதாய் இருத்தல் பற்றியே கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனி மலர்க் குழல் பாவை நல்லாரினும் தனி முடிகவித்து ஆளும் அரசினும் இனியன் என்றார் திருநாவுக்கரசர். இன்னும், உலக இன்பம் கருவி கரணங்கள் வாயிலாக நுகரப் படுவது. சிவானந்தம் கருவி கரணங்களின் நீங்கி நின்று அனுபவிப்பது. உலக இன்பமெல்லாம் தன்னின் வேறாகிய பொருளிடத்தினின்றும் தன் பால் வந்து பொருந்தும் செயற்கை இன்பமாகும். சிவானந்தம் அவ்வாறின்றித் தன்னுள்ளே ஒழிவற நிறைந்த பொருளிடத்தில் தான் வியாபகமாய் நின்று அனுபவிக்கும் இயற்கையின்பமாகும். இந்த அழகான வடிவைக் கண்டு இன்புற்றேன். இந்த இனிய ஓசையைக் கேட்டு இன்புற்றேன். இத் தீஞ்சுவையை அறிந்து இன்புற்றேன் என இவ்வாறு உலக இன்பம் நம்மால் உணர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால், சிவானந்தம் உரையுணர்வு இறந்து நின்று அனுபவிக்கப்படுதலின் அஃது உரைக்க வாராதது. இறையின்பமாகிய பேரின்பம் இத்தகையது ஆதலின் அதனைச் சுவைத்த பிறகு உலக இன்பம் அனைத்தும் சுவையற்றனவாகி விடும்.

அரும்பும் தனிப் பரமானந்தம்
தித்தித் தறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும்
புளித்து அறக் கைத்ததுவே

என்றார் அருணகிரிநாதர். இவ்வாறு இறையின்பம் எல்லா இன்பங்களிலும் இனிமை உடையது என்று சிறப்பித்துச் சொல்லப்படுதலின் அதனை இன்பில் இனிது என்று குறிப்பிட்டார் ஆசிரியர் உமாபதிசிவம்.

அன்பு நிலையே இன்ப நிலையைத் தரும் :

இந்த இன்பம் அன்பினில் விளைவதாகும். இறைவனது அடியார்கள் பெரியோனாகிய அவன் தமக்கு எளிவந்து அருள்செய்த திறத்தினை நினைந்து உருகி அவனிடத்தில் அன்பு பெருகி நிற்பர். தாய் வயிற்றில் நான் உருத் தெரியாமல் கருவாய் இருந்த காலத்திலேயே உட்புகுந்து என்னை வளர்த்தான். பின் நான் உடலெடுத்துப் பிறந்து உலகியலில் உழன்ற காலத்தும் துணையாய் நின்று கருணையோடு என்னை வளர்த்தான். தாயைப் பார்க்கிலும் மிகப் பரிவுடையவன் ஆயினான். உள்ளமேயன்றி உடலும் அன்பினால் உருகப் பண்ணினான்; உள்ளொளியாகிய தன்னை இனிது உணரச் செய்தான்; அழிவில்லாத ஆனந்தமாகிய தேனைப் பொழிந்தான். இவ்வாறு பெத்தத்தில் இறைவன் உயிர்க்குயிராய் நின்று உலக போகத்தினை நுகர்வித்து வளர்த்த உதவியையும் இப்போதும் அவ்வாறு நின்று சிவபோகத் தினை நுகர்வித்து வாழ்விக்கும் உதவியையும் நினைந்து மணிவாசகப் பெருமான் மனமுருகிக் கூறுவார். இங்ஙனம் இறைவன் செய்யும் உதவியை மறவாது உணர்தலால் அவனிடத்தே அன்பு மீதூரும். அவன் மீது அன்பு மேலிட மேலிட அவனது இன்பம் மேலும் மேலும் விளைந்து கொண்டேயிருக்கும். இறைவனிடத்துச் செய்யும் அன்பு அவனிடத்தே அழுந்தி இன்புற்றிருக்கும் நிலையைத் தரும் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.

ஒன்பதாம் அதிகாரம்

ஐந்தெழுத்தருள் நிலை

இவ்வதிகாரத்தில், திருவைந்தெழுத்தினைக் குறித்து உபதேச முறையில் உணர்தற்குரிய உண்மைகள் பல நுட்பமாக உணர்த்தப் பெற்றுள்ளன. முதல் நூலாகிய சிவஞான போதத்தில் ஒன்பதாம் நூற்பாவில் திருவைந்தெழுதைக் கணித்தல் விதிக்கப்பட்டுள்ளது. அதனை நினைந்தே நம் ஆசிரியர் உமாபதி சிவமும் ஐந்தெழுத்தருள் நிலையாகிய இதனை ஒன்பதாம் அதிகாரமாக அமைத்துக் கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருள் நிலையாகிய உயிர் விளக்கத்தை அடைந்தோர் அதன் பின் நிட்டை கூடலாகிய இன்புறு நிலையை எய்த மாட்டாத போது அதனை எய்துதற்குத் துணையாயிருப்பது ஐந்தெழுந்து மந்திரமாகும். அது கருதியே இன்புறு நிலையை அடுத்து ஐந்தெழுத்தினை வைத்து உணர்த்துகிறார் ஆசிரியர். ஐந்தெழுத்து அருள்நிலை என்பதன் பொருள் என்ன? ஐந்தெழுத்து தன்னை உணர்வார்க்கு அருளும் முறைமை எனப் பொருள் கூறலாம். ஐந்தெழுத்து அருளுதலாவது, திருவருளைப் பற்றச் செய்து முத்திக்கு வழி காட்டுதல். பக்குவம் எய்திய உணர்வினால் திருவைந்தெழுத்தின் பொருளை உணர உணரத் திருவருள் வியாபகத்தில் ஒடுங்கியிருக்கும் நிட்டை கூடுவதாகும்.

ஐந்தெழுத்தின் புணை :

திருவைந்தெழுத்து உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுகின்ற புணையாகும். ஒருவன் நடுக்கடலில் தனியே விழுந்து தவிக்கிறான். கை சளைக்க நீந்தியும் கரை காணவில்லை. பேரலைகள் மாறி மாறி எழுந்து அவனை அலைக்கழிக்கின்றன. கடுங்காற்று வேறு சுழன்றடிக்கிறது. அச் சூறாவளியில் அகப்பட்டு அவன் நிலை தடுமாறுகிறான். அங்கே ஆளையே விழுங்கக் கூடிய சுறாமீன் பசியோடு திரிகின்றன. அவற்றின் வாய்ப்படும் நிலையில் இருக்கிறான். பிழைக்கும் வழியே தெரியவில்லை. அந்த இக்கட்டான வேளையில் எங்கிருந்தோ ஒரு படகு வந்து சேர்கிறது. அவனுக்கு எப்படியிருக்கும். அந்த நிலையிலே தான் இருந்ததாக மணிவாசகர் கூறுகிறார். பிறவிதான் கடல். துன்பங்களே அலைகள். மகளிர் மயக்கமே சுழன்றடிக்கும் சூறாவளி. காமமே சுறாமீன். இவற்றிடையே அகப்பட்ட தன்னைக் கரையேற்றும் புணையாகத் திருவைந்தெழுத்து அமைந்தது என்றும், அதனைத் துணையாகப் பற்றிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். உயிர்கள் பிறவிக் கடலில் வீழ்ந்துள்ளன. அவை ஆணவ மலமாகிய வலிய கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்டு அக்கடலில் தள்ளப்பட்டுள்ளன. அவற்றைக் கல்லோடு பிணித்துக் கட்டிய கயிறு எது? இருவினைகளே அக் கயிறு. இந்நிலையில் அவ்வுயிர்கள் ஆழ்வதன்றி, நீந்திக் கரை சேர்வது எங்கே? இப்படிப்பட்ட உயிர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவல்ல தோணியாக இருப்பது திருவைந்தெழுத்து என்கிறார் பெரியபுராண ஆசிரியர். இரு வினைப் பாசம் மும்மலக் கல் ஆர்த்திட, வருபவக்கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து என்பது அவரது வாக்கு.

எழுத்தை அழுத்தும் எழுத்து :

ஐந்தெழுத்தை எழுத்தை அழுத்தும் எழுத்து என்று குறிப்பிடுகிறார் திருமூலர். முதலில் உள்ள எழுத்து என்பது ஊழ் வினையைக் குறிக்கும். உலக வழக்கில் அதனைத் தலையெழுத்து என்பர். ஐந்தெழுத்து அயன் எழுதிய தலையெழுத்தையே அடக்கி விடுமாம். அஃதாவது, ஊழ்வினை உயிரை வருத்தாது வந்து போம்படி செய்யுமாம். நம் ஆசிரியர் உமாபதி சிவமும், ஊழ்வினை திருவைந்தெழுத்தை ஓதுவாரை நலியா என்று சிவப்பிரகாச நூலில் கூறியுள்ளமை காணலாம். அஞ்செழுத்து அருளினாலே வந்தவாறு உரை செய்வாரை வாதியா பேதியாவே (செ.90) என்பது அவர்கூற்று. தேவார அருளாசிரியன்மார் அஞ்செழுத்தின் சிறப்பினைப் பலவாறாகக் கூறியுள்ளனர். ஐந்தெழுத்தில் ஒவ்வொரெழுத்தும் ஒரு நுண்பொருளைக் குறித்து நிற்கும். அப்பொருள்களாவன.

சி - சிவன்
வா - சிவனது அருட்சத்தி
ய - உயிர்
ந - திரோதான சத்தி (மாயை, கன்மங்கள் இதனுள் அடங்கும்)
ம - ஆணவ மலம்

சிவ என்பது பதியையும், ய என்பது பசுவையும், நம என்பது பாசத்தையும் குறிக்கும். நடுவில் உள்ள பசு இரு பக்கமும் சென்று பாசத்தோடும், பதியோடும் சாரும் தன்மையுடையது. இனி, வேறொரு வகையிலு<ம் கூறலாம்.

ந - உயிர் மாயையில் அழுந்தி நிற்கும் சகலநிலை,
ம - உயிர் ஆணவ மலமாகிய அறியாமையில் அழுந்தி நிற்கும் கேவல நிலை.
வா - உயிர் திருவருளில் அழுந்தி நிற்கும் துரிய அருள் நிலை.
சி - உயிர்சிவத்தில் அழுந்தி நிற்கும் துரியா தீத ஆனந்த நிலை.

எனவே, உயிர் பாசத்தைச் சார்ந்து சகல கேவலங்களையும், பதியைச் சார்ந்து அருள்நிலை, ஆனந்த நிலைகளையும் அடைவது என்பது விளங்கும்.

ஐந்தெழுத்தின் வகைகள் :

ஐந்தெழுத்து வடமொழியில் பஞ்சாக்கரம் எனப்படும். அது தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகாகாரணம் என ஐந்து வகையாகக் கூறப்படும்.

1. தூல பஞ்சாக்கரம் - நமசிவாய
2. சூக்கும பஞ்சாக்கரம் - சிவாய நம
3. அதிசூக்கும பஞ்சாக்கரம் - சிவாய
4. காரண பஞ்சாக்கரம் - சிவ
5. மகா காரண பஞ்சாக்கரம் - சி

தூலம் :

நம என்பதை முதலாக உடையது தூல பஞ்சாக்கரம். ந என்பது திரோதானம், மாயை கன்மங்களையும், ம என்பது ஆணவ மலத்தையும் குறித்தலால், நம என்பவை பாச எழுத்துக்கள் எனப்படும். பாசத்தை முதலாக உடைய தூல பஞ்சாக்கரம் யாருக்கு உரியது? பாசப்பற்றை விட விரும்பாதவருக்கு அஃது உரியது, எனவே, உலகியலில் நின்று உலக இன்பத்தை நாடி நிற்போர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்துக் கணித்தற்கு உரியர் என்பது விளங்கும். தூல பஞ்சாக்கரம் சமய தீக்கையில் உபதேசிக்கப்படும். அதனைப் பெற்றோர் உலகியலில் நின்று சரியையினை மேற்கொள்வர்.

சூக்குமம் :

தூல பஞ்சாக்கரத்தில் முன்னே நின்ற நகார மகாரங்களாகிய பாசங்கள் சூக்கும பஞ்சாக்கரத்தில் யகாரமாகிய உயிருக்குப் பின்னே செல்ல, உயிர் வகாரமாகிய திருவருளைத் தனக்கு முற்படக் கொண்டு அதன் வழிப்பட்டு நிற்கிறது. எனவே, உயிர் பாசங்களின் நீங்கித் திருவருள் வழியாகச் சிவத்தை அடைதல் வேண்டும் என்னும் பொருளைச் சூக்கும பஞ்சாக்கரம் குறித்து நிற்றல் காணலாம். சூக்கும பஞ்சாக்கரம் விசேட தீக்கையில் உபதேசிக்கப்படும். விசேட தீக்கை பெறுவோர் உலகியலில் ஓரளவேனும் பற்று நீங்கியவராய் இருத்தல் வேண்டும். இவர்கள் முன்னர்க் கிரியையிலும், பின்னர் யோகத்திலும் நிற்பர். இதுவரை கூறியவற்றால், பற்றுக்களை விட விரும்பாதவர் அஞ்செழுத்தைத் தூலமாக வைத்தும், பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்தும் ஓதுதற்கு உரியர் என்பது விளங்கும்.

மேல் சொல்லப்பட்ட தூலமும் சூக்குமமும் ஆகிய ஐந்தெழுத்துக்களில் திரோதான சத்தியைக் குறிக்கும் நகாரமும், ஆணவத்தைக் குறிக்கும் மகாரமும் ஆகிய பாச எழுத்துக்கள் முறையே முன்னேயும் பின்னேயும் நிற்பதை அறிந்தோம். பாச எழுத்துக்களை விடாது ஓதுவதால் பாசப்பற்று அறாத நிலையே உளதாகும். பாசம் அறாத போது பதி ஞானமாகிய திருவருள் எங்ஙனம் விளங்கித் தோன்றும்? பஞ்சாக்கரத்தைத் தூலமாகக் கணித்தலை விடுத்து, சிவாயநம எனச் சூக்குமமாகக் கொண்டு கணித்தாலும் யகாரம் வகாரத்திற்கும் நகாரத்திற்கும் இடைப்பட்டே நிற்றலால் பாசம் நீங்காது என்று சொல்லப்படும்.

அதிசூக்குமம் :

சூக்கும பஞ்சாக்கரத்தைக் கணித்து வரவர, உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்லும்; ஞானத்தில் வேட்கை உண்டாகும். அத்தகையவர் ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெறுவர். ஞானகுரு அவர்க்கு நிருவாண தீக்கை எனப்படும் ஞான தீக்கையினைச் செய்து பாச எழுத்துக்களை நீக்கி ஐந்தெழுத்தை மூன்றெழுத்தாக வைத்து உபதேசிப்பார். இம் மூன்றெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். முத்தி பஞ்சாக்கரம் என்பதும் இதுவே. ஞானாசிரியர் உபதேசித்தபடி சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களை (சிவாய சிவாய என) திரும்பத் திரும்பக் கணிக்கும்போது யகாரம் வகாரத்திற்கும் சிகாரத்திற்கும் இடைப்பட்டதாகிவிடும். அந்நிலையில், அருளுக்கும் சிவத்திற்கும் நடுப்பட்டதாகிய ஆன்மாவைப் பாசங்கள் எவ்வாறு பற்றும்? இவ்வாறு மூன்றெழுத்தை மட்டுமே மந்திரமாகக் கொண்டு உணர்ந்து உணர்ந்து நிற்கப் பாசம் நீங்கும்; பதிஞானம் இனிது விளங்கித் தோன்றும். இங்ஙனம் விளங்கிய பதி ஞானத்தால் உயிர் பதியைக் கண்டு இன்புறும். இங்ஙனம் முத்திக்கு வழியாக இருத்தலின் இம்மூன்றெழுத்து மந்திரம் முத்திபஞ் சாக்கரம் எனப்படுவதாயிற்று.

காரணம் :

இவ் அதி சூக்கும பஞ்சாக்கரத்தினும் சூக்குமமாய் நிற்பது காரண பஞ்சாக்கரம் எனப்படும். முற்கூறிய மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை (சிவ) மட்டுமே மந்திரமாகக் கொள்வது காரண பஞ்சாக்கரமாம். சிவசிவ என்பது இரண்டெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும் முறையாகும். பாச எழுத்துக்களை நீக்கிய அதி சூக்கும பஞ்சாக்கரத்தை ஓதி உணர்ந்து, பாசம் நீங்கி ஆன்ம சுத்தி பெற்ற நிலையில் அவ்வான்மா தன்னறிவைத் திருவருளுக்குள் அடங்கக் கொடுத்துத் தன்னை இழந்து நிற்கும். தன்னை இழந்து நிற்பதாகிய இந்நிலை சிவயோகம் என்னும் அருள் நிலையாகும். ஆன்மா தன்னை உணர்தல் இன்றிச் சிவனை மட்டுமே உணர்ந்து நிற்கும் நிலையாகும். ஆகவே இங்கு ஆன்ம எழுத்தாகிய யகாரம் நீக்கப்படுகிறது.

மகா காரணம் :

இக் காரண பஞ்சாக்கரத்தினும் சூக்குமமானது மகா காரண பஞ்சாக்கரமாகும். ஆன்மா சிவத்தை அணைந்து ஆனந்தத்தில் மூழ்கும் நிட்டை நிலையில் ஆன்மா அருளையும் நினையாது ஆனந்தமாகவே நிற்றலால், அவ்விடத்து அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்கச் சிகாரம் ஒன்றுமே நிற்கும். சி என்னும் இந்த ஓரெழுத்து மந்திரம் மகாகாரண பஞ்சாக்கரம் எனப்படும். இவ்வாறு ஐந்தெழுத்தாய் இருந்த மந்திரம் பின்பு மூன்றெழுத்தாய், பின்பு இரண்டெழுத்தாய், இறுதியில் ஓரெழுத்தே ஆகிவிடுகிறது.

பட்டினத்து அடிகள் பாடல் :

நிட்டை நிலையை விளக்க வந்த பட்டினத்து அடிகள் அதி சூக்குமம், காரணம், மகா காரணம் ஆகிய பஞ்சாக்கரங்களைக் குறிப்பாக அமைத்து உணர்த்தியிருத்தலைக் காணலாம். அச் செய்யுள் வருமாறு :

மாய நட்டோரையும் மாயா மலமெனும்
மாதரையும்
வீய விட்டோட்டி வெளியே புறப்பட்டு
மெய்யருளாம்
தாயுடன் சென்று பின் தாதையைக் கூடிப் பின்
தாயை மறந்து
ஏயும் அதே நிட்டையென்றான் எழிற்கச்சி
ஏகம்பனே.

நண்பரையும், மனைவியையும் விட்டு விலகி வெளியே புறப்படுதலை முன்னே குறிப்பிடுகிறார். நட்டோர் என்பவர் நண்பர். இங்கே ஆன்மாவுக்கு நண்பராக இருப்பவை திரோதான சத்தியும் அதனால் கூட்டுவிக்கப்படுகின்ற மாயை, கன்மங்களும் ஆகும். ஐந்தெழுத்தில் இவை நகாரத்தால் குறிக்கப்படுகின்றன. மாதர் என்ற சொல் இங்கு மனைவியைக் குறிக்கும். ஆன்மாவுக்கு மனைவியாகச் சொல்லப்படுவது ஆணவ மலம். ஆணவத்தை மனைவியாகக் கூறும் வழக்கினைத் திருவருட் பயனிலும் அறிந்துள்ளோம். (செ.25) பட்டினத்தார் அதனை மாயா மலம் எனும் மாதர் என்கிறார். ஆணவம் என்றுமே அழியாமல் நிற்கின்ற மலம். ஆதலின் அதனை மாயாத மலம் எனக் குறிக்கின்றார். ஐந்தெழுத்தில் இம்மலம் மகாரத்தால் குறிக்கப்படுகின்றது.

திரோதான சத்தி முதலிய நண்பரையும், ஆணவ மலமாகிய மனைவியையும் நீக்குதலை வீய விட்டு ஓட்டுதல் என்கிறார். இது ஐந்தெழுத்தில் நகார மகாரங்களை நீக்குதலைக் குறிக்கும். நண்பரையும் மனைவியையும் விட்டுப் பிரிந்து தாயை வந்து அடைய வேண்டும் என்கிறார். தாயாக இருப்பது திருவருள். ஐந்தெழுத்தில் திருவருள் வகாரத்தால் குறிக்கப்படுகிறது. அதனோடு கூடுதலாவது, முன்பு போல நகார மகாரங்களோடு கூடாது வகாரத்தோடு இணைந்து நிற்றல். இது சிவாய என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரமாகும். தாயுடன் செல்லுதலாவது, யகாரத்தையும் நீக்கி இரண்டெழுத்தாகக் கணித்தல். இது காரண பஞ்சாக்கரமாகும். தாதையைக் கூடிப் பின் தாயை மறந்து விடுதலாவது, வகாரத்தையும் நீக்கிச் சிகாரத்தோடு மட்டும் இருந்து விடுதல். இது மகா காரண பஞ்சாக்கரமாகும். இங்ஙனம், தாயாகிய அருட்சத்தி வழியாகத் தந்தையாகிய சிவனைப் பெற்றுப் பேரின்பத்தில் திளைக்கும் நிட்டை நிலையை நயம்பட விளக்கிக் காட்டுகிறது இச் செய்யுள். இனி, தூலமும் சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்களை ஓதுதல் சகல நிலையே என்பதும், அதிசூக்குமம் முதலாக உள்ளனவே சுத்த நிலைக்கு உரியன என்பதும் அறியத்தகும். இதனால், அதிசூக்குமம் முதலிய பஞ்சாக்கரங்கள் உலகப் பற்றற்று, ஞான வேட்கை கொண்டு, ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுவார்க்கே உரியன என்பதும், ஏனையோர்க்குத் தூலமும் சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்களே உரியன என்பதும் விளங்கும்.

மேலும், அவரவர் நிற்கும் அனுபவநிலைக்கு ஏற்பவே அவரவர் ஓதும் முறையும் அமையும் என்பதும் தெளிவாகும். தூலம் சூக்குமம் ஆகிய இருவகை பஞ்சாக்கரங்களும் ஓம் என்னும் பிரணவத்தோடு கூட்டியும் கூட்டாமலும் ஆசிரியர் உபதேசித்த முறையில் ஓதப்படும். அதிசூக்குமம் முதலிய மூவகை பஞ்சாக்கரங்களும் பிரணவம் இன்றியே ஓதப்படும் என்பது அறிதற்குரியது. இந்த ஐந்து வகையான பஞ்சாக்கரங்களும் நிலையால் வேறு பட்டன அன்றிப் பொருளால் வேறுபட்டன அல்ல என்பது உளங் கொள்ளுதற்குரியது. ஆன்மா நிற்கும் முறையையும், அதற்கேற்பத் திருவைந்தெழுத்தை ஓதும் முறையையும், அதனால் விளையும் பயனையும் பின்வருமாறு வகைப்படுத்தி அமைத்துக் காட்டலாம்.

தீக்கைப்பேறு     நிற்கும் நெறி         ஓதும் முறை    பயன்
சமயம்     சரியை         தூலம்     உலக இன்பம்
விசேடம்    கிரியை யோகம்        சூக்குமம்    உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்<லுதல்
நிருவாணம்    ஞானம்-கேட்டல்-சிந்தித்தல்    அதிசூக்குமம்    பாச ஞானம் நீங்குதல்
    தெளிதல்        காரணம்    பசு ஞானம் நீங்கித் திருவருளைப் பெறுதல்
    நிட்டை        மகாகாரணம்    சிவானந்தத்தில் மூழ்குதல்

அதிகாரப் பொருள்நிலை :

இனி, இவ்வதிகாரத்தின் பொருள் நிலையைப் பின்வருமாறு தொகுத்து அமைத்துக் கொள்ளலாம். ஐந்தெழுத்து எல்லா நூற்பொருளையும் தன்னிடத்தே அடங்கக் கொண்டிருப்பது. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய நூல்களெல்லாம் ஐந்தெழுத்தின் பொருளை விளக்குவனவேயாம். ஐந்தெழுத்துக் குறிக்கும் பொருளாவன இறை, அதன் சத்தி, தளையாகிய ஆணவம், எழில் மிக்க மாயை, உயிர் என்பன. சிவாயநம என்னும் ஐந்தெழுத்தில் சிவா என்னும் எழுத்துக்கள் முத்தி நிலையில் இறைவன் செய்யும் ஞான நடனத்தைக் குறிப்பன. நம என்னும் எழுத்துக்கள் பெத்த நிலையில் நிகழும் ஊன நடனத்தைக் குறிப்பன. அந்நடனங்களால் பயன் அடைகின்ற ய வாகிய உயிர் அவ்விரண்டிற்கும் நடுவே உள்ளது. ம வால் குறிக்கப்படும் ஆணவ மலமும், ந வால் குறிக்கப்படும் திரோதான சத்தியும், அதனால் செயற்படுகின்ற மாயை கன்மங்களும் ஆகியவை ய வாகிய உயிரை அழுத்தமாகப் பற்றி நின்று தம்மினின்றும் மீண்டு போக விடமாட்டா. இஃது ஊன நடனத்தால் விளைவது. உயிரினது மிக்க வினையும், வினைக்குக் காரணமாகிய ஆணவமலமும் நீங்குமாயின் ய வாகிய உயிர் சி ஆகிய சிவத்தை அடையும். இது ஞான நடனத்தால் விளைவது. திருவைந்தெழுத்தில் நகார மகாரங்களாகிய பாச எழுத்துக்கள் முன் நிற்க, யகாரமாகிய உயிர் அவற்றின் பின் நிற்குமாயின் பிறப்பு நிலை நீங்காது. அது நீங்க வேண்டுமாயின் திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்தே ஓத வேண்டும்.

நகாரம் முதலாக ஓதுவார்க்கு உலக இன்பமே கிட்டும். அவ்வாறு ஓதி உலகப் பயனை அடைந்து வருபவர் சிகாரம் முதலாக ஓத முயலார். ந,ம வையே முற்படக் கொண்டு ஓதி வருவதற்குக் காரணமாகிய உலகப்பற்று இரங்குதற்கு உரியது. திருவைந்தெழுத்தில் சி,வ என்னும் எழுத்துக்களே முன் நிற்கும் முறையில் ஓதுவதே பிறவி நீங்குவதற்கு வழியாகும். சிவ முதலாக ஓதினால், வகாரம் ஆகிய அருள் சிகாரம் ஆகிய சிவத்தை அடைவித்து யகாரம் ஆகிய ஆன்மாவைச் சிவமாம் தன்மைப் பெருவாழ்வில் வாழச்செய்யும். இனி, திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக ஓதினால் யகாரம் நகார வகாரங்களுக்கு இடையே நிற்கிறது. அஃதாவது, உயிர் திரோதானத்திற்கும் அருளுக்கும் இடையில் நிற்பதாகிறது. இவ்வாறு நிற்பதும் முத்தி முறைமை அன்று. அருளுக்கும் சிவத்திற்கும் இடையில் நிற்பதே முத்தி முறைமையாகும். எனவே ய வாகிய உயிர் வா சி இடை நிற்க ஓதுவதே முத்தி பஞ்சாக்கரம் ஆகும். சிவாய என்னும் மூன்றெழுத்து மந்திரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் போது ய வானது வா, சி ஆகிய இவற்றின் இடையே நிற்பதைக் காணலாம். இம் முத்தி பஞ்சாக்கரம் உபதேச முறையில் பெற்று ஓதுதற்கு உரியது. ஆகமங்கள் திருவைந்தெழுத்தினை ஒரு வகையாகக் கூறாமல் பல வகையாகக் கூறுகின்றனவே. அதற்கு என்ன காரணம்? என்று கேட்கலாம். ஆன்மாக்களது பக்குவ நிலையில் உள்ள படி முறையே அதற்குக் காரணம் எனலாம். அவைபடி முறையானே பாசத்தினின்றும் நீங்கும் இயல்புடையன. எனவே அப்படி முறையானே ஐந்தெழுத்தினைப் பெற்று அதனை ஓதிப் பயன்பெறுதல் வேண்டும்.

 
மேலும் திருவருட்பயன் »
7. திருவருட்பயன் - முன்னுரைஆசிரியர் உமாபதி சிவம்பொருள், தெளிவுரை : ஆ. ஆனந்தராசன்சைவ சித்தாந்தத்தின் ... மேலும்
 
நான்காம் அதிகாரம் - அருளது நிலைஉயிரினது அறிவை மறைத்து அறியாமையை விளைவிக்கின்ற அக இருளாகிய ஆணவ ... மேலும்
 
பாற்கலன்மேல் பூனை :இயல்பிலே இன்ப நாட்டம் உடைய உயிர், உயர்வற உயர்ந்த இன்பப் பொருளாகிய இறைப் பொருளை ... மேலும்
 
81. அனைத்து நூற்பொருளும் ஐந்தெழுத்தின் பொருளேயாம்அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்பொருள் நூல் ... மேலும்
 
92. வேறொன்றையும் விரும்பாமைஐந்தொழிலும் காரணர்கள் ஆம் தொழிலும் போகம் நுகர்வெந்தொழிலும் மேவார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar